You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன்னில் என்னை தொலைத்தேனடி...!- கதை திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
எங்கள் செந்தூரம் மின்னிதழுக்காக எழுதிய குட்டி நாவல். ஒவ்வொரு அத்தியாயமாக இதழ்களிலும் இருக்கிறது.


அத்தியாயம் 1“பாட்டி, நான் வீட்ட போகப்போறன். நீங்க கால ஆட்டுறேல்ல சரியா? நாளைக்கு நான் வாரவரைக்கும் இப்படியே வச்சிருக்கோணும் என்ன!” என்று, அவரின் பாதத்தை வருடிக்கொடுத்தாள் ஷர்மினி.“நா...ளைக்குத்தான் இனி வருவியா?” என்று முகம் வாடினார் அவர். கிளிநொச்சி அரச வைத்தியசாலையில் அநாதரவான நிலையில் கிடக்கும் அவருக்கு, இரண்டு நாட்களுக்குள் பேத்தியை போல் ஆகியிருந்தாள், அவள்.


வீதியில் நடந்து வந்தவரை மோட்டார் வண்டியில் வந்த யாரோ இடித்துவிட்டு ஓடிவிட்டார்களாம் என்று சேர்த்திருந்தார்கள். கால் முறிந்திருந்தது. ஆப்பரேஷன் முடிந்து கட்டுப் போட்டிருந்தார்கள். தாதியாக பணிபுரியும் ஷர்மினியின் கனிவும் பொறுப்பும் அவரை அப்படிக் கேட்க வைத்தது.
அவளுக்கு தன் அன்னை தான் கண் முன்னால் வந்து போனார். காலையில் அவள் வேலைக்கு புறப்படுகையில் அவர் முகம் எப்படி வாடுமோ, அப்படித்தான், வேலை முடிந்து அவள் புறப்படுகையில் இங்கே இருப்பவர்கள் வாடுவார்கள். இரண்டு பொழுதுகளிலும் மனம் பாரமாகிவிடும். ஆனால், காலையில் வீட்டிலிருந்து வேலைக்கு புறப்படுவதும் மாலையில் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு புறப்படுவதும் கட்டாயமான ஒன்றுதானே. அவளால் என்னதான் செய்யமுடியும்?“அதென்ன நா...ளைக்கு? இந்தா.. பக்கத்தில இருக்கிற ‘நாளைக்கு’ ஓடி வந்திடும். நீங்க மருந்தை போட்டுக்கொண்டு நித்திரை கொண்டு எழும்பேக்க நான் வந்திடுவன். இல்லாட்டியும் தமாக்கா இருக்கிறா, என்ன வேணும் எண்டாலும் கேளுங்கோ, செய்வா.” என்று, கனிவுடனேயே விடைபெற்று வந்து, அங்கே அவர்களுக்கு என்று ஒதுக்கிய அறையிலேயே தன் வெள்ளை உடையை மாற்றிக்கொண்டு புறப்பட்டாள்.வெளியே வந்து உதயனை தேடி விழிகளை சுழற்றினாள். காணவில்லை என்றதும், “எங்கடா நிக்கிறாய்?” என்று ஒரு மெசேஜை தட்டிமுடிக்க முதலே, “இங்க நிக்கிறன்...” என்று, வாயால் சொல்லிக்கொண்டு அவளின் சைக்கிள் அருகே தன்னுடையதை கொண்டுவந்து நிறுத்தினான் அவன்.“நான் மெஜேஸ்ல கேட்டது உனக்கு எப்படித் தெரியும்?”“ம்...சிஐடி வச்சு கண்டுபிடிச்சனான்!” என்றான், அவன் நக்கலாக.“ஒவ்வொரு நாளும் இதேநேரம் நீ அனுப்புற மெசேஜ் எடுத்துப்பாரு. ஒரு எழுத்து மாறாது. அதே ‘எங்கடா நிக்கிறாய்?’ தான். வயசுல மூத்தவனாச்சே...கொஞ்சமாவது மரியாதை குடுப்பம் எண்டில்லை.”“உனக்கு...! மரியாதை...! தந்திட்டாலும்! பேசாம வா!” என்றபடி அவள் சைக்கிளில் ஏறி மிதிக்க, கூட வந்தான் அவன்.


ஷர்மினியின் தமையன் சயந்தனோடு கூடப்படித்தவன் தான் உதயன். சின்ன வயதில் இவள் அளவே அவனது உயரமும் இருந்ததில் அப்போதிருந்தே அவன் இவளுக்கு ‘உதயன்’ தான்.
“அவனும் உனக்கு அண்ணாம்மா” என்று தாய் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. நம்மை விட உயரமாக இருப்பவர்களைத்தான் அண்ணா என்று சொல்வதாய் எண்ணி இருந்தவளுக்கு, தன் உயரத்திலேயே இருந்தவனை அண்ணா என்று சொல்லவே முடியவில்லை.இப்போது அவளை விடவும் அவன் உயரம்தான். என்றாலும் இன்றுவரை உதயனாகவே இருக்கிறான்.


சயந்தனின் நண்பன் என்றாலும் ஒற்றைப்பிள்ளையாய் பிறந்தவனுக்கு கூடப்பிறக்காதவள், உயிர்த்தோழி, எதிரி எல்லாமே அவள்தான்.
இருவரும் சைக்கிளில் வந்துகொண்டிருக்க ஃபோன் வந்தது. அவள் ஓடிக்கொண்டே எடுக்க, “நிண்டு கதை...இல்ல ஃபோனை எடுக்காத எண்டு உனக்கு எத்தின தரம் சொல்லுறது?” என்று, சீறினான் உதயன்.


அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை அவள்.
“ஒரு கைல சைக்கிள் இன்னொரு கைல ஃபோன். அதெல்லாம் நாங்க சமாளிப்பம். நீ வா!” என்றபடி ஃபோனை காதுக்கு கொடுத்தாள்.


“வீட்ட வாரியாடி?” என்றாள், அந்தப்பக்கமிருந்து பள்ளித்தோழி அபிராமி.“ஏன்? உன்ர அண்ணா சார் இண்டைக்கும் வரேல்ல போல. அதுதான் பொழுது போக்குக்கு என்ன கூப்பிடுறியா?”“ஓ…! அப்ப அவர் வந்தா தான் வருவியா நீ?” என்று அவள் கேட்க,“அய்யய்யோ... ஆளவிடு! அவர் வந்தா நீ என்னக் கவனிப்பியா? அந்தாள் நிக்கிற வரைக்கும் வரவே மாட்டன்.”
“அண்ணாவை மரியாதை இல்லாம கதைக்காதடி!”


“பார்றா! அண்ணனுக்கோர் கீதத்தை! இவ்வளவு ரோசம் இருக்கிறவள் அவரையே கூப்பிடு! என்னைவிடு!”“ஆகத்தான் சீன் போடாம வாடி! ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று கெஞ்சவும் தான் மனமிறங்கினாள்.“என்ன? வெளிநாட்டு மாப்பிள்ளை இன்னும் வரேல்லையா?” என்று சிரிப்போடு கேட்டான் உதயன்.“ஹாஹா...! ஓம் போல. அதுதான் என்னக் கூப்பிடுறாள். நீ அம்மாவை ஒருக்கா பாக்கிறியா? நான் போயிட்டு ஓடிவாரன்!”


“உனக்கு மாமிய பாக்கக் கள்ளம். அதுதான் அவள் கூப்பிட்டதும் ஓடுறாய். போ போ! மாமிட்ட போட்டுக் குடுக்கிறன்.” என்றுவிட்டு. அவன் வீடு நோக்கி சைக்கிளை விட, “போடா போடா புண்ணாக்கு!” என்றபடி இவள் அபிராமி வீட்டுக்கு போனாள்.உதயன் குடும்பமும் ஷர்மினியின் குடும்பமும் அயல் வீட்டினர். உறவில்லை. ஆனால் உறவாகத்தான் வாழ்கின்றனர். அதுவும், ஷர்மினியின் சின்ன வயதிலேயே அவளின் அப்பா இறந்துவிட அவர்களுக்குள் இருந்த பிணைப்பு இறுக்கித்தான் போனது. அதன்பிறகு எல்லாமே அம்மா தயாபரிதான். உதயனின் குடும்பத்தின் துணையோடு கார்மெண்ட்ஸ் வேலைக்கு சென்று பிள்ளைகளை கவனித்தார். பள்ளிமுடிந்து வரும் பிள்ளைகள் இருவரும் உதயன் வீட்டில் தான் படிப்பது முதல்கொண்டு உண்பது வரை. சிலநேரங்களில் உறங்குவதும் அங்கேதான். நட்பையும், சகோதர பாசத்தையும் இணைத்த உறவு அவர்களது.


ஒருகட்டத்தில் தயாபரியை முடக்குவாதம் தாக்கியது. அதைக்கண்டும் சோரவில்லை. சோதனைக்குமேல் சோதனை என்பது போல அவரின் வாழ்க்கை பலமுறை தள்ளாடிய போதிலும் தன்னம்பிக்கையை மட்டுமே பலமாய் கொண்டு பிள்ளைகளை படிக்கவைத்தார்.
ஒருவழியாக சயந்தன் ஆசிரியர் தொழிலைப் பெற்றதும், அதற்காகவே காத்திருந்தது போன்று முடக்கு வாதத்தால் முற்றிலுமாக முடக்கப்பட்டார் அவர்.ஆரம்பத்திலேயே கவனித்திருக்க இவ்வளவு தூரம் பாதித்து இருக்காது என்று சொன்னபோது, பிள்ளைகளுக்கு பெரும் கவலையாய் போயிற்று.ஆனால். நடந்து முடிந்ததை எண்ணி என்ன செய்வது?தமிழ் வைத்தியம், ஆங்கில வைத்தியம் என்று எல்லாமே முடிந்தவரை பார்த்தும், ஓரளவுக்கு வலியை குறைக்க முடிந்ததே தவிர எழுந்து நடக்கவே முடியாத அளவில் படுத்த படுக்கையானார் தயாபரி.சில நாட்கள் பரவாயில்லாமல் இருக்கிறது என்று மெல்ல மெல்ல அசைவார். அதற்கும் சேர்த்து வைத்து அடுத்தடுத்த நாட்கள் அவரைப் போட்டு வாட்டிவிடும்.


வேலைக்குப்போய் களைத்துப்போய் வரும் பிள்ளைகளுக்கு ஒருவாய் சோற்றினை சமைத்துக்கொடுக்க முடியாமல் இருக்கிறோமே என்று வருந்துவார் அவர்.
“நாங்க என்ன இன்னும் குழந்தைகளா? நீங்க சமைச்சுத் தந்து சாப்பிட?” என்று கேட்டு, வெகு ருசியாக சமைத்து அவருக்கும் ஊட்டிவிடுவாள் ஷர்மினி. 

நிதனிபிரபு

Administrator
Staff member
தமையனின் சம்பாத்தியத்தில் படித்து ஷர்மினியும் தாதியானாள். தாயின் வைத்திய செலவுகளால் ஏழ்மை தான். ஆனால், அழகான ஏழ்மை. போதும் என்கிற மனதோடு வருமானத்துக்கு ஏற்ற செலவோடு சந்தோஷமாகவே கழிந்து கொண்டிருக்கிறது அவர்களின் நாட்கள்.

சயந்தன் வீட்டிலேயே நிற்கமாட்டான். காலையில் பள்ளிக்கூடம் என்றால் மாலையில் டியூஷன் சென்று விடுவான். இரவில் கூட வசதியானவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு வீட்டுக்கே சென்று பிரைவேட்டாக சொல்லிக்கொடுத்தான்.


அவன் கணித ஆசிரியர் என்பதால் நல்ல வருமானம் தான். என்ன அத்தனையும் முடக்குவாதத்தால் பரிதவிக்கும் தாய்க்கு செய்வதிலேயே கரைந்து கொண்டிருந்தது.

இருவருமே பொறுப்பான பிள்ளைகள். வீட்டுக் கஷ்டத்தை உணர்ந்தவர்கள். தாயை குணப்படுத்த முடியாவிட்டாலும் அவரின் வலியையாவது குறைப்போம் என்று காசை தண்ணீராகச் செலவு செய்து கொண்டிருந்தார்கள்.

ஷர்மினியின் தோழி அபிராமி. ஆரம்ப காலங்களிலேயே வசதியான குடும்பம் தான். தமையன் சுவிஸில் வசிப்பதால் இன்னுமே வசதி. பெற்றவர்கள் வேலைக்கு விடாததால் போவதில்லை. அவளுக்கும் காலையில் எழுந்து ஓடி மாலையில் களைத்துப்போய் வரும் அந்த வாழ்க்கையில் நாட்டமில்லை. எனவே, வீட்டில் இருந்து கொண்டாள். அதனால், அடிக்கடி இப்படி ஷர்மினியை கூப்பிட்டு வைத்து அரட்டை அடிப்பாள். அல்லது, அவள் இவள் வீட்டுக்கு வருவாள். ஷர்மினிக்கும் அங்கே போவது என்றால் மிகவுமே பிடிக்கும்.


வாழை மரங்கள், தென்னை மரங்கள், மாமரம், முருங்கை மரம் என்று சுற்றிவர புடை சூழ்ந்திருக்கும் மரங்களுக்கு நடுவே இரண்டு மாடியில் அமைந்த பெரிய வீடு அவர்களது.


பெரிய முற்றம். அதனைச் சுற்றி அழகழகான குரோட்டன்ஸ். விதம் விதமான பூக்கள், மல்லிகை பந்தல் என்று பார்க்கப் பார்க்க அவ்வளவு அழகு.

இது எல்லாவற்றையும் விட முற்றத்தில் இருக்கும் ஊஞ்சல், உயர்ந்த கொப்பு ஒன்றில் கட்டப்பட்டிருந்தது. நன்றாக உந்தி ஆடினால் அந்த வீட்டு மாடியின் பால்கனியை கூட பார்த்துவிட்டு வரலாம். இப்படி எல்லாமே அவளுக்கு பிடித்தமாதிரித்தான். அந்த வீட்டுக்குள் நடமாடுகையில், தோழியோடு சோஃபாவில் சோம்பலாய் அமர்ந்திருந்து ஏதாவது படம் பார்க்கையில், ஊஞ்சல் ஆடுகையில் என்று அந்தப் பொழுதுகளை மிகவுமே விரும்புவாள். எனவே, ஆர்வத்தோடு சென்றாள்.

இவளைக் கண்டதும், “வாடி!” என்றபடி வந்தாள் அபி.

சைக்கிளை எப்போதும்போல நிழலுக்குள் நிறுத்திவிட்டு, “என்ன மேடம், அண்ணா சார் வரேல்ல எண்டதும் போரடிக்குதோ?” என்று கேட்டாள் ஷர்மினி.


அதைக் கேட்டுக்கொண்டு வந்த அபியின் அம்மா தேவகி, “தம்பி வ..” என்று ஆரம்பிக்க, “அம்மா! அவள் வேலை முடிஞ்சு களைச்சுப்போய் அப்படியே இங்க வந்திருக்கிறாள். குடிக்க ஏதாவது கொண்டு வாங்கோ!” என்று, அவரை அனுப்பி வைத்தாள் அபி.


“நீ போய் எடுத்துக்கொண்டு வாரத விட்டுட்டு ஆன்ட்டியை ஏவுறாய்!” என்று கடிந்துவிட்டு, “ஆன்ட்டி, விடுங்கோ, நானே வந்து எடுக்கிறன்.” என்று அவருக்கு சத்தமாகக் குரல் கொடுத்தபடி, அவளுக்கு மிகவுமே பிடித்த ஊஞ்சலில் ஓடிப்போய் ஏறினாள், ஷர்மினி.


‘யாரிது? புதுக் குரலா இருக்கே?’ அங்கே மேல்மாடியில், அப்போதுதான் குளித்துமுடித்து குளியலறையில் இருந்து இடுப்பில் டவலோடு வந்தான் சீராளன்; அபியின் அண்ணா.


ஷர்மினியின் பாஷையில் சொல்லப்போனால் ‘அண்ணா சார்’. இன்னோர் டவலால் தலையை துவட்டியபடி பால்கனிக்கு வந்து எட்டிப்பார்த்தான்.

இவனுக்கு முதுகை காட்டியபடி மிக வேகமாய் ஒரு பெண் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தாள். ஆடவில்லை பறந்து கொண்டிருந்தாள். அப்படித்தான் தோன்றியது அவனுக்கு. அவளின் வேகம் பார்த்து இவனுக்குத்தான் பயம் பிடித்தது. அதையும் விட காற்றில் அங்கும் இங்குமாய் பறந்து கொண்டிருந்தவளின் நீண்ட கருங்கூந்தல் ஊஞ்சலையும் தாண்டிக்கொண்டு நிலம் நோக்கி தொங்கிக் கொண்டிருந்தது.

காற்றை கிழித்துக்கொண்டு முன்னேயும் பின்னேயும் அந்தரத்தில் அவள் ஆடிக்கொண்டிருக்க, அவளின் கூந்தல் ஒரு நீண்ட பாம்பாக மாறி அவள் முதுகினில் படர்ந்திருக்க, அந்த அழகான காட்சியை ரசித்தான் அவன்.

தன்னை ஒருவன் பின் பக்கமிருந்து பார்த்துக்கொண்டிருப்பதை அறியாமல், “நான் சொல்லுறது பொய் எண்டா பாரேன்; உன்ர அண்ணா வெள்ளைக்கார மனுசியும் பிள்ளையுமாத்தான் வந்து இறங்கப்போறார். நீ அண்ணாட கலியாணத்துக்கு சோளி போடப்போறன், லெஹெங்கா மாட்டப்போறன் எண்டு கனவு காணுறத விட்டுட்டு, அந்த வெள்ளைக்கார பிள்ளைகளுக்கு தமிழ் எப்படி சொல்லிக் கொடுக்கலாம் எண்டு யோசி!” என்று வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.


“ஆகத்தான் ஆடாதடி! என்ர அண்ணா ஒண்டும் அப்படியான ஆள் இல்ல. நாங்க பாத்து வச்சிருக்கிற பெட்டையைத் தான் கட்டுவார்.”


“போடி! மண்டைக்க ஒண்டும் இல்லாதவளே! அப்படி ஒண்டும் இல்லாட்டி சொல்லிப்போட்டு வரவேண்டியது தானே. வாறது கலியாணத்துக்கு... இதில சப்ரைஸ் பயணம் வாறாராம்! யாருக்கு விடுறாராம் கதை! சிலநேரம் அங்க ஒரு கலியாணம் இங்க ஒண்டு எண்டு கட்ட வாராரோ?” என்று, அவள் தன் கற்பனையை அவிழ்த்துவிட, மேலே கேட்டுக்கொண்டு இருந்தவன் அரண்டுபோனான் என்றால்...அவனின் தங்கையின் நிலை?

“மாடு... என்ர அண்ணாவை என்ன நினச்சனி நீ? இவ்வளவு மோசமாக் கதைக்கிறாய்?” என்று அடிக்க ஓடிவர, அவளோ, ஊஞ்சலில் இருந்து குதித்து அபியிடம் அகப்படாமல் ஓடத்தொடங்கினாள்.


இங்கே, அறைக்குள் வந்த சீராளனின் நிலையோ மிக மோசமாய் இருந்தது.


‘கல்யாணம் ஒண்ட கட்டி வாழ்க்கைல செட்டில் ஆகுவம் எண்டு ஆசையா வந்தா, இவள் எல்லாத்தையும் நாசமாக்கிடுவாள் போலவே!’ நினைக்க நினைக்க சிரிப்புத்தான் வந்தது.

அவன் வந்துவிட்டது தெரியாமல் என்ன பேச்சுப் பேசுகிறாள்?

“டேய் சீராளா! அம்மா எந்த பொம்பிளைய காட்டினாலும் கண்ண மூடிக்கொண்டு ஓம் எண்டு சொல்லி கெதியா கலியாணத்தை முடி. இல்ல... இந்த பெட்டையே அங்க சுவிஸில் ஒருத்தியோட வாழுறன் எண்டு ஊர்முழுக்க கதையை பரப்பிவிட்டு, உன்ன, காலம் முழுக்க சந்நியாசியா வாழ வச்சாலும் வச்சிடுவாள்...” என்று எண்ணமிட்டபடி, உள்ளாடையை அணிந்துவிட்டு டவலை கழட்டிய அந்த நொடி,


“எங்கயோ இருக்கிற அண்ணா சாருக்காக உயிர் நண்பிய பகைக்காத அபி. ஐயோ எண்டாலும் நான் தான் ஓடி வரோணும். உன்ர கொண்ணா சார் வெள்ளைக்காரியோட குடும்பம் நடத்தத்தான் சரி!” என்று ,கலகல சிரிப்புக்கிடையே சொல்லிக்கொண்டு வேகமாக ஓடிவந்து அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்திவிட்டு, நெஞ்சில் கைவைத்து மூச்சு வாங்கிக்கொண்டு திரும்பியவள், அங்கே, வெறும் உள்ளாடையோடு நின்றவனைக் கண்டதும் திகைத்து, “கருமம் கருமம்!” என்றபடி கண்களை கைகளால் இறுக்கி மூடிக்கொண்டாள்.

அவனும் இதை எதிர்பார்க்கவில்லை.

“அச்சோ!” வாயில் கையை வைத்தபடி வேகமாக கழற்றி எறிந்த டவலை கண்ணால் தேட, “முதல்...மூட வேண்டியதை மூடுங்க!” என்றுவிட்டு ஓடியே போய்விட்டாள் அவள்.

அவன் ஒன்றும் மோசமாய் நிற்கவில்லை. ‘box shorts’ என்பார்களே... அந்த உள்ளாடையோடுதான் நின்றான். குனிந்து பார்க்க அவனுக்கு அவ்வளவு மோசமாய் தெரியவில்லை. என்றாலும்.. உதட்டில் தொற்றிக்கொண்ட சிரிப்புடன் உடைகளை மாற்றிக்கொண்டு கீழே வந்தவனின் விழிகள் ஆர்வத்தோடு அவளைத் தேடியது.


“யார் அபி அது?” எதிரில் சிரித்துக்கொண்டு வந்தவளிடம் கேட்டான்.

“என்ர ஃபிரெண்ட் அண்ணா. ஷர்மினி எண்டு சொல்லுவன். அவள்தான் இவள். நீ வந்திருக்கிறாய் எண்டு சொன்னா வரமாட்டாள் எண்டு வரவச்சா... உன்னையே பகிடி பண்ணுறாள். அடிக்கத் துரத்தினா ஓடிட்டாள்!” என்று அவள் பாட்டுக்கு சொல்லிக்கொண்டு போக, அவனுக்குத் தானே தெரியும் ஏன் ஓடினாள் என்று.அடுத்தநாள் காலை, ஏற்கனவே அவனுடைய வீட்டினர் பார்த்துவைத்த பெண்ணை பார்க்கப் போனார்கள்.

சீராளனும் சந்தோஷமும் ஆர்வமுமாகவுமே தயாராகிப் போனான். எல்லாவற்றிலுமே இவர்களுக்குச் சமமானவர்கள். சந்தோசமாக வரவேற்று உபசரித்தார்கள். பெண் பார்க்கும் படலமாக அல்லாமல் இரண்டு குடும்பங்கள் சந்தித்துக் கதைப்பதுபோல் இயல்பாய் இருந்தது.

பெண் நல்ல அழகி. படிப்பு, வசதி என்று எதிலும் எந்தவிதக் குறையும் இல்லை. ஆனால், ‘என் மனைவி’ என்கிற எண்ணத்தோடு அவளைப் பார்த்தபோது, “கருமம் கருமம்!” என்றபடி முகத்தை மூடியவள்தான் கண்ணுக்குள் வந்து நின்றாள். என்னைவிட்டு அவளைக் கட்டுவாயோ என்று முறைத்தாள்.
சீராளனுக்கே சற்று அதிர்ச்சியாய் போயிற்று.
தன் மனம் எங்கே போகிறது? ‘தங்கையின் தோழியையா...? ச்சே! இதென்ன சபலக்குணம்?’ அவளைத் தவிர்த்துவிட்டு, நேரெதிரில் இருந்து தங்கையோடு அளவளாவிக் கொண்டிருந்த பெண்ணை ரசிக்க முனைந்தான்.

அவளைத் தன்னவளாய் கற்பனை செய்தான். முடியவேயில்லை. ஒரு கணத்துக்கு மேல அவள் மேல் விழிகளை நிலைக்க விடவே முடியவில்லை. ஏதோ, ஊரான் வீட்டுப் பெண்ணை அத்துமீறிப் பார்ப்பதுபோல் அசௌகரியமாக உணர்ந்தான்.
ஃபோட்டோ அனுப்பவா என்று கேட்ட தாயிடம் கூட அவன் மறுத்ததற்குக் காரணம், முதன் முதலாக நேரில் பார்க்கையிலேயே அவள் தனக்குள் முழுமையாக வந்துவிட வேண்டும்; தன்னை முற்றிலுமாக அவளிடம் இழக்க வேண்டும் என்கிற அவா. இப்போதோ, அந்தப் பெண்ணின் முகத்தில் கூட இவள்தான் கண்ணை மூடிக்கொண்டு கருமம் கருமம் என்றாள்.
என்ன இது?

அந்த இடத்திலேயே இருக்க முடியாமல் அவன் அவஸ்தைப்படுவதை பார்த்துவிட்டு, “என்னப்பு?” என்று, மெல்லக் கேட்டார், தேவகி.

“போவம் மா!” என்றான் மெதுவாக. 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இந்த பிள்ளையை பிடிச்சிருக்கு தானே?” ஆர்வத்தோடு கேட்டவரிடம், “வீட்டப்போய் சொல்லுவம்; இப்ப வாங்க!” என்றான்.

அவருக்குச் சற்றே ஏமாற்றம் தான். பார்த்ததும் தலைகுப்புற விழுந்துவிடுவான் என்றுதான் எண்ணினார். அந்தளவு, பார்ப்பவரைக் கவரும் அழகி அவள். அழகு மட்டுமல்ல, பண்பான, பழக இனிமையான பெண்ணும் கூட.

கணவரின் கையை அவர் சுரண்ட, “அப்ப நாங்க வாறம். மகனோட வடிவா கதைச்சிட்டு நல்ல பதிலா சொல்லுறம்.” என்று புறப்பட்டனர்.

பெண் வீட்டிலும் இது சற்று ஏமாற்றமே என்பதை அவர்கள் முகம் காட்டிக்கொடுக்க, சங்கடமாக உணர்ந்தார்கள். வெளியே வந்து காரில் ஏறியதும், “ஏன் தம்பி, அந்த பிள்ளையை பிடிக்கேல்லையா?” என்று கேட்டார் தேவகி.

அவனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை.

“என்ன அண்ணா, ஷர்மி சொன்னமாதிரி வெள்ளைக்காரி யாரையும் கட்டிட்டியோ?” என்று கேட்க, அதைச் சொன்னவள் நினைவில் அவன் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.

“என்னப்பா? இப்படியே ஒன்றுமே சொல்லாம இருந்தா எப்படி?” தகப்பனும் கேட்டுப் பார்த்தார்.

“கொஞ்சம் பொறுங்கோப்பா. எனக்கும் ஒண்டும் வடிவாத் தெரியேல்ல...” குழப்பத்தோடு சொன்ன மகனை, விளங்காமல் பார்த்தனர் இருவரும்.

ஆனாலும், என்னவோ குழம்பிப்போய் இருக்கிறான். யோசித்து சொல்லட்டும் என்று அவர்கள் விட்டுவிட, அவனோ அபிராமியிடம் வந்து ஷர்மினியை விசாரித்தான். அவளை பற்றி, அவள் குடும்பம் பற்றி, அவளின் பழக்கவழக்கங்கள் பற்றி... முக்கியமாக அவள் யாரையாவது விரும்புகிறாளா? கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதா? என்று, விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அவளைப் பற்றி அறிந்துகொள்ள அறிந்துகொள்ள அவள்தான் வேண்டும் என்று மனம் உறுதியாகச் சொல்லத் தொடங்கியது.

அடுத்தநாள் காலையில் அவன் முகத்தை எல்லோரும் ஆவலோடு பார்க்க, “எனக்கு அபின்ர ஃபிரெண்ட் ஷர்மினிய பேசுங்கோ அம்மா!” என்று, அலுங்காமல் குலுங்காமல் எல்லோர் தலையிலும் குண்டை போட்டான் அவன்.

இதென்ன என்று திகைத்துப் போயினர் மூவருமே. அப்பா இல்லாத நோயாளியான அம்மாவோடு ஏழை வீட்டுப் பெண்ணை ஏன்? அழகி என்று சொல்வதற்கும் இல்லை. பார்க்க சுமாராகத்தான் இருப்பாள். அவ்வளவுதான். எல்லாம் அருமையாக அமைந்த இடம் இருக்க, ஒன்றுமில்லாத இடத்தில் ஏன் கட்டவேண்டும்?

“என்ன தம்பி திடீர் காதலா? சொந்த வீட்டுப் பிள்ளைமாதிரி அவளை பாத்ததுக்கு வேலை வச்சிட்டாள் போல!” என்றார் தேவகி, ஆத்திரமாக.

“அவள் வேணும் எண்டு கேட்டது நான். பிறகு ஏன் அவளை பிழை சொல்றீங்க?” பட்டென்று அவன் கேட்டுவிட, மகன் அவளுக்காகக் கதைத்த அந்த நொடியில், அவளைப் பிடிக்காமல் போயிற்று அவருக்கு.

“எங்களுக்கு விருப்பம் இல்லை தம்பி. அதெல்லாம் சரியாவும் வராது!” ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, தன் முடிவையும் உறுதியாகச் சொன்னார் தேவகி.

“ஓகே! வந்த மாதிரியே திரும்பிப் போறன் நான். இனி வரமாட்டன்!” எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகச் சொன்னான் அவன்.

“என்ன தம்பி? வெருட்டிப் பாக்கிறியா?”

அவர் எப்படிக் கேட்டும் அவன் அசையவில்லை. தன் முடிவில் உறுதியாய் நின்றான். தன்னம் தனியாக எத்தனையோ மைல்களுக்கு அப்பால் வாழும் மகனை ஒரு அளவுக்குமேல் அதட்டவும் முடியவில்லை. அவன் சொன்னது போலவே தனியாகவே இரு என்று சொல்லவும் பெற்றமனம் மறுத்தது. தன்னை இக்கட்டான நிலையில் நிறுத்தி தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அவன் முனைகிறான் என்றபோது, இதற்கெல்லாம் அவள்தான் காரணம் என்று அவள் மீதான வெறுப்பு ஏறிக்கொண்டே போயிற்று.

அபிராமியும் இதை எதிர்பார்க்கவில்லை. முன்னப் பின்ன சந்தித்தே இராதவளை பெண் கேள் என்கிறான் அண்ணா. அதைவிட... ஏனோ அது பிடிக்கவில்லை அவளுக்கு. ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த நேரம் பார்த்து, “என்னடி? எப்ப டும் டும் டும்?” என்று கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தாள் ஷர்மினி. பார்த்ததும், எங்கிருந்து என்று இல்லாமல் கிளம்பிய ஆத்திரத்தில் கட்டில் மீது ஃபோனை எறிந்துவிட்டுப் போனாள் அபி.

வீட்டின் நிலவரம் தலைகீழாக மாறிப்போயிருந்தது. பார்க்கக் கஷ்டமாக இருந்தாலும் அவள் வேண்டாம் என்று நினைக்கக் கூட முடியவில்லை, அவனால். ஒவ்வொரு கணமும் செல்லச் செல்ல அவள் மீதான ஆசை வலுத்துக்கொண்டே போயிற்று!

அந்த நிலையிலும், அவளிடம் எப்போது எப்படி சம்மதம் கேட்கப் போகிறோம்? என்ன சொல்லுவாள்? என்று அதிலேயே உழலும் மனதை என்ன செய்வான்?

அம்மா, அப்பாவின் ஆசைக்காக பிடிக்காத பெண்ணை மணந்து வாழும் வாழ்க்கை இருவருக்குமே நரகமாய் போய்விடாதா?

பிடித்தபெண் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கையில் எதற்காக நழுவ விடவேண்டும்?

வாழ்க்கையை இன்னொரு முறை வாழப்போவதில்லை. அதை, பிடித்தவளோடு பிடித்தமாதிரி வாழ வேண்டாமா?

அடுத்தநாளும் அந்த வீட்டில் முகம்பாரா போராட்டம் தொடர்ந்தாலும் அப்படியே இருக்க முடியவில்லை அவனால். இன்னும் மூன்று வாரங்கள்தான் இங்கு நிற்க முடியும். அதற்குள் அவளோடு கதைக்க வேண்டும். குடும்பங்கள் சம்மந்தம் பேச வேண்டும். கல்யாணம் நடக்க வேண்டும். பிறகு தாலி கட்டியதும் கட்டாததுமாக அவளை விட்டுவிட்டு ஓடத்தான் சரியாக இருக்கும்.

எனவே, அன்று காலை உணவின் போது, “அவளிட்ட கதைக்கப் போறன் அம்மா.” என்று பொதுவாகச் சொன்னான்.

“ஏன் தம்பி? சந்தோசமான வாழ்க்கை அமைஞ்சு வரேக்க அந்த பிள்ளைதான் வேணும் எண்டு நிக்கிறாய்? எவ்வளவு நல்ல சம்மந்தம் சொல்லு பாப்பம்?” மகன் மனதை மாற்றவே முடியவில்லையே என்கிற ஆற்றாமையோடு கேட்டார் தாய்.

“எனக்கு பிடிச்சவளோட தானேம்மா என்னால வாழ முடியும்? உங்களுக்கு நல்ல சம்மந்தம் அமையிறது முக்கியமா, இல்ல, நான் சந்தோசமா வாழுறது முக்கியமா?”

“நீ சந்தோசமா வாழவேணும் என்றுதானே எந்தக் குறையும் இல்லாத குடும்...” என்று அவர் சொல்லும்போதே, “எனக்கு அவள் தானம்மா சந்தோசம்!” என்று முடித்து வைத்தான் அவன்.

இனி என்ன சொல்வது? அவள் தான் வேண்டும்; என் சந்தோசமே அவள்தான் என்று சொல்கிறவனிடம் என்ன சொல்லுவார்? முற்றிலுமாக தளர்ந்து போனார் அவர்.

“என்னவோ செய்!” என்று முடித்துக் கொண்டார்.

அன்று மாலையே ஷர்மினி எத்தனை மணிக்கு வேலை முடிந்து வருவாள் என்று கேட்டு அறிந்து கொண்டு அவளை சந்திக்கச் சென்றான் சீராளன்.


தொடரும்...
கருத்துக்களைப் பகிர
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member

அத்தியாயம்-2
அது ஒரு பிள்ளையார் கோவில். பிரதான வீதியில் அமைந்திருந்தது. அதைக் கடந்துதான் ஷர்மினி போகவேண்டும். அங்கு சென்று நின்றுகொண்டான் சீராளன். ‘என்ன சொல்லுவா?’ யோசனையில் மனம் உழன்றது. விடலைப்பையன் போன்று, கணப்பொழுதில் கண்ட பெண்ணுக்காக மொத்த வீட்டையும் எதிர்த்துக்கொண்டு வந்து நிற்கிறான்.


அம்மாவை எண்ணி மனம் கனத்தாலும் அவள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவும் முடியவில்லை. பார்த்தகணத்தில் மனதில் பதியவேண்டும் என்று அவன் ஆசைப்பட்டதுதான் நடந்திருக்கிறது. என்ன; பெண் வேறாகிப்போனாள்.


அம்மாவை சமாதானப்படுத்துவது சிரமம் என்றே தோன்றிற்று. ஆனால், எப்போது வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். அவளுக்கோ அவனுக்கோ வேறொருவருடன் திருமணம் நடந்துவிட்டால் அவனுக்குக் கிடைக்கவே மாட்டாளே!


எது எப்படியாயினும் அவளைத் தவறவிட முடியாது என்று மட்டும் தெரிய, அவளுக்காகக் காத்திருந்தான். அவளும் வந்தாள். தூரத்திலேயே கண்டுவிட்டான். அன்று மின்னலாய் மறைந்தவள் இன்று மெல்ல மெல்ல அவனை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவளோடு அருகில் யாரோ ஒருவன் வரவும் மனம் சுணங்கியது. அதைவிட, இவனைக் கவனியாது அவனோடு சிரித்துக் கதைத்துக்கொண்டு அவள் வருவதைக் கண்டதும் ஒருவித கோபமும் பொறாமையும் உருவாகிற்று!


‘என்னோட ஒரு வார்த்த கதைக்காம ஓடிட்டு இவனோட மட்டும் என்ன சிரிப்பு?’


அவளோ அருகில் வந்ததும்தான் இவனைக் கவனித்தாள். அதுவும், ஏதோ ஒரு உறுத்தலில் ‘இது யார்.. என்னையே பார்ப்பது..’ என்றுதான் பார்த்தாள். இவன் என்றதும் அன்று உள்ளாடையோடு கண்ட காட்சி கண்களில் வர, சின்ன வெட்கத்தோடு சிரிப்பும் வந்தது. வேகமாய் பார்வையை விலக்கிக்கொண்டு அவள் போக முயல கை நீட்டித் தடுத்தான் சீராளன்.


தானாக அவளின் சைக்கிள் நிற்க, குழப்பமும் கேள்வியுமாகப் பார்த்தாள். உதயனும் அவளுடன் நின்றுவிட அதுவும் பிடிக்கவில்லை இவனுக்கு. “யார் இது?” உதயனைக் கண்ணால் காட்டிக் கேட்டான்.


“என்ர ஃபிரெண்ட்; உதயன்.” என்றாள், அதையேன் இவன் கேட்கிறான் என்கிற குழப்பத்தோடு.


உதயனின் விழிகளிலும் கேள்வி. அவன் அறியாமல் யார் இது? அதுவும் அவனை யார் என்று கேட்கும் அளவுக்கு?


அதைக் கவனித்தும் பொருட்படுத்தாமல், “உன்னோட கொஞ்சம் கதைக்கோணும். தனியா.” என்றான் சீராளன் உதயனைக் குறிப்பாகப் பார்த்து.


ஷர்மினிக்கு இன்னுமே குழப்பம். “என்னோட என்ன தனியா கதைக்க இருக்கு?” தயக்கத்துடன் கேட்டாள்.


“முதல் நீங்க யார் எண்டு சொல்லுங்கோ. திடீரென்று வந்து தனியா கதைக்கவேணும் என்றால் எப்படி? அதுவும் ரோட்டுல வச்சு.”


உதயன் கேட்டது நியாயம் தான். ஆனால், சீராளனுக்குப் பிடிக்கவில்லை. வீதி முழுக்க அவளோடு சிரித்துக் கதைத்தபடி அவன் வரலாம். இவன் ஒரு ஐந்து நிமிடம் கதைக்கக்கூடாதா?


இவள் ஏதும் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ அவன் கேட்டதற்குப் பதிலைச் சொல் என்பதுபோல இவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.


அது சீராளனைப் பாதித்தது. அந்த இடத்தில் ‘அவன் என்ர ஃபிரெண்ட்’ என்று அவனை அறிமுகப்படுத்தி வைத்தவள், குறைந்தபட்சமாக, ‘இவர் என்ர ஃபிரெண்ட்டின் அண்ணா’ என்றாவது தன்னை அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான்.


ஏமாற்றம் மனத்தைக் கவ்வ, இவளைப் பார்த்துக்கொண்டே, “நான் அபியோட அண்ணா. என்னை இவவுக்குத் தெரியும். நாங்க ஏற்கனவே சந்திச்சு இருக்கிறம். அந்த சந்திப்ப உங்கட ஃபிரெண்ட் மறந்திருக்க மாட்டா எண்டு நினைக்கிறன்.” என்றதும், இருந்த அத்தனை குழப்பங்களையும் தாண்டிக்கொண்டு கூச்சச் சிரிப்பு அவள் இதழ்களில் படர்ந்தது. விழிகளை அவனிடமிருந்து அகற்றிக்கொண்டாள்.


அவளின் அந்த வெட்கத்தை ரசித்தான் சீராளன். அதுவரை அவள் மீதிருந்த அத்தனை மனக்குறைகளும் மறைய இனிமையாக உணர்ந்தான். “ஐந்து நிமிஷம்தான். கோயிலுக்கு வா!” என்றான் இதமான புன்னகையோடு.


தயக்கத்தோடு என்ன சொல்ல என்று உதயனைப் பார்த்தாள் ஷர்மினி. “அது… அவ்வளவு நல்லாருக்காது. நீங்க என்ன கதைக்கிறதா இருந்தாலும் வீட்டுக்கு வந்து கதைங்கோ.” என்று தன்மையாக அவனிடம் சொன்ன உதயன், “நீ வா!” என்றபடி சைக்கிளை மிதிக்க, இவளும் புறப்படத் தயாராக, இருந்த இதமான மனநிலை மறைந்துபோனது சீராளனுக்கு. அவளின் ஹாண்டிலைப் பிடித்து நகரமுடியாதபடி செய்தான்.


அதிர்ந்த விழிகளோடு அவள் பார்க்க உதயனின் புருவங்களும் பிடித்தமின்மையால் சுருங்கிற்று!


“அவன் உனக்கு ஃபிரெண்ட் மட்டும் தானே?” கூரிய விழிகளை அவள் முகத்திலேயே பதித்துக் கேட்டான்.


அவள் விழிகளில் தெறித்த சினத்தில் மெல்ல அடங்கினான் சீராளன். நண்பர்கள்தான் என்று அவனுக்கும் தெரியாமலில்லை. இருந்தபோதிலும் அவனை அவள் தன்னைவிட மேலாக நினைப்பதை ஏற்கமுடியவில்லை. கண்ட கணத்தில் தன்னை அவளிடம் தொலைத்துவிட்டு நிற்கிறான் அவன். அவளோ சற்றேனும் அவனைப் பொருட்படுத்தாமல் தொட்டதற்கும் நண்பனின் முகம் பார்க்கிறாள்.


அவளுக்கும் அவனுக்கும் இடையில் உதயன் வருவதை விரும்பாத மனம் சீறிச் சினப்பதைத் தவிர்க்க முடியவில்லை. எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. உனக்கு யாரையும் இதற்கு முதல் பிடித்துப் போயிருக்கக் கூடாது என்கிற தவிப்பில் தான் கேட்கிறேன் என்று சொல்ல முடியாமல் தலையை கோதிக்கொண்டான். ‘ஊப்ஸ்..!’ உதடுகளைக் குவித்து காற்றை வெளியேற்றிவிட்டு ஒரு முடிவோடு உதயனிடம் திரும்பினான்.


“ஒரு பொம்பிளைப் பிள்ளையோட எப்படி நடக்கோணும் எண்டு எனக்கும் தெரியும். இது வீட்டுல வச்சு எல்லாருக்கும் முன்னால கதைக்க முதல் அவளோட தனியாக் கதைக்கவேண்டிய விஷயம். அவளின்ர பதில் தெரிஞ்ச பிறகு வீட்ட வந்து என்ன.. ஊரைக் கூட்டியே சொல்லுறன். அதுக்கு முதல் ஒரு அஞ்சு நிமிஷம்.” என்றவன் இப்போது அவளிடம் திரும்பி, “கோயிலுக்கு வா!” என்றான் முடிவான குரலில்.


நேரடியாக, தன்மையாக விளக்கம் சொல்லிக் கேட்டமுறை உதயனுக்கும் பிடித்திருந்தது. “போ! நான் இங்க நிக்கிறன்.” என்று சொல்ல, சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றாள்.


தயக்கம் கால்களைப் பின்ன தன்னோடு வராமல் ஓரடி பின்னே நடந்துவந்தவளைப் பார்த்து, “பரவாயில்ல. என்னோடயே வரலாம்.” என்றான் சிரிப்போடு. வெட்கமாய் போயிற்று அவளுக்கு. மெல்ல ஓரடி எடுத்துவைத்து அவனோடு கூட நடந்தாள். அவளின் அருகாமை அவனுக்குள் பரவசத்தை ஊட்ட, அந்த நொடிகளை மிக ஆர்த்மார்த்தமாக ரசித்தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“சுவாமி கும்பிடப்போறியா?” அவள் தன் சொந்தம் என்கிற உணர்வோடு கேட்டேன். இன்னோர் வீட்டுப்பெண்ணாக அவளை உணரவே இல்லை அவன். தன்னவளாய், தனக்குரியவளாய் மட்டுமே மனதில் பட்டுக்கொண்டிருந்தாள். வேகமாக தலையசைத்து மறுத்தாள் அவள். சுவாமி கும்பிடும் மனநிலையிலா இருக்கிறாள்? விட்டால் புறங்கால் பின்பக்கம் பட ஓடிவிட மாட்டாளா?

அவனும் மனதில் உள்ளதைச் சட்டென்று கோட்கமுடியாமல் நின்றான். மனத்துக்குப் பிடித்த பெண்ணின் வெட்கமும் தயக்கமும் அவனைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. ஒற்றைக்காலில் நின்று அவளை அழைத்து வந்துவிட்டான்தான். இப்போதோ பேச்சை ஆரம்பிக்கத் தயக்கமாயிருந்தது. என்ன சொல்லுவாள்? மறுத்தால் என்ன செய்வான்?

அவளும் குழப்பத்தோடு அவனைப் பார்க்க, “உனக்கு.. யாரையாவது பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

என்ன கேள்வி இது? அவளுக்கு நிறையப்பேரைப் பிடிக்கும். இதில் யாரைக் கேட்கிறான்?

“பிடிச்சிருக்கா எண்டா?”

“பிடித்தம்.. லவ்? இந்தக் காதல் கத்தரிக்காய் ஏதும் இருக்கா எண்டு கேக்கிறன்?” ஏன் இந்தச் சூடு என்று தெரியாத போதும் அவனுக்குள் சூடேறியது. ஆம் என்று சொல்லிப்பார்; உன்னை உண்டில்லை என்றாக்குகிறேன் என்கிற அணல் தெறித்தது அவன் கேள்வியில்.

“ஐயோ இல்ல..!” என்னவோ செய்யக் கூடாத குற்றம் ஒன்றை அவள்மீது அவன் சுமத்திவிட்டது போன்று விழுந்தடித்துக்கொண்டு அவள் மறுத்த விதத்தில், அத்தனை தவிப்பும் வடிய, அவன் உதடுகளில் புன்சிரிப்பு மலர்ந்தது.

“அப்ப என்னை லவ் பண்றியா?” சின்னச் சிரிப்போடு கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு கேட்டான்.

“என்னது?” அதிர்ந்துபோய் பின்னால் திரும்பி உதயனைத்தான் பார்த்தாள். தப்பித்து அவனிடம் ஓடிவிட்டாள் என்ன என்றுதான் உள்ளே ஓடியது.

“அவனை என்னத்துக்கு பாக்கிற? என்னைப்பார்!” அதட்டலாகச் சொன்னான் சீராளன்.

பயந்துபோய் திரும்பி அவள் பார்க்க, “எனக்கு உன்னப் பிடிச்சிருக்கு. நாங்க கல்யாணம் கட்டுவமா?” என்றான்.

‘கல்...யாணமா?’ பெரும் அதிர்ச்சி அவளிடம்.

“சொல்லு! கட்டுவமா?” அவனுக்குப் பொறுமை பறந்துகொண்டிருந்தது. அவளின் பதில் தெரிந்தே ஆகவேண்டும். அதுவும் ஆம் என்கிற பதில் மட்டுமே.

“இத நீங்க வீட்டதான் கதைக்கோணும்.” தன் அதிர்ச்சியை விழுங்கிக்கொண்டு மெதுவாகச் சொன்னாள்.

“உனக்கு என்னை பிடிச்சிருக்கு எண்டு சொல்லு, வீட்டுல நான் கதைக்கிறன்!” என்றான் அவன்.

‘அம்மாடி.. இதென்ன இப்படிக் கேட்கிறான்?’ அவன் வேகம் தாங்காமல் தடுமாறினாள்.

பிடிச்சிருக்கா என்று கேட்கவில்லை. ஆம் இல்லை என்கிற முடிவைக்கூட அவளிடம் விடவில்லை. பிடித்திருக்கிறது என்று மட்டுமே சொல் என்கிறான். என்ன விதமாக உணர்வது என்றே தெரியவில்லை அவளுக்கு.

ஆனாலும், “தெரியேல்ல..” என்று மெல்லத் தன் மனதைச் சொன்னாள். உண்மையிலேயே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பார்த்ததும் பிடிக்கிற அளவுக்காகவாது அவனை அவள் பார்த்ததில்லை. பார்த்த கோலம் பிடிக்கிற கோலமா என்ன? “உங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி இருந்ததே?” யோசனையோடு கேட்டாள்.

திருமணம் நிச்சயமாகி இருக்கும்; தோழியின் தமையனின் கல்யாணம்; அவளும் கட்டாயம் போகவேண்டும்; அதற்கு என்ன அணியலாம் என்றுதானே யோசித்துக்கொண்டிருந்தாள். அப்படியிருக்க இப்படி வந்து கேட்டால்?

“அத வேண்டாம் எண்டு சொல்லீட்டன்.”

“ஏன்?” அபியும் ஆண்ட்டியும் எவ்வளவு ஆசையாசையாக அந்தப் பெண்ணைப் பார்த்து வைத்துவிட்டு, இவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்று அவளுக்குத் தெரியும். இவன் இப்படிச் சொன்னால் எப்படி? அதோடு அந்தப்பெண்ணின் நிலை?

“உன்னப் பாத்த பிறகு வேற யாரையும் பிடிக்கேல்ல.” அவள் விழிகளையே பார்த்துச் சொன்னான் அவன்.

‘கடவுளே.. நானா இதுக்கெல்லாம் காரணம்..’ உள்ளே திடுக்கிட்டாலும், விழியோடு உறவாடிக்கொண்டே அவன் சொன்ன விஷயம் அப்படியே அவள் இதயத்தில் சென்று அமர்ந்துகொண்டது. அதுவரை எந்தச் சலனமும் இல்லாத மனதில் முதன் முதலில் மெல்லிய தடுமாற்றம். அவன் விழிகளை நேரே சந்திக்க முடியவில்லை. தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.

“அது பிழை எல்லோ..”

“உன்னைப் பாத்த நிமிஷமே பிடிச்சுப்போய்ட்டுது. அதுக்குப்பிறகும் அவளைக் கட்டினா, அது எவ்வளவு பெரிய பிழை எண்டு யோசிச்சுப்பார்.” என்றான் அவன்.

முன்பக்கமாக நீண்டு தொங்கிய அடர்ந்த ஒற்றைப்பின்னலின் அடியை அவள் விரல்கள் சுருட்டி விளையாடத் துவங்கின. அவன் விழிகளும் அங்கு சென்றது. இந்த அடர்ந்த கூந்தல் காட்டுக்குள் தானே முதன் முதலில் அவன் தொலைந்தான். தன் விரல்களையும் அதற்குள் தொலைத்துவிட பரபரத்த கைகளை அடக்கக் கஷ்டப்பட்டான்.

“எனக்கு இன்னும் மூண்டு கிழமைதான் இருக்கு. அதுக்குள்ள ரெண்டு வீட்டிலையும் கதைக்கவேணும்; நாள் குறிச்சு கல்யாணத்த கெதியா(விரைவா) முடிக்க வேணும். நீ இப்பவே ஓகே எண்டு சொல்லீட்டா நான் மிச்ச வேலை எல்லாம் பாப்பன். எங்களுக்கு நிறைய நாள் இல்ல.” என்று அவன் கடகடவென்று அனைத்தையும் சொன்னபோது, மலைப்பாயிருந்தது அவளுக்கு.

இந்த வேகத்தை அவள் தாங்குவாளா? இதில் ‘எங்களுக்கு’ என்று அவளையும் சேர்த்தாச்சு.

“அப்ப நான் வீட்டுல கதைக்கிறன்.” என்றான் மீண்டும்.

“க...தைங்கோ.” குனிந்த தலை நிமிராமல் சொன்னாள்.

“என்னைப் பிடிச்சிருக்குத்தானே?” அவள் புறமாகக் குனிந்து மெல்லக் கேட்டான்.

‘இப்படிக் கேட்டா?’ நிமிர்ந்தவள் அவன் விழிப்பார்வைக்குள் சிறைப்பட்டாள். அந்தக் கண்களில் என்ன காந்தமா வைத்திருக்கிறான்? மனதை இப்படி வசியம் செய்கிறதே. நெஞ்சமெல்லாம் இனிமையாகப் படபடக்கத் துவங்க, கன்னங்களில் கதகதப்பு ஏறுவது போலிருக்கவும் பார்வையை தழைத்துக்கொண்டாள்.

அவன் உதடுகளில் புன்னகை பூத்தது. “சரி போ!” என்றான் சின்னதாகத் தலையசைத்து.

‘நான் தான் ஒண்டும் சொல்லேல்லையே..’ என்று அவள் பார்க்க, “உன்ர பதில் எனக்கு தெரியும். மிச்சத்தை நான் பாக்கிறேன். நீ போ!” என்றான் அவன் முகமெல்லாம் சிரிப்புடன்.

“நான் ஒண்டும் சொல்லேல்ல..” பயந்துபோய் வேகமாகச் சொன்னாள்.

“நீ சொல்லீட்ட..!” என்றான் பற்கள் தெரியச் சிரித்தபடி.

நெஞ்சம் கொள்ளைபோனது அந்தச் சிரிப்பில்.

“ஐயோ.. சத்தியமா நான் ஒண்டும் சொல்லேல்ல..!” விட்டால் அழுதுவிடுவேன் என்கிற நிலையிலிருந்தாள் அவள்.

அவனோ வாய்விட்டுச் சிரித்தான். அவளுக்கு வெட்கமாய் போய்விட்டது! அசடுபோல் நடந்துகொள்கிறோமோ? ஆனால், அவளின் சம்மதம் மட்டுமே இந்தத் திருமணத்துக்கு போதும் என்பதுபோல் கதைக்கிறானே. அவன் வீட்டில் என்ன சொல்லுவார்கள்? என்று எண்ணிக் கலங்கினாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவள் சொல்லாமலேயே அவளின் மனதை அறிந்தவன் அவள் விழிகளில் தென்பட்ட கலக்கத்தையும் படித்தான்.

“நீ ஒன்றுக்கும் யோசிக்காத. எல்லாம் நான் பாப்பன். உனக்கும் என்னை பிடிச்சிருக்கா எண்டுதான் எனக்குத் தெரியவேண்டி இருந்தது. இப்ப தெரிஞ்சிட்டுது. நீ சந்தோசமா போ!” என்றான் கனிவாக.

சந்தோசமா போறதா? முழுசா குழப்பி விட்டுவிட்டு சந்தோசம் வேறயா? அவன் விட்டதே போதும் என்று ஓடியே போய்விட்டாள் அவள்.

ஆனாலும், அவன் பார்த்த பார்வைகள், அதில் தெரிந்த சொந்தம், சின்னதாய் சிந்திய சிரிப்பு, நீ போ என்று தலையாட்டி அனுப்பிவைத்த விதம் என்று அத்தனையும் நெஞ்சுக்குள் சென்று சட்டமாக அமர்ந்துகொண்டதில் அவளுக்குள் இனிமையான படபடப்பு.

அவளோடு இணையாக வந்தபடி, “என்னவாம்?” என்று விசாரித்தான் உதயன்.

“கல்யாணம் கட்டுவமா எண்டு கேட்டவர்.” தயங்கி தயங்கிச் சொன்னாள்.

“என்னது?” அவன் அதிர்ந்து பார்த்தான். அவளுக்கும் அதே அதிர்ச்சிதானே. திடீரென்று வந்து நிர்ச்சலனமாய் இருந்த அவள் மனதைக் குழப்பிவிட்டானே.

“நீ என்ன சொன்னாய்?”

“நான் என்ன சொல்லுறது? வீட்ட கதைக்கச் சொன்னான்.”

மறுக்காமல் கதைக்கச் சொல்லியிருக்கிறாள் என்றதும், அவளை ஆராய்ந்தான் உதயன்.

“ஏதும் லவ்வா? எனக்கே தெரியாம?”

“டேய்! சைக்கிளால இடிச்சுத் தள்ளி விட்டுடுவன். நானே குழம்பிப்போய் இருக்கிறன். நீ விசர் கதை கதைக்காத!”

பின்னே? சீராளனும் இதையேதானே கேட்டான். அவளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் ஆளாளுக்கு?

“ஓகே ஓகே. திடீரென்று நடக்கவும் எனக்குத் தெரியாம எதுவுமோ எண்டு யோசிச்சன். அவ்வளவுதான்.” மெல்ல மெல்ல அவனுக்கும் அவளுக்குமான பழக்கத்தை அவளிடமிருந்து தெரிந்துகொண்டான் உதயன்.

அவன் அறிந்தவரையில் இது நல்ல சம்மந்தம் தான். நிறைவேறினால் அவளின் குடும்பத்துக்கே நல்லதுதான்.

அவளோ கலங்கிக்கொண்டிருந்தாள். “என்னையெல்லாம் ஆண்ட்டி மருமகளா ஏற்கவே மாட்டா. அவா பாத்து வச்சிருந்த வீட்டுக்காரர் நல்ல வசதியான ஆக்கள். இது பிரச்சனைலதான் வந்து முடியப்போகுது.” பெரும் துன்பத்தோடு சொன்னாள்.

ஏன் இந்த வேதனை? ஏன் இந்த அலைபாய்தல்? வந்தவன் பேசாமல் அவர்கள் காட்டிய பெண்ணையே கட்டிக்கொண்டு போயிருக்கலாம்.

“நீ சும்மா கவலைப்படாத. நாங்களா கேட்டுப் போகேல்ல. அவரா வந்தா அதுக்கு என்ன செய்றது? எல்லாம் பொருந்தி வந்தா நடக்கட்டும்!” என்றான் அவன்.

நடக்கவேண்டும் என்று அவனுள்ளமும் எதிர்பார்த்தது. ஆனால், அவள் சொன்னதைப்போல தேவகியைப் பற்றி அவனுக்கும் ஓரளவுக்குத் தெரியும். உதயனோடு அபி கதைப்பதையே அவர் வரவேற்பதில்லை. தப்பித்தவறி காதல் கீதல் என்று வந்துவிட்டால் என்று பயப்படுகிறார் என்று தெரிந்து ஒரு புன்னகையோடு அவனும் விலகிக்கொள்வான். அப்படியானவர் சீதனமில்லா ஏழை வீட்டுப் பெண்ணை ஏற்பாரா? மகளின் தோழி என்பது வேறு மருமகள் என்பது வேறல்லவா. அவர் மறுத்து சீராளனும் சரி என்றுவிட்டால்? சும்மா இருந்தவள் மனதைக் கெடுத்துவிட்டது போலாகாதா? ‘என்ன இருந்தாலும் என்னையெல்லாம் ஆண்ட்டி மருமகளா ஏற்கவே மாட்டா.’ என்று சொன்னதிலேயே அவள் மனம் விளங்கவில்லையா?

அவளுக்கோ அடுத்த கவலையாக அபி வந்து நின்றாள். “என்னைப்பற்றி என்ன நினைக்கிறாளோ தெரியாது. நான் அவரை ஒழுங்கா பாக்கக்கூடி இல்லை.” என்றாள் கவலையோடு.

“அவள் என்ன நினைக்க இருக்கு? கேட்டது அவர். உண்மையான ஃபிரெண்ட்டா இருந்தா ஃபிரெண்ட்அண்ணியா வாரதுக்கு சந்தோசப்படவேணும்.” என்றான் அவன்.

“டேய்! என்னவோ நீ கல்யாணமே சரிவந்த மாதிரி அண்ணி கிண்ணி எண்டு கதைக்கிற?” பதறிப்போனாள் ஷர்மினி.

சீராளன் இன்று நடந்துகொண்ட முறையைப் பார்க்கையில், நடக்கும்.. நடக்கவைப்பான் என்றுதான் உதயனுக்குத் தோன்றியது.


இதோ இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. ஒரு மாற்றமும் இல்லை. ‘நீ சந்தோசமா போ. நான் எல்லாத்தையும் பாக்கிறன்’ என்றவன் ஒன்றையுமே பார்க்கவில்லை. ஏன்? என்னாயிற்று? பின் எதற்காக அவளிடம் வந்து கதைதான்? அவள் மனதை கலைத்தான்? தன் நிம்மதியை தொலைத்துவிட்டு உள்ளுக்குள்ளேயே மருக்கிக்கொண்டிருந்தாள் ஷர்மினி.

அவளுக்குள்ளும் வயதுக்கேற்ற ஆசைகளும் கனவுகளும் நிறைந்ததுதான் இருந்தன. ஆயினும், யாரையும் மனதுக்குள் வர விட்டதில்லை. விரலுக்கேற்ற வீக்கமாக, நமக்கு இணையான ஒருவனைத்தான் மணம் முடிக்கவேண்டும், அதுவும் காலம் முழுக்க அம்மாவையும் பார்த்துக்கொள்ள இசையும் ஒருவனை மட்டுமே என்றுதான் நினைத்திருந்தாள். அவனோடு எளிமையான அழகான வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் அவளின் கற்பனை. அப்படியிருக்க திடீரென்று வந்து அனுமதி இல்லாமலேயே அவள் மனதுக்குள் நுழைந்து விட்டிருந்தான் சீராளன். சும்மாவல்ல! அதிரடியாக! அவனை வெளியேற்றும் வல்லமையற்றவள் ஆகிப்போனாள் அவள். ஆனால், அதை வீட்டில் சொல்லக்கூட முடியவில்லை. அவர்கள் சீதனம் எதிர்பார்ப்பார்கள் என்று நன்றாகவே தெரியும். தன் தமையானால் அது முடியவே முடியாது என்பது இன்னும் நன்றாகவே தெரியும். அப்படியிருக்க, நோய்வாய்ப்பட்ட அம்மாவையும் வைத்துக்கொண்டு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு சீதனம் கொடுத்து என்னைக் கட்டிவைத்து அனுப்பு என்று எப்படிக் கேட்பாள்?

தன் வீட்டு நிலைமை தெரிந்தும் மனதைப் பறிகொடுத்துவிட்டதை எண்ணி நொந்தாள். அவனல்லாத இன்னொருவனை இனிக் கற்பனையில் கூட எண்ண முடியாது. ஒன்றில் அவனோடு வாழவேண்டும் அல்லது இப்படியே காலம் முழுக்க அம்மாவுக்கு மகளாக இருக்கவேண்டும். இந்தளவு தூரத்துக்கு அவனது ஆதிக்கம் இருக்கும் என்று அவளே எதிர்பார்க்கவில்லை.

இதையெல்லாம் யாரிடமும் பகிர்வாள்? ‘ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?’ என்று உதயன் கேட்டும் ஒன்றுமில்லை என்றுவிட்டாள். உதயனுக்கும் யோசனைதான்; சொன்னவன் வரவில்லையே என்று.

அபியோடு கதைக்கக் கூடத் தயங்கினாள். சிறு வயதிலிருந்து தோழி. கதைக்கவும் கலகலக்கவும் எப்போதுமே ஆயிரமாயிரம் விஷயங்கள் அவர்களுக்கு இருக்கும். இன்றோ ஒன்றையும் காணோம். அவளும் அழைக்கவில்லை. என்னை ஏதும் தவறாக நினைக்கிறாளோ? அது வேறு மனதை அரித்துக்கொண்டிருந்தது. ‘நான் ஒன்றுமே செய்யேல்லையடி. உன்ர அண்ணாவாத்தான் வந்து கதைச்சவர்’ என்று சொல்லி அவனைக் குற்றவாளி ஆக்கவும் மனம் இடம் கொடுக்க மறுத்தது.

இவ்வளவு நடந்தபிறகு அவர்கள் வீட்டுப் பக்கம் போகவும் மனமில்லை. ஏதாவது தெரியவருகிறதா பார்ப்போம் என்று பெரும் தயக்கத்துக்கு மத்தியில் அபிக்கு அழைத்தாள். அழைப்பை அவள் ஏற்கவில்லை. மனம் இன்னுமே கலங்கிப்போனது. “டைம் இருந்தா ஃபோன் பண்ணு அபி.” என்று மெசேஜை தட்டிவிட்டாள்.

எப்போதுமே கனிவோடும் இதழோரச் சிரிப்போடும் தன் வேலையைப் பார்ப்பவள் ஷர்மினி. இரண்டு நாட்களாக பாட்டியும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். ஒரு மெல்லிய கவலை அப்படிக்கிடந்தது அவள் முகத்தில். இன்றும் சிந்தனையை எங்கோ தொலைத்துவிட்டு இயந்திரமாய் அவருக்கானதைச் செய்தவள் கரத்தை மெல்லப் பற்றினார்.

நினைவுகள் கலைந்து கேள்வியாக அவரைப் பார்த்தவளிடம், “என்னம்மா?” என்றார் கனிவோடு.

அந்த அன்பு அவளை பலவீனப்படுத்துவது போலிருக்க தொண்டை அடைத்தது. பொய்யாக ஒன்றுமில்லை என்று தலை அசைத்தவளின் கரத்தை மெதுவாக அழுத்திக்கொடுத்தார் பாட்டி. தன் காட்டிலிலேயே அமர வைத்துக் கேட்டார்.

“சொல்லு செல்லம். என்ன கவலை உனக்கு? ஏன் முகம் வாடிக்கிடக்கு?”

மனச்சுமையை எங்கே இறக்கி வைப்பது என்று தெரியாமல் தானே அல்லாடிக் கொண்டிருந்தாள். வீட்டினரிடமோ உதயனிடமோ பகிர முடியாது. வீட்டினர் அல்லாத யாரோ ஒரு வயோதிபப் பெண்மணி அன்போடு கேட்டபோது, அதற்காகவே காத்திருந்தவள் தன் மனதைச் சொன்னாள்.

“வந்து கதைக்கிறன் எண்டவர் வரவே இல்ல பாட்டி..” சொல்லும்போதே கண்களை நீர் சூழ்ந்தது.

“தம்பி வரும் அம்மா. நீ ஒண்டுக்கும் கவலைப்படாத.”

“ம்ம்..”

“நான் உன்னட்ட ஒண்டு கேக்கவா?”

என்ன என்று கேள்வியாக அவரைப் பார்த்தாள்.

“உனக்கு அந்தத் தம்பியப் பிடிச்சிருக்குத் தானே?”

சட்டென அவள் உதடுகள் சிரிப்பைச் சிந்தின. “நீங்களும் அவரை மாதிரியே பிடிச்சிருக்கா என்று கேக்கேல்ல பாட்டி. பிடிச்சிருக்குத்தானே எண்டுதான் கேக்கிறீங்க.”

“நீ பதிலைச் சொல்லு!”

“பி..டிச்சிருக்கு. ஆனா.. பயமா இருக்கு.” அவனிடம் கூடச் சொல்லாததைப் பாட்டியிடம் சொன்னாள்.

“பிறகு என்ன? ஒன்றுக்கும் பயப்படாத. அந்தத் தம்பி இன்னும் ரெண்டு நாளைக்குள்ள வந்து கதைக்கும். நீயும் சந்தோசமா கல்யாணம் கட்டி வெளிநாட்டுக்குப் போகப்போறாய். பாரேன்!” என்றார் அவர் உறுதியாக.

மனதில் இனித்துக்கொண்டு இறங்கியது அவர் வாக்கு. ஆனால் அம்மா? அவரை எண்ணி அவள் கலங்க, “ உன்ர அண்ணாவுக்கு ஒரு கலியாணத்தைக் கட்டி வை. அண்ணி அம்மாவைப் பாக்கட்டும், செலவை நீ பார். முடிஞ்சிது விஷயம். சும்மா சின்ன விசயத்துக்கு எல்லாம் கலங்குறேல்ல. கல்யாணப் பொம்பிளையாச் சந்தோசமா இருப்பியா.. அத விட்டுட்டு..” என்றார் அவர் சிரித்துக்கொண்டு.

உண்மையிலேயே அவளுக்குள்ளும் மெல்லிய சந்தோச அலைகள் குமிழியிடத் தொடங்கிற்று! மனப்பாரத்தை அவரிடம் இறக்கிவைத்தபிறகு கொஞ்சம் இதமாக உணர்ந்தாள். ஆனாலும், வருவானா? வந்து பெண் கேட்பானா என்பதிலேயே நின்று மனம் உழன்றது.

“தம்பி வீட்ட வந்து கதைச்ச பிறகு என்னட்ட கூட்டிக்கொண்டு வா. என்ர ராசாத்தியோட மனசப் பறிச்ச ராசாவை நான் பாக்கோணும்.” என்று அவர் சொல்ல அவள் முகம் அழகாய்ச் சிவந்தது.

“இது அழகு!” படுத்திருந்தே அவர் நெட்டிமுறிக்க, சந்தோசமாய் அவரிடம் விடைபெற்றாள் ஷர்மினி.தொடரும்...


 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்- 3அன்று மனச்சோர்வோடும் களைப்போடும் வந்த ஷர்மினி, வீட்டு வாசலில் நின்ற காரைக் கண்டதும் ஆனந்தமாய் அதிர்ந்தாள். ‘வந்திட்டான்! கடவுளே பாட்டி சொன்ன மாதிரியே வந்திட்டான்.’ ஓராயிரம் மனக்கவலைகளைச் சுமந்து வந்தவளுக்கு சந்தோசத்தில் கண்ணீர் வந்துவிடும் போலாயிற்று!

“இது.. அபி வீட்டுக் கார்தானே?” உறுதிப்படுத்த உதயன் கேட்க, ஆம் என்று தலையசைத்தாள்.

ஓடிப்போய் அவனைப் பார்த்துவிட உடல் முழுவதுமே பரபரத்தாலும் நிதானமாகக் காட்டிக்கொள்ள முயன்றபடி சைக்கிளை நிறுத்திவிட்டு தயக்கத்தோடு வீட்டுக்குள் நுழைந்தாள். விழிகள் அங்கிருந்தவர்களிடம் வேகமாய்த் தாவி சீராளனிடம் நிலைகொண்டது. அவனைக் காணவே கண்கள் கொண்டவள் போன்று பார்வையால் தழுவியவள், ஓடிப்போய் அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவனருகிலேயே நிற்கவேண்டும் போல் எழுந்த உந்துதலை அடக்கச் சிரமப்பட்டுப்போனாள்.

அவனும் வந்த நொடி முதற்கொண்டு அவளையேதான் பார்த்திருந்தான். தன் முகம் பார்க்கவே அன்று தயங்கியவள், இன்று கண்களுக்குள் அப்படியே தன்னை நிரப்புகிறவள் போன்று பார்த்தபோது, அந்த நிமிடமே அரவணைத்துக்கொள்ளத் துடித்த மனதை அடக்கி, என்ன என்று கண்ணால் கேட்டான்.

அத்தனைபேர் முன்பு என்ன சொல்லுவாள். நெஞ்சுக்குள் என்னென்னவோ உணர்வுகள் பொங்கிக்கொண்டு வந்தன. மெல்ல நகர்ந்து அம்மாவின் அருகில் சென்று நின்றுகொண்டாள். சாய்மனை நாற்காலியில் சாய்ந்திருந்த அவர் அவளின் கையைப் பற்றி அழுத்திக்கொடுத்தார். அவர் முகத்தில் தெரிந்த மலர்ச்சியும், அந்த நேரத்தில் அண்ணா சயந்தன் வீட்டில் நிற்பதும், உதயனின் அம்மாவின் தயவோடு நடந்து முடிந்திருந்த உபசரிப்பும் அப்போதுதான் பார்வையில் பட, கேள்வியோடு அன்னையைப் பார்த்தாள்.

“முகம் கழுவி நல்ல உடுப்பா போட்டுக்கொண்டு வாம்மா.” என்றார், அவர் உற்சாகக் குரலில்.

பாட்டியோடு கதைத்துக்கொண்டு இருந்ததில் நேரம் போனதில்,
அன்றைக்கு என்று பார்த்துத் தன் வெள்ளை ஆடையிலேயே வந்திருந்தாள் ஷர்மினி.


தலையை ஆட்டிவிட்டு ஓரடி எடுத்துவைக்க, “இந்தச் சம்பிரதாயம் எல்லாம் எதுக்கு? அவளை எங்களுக்கு முதலே தெரியும் தானே. தம்பியும் முதலே பாத்திட்டான் தானே.” என்றார், தேவகி.

ஒருமாதிரி ஆகிப்போனது அவளுக்கு. வேலைமுடிந்து வந்தவள் வேறு உடை மாற்றிக்கொண்டு வருவதில் என்ன இருக்கிறது? சாதாரணமாய்ச் சொன்னது போல் மேலோட்டமாகத் தெரிந்தாலும், அப்படியல்ல என்று அவர் சொன்ன தொணி எடுத்துரைத்தது.

“பரவாயில்ல ஆன்ட்டி. வேலை உடுப்போடையே நிக்க ஏலாது தானே. நீ போய் மாத்திக்கொண்டு வா.” என்றான் சயந்தன்.

அவனிடம் தலையாட்டிவிட்டு உள்ளே போகத் திரும்பியவள் கேள்வியாக சீராளனைப் பார்த்துவிட்டுப் போனாள். ‘உன் வீட்டினருக்கு பிரியமில்லை எனில் எதற்காக என் வீட்டினரைச் சங்கடப்படுத்துகிறாய்?’ என்று மொழிபெயர்த்தது அந்தப் பார்வை.

சீராளனுக்கும் விளங்காமலில்லை. எதை மனதில் வைத்து அன்னை சொன்னார் என்றும் தெரியாமலில்லை. என்றாலும், இதையெல்லாம் பெரிதுபடுத்தும் நிலையிலில்லை அவன். ஆசையாசையாக பெண்பார்த்துவிட்டு, ஒற்றை மகனின் திருமணத்தை அப்படி நடத்தவேண்டும் இப்படி நடத்தவேண்டும் என்று ஆயிரம் கற்பனைகளோடு காத்திருந்த அம்மாவின் ஏமாற்றத்திலும், அது உண்டாக்கிய கோபத்திலும் ஒரு நியாயம் உண்டு என்றுதான் நினைத்தான். ஆக, பொறுத்துப்போகவேண்டியவனும் அவன்தானே. அவள் கோபத்தில் நியாயமிருந்தாலும் சமாளித்துக்கொள்வோம் என்று எண்ணிக்கொண்டான்.

அதுவரை நேரமும் ‘சொன்னது போலவே வந்துவிட்டான்’ என்று பொங்கிக்கொண்டிருந்த மனம் அப்படியே அடங்கிவிட, இது தகுதிக்கு மீறிய ஆசையா என்கிற கலக்கம் மேலோங்க, பெண் பார்ப்பது போலும் அல்லாமல் பழைய வீட்டு உடையாகவும் அல்லாமல் கடைத்தெருக்களுக்கு போடக்கூடியது போன்று, முழங்கால் வரையிலான பாவாடை சட்டை ஒன்றை அதுவும் ஏற்கனவே அணிந்த ஒன்றை அணிந்து, முகம் கழுவி தலைவாரிக்கொண்டு, ஒப்பனைகளற்ற முகத்தோடு வந்தவளை ரசனையோடு மொய்த்தது சீராளனின் விழிகள்.

சாதாரணமாகத்தான் இருக்கிறாள் என்று அவளுக்கே தெரியும். என்றாலும், ‘நீ அழகாய் இருக்கிறாய்’ என்று ஆராதித்த அவன் பார்வையில் தன்னைப் பேரழகியாய் உணர்ந்தவளின் மனச்சிணுக்கத்தையும் அந்தப் பார்வை துகள் துகளாய் அடித்துப்போடுவதையும் உணர்ந்தாள்!

ஆனாலும் ஒரு சின்ன ஊடல்; ஒன்றும் சொல்லாமல் இருந்தானே என்று! அவனிடம் தாவிடத் துடித்த விழிகளை மிரட்டி அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.

“பிறகு என்ன? பிள்ளையும் வந்திட்டாள். பொருத்தமும் அமோகமா பொருந்தி இருக்கு. இனி மேற்கொண்டு என்ன எண்டு பாக்கலாமே..” என்று ஆரம்பித்தார் சீராளனின் அப்பா; சண்முகராஜா.

இவளுக்கு இதயத்துடிப்பு எகிறத் துவங்கிற்று! சீதனம் என்கிற அரக்கன் இளம் மனங்களின் நேசத்தை துண்டாடத் தன் அகன்ற வாயை கோரத்தோடு திறந்துகொண்டு வருவதுபோலிருந்து.

அச்சத்தோடு அவள் நிற்க, தாயை ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னான் சயந்தன். “எங்களுக்கும் இதுல சந்தோசம் அங்கிள். ஆனா.. சீதனம் எண்டு.. எங்களால பெருசா செய்ற அளவுக்கு வசதி இல்ல..."

சண்முகராஜா பதில் சொல்ல முதல் முந்திக்கொண்டான் சீராளன். “உங்கட தங்கச்சியக் கேட்டுத்தான் என்ர அம்மா அப்பாவைக் கூட்டிக்கொண்டு இங்க வந்திருக்கிறன் சயந்தன். சீதனத்தையில்ல! அவாவை மட்டும் நீங்க தந்தாப் போதும்!” என்றான் தெளிவாக.

‘அவ்வளவு கஷ்டப்பட்டு உன்ன வளத்து ஆளாக்கினது இப்படி ஒரு அன்னக்காவடி வீட்டுல இருந்து பெண் எடுக்கவா? எத்தனை கனவு.. எவ்வளவு ஆசை.. எல்லாம் நாசமாப் போச்சு!’ தேவகியால் தாங்கவே முடியவில்லை. மனம் பொறுக்காமல் எதையாவது கதைத்துவிடுவோமோ என்று இறுக்கி வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

சயந்தன் வீட்டினருக்கு அத்தனை சந்தோசம். ஷர்மினிக்கு எவ்வளவு அடக்கியும் முடியாமல் கண்ணோரம் ஒருதுளி நீர் கசிந்திருந்தது. ‘சீதனம்’ என்கிற ஒன்றை எண்ணி எவ்வளவு பயந்தாள். அவனானால் ஒற்றை வார்த்தையில் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டானே.

தேவகியின் முகம் பார்த்ததும் மனம் மீண்டும் கனத்துப்போனது. அபி ஏதாவது ஆறுதலாய் பார்ப்பாள் என்று பார்த்தால், அவளோ இவளைத் தவிர மற்ற எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லையோ ஃபோனை நோண்டினாள். மனதிலிருக்கும் எதையும் காட்டிவிடக்கூடாது என்கிற கவனத்தோடும் ஒருவித இறுக்கத்தோடும் அமர்ந்திருந்தாள்.

‘ஒருமுறை என்னைப் பாரடி.. என்னோடு கதையடி..’ இவள் மனம் அவளிடம் மன்றாடிக்கொண்டிருந்தது.

உதயனுக்கு ஷர்மினியின் மனம் புரிந்துபோயிற்று. உடனே, அவளருகில் சென்று துணையாக நின்றுகொண்டான். கலக்கத்தோடு அவள் பார்க்க, எல்லாம் சரியாகும் என்று கண்களை மூடித்திறந்தான்.

ஓரளவுக்கு மனம் அமைதியாக, பார்வையைத் திருப்பினால் இங்கே தகப்பனின் காதருகில் குனிந்து அவன் என்னவோ கிசுகிசுப்பது விழ, அவளைத்தான் சீண்டப்போகிறான் என்று நினைத்து முடிக்க முதலே, “நாங்களே எல்லாத்தையும் கதச்சுக்கொண்டு போறம். பிள்ளையிட்டையும் ஒரு வார்த்தை கேளுங்கோ; எங்கட மகனப் பிடிச்சிருக்கா எண்டு?” என்றார், அவர்.

சிரிக்கும் கண்களால் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டியவனை ஒன்றும் செய்ய இயலாமல் தலையைக் குனிந்துகொண்டாள் அவள். அவராவது பிடித்திருக்கா என்று கேட்கிறாரே. சின்னச் சிரிப்பொன்று மொட்டு இதழ்களில் முளைவிட்டது. அதைக் கவனித்துவிட்டான் அவன். உள்ளத்தில் இனிமையான உற்சாகம் பொங்க, அவளோடான தனிமை வேண்டும் என்றாகிப்போனது அவனுக்கு!

“சொல்லம்மா.” என்றார், அம்மா அவளின் கரம் பற்றி.

என்ன சொல்லுவாள்? இத்தனைபேர் முன்னிலையில் அவனின் குறுகுறு பார்வையைத் தாங்கிக்கொண்டு எப்படிச் சொல்லுவாள்? பெரும் தயக்கத்துக்கு மத்தியில் தலையை ஆட்டினாள்.

“இப்படி ஆட்டினா என்னெண்டு எடுக்கிறது?” அவன்தான்! வேண்டுமென்றே சீண்டுகிறான்.

“உங்க எல்லாருக்கும் பிடி..”

“நாங்க கேக்கிறது உன்ர விருப்பத்தைப் பற்றி.” வேகமாக இடைமறித்தான் அவன். அவளுக்குப் புரிந்து போயிற்று! அன்று சொல்லாமல் அவனைத் தவிக்க விட்டதற்கு இன்று பழி வாங்குகிறான்!

‘ஒருக்கா நிமிந்து பாத்து நல்லா முறைச்சு விடுவமோ?’

‘ம்க்கும்! முறைச்சிட்டாலும்! அதுக்கும் சிரிச்சு வைப்பான்!’

வேறு வழியில்லாமல், “பிடிச்சிருக்கு!” என்றாள். அந்த வார்த்தையில் கூட வெட்கம். மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் போலிருந்தது அவனுக்கு. இத்தனைபேர் முன்னிலையில் ஆசைகளை அடக்கிக்கொண்டு தூர நின்று மட்டுமே அவளை ரசிக்கும் நிலை, பெரும் கொடுமையாய் போயிற்று!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் பார்வைகள் உண்டாக்கும் படபடப்பை தனியாகச் சமாளிப்பது பெரும் பாடாய் இருக்க, மெல்லத் தோழியை நிமிர்ந்து பார்த்தாள். அப்போதும் அவள் இவளைப் பார்த்தாளில்லை.

இந்தச் சந்தோசமான தருணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் துக்கப்பந்து ஒன்று தொண்டையை அடைத்தது.

இவளையே பார்த்திருந்த சீராளனின் மனம் சிணுங்கியது. ‘இவளை கட்டப்போறது நானா அபியா? என்னைப் பாக்கிறத விட்டுட்டு அவளையே பாக்கிறா.’

ஷர்மினியின் கைக்குள் இருந்த ஃபோன் கிர்ர் என்றது. புது நம்பரில் இருந்து மெசேஜ்.

“ஓய்! என்னையும் கொஞ்சம் பாக்கிறது.”

யார் இது என்று புருவங்களைச் சுருக்கினாள்.

“நான்தான்.”

“நான்தான் எண்டா?” உள்மன உந்துதலில் நிமிர்ந்து சீராளனைப் பார்க்க, அவனோ மெல்லக் கண்ணைச் சிமிட்டினான்.

சட்டென்று முகம் சிவந்துபோயிற்று அவளுக்கு.

“பிடிச்சிருக்குத்தானே?”

‘கடவுளே.. சுத்தி இவ்வளவு பேரையும் வச்சுக்கொண்டு ஃபோனை நோண்டினா என்ன நினைப்பீனம்?’

கண்ணால் மற்றவர்களைச் சுற்றிக் காட்டிவிட்டு ‘மெசேஜ் அனுப்பாதீங்கோ’ என்று செய்தி சொன்னாள். அத்தனைபேர் இருந்தும் அவர்கள் கண்களைச் சுற்றிவிட்டு செல்ல முறைப்பாடு கண்ணால் மிரட்டியள் மீது அளவற்ற ஆசைகள் பொங்கிற்று அவனுக்குள்.

“கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரேல்ல.” கண்களில் குறும்போடு கேட்டான்.

‘எல்லாருக்கும் முன்னுக்கு சொல்ல வச்சிட்டு திரும்பவும் என்ன?’

கள்ளச் சிரிப்போடு சத்தத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டு அருகிலிருந்த மேசையில் சாதாரணமாய் வைப்பதுபோல் ஃபோனை வைத்துவிட்டு, ‘இப்ப என்ன செய்வாய்?’ என்று கண்ணால் கேள்வி எழுப்பினாள் அவள்.

அவன் விழிகள் பளிச்சிட்டது. அவளும் உதட்டுச் சிரிப்பை மறைக்க முடியாமல் பார்வையை திருப்ப, “அப்ப ஏற்கனவே கதைச்சமாதிரி கோயில்லையே கல்யாணத்தை வைப்பம்.” என்று ஆரம்பித்த பெரியவர்கள் கடகடவென்று மிகுதி எல்லாவற்றையும் பேசி முடித்தபோது,

‘என்னது இன்னும் மூண்டு நாளில கல்யாணமா??’ என்று அதிர்ந்து நிற்கத்தான் முடிந்தது அவளால்.

இதில், காதல் திருமணம் போலல்லாது வீட்டுப் பெரியவர்கள் மூலம் ஃபோனில் பேசி, குறிப்பு பரிமாறப்பட்டு, பொருத்தம் பார்த்து, கோயிலில் வைத்து அவளுக்கே தெரியாமல் பெண்ணும் பார்த்து, கிட்டத்தட்ட கல்யாண நாளையே குறித்துவிட்டுத்தான் அவன் வந்திருக்கிறான் என்று உதயன் மூலம் தெரிந்தபோது, மலைத்தேபோனாள் ஷர்மினி.

அதைவிட, எப்போது அவளைப் பெண் பார்த்தானாம்? நேற்று அம்மா சொல்லி உதயனோடு கோவிலுக்குப் போனாளே அப்போதா? அப்படித்தான் இருக்கவேண்டும். என்றுமே எதுவும் சொல்லாத அம்மா அன்றுமட்டும் சாரி கட்டிக்கொண்டு போ என்று கட்டாயப்படுத்திக் கட்ட வைத்தாரே.

‘அடப்பாவி! என்னட்ட ஒருவார்த்தை சொல்லி இருந்தா நானும் ‘மாப்பிள்ளை’ பார்த்திருப்பேனே.’

அவளின் சம்மதத்தை எப்போது பெற்றார்களாம்?

உதயனின் காதைக் கடிக்க, “நான்தான் சொன்னான்.” என்றான் அவன்.

அவள் முறைக்க, “‘ஆண்ட்டி என்னையெல்லாம் மருமகளா ஏற்கமாட்டா’ எண்டு அண்டைக்கு சொல்லிப்போட்டு இப்ப என்ன முறைப்பு?” என்று மடக்கினான் அவன்.

வருகிறேன் என்றவன் ஒன்றுமே செய்யவில்லையே என்று கவலைகொண்டாளே. அவன் மலையையே அல்லவா புரட்டி இருக்கிறான். நேசம் பொங்க நெஞ்சில் நிறைந்தவனைப் பார்த்தாள்.

அனைத்தும் சுபமாக முடிந்ததில் பெரியவர்கள் விடைபெற்றுக்கொள்ள, சயந்தனைப் பிடித்தான் சீராளன்.

“உங்கட தங்கச்சியோட கொஞ்சம் கதைக்கோணும். ப்ளீஸ் ஹெல்ப்புங்க.” அவன் காதுக்குள் சிரித்துக்கொண்டு சொன்னான்.

“இப்பயேவா?” மச்சான் ஆகப்போகிறவனின் ஆர்வத்தில் அவன் உதட்டிலும் சிரிப்பு மலர்ந்தது.

அதுவரை, ‘தங்கையின் கணவனாகப் போகிறவர்’ என்றும், ‘மனைவியாகப் போகிறவளின் தமையன்’ என்கிற நிலையிலும் மரியாதை நிமித்தமாகவே பேசிக்கொண்ட அவர்கள் இருவருக்குள்ளும் மெல்லிய நட்பொன்று இளையோடத் துவங்கியது.

“பாஸ்! நான் நிக்கப்போறதே இன்னும் ரெண்டு கிழமைதான். கல்யாணத்துக்கு இன்னும் மூ...ண்டு நாள் இருக்கு. இதுல இப்பயேவா எண்டு நீங்க இழுக்கிறீங்க.” என்றான் பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு.

“ஒரு ஆம்பிளையின்ட மனம் இன்னொரு ஆம்பிளைக்குத்தான் விளங்கும் எண்டு நினைச்சன். நீங்க என்னடா எண்டா..” சட்டெனச் சிரித்துவிட்டான் சயந்தன். அவனை முதலும் ‘நல்ல மாப்பிள்ளை’ என்று பிடிக்கும்தான். இப்போது இன்னுமே பிடித்துப்போயிற்று. எனவே, “ட்ரை பண்றன்.” என்றான் வேண்டுமென்றே.

“நோ மச்சான்! செய்றீங்க. இல்ல நடக்கிற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை.”

சிரிப்போடு சொன்னவனை கெட்டிக்காரன்தான் என்று நினைத்துக்கொண்டான் சயந்தன். யாரைப்பிடித்தால் காரியமாகும் என்று தெரிந்து காய் நகர்த்துகிறானே. அவனுக்கும் தங்கையின் சந்தோசமான வாழ்க்கைதானே முக்கியம். எனவே கேட்டதைச் செய்துகொடுத்தான்.

அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தார்கள் இருவரும். இந்த சம்மந்தம் கைகூடுவது நடவாத காரியம் என்று நன்றாகவே தெரிந்திருந்தும், தன்னவனாய் அவன் வந்துவிட மாட்டானா என்று ரகசியமாய் ஏங்கித் தவித்த நிலைமாறி, அவளைத் தன்னவளாய் நிச்சயித்துக்கொண்டு அருகில் நடந்து வந்துகொண்டிருந்தவனின் அருகாமையில் உள்ளம் தளும்பிக் கரைந்துகொண்டிருந்தது அவளுக்கு.

சீராளனின் விழிகளோ அவளோடான தனிமைக்கு ஏதுவாய் இடமொன்றைத் தேடிக்கொண்டிருந்தது.

‘என்ன இவன் தனியா கூட்டிக்கொண்டு வந்திட்டு கதைக்காம நடந்துகொண்டே இருக்கிறான்..’ யோசனையோடு கடைக்கண்ணால் அவனைப் பார்க்க, அதேநேரம் அவனும் திரும்பிப் பார்த்துவிட, படக்கென்று விழிகளைத் திருப்பிக்கொண்டவளை படபடப்புத் தொற்றிக்கொண்டது. சீராளனின் உதடுகளில் சிரிப்பொன்று மலர்ந்தது.

காய்கனிகளைத் தரும் மரங்கள் தோட்டத்தை பசுமையாய் மாற்றியிருக்க, அங்கிருந்த மல்லிகைப் பந்தலைக் கண்டதும், “வா, அங்க போவம்!” என்றுவிட்டு அவளோடு நடந்தான்.

பந்தலின் கீழே தன்முன்னே நின்றவளை ஆவலோடு வருடின அவன் விழிகள். கைகளில் ஃபோனைப் பற்றிக்கொண்டு தன் தடுமாற்றத்தை மறைக்க முயன்றபடி நின்றிந்தவளைப் பார்க்கச் சிரிப்பு வந்தது. அவனுக்குள்ளும் தடுமாற்றம் தான். மனதுக்கு பிடித்தவளோடான முதல் தனிமை. முன்னனுபவம் அவனுக்குமில்லையே! ஓராயிரம் வார்த்தைகளை சேகரித்துக்கொண்டுதான் வந்தான். இப்போதோ அதில் ஒன்று கூடக் கிட்டாமல் அவளைப் பார்த்துக்கொண்டு மட்டும் நின்றிருந்தான்.

“பிறகு?” என்றான்.

‘என்ன பிறகு?’ கண்களால் கேள்வி எழுப்பினாள் அவள்.

“நாளைக்கு வெளில போவமா?”

“அண்ணாவை கேளுங்கோ.” மெல்லத் தயங்கிச் சொன்னாள்.

“சரி வா, இப்ப கோயில் வரைக்கும் நடந்திட்டு வருவம்.” அவளின் தயக்கத்தை அவனால் இனியும் அனுமதிக்க முடியாது. ஒருவார்த்தை பேச ஓராயிரம் யோசிக்கும் அவள் அப்போதாவது இயல்புக்கு வருவாளா என்றெண்ணி அவன் கேட்க, “அம்மாட்ட கேளுங்கோ..” என்றாள் அதற்கும்.

“அப்ப என்னத்த உன்னட்டக் கேக்கிறது?” அதட்டலாக வந்த குரலில் நிமிர்ந்து பார்க்க, கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தான் அவன்.

அவளோடு விளையாடுகிறான். பின்னே சிறுபிள்ளைபோல் அண்ணாவிடம் கேள் அம்மாவிடம் கேள் என்றால்? சிரிப்போடு தலையை தாழ்த்திக்கொள்ள, அவனது ஒற்றை விரல் ஒன்று நீண்டு வந்து அவள் நாடியைப் பற்றி நிமிர்த்த முனைய, வேகமாய் பின் நகர்ந்தாள் ஷர்மினி.

அந்தரத்திலேயே நின்றது அவன் விரல்.

“தொடக்கூடாதா?” ஏமாற்றத்தோடு கேட்டான்.

“சொல்லு ஷர்மி! நான் உன்னைத் தொடக்கூடாதா?” உஷ்ணமேறிப்போயிற்று அவன் வார்த்தைகளில்.

எத்தனை பாடுபட்டு வீட்டினரை சம்மதிக்க வைத்து, இரண்டு நாட்களில் திருமணம் என்கிற நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறான். அவன் ஆண்மகன் தான். தனித்து நின்று முடிவுகளை எடுத்து செயல்படும் உறுதிமிக்கவன் தான். அதற்காக, எனக்கு என் விருப்பம் தான் முக்கியம் என்று குடும்பத்தினரை அலட்சியப்படுத்திவிட்டு, தன் விருப்பத்தை சாதிக்கிறவனும் அல்லவே. எல்லோரையும் சமாளிப்பதற்குள் எவ்வளவு போராட்டம்? இது எல்லாவற்றுக்கும் பரிகாரமாக அவளின் அருகாமையும் அன்பும் தேவைப்பட்டது. அவளானால் ஒற்றை விரல்கூட தன்மேல் படக்கூடாது என்கிறாள்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ப்ச்!” தன் ஏமாற்றத்தை சலிப்பாகக் கொட்ட, அழுகையே வந்துவிட்டது அவளுக்கு. சங்கடத்தோடு பார்வையை தங்களைச் சுற்றிச் சுழற்றிவிட்டு, என்னைப் புரிந்துகொள்ளேன் என்கிற கெஞ்சலோடு அவனைப் பார்த்தாள்.

அப்போதுதான் அவளின் சங்கடத்தை உணர்ந்தான் அவன்.

“வா போவம்.” சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தவனை, ஏமாற்றத்தோடு பார்த்தாள். ‘தொட வேண்டாம் என்றால் கதைக்கவும் கூடாதா?’

வீட்டுக்குள் வந்ததும், “உன்ர அறை எது?” என்று, கேட்டான்.

அவள் காட்ட, “போ, வாறன்!” என்றவன் சயந்தனைத் தேடிப்போனான்.

“சயந்தன் ப்ளீஸ். ஒரு அஞ்சு நிமிஷம் அறைக்குப்போய் கதைச்சிட்டு வாறன். வெளில உங்கட தங்கச்சி பக்கத்தில வரக்கூட பயப்படுறா.” என்றான்.

தோட்டத்தை சயந்தன் தெரிவுசெய்யக் காரணமும் அதுதானே. அறைக்குப் போவது அழகுமல்ல, முறையுமல்லவே! அவன் மறுக்கத் தொடங்கும் முதலே, “எனக்கும் என்ர லிமிட் தெரியும் சயந்தன். அஞ்சு நிமிஷம்தான்.” என்றவன் அவன் அனுமதி எதிர்பாராமலேயே அவள் அறைக்குள் நுழைந்து கதைவடைத்திருந்தான்.

என்னடா இது? என்று உதயனைப் பார்க்க, “விடு மச்சி! இன்னும் ரெண்டுநாள்ல கல்யாணமே நடக்கப்போகுது. இப்பபோய் இதையெல்லாம் பாத்து என்ன வரப்போகுது. அவருக்கு எங்கட ஷர்மியை நல்லா பிடிச்சுப்போச்சு எண்டு நினைக்கிறன். எல்லாத்தையும்விட அதுதானே எங்களுக்கு முக்கியம்.” என்றான் சமாதானமாய்.

அறைக்குள் வருவான் என்று ஷர்மினி எதிர்பார்க்கவில்லை. அண்ணா என்ன நினைப்பான்? பதட்டத்தோடு “கதவை பூட்டாதீங்கோ..” என்றவளை, “மூச்!” என்றபடி வேகமாக வந்து அணைத்துக்கொண்டான் அவன்.

பயந்து திமிரத் தொடங்கியவளை, “கொஞ்ச நேரம் சும்மா இரு!” என்றவன், அவள் முதுகை வருடிக் கொடுக்க, ஒருகணம் நடுக்கமொன்று உடலில் ஓடி அடங்க அந்த அணைப்பில் உடைந்தாள் அவள்.

“டேய்! என்னடா?” உருகிப்போய் அவன் கேட்க,

“இவ்வளவு நாளும் நீங்க ஏன் வரேல்ல?” விம்மல்களுக்கிடையில் கேட்டுமுடித்தாள் அவள்.

‘கடவுளே.. உடனேயே வருவன் எண்டு எதிர்பாத்து இருந்திருக்கிறா.’

“உங்கள பாத்து பாத்து ஏமாந்து, பயந்தே போய்ட்டேன்.” அழுகையில் குலுங்கியவளின் உச்சியில் உதடுகளை பதித்து மீட்டான் சீராளன்.

“சொன்னா செய்வன் செல்லம்! ஆனா, எல்லாரோடையும் கதைச்சு சம்மதம் வாங்கி நாள் குறிச்சு எண்டு முடிஞ்சவரைக்கும் முறையா செய்றதுதானே சரி. அதுக்கு நேரம் வேண்டாமா?”

“சீதனம் எங்களால தர முடியாது எண்டு தெரிஞ்சு மனம் மாறிட்டீங்களோ என்று..” என்று அவள் தேம்பவும், அவளைத் தன்னிடமிருந்து பிரித்து நிறுத்திவிட்டு முறைத்தான் அவன்.

“என்னப் பாத்தா உனக்கு சீதனத்துக்குக்காக ஒரு பெட்டைய கட்டுற ஆள் மாதிரியா இருக்கு.” அவன் காட்டிய கோபம் அவள் உள்ளத்தை அப்படியே வசீகரித்தது.

“ஒரு செக்கன் கூடப் பாக்காத பெட்டைய துரத்திக்கொண்டு வந்து கட்டுற ஆள் மாதிரி இருக்கு” என்று சொல்லும்போதே அவ்வளவு நேரமும் அழுகை ஆக்கிரமித்திருந்த உதடுகளில் சிரிப்புப் பொங்கியது.

“ஒரு செக்கன் பாக்காட்டியும் ‘கருமம் கருமம்’ எண்டு சொன்னவள் பச்சக் எண்டு வந்து நெஞ்சுக்க பதிஞ்சுபோனா நான் என்ன செய்றது?” குறும்புச் சிரிப்போடு கண்ணைச் சிமிட்டியவனுக்குள்ளேயே தன்னை மறைத்துக்கொண்டாள் அவள்.

“ஹாஹா…” சந்தோசமாய் சிரித்தான் அவன்.

“அச்சோ! மெல்லச் சிரியுங்கோ. வெளில கேக்கப்போகுது!” பயந்துபோய் அவன் வாயை இவள் பொத்த, அவளையே பார்த்தபடி அந்த விரல்களில் தன் உதடுகளைப் பதித்தான் அவன்.

விசுக்கென்று கையை எடுக்கப்போக, விடாமல் பற்றிக்கொண்டு அவளின் ஒவ்வொரு விரலுக்கும் தன் உதட்டு முத்தத்தைப் பரிசளிக்க, தேகமெங்கும் சிலிர்க்க சுகமாய் அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் அவள்.

இந்தச் சொந்தம் எப்படி உருவாகிற்று? என்னவோ காலம் காலமாய் வாழ்ந்த சுகம் நெஞ்சுக்குள். ஒருவர் மற்றவருக்கு அந்நியமாய், புதிதாய் தெரியவே இல்லை. அவள் சாய்வதற்காகவே அவன் தோள்கள் படைக்கப்பட்டது போலவும், அவன் கையணைப்பில் கரைவதற்காக மட்டுமே அவள் பெண்ணாய் பிறந்தது போலவும் இருவரும் ஒன்றிப்போயினர்.

“உங்களுக்குத் தெரியுமா, இண்டைக்குத்தான் பாட்டி சொன்னவா ஒன்றுக்கும் கவலைப்படாம போ; தம்பி வரும் எண்டு. வீட்ட வந்து பாத்தா நீங்க நிக்கிறீங்க.” என்று புன்னகைத்தாள் அவள்.

மின்னலாய் மின்னிய முத்துப்பற்களை ரசித்துக்கொண்டே, “யார் பாட்டி?” என்று கேட்டான் அவன்.

“நாளைக்கு ஹாஸ்ப்பிட்டல் வாரீங்களா, பாட்டிய அறிமுகப்படுத்திறன். அருமையான பாட்டி.” ஆர்வத்துடன் கேட்டாள் அவள்.

“கட்டாயம் வாறன்; ஆனா, ரெண்டுபேரும் சேர்ந்து போயே பாப்பம். இனி நீ வேலைக்குப் போகவேண்டாம்.”

“ஏன்?”

“கஷ்டப்பட்டு உழைச்சு களைப்போட வீட்டுக்கு வரவேண்டிய அவசியம் இனியும் உனக்கு இல்ல. உன்ன சந்தோசமா வச்சுப்பாக்க நான் இருக்கிறன். நீ நிம்மதியா வீட்டுல இரு.” என்றான், அவன்.

இதே வார்த்தைகளை அபி சொல்லியிருக்கிறாள்; அண்ணாவுக்கு அவள் வேலைக்குப் போவதில் விருப்பமில்லை என்று. இன்று அதே அவன் அவளுக்கு உரியவனாக நின்று சொல்கையில் நெஞ்சில் இனித்தது.

ஆனாலும், “எங்கட வீட்டுச் செலவுக்கு என்ர சம்பளம் வேணும். அதோட, அது நான் விரும்பிப் படிச்சுச் செய்ற தொழில். ஒரு கஷ்டமுமில்லை எனக்கு.” என்றாள்.

“ஆனா நீ எப்படியும் விடத்தான் போறாய். சுவிஸ் வந்தபிறகும் வேலைக்குப் போகப் போறேல்ல. அதால இப்பவே விடுறதில ஒன்றுமில்லை தானே. அதோட, இனி உன்ர வீடு எனக்கும் வீடுதான். உன்ர பொறுப்பு என்ர பொறுப்பு. எதைப்பற்றியும் நீ யோசிக்கக் கூடாது. எல்லாத்தையும் நான் பாப்பன்.” என்று சொன்னபோது, ‘எல்லாத்தையும் நான் பாப்பன்’ என்று சொல்லி அவளின் பொறுப்புக்களை அவன் பொறுப்பேற்றது சந்தோஷத்தைக் கொடுக்க சரி என்று தலையசைத்தாள் அவள்.

“சரிடா. நான் இப்ப போயிட்டு நாளைக்கு வாறன்.” கையணைப்பில் இருந்தவளை வாகாகத் திருப்பி, நெற்றியில் அவன் பதித்த முத்தத்தில் மனமெங்கும் நிறைந்துபோயிற்று அவளுக்கு. விடைபெற முயன்றவனைத் தன் அணைப்பிலிருந்து விடவில்லை அவள். அவன் முகம் பளிச்சென்று மலர்ந்துவிட, வெட்கத்தில் அவன் இடுப்பைக் கட்டிக்கொண்டு மார்புக்குள் முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அவன் கரங்களும் அவள் இடுப்பை வேகமாய் வளைத்தன. “என்ன நீ ‘மூடவேண்டியத மூடுங்கோ’ எண்டு என்னட்ட சொல்லிட்டு நீ திறந்துவிட்டிருக்கிறாய்” என்றான் அவன்.

என்ன என்று யோசிக்க முதலே பாவாடைக்கும் சட்டைக்கு இடையிலான இடைவெளிக்குள் அவன் கை புகுந்திருந்தது. “அச்சோ..!” என்று அவள் துள்ளி விலகப்போக, தன் உதடுகளால் அவளின் உதட்டோசையை நிறுத்தியிருந்தான் அவன். திமிறியவளின் அத்தனை அசைவுகளும் அப்படியே அடங்க, அவன் விடுவித்தபோது அவள் செங்கொழுந்தாகிப்போயிருந்தாள்.தொடரும்...


 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்- 4


திருமணம் மிக நிறைவாகவே நடந்தேறியது. எல்லோர் முகத்திலும் மிகுந்த சந்தோசம். தேவகிக்கு மனதில் சுணக்கம் என்றாலும் ஒரே மகனின் திருமணத்தில் அவரும் நெகிழ்ந்திருந்தார். அபியின் முகத்தில்தான் மலர்ச்சியே இல்லை.

பெண்ணுக்குத் தோழியாக அருகில் நின்றவளிடம், “என்னில என்னடி கோபம் உனக்கு?” என்று ஷர்மினி கேட்டபோது, காதிலே விழாதவள் போன்று நின்றுகொண்டாள்.

“நானே இதெல்லாம் நடக்கும் எண்டு எதிர்பாக்கேல்ல அபி.” என்று கலங்கியபோதும் கண்டுகொள்ளவில்லை. “உன்ர அண்ணா வந்து கேட்ட அந்த நிமிஷம் எனக்கும் பிடிச்சுப்போ..” என்றபோது, சட்டென்று அங்கிருந்து விலகிப்போனவளைக் கண்டு விக்கித்துப்போனாள் ஷர்மினி.

அதற்குப்பிறகு பெண்ணுக்குத் தோழி என்கிற கட்டாயத்தின் பெயரில் அவள் அருகில் நின்றபோதும் ஷர்மினி வாயையே திறக்கவில்லை. இன்னொருமுறை அடிவாங்க அவள் இதயத்துக்குத் தெம்பில்லாமல் போயிற்று! அந்த ஒரு குறையைத் தவிர்த்து, ஷர்மினிக்கும் மிகுந்த சந்தோசமே.

சீதனம் என்கிற பேச்சுக்குள் வராதபோதும், கடன்பட்டென்றாலும் குறைவில்லாமல் தங்கைக்கு நகைகளும் செய்து போட்டிருந்தான் சயந்தன்.

“என்ன இதெல்லாம்?” இறுக்கமான குரலில் சீராளன் கேட்டபோது, “என்னால முடிஞ்சதை என்ர தங்கச்சிக்கு நான் செய்திருக்கிறன். இது சீதனமில்ல பாசம்.” என்று புன்னகைத்தான் சயந்தன்.

அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு ஹோட்டலை புக் செய்திருந்தான் சீராளன். அவன் வீட்டில் அபி இருக்கிறாள். ஷர்மினி வீட்டில் வசதி இல்லை. இருந்தாலும் இரண்டு இளம்வயது ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில் தன் அருகில் கூட வரமாட்டாள் அவள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். வீட்டின் எந்த மூலையிலாவது யாராவது இருந்துவிட்டாலே போதும், அவனைக் கண்டாலே எந்தப்பக்கம் ஓடி ஒளியலாம் என்று இருப்பவளைக் கட்டிப்போட இதுதான் வழி என்று முடிவு செய்திருந்தான்.

சயந்தனுக்கும் அதில் உடன்பாடு இருந்ததில் அன்று இரவு ஹோட்டலுக்கு புறப்பட ஆயத்தமாகினர் புதுமணத்தம்பதியர். ஓடி ஓடி எல்லாவற்றையும் பார்த்த அம்மாவின் கண்களில் அவ்வப்போது வந்துபோகும் ஏமாற்றத்தையும், அதனால் விளைந்த கண்ணீரை நாசுக்காக ஒற்றிக்கொள்வதையும் பார்த்திருந்த சீராளன், புறப்படுமுன் அவரைக் கட்டியணைத்துக்கொண்டான்.

இறுக்கமான அந்த அணைப்பே அவனது சந்தோஷத்தையும் மனநிறைவையும் சொன்னாலும், “இந்த நிமிஷம் இவ்வளவு சந்தோசமா நான் இருக்கிறதுக்குக் காரணம் நீங்கம்மா. அதேமாதிரி நீங்களும் எந்த மனக்கவலையும் இல்லாம சந்தோசமா இருக்கோணும். உங்கட ஆசைய விட என்ர விருப்பம் முக்கியம் எண்டு சம்மதிச்சு, இந்தக் கலியாணத்தை நடத்திவச்ச உங்கட கண்ணுல எண்டைக்குமே நான் கலக்கத்தையோ கண்ணீரையோ பாக்கக்கூடாது! சரியா?” என்றான் இதமாக.

தன் மனவேதனையை உணர்ந்து ஆற்றிய மகனின் அன்பில், தாய்மனம் குளிர்ந்துபோயிற்று. கண்களில் கண்ணீர் கரகரவென்று வழியத் தொடங்க, “இப்பதானே அழக்கூடாது எண்டு சொன்னான்.” என்று துடைத்துவிட்டான் அவன்.

“நீ சந்தோசமா இருந்தா சரியப்பு.” மகனின் கன்னம் வருடிச் சொன்னார் தேவகி.

கலங்கிய கண்களோடு அருகில் நின்ற அபியிடம், “அடுத்த கல்யாணம் உனக்குத்தான்! அதால கவலைப்படாத!” என்று என்னவோ அதற்காகத்தான் அழுதாள் போன்று அவன் சொல்ல, “அண்ணா!” என்று சிரித்தபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் அபி.

‘யார் வந்தாலும் அண்ணா எனக்கு அண்ணாதான்!’ தமையனின் தோளில் சாய்ந்தவாறே ஷர்மியை அவள் பார்த்த அதேநேரம், ‘இந்தப் பாசப் பிணைப்பை உன்னால உடைக்க முடியாது’ என்று சொல்வதைப்போல தேவகியும் பார்க்க, குடும்பத்தின் மீதான கணவனின் அன்பில் நெகிழ்ந்துபோய் நின்றிருந்த ஷர்மினிக்கு ஒருமுறை திக் என்றது.

உடைக்க நினைக்கவில்லையே? அந்தக் கூட்டுக்குள் இன்னோர் பறவையாகத்தானே ஆர்வம் கொண்டாள். பரிதவிப்போடு கணவனைப் பார்க்க, சட்டெனக் கண்ணைச் சிமிட்டிவிட்டுக் குறும்புடன் நகைத்தான் அவன். அத்தனை மனப்பாரமும் அந்தநொடியில் காணாமல் போய்விட, அழகாய் வெட்கப்பட்டாள் அவள். கண்ணால் அழைத்தவனிடம் காந்தமாய் நகர்ந்தன அவள் பாதங்கள்.

அவள் அருகில் வந்ததும், “சரி தம்பி. இருட்ட முதல் வெளிக்கிடுங்கோ. ஆனா, இப்போதைக்கு குடும்பம் பெருக வேண்டாம். பிறகு நீ போய்டுவாய். அவள் இங்க பிள்ளையோட கஷ்டப்படவேண்டி வரும். ஸ்பான்சரும் கஷ்டமாப் போய்டும். எதுக்கும் அங்க வந்த பிறகு அதெல்லாம் நடக்கட்டும். கவனமா இருங்கோ.” என்று நாசுக்காகச் சொன்னார் தேவகி.

தலையாட்டிக் கேட்டுக்கொண்டாலும் அதைப் பெரிதாக கருத்தில் எடுக்கவில்லை அவன்.

காரில் ஏறிக் கையாட்டி விடைகொடுக்க, “என்னவோ சுவிஸுக்கே போறமாதிரி சீனப் போடாதடி. போறது பக்கத்து ஹோட்டலுக்கு.” என்று வாரினான் உதயன்.

“இண்டைக்கு ஹோட்டலுக்குப் போனாலும் சுவிஸுக்கும் போகத்தான்டா போறன், பொறாமை பிடிச்சவனே. அதப்பாத்து நீ வயிறு எரியத்தான் போறாய்.” தலையை சிலுப்பிக்கொண்டு சொன்னாள் ஷர்மினி.

“அங்க போனதும் கண்கலங்காம பாக்கிற மாதிரி ஒரு பொம்பிளையை.. அதுவும் வெள்ளைக்காரியா பாத்து எனக்குக் கட்டிவை. பிறகு ஏன் நான் வயிறு எரிய?” என்றான் அவன்.

“உனக்கு? நான்? பொம்பிளை பாத்து.. அதுவும் சுவிஸ் பொம்பிளை கேக்குது உனக்கு? உள்ளூருக்கையே ஒருத்தியும் அம்பிட(அகப்பட) மாட்டாள்.” என்று அவள் விடாமல் சண்டை வளர்த்துக்கொண்டு நிற்க, ‘விட்டா இவள் இன்று முழுவதும் வாயடித்துக்கொண்டு நிப்பா.’ என்று நொந்துபோனான் சீராளன்.

“அவள் பாக்காட்டியும் நான் பாக்கிறன்!” என்றான் அவசரமாக. உதயனின் உதட்டோரம் அவனைக் கண்டுகொண்ட நக்கல் சிரிப்பொன்று ஓடியது.

“ஓகே ஓகே உங்கட அவசரம் விளங்குது. பாக்க பாவமாத்தான் இருக்கு, போய்ட்டுவாங்க.” என்று கிண்டலாய் அவன் சொல்ல, ஷர்மினி சிவந்துவிட்ட முகத்தோடு கணவனை முறைக்க, சீராளனுக்கும் வெட்கமாய் போய்விட்டது.

“ஹலோ பாஸ்! இண்டைக்கு நான் நாளைக்கு நீங்க?” என்றுவிட்டுப் புறப்பட்டான் அவன்.

அறைக்குள் போனதும் முகம் சிவந்துபோனாள் ஷர்மினி. உங்கள் இருவருக்கும் இன்று முதலிரவு என்று பறைசாற்றி வெட்கமூட்டிக்கொண்டிருந்தது அந்த அறை.

“எப்படி இருக்கு ?” தன்னவளை கைகளுக்குள் கொண்டுவந்தபடி கேட்டான் சீராளன்.

“ஊருக்கே தம்பட்டம் அடிச்சிருக்கிறீங்க போல..?” அவன் மார்பில் குத்தி அவள் சிணுங்க, “உன்ர குணம் தெரிஞ்சுதான் நானே செய்தனான். என்னையும் உன்னையும் தவிர ஒருத்தனுக்கும் தெரியாது.” என்றான் அவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு.

“உண்மையாவா?” கணவனின் கைவண்ணத்தை அவன் கைகளுக்குள் இருந்தவண்ணமே ரசித்தபடி கேட்டாள் அவள்.

சிரிக்கும் ஸ்மைகளோடு கூடிய, பெரிதிலிருந்து சின்னது வரையான சிவப்பு இதயத் தலையணைகள் கொண்டு அறையெங்கும் அலங்கரித்து, மனதை மயக்கியிருந்தான் அவன். ஆங்காங்கே தண்ணீர் நிரப்பிய கண்ணாடிக் குவளைகளில் வீற்றிருந்த சிவப்பு மலர்கள் அவளிடம் அவன் பிரியத்தைச் சொல்லிக்கொண்டிருந்தன! கட்டில்.. அதன்புறம் திரும்பிக்கூட பார்க்க முடியாமல் குறுகுறுப்பூட்டிக்கொண்டிருந்தான் அவன்!

“பிடிச்சிருக்கா?” காதுமடலைத் தீண்டிய உதடுகள் ரகசியமாய் கேட்க, “ம்ம்..” என்றவளை மீட்டத் துவங்கின அவன் கரங்கள்.

“அப்ப என்னை?”

“இன்னும் எத்தனை நாளைக்கு இதையே கேப்பீங்க?” அவன் கையில் ஒரு அடியை போட்டுவிட்டுக் கேட்டாள் அவள்.

“எப்பயெல்லாம் கேக்கவேணும் மாதிரி இருக்கோ அப்பயெல்லாம்.”

“எனக்கு பிடிக்கேல்ல! இப்ப என்ன செய்யப் போறீங்க?” விற்புருவங்களை ஏற்றியிறக்கிக் சவால்விட்டாள் ஷர்மினி.

“ஓ..! என்னை பிடிக்கேல்ல உனக்கு? பிடிக்கேல்ல என்ன?” கேட்டுக் கேட்டு அவள் தேகமெங்கும் அவன் கிச்சு கிச்சு மூட்டியதில் துள்ளித் துடிக்கத் துவங்கியிருந்தாள் அவள்.

“ஐயோ விடுங்க விடுங்க! பிடிச்சிருக்கு! கடவுளே.. பிடிச்சிருக்கு! போதும்!”

எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை அவன். “உனக்குத்தான் என்னை பிடிக்கேல்லையே..” என்று கேட்டுக்கேட்டு செய்த சேட்டைகளில் செங்கொழுந்தாக்கிப் போயிருந்தாள் அவள்.

மெல்ல மெல்ல விளையாட்டை மறந்து ஒருவர் மற்றவரில் லயிக்கத் துவங்க, கணவனின் கைகளுக்குள் கரைந்துகொண்டிருந்தவளின் மூளைக்குள் திடீரென்று வந்துநின்று மணியடித்தார் மாமியார்.
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom