You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன்னில் என்னை தொலைத்தேனடி...!- கதை திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
மயக்கத்தில் கிறங்கிக்கிடந்த இமைகள் பட்டென்று விரிந்துகொள்ள, “மாமி கவனமா இருக்க…” என்று ஆரம்பித்தவளின் இதழ்களைச் சிறை செய்து, அவளின் அத்தனை இயக்கங்களையும் நிறுத்தினான் அவன்.

‘இந்தச் சந்தோசம் வேண்டாமா?’ உள்ளம் கேட்டது.

வேண்டும்தான்! ஆனால் மாமி?

“ஒன்றுக்கும் யோசிக்காத. இன்னும் நாலு மாதத்தில நீ அங்க வந்து சேர்ந்திடுவாய். இல்லாட்டியும் நடக்கிறது நடக்கட்டும். கடவுள் தாரத நாங்க தடுக்க வேண்டாம்.” என்றவன் தன் தேடலைத் தொடங்கி இருந்தான்.

ஆலிங்கனம் முடிந்து களைத்துப்போய் அவன் மார்புக்குள் மான்குட்டியாய் சுருண்டு கிடந்தாள் ஷர்மினி. அணைப்பை அவன் இறுக்கவும் கையில் கிள்ளினாள் அவள். அவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.

‘கள்ளன்!’ முகத்தை நிமிர்த்தக்கூட முடியாமல் சேட்டைகள் செய்துகொண்டிருந்தவனின் கையிலேயே ஒன்றுபோட்டாள்.

“கட்டின புருசனுக்கு அடிக்காதடி!”

“உங்கட வேலைக்கு அடிக்கிறேல்ல கடிக்கவேணும்.”

“நான் என்ன செய்தனான்?”

அதையெல்லாம் வாயை திறந்து வேறு சொல்லவேண்டுமாக்கும்! வம்பு வளர்க்கும் கணவனின் மார்புக்குள் இன்னுமே அவள் ஒன்றிக்கொள்ள, “இப்ப நீ சொல்லோணும். இல்லாட்டி, நான் செய்த எல்லாத்தையும் திருப்பிச் செய்வன்.” என்று ஆரம்பிக்க, அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் அவள்.

“ஒண்டும் வேண்டாம். ஓடிப்போய்டுங்க. நானே மாமி பேசப்போறா எண்டு பயத்தில இருக்கிறன்.”

“அவவுக்கு எப்படித் தெரியவரும்? நீ போய்ச் சொல்லப்போறியா?” வேண்டுமென்றே கேட்டான்.

அவள் முறைக்க, “என்னத்துக்கு பயம்?” என்று அவளை மீண்டும் தன்னோடு இழுத்துக்கொண்டான் அவன்.

“நான் போனதும் நீயும் கொழும்புக்குப்போய் டொச் படி. மூண்டு இல்ல நாலு மாசம்தான். அதுக்குள்ள அங்க வந்திடுவாய். இங்க சும்மா இருக்கிற நேரத்தில படிச்சிட்டாய் எண்டால் அங்க படிக்கத் தேவையில்லை. அங்க வந்தபிறகு உன்னோட முழு நேரமும் என்னோடதான். நீ வந்தோன்ன நானும் லீவு எடுத்தா ஒருமாதம் எங்கயாவது ஊரைச் சுத்தலாம்.” அத்தனையும் அவன் திட்டம் போட்டு வைத்திருந்தான்.

“மூண்டு மாதம் ஆகுமா?” அவன் சொன்னவற்றில் அவளுக்கு அதுதான் நின்றது. எப்படி சமாளிக்கப் போகிறாள்? அவனில்லாமல்? சட்டென்று கண்ணீர் மல்கியது!

இத்தனை காலமும் அவளின் உலகத்தில் அவனது அடையாளமே இல்லை. இன்றோ, அவனைத் தாண்டிய எதுவுமே அவளது உலகமாயில்லை. கண்களை கண்ணீர் சூழ கணவனின் தோளில் தஞ்சமானாள். அவன் மனதிலும் பாரமேறிப் போயிற்று!

மூன்று நாட்களுக்கு என்று இருந்த ஹோட்டலிலேயே அந்த ஒரு வாரமும் தங்கிக்கொண்டனர். கையோடு கை கோர்த்தபடி ஊரைச் சுற்றுவதும், பசிக்கும்போது எதையாவது உண்டுகொள்வதும், எங்காவது பார்க்குக்குள் நுழைந்து மர நிழலின் கீழிருக்கும் ‘பெஞ்ச்’சினில் அவன் தோளில் சாய்ந்தபடி பேச்சுக்களின்றி அமர்ந்துகொள்வதும், வரப்போகும் பிரிவை எண்ணி உள்ளுக்குள் பரிதவித்தாலும் வெளியே மற்றவரிடம் காட்டிக்கொள்ளமால் இருப்பதும் என்று ஒருபக்கம் சொர்க்கமாகவும் இன்னோர் பக்கம் சோகமாகவும் கழிந்துகொண்டிருந்தது அவர்களின் நாட்கள்.

உள்ளே ஒரு வேதனை கிடந்து அரித்தாலும் அதையும் தாண்டிக்கொண்டு சந்தோசமாய் வாழ்ந்தனர். அவளின் கலகல பேச்சையும் சிரிப்பையும் அவனும், கண்களாலேயே அன்பைக் கொட்டும் பார்வையையும் அவனது அருகாமையையும் அவளும் உயிருக்குள் நிரப்பிக்கொண்டு வரக்காத்திருந்த பிரிவுக்குத் தயாராகினர்.

வெளிநாட்டுக்கு மீண்டும் போகப்போகிற மகனுக்கு தன் கையால் உணவைக் கொடுக்க முடியாமல் ஹோட்டலிலேயே தங்கிவிட்டார்களே என்று தேவகிக்குப் பெரும் மனக்குறை. இதற்கெல்லாம் அவள்தான் காரணம் என்று தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. ஒரே நாளில் தன்னிடமிருந்து அவனைப் பிரித்துவிட்டதைப்போல் உணர்ந்தார். என்னவோ விருந்தினர் வீட்டுக்கு வருவது போன்று வருவதும் அடுத்த நிமிடமே ஓடுவதும்.. அவனோடு ஒட்டிக்கொள்ளாத குறையாக அவள் இருப்பதும் என்று ஒன்றும் பிடிக்கவில்லை. ஒருவார்த்தை மகனிடம் தனியாக பேசிக்கொள்ள முடியாத துன்பம் வாட்டியதென்றால், இங்கேயே நில்லுங்கள் என்று அழுத்திச் சொல்ல முடியாமல் மகனின் முகத்தில் தெரிந்த சந்தோசம் தடுத்தது.

திருமணம் முடிந்தபிறகு முதன் முதலாக கணவனின் வீட்டுக்குள் காலடி எடுத்துவைத்த ஷர்மினிக்கு, தோழியாக இருந்த நாட்களில் கிடைத்த அந்தச் சந்தோசமான வரவேற்பு கூட, மருமகளாகக் காலடி எடுத்து வைத்தபோது கிடைக்கவில்லை. புதிதாய் மணமானவளுக்கே உரித்தான பூரிப்புடனும், தோழியின் கோபம் ஆறியிருக்குமா என்கிற எதிர்பார்ப்புடனும் வந்தவளின் மனமும் முகமும், அப்படியே வாடிக் கசங்கிப் போயிற்று!

அன்று மதிய விருந்து முடிந்ததும் வாங்கி வந்திருந்த ஆப்பிள்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிய சீராளன், அருகில் நின்ற அபிக்கு கொடுத்துவிட்டு இன்னும் இரு துண்டுகளை எடுத்து, “உன்ர அண்ணிக்கு குடு.” என்று கொடுத்தான்.

தமையனோடு ஃபோனில் பேசிவிட்டு அப்போதுதான் உள்ளே வந்தவள் அபியை பார்க்க, அவ்வளவு நேரமும் தமையனோடு சிரித்துக் கதைத்துக்கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்வுகள் காணாமல் போயின. ஷர்மியின் கண்களை சந்திக்காமல் கொண்டுவந்து நீட்டினாள்.

அதை வாங்கியதோடு, அவள் கரத்தையும் பற்றி, “என்னை அண்ணி எண்டெல்லாம் கூப்பிடாதடி. நான் எப்பவும் உன்ர பிரெண்ட்தான்.” என்றாள் சிரித்துக்கொண்டு.

“என்ர அண்ணான்ட மனுசி எனக்கு ‘அண்ணி’தான்.” முகத்தில் அடித்தது போன்று சொல்லிவிட்டு, வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டு போகவும் சட்டென்று கண்களில் நீர் கோர்த்தது அவளுக்கு.

தோழி அண்ணியாக வந்ததை ஏற்க முடியவில்லையா? என்ன காரணம்? அவளின் ஏழ்மையோ? சுருக்கென்று தைத்தது.

கணவனைப் பார்க்க, அவன் பார்வையும் அவளிடம் தான் இருந்தது.
வேகமாகத் தன் வேதனையை மறைத்துக்கொண்டு, “என்ன பாக்கிறீங்க? ஆப்பிளை வெட்டுங்கோ. எனக்கு இன்னும் வேணும்.” என்று நடந்தது ஒன்றுமே இல்லை என்று காட்ட முனைந்தாள்.

மனைவியின் கண்களுக்குள் ஆராய்ந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் பழத்தை வெட்டிக்கொடுத்தான் சீராளன்.

திருமணத்தன்று நெகிழ்ந்திருந்தாலும் அவ்வப்போது தேவகியும்.. அவள் விளங்கிக்கொண்ட அளவில் அவனோடு அவளைப் பார்க்கும் நேரமெல்லாம் அவனிடம் ஒரு ஒதுக்கத்தை காட்டிக்கொண்டுதான் இருந்தார். அப்படியேதான் அபியும். தாய் தங்கையின் கோபதாபங்களை ஒதுக்கிவிட்டு அவர்களோடு இணக்கமாகப் போய்விட முயன்றுகொண்டிருந்தான் சீராளன்.

“விடு தம்பி! கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாகும்.” என்று அவனது அப்பாவும் சொல்லிப்பார்த்தார்.

அப்படி விடமுடியவில்லை அவனால். சுவிஸில் இருந்த நாட்களில் கூட, தொலைபேசியில் கதைப்பது, எடுக்கும் முடிவுகளை அலசி ஆராய்வது, வீட்டுக் கணக்கு வழக்குகளைப் பற்றிப் பேசுவது அம்மாவிடம்தான். தங்கையின் எதிர்காலம் குறித்து, அப்பாவின் உடல்நலம் குறித்து, நாட்டு நடப்புகள் பற்றி, அவனது நண்பர்கள் பற்றி என்று அவன் விசாரிப்பதும் அவரிடம் தான். அப்பாவோடு கதைப்பான்தான். அவையெல்லாம் “எப்படி இருக்கிறீங்கப்பா?”, “சாப்பிட்டீங்களா?” போன்ற சம்பிரதாயக் கேள்விகளோடு முடிந்துவிடும். மற்றும்படி அவருக்கும் அவனுக்குமான பாலமும் அம்மாதான். அப்படி அனைத்திலும் சகலதுமாக கலந்திருந்த அம்மா, இன்று தள்ளி நிற்கவும் தானாகச் சரியாகும் என்று விடமுடியவில்லை. கேலி கிண்டல் என்று சிரித்து விளையாடிய தங்கையையும் அப்படியே விடமுடியவில்லை.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“உனக்கும் வயது வந்திட்டுது.கலியாணத்துக்கு பொம்பிளை பாக்கிறன் தம்பி.” என்றவர் என்னமாதிரியான பெண் வேண்டும் என்று கேட்டபோது, “உங்களுக்கும் அபிக்கும் பிடிச்சமாதிரி இருந்தா சரியம்மா.” என்று சொல்லிவிட்டு, அவரும் சந்தோசமாக தனக்குப் பிடித்த ஒருத்தியை பார்த்து வைத்திருக்க, அவள் வேண்டாம் இவள்தான் வேண்டும் என்று நின்று கட்டியது பெரும் பிழைதானே. அந்தக் குற்ற உணர்வும் மனதிலிருக்க, போவதற்குள் எப்படியாவது அவர்களை சமாதானம் செய்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தான் சீராளன். அவரோ மாட்டேன் என்று நின்றார்.

அதுவே அவனுக்கு மிகுந்த வேதனையை கொடுக்கிறது என்பதை ஷர்மினியும் அறிவாள். அப்படியிருக்கத் தன் கவலையையும் அவனிடம் காட்டவேண்டாம் என்று மறைத்துக்கொண்டாலும், அந்த நிகழ்வுக்குப் பிறகு அவனும் உணர்ந்திருக்க வேண்டும், அதனால் தான் மிகுதி நாட்களையும் ஹோட்டலில் கழிக்க முடிவு செய்திருக்கிறான் என்பது ஷர்மினியின் ஊகம்.

மனைவியிடம் தாயையும் விட்டுக்கொடுக்காமல் தாயிடம் மனைவியையும் விட்டுக்கொடுக்காமல் இந்தச் சிக்கலுக்குத் தீர்வை, அவளுக்கே சொல்லாமல் செய்திருக்கிறான் என்பதில் கணவன் மீதான நேசம் இன்னுமே பெருகிப்போயிற்று!

அந்த அன்புக் கணவனை அவன் தாயோடு பழையமாதிரி இணைக்க முடியவில்லையே என்கிற வேதனை அவளை அரித்துக்கொண்டே இருந்தது.

அடுத்தநாள் ஷர்மினியின் வீட்டுக்கு வந்திருந்தனர். சீராளன் தமையனோடு தன் பயணத்தைக் பற்றி கதைத்துக்கொண்டிருக்க, மெல்லத் தன் தோட்டத்துக்குள் வந்திருந்தாள் ஷர்மினி. அபியை சமாதானம் செய்தால் அவள் மூலம் மாமியை பிடிக்கலாம் என்றால் இந்த அபி ஏன் இப்படி ஒதுக்குகிறாள் என்கிற சிந்தனையோடு இருந்தவளிடம், “அடடே! என்ன இது ஆச்சரியம்? உன்ர புருஷன் உன்ன தனியா விட்டுட்டார்.” என்றபடி வந்தான் உதயன்.

அந்தக் கேலிக்கான எதிரொலி அவளிடம் இல்லை. அவனைக் கண்டதும் கண்கள் கலங்கியது.

“ஏய் என்ன? என்னத்துக்கு அழுகிறாய்?” வேகமாகக் கேட்டான்.

மனப்புழுக்கத்தை கொட்டக் காத்திருந்தவள் அப்படியே கொட்டினாள்.

“எவ்வளவோ ட்ரை பண்ணிப் பாத்திட்டன் உதயன். அபி கதைக்கிறாளே இல்லையடா. இனி என்ன செய்றது எண்டே தெரிஸ்யேல்ல. மாமியும் பாக்கிற பார்வையாலேயே என்னை யாரோவா தூர நிக்க வைக்கிறா. அந்த வீட்டுல மாமா ஒராள் தான் மருமகள் எண்டு சந்தோசமா, பாசமா என்னோட கதைக்கிறது. என்ர மனுசன் அருமையான மனுஷனடா. அந்தாளோட முழு சந்தோசமா கதைச்சு சிரிக்க முடியேல்ல. என்னவோ பிழை செய்ற மாதிரியே உறுத்துது. என்னாலதான் மாமி அவரோட பாசமா கதைக்கிறேல்ல எண்டு நினைக்க நினைக்க சரியான கவலையா இருக்கு.” சொல்லும்போதே கண்களில் இருந்து கண்ணீர் ஓடியது.

அங்கே சீராளன் வருவது தெரியவும் சட்டென்று கண்களை துடைத்துக்கொண்டாள். “இவரிட்ட ஒண்டும் சொல்லிப்போடாத. ஏற்கனவே மாமியால சரியான கவலை அவருக்கு. என்னட்ட சொன்னா, என்னாலதான் இதெல்லாம் எண்டு நான் கவலைப்படுவன் எண்டு சொல்றதும் இல்ல. தனக்குள்ளேயே வச்சு கவலைப்படுறார். எப்படியாவது நானாவது அபியை சமாதானப்படுத்தி அவள் மூலம் மாமின்ர கோபத்தை ஆத்துவம் எண்டா எங்கயடா? அசையிறாளே இல்ல. இன்னும் மூண்டு நாள்ல மனுசன் போகப்போகுது. மாமி சமாதானம் ஆகுறா இல்லையே எண்டு அதுவேற அவருக்கு கவலை. இதுல நாங்க இதையும் சொல்லி என்னத்துக்கு அந்தாளை கஷ்டப்படுத்துவான்? பாவமடா.. மனதில கவலையோடவே ஃபிளைட் ஏறப்போறார்.” எனும்போதே மீண்டும் அழுகை வந்தது அவளுக்கு.

அதற்குள் சீராளன் நெருங்கிவிடவும், “எல்லாம் சரியாகும், நீ கெதியா கண்ண துடை.” என்றான் உதட்டசைவில் உதயன்.

அதைக் கவனித்த சீராளன், தன்னைப் பார்த்துப் புன்னகைத்த மனைவியின் நனைந்து கண்ணீரில் ஒட்டியிருந்த இமைகளையும் கண்டான். “அழுதியா?” என்று கேட்க, “நான் ஏன் அழ?” என்றவள் கணவனின் பார்வை கூர்மையாகவும் சட்டெனச் சிரித்தாள்.

“இந்த மாடு ஓவர் நக்கலப்பா. சிரிச்சுச் சிரிச்சு எனக்கு கண்ணுல தண்ணியே வந்திட்டுது.”

சீராளன் நம்பாமல் உதயனைப் பார்த்தான். அவனோ இவனை பாசத்தோடு இறுக்கி அணைத்துக்கொண்டான்.

“என்ன உதயன்?” ஆச்சரியத்தோடு கேட்டான் சீராளன்.

“நாங்க தேடி இருந்தாக்கூடி இவளை இவ்வளவு பாசமா பாக்கிற மாப்பிள்ளை கிடைச்சிருக்க மாட்டார். அடம்பிடிச்சுக் கட்டினத்துக்கு தேங்க்ஸ். எப்பவும் அவளை சந்தோசமா வச்சிருக்கவேணும். நீங்களும் சந்தோசமா இருக்கவேணும்.” என்றான் பாசத்தோடு.

“அவள்தான் என்ர சந்தோசம். அவளை கஷ்டப்படுத்தி பாக்க என்னால ஏலாது!” புன்சிரிப்புடன் சொன்னான் சீராளன்.

“சரிசரி வாங்க நாங்க போவம். இவன் விட்டா அலட்டிக்கொண்டே நிப்பான்.” என்றவள், “சரியடா வாரம்.” என்றுவிட்டு, சீராளனின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நடக்கவும், அதிகப்படியான அவளின் உற்சாகம், விடை பெறுகையில் கண்களால் உதயனுக்கு கொடுத்த சமிக்சை எல்லாவற்றையும் கவனித்த சீராளனின் புருவங்கள் சுருங்கின.

அவன் புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது. அடுத்தநாள் அதிகாலையில் ஃபிளைட் என்பதால் அன்று காலையிலேயே அவன் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தனர்.

சீராளன் பயணத்துக்கு தயாரானபோது, பெட்டி அடுக்கவோ தேவையானவற்றை எடுத்துக்கொடுக்கவோ செய்யாமல் கட்டிலில் கிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் ஷர்மினி. இத்தனை நாட்களாய் அணிந்திருந்த முகமூடியை இன்றும் அணிய முடியவில்லை. இன்றோடு அவனது அருகாமை அவளுக்கில்லை. அவன் கரத்தோடு கரம் கோர்க்க முடியாது. சிரிக்கும் கண்களை ரசிக்க முடியாது. அவன் ஊட்டிவிடும் உணவினை வாங்கமுடியாது. என்னவோ இந்த உலகத்துக்கே ராணி போன்று தாங்கிய அந்த நேசத்தை அனுபவிக்க முடியாது. நினைக்க நினைக்க அழுகை பெருகியது.

பெட்டியை மூடிவிட்டு நிமிர்ந்து அழுகையில் குலுங்கும் மனைவியை பார்த்தான் சீராளன். அவனுக்கும் மனதில் பாரம்தான். ஆனால், தவிர்க்க முடியாத பிரிவாயிற்றே! வந்து அவளருகில் அமர்ந்தான்.

“ஷர்மி!” மெல்ல முதுகை வருடிக் கொடுத்தான்.

கணவனின் தொடுகை அவள் அழுகையை அதிகரித்தது.

“என்னம்மா இது? ஒரு மூண்டு மாதம் தானே.”

“நான் இல்லாம நீ வாழப்போற கடைசி மூண்டு மாதம். பிறகு நீ ஆசைப்பட்டாலும், நான் சாகிற வரைக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் உனக்குக் கிடைக்காது. தரமாட்டன். அதால என்னை சந்தோசமா அனுப்பி வைக்கிறத விட்டுட்டு இதென்ன..” என்று அவன் கேலி பேசவும், ‘சாகிற வரைக்கும்’ என்ற சொல் அவளைப் பலமாகத் தாக்கிவிட, விருட்டென்று எழுந்து, சராமாரியாக அடிக்கத் துவங்கினாள்.

“எந்த நேரத்தில என்ன கதைக்கிறது எண்டு தெரியாதா உங்களுக்கு? ஃபிளைட்ல போகப்போறீங்க இப்ப போய்..” என்றவளை சிரித்துக்கொண்டே அணைத்துக்கொண்டான் அவன்.

இந்தப் பாசம்தானே சற்றுநேரத்தில் அவளை விட்டுவிட்டுத் தூரப் போகப்போகிறது. மீண்டும் கண்ணீர் உகுத்தவளின் முதுகை ஆறுதலாய் வருடிக்கொடுத்தான். காதோரமாய் ஆறுதல் வார்த்தைகள் அவன் பேசப் பேச மெல்ல மெல்லக் குறைந்தது அவள் அழுகை.

நேரமாவது உணர்ந்து அவள் எழுந்துகொள்ள, “என்னடியப்பா இது?” என்றான் அவன் திடீரென்று.

அவளின் கண்ணீரிலும் கண் மையிலும் அவன் சட்டை நனைத்திருந்தது.

அவளும் அப்போதுதான் அதைக் கவனித்தாள். சிரிப்புவர, அப்படியே அவன் டீ- ஷர்ட்டை இழுத்து மூக்கையும் நன்றாகத் துடைத்துக்கொள்ள, “சீச்சீ! குப்பச்சி!” என்றபடி சட்டையை மிக வேகமாகக் கழட்டியிருந்தான் அவன்.

அவன் கழட்டிய வேகம் கண்டு கலவென்று சிரித்தாள் ஷர்மி.

கண்களை நனைத்திருந்த கண்ணீரோடு, பிரிவுத் துயரை மறந்து சிரித்த மனைவியிடம், “இந்தச் சிரிப்போடையே என்னை அனுப்பிவை.” என்றுவிட்டு வேறு ஒரு டி- ஷர்ட்டினை அணிந்துகொண்டான் அவன்.

பெட்டியை எடுத்துக்கொண்டவனின் முன்னே தயக்கத்தோடு வந்து நின்றாள் ஷர்மினி.

“நான் அம்மா வீட்டை போய் இருக்கவா?”

“ஏன் இங்க பிடிக்கேல்லையா?”

தவிர்க்க முடியாமல் கணவனின் கேள்வியில் தொனித்த கவலையில், “ஐயோ இல்ல.” என்றாள் வேகமாக.

“வார கிழமையே நானும் கொழும்பு போயிடுவன் தானே. அம்மா தனிச்சே போவா. இந்தக் கொஞ்ச நாளாவது அவவுக்கு உதவியா இருக்கிறேனே. அவவுக்கும் சந்தோசமா இருக்கும் எனக்கும் நிம்மதியா இருக்கும்.”

அவள் சொல்வதும் சரிதான். நடக்கக்கூட முடியாமல் அவர் படும் கஷ்டங்களை பார்த்திருக்கிறான். எனவே சம்மதித்தான்.

“ஆனா, இதுதான் உன்ர வீடு. அத மறந்திடாத. என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சு, இந்த வீட்டு மருமகளா நீ நடக்கவேணும். அபி உன்ர பிரெண்ட்தான். என்றாலும் அவளுக்கு நீ அண்ணி!” என்றான்.

பொறுப்பாய் இரு என்கிறான் கணவன். சரி என்று கேட்டுக்கொண்டாள்.

வீட்டிலிருந்து புறப்படுமுன் தாயிடமும், “அடுத்த கிழமை கொழும்புக்கு அவளும் போய்டுவாள் தானேம்மா. அதுவரைக்கும் அவளின்ர அம்மா வீட்டை இருக்கட்டும்.” என்று அவன் சொன்னதும் அவருக்கு ஒருமாதிரி ஆகிப்போனது.

திருமணமானதில் இருந்து வீட்டில் நிற்கவே இல்லை. மகனையும் விடவில்லை. இப்போதும் தாய் வீட்டுக்குப்போனால் ஊர் என்ன சொல்லும்?

“போகட்டும் தம்பி. ஆனா என்னட்ட அவளே கேட்டிருக்கலாமே? அவள் கேட்டு நான் மாட்டன் எண்டு சொல்லப்போறேன் எண்டா உன்னட்டச் சொல்லிக் கேக்கிறாள்?” என்று கேட்டார் தேவகி.

இப்படி ஒரு கோணத்தில் அவள் சிந்திக்கவே இல்லையே. அதிர்ந்துபோய் பார்த்தாள் ஷர்மினி.

“அவள் கேக்கேல்லை அம்மா. நானாத்தான் சொல்லுறன். மாமியும் பாவம் தானே. இவள் அங்க இருந்தா அவவுக்கு உதவி எல்லா.” என்றான் அவன்.

மகன் அவளைக் காப்பாற்றுவது போல் சொல்லவும் இன்னும் சினமேறியது அவருக்கு.

“சரியப்பு. ஆனா, காலம் முழுக்க பொம்பிளை பிள்ளை அம்மாவோட இருக்க முடியாதே. உள்ளூருக்க கட்டினாலும் மனுசன் வீட்டுல இருந்தாத்தான் வாழமுடியும். அப்பப்ப போய்ப்பாக்கிறது வேற கதை. எனக்கு உடம்புக்கு ஏலாமப்போனா அபியை கட்டிக்கொடுத்தபிறகும் இங்கயே வச்சிருக்க முடியுமா சொல்லு?” கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டுச் சம்மதித்தார் அவர்.

ஒருமாதிரி ஆகிவிட்டது அவளுக்கு. அவர் சொன்னது சரிதான். அவளே கேட்டிருக்கலாம் தான். இங்கேயே இருந்துகொண்டு அவ்வப்போது போய்ப் பார்த்துக்கொள்ளலாம்தான். ஆனால், இந்த ஒரு வாரமாகப் பார்க்கிறாள் தானே. மருமகள் என்கிற உறவோடு அவள் வந்திருக்கிறாள் என்கிற முறையில் அவரின் கதை பேச்சுக்கள் இருக்குமே தவிர, புதிதாகக் குடும்பத்துக்குள் இணைந்தவளை அந்தவீட்டுப்பெண்ணாக உணரவைக்கும் அரவணைப்பு இருக்காது. அவளும் இனி அந்த வீட்டில் ஒருத்தி. அந்தளவுதான். அதைத் தாண்டிய ஒரு பாசம், அரவணைப்பு, தட்டிக்கொடுத்து, அவளை அந்த வீட்டோடு உணர்வு பூர்வமாய் இணைக்கும் பாங்கு அவரிடம் இல்லவே இல்லை. அவள் நெருங்கினாலும் இப்படித்தான் என்று சொல்லத் தெரியாத வகையில் தூர நிறுத்திவிடுவார். கோபத்தையும் வெறுப்பையும் காட்டவில்லை, அவ்வளவுதான். அது கொடுத்த தயக்கத்தில் ஒருவிதப் பயத்தில் தான் கணவன் மூலம் கேட்பித்தாள். அது இப்படித் திரும்பும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் கணவனைப் பார்த்தாள் ஷர்மினி. அவளின் காரத்தைப்பற்றிய அவனது கரம் ஆறுதலாய் அழுத்திக் கொடுத்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-5சீராளன் சுவிஸ் சென்று ஒருவாரமாகியிருந்தது. அவனது பிரிவு தாங்காமல் அழுது கரைந்துகொண்டிருந்தாள் ஷர்மினி. அவளை மாற்ற எண்ணி கொழும்புக்குப் போகச் சொன்னான். அங்கு ஒரு அறை வாடகைக்கு எடுத்து தங்கிப்படிக்க என்று ஆயத்தமாக சயந்தனுக்கு அதில் பெரிதாக விருப்பமில்லை. தெரியாத ஊரில் புரியாத மொழியோடு எப்படிச் சமாளிப்பாள்? அதுவும் தனியாக? பாதுகாப்பு இல்லையே. கூடவே ஒரு வயதான அம்மாவையும் வேலைக்கு அமர்த்துவோம் என்று சீராளன் சொல்லியும் தயங்கினான்.

தனியாகத் தலைநகரில் எப்படி அவளை விடுவது என்று யோசிக்க, “எங்கட பிரான்ச் அங்க இருக்குத் தானேடா. நான் டிரான்ஸ்ஃபர் வாங்குறன்.” என்று உதயன் சொன்னபிறகே சம்மதித்தான்.

திட்டமிட்டது போலவே அத்தனையும் நடக்க, புது இடம், புதுக் கல்வி, புது மனிதர்கள், டொச்சோடு சேர்த்து செவிவழி கற்கத் துவங்கிய சிங்களம் என்று அவளுக்கும் ஒரு மாற்றம்தான். அழுகை நின்றிருந்தது.

ஆறுதலுக்கு உதயனும் இருந்தான். நேரமிருக்கையில் சீராளனின் அனுமதியோடு அவனோடு கொழும்பைச் சுற்றிப் பார்த்தாள். அமைதியாய் நாட்கள் நகர்ந்தாலும் கணவனோடு கதைக்கும் அந்த நேரங்களைத் தவிர்த்த பொழுதுகள் எல்லாம் ஒருவித சஞ்சலத்தோடே நகர்ந்தன. முழுமையாய் எந்த உணர்வையும் அனுபவிக்க முடியாமல் அல்லாடினாள். நல்ல கணவன், நல்ல குடும்பம், நல்ல வாழ்க்கை. ஆனாலும் ஒரு அலைப்புறுதல். கவலை கிடந்து அரித்தது. அதற்கு முழுமையான காரணம் மாமியாரும் தோழியும். அவர்களை ஒதுக்கிவிட்டு எனக்கு என் கணவன் மட்டும் காணும் என்று சுயநலமாய் வாழவும் தெரியவில்லை.

இதையெல்லாம் தாண்டிக்கொண்டு குழந்தை எதுவும் வந்துவிடுமோ என்றுதான் மிகவுமே பயந்தாள். அதுவும் மாமியார், அவரை நினைக்கவே நடுங்கினாள். அபியின் அம்மாவாக மட்டுமே இருந்த காலத்தில் அன்பாகப் பழகிய பெண்மணி, இன்று அவரா இவர் என்று பலமுறை நினைக்கவைத்தார். அந்தளவு இறுக்கம். இதுதான் என்றால் இதுதான். செய்யக்கூடாது என்றால் செய்யக் கூடாதுதான். மீறி நடந்துவிட்டால் அவர் வீசும் ஒற்றைப் பார்வையிலேயே பொசுங்கிப்போவாள். அவரின் உடல் மொழியே அவளைத் தின்றுவிடும். அப்படியானவர் பிள்ளை வேண்டாம் என்று அவ்வளவு சொல்லியும் ஏதாவது நடந்துவிட்டால்? சும்மாவே அவருக்கு அவளைப் பிடித்தமில்லை. இதில் அவர் சொன்ன ஒன்றை மீறிவிட்டால் இன்னும் வெறுத்துவிடுவாரோ?

திருமணம், கணவனோடான ஒருமித்த வாழ்க்கை, அடுத்த கட்டமாகக் கண் நிறைந்த கணவனைப்போலவே குழந்தையைத் தானே மனம் விரும்பும். விரும்பினாலும் வேண்டாம் என்று மறுக்கும் நிலையில் இருக்கிறாளே.

தொலைவில் இருக்கும் கணவனிடம் இதையெல்லாம் சொல்லி ஆறவும் மனமில்லை. தனியாய் இருந்து கஷ்டப்படுகிறவனை அவளும் வருத்துவதா? முதலில் இதை ஒரு விசயமாகச் சொல்லத் தெரியவில்லை. மேற்பார்வைக்கு எல்லாமே இயல்பாய் இருப்பது போல்தான் தோன்றிற்று. உள்ளேதான் ஒருவரோடு மற்றவருக்கு உள்ளார்ந்த பற்றுதலைக் காணோம்.

நாட்கள் நகர, ஒருநாள் இவள் பயந்தது போல குழந்தைதான் என்று உறுதியானது. உடலின் ஒவ்வொரு அணுவும் சந்தோசத்தோடு உணர்ந்த அந்த செய்தி, மாமியாரை நினைத்ததும் மனதுக்குள் பெரும் கிலியாய் இறங்கியபோது மிகுந்த வேதனையுற்றாள்.

எப்படி இதை அவரிடம் சொல்வாள்? என்ன சொல்வாரோ? உதயனுக்கோ மிகுந்த சந்தோசம். “இனி நான் மாமாடி!” என்று சொல்லிக்குதித்தான். சயந்தனுக்கு அழைக்கப் போனவனைத் தடுத்துவிட்டு கணவனுக்கு அழைத்துச் சொன்னாள்.

“ஷர்மி..!” அளவற்ற சந்தோசம் கொடுத்த நெகிழ்ச்சியில் அவன் குரல் கரகாரத்துப் போயிற்று! “தேங்க்ஸ்டா செல்லம்மா!” ஃபோன் வழியே ஓராயிரம் முத்தங்களைப் பரிசளித்தான். அருகினில் இருந்தபோது அவன் தந்த ஒரு முத்தத்துக்கு கூட அது ஈடாக மறுத்தது.

“என்னை அப்பாவா ஆக்கியிருக்கிறாய் ஷர்மி. இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கு ஒரு மகனோ மகளோ பிறக்கும். இரவுல நம்மை நித்திரை கொள்ள விடாம ஒரே கீச்சு கீச்சுத்தான் இல்லையா. தன்ர காலால நெஞ்சில உதைக்கும். சத்தமே இல்லாம இருக்கிற இந்த வீட்டுல ஒரே சத்தமா இருக்கும் என்ன..” ஆள் மனதிலிருந்து தன் கற்பனைகளை சந்தோசத்தை அவன் பகிர்ந்துகொண்ட போது, இதையெல்லாம் அருகிருந்து அவன் முகத்தைப் பார்த்தபடி கேட்கும் கொடுப்பினை இல்லாமல் போயிற்றே என்று கலங்கினாள் அவன் மனைவி.

‘ப்ச்! இப்ப அவருக்குப் பக்கத்தில இருந்திருந்தா எவ்வளவு சந்தோசமா இருந்திருக்கும்.’ கண்ணோரம் திரண்ட நீர்த்துளியை சுண்டிவிட்டுக்கொண்டாள்.

“இப்ப பாத்து பக்கத்தில நான் இல்லாம போயிட்டேன்.” என்றான் அவனும்.

அழாமல் சமாளித்துக்கொண்டாள்.

“அம்மா அப்பாக்கு சொல்லீட்டியா?”

“உங்களுக்குத்தான் முதல் சொல்லோணும் எண்டு இன்னும் ஒருத்தருக்கும் சொல்லேல்ல. ஆனாப்பா.. நீங்களே சொல்லுங்கோவன்.” தயக்கத்தோடு கேட்டாள்.

“நீயே சொல்லு. போனமுறை உன்ர அம்மாவீட்டை நிக்குறதுக்கு நான் கேட்டது அம்மாவுக்கு மனம் சரியில்ல. இதையும் நான் சொன்னா உன்னில இன்னும் கோபப்படுவா. இப்ப நீயே சொல்லு, சந்தோசப்படுவா.”

கணவன் தன்னையும் தாயையும் சுமூகமாக்க நினைக்கிறான் என்று விளங்காமல் இல்லை. ஆனால்..

“மாமி இப்ப பிள்ளை வேண்டாம் எண்டு சொல்லியும் இப்படி எண்டா.. பேசப்போறா.” பயத்தோடு சொன்னாள்.

“அதெல்லாம் ஒண்டும் சொல்லமாட்டா. இது அவவின்ர பேரக்குழந்தை. யாராவது கோவிப்பீனமா? நீ சந்தோசமாச் சொல்லு. பிறகு நானும் எடுத்துக் கதைக்கிறன்.” என்று சொல்லிவிட்டு அவன் வைத்துவிட்டான்.

மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. கைகால்களில் எல்லாம் நடுக்கம். ‘நான் தாயாகி இருக்கிறேன்’ என்று துள்ளலோடு சொல்லவேண்டிய ஒரு விஷயத்தை இப்படிப் பயந்து பயந்து சொல்லவேண்டி இருக்கிறதே. உலகில் இருக்கும் அத்தனை தெய்வத்தையும் துணைக்கழைத்துக்கொண்டு அவருக்கு அழைத்தாள்.

விஷயத்தைச் சொன்னபோது, “உண்மையாவா? என்ர குடும்பம் தழைக்கப்போகுது. நல்லூர் கந்தா உனக்குப் பொங்கல் வைக்கிறன். இனி நீ கொழும்பில நிக்க வேண்டாம், இங்க வா.” என்று சொல்லிக்கொண்டு போனவரின் பேச்சு, சட்டென்று அப்படியே நின்றது.

இவளின் இதயத் துடிப்பு வேகமாக, நெற்றியில் வியர்வைப் பூக்கள் அரும்பிற்று!

“நான் எல்லோ சொன்னான், இப்ப இது வேண்டாம் எண்டு. சொல்லுற எதையும் கேக்கமாட்டியா நீ? இனி என்ன நீயும் பிள்ளையும் இங்கயும், அவன் அங்கயும் எண்டு வாழப் போறீங்களே..?”

“இல்ல மாமி அது இவர்தான்..”

“அவன் சொன்னா உனக்கு எங்க போனது அறிவு? கொஞ்சமும் யோசிக்க மாட்டியா? இப்படி ஆளாளுக்கு பிரிஞ்சு இருக்கவே கல்யாணம் காட்டினீங்கள். தப்பித்தவறி ஸ்பான்சர் சரிவராட்டி பிறக்கிற பிள்ளையின்ர கதி என்ன? அப்பா முகம் பாக்காம பிறந்து வளரவேணும் எண்டு என்ர பேரக்குழந்தைக்கு தலையெழுத்தா என்ன? அவன் அங்க தனிச்சு வாழுறதுக்கா உன்ன பிடிக்காட்டியும் அவனுக்குக் கட்டி வச்சது? முதல் என்ர சொல்லுக்கு என்ன மதிப்பு? அவன் தான் காரணம் எண்டு அவன்ர பேர்ல பழியை போடப்பாக்கிற? அப்ப உனக்கு ஒண்டும் தெரியாது. அந்தளவுக்கு நீ பாப்பா. இதுக்குத்தான் அவனுக்கு சொன்னனான் நல்ல இடத்துல கட்டுடா எண்டு. கண்டறியாத காதலும் நீங்களும். என்னவாவது செய்து துலையுங்கோ! இனி நடக்கிற எதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல.” என்று வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டு பட்டென்று தொலைபேசியை அணைத்துவிட, அப்படியே உறைந்துபோனாள் ஷர்மினி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
கொஞ்ச நேரத்துக்கு பிறகே அவளது மூச்சு வெளியேற அது பெரும் கேவலாக வெடித்துக்கொண்டு வந்தது.

‘இல்ல மாமி. அது இவர்தான் இன்னும் மூன்று மாதத்தில் அங்கு வந்துடலாம் எண்டு சொன்னவர்’ என்று அவள் சொல்ல வந்தது என்ன, அவர் விளங்கிக்கொண்ட விதம் என்ன? அழுகையும் அவமானமும் அவளை நசுக்கின.

தாய்மை அடைந்த நேரத்தில் அவரின் கடுமையான வார்த்தைகள் அவளை ஆழமாகக் காயப்படுத்திற்று. தமையனின் துள்ளலான சந்தோசஷமோ, தாய் குளறலாகக் கொட்டிய பாசமோ, உதயனின் அழகான கேலியோ எதுவுமே அவளை ஆற்றவில்லை.

சீராளன் எவ்வளவோ சமாதானம் சொன்னபோதும், “அவா கோபத்தில எதையாவது சொல்லுவா, அதையெல்லாம் பெருசா நீ எடுக்காத என்ன.” என்று ஆறுதலாய் பேசியும், “ம்ம்” என்று கேட்டுக்கொண்டாளே தவிர, மாமியார் கொட்டிய வார்த்தைகளை அப்புறப்படுத்த முடியாமல், அவளுக்குள்ளேயே தங்கிப்போனது.

“வீட்டை போய் இருக்கப்போறியா?” சீராளன் அக்கறையோடு கேட்டபோது, “இல்லையில்லை. இங்கயே இருக்கிறன்.” என்று விழுந்தடித்துக்கொண்டு சொன்னாள்.

பெரும் தொகை பணத்தைக் கட்டிச் சேர்ந்த கோர்ஸ் இடையில் விட மனமில்லை என்பது மறுப்புக்கு ஒரு காரணமென்றால், யாழ்ப்பாணம் போனால் மாமி வீட்டில் தங்கவேண்டும் என்பது பெரும் காரணமாயிருந்தது. அந்தளவில் தேவகியின் கோபத்தை எண்ணி அஞ்சினாள் ஷர்மினி.

“அபியை என்னோட வந்து இருக்கச் சொல்றீங்களாப்பா?” அருகில் வந்துவிட்டால் எத்தனை நாட்களுக்கு கதைக்காமல் இருப்பாளாம்?

“நீ அங்க இருக்கிறதே எனக்கு இப்ப அவ்வளவா விருப்பமில்லை. அதுல அவளும் வந்தா, உதயனால ரெண்டுபேரையும் பாக்க ஏலாது. அதோட உதயன் உன்னைப்பாக்க வந்துபோவான். அங்க என்னெண்டு அவளையும் விடுறது. ரெண்டுபேரும் இளம் ஆக்கள் எல்லோ. பொறு எதுக்கும் அம்மாவோட கதைச்சிட்டு சொல்லுறன்.” என்றவன், சற்று நேரத்தில் மீண்டும் அழைத்து அதையேதான் சொன்னான்.

“அவள் இங்க வாராத விட உன்ன அங்க வரட்டாம். நாளைக்கு கலியாணம் எண்டு வரேக்க அபியைப் பற்றி ஒரு கதை வரக்கூடாது எண்டு அம்மா சொல்லுறா. எனக்கும் அதுதான் சரியெண்டு படுது.” என்றான் அவன்.

“ஏனப்பா உதயனுக்கு என்ன குறை?”

“அவனுக்கு குறை எண்டு யார் சொன்னது? அபிக்கு பிடிச்சாத்தான் எதுவும். அதைவிட அம்மா இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டா. எங்கட விஷயமே இன்னும் ஒழுங்கா முடியேல்ல, இதுக்குள்ள இன்னொரு புதுப் பிரச்சனை என்னத்துக்கு? நீ அங்க போ. பிறகு வந்து படி.” என்றான் அவன்.

அதற்குமட்டும் அவள் மறுத்தாள். “நீ உன்ன கவனிக்கமாட்ட ஷர்மி. பிள்ளையோட பயம்.” என்று அவன் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

கடைசியில், “ப்ளீஸ்ப்பா. நான் இங்கயே நிண்டு படிக்கிறன். இப்ப விட்டுட்டு போனா, பிள்ளை பிறந்தபிறகு திரும்ப ஆறுமாத கோர்ஸ் செய்து நான் வராதுக்குள்ள பிள்ளைக்கு ஒரு வயதாகிடும். அவ்வளவு நாளைக்கு நீங்க இல்லாம என்னால இருக்கவே முடியாது. எப்ப பாஸாகி எப்ப அங்க வருவன் எண்டு இருக்கு. அங்க வந்தபிறகாவது உங்களோடையே இருக்கவேணும். எங்கட பிள்ளை பிறக்கேக்க நீங்கதான் முதன் முதலா கைல தூக்கவேணும். ” என்று குரல் கரகரக்க அவள் சொன்னபோது, மனைவி தன்னைத் தேடுவதை உணர்ந்து மனம் கனிந்துவிட்டதில் அவனாலும் வற்புறுத்த முடியாமல் போயிற்று.

“கவனமா இரு என்ன? உன்ன கஷ்டப்படுத்தாத. டாக்டர் சொல்லுறபடி கேட்டு நட ஷர்மி. நீயும் பிள்ளையும் வலு கவனம்!” அது இது என்று ஆயிரம் புத்திமதிகளைச் சொல்லிவிட்டு வைத்தான். உதயனுக்கும் அழைத்து நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி சொல்ல, “நீங்க ஒண்டுக்கும் கவலைப்படாதீங்கோ! கவனமா பாத்து அவளையும் பிள்ளையையும் பத்திரமா உங்களிட்ட அனுப்பி வைக்கிறது என்ர பொறுப்பு!” என்று தோழனாய் துணை நின்றான் அவன்.

தினமும் சீராளன் அழைத்தான். சயந்தன் மாலையில் கட்டாயமாக அவளோடு கதைத்தான். உதயன் எங்கும் நடந்து திரியாமல், அலைய விடாமல் கவனித்துக்கொண்டான். தேவகி மட்டும் அழைக்கவேயில்லை. அபி தன் பிடியிலேயே நின்றாள். மாமா மட்டும் அவ்வப்போது எடுத்துக் கதைத்தார்.

யார் எப்படித் தாங்கினாலும் ஆழமாகக் காயம் பட்டுவிட்ட உள்ளம் ஆறாமல் கிடந்ததை யாருமே உணரவில்லை. அவளும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. தேவகி மற்றும் அபியின் விலகல் அதை மறக்க விடவுமில்லை. அதுவே அவளின் மன அழுத்தத்துக்கு வித்திட்டது. தலைசுற்றல், சோர்வு, உணவு சாப்பிட முடியாமைகளோடு அவனிடம் போய்விட வேண்டும் என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு அவள் கற்றது அவளின் உடலையும் பாதித்தது. உடல் பலகீனத்துக்கும் வித்திட்டது. அவளின் குழந்தை வேறு முடிந்தவரையில் அவளைப்போட்டு வாந்தி, தலைசுற்றல் என்று தன் பங்குக்கும் படுத்தி எடுத்தது.

நான்கு மாதங்கள் கடந்திருக்க ஒருவழியாக அவளின் பரீட்சையில் சித்தி அடைந்த அதேநேரம் அவளுக்கு ஸ்பான்சரும் சரியாக வந்தது. எல்லோருக்குமே சந்தோசம். இன்னும் சில நாட்களில் தன்னோடு இருப்பாள் என்கிற நினைவே சீராளனுக்கு தித்திப்பாய் இனித்தது.

‘இவ்வளவு நாளும் எப்படித்தான் அவள் இல்லாம போச்சுதோ தெரியாது..’ அன்று காலை கண் விழித்ததுமே மனைவிக்காக ஏங்கிய மனம் சுகமாய் எண்ணிக்கொண்டது. அவள் வரப்போகிறாள் என்கிற நினைவு தந்த சுகத்தோடு எழுந்து ‘சேவ்’ செய்து கொண்டிருந்தான்.

‘விசா குத்தினதும் கெதியா டிக்கெட்டைப் போடச் சொல்லோணும். சாமான் வாங்குறான், உடுப்பு வாங்குறன் எண்டு ஒண்டும் தேவையில்லை. இங்க எல்லாம் வாங்கலாம்..’ அவன் எண்ணங்கள் அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்க கை தன் வேலையை பார்த்துக்கொண்டிருக்க, ஃபோன் அழைத்தது.

“ஹேய் பொண்டாட்டி!” அழைப்பது அவள் என்று தெரிந்து உற்சாகமாய் ஏற்றான்.

“நான் இப்ப ஃபிளைட் பயணம் செய்யக்கூடாதாம். அதுவும் குறைஞ்சது ரெண்டு மாதத்துக்கு. உடம்பு வீக்கம்.” அவன் இருந்த மனநிலைக்கு முற்றிலும் எதிரான ஒன்றை, பெரும் சோகத்தோடு மெல்ல மெல்ல அவள் சொன்னபோது, சட்டென்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு.

“உன்னைக் கவனிக்கிறத தவிர வேற என்ன வேலை உனக்கு? வீட்டு வேலைக்கு, சமைக்க எண்டு ஆள் வச்சும் உடம்ப கெடுத்து வச்சிருக்கிறாய். வீட்டை போயிரு எண்டு சொல்ல சொல்ல கேக்காம நிண்டுட்டு.. உன்ர கதையை கேட்டு ஓம் எண்டு சொன்னன் பார் என்னைச் சொல்லவேணும்.” ஏமாற்றம் கோபமாய் உருமாறியதில் அவன் கத்திவிட, கண்ணீர் உகுக்க மட்டுமே முடிந்தது அவளால்.

மனக்கவலை தான் அவளைப் பாதிக்கிறது என்று எப்படிச் சொல்வாள்? வாய் மூடி நின்றாள்.

அவள் தனியாக இருந்து வாடுகிறாள், கஷ்டப்படுகிறாள் என்று நேரம் காலம் பார்க்காமல், ஓடித்திருந்து அலுவல்களைப் பார்த்தால் இப்படித் தன்னைத் தானே கெடுத்து வைத்திருக்கிறாளே என்கிற கோபம் அவனுக்கு.

அவளும் டாக்டர் இப்படிச் சொல்லுவார் என்று எதிர்பார்க்கவில்லை. பலகீனமாய் இருக்கிறாய், சத்தாகச் சாப்பிடு என்று மருந்து மாத்திரைகள் தந்தார் தான். அவளும் தவறாமல் அதையெல்லாம் உட்கொண்டாள் தான். அவளின் மனப்புண்ணுக்கு மருந்தாக கணவனின் அருகாமை மட்டுமே இருக்கையில் எது இதை ஆற்றும்?

“நான் அம்மா வீட்டப்போய் இருக்கவா?” அங்கிருந்தாலாவது தன் மனம் ஆறும் என்று மெல்லக் கேட்டாள்.

“எப்ப பாத்தாலும் என்ன அது அம்மா வீடு? மாமியால உன்ன பாக்க ஏலுமா? அந்த மனுசியே ஏலாம கிடக்குது. நீ எங்கட வீட்டப்போய் இரு. அதுதான் உனக்கு இனி வீடு. அதுவும் இப்ப இல்ல. டொக்டர் பயணம் செய்யலாம் எண்டு சொன்னபிறகு.” என்றவன் அவளை நம்பாமல் நம்பரை வாங்கி அவரோடு அவனே கதைதான்.

‘இத முதலே செய்திருக்க வேணும்!’ தன்னையே நொந்துகொண்டான் சீராளன்.
‘பக்கத்தில வச்சுப் பாப்பம் எண்டா உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறாள்!’ கோபம் தீர மறுத்தது. நாட்கணக்கிலேயே தள்ளிப்போடாமல் உடனேயே வரச்சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்திருக்க குறைந்தது இரண்டு மாதத்துக்கு கூடாது என்றால் என்ன செய்வான்?

ஒருவழியாக இரண்டு வாரங்கள் கொழும்பிலேயே இருந்து, அவர் சொன்ன மருந்து மாத்திரைகளை எடுத்து, உதயனும் விஷயம் தெரிந்தபிறகு கூடுதலாகக் கவனித்துக்கொண்டதில் கொஞ்சம் தேறிக்கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள்.

அவளைக் கண்ட அபியின் விழிகள் அப்படியே விரிந்து போயிற்று! தாய்மையால் மெலிந்துபோயிருந்தாலும், பயணக்களைப்பில் சோர்ந்துபோய்த் தெரிந்தாலும் அதையும் தாண்டிக்கொண்டு பிள்ளையைத் தாங்கும் பொலிவு பேரழகியாய் காட்டிற்று. கொழும்புத் தண்ணி கொடுத்த அழகு, அதுவரை ஏழ்மையின் சாயல் தெரிந்தவளிடம் தெரிந்த செழுமை, கைகால்களில் மின்னிய நகைகள் என்று முற்றிலும் வேறான ஷர்மினியைக் கண்டாள்.

கலங்கிய கண்களில் ஆர்வத்துடன் அவள் பார்க்க சட்டென்று உள்ளே சென்றுவிட்டாள் அபி. கண்ணோரம் கசிந்துவிட்ட நீரைத் துடைத்துக்கொண்டாள்.

தோழியாக இருந்தவளை அண்ணியாக ஏற்க முடியவில்லை. ஏதோ ஒரு ஈகோ. தங்களைவிடப் பலமடங்கு கஷ்டப்பட்டவள், தன்னைவிட எல்லாவற்றிலும் கீழேதான் என்கிற எண்ணம் உள்ளே அவளையறியாமலேயே அழுத்தமாகப் பதிந்து கிடந்ததில் சட்டென்று தனக்குச் சமமாக, தான் மதிக்கவேண்டிய இடத்தில் வைத்துப் பார்க்க முடியவில்லை. அவளும் சேர்ந்து தெரிவு செய்து வைத்திருந்த அண்ணியாகப்போகிறவளை அண்ணா தட்டிக்கழித்தது இவளால் என்கிற கோபமும் சேர்ந்துகொண்டதில் விலகல் தானாகவே வந்துவிட்டிருந்தது.

ஷர்மினி கொழும்பு சென்றபிறகு, தானாகவே நடந்த சுய அலசலில் தெளிந்திருந்தாள். அவள் தன்னோடு இணக்கமாகிவிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை எப்படியெல்லாம் எடுத்தெறிந்தோம் என்கிற குற்ற உணர்ச்சியும் சேர்ந்துகொள்ள, அனைத்தும் தன் தவறே என்று விளங்கினாலும், உருவாகிவிட்ட விரிசலே மீண்டும் நெருங்க விடாமல் தடுத்துப் பிடிப்பதைப்போல உணர்ந்தாள்.

ஒரு தயக்கம். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு கதைப்பாள். கதைத்தால், “ஏனடி இவ்வளவு நாளும் கதைக்கேல்ல?” என்று கட்டாயம் ஷர்மி கேட்பாளே. அந்தக் கேள்வியை எதிர்கொள்ளத் துணிவின்றி விலகலை நிரந்தரமாக்கிவிட்டிருந்தாள்.

இன்றோ.. நீண்ட நாட்களுக்குப் பிறகு சற்றே மேடிடத் துவங்கிய வயிற்றோடு இன்னுமே அழகியாகக் கண்டபோது, ‘என்ர ஃபிரெண்ட் அம்மா ஆகப்போறாள்.’ என்கிற உணர்வு ஒரு சந்தோச அழுகையைத் தூண்டிவிட சட்டென்று உள்ளே வந்துவிட்டாள். ஏதோ பரவசம் அவளுக்குள்ளும். அத்தை ஆகப்போகிறாளே. இதழ்களில் புன்னகை மின்னிற்று! அவளின் வயிற்றை தடவிப்பார்க்கும் ஆசையில் கைகள் குறுகுறுத்தன. அவளைக் கேலி செய்து சீண்ட எழுந்த ஆவலை அடக்கப் பெரும்பாடுபட்டாள்.

ஆனாலும், பிழை செய்துவிட்டோம் என்கிற உணர்வு, தயக்கம் அவளை வெளியே விடவில்லை. ஷர்மியை நெருங்கவுமில்லை. அன்று மட்டுமல்ல அதற்குப் பிறகும். அவள் பார்க்காத வேளைகளில் மட்டும், என்னவோ புதையலைக் காப்பவள் போன்று ஒருகையால் வயிற்றை அணைத்துப் பிடித்தபடி மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து அசைந்தாடி நடமாடுகிறவளை சிரிப்போடு ரசித்துப்பார்ப்பாள்.

யாழ்ப்பாணத்தில் காட்டியபோது, இப்போது அவள் விமானப் பிரயாணம் செய்வது அவ்வளவு நல்லதல்ல என்று அந்த வைத்தியரும் சொல்லிவிட, சீராளனுக்கு கோபம் மாறவேயில்லை.

தேவகிக்கும் கோபம்தான். பிள்ளை வேண்டாம் என்றபோதும் கேட்கவில்லை. பிறகாவது தன்னைக் கவனித்தாளா? அதுவும் இல்லை. இப்படி எல்லோரும் பயமுறுத்தும் நிலையிலா அவரின் சந்ததி வளரவேண்டும்? எப்போ ஏதாவது ஆகிவிடுமோ என்று மனம் படபடத்துக்கொண்டே இருந்தது அவருக்கு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அதுசரி, வீட்டுல நல்ல சாப்பாடு சாப்பிட்டு வளந்து இருந்தாத்தானே பிள்ளையைத் தாங்க சக்தி இருக்க? பசிக்குப் பழைய சோத்தச் சாப்பிட்டா என்னெண்டு?” என்று சொல்லி சத்தான உணவு என்று அவர் செய்து தந்த எதுவும் தொண்டைக்குள் இறங்க மறுத்தது. வாய்க்கு ருசியாகவே இல்லை.

பழைய சோறு என்ன அவ்வளவு கேவலமா? பழைய சோற்றை பழங்கறியில் போட்டுக் குழைத்து சின்ன வெங்காயமும் வைத்து அம்மா உருட்டித் தரும் உருண்டைச் சோற்றின் சுவைக்கு எது ஈடாகும்? மனம் தாயின் கைச்சமையலுக்கு ஏங்கியது.

வயிற்றிலிருந்த குழந்தை வாய்க்கு ருசியாகச் சாப்பிடத் தூண்டிவிட்டாலும், விருப்பமானதை ‘சமைச்சுத் தாங்கோ’ என்று கேட்க அஞ்சி வாயைக் கட்டினாள். சில நேரங்களில் நடுச்சாமத்தில் கூடப் பசித்தது. எழுந்து சாப்பிடப் பயத்தில் தண்ணீரைக் குடித்துவிட்டு, கண்ணீர் உகுத்தபடி உறங்கினாள். இந்த வேதனை ஒரு பக்கமென்றால் வாந்தி, தலைசுற்றல் என்று அதுவும் முற்றிலும் நின்றபாடில்லை.

அம்மாவின் அருகாமைக்கு மனம் ஏங்க, அதைக் கணவனிடம் கேட்கத் தயங்கினாள். ஏனோ, அவள் பலகீனமாக இருக்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து அவனும் சிடுசிடுப்பதில், முன்னரைப்போல தன் விருப்பங்களை வெளிப்படையாகக் கேட்க முடியவில்லை. மாமியார் வீடு என்பதில் சிலவற்றை மனம்விட்டுக் கணவனோடு கதைக்கவும் முடியவில்லை.

இங்கிருந்து தப்பித்து எங்காவது ஓடிவிடமாட்டோமா என்கிற அளவில் மூச்சு முட்டிப்போயிற்று அவளுக்கு. வந்ததற்கு இன்னும் அம்மா வீட்டுக்குப் போகவில்லை. தமையனும் உதயனும் மட்டும் வந்து வந்து பார்த்துக்கொண்டார்கள்.

அன்று சயந்தனுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்றதில் உதயன் மட்டுமே வர, “அம்மாவை பாக்கோணும் மாதிரி இருக்கடா.” என்று சொல்லமுதலே அழுதுவிட்டாள். அன்றும் இன்றும் அவளின் ஆறுதல் அவன் மட்டும் தானே.

“போய்ப் பாக்க பயமா இருக்கு. இவரிட்ட கேட்டாக் கத்துவார்.”

“அதுக்கெதுக்கு அழுகிறாய்? உனக்காகத்தான் உன்ர மனுசன் இங்கயே இருக்கச் சொல்லியிருப்பார். மாமிக்கும் ஏலாது தானே. அத விளங்கிக்கொள்ளாம சும்மா அழுது இன்னும் உடம்பக் கெடுக்காத!” அதட்டினான் அவன்.

“எனக்கு அம்மாவை பாக்கோணும்!” சிறு குழந்தை போல தேம்பினாள் ஷர்மினி.

“சரியடியப்பா. நான் கூட்டிக்கொண்டு போயிட்டு கூட்டிக்கொண்டு வந்து விடுறன். இப்ப இத நிப்பாட்டு. பாக்கவே கன்றாவியா கிடக்கு!” என்றான் அவன்.

அதன்பிறகுதான் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“ஒவ்வொருநாளும் விடிய வந்து உன்னைக் கூட்டிக்கொண்டுபோய் விடுறன். வேலை முடிஞ்சு திரும்ப இங்க கொண்டுவந்து விடுறன். அப்ப இங்க இருந்தமாதிரியும் ஆச்சு மாமிய பாத்த மாதிரியும் ஆச்சு. என்ன சொல்லுற?” என்றான் அவன்.

“உனக்கு கஷடம் இல்லையாடா?”

“ஏன் நானே உன்னத் தூக்கிக்கொண்டு திரியப்போறன். பைக் தானே. பெட்ரோலுக்கு மட்டும் உன்ர புருஷனிட்ட காச வாங்கி இந்தப்பக்கம் வெட்டு.”

“அதெல்லாம் அவர் தருவார். அவரை என்ன உன்ன மாதிரி கஞ்சப்பிசுநாரி எண்டு நினைச்சியா? அதுவும் எனக்கு எண்டா கணக்கே பாக்காம எவ்வளவும் செலவழிக்கும் என்ர மனுசன்.” என்றாள் பெருமையாக.

“பார்றா! புருசனுக்கு விளம்பரத்தை!”

அவன் சொன்ன விதத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கவலைகள் மறந்து சிரித்தாள் ஷர்மினி. எப்போதும்போல ஷர்மியைப் பார்க்காததுபோல் பார்த்திருந்த அபியின் பார்வை, அவளின் சிரிப்பிற்குக் காரணமானவனின் மீது ஆச்சரியத்துடன் படிந்தது.

இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த தேவகிக்கு, அவனைக் கண்டதும் இவள் கண்ணைக் கசக்கியதும் அவன் கேலி கிண்டல் என்று சிரிக்க வைத்ததும் என்று ஒன்றும் பிடிக்கவில்லை. ‘சின்ன வயதில இருந்து கூட வளந்தவன் எண்டாலும் ஒரு அளவு வேண்டாமா? அங்க என்ர பிள்ளை இவளை நினைச்சுக்கொண்டு தனியா இருக்க, இவள் இங்க கூத்தும் கும்மாளமும்! நல்லா தேடிப்பிடிச்சான் கண்டறியாத பொம்பிளை!’

அன்று மாலை அழைத்த கணவனிடம், “விடிய அம்மா வீட்டை போயிட்டு பின்னேரம்போல திரும்பி வரட்டா?” தயங்கி தயங்கிக் கேட்டாள்.

இப்போதெல்லாம் அவனிடமும் அவளுக்குத் தயக்கம்தான்.

‘அங்கே யார் இவளைக் கவனிப்பார்கள்?’ சட்டென்று கோபம் மூண்டாலும் நலிந்து மெலிந்து பயத்துடன் ஒலித்த மனைவியின் குரலுக்கு மறுக்கமுடியவில்லை.

“ஏன்? இங்க என்ன பிரச்சனை?”

“ஐயோ ஒரு பிரச்சனையும் இல்ல. வந்ததுக்கு அம்மாவை பாக்கவே இல்ல. அதுதான்.”

“சரி கவனமா போய்ட்டுவா. சைக்கிள தொடப்படாது சொல்லிப்போட்டன்! ஆட்டோவில போ. சாப்பாடு மருந்து எல்லாம் கவனமா சாப்பிடு.” என்றான் தணிந்த குரலில்.

“உதயன்தான் கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னவன். அவன் வராட்டி அண்ணா வருவான். இல்லாட்டி ஆட்டோல போறன். சைக்கிள் ஓடமாட்டன்.” சின்னப்பிள்ளை போல அவன் சொன்ன அத்தனைக்கும் தனித்தனியாகப் பதில் சொன்னவள் மீது பாசம் பெருகிப்போயிற்று அவனுக்கு.

“சுகமா இருக்கிறியா?” கனிவாக அவன் விசாரித்தபோது, அந்த ஒற்றை விசாரிப்பில் தேம்பித் தேம்பி அழத்துவங்கிவிட்டாள் ஷர்மினி.

“இப்ப எல்லாம் நீங்க ஒரே கோபப்படுறீங்க. பாசமா கதைக்கிறதே இல்ல. எனக்கு உங்களிட்ட எதைக் கதைக்கவும் பயமா இருக்கு.” தேம்பிக்கொண்டே சொல்ல அவனுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.

“பின்ன என்னம்மா? எப்ப இங்க வருவாய் எண்டு நான் இருக்க நீ உடம்ப கெடுத்து வச்சா கோபம் வராதா? பிள்ளையைப் பற்றியாவது யோசிக்க வேண்டாமா? ஒரு பிரச்சனையும் இல்லாட்டி இப்ப நீ இங்க எனக்குப் பக்கத்தில இருந்திருப்பாய் எல்லோ. அந்த விசர்ல தான் கத்திறது.” என்றான் அவன்.

“எனக்கு மட்டும் இங்க இருக்க ஆசையா என்ன? நானுமே எதிர்பாக்கேல்ல டொக்டர் இப்படி சொல்லுவா எண்டு. அவர் தந்த மருந்து எல்லாம் ஒழுங்காத்தான் போட்டனான்.”

“சரிசரி அழாத! உன்ர புருஷன் கொஞ்சம் அவசர புத்திக்காரன் எண்டு உனக்குத் தெரியும் தானே. மன்னிச்சு விட்டுடு. பிழைச்சுப் போகட்டும்!” என்று அவளைச் சமாதானம் செய்வதற்குள் ஒருவழியாகிப்போனான் சீராளன்.

அதன்பிறகான நாட்களில் தாய் வீட்டுக்குப் போய்வந்தாள். நேரமிருக்கையில் சயந்தன் கூட்டிப்போனான். பெரும்பாலும் உதயன்தான் வந்தான்.

அன்று உதயன் வருவதைக் கண்டுவிட்டு வாசல்படிகளில் அவள் வேகமாக இறங்க, “எருமமாடு! என்னத்துக்கடி இவ்வளவு வேகமா வாராய்? திரும்பவும் எதையாவது இழுத்து வைக்காம நிதானமாக இரு!” என்று கண்டித்தான் அவன்.

அதில் தெரிந்த அக்கறையில் அபியின் பார்வை ஆர்வத்துடன் அவன்மேல் படிந்தது. எதேர்ச்சையாக அங்கே வந்த தேவகி அதைக் கண்டுவிட்டார். முன்னரெல்லாம் அவன் வரும் நேரங்களில் ஒதுங்கிப்போய்க்கொண்டிருந்த அபி இப்போதெல்லாம் அங்கங்கே நிற்பது வித்தியாசமாய் படவே, சட்டென்று உஷாரானார்.

‘ஒண்டு தவறிப்போச்சு எண்டு பாத்தா மற்றதுமா? முளையிலேயே கிள்ளவேணும். இவனை இப்படியே விட்டா கடைசில நான் பெத்த ரெண்டு பிள்ளைகளின்ர வாழ்க்கையும் சீரழிஞ்சு போய்டும்!’

அன்று உதயன் கூட்டிக்கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனதும் அவளை அழைத்தார் தேவகி.

“என்ன இது? எப்ப பாத்தாலும் அவனோட திரியிறாய். முதல் எப்படி இருந்தியோ தெரியாது. இப்ப நீ இந்த வீட்டு மருமகள். எங்களுக்கு எண்டு கௌரவம், மானம், மரியாதை எல்லாம் இருக்கு. தாலி கட்டினவன் தனியா கிடந்து அங்க கஷ்டப்படுறான், இங்க நீ இவனோட ஒவ்வொருநாளும் சோடி போட்டுக்கொண்டு போய்வந்தா பாக்கிற மனுஷர் என்ன கதைப்பீனம்? இதுல வயித்தில பிள்ளை வேற.”

அவர் பேசப்பேச அதிர்ந்து நின்றவள், அவர் சொல்லாமல் விட்ட வார்த்தைகளின் அர்த்தத்தில் கூசிப்போனாள்.

“மாமி! என்ன கதைக்கிறீங்க?” கைகால் எல்லாம் பதறியது அவளுக்கு.

“உள்ளதைத்தான் கதைக்கிறன். உன்னைப்பற்றி என்ன கதைச்சாலும் பரவாயில்ல. எங்கட வீட்டு வாரிசைப்பற்றி ஒரு பிழையான கதை வரக்கூடாது!” என்றதும் துடிதுடித்துப்போனாள்.

“ஒரு குமர்பிள்ளை இருக்கிற வீடு எண்டு கொஞ்சமாவது நினைப்பிருக்கா உனக்கு? உன்ர பெயரோடு சேத்து அபியோட பெயரையும் கெடுத்துப்போடாத!” என்று அவர் சொல்லிவிட, ஆத்திரத்தில் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொள்ள, விறுவிறு என்று பெட்டியைக் கட்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்- 7ஒருவழியாக சுவிஸ் ‘சூரிச் மாநகரில்’ அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாள் ஷர்மினி. ஒரு இரவைக் கடந்து வந்திருந்த பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்துபோயிருந்தாள். தலையை வேறு சுற்றிக்கொண்டு வந்தது. அப்படியே கண்களை மூடிச் சாய்ந்துகொள் என்று தளர்ந்துபோயிருந்த உடல் கெஞ்சினாலும், கணவனைக் காணப்போகிறோம் என்கிற ஒற்றை உந்து சக்தி அவளை உந்தித் தள்ளியதில் வெளியே வந்தாள்.


‘லக்கேஜ்’களை சேகரித்துக்கொண்டு வெளியே வந்தவளைக் கண்ட சீராளன் திகைத்துப்போனான். சோர்ந்து தொய்ந்த தேகம் முடியாமல் நடைபயில, விழி முழுக்கத் துயரத்தைச் சுமந்துகொண்டு, மெலி மெலி என்று மெலிந்து பிள்ளை வயிற்றோடு கண்ணெல்லாம் உள்ளுக்குப்போய் என்று அவனால் பார்க்க முடியவில்லை. அந்தக் கண்களில் உயிர்ப்பே இல்லை. அன்று செழிப்போடும் செந்தழிப்போடும் ‘கருமம் கருமம்’ என்று கண்களை மூடியவள் கண்ணுக்குள் வந்துபோக, அவளை இந்தக் கோலத்துக்கா மாற்றி விட்டிருக்கிறோம் என்று திகைத்து நின்றுவிட்டான்.


அவன் முகத்தைப் பார்த்துவிடும் தாகத்தில் வந்தவளின் கண்கள் வேகமாக சுற்றிச் சுழன்று கணவனைக் கண்டதும் தன்னை மீறிக் கலங்கின. உயிரிலும் உள்ளத்திலும் இரண்டறக் கலந்த உருவம் கண்முன்னே! ஓடிப்போய் கட்டிக்கொண்டு கதறத் துடித்த துடிப்பை, அவளைக் கண்டபிறகும் அசையாது நின்றிருந்தவனின் இறுக்கம் தடைபோட்டு நிறுத்தியது. அவளைக் கூர்ந்தவண்ணம் அசையாமல் அங்கேயே நின்றவனின் விலகளில் ஆர்ப்பரித்த அத்தனை உணர்வுகளும் அடங்கிப்போயிற்று.


அவளைக் கண்டபிறகுமா அவனிடம் மாற்றமில்லை? மிகப்பெரிய அடியாயிருந்தது அது. எந்த உணர்வையும் காட்டாது அவன் நிற்க நாம் மட்டும் அழுகிறோமே. சட்டென்று பார்வையைத் தள்ளிக்கொண்டு வந்த வண்டிலின் மீது பதித்தாள்.


நிதானமாகக் காலடி எடுத்துவைத்து அவன் அவளை நெருங்கியபோது, அந்த நேரத்திலும் கணவனின் அருகாமையில் அவளிதயம் படபடத்தது. அவனுக்கே உரிய வாசத்தை நாசி நுகர்ந்தபோது, வலிமையான வனப்புமிகுந்த கரங்கள் வண்டிலைப் பற்றியபோது அவன் மார்பினில் தஞ்சமாகிவிட அவளுக்குள் எழுந்த உந்துதலில் சற்றே நிலை குலைந்துதான் போனாள். அவனுக்கு முன்னே அவளின் கோபதாபங்கள் அத்தனையும் பொடிப்பொடியாக நொருங்கிப் போகிறதே.. அவனுக்கு அப்படி இல்லையோ? அப்படியான தாக்கத்தை அவளின் பிரசன்னம் அவனுக்கு வழங்கவில்லையோ? உள்ளத்தில் அடிவாங்கினாள். அவன் கால்கள் நகரத் துவங்க, வலியோடு அவனைப் பார்த்துவிட்டுப் பாதடி பின்பற்றினாள் துணைவி.


எத்தனை மாதத்துக்குப் பிறகு கண்டிருக்கிறான். கேட்பதற்கு ஒன்றுமே இல்லையா? விசாரிப்பதற்கு எதுவுமே இல்லையா? ஒரு சிரிப்பு? ஒரு அணைப்பு? அவள் மட்டும் அவன் மீதிருந்த அத்தனை மனஸ்தாபங்களையும் மறந்துவிட்டு அவன் மார்பினில் தஞ்சமாகிவிட ஏன் துடிக்கிறாள்? விழிகள் அவனிடம் தானே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.


காரின் பின்பக்கம் அவளின் உடமைகளை ஏந்திக்கொள்ள முன் கதவினை அவன் திறந்துவிட்டதைக் கூடக் கவனிக்காமல் கலங்கும் விழிகளைக் காட்டாமல் அமர்ந்துகொண்டாள்.


“பெல்ட்டை போடு.”


‘ஓ.. உனக்கு என்னோட கதைக்கக்கூடத் தெரியுமா?’ மிகப்பெரிதாக ஏமாந்துபோன உள்ளம் குமுறியது.


எப்படி இருக்கிறாய் என்கிற ஒற்றைக் கேள்விக்கு பஞ்சமாகிப்போனதா? வேகமெடுக்கத் துவங்கிய கார், வேகவீதியில் ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்த மற்றைய கார்களுடன் தன்னையும் போட்டியில் இணைத்துக்கொண்டது.


ஷர்மினியின் செல் இசைக்க, ஹாண்ட் பாக்கினைத் திறந்து எடுத்துப்பார்த்தாள்.


‘அண்ணா!’ சயந்தன் என்கிற ஒற்றைச் சொல், அவளின் கண்ணீர் சுரப்பிகளை உசுப்பிப் பார்த்தது.


“சுகமா போய் சேர்ந்திட்டியா? ஒரு பிரச்சனையும் இல்லையே.” அழைப்பை ஏற்றதுமே பயமும் பதட்டமும் தொனிக்க, அவசரமாய்க் கேட்டான் அவன்.


“ஓம் அண்ணா. ஒரு பிரச்சனையும் இல்ல” என்று இவள் சொல்லி முடிக்க முதலே பாய்ந்தான் உதயன்.


“அத எடுத்துச் சொல்லமாட்டியாடி எரும. போய் இறங்கி எவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஃபோன் வரல்லே என்னவோ ஏதோ எண்டு பயந்து சாகிறம் நாங்க!” அவளின் அழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து, வராததால் என்னவோ ஏதோ என்று பதறியதில் ஆத்திரப்பட்டான் உதயன்.


மனதுக்குள் இதமாய் இறங்கியது அந்தக் கோபம்.


“சாரிடா. கொஞ்சம் டென்சன். எங்க போறது எங்க வாறது எண்டு ஒண்டும் தெரியேல்ல. அதான்.. மற்ற ஆக்கள் போறதைப் பாத்து பாத்து வந்ததுல லேட்டாகிட்டுது.”


உதயனுக்குப் புரிந்தது அவள் நிலை. அருகிலிருந்தவனுக்கும் விளங்க முகம் கன்றியது.


“சரிசரி விடு! மனுசனைக் கண்டதும் எங்களை மறந்திட்டாய். இந்தப் பொம்பிளைகளே இப்படித்தான்.” கேலி பேசி அவளைச் சமாதானம் செய்ய, சாதாரணமாக இருந்திருக்க, ‘உனக்கு எத்தனை பொம்பிளைகளைத் தெரியும்?’ என்று கேட்டு அவனை ஒருவழியாக்கி இருப்பாள். இப்போதோ, அந்த அன்பில் கண்கள் கசிய, “அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுடா.” என்று சொல்லும்போதே தேம்பிவிட்டாள் ஷர்மினி.


“ஏய் லூசு! என்னத்துக்கு அழுகிறாய்? ஏதும் பிரச்சனையா?” இனி எல்லாம் சரியாகிவிடும் என்று அவனிருக்கையில் அவள் அழவும், எதையாவது கதைத்து பிரச்னையை பெரிதாக்கிவிட்டாளோ என்று பயந்து விசாரித்தான்.


அவர்கள் பேசிக்கொள்வது அவனுக்கும் கேட்டதில், அருகிலிருந்தவனின் உடல் விறைத்துக்கொண்டே போயிற்று! விட்டால், அவனைப் பெரும் கொடுமைக்காரனாகவே சித்தரித்துவிடுவாள் போல.


“ஒரு பிரச்சனையும் இல்ல. அம்மாவை விட்டுட்டு வந்ததுதான்..” என்று அவள் சொல்ல, “நீ மாமிய நினச்சுக் கவலைப் படாத. மகிழினி இருக்கிறாள். நான், சயந்தன் எல்லாரும் இருக்கிறம். பிறகு என்ன? உன்ர வாழ்க்கையை சந்தோசமா வாழப்பார். சும்மா கோவத்தை இழுத்துப் பிடிக்காத. நீ சந்தோசமா இருந்தா மட்டும்தான் நாங்க எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும். அவருக்கும் என்ன மனக்குறையோ யாருக்குத் தெரியும்? பொறுமையாக் கேட்டு விளங்கப்படுத்து. ரெண்டுபேரும் ஒன்றாக இருந்து கதைச்சு பிரச்னையை தீருங்கோ.” என்று, சயந்தன் அருகில் இல்லாததால், அவன் வரமுதல் வேகவேகமாய் அவன் சொல்ல சொல்ல, ஆறாய் பெருகிய கண்ணீரை மாறி மாறித் துடைத்துக்கொண்டே, “ம்ம்” கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஷர்மினி.


அருகில் இருந்தவனுக்குள் அது நெருப்பைக் கிளறிக்கொண்டிருந்தது.


அவனிடம் வந்து சேர்ந்ததற்கா இத்தனை அழுகை? அவர்களைப் பிரிந்திருக்க முடியவில்லை என்றால் எதற்கு இங்கு வந்தாளாம்? எப்போதுமே அவளுக்கு அம்மா வீடும், அம்மா வீட்டு ஆட்களும் தான் முக்கியம்! ஆத்திரம் தலைக்கேற, ஃபோனைப் பிடுங்கி சுழற்றி எறிந்தான்.


அதிர்ந்து திகைத்தவளிடம், “இனி நீ அவனோட கதைச்ச.. நடக்கிறதே வேற!” ஆத்திரத்தில் உடல் விறைக்க விரல் நீட்டி எச்சரித்தவனின் உறுமலில் சர்வமும் அடங்கியது அவளுக்கு. அதிர்ந்த விழிகள் அவனிடமே நிலைத்துவிட அசையக்கூட மறந்தாள்.


அவளின் கணவனுக்கு இப்படி ஒரு ஆக்ரோஷ முகம் கூட உண்டா என்ன? தன் விருப்பத்தை நின்று சாதித்துக்கொள்வான். கொஞ்சம் முன்கோபி. அதைக்கூட பொறுமையாக எடுத்துச்சொன்னால் விளங்கிக்கொள்வான். அவளுக்குத் தெரிந்தவரையில் அவ்வளவுதான். இத்தனை ஆக்ரோஷம் மிகுந்த கோபம் அவனுக்கு வரும் என்பது அவள் அறியாதது. அதைவிட அவன் சொன்ன விடயம்?


மாமியார் சொன்னபோதுகூட தாங்கிக்கொள்ள முடிந்தவளால் இதைத் தாங்கவே முடியவில்லை. கணவன் அவளைச் சந்தேகப் படுகிறானா? அந்த ஒற்றைக் கேள்வி அத்தனை நாட்களாய் அவனை நெஞ்சிலும் அவன் மகவை வயிற்றிலும் சுமந்து வாழ்ந்த வாழ்க்கையை நசுக்கிப் பொசுக்கிப் போட்டது!


என்னதான் அவன் மீது மனத்தாங்கல் இருந்தாலும், அவன் காலடிக்கு வந்துவிட்டோம்; இனி எல்லாம் மெல்ல மெல்லச் சரியாகிவிடும் என்கிற ஆறுதல் அவளுக்குள் உண்டாகியிருந்தது. மாமி, தோழியிடம் போலவே முதல் காலடியை நாமே எடுத்து வைப்போம் என்று எண்ணியிருந்தாள். அதைத்தானே உதயனும் சொல்லிக்கொண்டிருந்தான்.


நடந்ததைச் சொன்னால் கணவன் விளங்கிக்கொள்வான்; அவன் சொன்னதை மீறி அம்மா வீட்டை போனது பிழைதான் என்றாலும் மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்று இருந்தவள் இதை எதிர்பார்க்கவில்லை.


‘என்னைப் பாத்தபிறகும் கோபத்தை பிடிச்சு வச்சிருக்க அவரால ஏலாது’ என்கிற அவளின் பெரும் நம்பிக்கையை ஒரேடியாக நசுக்கி விட்டிருந்தான் சீராளன். அவனது ஆக்ரோஷத்தின் முன்னே சிந்தனைகள் கூட உறைந்துவிட அசையவும் மறந்து அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள்.


வேக வீதியை ஊடறுத்துக் கிழித்துக்கொண்டு கார் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தாலும் கண் முன்னே எதிர்காலம் கும்மிருட்டாகத் தோன்றிற்று அவளுக்கு.


அவளின் அசைவற்ற நிலை அவனை அசைத்துப்பார்த்தது. முன்கோபம் என்கிற கூட்டுக்குள் அடைபட்டுக்கொண்டு, அவளோடு கதைத்துவிடு என்று உந்திய மனதின்படி நடக்க இயலாமல், தாய் மூலம் அறிந்தவை நினைவடுக்குகளில் நின்று அவனைக் குமுற வைத்துக்கொண்டிருக்க தடுமாறிக்கொண்டிருந்தவனின் இயலாமையே அவள் மீது கோபமாக வெடித்துவிட்டது என்று தெரியாமலில்லை. என்றாலும், ஆத்திரத்தில் அறிவை இழந்து அவளை நோகடித்துவிட்டானே.


அவனால் காரைச் செலுத்த முடியவில்லை. சிலையாகிவிட்டவளின் கோலம் அவனை சில்லு சில்லாக சிதறடித்துக்கொண்டிருந்தது. அவளிடம் பேசிவிட மனம் விளைந்துகொண்டிருந்தது. காரை மேக் டொனால்ஸ்ஸில் கொண்டுபோய் நிறுத்தினான்.


எதையும் உணராமல் திகைப்பிலேயே கட்டுண்டிருந்தவள், “வா!” என்கிற அழைப்பில்தான், கலைந்து திரும்பினாள். அதற்குள் காரைவிட்டு இறங்கியிருந்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
‘இந்த மணம் ஒத்து வராதே..’ தன் நிலையைச் சொல்லக்கூட முடியாமல் இறங்கினாள். அழைத்துச் சென்று, ஓரிடத்தில் அவளை அமர்த்திவிட்டு ஆர்டர் கொடுக்க அவன் சென்றுவிட, அவளுக்கு வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது.


சமாளித்து சமாளித்துப் பார்த்தவள் முடியாமல், ‘ரெஸ்ட் ரூம்’ செல்வதற்கு காட்டப்பட்டிருந்த குறியீட்டைக் கவனித்துவிட்டு அதற்குள் விரைந்தாள்.


‘எங்க போறாள்?’ அவள் மீது ஒரு பார்வையை வைத்திருந்தவன் அவள் பின்னோடு விரைந்தான். ‘வாஷ் பேசன்’ னுக்குள் அவள் ஓங்காளித்து ஓங்காளித்து வாந்தி எடுக்க, பெண்களுக்கான ரெஸ்ட் ரூம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் அவளைப் பற்றிக்கொண்டு, “என்ன ஷர்மி? என்ன செய்யுது?” என்று பதறினான்.


பதில் சொல்லும் நிலையிலேயே அவள் இல்லை. குடலையே வெளியே தள்ளிவிடுவது போல் அவள் எடுத்த வாந்தியில் இவன் நடுங்கியே போனான்.

வயிற்றுக்குள் இருந்த எல்லாவற்றையும் எடுத்து முடித்ததும் வாயைக் கொப்பளித்துக்கொண்டு அந்தச் சுவரிலேயே ஒரு கையை ஊன்றி கண்களை மூடிக்கொண்டாள். தலையைச் சுற்றிக்கொண்டு வர, அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது.


“என்ன செய்யுது? டாக்டர கூப்பிடவா?” பயத்தோடு கேட்டவன், தன்னையே சுமக்க முடியாமல் சோர்ந்து நின்றவளை, தன்னோடு சாய்த்துக்கொள்ள முனைய, துவண்டுகிடந்த கரத்தால் அவனைத் தடுத்துவிட்டு மெல்ல அங்கிருந்து வெளியேறினாள்.


அந்த மறுப்பில் ஒருகணம் அசைவற்று நின்றுவிட்டான் சீராளன். சுருக்கென்று வலித்தது. அவள் காரை நோக்கி நடக்கவும் ஓடிப்போய்க் கதவைத் திறந்துவிட்டான்.


அவள் அமர்ந்ததும் மற்றப்பக்கம் வந்தமர்ந்து அவள் பக்கக் கண்ணாடியை சற்றே இறக்கிவிட்டு, வீசும் காற்றை அவள் முகத்தில் மோதவிட்டான். “இது.. ஏன் இப்படி? ஃபிளைட் பயணம் ஒத்துவரேல்லையோ?” அவன் கவலையோடு விசாரிக்க, இல்லை என்று தலையை மட்டுமே அசைத்தவளுக்கு அந்தத் தலை தனியாகக் கழன்று விழுந்துவிடுமோ என்று பயமாய் போயிற்று.


சீட்டிலேயே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். “நான் இங்கேயே இருக்கிறன், நீங்க சாப்பிட்டு வாங்கோ.” மெல்ல முணுமுணுத்தாள்.


அவளின் விலகல் அவனை வருத்தியது. முகம் பார்க்கக் கூட மறுக்கிறாளே. ஒரு பெருமூச்சுடன் இறங்கிச்சென்று ஆர்டர் கொடுத்த உணவை வாங்கிக்கொண்டு ஓடிவந்தான்.


“நெடுக இப்படியா?” அவள் ஒதுங்கி நிற்க முயன்றாலும் அவன் விடத் தயாராயில்லை. அவளைப் பார்க்காதவரையில் எப்படியோ, பார்த்தபிறகு அவனது கோபங்கள், குறைகள் அத்தனையும் மெல்ல மெல்லத் தவிடுபொடியாகிக்கொண்டிருந்தன.


“அது முந்தித்தான். குடல் வெளில வந்திடும் மாதிரி வரும். இப்ப, இதெல்லாம் ஒன்றுமே இல்ல. அந்த மணம் எனக்கு ஒத்துவரேல்ல, அதுதான்.” என்று வெகு சாதாரணமாய் சொல்ல, ‘இது ஒண்டுமில்லையா? இதுவே ஒன்றுமில்லை என்றால் முந்தி..’ நினைக்கவே முடியாமல் திகைத்தான் அவன்.


‘இப்படி தினமும் கஷ்டப்பட்டவளையா தண்டித்தோம்? எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்காமல் விட்டுவிட்டோமே. அவள் நடந்துகொண்டது பிழையாகவே இருந்தாலும் வேறு முறையில் அணுகியிருக்க வேண்டுமோ’ குற்ற உணர்வோடு அவன் பார்க்க, அவளோ கதவில் களைத்துப்போய் நிராதரவாகச் சாய்ந்திருந்தாள்.


கையணைப்பில் வைத்திருந்து ஆறுதலாய் அவளை வருடிக் கொடுத்திருக்க வேண்டிய தருணத்தில், பார்வையாளனாக மட்டுமே நிற்பதை எண்ணி நெஞ்சுக்குள் வலி எழுந்தது. ‘என்னட்ட வா’ என்று இழுத்து மார்போடு அணைத்துக்கொள்ள வாயும் கையும் வராமல் தவிப்போடு அவளையே பார்த்திருந்தான்.


திடீரென்று அவளது கைபேசி சத்தமிட்டது. அதைக் கணவன் தூக்கி எறிந்த காட்சி கண்ணில் வந்துபோக மூடியிருந்த இமைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் துளிகள் கன்னத்தில் கோடு வரைந்தபடி ஓடின.


‘சே! என்ன வேலை பார்த்தோம்!’ என்று அவனுக்குத்தான் ஆகிப்போனது. பின்புறம் எட்டிக் கீழே கிடந்த ஃபோனை எடுத்துப் பார்த்தான். சயந்தன் அழைத்துக்கொண்டிருந்தான். ஏற்கனவே பலமுறை அழைத்திருந்தான்.


“சயந்தன்.” என்றபடி ஃபோனை அவளிடம் கொடுக்க அவள் வாங்கவில்லை. உதட்டைக் கடித்தான் சீராளன். மீண்டும் அவன் அழைக்க, மைக்கை ஆன் பண்ணி, “கதை.” என்று நீட்டினான்.


“ஷர்மி! ஒரு பிரச்சனையும் இல்லையே? ஏன் ஃபோன் கட்டாயிட்டுது. எங்க உன்ர மனுசன்?” இந்தப்புறம் அழைப்பு ஏற்கப்பட்டதுமே கேள்விகளை வேகமாக அடுக்கினான் சயந்தன்.


இனி கதைக்காமல் இருக்க முடியாதே! “ஒரு பிரச்சனையும் இல்லை அண்ணா.” பெரும் சிரமப்பட்டு உதடுகளை அசைத்துச் சொன்னாள்.


“ஒண்டும் இல்லத்தானே? உதயன் சொன்னான் கதைச்சுக்கொண்டு இருக்கேக்க ஃபோன் கட்டாயிட்டதாம் எண்டு.” முழுதாகச் சமாதானமும் ஆகாமல், மேலே எப்படிக் கேட்பது என்றும் தெரியாமல், பதறிக்கொண்டு மேலோட்டமாய் கேட்பதுபோல் கேட்கிறான் என்று உணர்ந்தவளுக்கு அவன் பாசத்தில் மீண்டும் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.


“அது சத்தி(வாந்தி) வந்தது அண்ணா. அதுதான்.. வேற ஒண்டுமில்லை.”


“ஓ.. அதுதானா! நான் பயந்தே போனன். இப்ப பரவாயில்லையா?”


“ஓம் அண்ணா. இவர் மேக் டொனால்ட்ஸ்க்கு கூட்டிக்கொண்டு போனவர்; சாப்பிடுவம் எண்டு. அது ஒத்துக்கொள்ளேல்ல எனக்கு. அதுதான் காருக்க ஓடி வந்திட்டன்.” தெம்பை வரவழைத்துக்கொண்டு கோர்வையாக அவள் சொல்ல, அருகில் கேட்டிருந்தவன் உள்ளுக்குள் குறுக்கிக்கொண்டிருந்தான்.


“ஏய் லூசு. அந்த மணம் ஒத்துவராது எண்டு உனக்கு ஏற்கனவே தெரியும் எல்லா. பிறகும் ஏன் போனாய்? சும்மா எங்களிட்ட மட்டும் தொட்டத்துக்கும் ‘இது என்ர புருசன்ற பெயர் சொல்ல வந்த பிள்ளை. நான் கவனமா பெத்துக் குடுக்கோணும்’ எண்டு ஆயிரம் கத சொல்லுவ, நீ கவனமா இருக்க மாட்டியா?”


அருகில் நின்ற உதயன் அதட்டவும், “சரி விடுடா. சீராளன் கேக்க அவளுக்கு வேண்டாம் எண்டு சொல்ல மனமில்லாம இருந்திருக்கும்.” என்று சயந்தன் சொல்வதும் கேட்டது.


உதயன் கோபப்பட்டதும் அவள் மேலிருக்கும் அக்கறையில்தான். தமையன் அவளுக்காகப் பேசியதும் பாசத்தில்தான். அருகிலிருப்பவனுக்கு மட்டும்தான் இதெல்லாம் இல்லாமல் போயிற்று!


“சீராளனிட்ட சொல்லி கொஞ்சம் இதமான சூட்டில் சுடுதண்ணி வாங்கிக் குடி. வீட்டை போய் நல்லா நித்திரை கொண்டு எழும்ப, எல்லாம் சரியா வந்திடும். எங்க சீராளன்?அவரிட்ட குடு. அப்போதையும் கதைக்கேல்ல. அது மரியாதையில்ல.” என்று அவன் சொல்லவும், அதுவரை அவள் புறமாகப் பிடித்திருந்த ஃபோனை சீராளன் தன் புறம் கொண்டுவர, வேகமாக கரத்தைப் பிடித்துத் தடுத்து, “அவர் சுடுதண்ணி வாங்கப் போய்ட்டார் அண்ணா. நான் காருக்க இருக்கிறன்.” என்றவளை, சரக்கென்று திரும்பிப் பார்த்தான் சீராளன்.


இத்தனை நேரம் அவள் சொன்ன பொய் குன்ற வைத்தது என்றால் இப்போது சொன்ன பொய் சுட்டது. ஆர்ப்பாட்டமில்லாமல், கத்திச் சண்டையிடாமல் தன் கோபத்தைக் காட்டும் மனைவியின் மனநிலை சற்றே அச்சமூட்டியது அவனுக்கு.


“சரி நான் பிறகு எடுத்து அவரோட கதைக்கிறேன்.”


“இல்லை அண்ணா. எடுக்காத. நான் நேரமிருக்கேக்க எடுத்துக் கதைக்கிறன். அதுவரைக்கும் நீங்க யாரும் எனக்கு எடுக்க வேண்டாம்.” அவசரமாக இடைமறித்துச் சொன்னாள் அவள்.


“ஏன்? என்ன பிரச்சனை? மறைக்காம சொல்லு ஷர்மி.” மீண்டும் அவன் ஆரம்பிக்க, “என்ன நீ எப்ப பாத்தாலும் என்ன பிரச்சனை என்ன பிரச்சனை எண்டு கேக்கிறாய்? அப்படி என்ன வரக்கிடக்கு? களைச்சுப்போய் வந்தவள் கொஞ்சம் ஆறி இருக்கிறேல்லையா?” சட்டென்று மூண்ட கோபத்தில் படபடத்தாள்.


“சரிசரி! நான் இனி எடுக்கேல்ல. நீயே எடு என்ன? நீ சந்தோசமா இருந்தா காணும் எங்களுக்கு.” சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டு வைத்தான் அவன்.


பிரிந்தவர் கூடினால் என்னாகும் என்று புதிதாய்க் கல்யாணமான தமையன் எண்ணுகிறான் என்று எண்ணியவளுக்கு எல்லாமே மரத்துப்போனது போலாயிற்று!


காரை இயக்கும் எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்தான் சீராளன். அவள் அவனை உணரவே இல்லை. ஏன் கார் அந்த இடத்திலேயே நகராமல் நிற்பதைக் கூட கிரகிக்க முடியாமல் உடலும் உள்ளமும் துவண்டுபோக அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். உயிரைக் குடையும் இந்த வேதனையை எப்படிக் கடந்து வருவதென்று தெரியவில்லை. வெட்க ரோசம் இல்லாமல் தலை சாய்க்க அவன் தோள் வேண்டுமென்றுதான் மனம் இன்னமும் ஏங்கியது.


சீராளனுக்கு இந்தச் சிக்கலை எப்படிச் சீர் செய்வது என்றே தெரியவில்லை. கல்யாணம் கட்டி ஒருவாரம் சந்தோசமாய் உடலும் உயிருமாய் வாழ்ந்துவிட்டு வந்துவிட்டான். பிறகு? அவனுக்கு எதுவுமே தெரியாது. தாயாகிவிட்டாள் என்று தெரிந்ததும் அப்பா ஆகிவிட்டோம் என்று சந்தோசப்பட்டான். மனைவியின் கஷ்டத்தை அவனிடம் அவள் உட்பட யாரும் சொல்லவும் இல்லை; அவனும் அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. பலகீனப்பட்டிருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதும் வைத்தியம் பார்த்தபிறகு எப்படி இருக்கிறாள் என்று கேட்டபோது, ‘அவளுக்கு என்ன ஆளாளுக்கு நல்லா பாக்கிறோம்; குடுத்து வச்சவள்’ என்று அன்னை சொன்னபோது, கர்வமாய் மட்டுமே உணர்ந்தான். ‘அவளுக்கென்ன நல்லா இருக்கிறாள்’ என்கிற வார்த்தை அவளைக் கட்டியவனுக்கான கௌரவம் தானே. அந்தளவு தான் அவனளவில்.


அவளோ தினம் தினம் இப்படி கஷ்டப் பட்டிருக்கிறாள். வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவளின் சிரமம் பற்றி அவன் யோசிக்கவே இல்லை.


மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “சாப்பிடு.” என்று கொடுக்க, அவளோ அவன் கையை அவன் பக்கமாகவே தள்ளிவிட்டாள். “கிட்ட கொண்டுவராதீங்கோ, திரும்ப சத்தி வரும்.”


வேகமாக எடுத்துவிட்டான். அவள் வாந்தி எடுக்கும் காட்சியே அவனுக்குள் திகிலைக் கிளப்பியது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஃபிளைட்ல ஏதாவது சாப்பிட்டியா?”


இல்லையென்று தலையசைத்தாள்.


“ஏன்?” விடாமல் அவன் கேட்கவும், “என்ன ஏன்? இங்க வந்தமாதிரி அங்க வாந்தி வந்தாலும் எண்டுதான்.” அவளையும் மீறிச் சிடுசிடுத்தாள்.


முடியாமல் இருக்கும் நேரத்தில் என்ன இது ஆளாளுக்கு நொய் நொய் என்று சினம்தான் வந்தது. அவனும் மனைவியின் நிலை உணர்ந்து தணிந்து போனான்.


“வெறும் வயித்தோட எல்லோ இருக்கிறாய். இதுவும் வேணாம் எண்டா, வேற என்ன வாங்கித் தர?” உண்மையாகவே அவளுக்கு என்ன கொடுக்கலாம் என்று அவனுக்குத் தெரியவே இல்லை. மனதளவில் குன்றினான்.


“முடிஞ்சா கொஞ்சம் இளம் சூட்டில சுடுதண்ணி வாங்கித் தாங்கோ. போதும்.” என்றாள்.


ஆழமாக அடிவாங்கினான் அவன். காலையில் சாப்பிடாததே அவனுக்கு வயிறு பசியில் கத்திக்கொண்டு கிடக்கிறது. இங்கே அவள்?


வேகமாய்ச் சென்று அவள் கேட்டதை வாங்கிவந்து கொடுத்தான். இரண்டுவாய் பருகிவிட்டு, “நீங்க சாப்பிடேல்லை?” என்று கேட்டாள்.


இல்லை என்று தலையசைத்தான். தான் இதை இத்தனை நாட்களாய்க் கேட்காமல் போனோமே என்றிருந்தது. அவள் மட்டுமா அவனுடைய குழந்தையும் அல்லவா. கண்கள் தானாக அவள் வயிற்றுக்குத் தாவ, அந்த வயிற்றை அள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது. அத்தனை நேரமும் கோபம் ஆக்கிரமித்திருந்ததில் பொங்காத உணர்வுகள் இப்போது பொங்கின. ஏக்கத்தோடு மனைவியைப் பார்த்தான். அவள் எங்கோ சூனியத்தை வெறித்திருந்தாள்.


அவன் அருகில் இருக்கையில் செம்மை பூசியே இருக்கும் கன்னங்கள் ஒட்டிக் கிடந்தன. நாணமும் ஆசையும் போட்டிபோடும் விழிகளில் ஒளிர்வே இல்லை. சிரிப்பை மட்டுமே சிந்தும் இதழ்கள் வறண்டு காய்ந்து கிடந்தது. என்ன வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்திருக்கிறான்.


“இங்கதான் மணக்கும், வெளில நிண்டு சாப்பிட்டு வாங்கோ.” என்று அவள் சொல்ல, பசி தெரிந்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை அவனுக்கு. ஆனால் இன்று ஒருநாள் சாப்பிடாமல் இருந்தால் அவன் செய்தது எல்லாம் சரியாகிவிடுமா? இத்தனை நாட்களும் அவள் சாப்பிட முடியாமல் சிரமப்பட அவன் நன்றாகத்தானே வயிறு முட்ட விழுங்கினான்.


இறங்கிச் சென்று சாப்பிட்டான். பசிக்கு என்பதை விட, ‘ஏன் சாப்பிடேல்லை?’ என்று அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் தெம்பற்று விழுங்கினான். அரைவாசிக்குமேல் அதுவும் முடியாமல் எறிந்துவிட்டு வந்தான்.


வீட்டுக்கு வந்ததும், மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் அவள் நுழைந்து பாத்திரங்களைத் தேடவும், ‘எப்பதான் என்னோட கதைப்பா?’ என்று ஏக்கத்துடன் அவளையே விழிகளால் தொடர்ந்துகொண்டிருந்தவன், ‘களைப்போட இப்ப சமைக்கவேணுமா?’ என்று நாக்கு நுனிவரை எழுந்த கேள்வியை அடக்கிக்கொண்டான்.


அவளுக்குப் பிடித்தமாதிரி எதையாவது செய்தால் சாப்பிடுவாளே என்று தோன்றவும் தானும் சேர்ந்துகொண்டான்.


“என்ன சமைக்கப்போறாய்?” அவள் முகம் கொடுக்காதபோதும் அவன் மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.


“ஒரு சோறும் ரசமும் மட்டும்தான்.”


அவள் பொருட்களைத்தேட, வேகமாக வெங்காயத்தை எடுத்து தோலை உரித்து வெட்டிக்கொடுத்தான். உள்ளியின் தோலை அவள் உரிக்க, அதனை உரலில் இடித்துக்கொடுத்தான்.


“வேற என்ன வேணும்?”


“புளி ஊறப்போடவேணும். தக்காளிப்பழம்?” அவள் கேட்டவற்றை எல்லாம் செய்து கொடுத்தான். ரசத்தூளுக்கான பொருட்களைத் தேடி அவள் எடுக்க, அவற்றை அடித்துக்கொடுத்தான். அடுப்பில் ரசத்துக்கான வேலையை அவள் ஆரம்பிக்க, ‘பசுமதி’ அரிசியை அவர்கள் இருவருக்கும் அளவாக எடுத்து, கழுவி ரைஸ்குக்கரில் போட்டு, உப்புமிட்டு வேக விட்டான். இருபது நிமிடங்களில் சுடச்சுட ரசமும் சோறும் தயாராயிருந்தது. மனைவியின் கைமணத்தில் ரசத்தின் வாசனை மூக்கை நிறைக்க, உமிழ்நீர் சுரந்தது அவனுக்கு.


இவ்வளவும் நடக்கும்போதும், ஏதாவது கதைப்பாள், கேட்பாள் என்று அவளையே கவனித்திருக்க, “சாப்பிடுறீங்களா?” என்று மட்டும்தான் கேட்டாள்.


ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வினாலும், எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவள் கையால் கிடைக்கும் உணவைத் தவறவிட மனமில்லை. “உனக்கும் சேர்த்து போட்டுக்கொண்டு வா.” என்றான்.


அவனுக்குத் தட்டு நிறைய உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு, எண்ணி நான்கு சோறுதான் வரும்போலிருந்த அளவில் சோற்றோடு ரசமும் வைத்து, ஊரிலிருந்து கொண்டுவந்த ஊறுகாய் மட்டுமே சேர்த்து அவள் சாப்பிட, “இது என்னத்த காணும்? இன்னும் கொஞ்சம் போடு!” என்று சோற்றைப்போட அவன் முயல, “இல்ல காணும்!” என்று கையைக் குறுக்கே கொணர்ந்து தடுத்துவிட்டாள்.


அவ்வளவுதான் அவனோடு அவள் பேசியவை. சாப்பிட்டுவிட்டுச் சென்று படுத்துக்கொண்டாள்.


இது அவளில்லை! இந்த அமைதி அவள் இயல்பில்லை!


மாற்றியே ஆகவேண்டும்! அவளின் அந்த அமைதி அவனுக்குள் கிலியைத்தான் பரப்பிக் கொண்டிருந்தது. கதைக்கவேண்டிய நேரத்தில் கதைக்கத் தவறிய தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டிருந்தான். சின்ன விஷயமாக முடித்திருக்க வேண்டிய ஒன்றை அவனும் சேர்ந்து பெரிதாக்கி, பெரிய மனவிரிசலில் கொண்டுவந்து விட்டுவிட்டானே!


நன்றாக உறங்கிப் போனவளையே பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் சீராளன்.


அங்கே அதே அறையிலேயே அவனோடு திருமணத்தில் நின்றவள் ஃபோட்டோவைப் பார்த்தான். அதில் இருப்பவள் தங்கை என்று கூடிச் சொல்லமுடியாத அளவில் சிதைந்து போயிருந்தது அவள் தோற்றம். இதுதானா அவன் கொடுத்த திருமணப் பரிசு. ஊரில் யாரையாவது கட்டியிருக்க சந்தோசமாக வாழ்ந்திருப்பாளோ? நினைக்காமல் இருக்கமுடியவில்லை.


அடுத்த கணமே அவளருகில் அவனையன்றி இன்னொருவனை நினைப்பில் கூட நிறுத்த முடியாமல், அவன்தான் ஊரில் இருக்கும் ஒருவனாகவும் மனக்கண் முன்னே வந்து நின்றான்.


அவள் எழுந்த பிறகும், ஏதாவது கதைப்பாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ ஒன்றும் சொல்லவே இல்லை. தன் பாட்டுக்கு முகம் கழுவிக்கொண்டுவந்து சோபாவில் சென்று முடங்கிக்கொண்டாள்.


பயணக்களையா அல்லது உடல்நிலை சரியில்லையா கைகளை கன்னத்துக்குக் கீழே கொடுத்து கால்களை முடக்கிக்கொண்டு கண்களை மூடியிருந்தாள். உறங்கவில்லை என்பதை மூடியிருந்த விழிகளுக்குள் ஓடித்திருந்த கருமணிகள் உணர்த்தின. அவன் முகம் பார்க்கப் பிடிக்கவில்லையோ?
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom