You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன்னில் என்னை தொலைத்தேனடி...!- கதை திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
சொல்லத்தான் வந்தாள்! மனம் முழுக்க ஓராயிரம் சோகக் கதைகளை, மனவருத்தங்களை, கண்ணீரை, கவலையை, இப்படி எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் வந்தாள். அவன் காலடியில் அத்தனையையும் இறக்கிவிட்டு ஒருமூச்சு அழுதுவிட்டு, மன்னிப்பைக் கேட்டு சுமூகமாகிவிட வேண்டும் என்கிற பேராசையோடுதான் வந்தாள். கட்டிய கணவனிடம் என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறதாம்? அவனில்லாமல் அவளால் வாழவே முடியாது என்கிறபோது சரணடைந்துவிடுவதில் என்ன தவறு என்றுதான் வந்தாள்!


ஆனால், நண்பனோடு இனி நீ கதைக்கக்கூடாது என்று அவன் சொன்ன ஒற்றை வார்த்தை அத்தனை பாரங்களையும் பல மடங்காக்கி அவள் மூச்சுக்குழாயை அடைத்தபோது, நானாக இறக்கி வைப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டாள்.


என்னிடம் ஒரு கேள்வி கேட்கக் கூடவா உன்னால் முடியவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்கவேண்டாம்! ஏன் இப்படிச் செய்தாய் என்று கூடவா கேட்க முடியவில்லை. தூரத்தில் இருந்தபோதாவது பரவாயில்லை, உன்னருகில் வந்த பிறகுமா இந்தக் கோபம்? விலகல்?


என்னை அருகில் வைத்துக்கொண்டு யாரோபோல தள்ளி நிற்க உன்னால் முடிகிறதுதானே?


மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் முகத்தில் எதுவுமே தெரியவில்லை. நிர்சலனமாய்ச் சாய்ந்திருந்தாள். அவனும் அவளும் அப்படியே இருக்கலாம். பொழுது இருக்குமா? இரவை எட்டியது.


உணவை முடித்துக்கொண்டு கட்டிலின் ஒரு பக்கத்தில் அவள் படுத்துக்கொள்ள, இன்னோர் ஓரத்தில் படுக்க முடியவில்லை அவனால். ஒரு வாரம்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த ஒரு வாரம் தானே ஓராயிரம் நினைவுகளைத் தந்தது. ஓராயிரம் சந்தோஷங்களைத் தந்தது. அந்த நினைவுகளுக்கு மத்தியில் இந்த நிஜம் கசந்து வழிந்தது. யாரோபோல் அவனால் ஒதுங்கி இருக்க முடியவில்லை. அவளின் அமைதி பொறுக்க முடியவில்லை. இரும்புப் பெட்டகம் போல் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு இருப்பவளைக் காணச் சகிக்கவில்லை.


உன் மனதைச் சொல்லு; அதிலிருக்கும் அத்தனை குறை நிறைகளையும் சொல்லு; உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டிவிட மனம் உந்த, அதற்குமேல் முடியாமல் எழுந்துவந்து அவள் படுத்திருந்த பக்கம் அமர்ந்தான்.


அதை எதிர்பாராதவள் திகைத்து அவனைப் பார்க்க, அவளின் வயிற்றை நடுங்கும் கரங்களால் மெல்லத் தடவினான்.


‘இத்தனை நேரமாய் என்னைத் தேடவில்லையேப்பா நீ?’ அவள் மனதைப்போலவே பிள்ளையும் உணர்ந்தது போலும், அவன் கையை எட்டி உதைத்தது. ஆனந்த அதிர்ச்சி தாக்க மனைவியைப் பார்த்தான். அகன்ற விழிகளால் அதுவரை அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் கண்களை படக்கென்று இறுக்கி மூடிக்கொள்ள காது மடல்களை நனைத்துக்கொண்டு ஓடியது கண்ணீர்.


அவன் விழிகளிலும் கசிவு. அவளை நிமிர்த்தி வயிற்றில் உதடுகளைப் பதித்தவன் குழந்தையோடு குழந்தையாக அந்த வயிற்றிலேயே தஞ்சமானான்.


“என்ன பிழை செய்தனான் எண்டு இன்னும் எனக்கு வடிவாத் தெரியேல்ல. ஆனாலும் குற்ற உணர்ச்சி என்னை குத்துது. நீ எப்படி இருக்கிறாய் எண்டு யோசிக்காம முட்டாள் தனமாய் நடந்திட்டேனே எண்டு கொல்லுது. எது நடந்து இருந்தாலும் நான் உன்னோட கதைச்சிருக்க வேணும். சந்தோசமா சிட்டுக்குருவி மாதிரி பாடித் திரிஞ்சவளை பிடிச்சு சிறகை வெட்டி அடச்சு வச்சமாதிரியே இருக்கு உன்ன பாக்க. தெரிஞ்சோ தெரியாமலோ நான் செய்த எல்லா பிழைக்கும் என்ன மன்னிச்சுடு. தயவு செய்து இப்படி இருக்காத. எனக்கு என்ர பழைய ஷர்மி வேணும். என்னைக் கண்டதும் கருமம் கருமம் எண்டு கண்ண மூடின அதே துள்ளலான ஷர்மி வேணும்.” என்று அவளின் கரத்தை அவன் பற்றப் போக, சட்டென்று விலகி அமர்ந்தாள் அவள்.


நெஞ்சைப் பிளந்துகொண்டு அழுகை வெடித்தது அவளுக்கு!


“ஐயோ அழாத. பிள்ளையை வச்சுக்கொண்டு தயவுசெய்த அழாத ஷர்மி! பயமாயிருக்கு எனக்கு.” அவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று அவன் அஞ்ச, அதைக் காதிலேயே விழுத்தாமல் அவனிடமிருந்து விலகிநின்று கேட்ட முதல் கேள்வி, “என்ர வயித்தில இருக்கிற பிள்ளைல உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?” என்பதுதான்.


ஒற்றைக் கணத்தில் உச்சிக்கு ஏறியது அவன் கோபம்.


“அறைஞ்சன் எண்டா! என்னடி கதை கதைக்கிறாய்?” உச்சபட்ச சினத்தில் சீறினான் சீராளன். சட்டென்று எழுந்துவிட்டான். ஆத்திரத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் பிள்ளையைப் பற்றி என்ன கேள்வி கேட்டுவிட்டாள்?


உறுமிக்கொண்டு நின்றவனைக்கண்டு உள்ளே குளிர் பிறந்தாலும், “பிறகு என்னத்துக்கு உதயனோட கதைக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க?” என்று கேட்காமல் விடவில்லை அவள்.


“உனக்கென்ன விசரா பிடிச்சிருக்கு? எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறாய்?” அப்போதும் கோபம் ஆறவில்லை அவனுக்கு.


“என்னத்துக்கு அவனோட கதைக்கவேண்டாம் எண்டு சொன்னீங்க? அதுக்கு பதிலைச் சொல்லுங்கோ முதல்!” அவளுக்கும் பதில் தெரிந்தே ஆகவேண்டியிருந்தது.


“பக்கத்தில நானிருக்கிறன், வந்ததுல இருந்து என்னட்ட ஒண்டும் சொல்லாம அவனிட்ட சொல்லுறாய் என்ற கோபத்தில நான் ஏதோ லூசு மாதிரிக் கதைச்சா.. அதுக்கு நீ இப்படித்தான் கதைப்பியா?”


இந்தச் சின்ன விஷயத்துக்கா அவ்வளவு கோபப்பட்டான்? நம்பமுடியாமல் அவனையே பார்த்தாள் அவள்.


வேகமாக வந்து அவளருகில் மீண்டும் அமர்ந்துகொண்டு சொன்னான் அவன். “இங்க பாரு ஷர்மி. சொல்லாம கொள்ளாம நீ உங்கட வீட்டை போனது எனக்கு சரியான கோபம். அதுக்குப்பிறகும், என்ன நடந்தது எண்டு ஒரு வார்த்த எடுத்துச் சொல்லேல்ல நீ. நகையை அடவு வைக்கிறது எல்லாம் என்ன பழக்கம் சொல்லு? கோபத்தில ஒரு வார்த்த சொன்னதுக்கு ரோசப்பட்டுப்போய் நகையை வித்திருக்கிறாய். இதெல்லாம் எனக்கு அறவே பிடிக்கிறேல்ல. நீயா எடுத்து விளக்கம் சொல்லவேணும் எண்டு எதிர்பாத்தனான். ஆனா, கடைசிவரைக்கும் நீ எடுக்கவே இல்ல. அதுக்குக் காரணம் உன்ர வீட்டாக்கள் எண்டு நினைச்சன். முக்கியமா உதயன். அவனும் நீயும் நல்ல ஒட்டு எண்டு தெரியும். முதல் முதல் உன்னோட கதைக்க வரேக்க அவன் தடுத்ததே எனக்குக் கோபம். அதெல்லாம் இப்ப இல்லதான். எண்டாலும், அவனைவிட நீ என்னட்டத்தான் எல்லாத்தையும் சொல்லோணும், உனக்கு நான்தான் எல்லாமா இருக்கோணும் எண்டுதான் நினைப்பன். இது சந்தேகம் இல்ல.. அப்படிச் சந்தேகம் இருந்தா கொழும்பில அவன்ர பொறுப்பில உன்ன விடுவனா சொல்லு?” என்று அவன் வினா எழுப்பியபோது, இது உரிமைப்போராட்டம் என்று தெளிந்தாள் அவன் மனைவி.


“ஆரம்பத்தில இருந்தே நீ எங்கட வீட்டோட ஒட்டேல்ல. அபியும் அம்மாவும் கதைக்கேல்லதான் எண்டாலும், நீயும் விலகித்தான் போனாய். ‘எண்டைக்கும் இந்த வீட்டு மருமகளா இருக்கவேணும்’ எண்டு நான் சொல்லிப்போட்டு வந்தும் நீ இப்படியெல்லாம் செய்தா கோபம் வராதா? எதையும் சமாளிச்சுப்போய் எல்லோ இருக்கவேணும். இல்ல என்னட்ட சொல்லி இருந்தா நான் என்ன ஏது எண்டு கதைச்சிருப்பன். அதுக்குமுதல், எப்பயாவது உன்ன வீட்டில வீட்டுக் குடுத்திருக்கிறனா சொல்லு? அம்மா என்ன சொன்னாலும் உன்ர விருப்பப்படிதான் எல்லாத்தையும் செய்ய விட்டிருக்கிறன். ‘என்ர மனுசிய நான் சந்தோசமா வச்சிருக்க வேணும்’ எண்டுதான் எப்பவும் நினைச்சிருக்கிறன். அப்படி இருந்தும் நீ உன்ர பிரச்னையை என்னட்ட கொண்டுவரேல்ல என்றதே எனக்கு பெரிய அடியா இருந்தது. இதில, அம்மா வார்த்தைக்கு வார்த்தை நீ தேடின பொம்பிளை அப்படி செய்திட்டாள், இப்படி செய்திட்டாள் எண்டு ஒவ்வொருநாளும் ஒவ்வொண்டா சொல்லக் சொல்ல, உன்னையும் விட்டுக்குடுக்க முடியாம, உன்னில வந்த கோபத்தையும் காட்ட முடியாம விசர்தான் வந்தது எனக்கு. நீ போனதைவிட, அம்மா உன்னைப்பற்றிக் குறையாக் கதைக்க இடம் குடுத்திட்டியே என்ற கோபம் தான் பெருசா இருந்தது. நீ அங்க செய்யிற ஒவ்வொரு விசயத்தையும் அடுத்த நிமிசமே எனக்கு போனை போட்டுச் சொல்லுவா? அப்ப எல்லாம் வரும் பார் ஒரு விசர்.. அம்மாட்டையும் கத்த முடியாம உன்னோடையும் கதைக்க முடியாம கடவுளே.. அது நரகம் ஷர்மி.”


நடந்த விஷயங்களுக்கு இப்படி ஒரு பக்கமும் இருந்திருக்கிறது என்கிற திகைப்பில் இருந்தாள் அவள். அவனோ ஆரம்பித்துவிட்டதை இடையில் நிறுத்தாமல் தன் மனதை விளக்க முயன்றான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“எயாபோர்ட்ல உன்னைப் பாத்ததும் திகைச்சுப்போனன். இந்த நிலமைல இருக்கிறவளோடையா கதைக்காம இருந்தன் எண்டு என்னிலேயே கோபம் கோபமா வந்தது. இதுல நீ உதயனிட்ட அழவும் உனக்கு எப்பவும் அவன்தான் பெருசு என்ற விசர்ல.. ப்ச் எல்லாத்தையும் சேத்து உன்னில காட்டீட்டன். அது சரியான பிழைதான். எண்டாலும் அதுக்குப்போய்.. என்ன ஷர்மி நீ? எங்கட குழந்தை எல்லா அது?” அவளின் வார்த்தைகள் உண்டாக்கிய வலியை வெளிப்படுத்தக்கூடத் தெரியாமல் அவன் தலையை கோதிக்கொண்டு தவிக்க, அத்தனை மனப்பாரமும் இறங்கிப்போனது அவளுக்கு.


இந்தளவும் போதும் அவளுக்கு! அவன் வேறு எதற்காகக் கோபம் கொண்டாலும் தாங்கிக்கொள்வாள், தழைந்து போவாள்.


மெல்ல நகர்ந்து அவன் கரத்தை தன் இரு கரங்களாலும் இறுக்கிக் கட்டிக்கொண்டு, “சாரிப்பா..!” என்றபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.


அவனுக்கும் அந்த மன்னிப்புத் தேவையே இல்லை. அவள் தன் தோள் சாய்ந்ததே போதுமாயிருந்தது.


“இது மட்டும் தான் எனக்கு வேணும் ஷர்மி!” குரலடைக்கச் சொன்னவன் மனைவியை அணைத்து, நெற்றியில் அழுத்தமாக உதடுகளைப் பதித்தான். பதித்த கணத்தில் கண்களைக் கண்ணீர் நனைத்தது!


அவளுக்கு அனைத்துமாக அவனிருக்க வேண்டும்! அது ஒன்றே அவனது ஆசையாயிருந்தது. எதிர்பார்ப்பாயிருந்தது. அதை உணர்ந்து அவன் தோள் அவள் சாய்ந்தபோது, மனதிலிருந்த அத்தனை குறைகளும் நீங்கிப்போயிற்று!


கண்ணீர் முத்துக்கள் கன்னங்களில் சிதற, அவளும் கணவனின் முகமெங்கும் இதழ்களைப் பதித்தாள். எத்தனை நாள் ஏக்கம்? அவளின் முத்தமழை ஓய்வதாயில்லை. அவனோ சுகமாக நனைந்துகொண்டிருந்தான்.


“நான் இன்னும் என்ர பிள்ளைய கொஞ்சவே இல்லை.” குரல் கமரச் சொன்னவன், அவள் வயிற்றுலும் ஆசையாசையாய் பல முத்தங்களை இட்டான். கூச்சத்தில் அவனைத் தள்ளிவிட்டபோது கூட விடவில்லை.


“சாரி செல்லம்! அப்பா கொஞ்சம் இப்படித்தான். அம்மாவை மாதிரி நீங்களும் அப்பாவை மன்னிச்சு விட்டுடுங்கோ..”வயிற்றின் மீது முகத்தைப் புதைத்தவனுக்கு கண்கள் கசிந்துபோயிற்று!


“என்ன இது? நீங்க என்ன செய்தனீங்க? கோபப்பட்டீங்களே தவிர வேற ஒண்டும் செய்யேல்ல. உங்கட சொல்லுக் கேக்காம அவசரப்பட்டுச் செய்தது எல்லாம் நான்..” என்று கண்ணீரோடு தேம்பியவளை அதட்டினான் அவன்.


“இதென்ன தொட்டத்துக்கும் அழுகை? சும்மா இரு!” என்றவன், அவள் கண்களைத் துடைத்துவிட்டு, நேசத்தோடு நெற்றியில் உதடுகளைப் பதித்தெடுத்தான். கணவனின் கைகளுக்குள் அடங்கியபோது சொர்க்கத்தில் மிதப்பது போலிருந்தது அவளுக்கு!


“ஏன் அப்படிக் கேட்ட ஷர்மி?” மனைவி மீது மனத்தாங்கல் எதுவுமே இல்லைதான். என்றாலும் பிள்ளையைப் பற்றி அவள் சொன்ன வார்த்தைகள் அவன் மனதை தைத்துத்தான் இருந்தது. “நான் கோவக்காரன்தான். ஆனா, சந்தேகக்காரன் எண்டு நினைச்சியா?” அவனைப்பற்றி அவள் கொஞ்சமுமா அறிந்துவைத்திருக்கவில்லை? அது தெரியவேண்டுமாயிருந்தது அவனுக்கு.


அதைப்பற்றிச் சொல்லப்போனால் மாமி கதைத்ததைப் பற்றிச் சொல்லவேண்டிவரும். அவள் கேட்டதற்கே மனமாறாமல் துன்புறுகிறவன் அதை இன்னுமே தங்கமாட்டான். தாய் மீது பாசம் கொண்ட மனிதன். எனவே, “நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான். ப்ளீஸ்.. எனக்காக அத அப்படியே மறந்திடுங்கோ..” என்றாள் கெஞ்சலாக.


பதில் சொல்ல மறுப்பவளை யோசனையோடு நோக்கினான்.


“அம்மாக்கும் உனக்கும் என்ன பிரச்சனை?” இந்த வினாவும் முதல் வினாவின் விடையை நோக்கித்தானே நகரும்.


“அது எனக்கும் என்ர மாமிக்கும் இடைல நடந்த பிரச்சனை. அது முடிஞ்சும் போச்சுது. நாங்க சமாதானமும் ஆயிட்டோம். அதைப்பற்றி நீங்க கேட்கக்கூடாது!” என்று அழகாய்ப் புன்னகைத்தாள் அவன் மனைவி.


மற்றது எல்லாம் மறக்க கண் சிமிட்டவும் மறந்து பார்த்தான் சீராளன். இந்தப் பெண்ணிடம் தான் அவன் தொலைந்தான். ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டி கருங்கூந்தல் தோகை விரிக்க, காற்றில் அசைந்தாடி அவன் உள்ளத்தைப் பறித்தவள் இவள்தான்! இவளைத்தான் இத்தனை நேரமாய் ஒழித்து வைத்துக்கொண்டு அவனைப் பந்தாடினாள் அவன் மனைவி! ஆசையாய் அவளை மடியிலேந்தி, செவ்விதழ்களைச் சிறை செய்தான். கிறங்கிய விழிகள் மூடிக்கொள்ள, தன்னை மறந்தாள் மனைவி. தகித்த தேகத்தின் தாபமடங்க அவன் விடுவித்தபோது, குங்குமமாய் சிவந்துவிட்ட முகத்தை அவன் மார்பினில் மறைத்துக்கொண்டாள் ஷர்மினி.


“‘கண்டபாட்டுக்கு அங்கேயும் இங்கயும் திரியாத எண்டு சொன்னதுக்கு பெட்டியை கட்டிக்கொண்டு போய்ட்டாள். அவளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை நீ மட்டும் தான் வேணும். நாங்க இல்ல..’ எண்டு அம்மா சொல்லேக்க, நீ ஏன் போனாய் என்றதைவிட, அம்மா இப்படி கதைக்கிற அளவுக்கு நடந்திட்டாயே எண்டுதான் எனக்கு கோவம் வந்தது. பிறகும் அவா ஒவ்வொன்றும் சொல்லக் சொல்ல..” என்றவனின் உதடுகளில் தன் மென் விரல்களை வைத்துத் தடுத்தாள்.


“நீங்க ஒரு விளக்கமும் சொல்லவேண்டாம். எனக்கே உங்கட மனம் விளங்குது. மாமியையும் குறையா நினைக்காதீங்கோ. நானும் சமாளிச்சுப் போயிருக்க வேணும். ஆரம்பத்தில இருந்தே மாமிக்கு விருப்பமில்லை, மாமி அப்படி சொல்லிப்போட்டா, அத செய்துபோட்டா எண்டு எல்லாத்தையும் மனதில சுமந்து சுமந்துதான் சின்ன விஷயமும் பெருசா எனக்குப் பாதிச்சது. அபி கதைக்காம இருந்ததும் ஒரு காரணம். ஆனாப்பா, அந்த நேரம் நான் அங்க இருந்து வெளிக்கிடாம இருந்திருந்தா மனதளவில் இன்னுமே பாதிக்கப்பட்டிருப்பன். அந்தளவுக்கு காயப்பட்டுப்போனன். ஆனா என்ன, உங்களோட கதைச்சிருக்க வேணும். நடந்ததச் சொல்லியிருக்க வேணும். நீங்க எடுப்பீங்க எண்டு நானும், நான் எடுப்பேன் எண்டு நீங்களும் காத்திருந்து பிரச்னையை பெருசாக்கிப்போட்டோம். அவ்வளவுதான்.” என்றவளை மார்போடு அணைத்துக்கொண்டான் அவன்.


அவளின் மனதைப் பெரிதாகப் பாதிக்கிற அளவுக்கு என்னவோ நடந்திருக்கிறது. அதில் அவனது பிள்ளையையும் சம்மந்தப்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் அவளிடமிருந்து அந்தக் கேள்வி வந்திருக்கிறது. ஓரளவுக்கு ஊகிக்க முடிந்தபோது அவன் தேகம் விறைத்து நிமிர்ந்தது.


சிலவற்றை அப்படியே கடப்பதுதான் உறவுகளைக் காக்க எடுக்கும் மிகச்சிறந்த முடிவாயிருக்கும். ஆழ மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டான் சீராளன்.


எதையும் காட்டிக்கொள்ளாமல் தன் கை வளையத்துக்குள் சுகமாய்ச் சாய்ந்திருந்தவளின் முகத்தையே பார்த்தான்.


“என்ன?” கன்னங்களில் சிவப்பேறக் கேட்டாள்.


ஒற்றைப் பார்வைக்கே சிவந்தவளின் வெட்கம் ஈர்க்க, சன்னச் சிரிப்புடன் கண்ணடித்து அழைத்தவனின் அழைப்பில் வெட்கி விலகப் பார்த்தவளை விடாமல் வளைத்து, “என்னட்ட என்ன வெக்கம்?” என்று கேட்டு, கழுத்து வளைவில் உதடுகளை அழுத்தமாகப் பதித்தான் சீராளன்.


“எல்லாம் மறந்துபோச்சு..!” அடங்காமல் அவள் மேனியில் அலைந்த கரங்களும், முகமெங்கும் ஊர்வலம் நடத்திய உதடுகளும் தன்னிலை மறக்கச் செய்ய, கணவனின் கைகளில் சந்தோசமாய்க் கரைந்தாள் ஷர்மினி!முற்றும்!
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!! கதை ஒருவழியா முடிந்தது. எப்படி இருக்கிறது என்று சொல்லுங்க. எல்லோரினதும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மிக்க நன்றி!

நட்புடன் நிதனிபிரபு
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அச்சோ மக்களே... அத்தியாயம் 6 போட்டுட்டேன் எண்டுதான் இவ்வளவு நாளும் நினைத்துக்கொண்டு இருந்தேன். சாரி.. இதோ சரி பண்ணிடறேன்
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்-6அவள் வீட்டுக்கு வந்தநேரம் உதயனும் சயந்தனும் இல்லாமல் போனது வசதியாய் போயிற்று!


“இன்னும் ஒருமாதம் தானேம்மா. அதுக்கு அங்கயும் இங்கயும் அலையாம இங்கயே நிக்கச்சொல்லி இவர் தான் சொன்னவர். அதுதான் உடனேயே வந்திட்டன்!” முகத்தை மலர்ச்சியாக வைத்தபடி தாயிடம் சொல்லிவிட்டு அறைக்குள் புகுந்தவளுக்கு அழுகையும் ஆத்திரமும் சேர்ந்து குமுறிக்கொண்டு வந்தது.


அவளைப் பேசியது கூடப் பெரிதில்லை. குழந்தையைப் பற்றி கதைக்கலாமா? அதுவும் யாரோடு யாரை? ச்சிக்! அவனும் சயந்தனும் அவளுக்கு வேறுவேறா என்ன?


தேவகி மீதிருந்த கோபத்தில் சீராளனுக்கு அவளாக அழைக்கவில்லை. ‘அங்க வீட்டுக்கு எடுத்து என்னைக் கேட்டால் சொல்லட்டும், ‘நான் இப்படி கேவலமா கதைசிட்டன், அதால மருமகள் அம்மா வீட்டை போய்ட்டாள்’ எண்டு. எனக்கு எடுப்பார் தானே அப்ப கதைக்கிறன்’ பெரும் கோபத்தோடு காத்திருக்க அவன் எடுக்கவேயில்லை.


அங்கு வீட்டுக்கு அவன் வழமையாக அழைக்கும் நேரம் தாண்டியும் அழைப்பு வராததில் பரிதவித்துப் போனாள். எப்படியும் தினமும் மாலையில் அழைக்கும் கணவன் அழைக்காமல் இருந்திருக்கப் போவதில்லை. அவளை எங்கே என்று விசாரிக்காமல் விட்டிருக்கவும் போவதில்லை. இருந்தும் அவளை அவன் தேடவில்லை.


அவ்வளவுதானா? அவனுக்கு அவள் அவ்வளவுதானா?


‘நான் அந்தளவுக்கு முக்கியமில்லையா உங்களுக்கு? உங்கட அம்மா என்ன சொன்னாலும் என்னட்ட ஒரு வார்த்த கேக்கவேணும் எண்டு தோணவே இல்லையா?’ கணவனின் மதிப்பில் தான் முக்கியமிழந்துபோனோம் என்பதை தாங்கவே முடியவில்லை.


சரியோ பிழையோ, குழந்தையோடு இருப்பவள் எங்கே போனாள் என்று கூட அவன் தேடவில்லையே! நேரம் போகப்போக, அவன் எடுக்காமலேயே இருக்க, என்னவோ மாமியார் சொன்னதை அவனும் ஏற்றுக்கொண்டது போன்றதொரு எண்ணம் உருவாகி அவளை குற்றுயிராக்கத் துவங்கியிருந்தது.
அவள்தான் வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்று கட்டியபோது பெண்ணாய் பெருமைகொள்ள வைத்த கணவன், அளவற்ற அன்பைத் தந்து அவள்தான் அவனுக்கு முதன்மையானவள் என்று சந்தோசமாய் உணரவைத்த கணவன் இன்று அவள் எங்கே என்று தேடவில்லையே. சல்லிக்காசுக்கும் பெறுமதியில்லாமல் தூக்கி எறிந்துவிட்டானா?


வேலை முடிந்து வந்த சயந்தன் அவளையும் அருகில் இருந்த பெட்டியையும் கண்டுவிட்டுப் புருவங்களைச் சுருக்கினான்.


“என்ன ஷர்மி? ஏதாவது பிரச்சனையா?”


சிவந்திருந்த கண்களும், பொலிவிழந்திருந்த முகமும் அவள் எப்போதும் போலில்லை என்பதை ஒற்றைப் பார்வையிலேயே தமையனுக்கு காட்டிக்கொடுத்திருந்தது.


“ஒண்டுமில்லை அண்ணா. அடுத்தமாதம் எப்படியும் சுவிஸுக்கு போய்டுவன்தானே. அதுதான் இனி அம்மாவோட இருக்கலாம் எண்டு வந்தன்.” என்றாள்.


“அதென்ன திடீர் எண்டு? இண்டைக்கு முழுக்க இங்க இருக்கேக்க ஒண்டும் சொல்லேல்ல. இப்ப பெட்டியோட வந்து சொன்னா என்ன கதை இது? பொய் சொல்லாம சொல்லு, அங்க என்ன நடந்தது?” அவன் அதட்டியும் ஒன்றுமே இல்லை என்றுவிட்டாள் அவள்.


நம்பிக்கையில்லாமல் சயந்தன் சீராளனுக்கு அழைத்துக் கேட்க, “அவளுக்கு விருப்பமானமாதிரி இருக்கட்டும் சயந்தன். நீங்க எதையும் கட்டாயப்படுத்தாதீங்க.” என்றான் அவன்.


கணவனோடு தமையன் கதைக்கிறான் என்று தெரிந்ததுமே பொங்கிய அழுகையை அடக்கிக்கொண்டு, குட்டி போட்ட பூனையாக அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தாள் ஷர்மினி.


‘என்னட்ட குடுக்கச் சொல்லுவார்.’ அசைக்க முடியாத நம்பிக்கையோடு நின்றவளை ஏமாற்றிவிட்டு, அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன். அதிர்ந்து தமையனையே பார்த்தபடி நின்றுவிட்டாள் அவள். தான் இங்கே வந்துவிட்டேன் என்று தெரிந்தும் தன்னோடு அவன் கதைக்க முனையவில்லை என்கிற நிஜத்தை உள்வாங்கிக்கொள்ளவே சற்றுநேரம் பிடித்தது அவளுக்கு.


உதயனுக்குமட்டும் நடந்ததைச் சொல்ல, “நீ என்ன லூசா? இருக்கப்போறது இன்னும் ஒருமாதம். பேசாம இருந்திட்டு நல்லமாதிரி போய்ச் சேருவம் எண்டில்லாம கொழுவிக்கொண்டு வந்து நிக்கிறாய்!” என்று அவன் கடிந்தும் அசையவில்லை அவள். அழுகைதான் பொங்கிக்கொண்டு வந்தது.


‘அப்ப உங்கட அம்மா கதைச்சது எல்லாம் சரி எண்டுதான் நீங்களும் சொல்றீங்களா?’ மனம் கணவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தது.


“நீயும் நானும் எப்படி எண்டு எங்களுக்குத் தெரியும். உன்ர மனுசனுக்கும் நல்லாத் தெரியும். ஏன் உன்ர மாமிக்குக் கூடத் தெரிஞ்சிருக்கும். நான் அங்க வாரது பிடிக்காமத்தான் அவா இப்படி கதைச்சிருப்பா. முந்தியே என்னோட அபி கதைக்கிறது அவவுக்கு விருப்பமில்லை. எத சொன்னா என்னை நிப்பாட்டலாம் எண்டு அவா நினைச்சு சொல்ல, நீ மண்டைக்க ஒண்டும் இல்லாம வெளிக்கிட்டு வந்திருக்கிறாய். கொஞ்சமாவது பொறுமை இருக்கா உனக்கு? வெளிக்கிட முதல் எனக்காவது ஃபோன் போட்டிருக்கலாம் எல்லோ!” என்று, தேவகி அம்மாவின் மனதைப் படித்தவனாய் அவளை ஒரு வாங்கு வாங்கிவிட்டான் அவன்.


உண்மைதானோ என்று மனம் அதிர்ந்தாலும், எதற்காக என்றாலும் அவரின் பேச்சை நியாயப்படுத்த முடியவில்லை அவளால். அதைவிட, விளக்கமே கேட்காமல் தண்டனை தந்துவிட்ட கணவனின் செயலில் நெஞ்சம் புண்ணாகிப்போனது. அடுத்தடுத்த நாட்களில் வைத்தியரிடம் மட்டும் அவளைப்பற்றிக் கேட்டுக்கொள்கிறான் என்று தெரிந்தபோது, பெரும் பாரம் நெஞ்சில் வந்து அமர்ந்துகொண்டது.


கண்ணீரோடு காத்திருந்தாள். ‘நான் ஒரு பிழையும் செய்யேல்ல. அவரா எடுக்கட்டும். மாமி என்ன சொன்னாலும், என்னிலையே பிழை எண்டாலும் என்ன நடந்தது எண்டு என்னட்ட ஒரு வார்த்தை விசாரிக்காம எனக்கு தண்டனை தார அவர்தான் இறங்கி வரோணும்.’ தன்னைத் தேடி அழைக்காதவன் மீது கோபமும் கவலையும் உருவாகிற்று!


அந்த மாதம் கைச் செலவுக்கோ மருந்து மாத்திரைகளுக்கோ காசும் அனுப்பவில்லை. அவள் யாழ்ப்பாணம் வந்ததிலிருந்து தேவகியின் பெயரில்தான் பணம் வந்துகொண்டிருந்தது. அவரிடம் வாய்விட்டுக் கேட்டதில்லை. அவரும் நீயாகக் கேள் என்பதுபோல் இருந்துகொள்வார். கொழும்பில் நின்ற நாட்களில் அவன் தாராளமாகவே அனுப்பியதில், மிச்சமாக இருந்ததை வைத்துத்தான் செலவுகளை பார்த்துக்கொண்டாள். இதையெல்லாம் ஒருவிசயமாக அவள் சீராளனிடம் கொண்டும் போகவில்லை.


இப்போதோ கணவனிடமும் கேட்கத் தன்மானம் தடுத்தது. வெளிநாட்டில் கணவனை வைத்துக்கொண்டு தமையனிடம் எப்படிக் கேட்பாள்? அவளின் கல்யாணக் கடனே அவனை விழுங்கிக்கொண்டிருந்தது. இதில் அவளது சம்பளமும் இல்லை. அம்மாவுக்கு மாதம் மாதமல்ல வாராவாரம் வைத்தியச் செலவுகள் வந்துகொண்டிருந்தது.


‘எல்லாத்தையும் நான் பாக்கிறன். உன்ர பொறுப்பும் இனி என்ர பொறுப்பு’ என்றவன் எல்லாவற்றையும் மறந்து போனான். நினைவுபடுத்த சுயகௌரவம் தடைவிதித்தது. வேலைக்காவது விட்டானா? இப்போதிருக்கும் மனநிலைக்கும் உடல் நிலைக்கும் அவளாலும் அது முடியாது. கையில் இருந்த காப்பை அடவு வைத்துச் சமாளித்தாள். மனதில் ஒரே பாரம்! வாழ்க்கை கசந்து வழிந்தது.


இப்போதெல்லாம் வயது முப்பதைத் தொட்டும் கல்யாணம் ஆகாமல் அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருக்கும் தமையனைப் பற்றியும் யோசிக்கத் துவங்கியிருந்தாள். அவள் போனபிறகு தனியாக எத்தனை நாட்களுக்குச் சமாளிப்பான்? சுவிஸுக்கு போனபிறகு கணவனிடம் சொல்லி அண்ணாவுக்கும் வசதியான வீட்டுப் பெண்ணாய் பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தாள். அவனும் எத்தனை நாட்களுக்குத்தான் கஷ்டப்படுவான்? பாவம் தானே.. அவள் மட்டும் நல்ல வாழ்க்கை வாழ அவன் நாளாந்தம் சிரமத்தோடு வாழ வேண்டுமா?


ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் அவள் இங்கு இருக்கும் வரைக்கும் தான் எதுவும் செய்ய முடியும் போலிருந்தது. அதைவிட, வசதியான வாழ்க்கையைவிட சந்தோசமான வாழ்க்கைதான் சிறந்தது என்று பட்டறிவு உணர்த்தத் துவங்கியிருந்தது. ஏற்றத்தாழ்வு உள்ள இரண்டு குடும்பங்கள் இணைந்ததால் அவள் படும்பாடு போதாதா? இனிமேலும் கணவன் என்ன செய்வான் எப்படி நடந்துகொள்வான் என்று தெரியாமல், அவளாக ஒரு திட்டத்தை வைத்துக்கொண்டு காத்திருப்பதில் அர்த்தமில்லை.


இவ்வளவு கடனுக்கும், அம்மாவின் நோய்க்கும் மத்தியில் சயந்தன் தன்னைப்பற்றியும் யோசிப்பான் என்கிற நம்பிக்கை அவளுக்கு அறவேவேயில்லை. இப்படியே ஒற்றையாய் காலத்தை தள்ளக்கூடியவனும் கூட. அதற்கு அவள் விடக்கூடாது. அவளுக்கும் அம்மாவுக்கும் சக்திக்கு மீறிச் செய்கிறவனும் சந்தோசமாக வாழவேண்டும்.


உதயனோடும் உதயன் வீட்டினரோடும் கதைத்து, மறுத்த சயந்தனை படாத பாடுபட்டு சம்மதிக்க வைத்து ஏழ்மையான வீட்டு நல்ல பெண்ணாகப் பார்த்துப் பேசியும் விட்டாள். மனதுக்கு நிறைவாயிருந்தது.


அம்மாவுக்கும் ஒரு துணை வந்தமாதிரியும் இருக்கும், அண்ணாவும் சந்தோசமாக வாழ்வான். எப்படியாவது அம்மாவுக்கான செலவை மட்டும் அங்கிருந்து அனுப்பவேண்டும். விடுவானா? விடாமல் என்ன செய்வானாம்? கோபக்காரன் என்றாலும் அவள் கணவன் பாசக்காரன்!


அவனது நேசத்தை முழுமையாக அனுபவித்த நாட்களின் நினைவில் கண்ணோரம் கசிந்தது. அவனே இன்று அவளைத் தேடாமல் விட்டுவிட்டானே என்று அழுதாள்.


‘எல்லாம் அங்க போய்ச் சேருற வரைக்கும் தான். என்னைப் பாத்த பிறகும் கோபத்தை அவரால பிடிச்சு வச்சிருக்க ஏலுமா என்ன?’ அவளே அவளுக்குச் சொல்லிக்கொண்டாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இப்போதெல்லாம் உதயன் சொன்னதுபோல சற்றே பொறுமையாகத் தானும் போயிருக்கலாமோ என்கிற எண்ணம் அவளுக்குள் வந்துகொண்டிருந்தது. அவர் கதைத்தது பெரும் தப்பு என்றால், அவள் வெளியே வந்ததும் தவறுதான். அவளை உயிராக நேசிக்கும் கணவனின் கோபமும் அதுவாகத்தான் இருக்கும் என்று விளங்கிக்கொண்டாலும், நடந்துவிட்ட பிளவை எப்படி நிவர்த்தி செய்வது என்று விளங்கவில்லை. அவளாக மீண்டும் பெட்டி கட்டிக்கொண்டு போக மனமேயில்லை. கணவன் ஒருமுறை அழைத்துத் திட்டினான் என்றாலாவது, அதுதான் சாக்கு என்று போய்விடலாம் என்றால் எங்கே?


ஒருவழியாக அந்தமாதக் கடைசியில் ஒரு நல்லநாளில் சயந்தனுக்கு கோவிலில் வைத்து திருமணம் என்று நிச்சயமாக, மிக மிக எளிமையாக நடாத்த சயந்தன் திட்டமிட, கோலாகலமாக நடந்த அவளின் திருமணம் நினைவிற்கு வந்தது ஷர்மினிக்கு.


“இவரிட்ட கொஞ்சம் காசு கேக்கவா அண்ணா?” என்று அவள் கேட்டபோது, “ஒரு ரூபாயும் கேட்கக் கூடாது!” என்றுவிட்டான் சயந்தன்.


“கலியாணத்துக்கு எண்டு கடன பட்டுட்டு பிறகு தினம் தினம் கஷ்டப் படுறதை விட எளிமையா தாலி கட்டிட்டு அதே எளிமையோட சந்தோசமான வாழ்க்கை வாழலாம்.” என்றான் அவன்


“இவரிட்ட வாங்கிறது கடனா அண்ணா?” கடன் என்கிற ஒற்றை வார்த்தை கணவனது கௌராவத்தை சுரண்டிப்பார்த்தது போலிருந்ததில் கேட்டுவிட்டாள்.


அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தான் சயந்தன். “என்ர தங்கச்சி வாழப்போன இடத்தில எண்டைக்கும் தலைநிமிந்து வாழவேணும். அவேற்ற கைநீட்டி காசு கேக்கிறது எனக்கும் மரியாதை இல்லம்மா.” நிதானமாக அவன் சொன்னபோது மளுக் என்று கண்களில் கண்ணீர் நிரம்பிப்போனது அவளுக்கு.


உண்மைதானே. இப்போதே அவளுக்கு மரியாதையில்லை. இதில் கைநீட்டி காசு வேறு வாங்கினால்? மாமியார் காதுக்கு போனதோ சரிதான்!


“மகிழினிக்கும் எளிமையா செய்றதுதான் விருப்பம். நாங்க இதைப்பற்றி எல்லாம் கதைச்சு முடிவெடுத்திட்டம். நீ ஒன்றைப்பற்றியும் யோசிக்காம சந்தோசமா இரு!”


தமையனின் பேச்சில், அவர்கள் இருவரும் மனதால் ஒன்றிவிட்டதை அறிந்துக்கொண்டாள். மகிழினியைப் பற்றி பேசும்போதே அண்ணாவின் முகத்தில் வந்துபோன பிரகாசம், அவனுக்கும் இந்தத் திருமணம் பிடித்திருப்பதை உணர்த்த சந்தோஷமாயிருந்தது.


அதோடு, அவளுக்காக சக்திக்குமீறி எல்லாம் செய்த அண்ணாவுக்கு கல்யாணப் பரிசாக அவளும் நிச்சயம் ஏதாவது கொடுக்க வேண்டும். தனக்காகக் கூட கணவனிடம் தன்மானம் பார்த்துக் கதைக்காதவள் தமையனுக்காக அழைத்தாள். அவனோடு அவளாகக் கதைப்பதற்கு ஒரு காரணம் கிடைத்துவிட்ட சந்தோசத்தில் அழைக்க, “சொல்லு!” என்றான் அவன்.


நிறைய நாட்களுக்குப்பிறகு கணவனின் குரல் வந்து காதுக்குள் மோத தேகமெங்கும் சிலிர்த்துக்கொண்டு ஓடியது. கதைக்க வந்தது எல்லாம் மறக்க, மனதிலிருக்கும் அத்தனை குமுறல்களை அவனிடம் கொட்டி ஒருமுறை அழுது தீர்த்துவிடவேண்டும் என்று எழுந்த உணர்வில் தொண்டை அடைத்துக்கொண்டது.


“அண்ணாக்கு கலியாணம் சரிவந்திருக்கு.” குரல் கரகரக்கச் சொன்னாள்.


“நல்லவிசயம்!”


“வாராகிழமை கோயில்ல வச்சு தாலி கட்டப்போறான். நாங்க எங்கட சார்பில ஏதாவது செய்யோணும். அதுதான், என்னட்ட காசில்லை. நீங்க அனுப்பினா நான் ஏதாவது வாங்கிக் குடுப்பன்.”


“ஓ..! அதுதானே பாத்தன். என்னடா என்ர மனுசி ஒருநாளும் இல்லாத அதிசயமா என்னைத்தேடி எடுக்கிறாள் எண்டு. காசு தேவை எண்டதும் என்னை நினைவு வந்திட்டுது போல.” என்றான் நக்கலாய்.


ஒட்டாத குரலில் வந்த கணவனின் பேச்சு மனத்தைக் காயப்படுத்தியது.


“மற்றும்படியும் உங்கள நினைக்கேல்ல எண்டு யார் சொன்னது?” குரலடைக்கக் கேட்டாள்.


“நினைச்சிருந்தா தேடி எடுத்திருப்பாய். ஒரு பிரச்சனை உனக்கு வரேக்க என்னட்ட வந்திருப்பாய். அப்பயெல்லாம் நினைவுக்கு வராத நான் இப்ப உனக்கு காசு தேவை எண்டதும் நினைவுக்கு வந்திட்டேனோ?”


“என்ன நடந்தது எண்டு தெரியாம கதைக்காதீங்கப்பா.”


“என்ன வேணுமெண்டாலும் நடந்திருக்கட்டும்!” என்றான் அவன்.


அவள் திகைத்து நிற்க, “என்ன நடந்திருந்தாலும் வீட்டுல இருந்து பிரச்சனைய தீர்த்திருக்க வேணும். எனக்கு எடுத்து சொல்லியிருக்கவேணும். அதைவிட்டுட்டு பெட்டியை கட்டிக்கொண்டு போனா எனக்கு என்ன மரியாதை? எப்பவும் அந்த வீட்டு மருமகளா நீ நடக்கவேணும் எண்டு சொல்லிப்போட்டுத்தானே வந்தனான். அதுக்குப்பிறகும் இப்படி நடந்திருக்கிறாய். நல்ல மரியாதை தேடித் தந்திருக்கிறாய் எனக்கு.” என்றவனின் கோபத்தில் ஆடிப்போனாள் அவள்.


தான் செய்துவிட்ட முட்டாள்தனமும் உரைத்தது. கடவுளே.. எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டாள்? ஆனால், மாமை பேசியது ஒன்றும் சாதாரண விஷயம் அல்லவே, அங்கிருந்தே சமாளிக்க? அதைச் சொல்லுவோம் என்று அவள் வாயை திறக்க,


“எவ்வளவு வேணும் எண்டு உன்ர அண்ணா கேட்டவர்? சொல்லு அனுப்பி வைக்கிறன். நீ செய்த நல்லதுக்கு நானும் திரும்பிச் செய்யத்தானே வேணும்!” என்றான் அவன் அடங்காத கோபத்தோடு.


சுட்டுவிட்டது அவளுக்கு. “நீங்க அவ்வளவு சொல்லியும் ஏன் வீட்டை விட்டு வந்தனான் எண்டு நீங்களும் கொஞ்சம் யோசிங்கோ. அப்படியே செய்தது பிழையா இருந்தாக்கூடி அத செய்தது நான். அதுக்கு அண்ணாவை கேவலப்படுத்தாதீங்கோ! அவர் கேக்கேல்லை. அவரின்ர கலியாணத்துக்கு எங்கட சார்பில் நாங்க பரிசா ஏதாவது குடுக்கவேணும் எண்டு நான்தான் கேட்டனான்.” என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்.


“உன்ர அண்ணா நல்ல புத்திசாலிதான். கேக்காத மாதிரியே உன்ன கேக்க வச்சிருக்கிறார்!”


ஆத்திரம் கண்ணை மறைத்தது அவனுக்கு.


“மனுசிக்கே செலவுக்கு அனுப்பாதவரிட்ட அண்ணா தனக்கெண்டு ஒரு ரூபாயும் வாங்க மாட்டான். காசுதான் எங்களிட்ட இல்ல. தன்மானம் நல்லாவே இருக்கு. கலியாணத்தப் பற்றி உங்களிட்ட சொல்லச் சொல்லி மட்டும்தான் சொன்னவன். சொல்லீட்டன். வைக்கிறன்.” என்றவள் கண்ணீரோடு வைத்துவிட்டாள்.


என்ன இருந்தாலும் அண்ணாவை அப்படிக் கதைக்கலாமா? மனமே ஆறவில்லை அவளுக்கு.


‘எங்களிட்ட’ என்றால் அவன் யார் அவளுக்கு? மூன்றாம் நபராய் அவனைத் தள்ளி நிறுத்திய அந்த வார்த்தை உச்சந்தலையில் உச்சியிலே சென்று அமர்ந்துகொண்டு அவனுக்கு சினமூட்டிக்கொண்டிருந்தது.


கட்டிலில் விழுந்துகிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள் ஷர்மினி. அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெஞ்சுக்குள்ளேயே நின்று நோகடித்துக்கொண்டிருந்தது. தான் நடந்துகொண்ட விதம் பிழை என்று முதலே உணர்ந்திருந்தாலும், அதோடு கூடவே கணவனை மதிக்காமல் அவன் மரியாதையை குறைக்கும் விதமாகவும் நடந்துகொண்டோமே என்பதும் சேர்ந்து இப்போது வருத்தியது. இதில், அவளுக்காக எவ்வளவோ செய்த தமையனின் கல்யாணத்துக்கு பரிசு கொடுக்கவும் அவளிடம் காசில்லை.


என்ன செய்யப் போகிறாள்? அழுகை ஓய்ந்துபோயிருக்க சிந்தனை ஓடியது. சீதனம் வேண்டாம் என்றார்கள் தானே. தமையன் அவளுக்கு செய்துபோட்ட நகைகளை விற்று அவனுக்கும் அண்ணிக்கும் நகை வாங்கிக்கொண்டு வந்து வைத்தாள்.


“நீ ஏதும் காசு கேட்டியாமா?” அன்று இரவு வீடு வந்த சயந்தன் கேட்டான்.


“இல்..லையே அண்ணா.”


“எனக்கு அனுப்பி இருக்கிறார் சீராளன். வேண்டாம் எண்டு சொன்னா, ‘அண்டைக்கு நீங்க உங்கட தங்கச்சிக்கு பாசம் காட்டின மாதிரி நான் என்ர மச்சினனுக்கு பாசம் காட்டுறன்.’ எண்டு சொல்லுறார்.” என்று சிரித்தான் அவன்.


அவர்களுக்குள் அழகான புரிதலுடன் கூடிய நட்பொன்று ஆரம்பம் முதலே இழையோடிக்கொண்டிருந்தது. அந்த நெருக்கத்தில் இருவருமே இலகுவாக பேசி, கிண்டல் செய்து சிரிப்பது வழமைதான். அப்படி இன்றும் கதைத்துக்கொண்டதில், தன் தங்கையின் கணவன் நல்ல மனிதன் என்கிற எண்ணம் எப்போதும்போல இப்போதும் வலுப்பெற்றிருக்க முகம் மலர்ந்திருந்தது சயந்தனுக்கு. சொந்தம் என்று தன்னை மதித்து அவன் செய்திருந்த அன்புச் செயலில் நெகிழ்ந்திருந்தான்.


“உனக்கும் சாரி எடுத்துக்கொடுக்கச் சொன்னவர். அது மட்டும் வாங்கினான். மிச்சக் காசு இந்தா நீ போகேக்க தேவைப்படும். எனக்கு அன்பா கதைச்சு வாழ்த்துச் சொன்னதே போதும். காசு வேண்டாமாம் எண்டு சொல்லிவிடு! நானே திரும்ப திரும்ப சொல்லுறது மரியாதை இல்ல.” என்று சந்தோசமாய்ச் சொல்லி, அவளிடம் சேலையையும் காசையும் கொடுத்துவிட்டுப் போனான் அவன்.


எதற்கும் தடுமாறாத தமையனின் திடமான அன்பில் அவள் கண்ணோரங்கள் கசிந்தன. அவள் கணவனும் சளைத்தவன் அல்ல. அவனுக்கு அவளோடுதான் கோபம். மச்சினனுக்கு முறையான மரியாதையை கொடுத்துவிட்டானே! ஆனாலும், தமையனுக்காக அந்தக் காசிலிருந்து ஒரு ரூபாயும் செலவு செய்யவில்லை அவள். அவளிடம் அண்ணாவை குறைவாக கதைதான் தானே! என்ன கோபம் என்றாலும் அவளை கதைக்கத்தானே அவனுக்கு உரிமையுண்டு!


அந்தக்காசில் அடுத்தநாள் சென்று அடவு வைத்திருந்த நகையை மீட்டுக்கொண்டு வந்தாள்.


திருமணத்துக்கு அழைக்க என்று தமையனோடு மாமியார் வீட்டுக்குச் சென்றாள் ஷர்மினி. உள்ளுக்குள் உதறல். சயந்தனுக்கு இதுவரை நடந்த பிரச்சனைகள் எதுவும் தெரியாது. மறைக்க நினைக்கவில்லைதான். முதலில் இது இவ்வளவு தூரத்துக்கு போகும் என்று எதிர்பார்க்கவில்லை. பிறகு, கணவன் தாயின் கதையைக் கேட்டுக்கொண்டு தன்னோடு கதைப்பதில்லை என்று சொல்லி, அவன் மீதான மதிப்பை அவர்கள் மனதில் குறைக்க மனமில்லை. அதோடு அவர்களுக்குத் தெரியாமலேயே வந்த பிரச்சனை அப்படியே போய்விடும். எதற்காக வீண் கவலையை அவர்களுக்கு கொடுப்பான்? என்று சொல்லாமலேயே விட்டிருந்தாள்.


இப்போது மாமி அவளைக் கண்டதும் ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று பயந்தாள். நடுங்கிக்கொண்டே போக, நல்லகாலத்துக்கு மாமனார் மட்டுமே வீட்டிலிருந்தார். நல்லமுறையில் வரவேற்றுக் கதைத்தார்.


“ஷர்மினி அங்க நிக்கிறதால உங்களுக்கு பிரச்சனை இல்லையே?” அழைப்பிதழை முறையாகக் கொடுத்து அழைத்துவிட்டு, மெல்லக் கேட்டான் சயந்தன்.


“அதுக்கு என்ன தம்பி. அவள் அங்கேயே நிக்கட்டும். இங்க சும்மா இருக்கிறதுக்கு அங்கே இருந்தா உனக்கும் உதவி, உங்கட அம்மாக்கும் ஆறுதல்தானே.” என்று சொல்லி அனுப்பிவைத்தார் அவர்.


திருமணம் நல்லபடியாக முடிந்தது. மகிழினியின் கையைப் பற்றிக்கொண்டு, “அம்மா நல்லா கஷ்டப்பட்டுட்டா அண்ணி. அவாவை கடைசிவரைக்கும் உங்கட அம்மா மாதிரி நீங்கதான் பாத்துக்கொள்ள வேணும். சுவிஸுக்கு போனபிறகு கட்டாயம் மாதம் மாதம் செலவுக்கு நான் காசு அனுப்புவன். அது என்ர பொறுப்பு. அவவுக்கு வேண்டியதை செய்து பாக்கவேண்டியது உங்கட பொறுப்பு அண்ணி!” என்றாள் கண்ணீரோடு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“அதெல்லாம் இவர் எனக்கு ஏற்கனவே சொல்லிட்டார். நீ ஒரு ரூபாவும் அனுப்ப தேவையில்லை. மாமி எங்கட பொறுப்பு. நீ சந்தோசமா இருந்தா போதும்!” என்று அணைத்துக்கொண்டாள் அவள்.


நல்லவளாகப் பார்த்து அண்ணாவுக்கு கட்டிவைத்துவிட்டோம் என்று மனம் நிறைந்துபோயிற்று அவளுக்கு!


அவளின் புகுந்தவீட்டிலிருந்தும் எல்லோரும் வந்திருந்தார்கள். அவளிடம் குறைந்திருந்த நகைகளைக் கவனித்துவிட்டு புருவங்களைச் சுருக்கினார் தேவகி. மணமக்களுக்கு அவள் அணிவித்துவிட்ட நகைகள் வேறு சந்தேகத்தை கிளப்பின.


நாட்கள் நகர, அண்ணாவும் அண்ணியும் எளிமையாய், சந்தோசமாய் வாழும் வாழ்க்கையை பார்க்கையில், அவர்கள் வாழ்ந்த அந்த ஒரு வாரம் கண்முன்னே வந்து வதைத்தது. சுகமான அந்த நினைவுகளை மறக்கமுடியாமல் அல்லாடினாள். இவன் பாசம் காட்டாமலேயே இருந்திருக்கலாம். உலகத்திலேயே நீ மட்டும் தான் முக்கியம் என்பதுபோல் அவளை உணரவைத்துவிட்டு இப்போது மருந்துக்கும் திரும்பிப் பாராதவனின் செயல் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது.


வயிற்றில் வீற்றிருந்த மகவு வேறு கணவனின் அருகாமைக்கும் அவனின் ஆறுதல் பேச்சுக்கும் இன்னுமின்னும் ஏங்க வைத்தது.


நான் பிழையே செய்திருந்தாலும், என்னைத் தாங்கியிருக்க வேண்டாமா என்று குழந்தையாய் மனம் சிணுங்கியது. தாய்மை அடைந்திருந்த உள்ளம் அவள் என்ன செய்தாலும் மன்னித்திருக்க வேண்டும் என்கிற சலுகையை கணவனிடம் எதிர்பார்த்தது.


அவளுக்காக அவன் நிற்க வேண்டாம். ஒரு ஆறுதல் வார்த்தை கூட வேண்டாம். ‘என்னத்துக்கடி இப்படி செய்தாய்?’ என்கிற கோபமான ஒற்றைக் கேள்வி கூடப் போதுமே! அத்தனையையும் கொட்டிவிடுவாளே! அதன்பிறகு கணவன் எவ்வளவு திட்டினாலும் வாங்கிக்கொள்ளத் தயாராகத்தானே இருக்கிறாள். அவளின் மனக்குமுறல்களை அவளும் யாரிடம் தான் கொட்டுவாள்?


அவளின் எதிர்பார்ப்பு நிறைவேறாமலே போய்க்கொண்டிருந்ததில் மனதில் அழுத்தம் அதிகரித்துக்கொண்டே போனது.


ஏழ்மை நிறைந்து கிடந்தாலும் மனதில் அமைதியும் சந்தோஷமும் நிறைந்து வழிந்த நாட்கள் எங்கோ தொலைவில் சென்றுவிட, இன்றோ மனதிலும் சுமை வயிற்றிலும் சுமை. தன்னைத் தானே சுமப்பது கூடச் சுமையாகி, என்ன வாழ்க்கை இது? இதற்குத்தானா உலகத்தில் இல்லாத அத்தனை கனவுகளையும் கண்டோம்? காதல் சொட்டும் பாடல்களின் வரிகளோடு கண்களை மூடிக் கனவுகளில் மிதந்தோம்? எல்லாம் இந்த நரக வேதனைக்குத்தானா? என்று மனம் அரிக்கத் துவங்கியது.


இதற்கிடையில், இனி அவள் விமானப் பயணம் செய்யலாம் என்றதும் அண்ணா உதயனோடு அவளின் மாமாவையும் அழைத்துக்கொண்டு சென்று, அனைத்தையும் செய்துவிட்டு வந்தாள். அடுத்த இரண்டு வாரங்களில் விசா வந்துவிட்டபோதும் அவளோடு எடுத்துக் கதைக்கவில்லை அவன். அவள் என்னென்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் மாமியார் வீட்டிலிருந்து தகவல்களாகவே வந்தன. அல்லது சயந்தன் மூலம் சொல்வித்தான். அவளைத் தள்ளி நிறுத்திய அவனது ஒவ்வொரு செய்கையும் அவள் நெஞ்சை புண்ணாக்கிக்கொண்டே இருந்தன.


ஒருவித விரக்தி அவளை சூழத் துவங்கிற்று! போகத்தான் வேண்டுமா என்றுகூட நினைத்தாள். குழந்தையோடு இருப்பவளை திரும்பிப் பார்க்காதவனிடம் குழந்தைக்காகப் போக முடிவு செய்தாள். அப்போ நான்? என் மனம்? என் வாழ்க்கை? உள்ளம் அழுதாலும் தயாரானாள்.


முதல் விமானப்பயணம், வயிற்றில் குழந்தையோடு தனியாக போகப்போகிறாள். நெஞ்சில் படபடத்துக்கொண்டே இருந்தது. இவ்வளவு பயந்த கோழியாக எப்போது மாறினாள்? அளவற்ற அன்பைக்கொட்டி அவளை பலகீனப்படுத்திவிட்டு இன்று யாரோபோல் தள்ளி நின்று வதைக்கிறானே. கணவனின் தெம்பான வார்த்தைகளுக்காக மனம் ஏங்கிற்று! ஆதரவான அவனின் ஒற்றை வார்த்தை அவளைக் கரம்பிடித்து அழைத்துச் சென்று அவனிடம் சேர்ப்பித்துவிடும் வல்லமைகொண்டதாய் தோன்றிற்று!


எல்லோருக்கும் அழைத்து என்னென்ன செய்யவேண்டும் என்றெல்லாம் சொன்னவன் அவளுக்கு மட்டும் அழைக்கவேயில்லை. கடைசியாக அவளுக்கும் அழைத்தான். விமானநிலையத்தில் பயணத்துக்காக வந்திறங்கியபோது!


“பாஸ்போர்ட் விசா எல்லாம் கொண்டுவாராய் தானே.” என்று கேட்டான்.


“ம்ம்.” எதிர்பார்ப்போடு பதில் சொன்னாள்.


“டிக்கெட்?”


அதையெல்லாம் விட்டுவிட்டு வருவாளா?


“ஓம்.”


அவனுக்கும் எவ்வளவோ கதைக்க வேண்டும் போலத்தான் இருந்தது. அவள் குரலில் தெரிந்த நடுக்கம் வேறு, தனியாக வந்துவிடுவாளா என்கிற பயத்தை கூட்டிற்று! ஆறுதலாய் பேசி தைரியம் கொடுக்கத்தான் மனமும் உந்தியது. அதுநாள் வரை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த கோபத்தை உடைத்துக்கொண்டு வெளியே வர இயலாமல், “வேற.. என்ன? கவனமா வா.” என்றான்.


அவ்வளவுதானா? அவ்வளவே தானா? துக்கப்பந்து ஒன்று தொண்டையை கவ்விப்பிடித்து நசுக்கியது.


இன்று ஏறி நாளைதான் அவனிடம் போய்ச் சேரப்போகிறாள். அதற்கு இந்த ஒற்றை வார்த்தை போதுமா? அவன் புறப்பட்டுச் சென்ற அந்த நாள் நினைவில் வந்தது. அவள் பிறந்து வளர்ந்த ஊரில், வீட்டினரோடுதான் இருக்கப்போகிறாள். ஆனாலும் எத்தனை கவனங்கள், எத்தனை புத்திமதிகள், எத்தனை தைரியங்களை தந்தான். கொழும்பில் இருந்த நாட்களை சொல்லவே தேவையில்லை. இன்று தனியாகப் பிரயாணம் செய்யப் போகிறவளுக்கு கவனமா வா என்கிற ஒற்றை வார்த்தை போதுமாகிப் போனதா?


கண்ணீரோடு நிமிர்ந்தபோது, அபியும் கண்ணீரை அடக்கிக்கொண்டு நிற்பது தெரிய ஒரு முடிவோடு சென்று அவள் கரத்தை இறுக்கப் பற்றிக்கொண்டாள். கன்னத்தில் வழியத் துவங்கிய கண்ணீரோடு கையை விடுவிக்க அவள் முனைய, “கடைசியா.. ஒரே ஒருக்கா.” என்றாள் கண்ணீரோடு.


“எனக்கும் உனக்குமிடைல என்ன வந்து இவ்வளவு தூரத்துக்கு எங்களை பிரிச்சது எண்டு தெரியாது. ஆனா, உன்ர அண்ணாட கலியாணத்துக்கு வாரதுக்கு என்ன உடுப்பு போடலாம் எண்டு யோசிச்சுக்கொண்டு இருந்த என்னட்டத்தான் வந்து அவர் தன்ர விருப்பத்தைச் சொன்னவர். அந்த நிமிஷம் எனக்கும் அவரை பிடிச்சிப் போச்சு. இது உனக்கு விளங்குமா தெரியேல்ல, உன்ர மனம் எதிர்பாக்கிற மாதிரியான ஒருத்தர் உனக்கு முன்னால வந்து நிண்டு காதலிக்கிறன் எண்டு சொன்னா உன்னாலையும் மறுக்க ஏலாமத்தான் போகும். அப்படி ஒரு ஆள் உனக்கு முன்னால வந்து நிக்கேக்கதான் உனக்கும் அது விளங்கும். அதுக்குப் பிறகாவது என்னோட பழையமாதிரி கதை.” என்று அவள் சொன்னபோது, குற்ற உணர்வு தாக்க அவளை அணைத்துக்கொண்டு உடைந்துபோனாள் அபி.


“சாரிடி! வெரி சாரிடி! நான்தான் லூசுத்தனமா எதையெதையோ நினச்சு.. ப்ச்!” தன் மனதைச் சொல்லமுடியாமல் அவள் கண்ணீர் வடிக்க, “நீ வேற ஒண்டும் சொல்லவேண்டாம். எனக்கு இதே போதும்.” என்று தானும் கட்டிக்கொண்டாள் ஷர்மினி. இருவர் கண்களிலும் சந்தோஷக்கண்ணீர்.


தேவகியைப் பார்க்க அவரும் கலங்கிப்போய் நிற்பது தெரிந்தது. அப்போதும் அவர் சொன்ன வார்த்தைகளில் மனம் முரண்டிக்கொண்டுதான் நின்றது. ஆனாலும் இங்கிருந்து போகையில் எல்லாவற்றையும் முடித்துவிட்டுப் போக நினைத்தாள்.


அவரிடம் சென்று, “நான் ஏதாவது பிழை செய்திருந்தா மன்னிச்சிருங்கோ மாமி. தெரிஞ்சு ஒண்டும் செய்யேல்ல. அண்டைக்கு வீட்டைவிட்டுப் போயிருக்கக் கூடாது. சாரி மாமி.” என்றவள் அவர் காலில் விழுந்து வணங்கவும், வயிற்றுப் பிள்ளைக்காரியின் அந்தச் செயல் அவர் நெஞ்சாய்ச் சுட்டுவிட்டது.


அவர் கேட்ட கேள்வியே அவரைப் பார்த்துக் கேவலமாய் சிரிப்பது போலிருக்க அவர் கண்களிலும் கண்ணீர். ஏறிவிட்ட வயது இறங்கிவந்து மன்னிப்புக் கேட்க விடாமல் மறுக்க, “என்னென்னவோ நடந்துபோச்சு. அதையெல்லாம் விடம்மா. விட்டுட்டு கவனமா போ. ரெண்டுபேரும் சந்தோசமா இருங்கோ. பிள்ளை பத்திரம்.” என்றார் கண்ணீரோடு.


மறைமுகமாய் தன் மனதையும் அவர் உரைத்துவிட்டதில் ஆறுதலாய் உணர்ந்தாள் ஷர்மினி.


ஒரு சின்ன விட்டுக்கொடுப்பு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியிருந்தது. ரோசம் பாராமல் இதை முதலே செய்திருக்கலாமோ என்று ஷர்மியும், தேவையில்லாமல் அவளையும் ஒதுக்கி நாமும் ஒதுங்கிப்போனோமே என்று அபியும், பெரிய மனுசியாய் நடந்திருக்கலாமோ என்று தேவகியும் ஒரே நேரத்தில் தங்களுக்குள் நினைத்துக்கொண்டனர்.


ஆனால், சிலநேரங்களில் காலமும் நேரமும் கூட மனமாற்றங்களுக்குத் தேவைப்படுகிறது என்பதும் உண்மைதானே.


அருகிலிருந்தபோது உருவாகிவிட்ட விரிசலை பிரிந்து செல்லும்போது ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு, தன் எதிர்காலம் நோக்கி மனதில் பாரத்துடன் நடக்கத் துவங்கியிருந்தாள் ஷர்மினி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம்- 7ஒருவழியாக சுவிஸ் ‘சூரிச் மாநகரில்’ அமைந்திருக்கும் விமான நிலையத்துக்கு வந்திறங்கினாள் ஷர்மினி. ஒரு இரவைக் கடந்து வந்திருந்த பயணத்தில் முற்றிலுமாகக் களைத்துச் சோர்ந்துபோயிருந்தாள். தலையை வேறு சுற்றிக்கொண்டு வந்தது. அப்படியே கண்களை மூடிச் சாய்ந்துகொள் என்று தளர்ந்துபோயிருந்த உடல் கெஞ்சினாலும், கணவனைக் காணப்போகிறோம் என்கிற ஒற்றை உந்து சக்தி அவளை உந்தித் தள்ளியதில் வெளியே வந்தாள்.


‘லக்கேஜ்’களை சேகரித்துக்கொண்டு வெளியே வந்தவளைக் கண்ட சீராளன் திகைத்துப்போனான். சோர்ந்து தொய்ந்த தேகம் முடியாமல் நடைபயில, விழி முழுக்கத் துயரத்தைச் சுமந்துகொண்டு, மெலி மெலி என்று மெலிந்து பிள்ளை வயிற்றோடு கண்ணெல்லாம் உள்ளுக்குப்போய் என்று அவனால் பார்க்க முடியவில்லை. அந்தக் கண்களில் உயிர்ப்பே இல்லை. அன்று செழிப்போடும் செந்தழிப்போடும் ‘கருமம் கருமம்’ என்று கண்களை மூடியவள் கண்ணுக்குள் வந்துபோக, அவளை இந்தக் கோலத்துக்கா மாற்றி விட்டிருக்கிறோம் என்று திகைத்து நின்றுவிட்டான்.


அவன் முகத்தைப் பார்த்துவிடும் தாகத்தில் வந்தவளின் கண்கள் வேகமாக சுற்றிச் சுழன்று கணவனைக் கண்டதும் தன்னை மீறிக் கலங்கின. உயிரிலும் உள்ளத்திலும் இரண்டறக் கலந்த உருவம் கண்முன்னே! ஓடிப்போய் கட்டிக்கொண்டு கதறத் துடித்த துடிப்பை, அவளைக் கண்டபிறகும் அசையாது நின்றிருந்தவனின் இறுக்கம் தடைபோட்டு நிறுத்தியது. அவளைக் கூர்ந்தவண்ணம் அசையாமல் அங்கேயே நின்றவனின் விலகளில் ஆர்ப்பரித்த அத்தனை உணர்வுகளும் அடங்கிப்போயிற்று.


அவளைக் கண்டபிறகுமா அவனிடம் மாற்றமில்லை? மிகப்பெரிய அடியாயிருந்தது அது. எந்த உணர்வையும் காட்டாது அவன் நிற்க நாம் மட்டும் அழுகிறோமே. சட்டென்று பார்வையைத் தள்ளிக்கொண்டு வந்த வண்டிலின் மீது பதித்தாள்.


நிதானமாகக் காலடி எடுத்துவைத்து அவன் அவளை நெருங்கியபோது, அந்த நேரத்திலும் கணவனின் அருகாமையில் அவளிதயம் படபடத்தது. அவனுக்கே உரிய வாசத்தை நாசி நுகர்ந்தபோது, வலிமையான வனப்புமிகுந்த கரங்கள் வண்டிலைப் பற்றியபோது அவன் மார்பினில் தஞ்சமாகிவிட அவளுக்குள் எழுந்த உந்துதலில் சற்றே நிலை குலைந்துதான் போனாள். அவனுக்கு முன்னே அவளின் கோபதாபங்கள் அத்தனையும் பொடிப்பொடியாக நொருங்கிப் போகிறதே.. அவனுக்கு அப்படி இல்லையோ? அப்படியான தாக்கத்தை அவளின் பிரசன்னம் அவனுக்கு வழங்கவில்லையோ? உள்ளத்தில் அடிவாங்கினாள். அவன் கால்கள் நகரத் துவங்க, வலியோடு அவனைப் பார்த்துவிட்டுப் பாதடி பின்பற்றினாள் துணைவி.


எத்தனை மாதத்துக்குப் பிறகு கண்டிருக்கிறான். கேட்பதற்கு ஒன்றுமே இல்லையா? விசாரிப்பதற்கு எதுவுமே இல்லையா? ஒரு சிரிப்பு? ஒரு அணைப்பு? அவள் மட்டும் அவன் மீதிருந்த அத்தனை மனஸ்தாபங்களையும் மறந்துவிட்டு அவன் மார்பினில் தஞ்சமாகிவிட ஏன் துடிக்கிறாள்? விழிகள் அவனிடம் தானே மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருக்கிறது.


காரின் பின்பக்கம் அவளின் உடமைகளை ஏந்திக்கொள்ள முன் கதவினை அவன் திறந்துவிட்டதைக் கூடக் கவனிக்காமல் கலங்கும் விழிகளைக் காட்டாமல் அமர்ந்துகொண்டாள்.


“பெல்ட்டை போடு.”


‘ஓ.. உனக்கு என்னோட கதைக்கக்கூடத் தெரியுமா?’ மிகப்பெரிதாக ஏமாந்துபோன உள்ளம் குமுறியது.


எப்படி இருக்கிறாய் என்கிற ஒற்றைக் கேள்விக்கு பஞ்சமாகிப்போனதா? வேகமெடுக்கத் துவங்கிய கார், வேகவீதியில் ஒன்றையொன்று முந்திக்கொண்டிருந்த மற்றைய கார்களுடன் தன்னையும் போட்டியில் இணைத்துக்கொண்டது.


ஷர்மினியின் செல் இசைக்க, ஹாண்ட் பாக்கினைத் திறந்து எடுத்துப்பார்த்தாள்.


‘அண்ணா!’ சயந்தன் என்கிற ஒற்றைச் சொல், அவளின் கண்ணீர் சுரப்பிகளை உசுப்பிப் பார்த்தது.


“சுகமா போய் சேர்ந்திட்டியா? ஒரு பிரச்சனையும் இல்லையே.” அழைப்பை ஏற்றதுமே பயமும் பதட்டமும் தொனிக்க, அவசரமாய்க் கேட்டான் அவன்.


“ஓம் அண்ணா. ஒரு பிரச்சனையும் இல்ல” என்று இவள் சொல்லி முடிக்க முதலே பாய்ந்தான் உதயன்.


“அத எடுத்துச் சொல்லமாட்டியாடி எரும. போய் இறங்கி எவ்வளவு நேரமாச்சு. இன்னும் ஃபோன் வரல்லே என்னவோ ஏதோ எண்டு பயந்து சாகிறம் நாங்க!” அவளின் அழைப்புக்காகக் காத்திருந்து காத்திருந்து, வராததால் என்னவோ ஏதோ என்று பதறியதில் ஆத்திரப்பட்டான் உதயன்.


மனதுக்குள் இதமாய் இறங்கியது அந்தக் கோபம்.


“சாரிடா. கொஞ்சம் டென்சன். எங்க போறது எங்க வாறது எண்டு ஒண்டும் தெரியேல்ல. அதான்.. மற்ற ஆக்கள் போறதைப் பாத்து பாத்து வந்ததுல லேட்டாகிட்டுது.”


உதயனுக்குப் புரிந்தது அவள் நிலை. அருகிலிருந்தவனுக்கும் விளங்க முகம் கன்றியது.


“சரிசரி விடு! மனுசனைக் கண்டதும் எங்களை மறந்திட்டாய். இந்தப் பொம்பிளைகளே இப்படித்தான்.” கேலி பேசி அவளைச் சமாதானம் செய்ய, சாதாரணமாக இருந்திருக்க, ‘உனக்கு எத்தனை பொம்பிளைகளைத் தெரியும்?’ என்று கேட்டு அவனை ஒருவழியாக்கி இருப்பாள். இப்போதோ, அந்த அன்பில் கண்கள் கசிய, “அம்மாவை கொஞ்சம் பார்த்துக்கொள்ளுடா.” என்று சொல்லும்போதே தேம்பிவிட்டாள் ஷர்மினி.


“ஏய் லூசு! என்னத்துக்கு அழுகிறாய்? ஏதும் பிரச்சனையா?” இனி எல்லாம் சரியாகிவிடும் என்று அவனிருக்கையில் அவள் அழவும், எதையாவது கதைத்து பிரச்னையை பெரிதாக்கிவிட்டாளோ என்று பயந்து விசாரித்தான்.


அவர்கள் பேசிக்கொள்வது அவனுக்கும் கேட்டதில், அருகிலிருந்தவனின் உடல் விறைத்துக்கொண்டே போயிற்று! விட்டால், அவனைப் பெரும் கொடுமைக்காரனாகவே சித்தரித்துவிடுவாள் போல.


“ஒரு பிரச்சனையும் இல்ல. அம்மாவை விட்டுட்டு வந்ததுதான்..” என்று அவள் சொல்ல, “நீ மாமிய நினச்சுக் கவலைப் படாத. மகிழினி இருக்கிறாள். நான், சயந்தன் எல்லாரும் இருக்கிறம். பிறகு என்ன? உன்ர வாழ்க்கையை சந்தோசமா வாழப்பார். சும்மா கோவத்தை இழுத்துப் பிடிக்காத. நீ சந்தோசமா இருந்தா மட்டும்தான் நாங்க எல்லாரும் நிம்மதியா இருக்க முடியும். அவருக்கும் என்ன மனக்குறையோ யாருக்குத் தெரியும்? பொறுமையாக் கேட்டு விளங்கப்படுத்து. ரெண்டுபேரும் ஒன்றாக இருந்து கதைச்சு பிரச்னையை தீருங்கோ.” என்று, சயந்தன் அருகில் இல்லாததால், அவன் வரமுதல் வேகவேகமாய் அவன் சொல்ல சொல்ல, ஆறாய் பெருகிய கண்ணீரை மாறி மாறித் துடைத்துக்கொண்டே, “ம்ம்” கொட்டிக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஷர்மினி.


அருகில் இருந்தவனுக்குள் அது நெருப்பைக் கிளறிக்கொண்டிருந்தது.


அவனிடம் வந்து சேர்ந்ததற்கா இத்தனை அழுகை? அவர்களைப் பிரிந்திருக்க முடியவில்லை என்றால் எதற்கு இங்கு வந்தாளாம்? எப்போதுமே அவளுக்கு அம்மா வீடும், அம்மா வீட்டு ஆட்களும் தான் முக்கியம்! ஆத்திரம் தலைக்கேற, ஃபோனைப் பிடுங்கி சுழற்றி எறிந்தான்.


அதிர்ந்து திகைத்தவளிடம், “இனி நீ அவனோட கதைச்ச.. நடக்கிறதே வேற!” ஆத்திரத்தில் உடல் விறைக்க விரல் நீட்டி எச்சரித்தவனின் உறுமலில் சர்வமும் அடங்கியது அவளுக்கு. அதிர்ந்த விழிகள் அவனிடமே நிலைத்துவிட அசையக்கூட மறந்தாள்.


அவளின் கணவனுக்கு இப்படி ஒரு ஆக்ரோஷ முகம் கூட உண்டா என்ன? தன் விருப்பத்தை நின்று சாதித்துக்கொள்வான். கொஞ்சம் முன்கோபி. அதைக்கூட பொறுமையாக எடுத்துச்சொன்னால் விளங்கிக்கொள்வான். அவளுக்குத் தெரிந்தவரையில் அவ்வளவுதான். இத்தனை ஆக்ரோஷம் மிகுந்த கோபம் அவனுக்கு வரும் என்பது அவள் அறியாதது. அதைவிட அவன் சொன்ன விடயம்?


மாமியார் சொன்னபோதுகூட தாங்கிக்கொள்ள முடிந்தவளால் இதைத் தாங்கவே முடியவில்லை. கணவன் அவளைச் சந்தேகப் படுகிறானா? அந்த ஒற்றைக் கேள்வி அத்தனை நாட்களாய் அவனை நெஞ்சிலும் அவன் மகவை வயிற்றிலும் சுமந்து வாழ்ந்த வாழ்க்கையை நசுக்கிப் பொசுக்கிப் போட்டது!


என்னதான் அவன் மீது மனத்தாங்கல் இருந்தாலும், அவன் காலடிக்கு வந்துவிட்டோம்; இனி எல்லாம் மெல்ல மெல்லச் சரியாகிவிடும் என்கிற ஆறுதல் அவளுக்குள் உண்டாகியிருந்தது. மாமி, தோழியிடம் போலவே முதல் காலடியை நாமே எடுத்து வைப்போம் என்று எண்ணியிருந்தாள். அதைத்தானே உதயனும் சொல்லிக்கொண்டிருந்தான்.


நடந்ததைச் சொன்னால் கணவன் விளங்கிக்கொள்வான்; அவன் சொன்னதை மீறி அம்மா வீட்டை போனது பிழைதான் என்றாலும் மன்னிப்புக் கேட்டுவிடலாம் என்று இருந்தவள் இதை எதிர்பார்க்கவில்லை.


‘என்னைப் பாத்தபிறகும் கோபத்தை பிடிச்சு வச்சிருக்க அவரால ஏலாது’ என்கிற அவளின் பெரும் நம்பிக்கையை ஒரேடியாக நசுக்கி விட்டிருந்தான் சீராளன். அவனது ஆக்ரோஷத்தின் முன்னே சிந்தனைகள் கூட உறைந்துவிட அசையவும் மறந்து அப்படியே அமர்ந்துவிட்டாள் அவள்.


வேக வீதியை ஊடறுத்துக் கிழித்துக்கொண்டு கார் சீறிப் பாய்ந்துகொண்டிருந்தாலும் கண் முன்னே எதிர்காலம் கும்மிருட்டாகத் தோன்றிற்று அவளுக்கு.


அவளின் அசைவற்ற நிலை அவனை அசைத்துப்பார்த்தது. முன்கோபம் என்கிற கூட்டுக்குள் அடைபட்டுக்கொண்டு, அவளோடு கதைத்துவிடு என்று உந்திய மனதின்படி நடக்க இயலாமல், தாய் மூலம் அறிந்தவை நினைவடுக்குகளில் நின்று அவனைக் குமுற வைத்துக்கொண்டிருக்க தடுமாறிக்கொண்டிருந்தவனின் இயலாமையே அவள் மீது கோபமாக வெடித்துவிட்டது என்று தெரியாமலில்லை. என்றாலும், ஆத்திரத்தில் அறிவை இழந்து அவளை நோகடித்துவிட்டானே.


அவனால் காரைச் செலுத்த முடியவில்லை. சிலையாகிவிட்டவளின் கோலம் அவனை சில்லு சில்லாக சிதறடித்துக்கொண்டிருந்தது. அவளிடம் பேசிவிட மனம் விளைந்துகொண்டிருந்தது. காரை மேக் டொனால்ஸ்ஸில் கொண்டுபோய் நிறுத்தினான்.


எதையும் உணராமல் திகைப்பிலேயே கட்டுண்டிருந்தவள், “வா!” என்கிற அழைப்பில்தான், கலைந்து திரும்பினாள். அதற்குள் காரைவிட்டு இறங்கியிருந்தான் அவன்.


‘இந்த மணம் ஒத்து வராதே..’ தன் நிலையைச் சொல்லக்கூட முடியாமல் இறங்கினாள். அழைத்துச் சென்று, ஓரிடத்தில் அவளை அமர்த்திவிட்டு ஆர்டர் கொடுக்க அவன் சென்றுவிட, அவளுக்கு வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
சமாளித்து சமாளித்துப் பார்த்தவள் முடியாமல், ‘ரெஸ்ட் ரூம்’ செல்வதற்கு காட்டப்பட்டிருந்த குறியீட்டைக் கவனித்துவிட்டு அதற்குள் விரைந்தாள்.


‘எங்க போறாள்?’ அவள் மீது ஒரு பார்வையை வைத்திருந்தவன் அவள் பின்னோடு விரைந்தான். ‘வாஷ் பேசன்’ னுக்குள் அவள் ஓங்காளித்து ஓங்காளித்து வாந்தி எடுக்க, பெண்களுக்கான ரெஸ்ட் ரூம் என்பதையும் பொருட்படுத்தாமல் ஓடிப்போய் அவளைப் பற்றிக்கொண்டு, “என்ன ஷர்மி? என்ன செய்யுது?” என்று பதறினான்.


பதில் சொல்லும் நிலையிலேயே அவள் இல்லை. குடலையே வெளியே தள்ளிவிடுவது போல் அவள் எடுத்த வாந்தியில் இவன் நடுங்கியே போனான்.

வயிற்றுக்குள் இருந்த எல்லாவற்றையும் எடுத்து முடித்ததும் வாயைக் கொப்பளித்துக்கொண்டு அந்தச் சுவரிலேயே ஒரு கையை ஊன்றி கண்களை மூடிக்கொண்டாள். தலையைச் சுற்றிக்கொண்டு வர, அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது.


“என்ன செய்யுது? டாக்டர கூப்பிடவா?” பயத்தோடு கேட்டவன், தன்னையே சுமக்க முடியாமல் சோர்ந்து நின்றவளை, தன்னோடு சாய்த்துக்கொள்ள முனைய, துவண்டுகிடந்த கரத்தால் அவனைத் தடுத்துவிட்டு மெல்ல அங்கிருந்து வெளியேறினாள்.


அந்த மறுப்பில் ஒருகணம் அசைவற்று நின்றுவிட்டான் சீராளன். சுருக்கென்று வலித்தது. அவள் காரை நோக்கி நடக்கவும் ஓடிப்போய்க் கதவைத் திறந்துவிட்டான்.


அவள் அமர்ந்ததும் மற்றப்பக்கம் வந்தமர்ந்து அவள் பக்கக் கண்ணாடியை சற்றே இறக்கிவிட்டு, வீசும் காற்றை அவள் முகத்தில் மோதவிட்டான். “இது.. ஏன் இப்படி? ஃபிளைட் பயணம் ஒத்துவரேல்லையோ?” அவன் கவலையோடு விசாரிக்க, இல்லை என்று தலையை மட்டுமே அசைத்தவளுக்கு அந்தத் தலை தனியாகக் கழன்று விழுந்துவிடுமோ என்று பயமாய் போயிற்று.


சீட்டிலேயே சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். “நான் இங்கேயே இருக்கிறன், நீங்க சாப்பிட்டு வாங்கோ.” மெல்ல முணுமுணுத்தாள்.


அவளின் விலகல் அவனை வருத்தியது. முகம் பார்க்கக் கூட மறுக்கிறாளே. ஒரு பெருமூச்சுடன் இறங்கிச்சென்று ஆர்டர் கொடுத்த உணவை வாங்கிக்கொண்டு ஓடிவந்தான்.


“நெடுக இப்படியா?” அவள் ஒதுங்கி நிற்க முயன்றாலும் அவன் விடத் தயாராயில்லை. அவளைப் பார்க்காதவரையில் எப்படியோ, பார்த்தபிறகு அவனது கோபங்கள், குறைகள் அத்தனையும் மெல்ல மெல்லத் தவிடுபொடியாகிக்கொண்டிருந்தன.


“அது முந்தித்தான். குடல் வெளில வந்திடும் மாதிரி வரும். இப்ப, இதெல்லாம் ஒன்றுமே இல்ல. அந்த மணம் எனக்கு ஒத்துவரேல்ல, அதுதான்.” என்று வெகு சாதாரணமாய் சொல்ல, ‘இது ஒண்டுமில்லையா? இதுவே ஒன்றுமில்லை என்றால் முந்தி..’ நினைக்கவே முடியாமல் திகைத்தான் அவன்.


‘இப்படி தினமும் கஷ்டப்பட்டவளையா தண்டித்தோம்? எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்காமல் விட்டுவிட்டோமே. அவள் நடந்துகொண்டது பிழையாகவே இருந்தாலும் வேறு முறையில் அணுகியிருக்க வேண்டுமோ’ குற்ற உணர்வோடு அவன் பார்க்க, அவளோ கதவில் களைத்துப்போய் நிராதரவாகச் சாய்ந்திருந்தாள்.


கையணைப்பில் வைத்திருந்து ஆறுதலாய் அவளை வருடிக் கொடுத்திருக்க வேண்டிய தருணத்தில், பார்வையாளனாக மட்டுமே நிற்பதை எண்ணி நெஞ்சுக்குள் வலி எழுந்தது. ‘என்னட்ட வா’ என்று இழுத்து மார்போடு அணைத்துக்கொள்ள வாயும் கையும் வராமல் தவிப்போடு அவளையே பார்த்திருந்தான்.


திடீரென்று அவளது கைபேசி சத்தமிட்டது. அதைக் கணவன் தூக்கி எறிந்த காட்சி கண்ணில் வந்துபோக மூடியிருந்த இமைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் துளிகள் கன்னத்தில் கோடு வரைந்தபடி ஓடின.


‘சே! என்ன வேலை பார்த்தோம்!’ என்று அவனுக்குத்தான் ஆகிப்போனது. பின்புறம் எட்டிக் கீழே கிடந்த ஃபோனை எடுத்துப் பார்த்தான். சயந்தன் அழைத்துக்கொண்டிருந்தான். ஏற்கனவே பலமுறை அழைத்திருந்தான்.


“சயந்தன்.” என்றபடி ஃபோனை அவளிடம் கொடுக்க அவள் வாங்கவில்லை. உதட்டைக் கடித்தான் சீராளன். மீண்டும் அவன் அழைக்க, மைக்கை ஆன் பண்ணி, “கதை.” என்று நீட்டினான்.


“ஷர்மி! ஒரு பிரச்சனையும் இல்லையே? ஏன் ஃபோன் கட்டாயிட்டுது. எங்க உன்ர மனுசன்?” இந்தப்புறம் அழைப்பு ஏற்கப்பட்டதுமே கேள்விகளை வேகமாக அடுக்கினான் சயந்தன்.


இனி கதைக்காமல் இருக்க முடியாதே! “ஒரு பிரச்சனையும் இல்லை அண்ணா.” பெரும் சிரமப்பட்டு உதடுகளை அசைத்துச் சொன்னாள்.


“ஒண்டும் இல்லத்தானே? உதயன் சொன்னான் கதைச்சுக்கொண்டு இருக்கேக்க ஃபோன் கட்டாயிட்டதாம் எண்டு.” முழுதாகச் சமாதானமும் ஆகாமல், மேலே எப்படிக் கேட்பது என்றும் தெரியாமல், பதறிக்கொண்டு மேலோட்டமாய் கேட்பதுபோல் கேட்கிறான் என்று உணர்ந்தவளுக்கு அவன் பாசத்தில் மீண்டும் கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.


“அது சத்தி(வாந்தி) வந்தது அண்ணா. அதுதான்.. வேற ஒண்டுமில்லை.”


“ஓ.. அதுதானா! நான் பயந்தே போனன். இப்ப பரவாயில்லையா?”


“ஓம் அண்ணா. இவர் மேக் டொனால்ட்ஸ்க்கு கூட்டிக்கொண்டு போனவர்; சாப்பிடுவம் எண்டு. அது ஒத்துக்கொள்ளேல்ல எனக்கு. அதுதான் காருக்க ஓடி வந்திட்டன்.” தெம்பை வரவழைத்துக்கொண்டு கோர்வையாக அவள் சொல்ல, அருகில் கேட்டிருந்தவன் உள்ளுக்குள் குறுக்கிக்கொண்டிருந்தான்.


“ஏய் லூசு. அந்த மணம் ஒத்துவராது எண்டு உனக்கு ஏற்கனவே தெரியும் எல்லா. பிறகும் ஏன் போனாய்? சும்மா எங்களிட்ட மட்டும் தொட்டத்துக்கும் ‘இது என்ர புருசன்ற பெயர் சொல்ல வந்த பிள்ளை. நான் கவனமா பெத்துக் குடுக்கோணும்’ எண்டு ஆயிரம் கத சொல்லுவ, நீ கவனமா இருக்க மாட்டியா?”


அருகில் நின்ற உதயன் அதட்டவும், “சரி விடுடா. சீராளன் கேக்க அவளுக்கு வேண்டாம் எண்டு சொல்ல மனமில்லாம இருந்திருக்கும்.” என்று சயந்தன் சொல்வதும் கேட்டது.


உதயன் கோபப்பட்டதும் அவள் மேலிருக்கும் அக்கறையில்தான். தமையன் அவளுக்காகப் பேசியதும் பாசத்தில்தான். அருகிலிருப்பவனுக்கு மட்டும்தான் இதெல்லாம் இல்லாமல் போயிற்று!


“சீராளனிட்ட சொல்லி கொஞ்சம் இதமான சூட்டில் சுடுதண்ணி வாங்கிக் குடி. வீட்டை போய் நல்லா நித்திரை கொண்டு எழும்ப, எல்லாம் சரியா வந்திடும். எங்க சீராளன்?அவரிட்ட குடு. அப்போதையும் கதைக்கேல்ல. அது மரியாதையில்ல.” என்று அவன் சொல்லவும், அதுவரை அவள் புறமாகப் பிடித்திருந்த ஃபோனை சீராளன் தன் புறம் கொண்டுவர, வேகமாக கரத்தைப் பிடித்துத் தடுத்து, “அவர் சுடுதண்ணி வாங்கப் போய்ட்டார் அண்ணா. நான் காருக்க இருக்கிறன்.” என்றவளை, சரக்கென்று திரும்பிப் பார்த்தான் சீராளன்.


இத்தனை நேரம் அவள் சொன்ன பொய் குன்ற வைத்தது என்றால் இப்போது சொன்ன பொய் சுட்டது. ஆர்ப்பாட்டமில்லாமல், கத்திச் சண்டையிடாமல் தன் கோபத்தைக் காட்டும் மனைவியின் மனநிலை சற்றே அச்சமூட்டியது அவனுக்கு.


“சரி நான் பிறகு எடுத்து அவரோட கதைக்கிறேன்.”


“இல்லை அண்ணா. எடுக்காத. நான் நேரமிருக்கேக்க எடுத்துக் கதைக்கிறன். அதுவரைக்கும் நீங்க யாரும் எனக்கு எடுக்க வேண்டாம்.” அவசரமாக இடைமறித்துச் சொன்னாள் அவள்.


“ஏன்? என்ன பிரச்சனை? மறைக்காம சொல்லு ஷர்மி.” மீண்டும் அவன் ஆரம்பிக்க, “என்ன நீ எப்ப பாத்தாலும் என்ன பிரச்சனை என்ன பிரச்சனை எண்டு கேக்கிறாய்? அப்படி என்ன வரக்கிடக்கு? களைச்சுப்போய் வந்தவள் கொஞ்சம் ஆறி இருக்கிறேல்லையா?” சட்டென்று மூண்ட கோபத்தில் படபடத்தாள்.


“சரிசரி! நான் இனி எடுக்கேல்ல. நீயே எடு என்ன? நீ சந்தோசமா இருந்தா காணும் எங்களுக்கு.” சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டு வைத்தான் அவன்.


பிரிந்தவர் கூடினால் என்னாகும் என்று புதிதாய்க் கல்யாணமான தமையன் எண்ணுகிறான் என்று எண்ணியவளுக்கு எல்லாமே மரத்துப்போனது போலாயிற்று!


காரை இயக்கும் எண்ணமே இல்லாமல் அமர்ந்திருந்தான் சீராளன். அவள் அவனை உணரவே இல்லை. ஏன் கார் அந்த இடத்திலேயே நகராமல் நிற்பதைக் கூட கிரகிக்க முடியாமல் உடலும் உள்ளமும் துவண்டுபோக அப்படியே கண்களை மூடிக்கொண்டாள். உயிரைக் குடையும் இந்த வேதனையை எப்படிக் கடந்து வருவதென்று தெரியவில்லை. வெட்க ரோசம் இல்லாமல் தலை சாய்க்க அவன் தோள் வேண்டுமென்றுதான் மனம் இன்னமும் ஏங்கியது.


சீராளனுக்கு இந்தச் சிக்கலை எப்படிச் சீர் செய்வது என்றே தெரியவில்லை. கல்யாணம் கட்டி ஒருவாரம் சந்தோசமாய் உடலும் உயிருமாய் வாழ்ந்துவிட்டு வந்துவிட்டான். பிறகு? அவனுக்கு எதுவுமே தெரியாது. தாயாகிவிட்டாள் என்று தெரிந்ததும் அப்பா ஆகிவிட்டோம் என்று சந்தோசப்பட்டான். மனைவியின் கஷ்டத்தை அவனிடம் அவள் உட்பட யாரும் சொல்லவும் இல்லை; அவனும் அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. பலகீனப்பட்டிருக்கிறாள் என்று டாக்டர் சொன்னதும் வைத்தியம் பார்த்தபிறகு எப்படி இருக்கிறாள் என்று கேட்டபோது, ‘அவளுக்கு என்ன ஆளாளுக்கு நல்லா பாக்கிறோம்; குடுத்து வச்சவள்’ என்று அன்னை சொன்னபோது, கர்வமாய் மட்டுமே உணர்ந்தான். ‘அவளுக்கென்ன நல்லா இருக்கிறாள்’ என்கிற வார்த்தை அவளைக் கட்டியவனுக்கான கௌரவம் தானே. அந்தளவு தான் அவனளவில்.


அவளோ தினம் தினம் இப்படி கஷ்டப் பட்டிருக்கிறாள். வயிற்றுப் பிள்ளையோடு இருப்பவளின் சிரமம் பற்றி அவன் யோசிக்கவே இல்லை.


மெல்லத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “சாப்பிடு.” என்று கொடுக்க, அவளோ அவன் கையை அவன் பக்கமாகவே தள்ளிவிட்டாள். “கிட்ட கொண்டுவராதீங்கோ, திரும்ப சத்தி வரும்.”


வேகமாக எடுத்துவிட்டான். அவள் வாந்தி எடுக்கும் காட்சியே அவனுக்குள் திகிலைக் கிளப்பியது.


“ஃபிளைட்ல ஏதாவது சாப்பிட்டியா?”


இல்லையென்று தலையசைத்தாள்.


“ஏன்?” விடாமல் அவன் கேட்கவும், “என்ன ஏன்? இங்க வந்தமாதிரி அங்க வாந்தி வந்தாலும் எண்டுதான்.” அவளையும் மீறிச் சிடுசிடுத்தாள்.


முடியாமல் இருக்கும் நேரத்தில் என்ன இது ஆளாளுக்கு நொய் நொய் என்று சினம்தான் வந்தது. அவனும் மனைவியின் நிலை உணர்ந்து தணிந்து போனான்.


“வெறும் வயித்தோட எல்லோ இருக்கிறாய். இதுவும் வேணாம் எண்டா, வேற என்ன வாங்கித் தர?” உண்மையாகவே அவளுக்கு என்ன கொடுக்கலாம் என்று அவனுக்குத் தெரியவே இல்லை. மனதளவில் குன்றினான்.


“முடிஞ்சா கொஞ்சம் இளம் சூட்டில சுடுதண்ணி வாங்கித் தாங்கோ. போதும்.” என்றாள்.


ஆழமாக அடிவாங்கினான் அவன். காலையில் சாப்பிடாததே அவனுக்கு வயிறு பசியில் கத்திக்கொண்டு கிடக்கிறது. இங்கே அவள்?


வேகமாய்ச் சென்று அவள் கேட்டதை வாங்கிவந்து கொடுத்தான். இரண்டுவாய் பருகிவிட்டு, “நீங்க சாப்பிடேல்லை?” என்று கேட்டாள்.


இல்லை என்று தலையசைத்தான். தான் இதை இத்தனை நாட்களாய்க் கேட்காமல் போனோமே என்றிருந்தது. அவள் மட்டுமா அவனுடைய குழந்தையும் அல்லவா. கண்கள் தானாக அவள் வயிற்றுக்குத் தாவ, அந்த வயிற்றை அள்ளி அணைக்க வேண்டும் போலிருந்தது. அத்தனை நேரமும் கோபம் ஆக்கிரமித்திருந்ததில் பொங்காத உணர்வுகள் இப்போது பொங்கின. ஏக்கத்தோடு மனைவியைப் பார்த்தான். அவள் எங்கோ சூனியத்தை வெறித்திருந்தாள்.


அவன் அருகில் இருக்கையில் செம்மை பூசியே இருக்கும் கன்னங்கள் ஒட்டிக் கிடந்தன. நாணமும் ஆசையும் போட்டிபோடும் விழிகளில் ஒளிர்வே இல்லை. சிரிப்பை மட்டுமே சிந்தும் இதழ்கள் வறண்டு காய்ந்து கிடந்தது. என்ன வாழ்க்கையை அவளுக்குக் கொடுத்திருக்கிறான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இங்கதான் மணக்கும், வெளில நிண்டு சாப்பிட்டு வாங்கோ.” என்று அவள் சொல்ல, பசி தெரிந்தாலும் சாப்பிடும் எண்ணமே இல்லை அவனுக்கு. ஆனால் இன்று ஒருநாள் சாப்பிடாமல் இருந்தால் அவன் செய்தது எல்லாம் சரியாகிவிடுமா? இத்தனை நாட்களும் அவள் சாப்பிட முடியாமல் சிரமப்பட அவன் நன்றாகத்தானே வயிறு முட்ட விழுங்கினான்.


இறங்கிச் சென்று சாப்பிட்டான். பசிக்கு என்பதை விட, ‘ஏன் சாப்பிடேல்லை?’ என்று அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லும் தெம்பற்று விழுங்கினான். அரைவாசிக்குமேல் அதுவும் முடியாமல் எறிந்துவிட்டு வந்தான்.


வீட்டுக்கு வந்ததும், மெல்லச் சென்று குளித்துவிட்டு வந்து, சமையலறைக்குள் அவள் நுழைந்து பாத்திரங்களைத் தேடவும், ‘எப்பதான் என்னோட கதைப்பா?’ என்று ஏக்கத்துடன் அவளையே விழிகளால் தொடர்ந்துகொண்டிருந்தவன், ‘களைப்போட இப்ப சமைக்கவேணுமா?’ என்று நாக்கு நுனிவரை எழுந்த கேள்வியை அடக்கிக்கொண்டான்.


அவளுக்குப் பிடித்தமாதிரி எதையாவது செய்தால் சாப்பிடுவாளே என்று தோன்றவும் தானும் சேர்ந்துகொண்டான்.


“என்ன சமைக்கப்போறாய்?” அவள் முகம் கொடுக்காதபோதும் அவன் மெல்ல மெல்ல பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தான்.


“ஒரு சோறும் ரசமும் மட்டும்தான்.”


அவள் பொருட்களைத்தேட, வேகமாக வெங்காயத்தை எடுத்து தோலை உரித்து வெட்டிக்கொடுத்தான். உள்ளியின் தோலை அவள் உரிக்க, அதனை உரலில் இடித்துக்கொடுத்தான்.


“வேற என்ன வேணும்?”


“புளி ஊறப்போடவேணும். தக்காளிப்பழம்?” அவள் கேட்டவற்றை எல்லாம் செய்து கொடுத்தான். ரசத்தூளுக்கான பொருட்களைத் தேடி அவள் எடுக்க, அவற்றை அடித்துக்கொடுத்தான். அடுப்பில் ரசத்துக்கான வேலையை அவள் ஆரம்பிக்க, ‘பசுமதி’ அரிசியை அவர்கள் இருவருக்கும் அளவாக எடுத்து, கழுவி ரைஸ்குக்கரில் போட்டு, உப்புமிட்டு வேக விட்டான். இருபது நிமிடங்களில் சுடச்சுட ரசமும் சோறும் தயாராயிருந்தது. மனைவியின் கைமணத்தில் ரசத்தின் வாசனை மூக்கை நிறைக்க, உமிழ்நீர் சுரந்தது அவனுக்கு.


இவ்வளவும் நடக்கும்போதும், ஏதாவது கதைப்பாள், கேட்பாள் என்று அவளையே கவனித்திருக்க, “சாப்பிடுறீங்களா?” என்று மட்டும்தான் கேட்டாள்.


ஏமாற்றம் நெஞ்சைக் கவ்வினாலும், எத்தனையோ நாட்களுக்குப் பிறகு அவள் கையால் கிடைக்கும் உணவைத் தவறவிட மனமில்லை. “உனக்கும் சேர்த்து போட்டுக்கொண்டு வா.” என்றான்.


அவனுக்குத் தட்டு நிறைய உணவைப் போட்டுக் கொடுத்துவிட்டு, எண்ணி நான்கு சோறுதான் வரும்போலிருந்த அளவில் சோற்றோடு ரசமும் வைத்து, ஊரிலிருந்து கொண்டுவந்த ஊறுகாய் மட்டுமே சேர்த்து அவள் சாப்பிட, “இது என்னத்த காணும்? இன்னும் கொஞ்சம் போடு!” என்று சோற்றைப்போட அவன் முயல, “இல்ல காணும்!” என்று கையைக் குறுக்கே கொணர்ந்து தடுத்துவிட்டாள்.


அவ்வளவுதான் அவனோடு அவள் பேசியவை. சாப்பிட்டுவிட்டுச் சென்று படுத்துக்கொண்டாள்.


இது அவளில்லை! இந்த அமைதி அவள் இயல்பில்லை!


மாற்றியே ஆகவேண்டும்! அவளின் அந்த அமைதி அவனுக்குள் கிலியைத்தான் பரப்பிக் கொண்டிருந்தது. கதைக்கவேண்டிய நேரத்தில் கதைக்கத் தவறிய தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்துகொண்டிருந்தான். சின்ன விஷயமாக முடித்திருக்க வேண்டிய ஒன்றை அவனும் சேர்ந்து பெரிதாக்கி, பெரிய மனவிரிசலில் கொண்டுவந்து விட்டுவிட்டானே!


நன்றாக உறங்கிப் போனவளையே பார்த்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் சீராளன்.


அங்கே அதே அறையிலேயே அவனோடு திருமணத்தில் நின்றவள் ஃபோட்டோவைப் பார்த்தான். அதில் இருப்பவள் தங்கை என்று கூடிச் சொல்லமுடியாத அளவில் சிதைந்து போயிருந்தது அவள் தோற்றம். இதுதானா அவன் கொடுத்த திருமணப் பரிசு. ஊரில் யாரையாவது கட்டியிருக்க சந்தோசமாக வாழ்ந்திருப்பாளோ? நினைக்காமல் இருக்கமுடியவில்லை.


அடுத்த கணமே அவளருகில் அவனையன்றி இன்னொருவனை நினைப்பில் கூட நிறுத்த முடியாமல், அவன்தான் ஊரில் இருக்கும் ஒருவனாகவும் மனக்கண் முன்னே வந்து நின்றான்.


அவள் எழுந்த பிறகும், ஏதாவது கதைப்பாள் என்று அவன் எதிர்பார்க்க, அவளோ ஒன்றும் சொல்லவே இல்லை. தன் பாட்டுக்கு முகம் கழுவிக்கொண்டுவந்து சோபாவில் சென்று முடங்கிக்கொண்டாள்.


பயணக்களையா அல்லது உடல்நிலை சரியில்லையா கைகளை கன்னத்துக்குக் கீழே கொடுத்து கால்களை முடக்கிக்கொண்டு கண்களை மூடியிருந்தாள். உறங்கவில்லை என்பதை மூடியிருந்த விழிகளுக்குள் ஓடித்திருந்த கருமணிகள் உணர்த்தின. அவன் முகம் பார்க்கப் பிடிக்கவில்லையோ?


சொல்லத்தான் வந்தாள்! மனம் முழுக்க ஓராயிரம் சோகக் கதைகளை, மனவருத்தங்களை, கண்ணீரை, கவலையை, இப்படி எல்லாவற்றையும் சுமந்துகொண்டுதான் வந்தாள். அவன் காலடியில் அத்தனையையும் இறக்கிவிட்டு ஒருமூச்சு அழுதுவிட்டு, மன்னிப்பைக் கேட்டு சுமூகமாகிவிட வேண்டும் என்கிற பேராசையோடுதான் வந்தாள். கட்டிய கணவனிடம் என்ன கௌரவம் வேண்டிக் கிடக்கிறதாம்? அவனில்லாமல் அவளால் வாழவே முடியாது என்கிறபோது சரணடைந்துவிடுவதில் என்ன தவறு என்றுதான் வந்தாள்!


ஆனால், நண்பனோடு இனி நீ கதைக்கக்கூடாது என்று அவன் சொன்ன ஒற்றை வார்த்தை அத்தனை பாரங்களையும் பல மடங்காக்கி அவள் மூச்சுக்குழாயை அடைத்தபோது, நானாக இறக்கி வைப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டாள்.


என்னிடம் ஒரு கேள்வி கேட்கக் கூடவா உன்னால் முடியவில்லை. என்ன நடந்தது என்று விசாரிக்கவேண்டாம்! ஏன் இப்படிச் செய்தாய் என்று கூடவா கேட்க முடியவில்லை. தூரத்தில் இருந்தபோதாவது பரவாயில்லை, உன்னருகில் வந்த பிறகுமா இந்தக் கோபம்? விலகல்?


என்னை அருகில் வைத்துக்கொண்டு யாரோபோல தள்ளி நிற்க உன்னால் முடிகிறதுதானே?


மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் முகத்தில் எதுவுமே தெரியவில்லை. நிர்சலனமாய்ச் சாய்ந்திருந்தாள். அவனும் அவளும் அப்படியே இருக்கலாம். பொழுது இருக்குமா? இரவை எட்டியது.


உணவை முடித்துக்கொண்டு கட்டிலின் ஒரு பக்கத்தில் அவள் படுத்துக்கொள்ள, இன்னோர் ஓரத்தில் படுக்க முடியவில்லை அவனால். ஒரு வாரம்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். அந்த ஒரு வாரம் தானே ஓராயிரம் நினைவுகளைத் தந்தது. ஓராயிரம் சந்தோஷங்களைத் தந்தது. அந்த நினைவுகளுக்கு மத்தியில் இந்த நிஜம் கசந்து வழிந்தது. யாரோபோல் அவனால் ஒதுங்கி இருக்க முடியவில்லை. அவளின் அமைதி பொறுக்க முடியவில்லை. இரும்புப் பெட்டகம் போல் தன்னைத்தானே பூட்டிக்கொண்டு இருப்பவளைக் காணச் சகிக்கவில்லை.


உன் மனதைச் சொல்லு; அதிலிருக்கும் அத்தனை குறை நிறைகளையும் சொல்லு; உனக்கு நானிருக்கிறேன் என்று காட்டிவிட மனம் உந்த, அதற்குமேல் முடியாமல் எழுந்துவந்து அவள் படுத்திருந்த பக்கம் அமர்ந்தான்.


அதை எதிர்பாராதவள் திகைத்து அவனைப் பார்க்க, அவளின் வயிற்றை நடுங்கும் கரங்களால் மெல்லத் தடவினான்.


‘இத்தனை நேரமாய் என்னைத் தேடவில்லையேப்பா நீ?’ அவள் மனதைப்போலவே பிள்ளையும் உணர்ந்தது போலும், அவன் கையை எட்டி உதைத்தது. ஆனந்த அதிர்ச்சி தாக்க மனைவியைப் பார்த்தான். அகன்ற விழிகளால் அதுவரை அவனையே பார்த்துக்கொண்டு இருந்தவள் கண்களை படக்கென்று இறுக்கி மூடிக்கொள்ள காது மடல்களை நனைத்துக்கொண்டு ஓடியது கண்ணீர்.


அவன் விழிகளிலும் கசிவு. அவளை நிமிர்த்தி வயிற்றில் உதடுகளைப் பதித்தவன் குழந்தையோடு குழந்தையாக அந்த வயிற்றிலேயே தஞ்சமானான்.


“என்ன பிழை செய்தனான் எண்டு இன்னும் எனக்கு வடிவாத் தெரியேல்ல. ஆனாலும் குற்ற உணர்ச்சி என்னை குத்துது. நீ எப்படி இருக்கிறாய் எண்டு யோசிக்காம முட்டாள் தனமாய் நடந்திட்டேனே எண்டு கொல்லுது. எது நடந்து இருந்தாலும் நான் உன்னோட கதைச்சிருக்க வேணும். சந்தோசமா சிட்டுக்குருவி மாதிரி பாடித் திரிஞ்சவளை பிடிச்சு சிறகை வெட்டி அடச்சு வச்சமாதிரியே இருக்கு உன்ன பாக்க. தெரிஞ்சோ தெரியாமலோ நான் செய்த எல்லா பிழைக்கும் என்ன மன்னிச்சுடு. தயவு செய்து இப்படி இருக்காத. எனக்கு என்ர பழைய ஷர்மி வேணும். என்னைக் கண்டதும் கருமம் கருமம் எண்டு கண்ண மூடின அதே துள்ளலான ஷர்மி வேணும்.” என்று அவளின் கரத்தை அவன் பற்றப் போக, சட்டென்று விலகி அமர்ந்தாள் அவள்.


நெஞ்சைப் பிளந்துகொண்டு அழுகை வெடித்தது அவளுக்கு!


“ஐயோ அழாத. பிள்ளையை வச்சுக்கொண்டு தயவுசெய்த அழாத ஷர்மி! பயமாயிருக்கு எனக்கு.” அவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று அவன் அஞ்ச, அதைக் காதிலேயே விழுத்தாமல் அவனிடமிருந்து விலகிநின்று கேட்ட முதல் கேள்வி, “என்ர வயித்தில இருக்கிற பிள்ளைல உங்களுக்கு ஏதாவது சந்தேகமா?” என்பதுதான்.


ஒற்றைக் கணத்தில் உச்சிக்கு ஏறியது அவன் கோபம்.


“அறைஞ்சன் எண்டா! என்னடி கதை கதைக்கிறாய்?” உச்சபட்ச சினத்தில் சீறினான் சீராளன். சட்டென்று எழுந்துவிட்டான். ஆத்திரத்தில் தேகமெல்லாம் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் பிள்ளையைப் பற்றி என்ன கேள்வி கேட்டுவிட்டாள்?


உறுமிக்கொண்டு நின்றவனைக்கண்டு உள்ளே குளிர் பிறந்தாலும், “பிறகு என்னத்துக்கு உதயனோட கதைக்க வேண்டாம் எண்டு சொன்னீங்க?” என்று கேட்காமல் விடவில்லை அவள்.


“உனக்கென்ன விசரா பிடிச்சிருக்கு? எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறாய்?” அப்போதும் கோபம் ஆறவில்லை அவனுக்கு.
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom