You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உலகின் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டரான குகேஷ்!

ரோசி கஜன்

Administrator
Staff member








உலகின் இரண்டாவது மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியை சென்னையைச் சேர்ந்த டி குகேஷ் பெற்றிருக்கிறார்.

சென்னை வேலம்மாள் வித்யாலயா பாடசாலையில் படிக்கும் இவருக்கு வயது 12 .


உலகில் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியவர்களில் மிகவும் இளையவர்களில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜகின். இருந்தபோதும் இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்தான்.

தெலுங்குப் பின்னணியைக் கொண்ட டாக்டர் ரஜினிகாந்த் ஒரு காது - மூக்கு - தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர். இவரது மனைவி பத்மா குமாரியும் ஒரு மருத்துவர்தான். இந்தத் தம்பதியின் ஒரே மகன்தான் குகேஷ்.


"நானும் என் மனைவியும் அவ்வப்போது செஸ் விளையாடிக்கொண்டிருப்போம். மூன்றரை வயதாகும்போதிலிருந்து குகேஷ் அதைக் கவனிப்பான். அதற்குப் பிறகு எங்கள் உறவினரான தினேஷுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான். அப்படித்தான் செஸ் மீது அவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது" என்கிறார் குகேஷின் தந்தை.

7 வயதிலேயே போட்டிகளில் ஆட ஆரம்பித்து ரேட்டிங் போட்டிகளிலும் கலந்துகொள்ள ஆரம்பித்த குகேஷ், 2013 ஆகஸ்டில் 1291 புள்ளிகளுடன் தரவரிசையைப் பெற்றிருக்கிறார். பின் 2015ல் சிங்கப்பூரில் நடந்த 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்குபற்றி ‘ காண்டிட் மாஸ்டர்’ பட்டத்தை வென்றிருக்கிறார்.

செஸ்ஸைப் பொறுத்தவரை, காண்டிட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைவதற்கு பல கட்டங்களைக் கடந்தாக வேண்டும். அதாவது, இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை அடைய மூன்று கட்டங்களையும் கடக்க வேண்டும். மொத்தமாக 2500 தரவரிசைப் புள்ளிகளையும் பெற வேண்டும்.


இந்தக் கடினமான பயணத்தில் படிப்படியாக, உறுதியாக முன்னேறி 2017 அக்டோபரில் மலேசியாவில் நடந்த போட்டியில் பங்கேற்று இன்டர்நேஷனல் நார்ம் முதல் கட்டத்தைத் தாண்டியுள்ளார். அதற்குப் பிறகு 2018 ஜனவரியில் மாஸ்கோவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் அதே ஆண்டு மார்ச்சில் ஃபிரான்சில் நடந்த போட்டியில் மூன்றாவது கட்டத்தையும் தாண்டி 2400 தகுதிப் புள்ளிகளையும் பெற்று இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றிருக்கிறார்..


2018ல் பாங்காக்கில் நடந்த போட்டியில் கிராண்ட் மாஸ்ட்ர் நார்ம் முதல் கட்டத்தையும் அதே ஆண்டு டிசம்பரில் செர்பியாவில் நடந்த போட்டியில் இரண்டாவது கட்டத்தையும் கடந்த குகேஷ், உலகின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப் படைத்துவிட முடியும் என்றே பலரும் நினைத்தார்கள்.

மிக இள வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை எடுத்த செர்ஜி கர்ஜகின், 12 வயது 7 மாதங்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். அந்தச் சாதனையை குகேஷ் முறியடித்திருக்க வேண்டுமானால் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதிக்குள் கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். டிசம்பரில் நடந்த Sunway Sitges International போட்டியில் வெற்றிபெற்றிருந்தால், இந்தச் சாதனையைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அந்தப் போட்டி வெற்றி - தோல்வியின்றி முடிவடைந்தது.

ஆனால் மனமுடைந்துவிடாமல் தொடர்ந்து விளையாடிய குகேஷ், தில்லி இன்டர்நேஷனல் ஓடன் ஜிஎம் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் நார்மின் மூன்றாவது கட்டத்தைத் தாண்டி, இந்தியாவின் மிக இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையைப்படைத்துள்ளார். . இதற்கு முன்பாகக் கடந்த ஆண்டில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இந்த சாதனையைப் படைத்திருந்தார் . தற்போது அதனை குகேஷ் முறியடித்திருக்கிறார் .

பிரக்ஞானந்தா 12 வயது பத்து மாதங்களில் அந்த சாதனையைச் செய்தார் . தற்போது குகேஷ் 12 வயது 7 மாதங்களில் இந்த இலக்கை எட்டியிருக்கிறார் .

கடந்த 16 மாதங்களில் 6 நார்ம்களை, அதாவது இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்காக மூன்று நார்ம்களையும் கடந்திருக்கும் குகேஷ், இந்தக் காலகட்டத்தில் 2323 புள்ளிகளிலிருந்து தற்போது 2512 புள்ளிகளை எட்டியிருக்கிறார் . கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை 243 ஆட்டங்களை ஆடியிருக்கிறார் .


அதோடு, 2015வரை குகேஷ்தான் பள்ளியிலேயே முதல் மாணவன்.



ஆர்வம் இனம் காணப்பட்டு இலக்குடன் கூடிய தகுந்த முயற்சியும் எடுப்பின் சாதனையை எட்டிப் பிடித்துவிடலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் .


மேலும் மேலும் வளர்ந்து கனவுகள் ஒவ்வொன்றும் நனவாகிட வாழ்த்துகிறோம்!
 
Top Bottom