You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'ஓரியோ சீஸ் கேக்' - ரோசி கஜன்- இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
எனக்கு ஒரு ஆறேழு வயதிலிருந்தே சமையலில் தனிப்பட்ட ஈடுபாடுண்டு! அதற்கென்று வீட்டிலிருக்கையில் அன்றாட சமையல் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தேன் என்றெல்லாம் இல்லை; பலகாரவகைகள் செய்வது என்றால் முதல் ஆளாக நிற்பேன். திருமணத்தின் பின்னரோ விதம் விதமாக, அதுவும் நினைத்ததும் செய்துவிடுவேன். எல்லா நாட்டு உணவுவகைகள், பலகார வகைகள் எதையும் விட்டு வைக்க மாட்டேன்.ஆனால் என்ன, செய்முறையில் சொல்லும் அளவுகளைப் பெரும்பாலும் கவனமெடுப்பது குறைவே. அண்ணளவாகத்தான் போடுவேன் . மிகச் சிலசமயங்களில் சறுக்குவதும் உண்டு . நினைவில் நிக்கும் வகையில் ஏற்பட்ட சறுக்கல்கள் என்றால் இரண்டைக்குறிப்பிடலாம். ஒன்று அப்பம். இப்ப சுவையான அப்பம் செய்வேன். எப்படியென்று இன்னொருமுறை பகிர்ந்து கொள்கிறேன்.

அடுத்து சீனி அரியதரம். அம்மா மிகச் சுவையாக மென்மையாக இதைச் செய்வார் . நான் விரும்பிச் சாப்பிடுவேன். எத்தனையோ தடவைகள் செய்து பார்த்துவிட்டேன் அதே மென்மையோடு வரமாட்டுதாம். பார்ப்போமே! நானும் அவ்வளவு இலேசில் பின்வாங்கும் ஆளில்லை. .

இப்போதெல்லாம் இணையத்தில் தட்டினால் சமையல் செய்முறைகள் அடுக்கடுக்காய் வந்து விழும். இருந்தும், நாம் செய்து பார்த்து அதை இலகுவாகச் சொல்கையில் சிலருக்குப் பயன் கிடைக்கலாம் . அதனடிப்படையில் இந்த இதழில் 'ஓரியோ சீஸ் கேக்' செய்முறை சொல்லப் போகிறேன். நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

1547579664401.png

தேவையான பொருட்கள்:



கிரீம் சீஸ் 400g

whipped cream 500 ml

மாஸ்மலோ 250

டார்க் சொக்லேட் 250g

ஓரியோ பிஸ்கிட்ஸ் 300



செய்முறை:

பிஸ்கட்டுகளை இரண்டு தேக்கரண்டியளவு மாஜரின் இட்டு நன்றாக அரைத்து எடுங்கள்.(உருக்கிய மாஜரின்)

ஒரு பொலித்தீன் பையினுள் போட்டு உங்கள் பூரிக்கட்டையால் தட்டியும் நொருக்கலாம். எது கிடைக்குதோ அதனால் நொருக்கி எடுங்கள். முடிவில் அது நீங்கள் சீஸ் கேக்கை ஊற்றப்போகும் தட்டில் இட்டுத் தட்டக் கூடியளவில் வந்தால் சரி. ஓரியோ கிரீமும் மாஜரினும் சேர்ந்து மிகச் சாதுவான பசைபோல தட்டில் தட்டுப்படும். நன்றாக அழுத்தித் தட்டி எடுத்து வையுங்கள்.



அதன்பின், whipped கிரீமை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.(இதில் அடிக்கிறீர்களோ அப்பத்திரத்தில் ஈரப்பசையில்லாது பார்த்துக்கொள்ளுங்கள் ) Hand mixer பாவிக்கலாம் . நன்றாக அடித்தபின்னர் அப்படியே தலைகீழாகப் பிடித்தால் கிரீம் ஒட்டி நிற்கும். இந்தப் பதத்தில் சீஸ் சேர்த்து நன்றாக இரு நிமிடங்கள் அடியுங்கள்.



அதேநேரம், மைக்ரோவேவ் பாவனைக்குரிய பாத்திரமொன்றில் இலேசாக மாஜரின் பூசி(ஒட்டாதிருக்க)மாஸ்மலோவை இட்டு, மேலாகச் சிறிதளவு நீரைத் தெளித்து ஒரு நிமிடம் வையுங்கள். உருகி வரும். எடுத்து கரண்டி ஒன்றினால் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். உருகாது இருந்தால் இன்னுமொரு அரை நிமிடம் வையுங்கள். நன்றாகக் கலந்து எடுத்து வைத்துவிட்டு, இதேபோல டார்க் சொக்லேட்டையும் சிறு துண்டுகளாக்கி உருக்கி எடுங்கள். மைரோவேவ் இல்லாதவர்கள் கொதிநீரினுள் ஒரு சில்வர் பாத்திரத்தை வைத்து அதனுள் இவற்றை இட்டும் உருக்கலாம்.



பின்னர், கிரீம் + சீஸ் கலவையினுள் மாஸ்மலோவைக் கலந்து ஒரு நிமிடம் அடியுங்கள். அடுத்து சொக்லேட் சற்றே ஆறவிட்டு அதோடு சேர்த்து அடியுங்கள் . அவ்வளவும் தான் . இதனை கேக் தட்டில் அழுத்திவைத்துள்ள பிஸ்கட் மீது விட்டு, சமமாக்கி, மேலே ஒரு பொலித்தீனால் மூடி, குறைந்தது நான்கு மணித்தியாலம் குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள் . நான் பொதுவாக இரவு செய்துவைத்து மறுநாள் மத்தியானம் எடுத்துப் பரிமாறுவேன்.



ருசி சேர்க்கச் சில குறிப்புகள்.


-பிஸ்கட் பேஸ் போடுகையில் அதன் கிரீமை எடுத்து கிரீம் சீஸ் கலவையோடு சேர்த்தும் அடிக்கலாம்.



-பிஸ்கட் பேஸ் போட முதல் அந்தத் தட்டுக்கு அளவாக வெட்டியா பேக்கிங் பேப்பரை அடியில் போட்டுவிட்டு பக்கங்களுக்கு கிரீஸ் பண்ணலாம். வெட்டியெடுப்பது மிகவும் இலகு .



-கடைசியாக , ஐந்தாறு ஒரியோ பிஸ்கட்டுகளை சிறு துண்டுகளாக்கி கிரீம் கலவையில் கலந்து கொள்ளலாம். விரும்பியவர்கள் பொடியாக்கிய நட்ஸ் கலந்து கொள்ளலாம்.



பரிமாறுவதுக்கு முதல் மேலே அலங்கரங்கள் செய்து கொள்ளலாம். சொக்லேட் அலங்காரமோ அல்லது whipped cream உடன் சிறிதளவு ஐசிங் சீனி சேர்த்தடித்து அதன் மூலம் அலங்கரமு ம் செய்து கொள்ளலாம்.



சமையல் ஒரு அழகுமிகுந்த கலை . இதை இப்படிதான் செய்யவேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் ஒன்றுமில்லை. நாம் என்ன ஹோட்டலா நடத்திறம்? எல்லாச் செய்முறைகளும் முதன் முதலில் ஒருவரின் மனதில் தோன்றியதுதானே? அதை நாம் அப்படி இப்படி மாற்றி நமக்கு விரும்பியபடி நம் நாக்கு கேட்கும் விதத்தில் செய்வதில் எந்தத் தப்புமே இல்ல. உங்கள் மனம் விரும்பும் படியெல்லாம் செய்து பாருங்கள்.



உங்கள் கைவரிசையை செந்தூரத்தின் சமையல் பகுதியிலும் காட்டலாம் .



எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!
 
Top Bottom