You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கதை வந்த கதை - நெஞ்சள்ளி போனவளே

நிதனிபிரபு

Administrator
Staff member
இது 2017 எழுதி இருக்கிறேன். பேஸ்புக்கில் நினைவில் காட்டியதை கொண்டுவந்து இங்க போட்டு இருக்கிறன்.

கதை வந்த கதை!!

நெஞ்சள்ளி போனவளே எப்படி உருவாகி, நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் என்கிற கதையாக எப்படி முடிந்தது என்கிற கதைதான் இது.

என் பிள்ளைகள் அவர்களின் நண்பர்களின் வீட்டுக்கு போவதாக இருந்தால், எப்போதுமே முதலில் நானும் அவர்களுடன் போய்விடுவேன். இது என் பழக்கம். எங்கு என்ன நடக்கும் என்று நம்ப முடியாதுதானே. பிள்ளைகள் விளையாடலாமா.. பெற்றவர்கள் எப்படி என்று பார்த்துவிடுவேன். அப்படித்தான், இதுவும் நடந்தது! அப்போது தம்பி ஐந்தாம் வகுப்பு.. புது பள்ளிக்கூடம்.. புது நண்பர்கள். ஒருமுறை ஒரு நண்பன்.. ஐந்தாம் வகுப்புதான், ஆனால் வேற பிரிவு. அவர் அழைத்து உன் மகனை என்னோடு விளையாட விடுகிறாயா என்று கேட்டான். தம்பிக்கும் விருப்பம். சோ அம்மாவும் மகனும் தயார்.
அங்கே போய் பெல்லை அழுத்தினால் வந்து திறந்தது தம்பியின் நண்பன். பெயர் டிம். பெரிய ஆவலாக வரவேற்றான். என்னடா அம்மா அப்பா ஒருவரையும் காணோமே என்று எனக்கு சற்றே கோபமும் கூட. சம்பிரதாயத்துக்கு தன்னும் வரவேற்க வராதவர் வீட்டில் தம்பியை விடுவதா? என்று யோசித்துக்கொண்டு உள்ளே போனால், மூன்று மாடி வீட்டில் அவன் மட்டுமே தனியாக.
மனதுக்கு என்னவோ போலாகிவிட்டது.

பதினான்கு வயதாகிறது தம்பிக்கு. இன்று வரையிலும் அவரோடு பள்ளிக்கூடம் வரைக்கு பின்னால் போவேன். இதில் அவருக்கு அது பிடிப்பதில்லை. அம்மா நான் என்ன சின்னப்பிள்ளையா என்று முறைப்பார். சிந்துவுக்கு அம்மா வந்தால் விருப்பம். (பள்ளிக்கூட பாக்கை சுமக்க ஒருத்தி கிடைக்கிறாளே என்பது அவவுக்கு.)

வீட்டில் தனியாகவா இருக்கிறாய் என்று கேட்டால், இன்னும் கொஞ்ச நேரத்தில் அவனது அப்பம்மா வருவாராம். அவரின் வயது 89. அவர் வந்து என்ன செய்யப் போகிறாராம் என்றுதான் இருந்தது எனக்கு.

எனக்கோ தம்பியை அங்கே விடவே மனமில்லை. அவனுக்கு இவன் வந்ததில் அத்தனை சந்தோசம். மெல்ல விழிகளை சுழற்றினால், அந்த வீட்டு சுவர்கள் முழுவதிலுமே போட்டோக்கள் பிரேம்களில் தொங்கின.

நான் பார்ப்பதை கவனித்துவிட்டு, நான் தான் மாட்டினேன் என்றான் டிம் பெருமையாக. இந்தக் கதை உருவாவதற்கு முக்கிய காரணமே அந்த போட்டோக்கள் தான். மூன்று வருடங்களாகிவிட்டது அது நடந்து. ஆனாலும், அந்த போட்டோக்களை, அங்கு நடந்தவைகளை என்னால் மறக்கவே முடியவில்லை.

அவன் பிறந்த நேரம் தாய் தந்தையர் இருவரும் ஹாஸ்ப்பிட்டலில் அவனை மடியில் வைத்திருந்த போட்டோ, ஆறுமாத குழந்தையாக சாப்பிடும்போது எடுத்தது, கடற்கரைக்கு சென்றபோது.. உறங்கும்போது, குளிக்கும்போது என்று அவனின் ஒவ்வொரு அழகான தருணங்களை போட்டோக்களாக்கி இருந்தார்கள். பார்க்கப் பார்க்க அவ்வளவு ஆசை. என்னால் அந்த போட்டோக்களில் இருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை. அவர்கள் மூவர் முகத்திலும் அத்தனை சந்தோசம்.. அந்த பெற்றவர்கள் முகத்தில் மகன் மீது அளவிட முடியாத பாசம்.

பார்க்கப் பார்க்க தெவிட்டாமல் நான் நின்றுகொண்டிருந்தபோது, மீண்டும் அவர்கள் வீட்டு பெல் அடிக்க டிம்தான் போய்த் திறந்தான். இயல்பாகவே நாம் பார்ப்போம் தானே, யார் என்று. அப்படி பார்க்க ஒரு பெண் வீட்டின் வெளியே நின்று கூடை ஒன்றை கொடுப்பது தெரிந்தது. இவன் வாங்கிக்கொண்டு திரும்ப கையை பிடித்து தடுத்து அவனை அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் பதித்துவிட்டுப் போனாள்.

உள்ளே வந்தவன், “ அது என் அம்மா.” என்றான். அதை சொல்வதற்கே அவன் பிரியப்படவில்லை என்பது முகத்தில் தெரிந்தது. அந்த கூடையில் அவனுக்கான உணவு.

ஏன் வீட்டுக்குள் வரவில்லை?

ஏன் யாரோபோல் வெளியே நின்று உணவை குடுத்துவிட்டு போகிறார்?

இவன் ஏன் பிரியமற்றவன் போல் முகத்தை திரும்புகிறான்?

இவனது அப்பா எங்கே?

இத்தனை கேள்விகளில் உன் அப்பா எங்கே? என்று மட்டும் கேட்டேன். அவர் ஏதோ மீட்டிங் என்று சென்றுவிட்டாராம். இரவுதான் வருவார் என்றான். ஆனால் ஒரு கார்ட் இருந்தது. அதில், “ஹாய் டெனிஸ், இன்றய நாள் என் மகனோடு உனக்கு இனிய நாளாகட்டும். உன்னை சந்திக்க ஆசை. வெகு விரைவில் சந்திப்போம்.” என்று என் மகனுக்கு ஒரு வரவேற்பு.

அவன் வீட்டு நிலவரம் மெல்ல புரிவது போலிருக்க, அவனது அப்பம்மா வரும்வரை அங்கேயே இருந்துகொண்டேன். பிள்ளைகள் மேலே விளையாட போய்விட்டார்கள். என் பொழுதுபோக்கு அந்த போட்டோக்கள் மட்டுமே. அவர்கள் வாழ்ந்த கதையை சொல்வதுபோல ஒரு உயிர்ப்புடன் சொல்லிக்கொண்டிருந்தன. பார்க்க பார்க்க மனம் பிசைந்தது.

அழகான கூடொன்று கலைந்தது தெரிந்தால் எப்படி இருக்கும்?

அப்பம்மாவை இருவர் கைபிடித்து கூட்டி வந்தனர். அவரால் மேல்மாடிக்க நடக்கவே முடியாது. கீழ் தளம் மட்டும்தான். அவரால் இந்த பிள்ளைகளுக்கு என்ன பாதுகாப்பை அல்ல கவனத்தை கொடுத்துவிட முடியும்? தம்பியை விட்டுவிட்டு போக மனமே இல்லை. அதோடு அவனை கூட்டிக்கொண்டு போனாலும் அந்த பிள்ளை தனியாக இருப்பானே என்று அதுவேறு..

சில நேரங்களில் மனதின் உணர்வுகளை தொலைக்க பழகியிருக்கவும் வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். முடிந்தால் அல்லவோ?

ஒருவழியாக தம்பி வந்தபிறகு அவரது வாயை பிடுங்கியதில் நான் ஊகித்த விடயமும் நடந்ததும் ஒன்றுதான் என்று விளங்கிற்று.
அவனது தாய் தந்தையர் பிரிந்துவிட்டனராம். அப்பா எப்போதும் வேலையாம்.

எனக்கோ ஆயிரமாயிரம் கேள்விகள். தம்பிக்கு எதையாவது நான் செய்கையில் மனம் அதுபாட்டுக்கு அவனிடம் ஓடும். இதையெல்லாம் அந்த பிள்ளைக்கு யார் செய்வார்? ஒரு பேச்சுத்துணைக்கு யார்? அல்ல மனதில் சின்னதாய் ஒரு கவலை.. நண்பர்களோடு சின்ன சண்டை.. அல்ல ஆசிரியர் செய்த ஏதோ ஒன்று பிடிக்கவில்லை.. குழந்தைகள் பெற்றவர்களிடம் சொல்ல விஷயங்களா இல்லை. பல நேரங்களில் நாம்தான் காது கொடுத்து கேட்கமாட்டோமே தவிர அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவன் யாரிடம் அதையெல்லாம் சொல்வான்.?

ஏனெனில் தம்பியிடம் நான் தொடுத்த விசாரணையின் முடிவு அவனது அப்பா வீட்டில் நிற்பது மிகவுமே குறைவு. அம்மா வீட்டுக்குள் வரமாட்டார். அவன் தன் தாயின் வீட்டுக்கு போகமாட்டான்.

அதன்பிறகும் டிம் இவனை அழைப்பான். விளையாட வரச்சொல்லி. நான் எங்கள் வீட்டுக்கு வரச்சொல்லி விளையாட விடுவது உண்டு. இல்லையோ பார்க் எங்காவது அழைத்துப்போய் விட்டால் விளையாடுவார்கள். அந்த முதல் நாளை தவிர அவர்கள் வீட்டுக்கு தம்பியை விட்டதில்லை.

ஒருநாள் புது நம்பரில் இருந்து எனக்கு மெசேஜ். நான் டிம்மின் அப்பா. என் மகனை விளையாட கூட்டிக்கொண்டு போவதில் மிகவுமே சந்தோஷமும் நன்றியும். என்னால் வீட்டில் இருக்க முடிவதில்லை. என் வேலை அப்படி. எப்போதும் எங்காவது பயணித்துக்கொண்டே இருப்பேன். அடுத்த லீவில் உன் மகனோடு என் மகனையும் நிச்சயம் எங்காவது கூட்டிக்கொண்டு போகிறேன். என் மகனுக்கு உங்கள் எல்லோரையும் மிகவுமே பிடித்திருக்கிறது. நன்றி என்று.

எனக்கு ஏனோ வெகு கோபம் அந்த மனிதரில். இதை நேரடியாக சொல்லக்கூட முடியவில்லை. பிறகென்ன பிள்ளை பாசம் என்று. இனி அவனை கூப்பிடுறது இல்லை என்று முடிவோடு இருக்க, இப்போதெல்லாம் அவன் அழைத்து கேட்டுவிட்டு வரும் எல்லையை தாண்டி சொல்லாமல் கொள்ளாமல் வந்து பெல்லடிக்கும் நிலைக்கு வந்திருந்தான். இருவரும் ஒரே பள்ளிதானே. எப்போது தம்பி வீட்டில் நிற்பார் என்று என்னைவிட அவன் நன்றாகவே அறிந்து வைத்திருந்தான்.

ஒருநாள் டிம்மின் அப்பா சொன்னதுபோலவே இவர்கள் இருவரையும் கூட்டிக்கொண்டு போயிருந்தார். அதன் பிறகான நாட்கள் அந்த டிம்மின் முகத்தில் தெரிந்த ஒளிர்வு.. சந்தோசம்.. என்னால் மறக்க முடியாதவை. தன் அப்பாவை பற்றி நிறையவே சொல்லும் அளவுக்கு அவனும் வந்திருந்தான். இரவு எந்த நேரம் வந்தாலும் அவர்கள் இருவரும் ஒன்றாக உறங்குவது முதல், தனக்கு கதை படித்துக் காட்டும் அப்பா, தன்னோடு ஸ்விம்மன் வரும் அப்பா, எப்போதுமே நடக்கும் ஒவ்வொன்றையும் எங்கிருந்தாலும் கேட்கும் அப்பா, தனக்காக முடிந்தவரை நேரம் ஒதுக்கும் அப்பா, முக்கியமாக பெண் தோழி இல்லாத அப்பா என்று உண்மையிலேயே அவன் தன் அப்பாவை காதல் தான் செய்தான்.

ஒரு குழந்தை தன் அப்பா மேல் இத்தனை பாசம் மேல் பூச்சுக்கு காட்டமுடியுமா என்ன?

அதைவிட அவன் சொன்ன, “என்னுடைய அப்பா என் அம்மாவை இன்னுமே காதலிக்கிறார். ஆனா எனக்கு அவவ விருப்பமில்லை.” என்ற விஷயம் தான் இந்த கதை உருவாகக் கடைசிக் காரணம்.

முதல் இரண்டு அத்தியாயங்கள், அந்த வார்த்தைகளை அவன் சொன்ன அன்று அதன் தாக்கத்தில் எழுதியது. தனிமை துயர் தீராதோ கதை எழுதிய நாட்களில் எழுதினேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக கிடப்பில் கிடந்தது. பிறகு அது கதையா என்றே தெரியாமல் மேலோட்டமாக எடிட் பண்ணிவிட்டு போட்டேன். நிஜத்தின் தாக்கம் இருந்ததாலோ என்னவோ அதன் தாக்கம் வாசகர்களிடேயும் அதிகமாகத்தான் இருந்தது. அந்த தாக்கம் தான் சுபமான முடிவொன்றை கொடுக்கத் தூண்டியது. யாமினி சந்தனா.. என் கற்பனையின் பாத்திரங்கள். ஆனால், சந்தனா நான் ரசித்த ரசிக்கும் ஒரு சுட்டிப்பெண். யாமினி.. நம்மூரில் பல யாமினிகள்.

இந்தக் கதை உங்களிடையே இத்தனை வரவேற்பு பெற்றதில் மிகவுமே சந்தோசம். ஆடிக்கொன்று அமாவாசைக்கொன்று என்று அத்தியாயங்கள் போட்டாலும் படித்து கருத்து சொன்ன நீங்கள் இல்லாமல் இந்தக் கதை இல்லை. எனவே இந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் உங்களுக்கே பரிசாகட்டும். இனி கதை முழுதாக முடியாமல் இந்தப் பக்கம் வருவதில்லை என்று நினைத்திருக்கிறேன். (நடந்தபிறகு நம்புங்கள்)

அடுத்து, பெரும்பாலும் இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குத்தான் லிங்க் இருக்கும். எனவே படிக்காதவர்கள் படித்துக்கொள்ளுங்கள். பிறகு, நீங்கள் கேட்டாலும் தரமுடியாத நிலையில் நானிருப்பேன். எனவே, தயவு செய்து படிக்க விரும்புபவர்கள் படித்து விடுங்கள்.
(விக்ரம் கதை முடிந்தாலும் அவனை விடாமல் கேட்ட செல்லங்களே.. இனி என்ன விட்டுடுவீங்க தானே?)

நன்றி!

மீண்டும் இன்னோர் அழகான கதையுடன் உங்களை சந்திக்கும் வரை,
நட்புடன் நிதனிபிரபு.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Hello mam, can you provide me the link of this story??

ஹாய். கீழ லிங்க் இருக்கு வாசிச்சு பாருங்கோ. பிறகு அந்த சிறுகதையை நாவலா எழுதினேன். அது அமேசானில் இருக்கு

 
Top Bottom