You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

காதல் என்னை காதலிக்கவில்லை! - உஷாந்தி கௌதமன் - இதழ் 11

ரோசி கஜன்

Administrator
Staff member


காதல் என்னை காதலிக்கவில்லை! என் ஆன்மா, என்னுள்ளே எங்கிருந்தோ தூரமாய்க் கேட்கும் அந்த மெல்லிசையை துரத்திக்கொண்டு என் சிந்தனைகள் சிறகு வளர்த்தக் காலம் தொட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. சமயங்களில், தாளகதி என் இதயத்துடிப்போடு ஒத்திசையும்; இதோ தொட்டு விடுவேன் தொட்டு விடுவேன் என்று விழி மூடி கை நீளும்; அப்படியே எல்லாமே நிசப்தமாகிவிடும்.

நீண்ட கை மீண்டும் திசையறியாமல் தட்டுத்தடவி திரும்பி வரும். வலி! ஏமாற்றம்! ஏக்கம்!

காதல் என்னை காதலிக்கவில்லை! என் காதல் மெல்லிசை! என் உயிரின் நீட்டிப்பு விசை! உயிரோடு உறவாக எனக்கே தெரியாமல் என்னை பின் தொடர வைக்கும் மாயவிசை!

அது என் கை சேராமல் இருக்கும் வரை தான் என் உயிரின் ஓட்டம் இருக்கும் போலிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் மழைக்கேங்கும் சாதகப்பட்சியாய் என்னிசை வரும் திசை தேடி ஓடிக்கொண்டிருப்பவளுக்குத் தவிப்பும் கண்ணீரும், தனிமையும் விதிக்கப்பட்டிருக்கிறது. இசையைத்தேடி ஓடும் என் ஆன்மாவுக்கு அது கை சேர்வதை விட அந்த ஓட்டத்தைத் தான் பிடித்திருக்கிறது போலும். அது ஏனோ எந்தப் புலம்பல் பத்திரங்களும் வாசிப்பதே இல்லை. வலிகளும் வேதனைகளும் இன்று போய் நாளை வருவது போல என் நாட்களில் சாதாரணங்களாய் கடந்து போக, என் ஓட்டத்தில் பின்னே ஓடும் மரங்களாய் பிறரின் மகிழ்வும், காதலும் என் கண்ணிலேயே பதிந்திருக்கின்றன.

அட நான் வருந்தவில்லை, வருந்தியதே இல்லை!

காதல் எல்லோரையும் காதலித்து விடுவதில்லை. என் கண்ணில் புகைப்படலக்காட்சிகளாய் கடக்கும் கனவுகளை கலைத்து முத்தமிடும் மேலிமைகளை கீழிமைகள் மிரட்டிப்பிரிப்பதில் இருந்தே என் பிரிவுகள் ஆரம்பித்து விடுகின்றன.

காதலை தழுவிக்கொள்ளத் துடிக்கும் நீராய் முனையும் என்னை, அது, துவாலை கொண்டு ஒற்றித்துடைக்க, அங்கும் இங்கும் எட்டிப்பார்க்கும் துணி முட்களுக்குள் சிக்கிக்கொண்டு தவிக்கும் என் ஆன்மா.

அன்றொருநாள் காலில் மண்ணாய் ஒட்டிக்கொண்ட என்னை வாசலில் கிடக்கும் சாக்கில் அது உதறிச்சென்ற போது, ‘உனக்குக் கோபமே வராதா?’ என்று சாக்கின் இழைகள் என்னைப் பிடித்து உலுப்பின. வராது! தேடலே என் ஆயுளின் நீட்டிப்பு விசை. அது அந்த இழைகளுக்குப் புரியவில்லை.

சரி காதல் உன் கை சேர்ந்தால் உன் தேடல் முடிந்து போய்விடுமல்லவா என்று கேட்கின்றன. ஹா ஹா தேடலே என் காதல் என்று அவைகளுக்கு எப்படிப் புரியவைப்பேன்?

உயிரின் கடைசிச் சொட்டு மிச்சம் இருக்கும் வரை எனக்குத் தேடிச்செல்வதற்கு ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தானே இருக்கும்?

மீண்டும் சொல்கிறேன், காதல் எல்லோரையும் காதலிப்பதில்லை. காதலையும் எல்லோரும் காதலிப்பதில்லை. இசையைத் தேடிச்சென்றால் அது இசைப்பவனிலோ கருவியிலோ தான் சென்று முடியும். இசையைக் காதலிப்பவன் வீணையை வாங்கிப் பூட்டிக்கொண்டால் இசை வந்து விடுமா?

தேடல் ஒரு செயல். அதே போல இசைத்தலும் ஓர் செயல். காதலும் ஓர் செயல். காதலைத் தேடிச்சென்று காதலியையோ காதலனையோ கண்டு கொள்ளுதல் இசையை விரும்பி இசைப்பவனை எடுத்துக்கொள்ளுதல் ஆகாதா?

ஹா ஹா சாக்கின் இழைகளுக்கு ஏதும் புரியவில்லை போலும்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அவைகளை யாரோ எடுத்து உதறத் தூரமாய் துள்ளி விழுகிறேன் நான். அதோ, மீண்டும் என் இசை கேட்கின்றது. என் ஆதி அந்தம் எல்லாமே அது வியாபித்து நிறைய, என் சுயம் மறந்து நான் மீண்டும் ஒட ஆரம்பிக்கிறேன்.
 
Top Bottom