You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

சிந்துவின் சமையலறை - இதழ் 9

ரோசி கஜன்

Administrator
Staff member
சின்னப்பிள்ளைபோல மகளோடு மல்லுக்கு நின்றாலும், அவவின் ஒவ்வொரு செய்கையையும் ரசித்து மனதுக்குள் பதுக்கும் தாயுள்ளம் எனது. அம்மாக்கள் என்றாலே அப்படித்தானே!



இது சிந்துவின் ஸ்பெஷல் என்றே சொல்லலாம்! நினைத்ததும் அடுத்த ஒருமணி நேரத்தில் செய்துவிடுவார். அதேபோல, எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடித்த ஒரு பிஸ்கட்டும் கூட! வாரநாட்கள் முழுவதும் ஓடி ஓடி களைத்துப்போகும் நாங்கள், ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் அவா பரிமாறும் இந்த பிஸ்கட் + தேநீர் இரண்டுக்கும் மிகப்பெரிய ரசிகர்களாகிப்போனோம்.



வீட்டில் தானே என்று ஏனோ தானோ என்று கொண்டுவந்து வைக்கமாட்டார். அழகான தட்டில் ஒரேபோல அமைந்த நான்கு கோப்பைகளில் தேநீர் வர, அதே கோப்பையின் அலங்கரிப்பில் அமைந்த அழகான இன்னொரு தட்டில் வரும் இந்த பிஸ்கட். மேசையில் வைத்துவிட்டு, “சாப்பிடுங்கோ” என்று சொல்லிவிட்டு, தகப்பனின் முகத்தையே பார்த்தபடி இருப்பா. அவர் ஒன்றை சாப்பிட்டுவிட்டு, “சிந்துக்குட்டி செய்தது சூப்பரா இருக்கு.” என்று சொல்லவேண்டும். அந்த ஒற்றைச் சொல்லுக்காய் முகம் பார்க்கும் குழந்தையின் முகம் பேரழகு!



அதன்பிறகு ஆரம்பிக்கும் சண்டைகள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை!



என்னைப்பார்த்து ஒரு சிரிப்பு சீண்டலாக சிந்துவிடமிருந்து வரும். “அதென்ன ஒவ்வொரு கிழமையும் ஒரே பிஸ்கட் தான் வருது. அதுல என்ன சூப்பரா இருக்கு? நான் செய்ற எதுக்காவது நல்லாருக்கு எண்டு சொல்லி இருக்கிறீங்களா?” என்று நான் ஆரம்பிப்பேன்.



“நல்லா இருக்கிற மாதிரி செய்தா அப்பா சொல்லுவார் தானே?” என்று மகன் தொடங்கிவைப்பார்.



“அப்ப மூக்கு முட்ட விழுங்கிறது எல்லாம் நல்லா இல்லாமையே?” எண்டு நான் போர்க்கொடி தூக்க, “வயித்துப்பசி ருசி பாக்காது!” என்று கணவரும் எடுத்துவிட இப்படியே தொடரும் அழகான மாலைப்பொழுது!




கிறிஸ்ம்ஸ பிஸ்கட்


1554063247475.png 1554063264207.png



தேவையான பொருட்கள்




125g பட்டர்

125g சீனி

1 முட்டை

125g அரைத்த ஹாஸல் நட்ஸ்

250g மா

¾ தேக்கரண்டி பேக்கிங் பவுடர்

கொஞ்சமாய் வனிலா


செய்முறை
:


தேவையான பொருட்கள் அத்தனையையும் ஒன்றாகப் போட்டு நன்றாகக் குழைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் தட்டையாக உருட்டி உங்களுக்குப் பிடித்த அச்சு வடிவங்களில் வெட்டி எடுத்துகொள்ளுங்கள். பேக்கிங் தட்டு ஒன்றில் பேக் செய்யும் பேப்பரின் மேலே இடைவெளி விட்டு அடுக்கி, 180பாகை செல்ஷியஸில் 30-40 நிமிடங்கள் விட்டு பொன்னிறமானதும் எடுத்தால் நமது பிஸ்கட் தயார்.



இப்படியே சாப்பிடுவதே வெகு ருசியாக இருக்கும். அதற்குள் இருக்கும் அரைத்த ஹாஸல் நட் கொடுக்கும் சுவையே தனி. ஆனாலும், குழந்தைகளுக்கு சாக்கலட்டினை உருக்கி அதிலே நனைத்தும் கொடுக்கலாம். மாலை நேரத்துத் தேநீருக்கு மிக அருமையான பிஸ்கட்.



சுவைத்து மகிழுங்கள்!
 
Top Bottom