You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'செங்கை ஆழியான்' தமிழ் இலக்கியத்தின் அழிக்க முடியாத ஓர் அடையாளம்! - நிதனிபிரபு

ரோசி கஜன்

Administrator
Staff member

1542376050055.png


யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் தை 25, 1941ஆம் ஆண்டு கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாகப் பிறந்து, ‘செங்கை ஆழியான்’ என்கிற புனைப்பெயராலே பரவலாக அறியப்பட்ட இவரின் இயற்பெயர் க.குணராசா.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.


இவர், கல்வியிலும் இலக்கியத்திலும் பல்வேறு அரச பணிகளிலும் செய்த சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்குக் கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா அவர்கள், எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனானதால் தனக்குத் தானே “செங்கை ஆழியான்” எனப் புனைப் பெயரைச் சூட்டிக்கொண்டு பல அருமையான இலக்கியங்களைப் படைத்தார்.



ஒரு புவியியல் ஆசிரியராக, சரித்திரக்கதை சொல்லியாக, பல்கலைக்கழகப் பதிவாளராக, உதவி அரசாங்க அதிபராக, மாநகரசபை ஆணையாளராக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, பல வடிவங்களில் பதவிகளை வகித்த இவர், இலக்கியப் படைப்பாளியாக; செங்கை ஆழியானாக வகித்துக் கொண்ட அவதாரம்தான் அவரை ஈழத்து இலக்கிய உலகில் கிரீடம் சூட்டி அழகு பார்த்தது.



ஈழத் தமிழர்களின் இலக்கிய வரலாற்றின் ஒரு பக்கத்தைச் செங்கை ஆழியான் எனும் உன்னதமான படைப்பாளியின் படைப்புக்களைக் கொண்டே மதிப்பீடு செய்ய வேண்டும்.



பல பிரதேசங்களில் பணியாற்றி, அப்பிரதேசங்களின் வாழ்வியற் கோலங்களை அவற்றின் பலத்தோடும் பலவீனத்தோடும் தரிசித்து உள்வாங்கிக்கொண்ட இவரின் அனுபவங்களே இலக்கியங்களைத் திறம்படப் படைக்க உதவின. இந்த அனுபவங்களின் பயனாகவே இவரால் அரிய பொக்கிசமான “காட்டாறு” நாவலை எழுதிச் ‘சாகித்திய விருது’ம் பெற முடிந்தது.

கிராமத்து மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும், வியர்வை, பனை ஓலை, வேலி, சகதி, தேனீர், அத்தி இலைகள் என்று வர்ணனை இல்லாமலே இயல்பாகச் சொல்வதில் ஒரு சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தார் எனலாம். அவரது கதைகளை வாசிக்கும் ஒருவருக்கு, அந்தக் கிராமமும், கதையின் கதாபாத்திரங்களும் கண் முன்னே நிழலாடுவார்கள். செய்திகளைக் கூட மேலோட்டமாகப் படித்து விட்டு நகர்ந்துவிடலாம். ஆனால், செங்கை ஆழியானின் எழுத்து என்றால் அதை முழுமையாக வாசிக்காமல் கடந்து போக முடியாது. அந்தளவுக்கு, செங்கை ஆழியானின் எழுத்துகளும், அவர் கதை சொன்ன பாங்கும் வசீகரமாக இருக்கும்.

பிரளயம், காட்டாறு, கனவுகள் கற்பனைகள், ஆசைகள், கங்கைக் கரையோரம், அலைகடல் தான் ஓயாதோ, முற்றத்து ஒற்றைப் பனை, யானை, கிடுகுவேலி, ஓ அந்த அழகிய பழைய உலகம், மரணங்கள் மலிந்த பூமி, ஆச்சி பயணம் போகிறாள், போன்ற பல சமூக நாவல்களும்,





1542376152977.png1542376161354.png1542376170182.png


அக்கினிக் குஞ்சு, யாழ்ப்பாணத்து இராத்திரிகள், சித்திரா பௌர்ணமி, இதயமே அமைதி கொள், இரவு நேரப் பயணிகள், கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத ஆமைகளும், சாம்பவி போன்ற சிறுகதைகளும் இணையற்றவை.

‘முற்றத்து ஒற்றைப் பனை’ என்ற கதையில் வழிந்தோடும் மிக இயல்பான எழுத்து நடை, சரளமான பேச்சுத் தமிழ், கூடவே இழைந்தோடும் நகைச்சுவை என்று எந்த ஒரு வாசகனுக்கும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடத் தோன்றும் சலிப்புத் தட்டாத கதை சொல்லும் ஆற்றல் கைவரப்பெற்றவர் இவர்.
ஒரு இயல்பான ஈழத்து நடையுடன் கூடிய வாழ்க்கையைத் தரிசிக்க விரும்பினால் தேர்ந்தெடுக்க வேண்டிய நாவல்கள் செங்கை ஆழியானின் நாவல்களே. கதை, கதை மாந்தர்கள் என்பதைத் தாண்டி அந்தக் கதை நடக்கும் ஊர்...அதன் இயற்கை வளம், சிறப்புகள், சிரமங்கள் என்று அந்த மண்ணுக்கே உரிய தனித்துவமான கூறுகளை நாவல்களின் மூலம் மிகச் சிறப்பாக தொட்டுக்கொண்டு போகும் பெருமைக்குரியவர் இவர்.



வாடைக்காற்று அவரின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று. தனக்கென ஒரு முத்திரையை அசைக்க முடியாதபடிக்கு அந்த நாவலின் மூலம் பதித்துக் கொண்டார் செங்கை ஆழியான். ஈழத்து நாவல் உலகே கண்டிராத அதிசயமாக, செட்டிக்குளம் வாழ் மக்கள் விழா எடுத்ததும் இந்த நாவலுக்குத் தான்.


1542376249626.png



வாடைக்காற்று நாவலின் கதைக்களமாக எடுத்துக்கொண்ட நெடுந்தீவின் வாழ்க்கையை அப்படியே சொல்லியிருப்பார். அந்த ஒற்றைத் தீவில் வாழும் பலவிதமான மீனவர் வாழ்வு, வாடை பெயர்ந்ததும் பேசாலை, கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி, இயல்பான காதல், குழிபறிப்பு, மீனவர் போராட்டங்கள், மனித உருவில் நடமாடும் அருவருக்கத்தக்க மிருகம் இவை தான் இந்நாவலின் மூலக்கரு. வாடைக்காற்றுக் காலத்தில் அங்கு வரும் மனிதர்களைப் பற்றி மட்டுமல்ல, பருவக்காலத்துக்கு இடம் பெயரும் பறவைகளைப் பற்றியும் என்று அந்தக் கதையோடு கூடவே அந்தத் தீவையும் நமக்கு அறியத் தந்திருப்பார்.​


இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால், இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப்படைப்பாகவும் திகழ்கின்றது.

மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம். இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை!​



இந்த வாடைக்காற்று திரைப்படமாக எடுக்கப்பட்டதுமல்லாமல், மிகச்சிறந்த படைப்பாகவும் பேசப்பட்டது. முதற்தடவையாக சிறந்த படத்துக்கான ஜனாதிபதி விருது (1978) கிடைத்த தமிழ்த் திரைப்படம் வாடைக்காற்று!






1542376397002.png 1542376384400.png




அந்த நாட்களில் ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளிவந்த இவரின் ‘கிடுகுவேலி’ என்கிற நாவல் வாசகர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாவலாகும்.



இவை மட்டுமல்லாது வரலாற்று நாவல்களையும் அற்புதமாய்ப் படைத்த ஆளுமை செங்கை ஆழியான்.​


ஈழத்தில் ஒரு காலத்தில் வரலாற்று நாவல்கள் என்றால் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்தீபன் கனவு போன்றவையும் அதன்பிறகு சாண்டில்யனின் வரலாற்று நவீனங்கள் என்று சேர, சோழ, பாண்டிய, பல்லவ காலத்தில் மட்டுமே இருந்தது. அப்படியிருக்க, அதை மாற்றியமைத்து வரலாற்று நவீனங்களை யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் கொணர்ந்த பெருமை செங்கை ஆழியானுக்கே உண்டு. இது ஈழத்து எழுத்துலகின் மிகப்பெரிய திருப்பம். மிகப் புதுமையாகவும் போற்றப்பட்டது.​

அவரின் வரலாற்று நாவலான கடல்கோட்டையில், யாழ்ப்பாணக் கோட்டையைப் பற்றியும், அன்றைய நாட்களில் உலவிய போர்த்துக்கேயர்களைப் பற்றியும், யாழ்ப்பாணத்து மாந்தர்களைப் பற்றியும் என்று தன் கற்பனைகளோடு சேர்த்து யாழ்ப்பாண மண்ணின் வரலாற்றையும் மிக அழகாகப் புனைந்திருப்பார்.​


வரலாற்று நாவல்கள் மட்டுமல்ல ‘சூளவம்சம் வரலாறு’, ‘யாழ்ப்பாண வரலாறு’ என்று பொக்கிஷமாய் போற்ற வேண்டிய வரலாற்று புத்தகங்களைக்கூட நமக்குத் தந்திருக்கிறார் செங்கை ஆழியான்.​

"சூளவம்சம் கூறும் இலங்கை வரலாறு" நூல் மாணவருக்கு மட்டுமன்றி, இலங்கை வரலாற்றை அறிந்து கொள்ள முனைவோருக்கான பொதுவான படைப்பாக அமைந்திருக்கிறது.


1542376521541.png





வரலாற்றை ஆய்வுக்கட்டுரையாக, ஆய்வுப்புத்தகமாக எழுதுவது வேறு. அதனைச் சாதாரண வாசகர்களால் புரிந்துகொள்வது சிரமம். ஆனால், செங்கை ஆழியான் பாமரர்கள் கூட புரிந்துகொள்ளும் வகையில் ஈழத்தவர் வரலாறுகளை, நாமறியாத பல விஷயங்களை உடைத்து எழுதியிருப்பார். வரலாற்றில் தமிழர்கள் செய்த பல தவறுகளை வெளிப்படையாக எழுதியிருப்பார்.

1542376553941.png


இது நாமறியாத வரலாறு. ஆனால், செங்கை ஆழியான் நமக்குத் தகவல் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். 1621ல் யாழ்ப்பாணம் களம் பல கண்ட யாழ் கோட்டை நூலிலிருந்து பெறப்பட்ட தகவல் இது!

இப்படி, நாமறியாத பல வரலாற்றுத் தகவல்களை சுவாரசியமாகத் தந்தவர் செங்கை ஆழியான்.​

நம் தலைமுறை இன்றும் எழுத்துக்குள்ளும் வாசிப்புக்குள்ளும் உயிர்ப்போடு இருக்கிறது என்றால் அதற்குப் பெரும் காரணம் செங்கை ஆழியானே! போர்ச் சூழலிலே எப்படியாவது நமது தலைமுறை மாறியிருக்கலாம். படிக்காமல் வாசிக்காமல் கற்காமல் இருக்கப் பல காரணங்கள் அமைந்திருந்தன. அந்தச் சூழ்நிலைகளில் அவரின் எழுத்துக்களே மக்களை உயிர்ப்போடு வைத்திருக்கப் பெரும் காரணமாய் அமைந்தன. அந்த நாட்களில் அவர் புத்தகம் வெளியாகிறது என்றால் பூபாலசிங்கம் புத்தகக்கடை வாசலிலே காத்திருந்து வாங்கியவர்கள் பலர். அவரின் எழுத்தை, நேசிக்கவில்லை; உயிராய்ச் சுவாசித்தனர் அவரின் வாசகர்கள்!


1542376618806.png


தமிழ் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உட்பட்டிருந்த காலங்களில் கூட, அவரின் ஈழநாடு வெளியீடான ‘கடல்கோட்டை’ புத்தகம் சாதாரண ஒற்றை ரூல் கொப்பியிலே பதிப்பிக்கப்பட்டு வெளிவந்தது.​


இப்படி, அவர் சாதாரணமாய் எழுதவில்லை; எழுதிக் குவித்திருக்கிறார். போகிற போக்கிலே அவர் எழுதிவிட்டுப்போன பலவிடயங்கள் இன்றும் நமக்கு பொருந்துகிறது. இன்று பல எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்றால் அதற்கான விதையைச் செங்கை ஆழியான் போன்ற ஆளுமைகள் என்றோ விதைத்து விட்டிருக்கிறார்கள். நம்மைத் தூண்டி விட்டிருக்கிறார்கள். இது அடுத்த தலைமுறைகளுக்கு அவர் செய்துவிட்டுப்போன மிகப்பெரிய சேவையாகும்!​


இப்படி, சிறுகதைகள், நாவல்கள், வரலாற்று நாவல்கள், வரலாற்றுப் புத்தகங்கள் என்று பல வகைகளிலும் தன் ஆளுமையைப் பதித்தவர் கலாநிதி குணராசா என்கிற செங்கை ஆழியான்!​


அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்திருந்த செங்கை ஆழியான் அவர்கள் ஈழத்தில் பிறந்ததாலோ என்னவோ இவரது இலக்கிய வாழ்வு ஒரு வட்டத்தை விட்டு வெளிவராமலே அடங்கிப் போயிற்று.​

சாகித்திய ரத்னா, சாகித்திய விருது உட்பட பல விருதுகளை வென்று கடந்த 2016, பெப்ரவரி 28 அன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகுச் சென்றாலும் நம் வாசிப்பில் என்றும் வாழ்வார் எங்கள் ‘செங்கை ஆழியான்’!​


செங்கை ஆழியானை வாசித்து வளர்ந்த சமூகம் அவரின் பன்முகப்பட்ட எழுத்தை ஈடு செய்யக் கூடியவரைத் தேடிக் கொண்டேயிருக்கும். அவரின் அடியொற்றி இலக்கியம் படைப்போருக்கு அவரே பிதாமகன்.​


இத்தகையதொரு இலக்கிய ஆளுமையை, ‘செந்தூரம்’ மின்னிதழ் வாயிலாக நினைவு கூர்ந்ததில் மிக்க மிக்க பெருமை கொள்கிறோம்.​




 
Top Bottom