You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

சொட்டு முத்தம்- ஹேமா - இதழ் 12

ரோசி கஜன்

Administrator
Staff member
அழுக்கேறிய படிகளில் ஏறி நான் உள்ளே நுழைந்தபோது

நிலையம் வெறிச்சிட்டிருந்தது - பழக் கூடைக்காரர்களும்

துண்டுச் சீப்பு விற்பனைகளும் இல்லாமல் எங்கும் இருளின்

புகை சூழ ஒளியிழந்து கருப்படித்து நின்றன குழல்விளக்குகள்

பள்ளி முடிந்து பயணம் முழுவதும் காசு வைத்து

விளையாடும் மாணவர்கள் கலைந்து அமர்ந்திருந்தனர்

வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள் நடைபாதை

இருக்கைகளில் அமர்ந்து இலக்கற்றுத் தண்டவாளத்தை

வெறித்தனர் - அவர்கள் உதடுகள் மட்டும் அவ்வப்போது

‘ப்ச்’ என பல்லி போல ஒலியிட்டன

வழக்கமாய் இந்நேரம் தொலைக்காட்சித் தொடர் அலசி

மாதந்திரச் சீட்டின் வரவு செலவைச் சோதித்திருப்பார்கள்

ஓரமாய் நின்றபடி இரத்தத்துளிகள் படிந்த செய்தித்தாளை

விற்றுக் கொண்டிருந்தார் விழித்திறனற்ற முதியவர்

எப்போதும் கூவி விற்பவர் இன்று துயரத்தின் நிழல்

அப்பியவராய் மௌனமாய் நிற்கிறார்

மேலும் மேலும் துக்கத்தைச் சுமக்க விரும்பா மனிதர்கள்

அவரைக் கவனிக்காதபாவனையில் கடந்து கொண்டிருந்தனர்

சூழலின் அமானுஷ்ய அமைதி திகிலூட்ட

தெரிந்த முகங்கள் எதையும் சந்திக்க விரும்பாமல்

கறுப்புக் கண்ணாடி என் கண்களில் இடம் பிடித்தது



‘இந்த வண்டி எங்கு வரை போகும்?’ அருகில் வந்து கேட்ட அதிரூப

அழகியைக் கண்டு அனிச்சையாகப் பின்னகர்ந்தேன்

விநோதமாய் மேலும் கீழும் பார்த்தவள் முறைத்தவிதம் கடந்தாள்

‘இன்னிக்கு வெயில் அதிகம், இல்ல?’ முந்தானை உதறி முகம் துடைத்த

மூதாட்டிக்கு என் இறுகிய தாடையே பதிலானது

புகை ஊதும் மீசை முளைக்கா பொடியனை

நேர்த்தியாய் சேலை சுற்றிக் கைப்பை மாட்டிய இளம்பெண்ணை

கசங்கிய வேட்டி சட்டையுடன் கட்டைப்பை

வைத்து நின்ற இரட்டை நாடி மனிதரை

காணும் முகம் அனைத்தையும் நான் துருவ என்னையும் துளைத்து

லேசர் நுட்பமாய்ச் சோதித்து அகன்றன பல பார்வைகள்

‘இன்று வேலை சுகமா?’ எப்போதும் புன்னகைக்கும் நண்பனின்

கேள்விக்கு ‘இவன் என்ன ஆள்?’ அடையாளம் எதுவுமற்ற அவன்

முகத்தைக் கூர்ந்து அலசியபடி தலையசைத்து நடந்தாயிற்று



சந்தேகத்தின் நிழல் மெல்லிய புழுதியாய் எங்கும் படிந்திருக்க

மரணத்தின் வீச்சமடித்தது காற்றில்

மனிதர்கள் யாருமற்ற பூமியின் விளிம்புக்கு

குண்டுகள் துளைக்காத கன்னி நிலத்திற்கு

துப்பாக்கித் தோட்டாக்களின் விசை தோற்கும்

பெருவெளிக்கு ஓடிவிட்டால் என்ன ?

இயலாமை மூச்சேந்தி கவனமாய் இடம் ஆய்ந்து அமர்ந்தேன்

வண்டி வந்ததும் ‘நாளை விடுமுறையில்

வெளியே செல்லலாமா?’ மகளின் குறுஞ்செய்திக்கு

‘வேண்டாம், பாதுகாப்பில்லை’ பதில் அனுப்பி நிமிர்ந்தபோது

என்னருகே முரட்டுச் சராய் அணிந்த ஒருவன் உயரமாய்த் தடியாய்

நீலக்கண்களுடன் கைகளில் முறுக்கேறிய நரம்புகளுடன்

அந்தக் காணொளியில் வந்தவனும் இவ்விதம் தானே இருந்தான்?

முதுகில் பெரும் பொதியைச் சுமந்தபடி

நன்றாய் இடைவெளி விட்டு ஒதுங்கிச் சாளர

கம்பிகளில் முகம் பதித்து ஒடுங்கினேன்



வண்டி கிளம்ப ஏதோ பாடலுக்குக் குதியாட்டமிட்டு வந்த ஒரு

பாப்பா என்னெதிரில் அமர்ந்தது

நீலக்கண்ணன் அக்குழந்தையைப் பார்த்துப்

பற்கள் தெரிய புன்னகைத்தான்

அவனும் இப்படித்தானே குழந்தையை முதுகில்

தட்டியபடியே வெடிகுண்டை செயலூக்கினான்

நெஞ்சம் படபடக்க என் உடலெங்கும் கண்கள் முளைத்தன

எரிதழலாய் அவன் விழிகள், உணர்ச்சியற்ற பார்வை,

தட்டையாய் மூக்கு, ஒடுங்கிய மார்பு

நீண்ட கால்களை இருக்கை தாண்டி அவன் நீட்டியிருக்க

நீலக்கண்ணன் ஒவ்வொருமுறை தன் கால்

சராயுக்குள் கை நுழைக்கும்போதும் குளிர்ந்த உடல் கொண்ட

உலோகமுனையை எதிர்நோக்கி என்னிதயம் தாளமிட்டது

வண்டியின் வேகத்திற்கு இணையாய்

பளபளத்த ஜிகினா தாளில் மினுமினுத்த

மிட்டாய்ப் பட்டையை எடுத்து நீட்டினான் குழந்தையிடம்

‘வாங்காதே’ மனதுக்குள் நான் அலற

‘நன்றி சொல்லு’ தன் தாய் அனுமதித்ததில் வெட்கமாய்ச்

சிரித்து வாங்கிய குழந்தை ஒரு பட்டையை உடைத்து அவனிடமும் நீட்டியது

நீலக்கண்ணன் சிரிப்போடு வாங்கி வாயில் குதப்பியபடி

மறுபடியும் தன் சராயுக்குள் கை நுழைத்தான்

ஒவ்வொரு முறை அவன் துழவும் போதும்

ஆணிகள் திருகும் வினோத ஒலி எழும்பியது

ஒரே விசையில் உடல் பாகங்கள் சிதறி நான் இரத்தமாய்க் கரையும்

கற்பனையின் தீரத்தில் நெஞ்சம் மேலேறி என் தொண்டையில்

இடித்து நிற்க, இன்னும் இரண்டே நிறுத்தங்கள் தான் நான் இறங்க



இவன் தாமதித்து ஒருவேளை உயிர் பிழைத்தால் என் மகளுக்குத்

தாய் உண்டு - என் தாய்க்கு சேய் உண்டு

நொடிகளை நான் எண்ண இப்போது

நீலக்கண்ணன் கையில் கசங்கியதொரு புகைப்படம்

‘சகோதரி, இது என் மகள்’ வியர்வையின் ஊற்று அச்சத்தைக்

காட்டியதோ? ‘அழகாய் இருக்கிறாள் உன் மகள்’ என்றேன்

உலர்ந்த நாக்கை மெல்ல அசைத்து

அழகு கொஞ்சம் கிளி தான் போன வருடக்

குண்டு வெடிப்பில் பறந்து போனது என்றான்

அவன் வெறுமையாய் புன்னகைத்து - சொற்களற்று நான்

சமைந்திருக்க மெல்ல எழுந்தவன் திருக்குகள் பூட்டிய தன்

காலைக் கையால் உந்தி அடி மேல் அடியெடுத்து மறுகையால்

பொதியை இழுத்தவிதம் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிப் போனான்



கண்ணீர் பிசுபிசுத்த என் கன்னங்களைத் தொட்டசைத்த பாப்பா

‘உனக்கும் வேணுமா?’ என்றது தன் உள்ளங்கை நீட்டியபடி

கொப்பளித்த விசும்பலை அடக்கியவாறு அள்ளி வாயில்

அடக்கினேன் ‘நன்றி குட்டிம்மா’ உள்ளுக்குள் கசிந்து கொண்டே

எதிர்பாரா தெய்வக் கணமொன்றில் சட்டென்று தாவி கழுத்தைக்

கட்டிய பிள்ளை என் கன்னத்தில் முத்தமிட, பச்சென்ற இதத்தில்

அந்தப் பால் சருமக் குளிர்ச்சியில் எச்சில் சொட்டும் அப்பிஞ்சு

முத்தத்தில் மீண்டும் மீண்டும் ஜனித்தேன் நான் அப்பழுக்கு நீங்கி;



மனிதம் மேல் மரத்திருந்த நம்பிக்கை பச்சை பச்சையாய்

துளிர்விட்டது - மனிதம் மயங்கலாம், ஒருநாளும் மரணிக்காது

குழந்தையின் சிரிப்பும் இத்தாயின் நம்பிக்கையும் குருதி

வழியும் இதயத்தை மறைத்தபடி மிட்டாய் நீட்டும் நீலகண்ணனும் உள்ளவரை

அவநம்பிக்கை கசடுகளை நம்பிக்கை வேர்கள்

கிளை கிளையாய் மேலெழும்பி உலுக்கி உதிர்த்து விட்டன

பிஞ்சின் வியர்வையில் உப்பிட்டுத் தித்தித்தது வாயில் அடக்கிய இனிப்பு

அடுத்த வரிசை பெண் தன் மடி பரப்பிய மல்லிகையின்

மணம் காற்றில் பரவி பெட்டி எங்கும் மணந்தது.
 
Top Bottom