You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஜிம்மும் கிரிக்கெட் மைதானமும்- சத்யா GP - இதழ் 4

ரோசி கஜன்

Administrator
Staff member




அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்து கம்ப்யூட்டரை நோண்டிக்கொண்டிருந்த மணிவேலுக்கு சடாரென சில பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தது.



ப்ளஸ் டூ படிக்கும் போது இதே அலுவலகத்துக்கு ராஹினி அக்காவைப் பார்க்க வந்திருக்கிறான். அகெளண்ட்ஸ் பிரிவில் கிளார்க்காக அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.



அப்போது மருந்துக்கும் ஒரு கம்ப்யூட்டரை அவன் பார்த்ததில்லை. வெளியே ஜெனெரல் ஆபீஸ், பாதுகாப்பு அதிகாரி. இன்னாரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி அங்கே காத்திருக்க வேண்டும். இன்னார் வெளியே வருவார். விசிட்டரைப் பார்த்துப் பேசுவார். இதுதான் அந்த அலுவலக நடைமுறை.



நிர்வாகத்துக்கு நன்கு பரிச்சயமானவர் எனில் பாதுகாப்பு ஆசாமி ஒரு அட்டை தருவார். அதை மாட்டிக்கொண்டு பணியாளருடன் உள்ளே சென்று பேசலாம்.



இப்போது அப்படியா? வெளியே கேட்டிலேயே வடிகட்டல், பார்க்க வேண்டிய ஆள் பெயரைச் சொல்லிவிட வேண்டும். அவர் அங்கிருந்து உள்ளே தொலைபேசியில் பேசி விவரம் சொல்லி ஒப்புதல் பெற்றபின் ஒரு கார்டைத் தருவார். நடுவே ஜெனரல் ஆபீஸ் என்பதே இல்லை.



ஒரு கதவிடுக்கில் கார்டைத் தேய்த்து உள்ளே போய்விடலாம். குளிரூட்டப்பட்ட பெரிய அறை. பணியாளர்களுக்குத் தனி தனி கேபின். நுழையும் இடத்தின் வலதுபுறம் ஹெல்ப் டெஸ்க், அவர்கள் அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கு!



ராஹினி அக்கா காலம் போல் இப்போது இல்லை. ஒவ்வொரு கேபினிலும் கம்ப்யூட்டர் தலைகள். முன்பு போல் அதிகமான மனிதத் தலைகள் இல்லை. ஹெல்ப் டெஸ்க் தாண்டி நடந்து வலதுபுறம் திரும்பி நேரே பார்த்தால் ஒரு தனி அறை. விசிட்டர்ஸ் ரூம். ராஹினி அக்கா பணி புரியும் போது, வருங்காலத்தில் தானும் இந்த அலுவலகத்தில் வேலை பார்ப்போம் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை. இப்போது எவ்வளவு மாற்றம்.



அகெளண்ட்ஸ் பிரிவில் கிளார்க் என்பதே இல்லை. மணிவேலை அகெளண்ட்ஸ் மேனேஜர் என்று அழைத்தார்கள். அவனுக்கு உதவியாளராக அவன் சொல்வதைக் கேட்கக் கூடியவராக இன்னொரு பணியாளர். அவர் கிளார்க் இல்லை. அவரை அஸிஸ்டெண்ட் அகெளண்ட்ஸ் மேனேஜர் என்று அழைத்தார்கள்.



இப்போது எல்லாம் மாறிவிட்டது. ராஹினி அக்காவும் இப்போது அங்கு வேலையில் இல்லை. அவரும் ஹோம் மேக்கராக மாறிவிட்டிருந்தார்.



பிறந்தது, வளர்ந்தது, படித்தது, உத்தியோகம் தேடிக்கொண்டது, மணமுடித்தது, பிள்ளை பெற்று கொண்டது என்று மணிவேலின் நாற்பத்தைந்து வருட வாழ்க்கை முழுக்க இதே திருச்சியில் தான்!



ஒரே ஊரில் பிறந்து, வளர்ந்து வாழ்க்கையைத் தொடர்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என பொதுவானதொரு பார்வை உண்டு. ஆனால் மணிவேல் போல் நடுத்தர வயதைத் தாண்டியவர்கள், “நான் பார்த்த ஊர் இது இல்லை. அது இது இல்லை” என்று ஒப்பிட்டு மனம் ஒரு ஏதுமற்ற சூன்யப் பிரதேசங்களில் அழுத்தமாகப் படிவதை நீக்க முடியாது தவிப்பார்கள்.



காலை வீட்டிலிருந்து ஒன்பதரைக்குக் கிளம்பிப் பத்து மணிக்கு அலுவலகம் வந்து மீண்டும் மாலை ஏழரை மணிக்குக் கிளம்பி வீட்டிற்கு எட்டு மணிக்குப் போய் என்று ஒரே வடிவமைப்பில் வேலை.



சனிக்கிழமை அரை நாள், ஞாயிறு விடுமுறை, முப்பது அல்லது முப்பத்தியொன்று அல்லது இருபத்தியெட்டு அல்லது நான்கு வருடங்களுக்கொருமுறை ஒரு மாதம் மட்டும் இருபத்தொன்பது என்ற தேதிகளில் ‘எஸ்எம்எஸ்’ பார்த்துச் சம்பளம் பெற்று, செலவு செய்து என்று அதே வாழ்க்கை மணிவேலுக்கு சலிப்பைத் தரத் துவங்கி இருந்தது.



மணிவேல் வீட்டருகே ஒரு பார்க் இருந்தது. அவனின் பால்யத்தில் சாதாரணமாக இருந்த அந்தப் பார்க் இப்போது காலத்திற்கு தகுந்தாற்போல் கொஞ்சம் சொகுசாக மாறி இருந்தது.



ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாற பெஞ்சுகள், பார்க்கைச் சுற்றி வட்டம் போட்டு நடக்க நடை பாதை, நிறைய மரங்கள், சிறுவர்கள் விளையாட சில கருவிகள் இப்படி எல்லாம் அடடே ரகம் தான்.



வார நாட்களில் காலை எட்டு மணிவரை களை கட்டும் பார்க், சனிக்கிழமைகளில் காலை பத்து மணி வரையிலும், ஞாயிற்றுக் கிழமைகளில் பகல் பன்னிரெண்டு மணி வரையிலும் உற்சாகமாக இருக்கும்.



மாலை கேட்கவே வேண்டாம். வாரத்தின் அனைத்து நாட்களிலும் மாலை ஐந்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை உயிர்ப்புடன் இயங்கும்.



மணிவேலும் ஆர்வமாய் காலையிலும் மாலையிலும் அந்தப் பார்க்குக்குச் சென்று பார்த்தான். ஏனோ மனம் ஒட்டவில்லை.



பார்க்குக்கு அருகே இருந்த மைதானத்தில் காலையிலேயே சில இளவட்டங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட் விளையாடியதைப் பார்க்கும் போது மனம் அநியாயத்துக்கு வருத்தப்பட்டது.



ஆசை வெட்கம் அறியாது என்பது உண்மை தான் போல! கவரிங் பந்தில் விளையாடும் அந்தப் பசங்களிடம் போய் “நான் கொஞ்சம் விளையாடுகிறேன்” என்று வெட்கம் விட்டுக் கேட்டான். பசங்களும் விகல்பமாக நினைக்காது பேட்டைத் தர, அதை வாங்காமல் பந்தை வாங்கி பால்யத்தில் தன்னுடைய வேகப் பந்து வீச்சு ஜாலம் எப்படிப்பட்டது என்பதை பசங்களுக்குக் காட்ட மனதுள் சபதம் பூண்டான்.



வேகமாக ஓடி வந்து பந்தை வீசினான். பந்து லென்த்தாக போய் விழுந்தாலும் போதிய வேகம் இல்லை. அசால்ட்டாக, வந்த பந்தை க்ராஸ் பேட் போட்டு ஒரு பையன் விளாச, ஓடி வந்த விளைவால் முட்டி நொறுங்கியது போல் வலி.



அத்தோடு பந்து போன திசையைப் பார்த்து மணிவேல் மனம் துண்டாகச் சிதறித்தான் போனது.



வெளிக்காட்டிக்கொள்ளாமல் “குட் ஷாட் மேன்” என்று சொல்ல அந்த பேட்ஸ்மன் சந்தோஷமாய் பேட்டை நீட்டி “நீங்க விளையாடுங்க அங்கிள்” என்று வலையை விரித்து சிக்க வைத்தான்.



பேட்டை வாங்கி, லெக் ஸ்டம்ப் கார்டு எடுத்து பந்தை எதிர் கொள்ளத் தயாரானான். ஓவர் பிட்ச் பந்து தான், பொதுவாய் ஓவர் பிட்ச் என்றால் லாங் ஆன் அல்லது டீப் மிட் விக்கெட்டுக்கு பந்தை தெறிக்க விடுவது மணிவேலின் அந்தக்கால கிரிக்கெட் ஸ்டைல்.



ஆனால் “மணிவேல் அங்கிள்” திக்கித் திணறித் தடவினான். ஃபுட் வொர்க் சுத்தமாய் இல்லை. இடது காலைச் சரியாக முன்னோக்கி நகர்த்தவில்லை. பந்தை ஒழுங்காகக் கணிக்கவில்லை. வக்கணையாகப் பேட்டைத் தூக்கி காற்றை அடிக்க பேட் அந்தரத்தில் இருக்கும் போது பந்து ஸ்டம்பை அழுத்தமாய் கிஸ் அடித்தது. முட்டி வலி, அவமானம் என மணிவேலின் கிரிக்கெட் ஆசைச் செடி துளிர்க்காமல் பட்டுப் போனது.



அதுமட்டுமா? பார்க்கில் அவன் அமரும் இருக்கைக்கு அருகே உட்காரும் நான்கு பேருக்கு நிறைய கவலைகள் எப்போதும் கைவசம் இருப்பது அவர்கள் பேசும் வார்த்தைகளில் தெரிந்தது.



“எஸ்ஐபி தான் பெஸ்ட்”



“அப்படிச் சொல்ல முடியாது. டைரெக்ட் ஈக்விட்டி இன்வெஸ்ட்மென்ட் ஃபிஃப்டி பர்சென்ட், ட்வென்டி ஃபைவ் பர்சன்ட் மியூச்சுவல் ஃபண்ட், ஃபிஃப்டீன் பர்சென்ட் டெட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், டென் பர்சென்ட் கோல்ட், இது தான் சரியான ப்ரபோஷன்...”



“நீட்க்கு தயார் ஆகணும்னா ஸிபிஎஸ்ஈ தான் பெஸ்ட்னு சொல்றாங்க, அடுத்த வருஷம் ப்ளஸ் ஒன் போற பொண்ணை ஸ்டேட் போர்ட்ல வெச்சா கஷ்டம் தான்!”



“என்ன செய்ய நம்ம ஆளுங்க சரியில்லை. பக்கத்து ஸ்டேட்ல எல்லாம் நவோதயா ஸ்கூல்ஸ் இருக்கு, நம்ம ஊரு தான் விளங்காம போகுது”



இப்படி கருத்துக் கந்தசாமியாகப் பேசுபவர்களைப் பார்க்கவும், பேச்சைக் கேட்கவும் மணிவேலுக்கு எரிச்சலாக இருக்கும். தினமும் பார்க்கும் பழகிய முகம் என்று அவர்கள் இவனைப் பார்த்துச் சிரித்தாலும் பதிலுக்கு மணிவேல் வேண்டா வெறுப்பாய் முகம் கோணி வலிந்து சிரிப்பது போன்ற ஒரு முகபாவத்தை வெளிப்படுத்துவான்.



அன்று சனிக்கிழமை அரை நாள் வேலை முடித்து வீட்டுக்கு வந்த மணிவேலுக்கு, முன்பு சிறு வயதில் தான் குடியிருந்த வீடு இருக்கும் ஏரியாவுக்குப் போக வேண்டுமென ஆசை கிளம்பியது. மாலை ஏழு மணியளவில் வண்டியை எடுத்துக் கொண்டு போனான்.



நல்ல வேளை பெரிய மாற்றமில்லை. அந்தப் பெரிய டீக்கடையுடன் ஒருங்கிணைந்த பெட்டிக்கடை அப்படியே இருந்தது. அந்த மரத்தையும் யாரும் வெட்டவில்லை. கடைக்கு வெளியே சேர், டேபிள், மாலை மலர் பேப்பர். எதிரே அந்த ஜிம், பக்கத்தில் நூடுல்ஸ் கடை எல்லாம் இருந்தது.



அருகே புதிதாக நிறைய கடைகள் முளைத்திருந்தாலும் அவன் எதிர்பார்த்த “சூழல்” மாறவில்லை. நூடுல்ஸ் கடையில் இருந்த கல்லாப்பெட்டி முகம் புதிதாக இருந்தது. டீக்கடையில் உட்கார்ந்து டீயும் குடித்தபடி சாலையை கவனிக்க ஆரம்பித்தான்.



ஜிம்மிலிருந்து மூன்று பேர் வெளியே வந்தார்கள். கல்லூரிக் களை முகத்தில் சொட்டவில்லை. வழிந்தோடியது.



முக பாவனையில் இருந்த அலட்சியமும், நிதானமான திமிரும் அவர்கள் குறைந்தது ஒரு வருடமாக ஜிம் பழகி வருகிறார்கள் என்பதை எடுத்துரைத்தது.



உடற்கட்டும் ஆதார ஆவணமாய் தெரிந்தது. ஒருவன் டைட் ரவுண்ட் நெக் அரைக்கை டீ ஷர்ட்டை கரங்களில் மேலும் மடித்திருந்தான்.



தன் பைஸப்ஸ் காட்டி உலகுக்கு கருத்துச் சொன்னான். நூடுல்ஸ் கடைக்குப் போய் அவர்கள் தங்கள் கைவண்ணத்தைக் காட்டத் துவங்கினார்கள்.



“இவன் ஸீன் போடுவாண்ணே.”



“வெஜிடேரியன் ஆள் ஜிம் செய்யறதுல ஒன்னும் தப்பில்லை.”



“அப்படி சொல்லுங்கண்ணே. பெப்பர் தூக்கலா நூடுல்ஸ் இருக்கட்டும், முட்டை கோஸ் நிறைய அள்ளிப் போட்டு செய்யுங்க, வாழைத்தண்டு கொழம்பு நிறைய ஊத்துங்கண்ணே.” சின்ன வயது மணிவேல், நினைவுகளில் மோதி மணிவேல் அங்கிளைப் பாடாய்ப் படுத்தி எடுத்தான்.



இயலாமை, பச்சாதாபம், கழிவிரக்கம் என்று என்னவென்று சொல்ல முடியாததொரு உணர்வு மணிவேலை வாட்டியது.



ஏதோ முறிந்தது போல் இருந்தது. வண்டியை வேகமாக ஓட்டியபடி வீட்டுக்கு அருகே இருந்த பார்க்குக்கு வந்து சேர்ந்தான்.



கிரிக்கெட் புலிகள் மைதானத்தில் வட்டமாய் அமர்ந்து செயல் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது அவர்கள் உரக்கப் பேசும் வாக்கியங்கள் மூலம் அறிய முடிந்தது. பார்க் உள்ளே நுழைந்து வழக்கமாய் அமரும் இருக்கையில் அமர்ந்தான். பக்கத்தில் அந்த நான்கு கில்லாடிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இவனைப் பார்த்து சிரித்தார்கள். இவன் பதிலுக்கு “சிரித்தது” அவர்களுக்கு வித்யாசமாய் இருந்தது.



“தினமும் பாக்கறேன் உங்க பெயர் கூட கேட்டுத் தெரிஞ்சுக்கல, நான் மணிவேல் அகெளண்ட்ஸ் மேனேஜரா...”



அவர்களும் தத்தமது பெயர், உத்தியோகம், குடும்பம் என அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.



“மூர்த்தி சார் ஏன் பையன் சதீஷ் டென்த் போறான் அவனை ஸிபிஎஸ்ஈ சிலபஸுக்கு மாத்திடலாமா?”



“வேணாம் மணிவேல் சார், டென்த் பப்ளிக் எக்ஸாம், அதனால ஸ்டேட் போர்ட்லயே இருக்கட்டும், நல்ல மார்க் எடுக்க வைங்க, ப்ளஸ் ஒன்ல ஸ்கூல் மாத்துங்க”



சரி என்று தலையாட்டியபடி பார்க்கில் இருந்த முருங்கை மரத்தைப் பார்த்தான். நிறைய காய்கள் பறிக்கப்படாது இருந்தது. ஓரிரு காய்கள் முற்றத் துவங்கி இருந்தன.



சடுதியில் சீதோஷ்ணம் மாறி வெக்கையைக் கூட்டியது. மழை வரக்கூடுமென மணிவேல் மனதுள் தனக்கு சமாதானம் செய்து கொண்டான்.













 
Top Bottom