You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தங்கம் எப்போதும் தகரமாவதில்லை - கோபிகை(இலங்கை) இதழ் 1

ரோசி கஜன்

Administrator
Staff member
அடக்கம், தியாகம், பொறுமை, இரக்கம், அன்பு, அழகு, ஆற்றல், தொண்டு, ஒப்புரவு முதலிய இயல்புகள் சேர்ந்த கலவையே பெண்மை எனப்படும். பெண்மையின் இந்த இயல்புகள் இன்பத்தைத் தரவல்லன என்பது உண்மையே. பெண் என்பவள் வீட்டின் கண்ணாகவும் உலகின் உயிர்ச்சக்தியாகவும் போற்றப்படுகின்றாள்.

பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. அது ஒரு கடல். அதன் உள்ளே அன்பு, பண்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் என, எண்ணற்ற நல்முத்துக்களைத் தேடித்தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையைப் பொறுத்தே அமைகின்றது.

ஒவ்வொரு பெண்களும் அன்பினையும் பாசத்தினையும் தமக்குள்ளே கொண்டிருப்பதைப் போலவே, அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் எங்குபவர்களாகவே காணப்படுகின்றனர்.

அரசாளும் பெண்ணுக்கும் மனதாளும் அரசன் புருஷனாகவே இருப்பர்.

அதற்கேற்றவாறே பெண்கள் தாமும் வாழவேண்டும். எவ்வளவு தான் படித்திருந்தாலும் பட்டம் பெற்றாலும் நற்குணங்களே பெண்ணுக்கான அணிகலனாகின்றது. அடக்கமும் பணிவும், பொறுமையும் இனிமையும் கொண்ட பெண்ணை மனைவியாகப் பெற்றவர்கள் உண்மையில் வரம் பெற்றவர்கள் என்றே கூறவேண்டும்.

நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். என்னதான் வேலைப்பழுவாக இருந்தாலும் பேச்சிலும் நடத்தைகளிலும் மென்மையைக் கைக்கொள்ளாவிட்டால் அங்கே அமைதி தொலைந்துவிடும். ஆங்காரம் குடிகொண்டுவிடும். அடிமைத்தனம் தவறேயன்றி அன்பு காட்டுதல் தவறல்ல. எந்தச் சந்தர்ப்பத்திலும் பெண்ணானவள் பொறுமையும் அடக்கமும் கொண்டவளாக இருத்தல் வேண்டும். அவசரத்தில் வார்த்தைகளை விட்டுவிட்டு பின்னர் அவதிப்படவேண்டி ஏற்படும். குடும்பம் என்ற கூட்டைக் கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்ணுக்கே ஆனது.

அன்பு எனும் நீற்றுற்று தனக்குள்ளேயே இருந்தாலும் எப்போதும் அதை வெளியே யாரிடமாவது தேடி அலைபவள் பெண். இளம் வயதில் பெற்றோரிடம், பருவத்தில் காதலனிடம், திருமணத்திற்குப் பிறகு கணவனிடம், தாயான பின்னர் குழந்தைகளிடம் என்று எப்போதும் யாரையாவது அண்டியே இருப்பவள் பெண்.
அவளால் தன் காலில் தானே நிற்க முடியாது என்று பிறர் குறை கூறுவது உண்டு. ஆனால், இது குறை அல்ல, இதுதான் நிறை. பிறரிடம் எப்போதும் எதிர்பார்த்து, அதை, அவர்கள் தந்தாலும் தராவிட்டாலும், பெண் எப்போதும் தந்து கொண்டேதானிருக்கிறாள். எனவே, அண்டி வாழ்வது அவளுக்கு குறையல்ல, நிறை.
பெற்றோரைச் சார்ந்து வாழும் குழந்தை அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைக்கின்றாள்/ன். காதல் வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் பெண்ணின் இந்த சேர்ந்து வாழும் குணம் தான். கணவன் – மனைவி இணைபிரியாமல் இருப்பதற்குக் காரணம் பெண்ணின் இந்தக் குணம் தான்.

சார்ந்து வாழுதல் இயல்பானது. அது வரமானது. அதைப் புரிந்து நடந்தால் பெண்மை என்றும் போற்றுதலுக்குரியதே!

 
Top Bottom