நானும் முகப்புத்தகமும்

நிதனிபிரபு

Administrator
Staff member
இந்த ஏப்ரல் முதலாம் திகதி நான் பேஸ்புக் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே ஒரு பொக்ஸ் வந்து விழுந்தது. என்ன என்று பார்த்தால், ஒரு இன்ஸ்டா ஐடியின் பெயரைப் போட்டு, அந்த இன்ஸ்டா ஐடி மூலம் இந்த முகப்புத்தகக் கணக்கினுள் நுழைய முயன்றதால் என் கணக்கினைத் தாம் முடக்குவதாக அறிவித்து இருந்தார்கள்.

கூடவே, அவர்களின் அந்த முடிவு தவறு என்று கருதும் பட்சத்தில் அடுத்த 180 நாள்களுக்குள் அவர்களின் முடிவுக்கு எதிராக நான் அப்பீல் செய்யலாம் என்றும், அப்படிச் செய்யாதுவிட்டால் 180 நாள்கள் கடந்து அவர்கள் என் கணக்கினை நிரந்தரமாக மூடி விடுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்கள்.

அதே நேரம், US இல் இருந்து என் கணக்கினுள் யாரோ உள் நுழைய முயன்று இருக்கிறார்கள் என்று எனக்கு Metaவிலிருந்து மெயிலும் வந்தது.

உண்மையில் என்ன செய்வது, ஏது செய்வது என்று கொஞ்ச நேரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. என் ஃபோனில், கணவரின் ஃபோனில், pcயில் என்று இருக்கிற அத்தனை டிவைஸிலும் சென்று பார்த்தாலும் அதையேதான் காட்டியது.

சரி, அவர்கள் சொன்னதுபோல அப்பீல் செய்யலாம் என்றாலும் அதற்கு எந்த வழியையும் காணோம். ஃபேஸ்புக் ஹெல்ப் செண்டர் வாயிலாகவோ, இல்லை அவர்கள் சொல்கிற எந்த வழியில் போனாலும் உருப்படியாக ஒன்றையும் செய்ய முடியவேயில்லை.

யூ டியூபில் வீடியோ பார்த்து, கூகிளில் சேர்ச் பண்ணி பார்த்தபோது ஒன்று மட்டும் புரிந்தது. எனக்கு மட்டுமில்லை இப்படி நிறையப் பேருக்கு இது நடக்கிறது என்று.

பேஸ்புக் ஹெல்ப் செண்டர் வாயிலாகக் கிடைத்த ஒரு லிங்க் மூலம், ஐடி புரூப் கொடுத்து, நான் ஜெர்மனியில் வசிப்பவள் என்று காட்டியும் எந்தப் பதிலும் இல்லை.

கடைசியில், நம்முடைய சொந்த இன்ஸ்டா ஐடியில் சென்று, அங்கே Meta Verified செய்து, அதன் பிறகு இன்ஸ்டா சப்போர்ட் லைவ் சேட் மூலம் ஒரு நபருடன் நாம் பேசி, நம் பிரச்சனையைச் சொன்னால் தீர்த்துவைப்பார்கள் என்றும், அப்படி நான் என் கணக்கினைத் திரும்பப் பெற்றேன் என்றும் யாரோ ஒருவர் எழுதி இருந்தார்கள். ஆனால், அவருக்குக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தார்.

அவரின் அந்தப் போஸ்ட்டுக்கு கீழேயே பலர் தாம் அப்படி முயன்றதாகவும், ஆனாலும் தம் கணக்குத் திரும்பக் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தார்கள்.

சாதாரணமாக யோசித்துப் பார்த்தால் ஒரு முகப்புத்தகக் கணக்கிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்று இருந்தது. ஆனால், அங்கேதான் என் எழுத்துலக வாழ்க்கை முழுவதும் புதைந்து கிடக்கிறது.

என் முதல் புத்தக வெளியீட்டு அறிவிப்புத் தொடங்கி, அத்தனை அத்தனை விமர்சனங்களிலிருந்து எல்லாமே அங்கேதான். கூடவே பல நினைவுகள், பல புகைப்படங்கள், இனிய பல போஸ்ட்டுகள், ஏன் என் பிள்ளைகள் பற்றி அவ்வப்போது நானே எழுதி, நானே மறந்துபோன பலவற்றை வருடங்கள் கடந்து முகப்புத்தகம் நினைவூட்டுகையில் அப்படி ஒரு சிரிப்பு வரும்.

ஏன், சிறுபிள்ளைத் தனமாக நான் பொங்கிய பொங்கல்களைக் கூட ரசித்துச் சிரித்திருக்கிறேன்.

அமேசான் அக்கவுண்ட் போன நேரம் என் கதைகளோடு சேர்ந்து அங்கு எனக்குக் கிடைத்த முத்து முத்தான கொமெண்ட்ஸ் கூடப் போய்விட்டதே என்று முதலில் பெரும் கவலையாக இருந்தது. அப்போது, அவை எல்லாவற்றையும் பேஸ்புக்கில் எடுத்துப் போட்டிருக்கிறேன், அதையெல்லாம் தேடி எடுத்து சைட்டிலும் போட்டு வைக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்க, பேஸ்புக் எக்கவுண்டும் இல்லை என்றால் எப்படி?

அதைவிட அடுத்தடுத்து அமேசான் அக்கவுண்ட், அதன் பின்னால் பேஸ்புக் அக்கவுண்ட் என்று போகையில் என்ன இது என்று காரணமற்ற ஒரு மன அழுத்தம் வேறு.

ஐடி புரூப் கொடுத்தும் பலன் இல்லை என்றதும் கடைசி முயற்சியாக Meta Verified செய்து பார்க்க முடிவு செய்தேன். நம்பிக்கை இல்லை. ஆனாலும், இருக்கிற வழிகளை எல்லாம் முயலாமல் விடுவதும் தவறுதானே என்று ஒரு மாதத்துக்கு 19,99 யூரோ என்று கட்டி முதலில் என் இன்ஸ்டா கணக்குக்கு ப்ளூ டிக் வாங்கிக்கொண்டேன்.

அதற்குப் பணம் செலுத்துகையில் 24 மணித்தியாலங்கள் தொடக்கம் 72 மணித்தியாலங்கள் பிடிக்கும் என்று பதில் வந்தது.

இனி இதற்கு வேறு மூன்று நாள்கள் காத்திருக்க வேண்டுமா என்கிற சலிப்புடன் சமைக்கப் போனால், அடுத்த ஐந்தாவது நிமிடம் ப்ளூ டிக் விழுந்திருந்தது.

உண்மையில் கொஞ்சம் பதற்றமாயிருந்தது. சரியாகக் கதைக்க வேண்டும், என் பிரச்சினையை முறையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால், மிகவும் பதற்றமாக இருந்தேன்.

இன்ஸ்டா சப்போர்ட் லைவ் சேட்டை நான் திறந்ததும் நான் எதுவும் சொல்ல முதல், ‘ஹாய் நான் டிம், Meta Pro Teamமில் இருப்பவன். நான் உனக்கு எந்த வகையில் உதவி செய்யலாம்?’ என்று கேட்டு வந்தது மெசேஜ்.

அடேய் என்னடா, காசக் கட்டினதும் தீயா வேலை செய்றீங்க. கொஞ்சம் பொறுங்கடா மூச்சை எடுத்து விட்டுட்டு வாறன் என்றுதான் இருந்தது எனக்கு.

பிறகு நானும் என்னுடைய பிரச்சனையைச் சொன்னேன். முக்கியமாக் கவனிக்க வேண்டியது. இருந்த பதற்றத்தில் நான் ஒரு ஹாய் கூட அவனுக்குச் சொல்லவில்லை. மொட்டையாக என் பிரச்னையை மட்டுமே சொன்னேன்.

உடனே அவன் கேட்டான், அதவாது உன் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக நீ நினைக்கிறாயா என்று.

நானும் உடனே ஆம் என்று போட்டுவிட்டேன்.

அதன் பிறகு என் பேஸ்புக் அக்கவுண்ட் நேம், அக்கவுண்ட் லிங்க், ஒரு மெயில் ஐடி என்றெல்லாம் கேட்டான். நானும் எனக்கு வந்த மெயில், பேஸ்புக்கில் என் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த அந்த பாக்ஸ் எல்லாவற்றையும் எஸ் எஸ் ஆக அனுப்பி, அந்த இன்ஸ்டா கணக்கு என்னுடையது இல்லை. நான் US ல் வசிக்கவும் இல்லை என்று பக்கத் தரவுகளைக் கொடுத்தேன்.

அதன்பிறகு தங்களுடைய டீமில் இது சம்மந்தமாக வேலை பார்ப்பவர்களிடம் என் பிரச்னையைத் தான் கொண்டு செல்வதாகவும், நான் கொடுத்திருக்கும் மெயில் ஐடிக்கு விரைவில் தாம் பதில் போடுவதாகவும் சொல்லியிருந்தான்.

சரி என்று பார்த்தால் அடுத்தடுத்த நாள்கள் அதே கேள்விகள்தான். கூடவே, எதை வைத்து உன் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறது என்கிற முடிவுக்கு வந்தாய், நீ எப்போது அதை அறிந்தாய் என்று ஒரே மாதிரியான கேள்விகள்.

அப்போதுதான் எனக்குச் சந்தேகம் வந்தது, உண்மையில் என் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா என்று.

அதில் திரும்ப ஒரு விரிவான மெசேஜ் நான் அவனுக்கு எழுதினேன்.

ஹாய் டிம்,

நான் உனக்குத் தவறான பதிலைத் தந்துவிட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. நான் முகப்புத்தகம் பார்த்துக்கொண்டு இருக்கையில் திடீர் என்று என் கணக்கு முடக்கப்பட்டது. அதில், ஒரு இன்ஸ்டா கணக்கின் பெயரைக் குறிப்பிட்டு அந்தக் கணக்கிலிருந்து என் முகப்புத்தகத்தை லிங்க் செய்து, அதன் மூலம் என் முகப்புத்தகக் கணக்கினுள் நுழைய முயன்றதாகச் சொல்லப்பட்டிருந்தது. அது என் இன்ஸ்டா கணக்கு இல்லை. நான் Nithani Prabu என்கிற பெயரில் மட்டும்தான் முகப்புத்தகத்திலும் இன்ஸ்டாவிலும் இருக்கிறேன். கூடவே, யாரோ ஒருவர் usஇல் இருந்து என் கணக்கினுள் நுழைய முயன்றதாக metaவிலிருந்து மெயிலும் வந்தது. ஆனால், நான் ஜெர்மனியில் வசிக்கிறேன். இது ஹேக்கினுள் வருமா என்று எனக்குத் தெரியவில்லை என்று எழுதி அனுப்பினேன்.

அப்போது அவன் அனுப்பினான் எனக்கு உன் பிரச்சனை புரிகிறது நிதனி. நான் Tom என்று. அப்போதுதான் எனக்கே தெரிந்தது டிம் என்னைக் கைவிட்டு, அதன் பிறகு Tom என் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறான் என்று.

போங்கடா டேய் என்றுதான் இருந்தது.

பிறகு திரும்ப உன் புரொபைல் நேம் என்ன, பேஸ்புக் லிங்க் என்ன, மெயில் ஐடி தா என்று அதே கேள்விகள்.

உண்மையில் எனக்கு எரிச்சலும் நம்பிக்கையின்மையும் மட்டுமே இருந்தன. ஆனாலும், என்ன முடிவானாலும் அந்த முடிவு கிட்டுகிற வரை முயற்சியை விடக் கூடாது என்று அனைத்தையும் கொடுத்தேன்.

அவனும் உன் மெயிலுக்கு பதில் போடுவோம் என்று டிம்மைப் போலவே சொல்லிவிட்டுப் போனான்.

அடுத்த நாள் ஹலோ என்று போட்டேன். பதில் இல்லை. அதற்கு அடுத்த நாள், ‘ஹாய் Tom, நான் இன்னும் உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்’ என்று அனுப்பி விட்டேன்.

அப்போதும் பதில் இல்லை.

பிறகு நேற்றுக் காலை எடுத்துப் பார்த்தால் Tom என்னைக் கைவிடவில்லை. ஹாய் நிதனி, உன் மெயிலை செக் பண்ணு, அப்படியே பாஸ்வேர்ட் மாத்து, கூடவே நீ கவனமாக இருக்க வேண்டிய விடயங்கள் இன்னென்ன என்று சொல்லி அனுப்பிவிட்டு, உன் கணக்கினை நீ எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மீளப் பெற்றுக்கொண்டாயா என்று எனக்குத் தெரியப்படுத்து என்று அனுப்பியிருந்தான்.

ஓடி வந்து மெயில் திறந்து பார்த்து, அவர்கள் சொன்ன படிமுறைகளைப் பின்பற்றிப் போனபோது என் கணக்குத் திரும்ப வந்திருந்தது.

உண்மையில் என் மகிழ்ச்சியின் அளவைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

ஓடிப்போய் அவனுக்கும் ‘உன் நேரத்துக்கும் எனக்காக நீ எடுத்துக்கொண்ட சிரத்தைக்கும் மிக்க நன்றி Tom. என் கணக்குத் திரும்பக் கிடைத்துவிட்டது, நீ சொன்னதுபோலவே பாதுகாப்பது நடவடிக்கைகளையும் செய்துவிட்டேன்’ என்று சொன்னதும் அந்த சேட் அதோடு நிரந்தரமாக மூடப்பட்டது.

அச்சோ, என் கணக்குக் கிடைத்துவிட்டது என்கிற மகிழ்ச்சியில் முகப்புத்தகத்தில் போஸ்ட் எல்லாம் போட்டேன். பிறகு பார்த்தால் மெசெஞ்சரில் என்னால் மெசேஜ் பண்ண முடிகிறது. ஆனால், என் நண்பர்களால் எனக்குப் பதிலோ, மெஸேஜோ பண்ண முடியவில்லை. குரூப்பில் பேச முடிகிறது. தனித்தனியாகப் பேச முடியவில்லை. இது என்னடா புது வியாதி என்று இருந்தது.

பேஸ்புக் ஹெல்ப் செண்டரில் போய் எத்தனை மெசேஜ் போட்டும் பதில் இல்லை. அதில் ஒரு இடத்தில் இருந்தது, உன் கைப்பேசியை ஷேக் பண்ணினால் என்ன பிரச்சனை என்று கேட்கும். அதில் நீ தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்தால் சொல்லலாம் என்று.

மெஸெஞ்சரை திறந்து வைத்துக்கொண்டு ஃபோனை ஷேக் பண்ண, உண்மையில் கேட்டு வந்தது. நானும் என் பிரச்னையைச் சொன்னேன். ஆனாலும், பதிலே இல்லை.

அப்போதுதான் Meta Verified செய்து வைத்து இருக்கிறோமே, காசு வேறு கட்டி இருக்கிறோம், அவனை ஏன் சும்மா விட என்று அங்குத் திரும்ப ஓடினேன்.

திரும்பவும் புது இன்ஸ்டா சப்போர்ட் லைவ் சேட்டை திறக்க இந்தமுறை வந்தவன் Max. ஆனால் ஒன்று, இந்த முறை என்னவோ தெரிந்த நண்பனிடம் பேசும் இயல்பு எனக்கு வந்திருந்தது. உண்மையைச் சொல்லப்போனால் ‘நிதனி, இருக்கிறாயா?’ என்று அவன் கேட்டு, ‘உனக்கு நேரம் இருக்கிறபோது என் கேள்விக்குப் பதில் அனுப்பு’ என்று அவன் சொல்லும் அளவுக்கு நான் இயல்பாகியிருந்தேன்.

கடைசியில் மெசெஞ்சரில் எனக்கு இருக்கிற பிரச்னையைச் சொல்லி, என் புரொபைல் நேம், பேஸ்புக் அக்கவுண்ட் லிங்க் எல்லாம் கொடுத்து, அவன் சொன்ன நடைமுறைகளை நானும் செய்து, கடைசியில் தனக்குத் தெரிந்து எந்த டெக்கினிக்கல் பிரச்சனையும் இல்லை என்றும், எதற்கும் 24 மணிநேரங்கள் எனக்குத் தர முடியுமா என்றும் கேட்டிருந்தான்.

அவன் சொன்னதுபோல, இப்போது ஓரளவுக்கு சிலரால் எனக்கு மெசேஜ் அனுப்ப முடிகிறது. சிலரால் இன்னுமே முடியவில்லை என்று நினைக்கிறேன்.

இன்னும் இரண்டு நாள்களில் அதுவும் சரியாகாவிட்டால் திரும்பவும் போவேன். அதுதான் காசு கட்டி இருக்கிறேனே. அதற்கான பிரயோசனத்தை நான் பெற வேண்டாமா?

ஆரம்பத்தில் ஒரு விதமான மன அழுத்தம் தரும் சம்பவமாக இருந்தாலும் இது எனக்கு வித்தியாசமான அனுபவம். கூடவே, கணக்குத் திரும்பக் கிடைத்ததில் அது மகிழ்வான ஒரு நிகழ்வாக வந்து முடிந்திருக்கிறது.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டு, இணையத்தில் காட்டுகிற அத்தனை வழியிலும் முயன்று தோல்வியுற்று, அடுத்து என்ன செய்வது என்று தெரியாது திணறியபோது, அந்த யாரோ ஒருவரின் போஸ்ட் தான் என்னை இந்த வழியில் வழி நடத்தியது.

அதேபோல், என்னுடைய இந்தப் பகிர்வு எதிர்காலத்தில் என்னைப் போல் திக்குத் தெரியாமல் நிற்கும் யாராவது ஒருவருக்கு வழிகாட்டட்டும் என்று நினைத்தேன்.

அவ்வளவுதான்.

நட்புடன் நிதா.
 
Last edited:
Top Bottom