• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் - 9

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 9

கோவிலில் வைத்து மிக எளிமையாக யாமினியின் கழுத்தில் தாலி கட்டினான் விக்ரம். அசோக்கின் குடும்பம், அவர்களின் சொந்தம், அயலட்டை மனிதர்கள் என்று நெருக்கமானவர்கள் மட்டுமே அங்கே வந்திருந்தாலும் யாமினி நிறைவாய் உணர்ந்தாள்.

கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மனையில் வீற்றிருந்தனர் விக்ரமும் யாமினியும். வேட்டி சட்டையில் கம்பீரமாக அருகில் அமர்ந்திருப்பவன் அணிவித்துவிட்ட தாலியிலும், அவன் வைத்துவிட்ட குங்குமத்திலும் மனம் தளும்பிக்கொண்டிருந்தது அவளுக்கு.

இத்தனை நாட்களும் அவளை ஒதுக்கிய ஊருக்கும், மரியாதையின்றி அலட்சியமாய் வீசிய பார்வைகளுக்கும் பதிலடி கொடுத்து அவளை அவன் கௌவுரவப்படுத்திவிட்டதாகவே மனம் சொல்ல, நிறைந்த மனதோடு நிமிர்ந்து அமர்ந்தாள்.

எல்லோர் முகத்தையும் புன்னகையோடு நோக்கியபோதுதான், சந்தனாவோடு செல்பி எடுத்துக்கொண்டிருந்த டெனிஷ் கண்ணில் பட்டான். அவள் புன்னகை இன்னுமே மலர்ந்துபோயிற்று!

திருமணத்தின்போது வேட்டி சட்டை அணிந்து, சந்தோசமாகவே கடைசிவரை அவன் நின்றது விக்ரமின் வளர்ப்பைப் பறைசாற்றுவதாக அமைந்தது. இத்தனை வெக்கையிலும் அடிக்கடி காற்றாடிக்கு அருகே ஓடி ஓடிப்போய் அமர்ந்தாலும் ஒருமுறை கூடத் தகப்பனிடம் இதை மாற்றி வேறு அணியட்டுமா என்று கேட்கவே இல்லை.

‘அருமையான பிள்ள!!’ யாமினியின் மனம் இப்போதும் சீராட்டிக் கொண்டது.

டெனிஸுக்கும் தன் அப்பாவுக்குக் கல்யாணம் நடந்துவிட்டதில் அத்தனை சந்தோசம்.

விக்ரம் யாமினியுடன் சேர்ந்து விதம் விதமாகச் செல்பிகளைக் கிளுக்கிக் கொண்டிருந்தான். சந்தனாவையும் விட்டு வைக்கவில்லை. அந்தக் குட்டியும் ஐபாட், ஐபோன் என்று சுற்றும் தமயனுடன் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.

விக்ரம்தான் சற்றுத் தடுமாறிப்போனான். என்ன முயன்றும் முடியாமல் யாஸ்மினின் நினைவுகள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து அவனை ஒரு சுழற்றுச் சுழற்றிக்கொண்டிருந்தது!

அவள் நினைவே தனக்குள் வரக் கூடாது என்றுதான் அவனும் உறுதியாக நினைக்கிறான். ஆனால், அடைத்து வைத்திருக்கும் பைப்பை உடைத்துக்கொண்டு திடீரெனச் சீறிப்பாயும் தண்ணீர் போல, அவளும் வந்துவிட்டுப் போகிறாள்.

இதே முதல் திருமணம், அதோடான அந்த நாட்கள், அந்தத் திருமணத்தைப் பல கனவுகளோடு இருவருமே எதிர்பார்த்தது, இருவரின் கற்பனைகளையும் ஒன்றாக்கித் திருமணத்தை ஒழுங்கு படுத்தியது, அவளுக்காக அவன் ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்துச் செய்தது, கட்டத் தெரியவே தெரியாத சேலையை அவனுக்காகக் கட்டிக்கொண்டு, “நல்லாருக்கா? உனக்குப் பிடிச்சிருக்கா?” என்று கண்களில் ஆவல் மின்ன ஆயிரம் தடவைகள் கேட்டது, அதன் பிறகான சொர்க்கமாய்க் கழிந்த நாட்கள் என்று அன்றைய நாட்கள் வேண்டாம் வேண்டாம் என்று மறுத்தாலும் கண்முன்னே வந்து வந்து போயின.

உருகி உருகி நேசித்த காதல் தோற்றுப்போன வலி ஒருபுறம் என்றால், தன் வாழ்க்கை இப்படிப் பிசகிப் போனதே என்கிற வேதனை மறுபுறம் நின்று தாக்க வெகுவாகவே தடுமாறிப்போனான். அவள் இறந்தகாலம் நிகழ்காலம் யாமினிதான் என்று எத்தனையோ முறை தனக்குள் சொல்லிக்கொண்டாலும் அதையும் மீறி அவனை அலைகழித்துக் கொண்டிருந்தாள் யாஸ்மின்.

யாமினியை மனமார ஏற்றுத்தான் தாலி கட்டினான். ஆனால், யாஸ்மினை மனதிலிருந்து வெளியேற்றி இவளை நுழைக்கும் அந்த இடைவெளிக்குள் கிடந்து இவன் மனம் அல்லாடியது.

அந்த ஆண்டவனிடம் மனதார வேண்டினான்.

‘இனி இவள்தான் என் துணை. கடைசிவரை எங்களைச் சந்தோசமாக வாழவை ஆண்டவனே! அவளும் அவள் கணவனோடு நல்லா இருக்கட்டும்.’ என்றுமே யாஸ்மின் மீது பழிவெறி தோன்றியதில்லை. வாலிபத்தை எட்டிய நாள் தொட்டு அவன் ஆசைப்பட்டு மணந்த பெண். அவள் இன்னும் நல்லாருக்க வேண்டும் என்றே மனம் நாடியது.

இன்று தனக்கும் மனைவி என்று ஒருத்தி வந்துவிட்டாள் என்கிற நினைப்பும், அவள் கழுத்தில் அவன் அணிவித்துவிட்ட தாலியுமே இன்னும் கொஞ்சத் தூரத்தில் யாஸ்மினைத் தள்ளி நிறுத்தியதுபோல் உணர்ந்தான்.

யாமினியும் கணவனை அவ்வப்போது கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். அவன் சிந்தனைகள் எங்கோ ஓடுவதும், பிறகு தலையை உலுக்கித் தன்னை இங்கே கொண்டுவருவதும் என்று இருக்க இவளுக்குள் மீண்டும் கலக்கம் எட்டி எட்டிப் பார்த்தது.

‘பிழையான முடிவு ஏதும் எடுத்துட்டன் எண்டு நினைக்கிறாரோ…’

“ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?” மெல்லிய குரலில் கேட்டாள்.

அவளைத் திரும்பிப் பார்த்த விக்ரம், அப்போதுதான் அவள் கண்களைக் கவனித்தான். அவ்வப்போது தோன்றும் கலக்கம் அப்போதும். அதற்குக் காரணம் அவனுடைய சிந்தனைச் சிதறல்! உள்ளுக்குள் தன்னையே குட்டிக்கொண்டான்.

“ஒண்டும் இல்ல. இது வேற.” என்றான் சமாளிப்பாக.

‘அவள மறக்கோணும். மறக்கிற அளவுக்கு நீ எனக்குள்ள வரோணும்.’ மனதில் சிந்தனை ஓட, தன்னை அறியாமலேயே அவன் அவளையே பார்க்க, “இப்ப என்ன?” என்றாள் அவள்.

“உன்னையே நினைச்சுக்கொண்டு இருக்கிற மாதிரி ஏதாவது செய்யன்?” கேட்டே விட்டான் அவன்.

‘ஐயோ இதென்ன?’ என்று அதிர்ந்து தடுமாறிப்போனாள் அவள். முகத்தை நிமிர்த்தவே முடியவில்லை. அவன் விழிகளில் ரசனை படர்ந்தது. ஒரு கவிதையாய் வெட்கப்பட்டவள் மீது ஆர்வத்தோடு தன் பார்வையை நிலைக்கவிட்டான்.

உண்மையிலேயே பூ முகம்தான். வெயிலில் வேலை செய்வதால் சற்றே கறுத்திருந்தாள். அது கூட இன்றைய மணப்பெண்ணுக்கான மேக்கப்பில் மறைக்கப்பட்டிருக்க, அவளின் வெட்கமும் சேர்ந்துகொள்ள மிகுந்த அழகாய் ஜொலித்தாள்.

அந்த ஜொலிப்பு அடிக்கடி அவன் கண்களை அவளிடம் இழுக்க, அதை உணர்ந்தவளோ உணராதவள் போன்று பாவனை காட்டுவதில் படாத பாடு பட்டுக்கொண்டிருந்தாள். இந்தப் பார்வைகளும் தடுமாற்றங்களும் அவனுக்குள் இருந்த அலைப்புருதலிலிருந்து வெளியே வர அவனை அறியாமலேயே உதவிற்று.

ஒரு வழியாக, திருமணம், அதன் சடங்குகள் எல்லாம் முடிந்து மாலை எல்லோரும் அசோக் வீட்டில் அமர்ந்திருந்தனர்.

எல்லோருக்குமே ஒரு சந்தோசம் கலந்த அயர்ச்சி. அதுவும் மரகதம் அம்மா, தனியாகவே இருந்த பெண், ஊர் வாயில் அகப்பட்டு மெல்லப்பட்டவள் வாழ்க்கை சீராகிவிட்டதில் நிம்மதியாக உணர்ந்தார்.

அப்போது சந்தனாவுடன் விளையாடிக் களைத்து அவளையும் தூக்கிக்கொண்டு வந்தான் டெனிஷ். “பாப்ஸ்! எனக்கு இன்னும் ரெண்டுநாள்ல ப்ளைட்.” என்று விக்ரமுக்கு நினைவூட்டினான்.

தகப்பனைக் கண்டுவிட்டு அவனிடம் தாவினாள் குழந்தை. அவனும் அவளை வாங்கி, வயிற்றில் முகத்தை வைத்துக் கிச்சுக் கிச்சு மூட்டி விளையாடவும் கிக்கிக்கீ என்று சிரிக்கத் தொடங்கினாள்.

“அண்ணாவும் அப்பாவும் தூக்கி தூக்கி நல்லா கெடுத்து வச்சிருக்கீனம்.” என்று செல்லமாகத் திட்டியபடி எழுந்து சென்று, டெனிக்கு பிடித்த விதமாகக் கரைத்து வைத்திருந்த ஒரேஞ்ச் ஜூசினை ஒரு கிளாசில் கொண்டுவந்து கொடுத்தாள் யாமினி.

தகப்பனின் அருகிலிருந்த இன்னோர் கதிரையில்(நாற்காலி) அமர்ந்திருந்த டெனிஷ் அதைக் குடித்து முடித்ததும் வெறும் கிளாசை வாங்கிக்கொண்டு, “இன்னும் கொஞ்சநாள் இருந்திட்டுப் போகலாமே டெனிஷ்.” என்று கேட்டாள்.

“எனக்குப் புட்பால் மாட்ச் இருக்கு. இந்த முறை நாங்க கப் வாங்கியே ஆகோணும். இல்லாட்டி மானமே போய்டும்.” என்றான் அவன் பெரிய மனிதனாக.

‘நீங்களாவது சொல்லுங்கோவன்.’ யாமினி கண்ணால் விக்ரமிடம் சொல்ல, “அவன் மாட்ச் எண்டா என்னையே மறந்துடுவான். நிக்கமாட்டான்.” என்றான் அவன் மகனை அறிந்தவனாக.

“யாயா!” என்றான் டெனிசஷும்.

அவனைப் பார்த்தவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சின்னப் பாலகன்தான். ஆனால், அவனது நடப்பும் பேச்சும் என்னவோ பெரியவன் போல்தான் இருக்கும். அப்படித்தான் அன்று முதன்முதலாக அவன் வந்த அன்றும்!

டெனிஷ் வரப்போகிறான் என்று விக்ரம் சொன்னதுமே கலங்கித்தான் போனாள் யாமினி.

அதைக் கவனித்துவிட்டு விக்ரம் கேட்க, “இல்ல. அது உங்கட மகன்… அவனுக்கு என்னைப் பிடிக்காம…” என்று அவள் இழுக்கும்போதே, “இனி அவன் உனக்கும் மகனில்லையா யாமினி?” என்று மென்மையாகக் கேட்டான் விக்ரம்.

“இல்லையில்லை! நான் பிரிச்செல்லாம் பாக்கேல்ல.” பதறிவிட்டாள் அவள். பிரிவினை காட்டுவதாக எண்ணிவிடுவானோ என்று நினைத்த மாத்திரத்திலேயே சூடான கண்ணீர் கன்னங்களை நனைத்துக்கொண்டு ஓடியது.

அவன் கண்களைப் பார்த்து, “சந்தனாவ மாதிரியே அவனையும் நான் பாப்பன். அதுக்கு முதல் அவன் என்ன ஏற்றுகொள்ள வேணுமே?” என்றாள் தவிப்போடு. “என்னைப் பிடிக்காட்டி?” சிறு குழந்தைபோல் கலங்கியவள் மீது பாசம் பொங்கியது அவனுக்கு.
 

Goms

Active member
Wow கல்யாணம் முடிஞ்சாச்சு 🥰🥰🥰

டெனிஷ்க்கு இந்த அம்மாவைப் பிடிச்சிருக்கு.. கூடவே குட்டித் தங்கையும்...
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom