You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ தந்த கனவு - டீசர்

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய் ஹாய்,

பெரும்பாலும் திங்கட்கிழமை முதல் அத்தியாயத்தோட வருகிறேன்.

இப்ப டீசர் என்கிற பெயரில் சில குட்டிக் குட்டிக் காட்சிகள். ஆனால், இதெல்லாம் முதல் அத்தியாயத்தில் வரும் என்று மட்டும் நினைச்சிடாதீங்க. எந்த அத்தியாயத்தில் எப்படி எப்போது வரும் என்று தெரியாது.

ஆனால் வரும்.

நீ தந்த கனவு - நிதனிபிரபு
அவன் முன்னால் வந்து நின்று, “இப்ப நீ கடைக்குப் போகப்போறியா இல்லையா?” என்று ஆங்காரமாகக் கத்தினாள்.

கத்தி முடிக்க முதலே அவளின் கன்னத்தில் பளார் என்று இறங்கியது தமையனின் கரம். அப்படியே சுழன்று சோபாவில் விழுந்தாள் ஆதினி.

கண்களில் பொறி பறந்தது. நம்பமுடியாத அதிர்ச்சியோடு தமையனைப் பார்த்தவளின் விழிகளில், அவனுக்குப் பின்னால் திருப்தியான முகபாவனையோடு நின்றிருந்த சியாமளா பட்டாள்.

“எல்லாத்துக்கும் பிடிவாதம். தொட்டதுக்கும் அடம்! இந்தப் பிடிவாதமும் அடமும் தானே ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர உயிரையே பறிச்சிருக்கு. அப்பவும் அடங்கேல்லையா நீ? உன்னையெல்லாம்..!” என்று கர்ஜித்தான் அகரன்.

தமையனையே வெறித்தாள் ஆதினி. வாய் அவனுடையதாக இருந்தாலும் வார்த்தைகள் எல்லாம் அவனுடைய வருங்கால மனைவியினுடையது! அவன் அறைந்ததை விடவும் அதுதான் இன்னும் வலித்தது. அவளின் கண்முன்னே நிற்பவன் அவளின் தமையன் அல்ல! சியாமளாவின் வருங்காலக் கணவன். அப்படித்தான் தெரிந்தான் அவளின் கண்களுக்கு.

—------------------------------------------

“எனக்கு இப்ப முப்பத்திரண்டு வயசு. வயசும் போகுது, வாழ்க்கையும் போகுது, வாலிபமும் போகுது. நானும் எப்பதான் உன்னோட வாழுறது, சொல்லு!” என்றவன் அவளை இறுக்கி அணைக்க, “ம்ம்.. குத்துது..” என்றபடி அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள் அவள்.

“என்ன குத்துது?”

“உங்கட நேம் பட்ச்.”

அதைக் குனிந்து பார்த்துவிட்டுக் குறும்புடன் நிமிர்ந்து, “எங்க குத்துது?” என்று கேட்டான் அவன்.

சட்டென்று பூத்துவிட்ட வெட்கச் சிரிப்புடன் அவள் வேகமாக முகத்தை திருப்ப, பிடித்து இழுத்து ஆசையாக அவள் இதழ்களில் தன் உதடுகளை ஆழப் பதித்துவிட்டுச் சிரித்தான் அவன்.

—----------------------------------------

பார்வைக்கு மறையமுதல் அழகான சிரிப்புடன் திரும்பி அவளைப் பார்த்தான். அதுவரை, உடையாமல் திடமாக நின்றவளின் விழிகள் மளுக்கென்று நிறைந்து போனது. ஒரு காலத்தில் அவளை எரிச்சலூட்டி வெறுக்க வைத்த நரிச் சிரிப்பு. பிறகு பிறகு ரசிக்க வைத்து, உயிராகக் காதலிக்க வைத்த அதே சிரிப்பு! இனி எப்போது காண்பாளோ?

“சும்மா சும்மா அழாதடி! எனக்கு மட்டும் தலைவர்களின்ர பிறந்தநாளும் சுதந்திர தினங்களும் வராமையா போகபோகுது. வரும்! வருவன்! நான் சொன்னதெல்லாம் நடக்கும்! ரெடியா இரு!” என்றுவிட்டுப் போனான்.


—--------------------------------------------

“அவன் ஒண்டும் நல்லவன் இல்ல. குற்றவாளி. அதுவும், ஒரு குடும்பப் பொம்பிளையின்ர வாழ்க்கையை சீரழிச்ச கடுமையான குற்றவாளி. அவனை உள்ளுக்கு போட்டதுக்கு நீ சந்தோசம் தான் படோணும்!” என்றார் அவர்.

“உண்மைதான். சட்டத்துக்கு முன்னால அவன் குற்றவாளிதான். அதுக்காக, வெளில இருக்கிற நாங்க எல்லாரும் நல்ல மனுசர் எண்டு அர்த்தமில்லை.” என்றுவிட்டு, ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டான் அவன்.

மனம் மட்டும் புழுங்கிக்கொண்டு இருந்தது.

—-------------------------------

“அத்த..” என்றபடி வந்தாள் மகிழினி.

நிர்சிந்தையாகக் கட்டிலில் சரிந்திருந்தவள் திரும்பிப் பார்த்தாள். அச்சு அசல் தமையனின் வார்ப்பில் கதவு நிலையைப் பற்றியபடி நின்றிருந்தாள் அவள். பார்த்தவளின் நெஞ்சினில் பாசம் சுரந்தது. தமையன் அவளை ஏமாற்றி இருக்கலாம். இருந்தாலும், அவள் கொண்ட பாசம் பாசம் தானே!

அறையின் உள்ளே வருவதற்கான அனுமதியை கண்ணில் வேண்டியபடி நிற்பது கருத்தில் பதிய, “குட்டிம்மா, ஏன் அங்கேயே நிக்கிறீங்க. அத்தேட்ட வாங்க!” என்றபடி எழுந்து அமர்ந்தாள்.

சின்னவளும் உள்ளே வர, அவளைத் தூக்கி மடியில் அமர்த்தி வருடிக் கொடுத்தாள். ஏனோ கண்கள் கலங்கிற்று! பேச நா எழாமல் அவள் இருக்க, “என்னோட கோபமா நீங்க?” என்று, இவளை அண்ணாந்து பார்த்துக்கேட்டாள் அவள்.

இது தமையனின் தூது என்று விளங்கியது. “குட்டியோட அத்தைக்கு என்ன கோபம்? ம?” என்று விசாரித்தாள்.

“அப்பா சொன்னவர்.. நீங்க அப்பாவோட கோபமாம்.. என்னோடையும் கோபமா?”

“ச்சே ச்சே. இந்த குட்டி செல்லத்தோட அத்த கோவிப்பனா? இங்க பாருங்கோ.” என்று அழைத்துச் சென்று, அவளுக்கு வாங்கி வந்த விளையாட்டு பொருட்களை எடுத்துக் கொடுத்தாள்.

---------------------------------------------------------------

எப்படி இருக்கு என்று சொல்லுங்க. எதையாவது ஊகிக்க முடியுதா?

விரைவில் சந்திக்கலாம்.
 

Vathsala

Member
ஆதிரை அண்ணனோடு இல்லாமல் வெளிநாடு சென்று திரும்பியிருக்கிறாளா? அவள் அண்ணனைவிட்டு பிரிந்து சென்றதற்கு காரணமானவன் சிறையிலிருப்பவனா? அல்லது அந்த போலீஸ் ஆபிசரா?
 
Top Bottom