• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 19

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 19


இன்றைய பிரதான செய்திகள்!


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான மாணவியின் தற்கொலை வழக்கில், குற்றவாளிக்கு இரண்டு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன்!

உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவர் கற்று வந்த தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த சந்தேக நபர் கதிர்வேலு மாதவன் என்பவர், ‘ஐஸ்’ என்கிற போதைப் பொருளினைத் தன் உடைமையில் வைத்திருந்தபோது, காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.


போதைப்பொருளினைத் தன் உடைமையில் வைத்திருந்தது, அதனை விற்பனை செய்தது, மாணவி ஒருவரைத் தற்கொலை செய்யும் அளவுக்குத் தூண்டியது எனும் குற்றங்களின் அடிப்படையில், சந்தேக நபரின் மீது காவல் உதவி ஆணையர் திரு எல்லாளனினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

போதைப் பொருளினை வைத்திருந்து, மாணவிக்கு விற்பனை செய்தார் எனும் குற்றங்களைச் சந்தேக நபரே ஒப்புக்கொண்ட காரணத்தினாலும், சந்தேகத்திற்கு இடமின்றி அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாலும் நீதிமன்றம் அவரைக் குற்றவாளியாக உறுதி செய்தது.

அதே வேளை, குற்றம் சுமத்தப்பட்டவரினால்தான் அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பதனைச் சந்தேகத்துக்கு இடமின்றிக் காவல்துறை நிரூபிக்கத் தவறியதாலும், இதுவரையில் அவர் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான கைரேகைப் பதிவுகள் எதுவும் இல்லை என்பதையும் கவனத்திற்கொண்டு, மாணவியின் தற்கொலைக்கு அவர் காரணமென்று கருத முடியாது என்றும் நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்தார்.

கடைசியாக, குற்றவாளி தன் உடைமையில் வைத்திருந்த போதைப் பொருட்களின் அளவு, சட்டத்துக்கு உட்பட்ட சிறிய அளவாக இருந்த காரணத்தினால், போதைப் பொருட்களைத் தன் உடைமையில் வைத்திருந்து, மாணவிக்கு விற்பனை செய்த குற்றங்களின் அடிப்படையில், அவருக்கு இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனையும், ஐம்பதினாயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த மாணவியின் மரணத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மற்றுமோர் சந்தேக நபரான அஜய் அரியரட்ணம் என்பவர் மீது, சாட்சியங்கள் எதுவும் முன் வைக்கப்படாத நிலையில், அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப் படவில்லை என்றும் தெரிவித்தார்.

மாணவியின் பிரேத பரிசோதனையில் வன்புணர்வு நடந்ததற்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கப் பெறாத காரணத்தினாலும், அம்மாணவி பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர் என்பதாலும் அஜய் அரியரட்ணம் விடுதலை செய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளித்தார்.

*****

சாகித்தியனின் பெற்றோருக்கு மகளை இழந்த சோகம் என்றுமே தீரப்போவதில்லை. அதற்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைத்து, அதன் மூலம் தமக்குச் சின்ன ஆறுதலாவது கிடைத்துவிடாதா என்றுதான் இத்தனை நாள்களாகக் காத்திருந்தார்கள்.

வந்த தீர்ப்போ பெரும் ஏமாற்றத்தைத் தந்து, மீண்டும் மரண வலியைக் கொடுத்திருந்தது. அதுவும் அஜய் விடுதலையானதைப் பொறுக்க முடியாமல் எல்லாளனின் முன்னே சீற்றத்துடன் வந்து நின்றான் சாகித்தியன்.

“இது தானா சேர் தீர்ப்பு? இதுதானா உங்கட சட்டம்? படிக்க வந்த பிள்ளைக்குப் போதையப் பழக்கின கேடு கெட்டவனுக்கு ரெண்டு வருசத் தண்டனை. நண்பன் எண்டு சொல்லி, நம்பிக்கைத் துரோகம் செய்த துரோகி, நிரபராதி. நல்லாருக்கு சேர் உங்கட நியாயம்! ஒரு உயிரை இழந்திருக்கிறம். அதுக்கு இவ்வளவுதானா உங்களால செய்ய முடிஞ்சது?”

அவனின் குமுறலுக்குப் பதிலாக எல்லாளன் கோபப்படவில்லை. நிதானமாக, பொறுமையாக நடந்தவற்றை அவனுக்கு விளக்க முயன்றான்.

“முதல் விசயம், மாதவன் அவளுக்குப் போதையப் பழக்கேல்ல. அதுக்கு முதலே அவள் எங்கயோ பழகி இருக்கிறாள். எங்க, எப்பிடிப் பழகினாள் எண்டுறது இன்னுமே மர்மமாத்தான் இருக்கு. ரெண்டாவது, அந்த முழு டியூஷன் செண்டரையே நான் விசாரிச்சிட்டன். வேற ஆரும் மாதவனிட்ட வாங்கவும் இல்ல, அவன் வித்தது வேற ஆருக்கும் தெரிஞ்சிருக்கவும் இல்ல. அவன்ர டீலிங் எல்லாம் வெளிலதான் இருந்திருக்கு. அதாலதான் முதல் கட்ட விசாரணைல அவன் எங்களிட்ட மாட்டேல்ல. அவனிட்ட இருக்கு எண்டுற விசயம் இவளுக்கு மட்டும் எப்பிடித் தெரிய வந்தது எண்டுறது, எங்களுக்கே இன்னும் தெரியேல்ல. அவள் போதையப் பழகின இடத்தில இருந்து தகவல் ஏதும் வந்திருக்கலாம்.” என்றான் அவன்.

என்னவோ மர்மக் கதையைக் கேட்பது போலவே இருந்தது சாகித்தியனுக்கு.

“ அதுவரைக்கும் கைல இருந்த காசையும், உங்கட வீட்டுக்குத் தெரியாம எடுக்கக்கூடிய நகைகளையும் எடுத்து, போதை மருந்து வாங்கினவளுக்கு ஒரு கட்டத்துக்கு மேல அது ஏலாமப் போயிருக்கு. இன்னொருத்தர இதுக்குப் பழக்கி விட்டா ஃபிரீயா கிடைக்கும் எண்டு தெரிஞ்சும் அதைச் செய்ய ஏலாம, மனச்சாட்சி உறுத்தி இருக்கு. தன்னை மாதிரி இன்னொருத்தரத் தானே கெடுத்து விட்டுடக் கூடாது எண்டுற பிடிவாதம். போதைப்பொருள்ப் பாவனை இல்லாம இருக்கவும் முடியாத அடிமையான நிலைமை. இனி என்ன செய்றது எண்டு தெரியாத பதட்டம். இதெல்லாம் தெரிய வந்தா அம்மா அப்பா என்ன நினைப்பினம் எண்டுற பயம். அவளை நம்பின உங்க மூண்டு பேருக்கும் துரோகம் செய்திட்டனே எண்டுற குற்றவுணர்ச்சி, அவளைப் பற்றின விசயம் வெளில வந்தா ஊரும் உலகமும் என்ன கதைக்கும் எண்டுற யோசனை எல்லாம் சேர்ந்து, அவளுக்கே அவளில ஒரு வெறுப்பு வந்திருக்கும் சாகித்தியன். அது ஒரு விதமான மன அழுத்தத்தைக் குடுத்திருக்கும். அதைத் தாங்கேலாம, நானெல்லாம் உயிரோட இருக்கிறதே அவமானம் எண்டு நினைச்சு…” என்றவன், சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு, “அதாலதான், தற்கொலை செய்ற நேரத்தில கூட, மாதவனைப் பற்றி அவள் சொல்லேல்ல.” என்று முடித்தான்.

அவன் சொல்ல சொல்ல சாகித்தியனுக்குள் பெரும் வலி. ஆனாலும் வந்த தீர்ப்பையும், அவன் சொல்லும் விளக்கத்தையும் அவனால் ஒப்ப முடியவில்லை.

“இப்ப என்ன சேர், என்ர தங்கச்சி செய்ததுதான் பிழை. மாதவனும் அஜயும் செய்தது எல்லாம் பெரிய விசயமே இல்லை எண்டு சொல்லுறீங்களா?” என்று கசப்புடன் கேட்டான்.

“சட்டத்தை மலையளவுக்கு நம்பினோம் சேர். தங்கச்சிதான் கிடைக்கமாட்டாள். அவள் சாவுக்குக் காரணமானவங்களுக்கு நல்ல தண்டனையாவது கிடைக்கும் எண்டு நம்பினோம் சேர். இப்ப அதுவும் இல்ல.” என்றான் விரக்தியும் வெறுப்புமாக.

அவன் மனநிலையை உணர்ந்தவனாக அவன் தோளில் அழுத்திக்கொடுத்தான் எல்லாளன்.

“நீ இப்ப உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாய். தங்கச்சிய இழந்த சோகம் உன்ன இப்பிடியெல்லாம் கதைக்க வைக்குது. அமைதியா இருந்து யோசிச்சா, சட்டம் சரியான தீர்ப்பத்தான் சொல்லியிருக்கு எண்டு உனக்கே விளங்கும். மற்றது, வீட்டில இருக்கிற நாங்களும் இதையெல்லாம் கவனிக்கோணும் தம்பி. பொறுப்பா இருக்கோணும். அத நாங்க செய்யாம விட்டுட்டு, ஒட்டுமொத்தமா மற்றவையக் குறை சொல்லுறதில அர்த்தம் இல்லையே. இது ஒரு நாள் ரெண்டு நாளில வாற பழக்கம் இல்ல. இருந்தும் நீங்க ஆரும் அவளைக் கவனிக்கேல்லத்தானே? அப்ப அவளின்ர இந்தத் தற்கொலைக்கு நீங்களும் ஏதோ ஒரு வகைல காரணம் எண்டு, உங்களையும் கைது செய்றதா?” என்றதும் அதிர்ந்து அவனைப் பார்த்தான் சாகித்தியன்.

“இப்ப விளங்குதா, சட்டம் எல்லாருக்கும் பொதுவானது எண்டு? அது குற்றவாளி, பாதிக்கப்பட்டவர், தவறு செய்தவர் எண்டு எல்லாம் பிரிச்சுப் பாக்காது. எல்லாரையும் ஒரே தராசுல வச்சுத்தான் பாக்கும்.”

“அப்ப அஜய்? அவனை ஏன் சேர் விடுதலை செய்திருக்கு? என்ர தங்கச்சியைக் கெடுத்திருக்கிறான் சேர்.” என்றான் குரல் உடைய.

அவன் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு நடந்தபடி, “தீர்ப்பை நீ ஒழுங்கா விளங்கிக்கொள்ளேல்ல போல இருக்கு. உன்ர தங்கச்சிக்குப் பதினெட்டு வயசுக்கு மேல. வன்புணர்வு நடக்கேல்ல. ரெண்டு பேர் சேந்து முறையற்ற ஒரு காரியத்தைச் செய்தா, அதுக்கு அந்த ரெண்டு பேரும்தான் பொறுப்பு. அதுல ஒருத்தரை மட்டும் குற்றவாளியாச் சொல்லேலாது. ஆனா ஒண்டு, அவன் சட்டத்திட்ட இருந்துதான் வெளில வந்திருக்கிறான். அவன்ர மனச்சாட்சிட்ட இருந்து இல்ல. விளங்குதா?” என்றான்.

பதில் ஒன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டான் சாகித்தியன். இருவர் சேர்ந்து செய்த தவறு என்று சொல்லி, அவன் தங்கையையும் எல்லாளன் தவறிழைத்தவளாகக் காட்டுவதகாவே அவனுக்குப் பட்டது.

“நீ நினைக்கிறியா அவனைப் பிடிச்சுச் சிறைக்குள்ள போட்டு, கம்பி எண்ண வைக்கிறது மட்டும்தான் தண்டனை எண்டு? இல்ல! இப்ப அவனைப் பற்றி இந்த ஊருக்கே தெரியும். இந்தச் சமூகமே அவனைக் கேவலமாப் பாக்கும். ஒரு காமுகனா நினைச்சு ஒதுக்கி வைக்கும். உன்னை மாதிரி அறிஞ்ச மனுசர், தெரிஞ்ச மனுசர், நண்பர்கள் எண்டு ஆரின்ர முகத்திலயும் அவனால முழிக்கேலாது. இது எல்லாத்தையும் விட, நொடி நேரம் விடாம அவன்ர மனச்சாட்சியே அவனைக் குத்தும், வதைக்கும். அதுதான் பெரிய தண்டனை. சிறைக்குப் போயிட்டு வந்தாக் கூட, செய்த பிழைக்குத் தண்டனை அனுபவிச்சிட்டன் எண்டு நிம்மதியா இருந்திருப்பான். இப்ப அவனுக்கு அதுக்குக் கூட வழி இல்ல. வாழுற நாள் முழுக்க அவனுக்குச் சிறைதான். தண்டனைதான். அமைதியா இருந்து யோசிச்சா உனக்கே இதெல்லாம் விளங்கும்.”என்றவன் சாகித்தியனைத் தன் முன்னே நிறுத்தி,

“உன்ர மனநிலை எனக்கு விளங்குது. ஆனா, இனி எல்லாம் முடிஞ்சுது. இதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளில வா. அம்மா அப்பாவைப் பாத்துக்கொள்ளு. அவேக்கு இப்ப இருக்கிறது நீ ஒருத்தன்தான். நல்லாப் படி. நல்ல இடத்துக்கு வா. ஓகே!” என்று, தன்னால் முடிந்தவரையில் அவனைத் தேற்றி அனுப்பிவைத்தான்.

*****

அன்றைய நாள் அகரன், சியாமளா திருமணத்தைக் கொண்டாடுவதற்காகப் புலர்ந்திருந்தது. இளந்திரையன் பெரிதாக யாரையும் அழைக்கவில்லை.

அவரோடு சட்டக் கல்லூரியில் பயின்றவர்கள், நெருக்கமான சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சில தவிர்க்க முடியாத அரசியல்வாதிகள் என்று முக்கியமானவர்களுக்கு மாத்திரமே சொல்லியிருந்தார்.

கூடவே, அகரனின் நண்பர்கள், எல்லாளனின் நண்பர்கள் குடும்பங்களாக வருகை தந்திருந்தனர். அனைவரும் முக்கிய புள்ளிகள் என்பதில், அந்த மண்டபம் முழுவதும் வர்ண உடைகளைக் காட்டிலும் காவலுக்கு நின்ற காக்கிகளின் நடமாட்டடமே அதிகமாக இருந்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவர்கள் அனைவருக்கும் ஆதினியைத் தெரிந்திருந்தது. கூப்பிட்டு, அருகிருத்தி, ஆசையோடு பேசினர். அதுவும், மணப்பெண்ணுக்கே சவால் விட்ட படி, கண்ணை நிறைக்கும் அழகுடன், மயில் நீலப் பட்டில் தோகை விரித்து நின்றவள், அங்கிருந்த திருமணமாகா வாலிப நெஞ்சங்களை உசுப்பிக்கொண்டிருந்தாள்.

காவல் காரனின் காத்திரமான கண்கள், இதையெல்லாம் கவனிக்காதது போல் கவனித்துக்கொண்டதில் அவனுக்குள் மெல்லிய கடுகடுப்பு.

நெடு நேரமாக ஆதினியையே பார்வையால் பின் தொடர்ந்த பெண்மணி ஒருவர், அவளைத் தன் வீட்டுக்கு மருமகளாக்கிவிடும் விருப்புடன் இளந்திரையனிடம் வந்து கதைத்தார்.

அவர் கணவர் மிகப் பிரபல்யமான வழக்கறிஞர். இளந்திரையனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். நேரடியாக மறுக்க முடியவில்லை.

அதில், “படிக்கிற பிள்ளைக்கு இப்ப என்னம்மா அவசரம்? முதல் படிப்பை முடிக்கட்டும்.” என்று, எந்த நம்பிக்கையையும் கொடுக்க மறுத்தவரின் பார்வை, எல்லாளன் மீது படிந்தது.

அதே நேரம், அவனும் அவரைப் பார்த்துவிட, “என்ன அங்கிள்?” என்றபடி அடுத்த கணமே வந்து நின்றான்.

சும்மாவே களையும் கம்பீரமும் உடற்கட்டும் நிறைந்தவன். அவன் பார்க்கும் உத்தியோகம், அதை எப்போதுமே இரட்டிப்பாய்க் காட்டும். இன்று, பட்டு வேட்டி சட்டையில் நின்று, இன்னுமே இளந்திரையனின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தான்.

அதைவிட, தன் ஒற்றைப் பார்வைக்கு விரைந்து வந்து, என்ன என்று வினவியனின் செயலில் சிரிப்பு மலர்ந்து விட, “ஒண்டும் இல்ல. ஆதியப் பெண் கேக்கினம். படிச்சு முடிக்கட்டும் எண்டு சொன்னனான்.” என்றார் அவர்.

“ஓ!” என்றவனுக்கு அவர் தன்னைப் பார்த்துச் சிரிப்பது புரியாமல் இல்லை. யார் மீதென்றில்லாமல் ஒருவிதக் கோபம் முளைக்க, “நல்ல குடும்பம், நல்ல பெடியன் எண்டா செய்றதுதானே அங்கிள்.” என்று சொன்னவனின் கண்களில் ஒரு விதச் சவால்.

கொடுத்துவிடுவீர்களோ என்று கேட்கிறானா? எப்போதும் பணிவுடன் நிற்கிறவன் இன்று சத்தமே இல்லாமல் தன்னுடன் மோதுவதைக் கண்டு, அவர் சிரிப்புப் பெரிதாயிற்று.

அந்தச் சிரிப்புடன், “பிறகென்ன? எல்லாளனே சொல்லிட்டார். உங்கட மகனும் அருமையான பிள்ளைதானே. பிள்ளை படிப்பை முடிக்கட்டும். அவாக்குப் பிடிச்சா எனக்கு எந்த மறுப்பும் இல்ல.” என்றார் அந்தப் பெண்மணியிடம்.

“சந்தோசம் அண்ணா. இதைவிட வேற என்ன வேணும், சொல்லுங்க?” அந்தப் பெண்மணி பூரித்துப்போனார்.

அப்படியே அவர் தன் மகன் புராணத்தை ஆரம்பித்து விட, அதைக் கேட்க முடியாமல் அங்கிருந்து அகன்றுகொண்ட எல்லாளனுக்குக் கண்மண் தெரியாத கோபம்தான் வந்தது.

அவர் மகனும் வழக்கறிஞன்தான். மிகுந்த திறமைசாலி. நல்ல குண நலன்களோடு நன்றாகச் சம்பாதிப்பவனும் கூட. அதற்காகக் கொடுத்துவிடுவாரா? மனம் புகைந்தது.

மேடையில் இருந்த சியாமளா, ஏதோ சரியில்லை என்று கண்டு, விடாமல் அவனையே பார்த்தாள். அது கொடுத்த குறுகுறுப்பினாலோ என்னவோ அவனும் அவளைப் பார்த்தான்.

சிறு தலையசைப்பால் என்ன என்று வினவினாள் அவள்.

வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, ஒன்றுமில்லை என்று மறுப்பாகத் தலையை அசைத்துவிட்டுப் புன்னகைத்தான் தமையன்.

அதன் எதிரொலியாக அவள் முகத்திலும் முறுவல் மலர்ந்தது.

“இனியாவது என்னைப் பாக்கிறியா?” அவள் புறமாகச் சரிந்து வினவினான் அகரன்.

ஆனந்தமாக அதிர்ந்து, திரும்பி அவனைப் பார்த்தாள் சியாமளா. இன்று காலை வரைக்கும் முகம் கொடுக்க மறுத்தவனாயிற்றே! விழிகள் மெலிதாகக் கலங்கின.

அளவுக்கு அதிகமாகவே அவளைக் கலங்க வைத்துவிட்டோம் என்று அவனுக்கும் தெரியாமல் இல்லையே! சிறு வருத்தம் தோய்ந்த முறுவலோடு, “விடு, இது எங்களுக்கான நாள். இனி வாழப்போறது புது வாழ்க்கை. எல்லாம் நல்லதா நடக்கும் எண்டு நினைப்பம்.” என்றான் தனக்கும் சேர்த்து.

ஆம் என்று தலையை அசைத்தவளின் உதடுகள், “சொறி!” என்று சத்தமற்று உச்சரித்தன. விடு என்பதாக விழிகளை மூடித் திறந்தான் அவன்.

அப்போதுதான் சியாமளாவின் சஞ்சலங்கள் தீர்ந்து போயின.

சுபநேர சுப முகூர்த்தத்தில் அவள் கழுத்தில் பொன்தாலி பூட்டி முடித்தான் அகரன்.

பகல் உணவை முடித்துக்கொண்டு, அன்றைய நாளுக்கான களையைச் சற்று ஆற்றிக்கொள்வதற்காக மேடையிலேயே அமர்ந்திருந்தனர் மணமக்கள்.

மேடை ஏறிவந்து இருவரிடமும் ஒரு கவரை நீட்டினாள் ஆதினி.

அவ்வளவு நேரமாகப் பெண்ணுக்குத் தோழியாக நின்றிருந்த போதிலும் விலகளைக் காட்டிக்கொண்டிஇருந்தவள் தானாகாத் தேடி வந்ததில் அகரனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

“அண்ணாவில இருந்த கோபம் போயிட்டுதா?” என்று அவள் முகம் பார்த்து வினவினான்.

“அத விட்டுட்டு இது என்ன எண்டு பாருங்க.”

“எனக்கு இதை விட அதுதான் முக்கியம்.” என்று சொன்னபடியே அவள் தந்ததைப் பிரித்துப் பார்த்தான்.

மாலைதீவின் கடற்கரைக் குடில் ஒன்றை ஒரு வாரத்திற்கு அவர்கள் இருவருக்குமாக ஏற்பாடு செய்திருந்தாள் அவள்.
பார்த்தவனுக்குப் பெரும் வியப்பு.

“இந்த ஐடியா எப்பிடி வந்தது?”

திருமணத்திற்குப் பிறகு அவளையும் அருகில் வைத்துக் கொண்டு, சியாமளாவுடன் இயைந்து வாழ்வானா, அல்லது, இப்போது போன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிவானா என்கிற கேள்வி, அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. அவர்களுக்கான தனிமை, மனங்களின் முறுகல்களை வெளியேற்றி, அவர்களை இணைக்கும் என்று யோசித்துச் செய்திருந்தாள்.

அதைச் சொல்ல விருப்பமற்று, “சும்மா என்ன பரிசு குடுக்கலாம் எண்டு யோசிக்க, இந்த ஐடியா வந்தது. வாற கிழமைதான். நீங்க லீவு எடுத்துக்கொண்டு போகலாம்.” என்றுவிட்டு இறங்கப் போக, அவள் கையைப் பற்றி நிறுத்தினான் அகரன்.

“இப்பிடி முறைகளை முறையாச் செய்றது என்ர ஆதிக்குட்டி இல்லையே! என்ர கலியாணத்தைச் சாட்டி, என்னட்ட ஏதாவது பிடுங்கி இருந்தாள் எண்டாத்தான் அவள் என்ர தங்கச்சி.” என்றதும் அவள் விழிகள் கலங்கப் பார்த்தன.

அதை மறைக்க முயன்றபடி, “என்னட்ட எல்லாமே இருக்கு.” என்றவாறே அவனிடமிருந்து கையை விடுவிக்க முயன்றாள்.

அதற்கு விடாமல், “ஆதிக்குட்டி அண்ணாவில இருக்கிற கோபத்தை மறந்து, பழைய மாதிரிக் கதைக்கிறதுதான் எனக்குக் கிடைக்கிற பெரிய கலியாணப் பரிசு. கிடைக்குமா?” என்று வினவினான் தமையன்.

அன்றைய நாளின் பாடமாக அவர்களுக்கு நடுவே போகாத சியாமளாவுக்கும் தன்னால்தானே இதெல்லாம் என்கிற கவலை மனதை வாட்டியது.

அதற்குமேல் அதைப் பற்றிப் பேசி, சங்கடமான சூழ்நிலையை உருவாக்க மனமற்று, “நில்லு, ஒரு செல்ஃபி எடுப்பம்.” என்ற அகரன், விழிகளால் நண்பனைத் தேடிக் கண்டுபிடித்து, “டேய் மச்சான்! வா, ஒரு செல்ஃபி எடுக்க!” என்று அவனையும் அழைத்தான்.

ஏதோ வேலையாக நடந்துகொண்டிருந்தவன் நின்று திரும்பி மேடையைப் பார்த்தான். ஆதினி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி நின்றிருந்தாள். அந்தச் செய்கை, சற்று முன்னான இளந்திரையனின் சீண்டலை நினைவூட்டி விட, விறுவிறு என்று மேடையேறி வந்து, ஆதினியின் அருகில் நின்றுகொண்டு, “எடு!” என்றான்.

ஆதினிக்கு முகம் மாறிப்போனது. மண்டபத்தில் எல்லோரும் இருக்கையில், அதுவும் மேடையில் வைத்து என்ன செய்கை இது? தமையனை நெருங்கி நிற்க முயன்றாள்.

அதற்கு விடாமல், ஒற்றைக் கையால் அவள் கையைப் பற்றித் தன்னருகிலேயே நிறுத்திக்கொண்டான் எல்லாளன்.

“என்ன செய்றீங்க, விடுங்க!” கையை விடுவிக்க முயன்றபடி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சிடுசிடுத்தாள் ஆதினி.

“ஒழுங்காப் பக்கத்திலேயே நில்லு. இல்ல, இந்த இடத்திலேயே தாலியக் கட்டவும் யோசிக்க மாட்டன்!” என்றான் அவனும் கோபத்தோடு.

திகைப்புடன் திருப்பி அவனைப் பார்த்தாள் அவள்.

“உன்னை ஆரு இவ்வளவு வடிவா வெளிக்கிட்டு வரச் சொன்னது? உனக்கா கலியாணம்?” இதனால்தானே ஆளாளுக்கு வந்து பெண் கேட்கிறார்கள் என்கிற கோபம் அவனுக்கு.

இப்போது வெளிப்படையாகவே அவனை முறைத்தாள் ஆதினி. ஒரேயொரு அண்ணனின் திருமணத்திற்கு அழகாகத் தயாராகாமல் வேறு யாரினதுக்குத் தயாராவதாம்?

முதலில் ஏதாவது விசேசங்களுக்கு அவளைப் போக விட்டிருக்கிறானா இவன்? அப்பா விட்டாலும் வந்து தடுத்துக்கொண்டு நடுவில் நிற்பானே. இதில், அண்ணனின் திருமணத்தில் கூட அவள் அலங்கரிக்கக் கூடாதாம்.

“உங்களுக்கு என்ன மேல ஏதும் கழண்டுட்டுதா?” என்று சீறினாள்.

அவனுக்கும் தன் கோபம் அர்த்தமற்றது என்று விளங்காமல் இல்லை. ஆனாலும் ஒருவித எரிச்சல் அவனுக்குள் நின்று அடங்காமல் ஆடிக்கொண்டிருக்கிறதே!

அதில், “என்னடா எடுக்கிறாய்? இஞ்ச கொண்டுவா!” என்று கைப்பேசியைப் பறித்து, அவன், ஆதினி, அகரன், சியாமளா என்கிற வரிசையில் நிறுத்திச் சுயமிகளை எடுத்துவிட்டு, அதைத் தன் கைப்பேசிக்கும் அனுப்பிக்கொண்டான்.

ஆதினிக்கோ அடக்க முடியாத ஆத்திரம். அதைக் காட்ட வழியற்ற நிலை இன்னுமே சீற்றம் கொள்ள வைத்தது. தீப்பார்வையால் அவனை எரித்துவிட்டு, விறுவிறு என்று மேடையை விட்டு இறங்கி நடந்தாள்.

“ஏனடா நீ வேற?” என்று சலித்தான் அகரன்.

“என்ன நீ வேற? உன்ர கலியாணத்துக்கு வந்திருக்கிறவனில பாதிப்பேரின்ர கண் அவளில. என்னையே கூப்பிட்டு விசாரிக்கிறாங்கள். இதுல அங்கிள் வேற ஆதினியக் கேக்கினமாம் எண்டு என்னட்டையே சொல்லுறார். இவளும் முறுக்கிக்கொண்டு திரியிறாள். அதுதான் எல்லாருக்கும் சேர்த்துப் பதில் சொல்லியிருக்கிறன்.” என்றுவிட்டுப் போனான் அவன்.

தன் திருமண நாளில் கூடத் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான் அகரன்.
 

Goms

Active member
🤣🤣🤣 ஹா....ஹா....ஹா... எல்லாளனுக்குக் கூட பொறாமையை வர வச்சிட்டியே ஆதினி🤣🤣
 
Top Bottom