• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 20

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 20


மண்டபத்தை விட்டு விறுவிறு என்று வெளியே வந்தாள் ஆதினி. சினத்திலும் சீற்றத்திலும் அவள் உள்ளம் கொதித்துக்கொண்டிருந்தது. அவளின் மறுப்பும் விலகளும் தனக்கு ஒன்றுமே இல்லை என்பதுபோல் நடக்கிறவனின் செய்கை அவளை மிகுந்த எரிச்சல் கொள்ள வைத்தது.

அது போதாது என்று, “இங்க என்ன செய்றாய்?” என்றுகொண்டு பின்னாலேயே வந்தான் அவன்.

சினம் உச்சிக்கு ஏற, அவனை அலட்சியம் செய்து நடந்தாள் அவள்.

“கதைக்காமப் போனியோ கையப் பிடிச்சு நிப்பாட்டுவன்.” சொன்னதைச் செய்வேன் என்கிற தொனியில் அவன் சொன்னது அவள் கோபத்தை இன்னுமே விசிறி விட்டது.

நடந்த வேகத்திலேயே திரும்பி வந்து, “என்ன, சேட்டை விடுறீங்களா? இல்ல, எல்லாத்துக்கும் அமைதியாப் போவன் எண்டு நினைச்சீங்களா? நடந்துகொண்டிருக்கிற இந்தக் கலியாணத்திலயோ, இல்ல, அவேன்ர வாழ்க்கையிலயோ என்னால எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது எண்டு பாக்கிறன். உங்க எல்லாரிட்ட இருந்தும் ஒதுங்கி இருக்க ஆசைப்படுறன். அதால மட்டும்தான் பொறுத்துப் போறன். அதுக்காக ஆகச் சீண்டினீங்க, என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

“ஆதினி! நாலு பேர் பாக்கிற இடத்தில இப்பிடித்தான் கத்துவியா? நட உள்ளுக்கு! இப்பிடி வெளில நிக்கிறது உனக்குப் பாதுகாப்பு இல்ல எண்டுதான் பின்னாலேயே வந்தனான்.” என்றான் அவன்.

“எனக்குத் தேவையான பாதுகாப்பை என்ர அப்பா தருவார். நீங்க உங்கட வேலையப் பாருங்க!” என்றுவிட்டுப் போகப் போனவளைக் கரம்பற்றி நிறுத்தினான் அவன்.

“இத மட்டும் ஒருத்தரும் பாக்காயினம் போல!” என்று அவள் கரத்தைப் பற்றியிருக்கும் அவன் கரத்தைக் கண்ணால் காட்டிக் கேட்டுவிட்டு, “பொறுப்பில்லை, பக்குவம் இல்ல எண்டு எனக்குச் சொல்லுவீங்க. நீங்க எனக்கு வேணாம் எண்டு சொல்லுற ஒருத்திய, நிம்மதியா இருக்க விடாமப் பின்னாலேயே துரத்துறீங்களே, நீங்க என்ன பொ…” என்றவளைச் சொல்லி முடிக்க விடாது, “வார்த்தைகளை விடாத ஆதினி!” என்று முகம் இறுக எச்சரித்தான் அவன்.

“அப்பிடித்தான் விடுவன்! என்ன செய்வீங்க? நானா ஏதாவது உங்களோட கதைச்சுக்கொண்டு வந்தனானா? நீங்க ஆருமே வேண்டாம் எண்டு விலகி இருக்கிறவளிட்ட வந்து சொறிஞ்சா அப்பிடித்தான் கதைப்பன்!”

இப்போது அவனுக்கும் கோபம் வந்தது. “இப்பிடி எடுத்தெறிஞ்சு கதைச்சுப் பழகாத ஆதினி! உன்ன மாதிரி நினைச்சு நினைச்செல்லாம் ஓம், இல்லை எண்டு சொல்லிக்கொண்டு இருக்க என்னால ஏலாது. ஓம் எண்டு சொன்னது ஓம்தான். காலத்துக்கும் நீதான் எனக்கு!” என்றான் அழுத்தம் திருத்தமாக.

“ஓ அப்பிடியா? அந்தளவுக்கு என்னைப் பிடிக்குமா உங்களுக்கு? சொல்லுங்க! உங்கட மனதில நான் இருக்கிறனா?”

அவள் விழிகளில் தெரிந்த சவால், எங்கு அடிக்க முயல்கிறாள் என்று சொல்லிவிட, அவன் உதட்டில் சின்ன சிரிப்பு. இறுக்கம் கூடத் தளர்ந்து போனது.

“நானும் நீயும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கேல்ல. எனக்கும் உனக்கும் நடக்க இருந்தது பேச்சுக் கலியாணம். ஒரு பேச்சுக் கலியாணத்தில, இந்தக் குடும்பம் எனக்கு ஒத்து வருமா, இவள் எனக்குப் பொருந்தி வருவாளா எண்டு யோசிச்சு முடிவு சொல்லுறது எல்லாம் வழக்கமா நடக்கிறதுதான். எனக்குச் சொந்தம் எண்டு இருக்கிறது சியாமளா மட்டும்தான். அதால, அவளைப் பற்றியும் கொஞ்சம் கூடுதலா யோசிச்சுத்தான் ஓகே எண்டு சொன்னனான். இதுல என்ர மனதில நீ இருக்கிறியா எண்டு கேட்டா, அந்தக் கேள்விதான் பிழை.” என்றான் அவன்.

“இப்ப உன்ர முதல் கேள்விக்குப் பதில் சொல்லுறன். உன்னை எனக்கு முதலே பிடிச்சிருந்தா அதுதான் பிழை. என்ர உயிர் நண்பன்ர தங்கச்சி நீ. என்னை நம்பி வீட்டுக்க விட்டவர் அங்கிள். அப்பிடி இருக்க உன்ன நான் அந்தக் கோணத்தில பாக்கவே கூடாது. ஆனா, உன்னில நிறைய அக்கறை இருக்கு. உனக்கு எந்தக் கெடுதலும் நடந்திடக் கூடாது எண்டுற கவனம் எப்பவும் இருக்கும். முக்கியமா எனக்கு உன்னில வெறுப்பு இருந்ததே இல்ல. தொட்டதுக்கும் கோவப்படுறது, சொல்லுறதைக் கேக்காம இருக்கிறது, நீ நினைச்சதுதான் நடக்கோணும் எண்டு நினைக்கிற உன்ர குணங்கள்தான் பிடிக்காது. வடிவா விளங்கிக் கொள்ளு, உன்ர இந்தக் குணங்கள்தான் எனக்குப் பிடிக்காது, உன்னை இல்ல.” என்றான் தெளிவாக.

என்னதான் அவன் சரியான விளக்கம் சொன்னாலும் காயப்பட்டுவிட்ட அவள் உள்ளத்துக்கு அது மருந்து தடவவேயில்லை. அதில் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள்.

நடந்த அனைத்துக்குமான விளக்கத்தைச் சொல்லிவிட முயன்றவனாக, “வேணும் எண்டே அடம் பிடிக்கக் கூடாது ஆதினி. யோசிச்சுப் பாரு, எனக்கு உன்னில வெறுப்பு இருந்தா நீ இவ்வளவு கேவலப்படுத்தியும் உனக்குப் பின்னாலயே வருவனா? உன்ர அண்ணா, அப்பா ரெண்டு பேருமே இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டு சொல்லிட்டினம். நீயும் இப்ப வரைக்கும் அதத்தான் சொல்லுறாய். என்னால ஈஸியா இதுல இருந்து விலகிப் போகேலும். ஆனாலும், விடாம நீதான் வேணும் எண்டு ஏன் நிக்கிறன் எண்டு யோசி. நீதான் என்ர வாழ்க்கை, நீயில்லாத ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம் எண்டு நினைக்கிற ஸ்டேஜுக்கு நான் இன்னும் வரேல்லத்தான். அதுக்கு அவசரமும் இல்ல. உனக்கு நான் சொல்லுறதும், உனக்கெண்டு நான் இருக்கிறன் எண்டுற நினைப்போட படிப்பை முடி எண்டுதான். விளங்குதா?” என்றான் நிதானமான குரலில்.

“அப்பிடியெல்லாம் என்னால நினைக்கேலாது. எனக்குக் காதலிக்கோணும். காதலிச்சுத்தான் எவனையாவது கட்டுவன்.” என்றாள் வெடுக்கென்று.

வீம்புக்கென்றே சொல்கிறாள் என்று புரிந்ததில், “அப்ப என்னைக் காதலி! விசயம் முடிஞ்சுது.” என்று அவனும் சின்ன சிரிப்புடன் பேச்சை இலகு திசைக்குத் திருப்பினான்.

அவளிடம் அவன் சிரித்தெல்லாம் பேசுவானா? வேண்டுமென்றே பார்வையால் அவனை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, “நான் காதலிக்கிற ரேஞ்சில எல்லாம் நீங்க இல்ல!” என்றாள் தலையைச் சிலுப்பி.

முறுவல் ஒன்று தானாக அரும்ப, “எந்த ரேஞ்சில எதிர்பாக்கிறாய் எண்டு சொல்லு. நான் மாறப் பாக்கிறன்.” என்றான் அவன். சொன்ன பிறகுதான் தான் தானா இந்தளவுக்குத் தழைந்து போகிறோம் என்று உள்ளூர வியப்பாயிற்று.

“எனக்கு போலீஸ்காரன் வேண்டாம். அவனுக்கு அம்மா அப்பா இருக்கோணும். தங்கச்சி இருக்கக் கூடாது. கலியாணத்துக்குப் பிறகு எங்கட வீட்டிலேயே வந்திருக்கோணும். இதுக்கெல்லாம் ஓம் எண்டுறவனைத்தான் நான் காதலிப்பன்.” சவால் பார்வையுடன் படபடவென்று அடுக்கினாள் ஆதினி.

அவன் முகத்தில் நன்றாகவே இளநகை அரும்பிற்று. “சொறி செல்லம். இந்த ஜென்மத்தில உங்களுக்கு அப்பிடி ஒருத்தன் கிடைக்கவே மாட்டான். அம்மா அப்பா இல்லாத, ஒரேயொரு தங்கச்சி இருக்கிற, போலீஸ்காரன்தான் கிடைப்பான். அதால அவனையே காதலிக்கிறதுக்கு வழியப் பார். இல்ல, அவன் உன்னக் காதலிக்க வைப்பான்.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
மீண்டும் மண்டபத்துக்குள் வந்தவனின் பார்வை இளந்திரையனிடம் சென்றது. அவர் பார்வையும் அவனில்தான். அப்போதுதான் மேடையில் வைத்துச் செய்த செய்கையை ஒரு மாதிரியாக உணர்ந்தான்.

அவனுடைய பெரும் மதிப்பிற்குரிய மனிதர். அவனை நம்பித் தன் பெண்ணையே தர முன் வந்தவர். அதையும் குழப்பியடித்து, இப்போது வேண்டாம் என்று நிற்கிறவளையும் விடாது துரத்தி என்று, அவருக்கு அவன் செய்கிறவைகள் முன்னுக்குப் பின் முரணாகத் தெரியுமோ?

நேராக அவரிடம் வந்து, “என்ர முடிவில மாற்றம் இல்லை எண்டு எப்பவோ உங்களிட்டச் சொல்லிட்டன்தானே அங்கிள்?” என்றான்.

ஆம் என்பதாகத் தலையை அசைத்தார் அவர்.

“அதவிட, எனக்கானத நான்தானே பாதுகாக்கோணும். உங்களிட்டயே அந்த அன்ட்ரி வந்து கலியாணத்துக்குக் கேட்டவா எல்லா?” என்றுவிட்டு அவரைப் பார்த்தான்.

அப்போதும் அவரின் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியாமல் போக, “கடைசி முடிவு அவளின்ரதான். ஆனா, அந்த முடிவை எனக்குச் சாதகமா மாத்த நான் முயற்சி செய்யலாம்தானே அங்கிள்?” என்று கேட்டுவிட்டுப் போனான் அவன்.

அவனையே பார்வையால் தொடர்ந்தவரின் உதட்டோரம் மலர்ந்த முறுவலை அவன் அறியவில்லை.

இங்கே ஆதினிக்கு, “கலியாண வீடு எப்பிடிப் போகுது?” என்று கேட்டுக் குறுந்தகவல் அனுப்பியிருந்தான் காண்டீபன்.

அவளுக்கு இருந்த அத்தனை கோபமும் அவன் புறமாகத் திரும்பிற்று. கட்டாயம் வர வேண்டும் என்று பலமுறை அழைத்திருந்தாள். அன்று காலையில் கூட அழைத்து நினைவு படுத்தியிருந்தாள். எல்லாவற்றுக்கும் சரி சரி என்று தலையை ஆட்டிவிட்டு, கடைசியில் வராமலேயே இருந்துவிட்டானே!

“உங்களோட நான் இனிக் கதைக்கமாட்டன்!” என்று அனுப்பிவிட்டாள்.

உடனேயே அழைத்தான் அவன். அதை ஏற்காமல் வந்து, தந்தையின் அருகில் அமர்ந்துகொண்டாள்.

மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தது. அவள் எடுக்காமல் இருப்பதைக் கவனித்து, “ஆரம்மா?” என்று விசாரித்தார் இளந்திரையன்.

“ஒரு சேர் வருவார், உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறன் எண்டு சொன்னேனே அப்பா. அவர்தான். வாறன் எண்டு சொல்லிப்போட்டு வரேல்ல. இப்ப சமாதானத்துக்கு வாறார். நான் இனிக் கதைக்கமாட்டன்.” என்று அவருக்கும் அறிவித்தாள்.

மகளின் குழந்தைக் கோபத்தில் உண்டான முறுவலோடு, “அவருக்கு என்ன முக்கியமான அலுவல் வந்ததோ தெரியாது எல்லா? எடுத்து என்ன எண்டு கேளுங்கோ. அவர் சொல்லுற விளக்கம் சரியா இல்லை எண்டாத்தான் கோபப்படோணும். என்ன நடந்தது எண்டு தெரிய முதலே இப்பிடிக் கோபப்படக் கூடாது.” என்று எடுத்துச் சொன்னார் அவர்.

அவரை யோசனையாகப் பார்த்தாள் ஆதினி.

இளந்திரையனிடத்தில் சின்ன முறுவல்.

“என்ன பார்வ?”

“அதுதான் நீங்க அவருக்கும் ஒண்டும் சொல்லேல்லையா?” பார்வை எல்லாளனிடம் சென்று வர வினவினாள்.

முறுவல் விரிய, “அவரைப் பற்றியும் எனக்குத் தெரியும். என்ர மகளைப் பற்றியும் தெரியும்.” என்றார் அவர்.

அப்படி என்ன தெரிந்து வைத்திருக்கிறாராம் என்று ஓடிய யோசனையைக் காண்டீபனின் விடாத அழைப்புத் தடுத்து நிறுத்தியது.

இந்த முறை அழைப்பை ஏற்று, “என்ன விசயம்?” என்றாள் கோபமாக.

“என்னம்மா கோவமா? அப்பிடிச் சும்மா வராம இருப்பனாமா?” என்று நயந்த குரலில் வினவினான் அவன்.

“ஏன் வரேல்ல எண்டுற காரணத்தை முதல் சொல்லுங்கோ! அதுக்குப் பிறகு கோவப்படுறதா இல்லையா எண்டு நான் முடிவு செய்றன்.” என்றாள் பெரிய மனுசியாக.

“அது... மாமிக்குக் கொஞ்சம் ஏலாமப் போயிட்டுது. உனக்குத் தெரியும்தானே, நான் இல்லாம மிதிலா சமாளிக்க மாட்டாள். இப்பவும் ஏலாமத்தான் இருக்கிறா. இல்லாட்டி இப்பயாவது வந்திடுவன்.” என்றான் அவன்.

“ஓ!” என்றவளுக்கு இதனால்தான் முதலில் காரணத்தைக் கேள் என்று தந்தை சொன்னாரா என்று ஓடியது. எல்லாளன் சொன்னது போல் அவளின் கோபங்கள் தவறானவையோ?

“நீ ஒண்டு செய். உன்ர அண்ணாட்டக் குடு, நான் அவரோட கதைக்கிறன்.” என்ற காண்டீபனின் குரல், அவளின் சிந்தனைச் சங்கிலியை அறுத்துவிட்டது.

“முதல் அப்பாவோட கதைங்கோ அண்ணா.” என்று கொடுத்தாள்.

“வணக்கம் சேர். இண்டைக்கு உங்களச் சந்திக்க வரேலாமப் போனதில எனக்கு உண்மையாவே வருத்தம்தான். வீட்டில மாமிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லாமப் போயிட்டுது. அதுதான்… இன்னொரு நாளைக்குக் கட்டாயம் வந்து பாக்கிறன். குறை நினைக்காதீங்கோ.” என்று மரியாதையாகப் பேசியவனை அவருக்கும் பிடித்துப்போனது.

“இதில என்ன இருக்குக் காண்டீபன்? என்ர மகளுக்கு நீங்க இன்னுமொரு அண்ணாவாம் எண்டு சொன்னவா. அங்கிள் எண்டே சொல்லுங்க.” என்று, அவரும் அவனோடு நன்றாகவே கதைத்துவிட்டுத் தந்தார்.

அகரனுக்குக் கொடுப்போம் என்றால், வந்தவர்களோடு நின்று புகைப்படம் எடுக்க ஆரம்பித்திருந்தான் அவன். ஆட்கள் வேறு அடுத்தடுத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

“அண்ணா ஃபோட்டோ எடுத்துக்கொண்டு இருக்கிறார்.” என்ன செய்வது என்று தெரியாது சொன்னாள் ஆதினி.

“அப்ப விடு. இன்னொரு நாளைக்கு நேர்லயே வாறன், சரியா? நீ எனக்கு மறக்காம ஃபோட்டோக்களை அனுப்பிவிடு.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான் காண்டீபன்.

ஆதினியும் வஞ்சகமே இல்லாமல், எடுத்த அத்தனை புகைப்படங்களையும் அனுப்பிவிட்டாள்.

திரும்ப திரும்ப அவற்றையே பார்த்திருந்தவனின் விழிகளின் ஓரம், சித்திரக் கோடாகக் கண்ணீரின் தடம்.
 

Goms

Active member
என்ன ACP சாருக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா?🤔🥰
 
Top Bottom