• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 26

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 26


நாட்டின் முக்கிய புள்ளிகள் அலைபேசி வாயிலாகவும் நேராகவும் இளந்திரையனின் நலத்தை விசாரித்தபடியிருந்தனர். அப்படித்தான் சத்தியநாதனும் அவரைப் பார்க்க நேராகவே வந்தான். வீட்டின் காவலாளி சமநலநாயக்க மூலம், எல்லாளனுக்கு உடனேயே செய்தி பறந்தது.

இவன்தான் காரணமோ என்கிற சந்தேகம் எல்லாளனுக்கு ஏற்கனவே இருந்தது. அதை நிரூபிக்க, எப்படி வலைவீசித் தேடியும் சுட்டவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதிலேயே உள்ளுக்குள் கனன்றுகொண்டு இருந்தான். இப்போது, வீட்டுக்கே வந்திருக்கிறான் என்றால்? அவனால் வீட்டில் வைத்து எதையும் செய்ய முடியாதுதான். என்றாலும்…

அகரனும் வேலையாக வெளியே போயிருந்தான். வீட்டில் இருப்பது ஆதினியும் இளந்திரையனும் மட்டும்தான். இருவரையும் அவனோடு தனியே விட மனம் வராமல், அங்கு விரைந்தான்.

அதற்கு முதல் ஆதினிக்கு அழைத்து, கீழே இளந்திரையனின் அறைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினான். அவர்கள் எல்லோர் பற்றிய தகவலும் சத்தியநாதனின் விரல் நுனியில் இருக்கும் என்று தெரிந்தாலும், ஏனோ சத்தியநாதனின் பார்வையில் அவள் படுவதை அவன் விரும்பவில்லை.

இளந்திரையனுக்குப் பாதுகாப்பாக நியமிக்கப்பட்டவருக்கு அழைத்து, இளந்திரையனை விட்டு எங்கும் அசைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தினான். எவ்வளவுதான் வேகமாக வந்தபோதிலும், அவன் அங்கு வந்து சேர்ந்தபோது நாற்பது நிமிடங்கள் கடந்திருந்தன.

இவன் கேட்டிலிருந்து உள்ளே வரவும் சத்தியநாதன் வீட்டுக்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. காக்கி உடையில் காவலதிகாரியாக இவனும் வெள்ளை வேட்டி சட்டையில் அரசியல் வாதியாக அவனும் எதிரெதிரே! கிட்டத்தட்ட ஒரே வயதினர்.

அவன் மீதே பார்வையைப் பதித்து நடந்து வந்த எல்லாளன், நேற்றுப் பெய்த மழையில் சிறு குட்டையாகத் தேங்கியிருந்த நீரில் காலை வைக்கப் பார்த்து, கடைசி நேரத்தில் எட்டி வைக்க, “ஜஸ்ட் மிஸ்!” என்றான் சத்தியநாதன்.

ஒற்றைப் புருவத்தை மட்டும் கேள்வியாக உயர்த்தினான் எல்லாளன்.

“கால வைக்கப் பாத்திட்டு கடைசி நேரத்தில தப்பிட்டிங்க. அதைத்தான் சொன்னனான்.” இளம் முறுவலோடு சொல்லிவிட்டு, “என்ர கலியாணத்தில பாத்தது. எப்பிடி இருக்கிறீங்க எல்லாளன்?” என்று விசாரித்தபடி அவன் புறமாகக் கையை நீட்டினான்.

“எனக்கு என்ன? நல்லவன் மாதிரி ஊருக்க மக்களோட மக்களா உலாவுற கள்ளனையும் காடையனையும் தூக்கி உள்ளுக்குப் போடுறதிலேயே காலம் ஓடுது!” அவன் கரத்தை வெகு அழுத்தமாகப் பற்றிக் குலுக்கியபடி சொன்னான் எல்லாளன்.

“பின்ன! உங்கள மாதிரி நேர்மையான அதிகாரிட்ட இருந்து தப்பேலுமா? என்ர தம்பியையே தூக்குக் கயிற்றுக்குத் தூக்கிக் குடுத்த ஆள் எல்லா நீங்க!” அவன் தோள் தட்டிச் சொல்லிவிட்டு, “இளந்திரையன் சேர சுடப் பாத்தவனைப் பிடிச்சிட்டீங்களா?” என்று விரிந்த சிரிப்புடன் விசாரித்தான்.

அந்தச் சிரிப்பே எல்லாளனின் நெஞ்சில் நெருப்பைப் பற்ற வைத்தது. காட்டிக்கொள்ளாமல், “தேடிக்கொண்டு இருக்கிறம். கெதியில பிடிச்சிடுவம்.” என்றான்.

“அதுக்கு அவன் உயிரோட இருக்கோணுமே.”

“விளங்கேல்ல?” என்றான் எல்லாளன் விழிகள் இடுங்க.

“இல்ல, அவனுக்கும் குண்டு பட்டதாம் எண்டு கேள்விப்பட்டன். அதுதான்… அவன் தப்பி இருந்தாத்தானே உங்களிட்ட மாட்டுவான்.”

ஆக, அவன் சந்தேகம் சரிதான். இப்போது எல்லாளனின் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று. “சுட்டவன் செத்தாலும் சுடச் சொன்னவன் உயிரோடதானே இருப்பான். எனக்கு அவன் தான் வேணும்.” என்றான் அசராமல்.

மெலிதாக நகைத்தான் சத்தியநாதன்.

“எனக்கு உங்களிட்டப் பிடிச்ச விசயமே இந்தத் தைரியம்தான் எல்லாளன்! நானும் இப்பிடித்தான். மரத்த வெட்டுறதை விட்டுட்டு வேரையே அறுக்கிறவன். பதிலுக்குப் பதில், பரிசுக்குப் பரிசு குடுக்காம விடவே மாட்டன்.” என்றுவிட்டு,

“உங்களுக்கும் இளந்திரையன் சேரின்ர மகளுக்கும் கலியாணமாம் எண்டு கேள்விப்பட்டன். வாழ்த்துகள் எல்லாளன்! கள்ளனும் காடையனும் ஒருத்தன் போக இன்னொருத்தன் வந்து கொண்டேதான் இருப்பான். அவங்களுக்கு வேறென்ன வேல? அதால கெதியா கலியாணத்தக் கட்டி வாழ்க்கையை அனுபவிக்கிற வழியப் பாருங்க. இந்த விசயத்தில உங்கள விட நான் கொஞ்சம் அனுபவசாலி. அதால நான் சொல்லுறதைக் கேளுங்க. சேருக்கு நடந்த மாதிரி, எப்ப என்ன நடக்கும் எண்டு, இந்தக் காலத்தில சொல்லவே ஏலாம இருக்கு. வரட்டா எல்லாளன்.” என்று விடைபெற்றுப் போனான் அவன்.

அவனைத் திரும்பியும் பாராமல் வீட்டுக்குள் வந்த எல்லாளனுக்குள் எரிமலையின் சீற்றம். அத்தனைக்கும் காரணம் நான்தான் என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறான்.

இளந்திரையன் தப்பியதை ஜஸ்ட் மிஸ்ஸில் உணர்த்தி, அவரைச் சுட்டவன் உயிருடன் இல்லை என்கிற தகவலைத் தந்து, தன் தம்பிக்குத் தூக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்த உன்னை விடமாட்டேன் என்று மிரட்டிவிட்டுப் போகிறான்.

கிட்டத்தட்ட இது ஒரு நேரடி மோதல்!

இளந்திரையனைச் சென்று பார்க்கக் கூடச் செய்யாமல் விறாந்தையிலேயே அமர்ந்துகொண்டான். அருள், சாமந்தி போன்ற அடுத்த இளம் தலைமுறையை மொத்தமாக நாசமாக்கி, நாட்டின் சொத்தே இவர்கள்தான் என்று சொல்லும் இளந்திரையன் போன்றவர்களின் உயிரோடு விளையாடுகிறவனை இன்னுமே கையைக் கட்டி வேடிக்கை பார்க்கப் போகிறானா?

அவன் நெஞ்சில் பெரும் புயல் அடிக்க ஆரம்பித்தது.

எதற்கோ, தன் அறையிலிருந்து வெளியே வந்த இளந்திரையன், விழிகளை மூடித் தனியாக அமர்ந்திருந்த எல்லாளனைக் கண்டுவிட்டு, அவனிடம் வந்தார்.

“எல்லாளன்?”
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவரின் அழைப்பில் வேகமாகத் திரும்பிப் பார்த்தான்.

நடந்த சூட்டுச் சம்பவத்துக்குப் பிறகு இருவரும் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்தான். நடந்ததை விசாரிக்க, பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்த, அவருக்கான பாதுகாப்பினை வழங்க என்று எல்லாமே அலுவல் சார்ந்தே நிகழ்ந்திருந்தன.

இப்போதுதான் அறிந்த இரண்டு மனிதர்களாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஒரு மெய்ப்பாதுகாவலர் இறந்து, இன்னொருவர் காயப்பட்டு என்று, இரண்டு குடும்பங்கள் தன்னால் பாதிக்கப்பட்டதை எண்ணி, மொத்தமாகத் தளர்ந்திருந்தார் மனிதர்.

ஏனோ அவனால் அவரை அப்படிப் பார்க்க முடியவில்லை.

இறந்தவரின் இரண்டு பிள்ளைகளின் படிப்புச் செலவு உட்பட, திருமணம் செய்து வைக்கும் பொறுப்பும் தன்னதே என்று அவர்களின் பொறுப்பை மொத்தமாக அவரே எடுத்துக்கொண்டிருந்தார்.

எத்தனை நல்ல மனது இருந்தால் இத்தனையைச் செய்யத் தோன்றும்? அப்படியானவர் அவனுக்கு ஜஸ்ட் மிஸ்ஸா?

“நடந்த எல்லாத்துக்கும் காரணம் இப்ப வந்திட்டுப் போனவன்தான் அங்கிள்.” தன் முன்னே வந்து அமர்ந்தவரிடம் சொன்னான்.

“வடிவாத் தெரியுமா?”

“அவனேதான் சொல்லாமச் சொல்லிப்போட்டுப் போறான்.”

“எங்களுக்குச் சாட்சி வேணும் எல்லாளன்.”

தன் உயிருக்கே ஆபத்து வந்த பின்னும் கூட, சட்டப்படியே அவனை அணுகச் சொல்லும் அவர் மீதான மதிப்பு, பலமடங்கு உயர்ந்து போக, “அந்தத் தைரியம்தான் வீட்டுக்கே தேடி வந்து திமிராக் கதைக்க வச்சிருக்கு.” என்றான் அடக்கிய சினத்துடன்.


*****


போதைப்பொருட்கள் ஊருக்குள் வருவதற்கு மூன்று நிலைகளைக் கடந்தாக வேண்டும். ஒன்று, வேறு மாவட்டங்களில் இருந்தோ, நாடுகளில் இருந்தோ யாழ்ப்பாணத்துக்குள் வருவது. இரண்டாவது, அப்படி வந்தவை உள்ளூர் ஏஜெண்டுகளிடம் கைமாறும். கடைசியாக, அவர்களிடமிருந்து மாதவன் போன்று மக்களோடு மக்களாகப் புழங்கும் டீலர்களின் கைகளுக்கு வரும்.

கடைசியாக அவர்களிடமிருந்து மக்களிடம் சேர்கிறது. டீலர்களைப் பிடிப்பதால் பிரயோசனம் இல்லை என்பது இத்தனை வருட அவனுடைய அனுபவம். அவர்களுக்கே அவர்களின் ஏஜெண்டுகள் யார் என்று தெரியாது.

ஆனால், இந்தப் பக்கம் டீலர்களைப் பிடித்தபடியே அந்தப் அக்கம் யாழ்ப்பாணத்துக்குள் வருவதைக் கட்டுப்படுத்தினால் இது எல்லாமே நிற்கும். அதற்கான வேலைகளைப் பார்த்தான் எல்லாளன்.

யாழ்ப்பாணத்துக்குள் நுழையும் அத்தனை வாகனங்களையும் அதி தீவிர சோதனைக்கு உள்ளாகினான். கடற்கரை ஓரமாக வந்து போகும் கப்பல், படகு என்று எதுவும் அவன் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாதபடிக்குச் செய்தான். கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தையே சுற்றி வளைத்தான்.

இருந்தாலும் அவனால் ஒரு அரசியல்வாதியின் வாகனத்தையோ, காவல்துறையில் அதி உயர் பதவிகளில் இருப்பவர்களையோ சோதனையிட முடியவில்லை. கூடவே, சாதாரணமாகப் பயணிக்கும் ஒவ்வொரு பயணியையும் அவரின் உடைமைகளையும் சோதனையிடத்தான் முடியுமா?

அப்படி எத்தனை பேரை, எத்தனை நாளைக்கு என்று கண்காணிப்பான்? ஆனாலும் விடவில்லை. சந்தேகத்துக்கு இடமானவர்களை எல்லாம் பாரபட்சமின்றி பரிசோதித்தான்.

இது நிரந்தரத் தீர்வல்ல என்று தெரியும். ஆனால், நாடே போற்றும் ஒரு நீதிபதியின் வீட்டில் வைத்து, இதை இதோடு விடமாட்டேன் என்று தைரியமாகச் சொல்லிவிட்டுப் போனவனைச் சும்மா விடுவதா? நீ நினைக்கும் இடத்தில் நாடும் இல்லை, நானும் இல்லை என்று காட்ட வேண்டாமா?

உண்மையிலேயே சத்தியநாதன் பல்லைக் கடித்தான். அந்தளவில் தொந்தரவு கொடுத்தான் எல்லாளன். அவன் ஆட்கள் பலர் கைதாகினர். சொன்ன நேரத்தில் ஏஜெண்டின் கையில் பொருட்களைச் சேர்க்க முடியவில்லை.

ஆங்காங்கே என்று பல இலட்சங்கள் பெறுமதியான பொருட்கள் பிடிபட்டது. அதனால் உண்டான பெரும் நட்டம் என்று பெரும் தலையிடி தந்தான். ஆனாலும் கூடப் பொறுமை காத்தான். எல்லாளன் வேறு எதற்கோ அடி போடுகிறான் என்று அவனுடைய குள்ளநரிப் புத்தி எடுத்துரைத்தது.

இளந்திரையனை வேறு சீண்டி இருக்கிறானே! அதில், ஒரு பக்கம் தந்தையின் அரசியல் பலத்தைப் பயன்படுத்தி எல்லாளனுக்கு அழுத்தம் கொடுத்தபடியே, தன் ஆட்கள் எல்லோரையும் கொஞ்ச நாள்களுக்கு அடங்கி இருக்கச் சொன்னான்.

எல்லாளன் விடவில்லை. மேலிடத்திலிருந்து எவ்வளவோ அழுத்தங்கள் வந்தபோதும் அத்தனையையும் சமாளித்தான். அப்படி ஒரு வெறி அவனுக்குள் கிளம்பி இருந்தது. பதுங்கிக் கிடப்பவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமானால் அவர்களை நெருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தான்.

அவன் நினைத்ததுதான் நடந்தது. சத்தியநாதனின் பேச்சை அவன் தம்பி சதீஸ்வரன் ஒதுக்கித் தள்ளினான். நெருக்க நெருக்க வெடித்துவிடும் மூர்க்கம் கிளம்புமே. அப்படியொரு மூர்க்கம் அவனுக்குள் கிளம்ப ஆரம்பித்திருந்தது.

தமையனின் பேச்சைக் கூட மீறி, நீ என்னடா கட்டுப்பாடு விதிப்பது, உன்னையும் தாண்டிப் பொருட்களை இங்கே கொண்டுவந்து காட்டுகிறேன் பார் என்று கிளம்பினான்.

முதலில் தமையனின் கண்ணையும் காவல்துறையின் கண்ணையும் மறைக்க, மீன் பிடிக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு படகில் புறப்பட்டான். கொஞ்ச நாள்களுக்குச் சொன்னது போலவே மீன்களைப் பிடிப்பதாகப் போக்குக் காட்டினான்.

காவல்துறை கவனிப்பைக் குறைத்த ஒரு நாளில், நடுக்கடலில் தரித்து நின்ற கப்பலிலிருந்து, போதைப் பொருட்களை போட்டுக்கு மாற்றிக்கொண்டு திரும்பி வந்தான்.
 

Goms

Active member
அடுத்த ஆடு தன்னாலே வந்து தலையை கொடுக்குது.
 
Top Bottom