You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வினைகள்

நிதனிபிரபு

Administrator
Staff member
வினைச்சொல்

ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர்.

அம்மா அழைக்கிறாள்

பாப்பா வருகிறாள்


என்னும் தொடர்களில் அம்மா, பாப்பா என்னும் பெயர்கள் உயிர் உள்ளவர்களைக் குறிக்கும்.

நிலம் அதிர்ந்தது

நீர் ஓடுகிறது

என்னும் தொடர்களில் உள்ள நிலம், நீர் என்னும் பெயர்கள் உயிரற்ற பொருள்களைக் குறிக்கும்.

உயிர்ப்பொருள், உயிரற்ற பொருள் ஆகியவற்றின் செயலையே வினை என்கிறோம்.

அலை வருகிறது

அலையைப் பார்

இத்தொடர்களில் அலை என்பது பெயர்ச் சொல்லாகும்.

வெயிலில் அலையாதே

ஏன் அலைகிறாய்

இத்தொடர்களில் அலை என்பது வினைச் சொல்லாகும்.

படித்தான்

ஆடுகின்றாள்

பறந்தது

சென்ற

கண்டு

ஆகியவை செயலை அடிப்படையாகக் கொண்ட சொற்கள் ஆகும்.

செயலை வினை என்றும் குறிப்பர்.

ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

வினைச்சொல் காலத்தைக் காட்டும்; வேற்றுமை உருபை ஏற்காது.

வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம்.

எச்ச வினையைப்பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.

வந்தான்
- வினைமுற்று

வந்து - வினையெச்சம்

வந்து போனான் - வினையெச்சம்

வந்த - பெயரெச்சம்.


வினை வகைகள்

வினைச் சொற்களை அவற்றின் அமைப்பு, பொருள், சொற்றொடரில் அவை தொழிற்படும் விதம் முதலான அடிப்படைகளில் பலவகையாகப் பாகுபடுத்தலாம்.

தனிவினையும் கூட்டுவினையும்

வினைச் சொற்களை அமைப்பின் அடிப்படையில் தனிவினை, கூட்டுவினை என இருவகைப்படுத்தலாம்.

தனிவினை

படி, படியுங்கள், படிக்கிறார்கள்.

மேற்காணும் சொற்களைக் கவனியுங்கள். இவற்றில்படி என்னும் வினையடியும் சில ஒட்டுகளும் உள்ளன. படி என்னும் வினையடி, பகாப்பதம் ஆகும். அதை மேலும் பொருள்தரக்கூடிய கூறுகளாகப் பிரிக்க முடியாது. இவ்வாறு, தனிவினையடிகளை அல்லது தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.

கூட்டுவினை

ஆசைப்பட்டேன், கண்டுபிடித்தார்கள், தந்தியடித்தேன், முன்னேறினோம்.

மேற்காணும் சொற்களைக் கவனியுங்கள்.

ஆசைப்படு, கண்டுபிடி, தந்தியடி, முன்னேறு என்பன அவற்றின் வினையடிகள்.

அவை பகுபதங்கள் ஆகும். இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளைக் கூட்டுவினையடிகள் என்பர். அவ்வகையில் கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.


கூட்டுவினைகள் பொதுவாக மூன்று வகையாக ஆக்கப்படுகின்றன.

1) பெயர் + வினை = வினை

தந்தி + அடி = தந்தியடி
ஆணை + இடு = ஆணையிடு
கேள்வி + படு = கேள்விப்படு

2) வினை + வினை = வினை

கண்டு + பிடி = கண்டுபிடி
சுட்டி+ காட்டு = சுட்டிக்காட்டு
சொல்லி + கொடு = சொல்லிக்கொடு

3) இடை + வினை = வினை

முன் + ஏறு = முன்னேறு
பின் + பற்று = பின்பற்று
கீழ் + இறங்கு = கீழிறங்கு

முதல்வினையும் துணைவினையும்

நான் படம் பார்த்தேன்.
கண்ணன் போவதைப் பார்த்தேன்.

இந்தச் சொற்றொடர்களில், பார் என்னும் வினை, கண்களால் பார்த்தல் என்னும் பொருளைத் தருகிறது. இது பார் என்னும் வினையின் அடிப்படைப் பொருள் அல்லது சொற்பொருள்(LEXICAL MEANING) எனலாம்.

ஓடப் பார்த்தேன்.
எழுதிப் பார்த்தாள்.

இந்தச் சொற்றொடர்களில் ஓடப்பார், எழுதிப்பார் என்பன கூட்டுவினைகள் ஆகும். இவற்றில் இரண்டு உறுப்புகள் உள்ளன.

ஓட, எழுதி என்பன முதல் உறுப்புகள். இவை அந்தந்த வினைகளின் அடிப்படைப் பொருளைத் தருகின்றன. பார் என்பது இரண்டாவது உறுப்பு. இது இவ்வினையின் அடிப்படைப் பொருளான பார்த்தல் என்னும் பொருளைத் தராமல் தனது முதல் உறுப்போடு சேர்ந்து வேறு பொருள் தருகிறது.

ஓடப்பார்த்தேன் - இதில் பார் என்பது முயன்றேன் என்னும் முயற்சிப் பொருளைத் தருகிறது.

எழுதிப்பார்த்தாள் - இதில் பார் என்பது சோதித்து அறிதல் என்னும் பொருளைத் தருகிறது.


ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை, முதல் வினை ( M A I N V E R B ) எனப்படும்.

ஒரு கூட்டுவினையின் இரண்டாவது உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை விட்டுவிட்டு முதல் வினைக்குத் துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை, துணைவினை எனப்படும்.


கூட்டு வினையின் முதல் வினை செய அல்லது செய்து என்னும் வினையெச்ச வடிவில் இருக்கும். துணைவினை, வினையடி வடிவில் இருக்கும்.

துணை வினையே திணை, பால் , இடம், காலம் காட்டும் விகுதிகளைப் பெறும். தமிழில் ஏறத்தாழ 40 துணைவினைகள் உள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை முதல்வினையாகவும் செயல்படுகின்றன.

பார், இரு, வை, கொள், போ, வா, முடி, விடு, தள்ளு, போடு, கொடு, காட்டு முதலானவை இருவகை வினைகளாகவும் செயல்படுகின்றன.

துணைவினைகளின் பண்புகள்

1. துணைவினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.

2. இவை முதல் வினையைச் சார்ந்து அதன் வினைப்பொருண்மைக்கு மெருகூட்டுகின்றன.

3. பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.தமிழ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் துணைவினைகள் முதல் வினைகளுக்குப் பின்பே இடம்பெறும்.

(எ.கா.) கீழே விழப்பார்த்தான். இத்தொடரில் விழு (விழ) என்பது முதல்வினை; பார்த்தான் என்பது துணைவினை.

தமிழின் துணைவினைக் கொள்கை ஆங்கிலத்தின் துணைவினைக் கொள்கையிலிருந்து வேறுபட்டது.

அதாவது. தமிழில் துணைவினையாக வரும் வேர்ச்சொல் சில தொடர்களில் முதல்வினையாகவும் வரும்.

தற்காலத் தமிழில் அடி, அருள், அழு, ஆயிற்று, இடு, இரு, எடு, ஒழி, கட்டு, கிட, கிழி, கூடு, கொடு, கொள், தள்ளு, தீர், தொலை, நில், படு, பண்ணு, பார், பிடி, போ, போக, போடு, மாட்டு, முடி, வா, வாங்கு, விடு, வேண்டு, வை போன்ற நாற்பதிற்கும் மேற்பட்ட வினைகள் துணைவினைகளாக வழங்குகின்றன.

இத்துணைவினைகள் முயற்சி, பலன் அளிக்காமை, உறுதி, துணிவு, முடிவு, மிகுதி, காரணம், கண்டிப்பு, வெறுப்பு, கோபம், சிறப்பு போன்ற பல்வேறு பொருள்களை உணர்த்துவனவாக அமைந்துள்ளன.

இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்களை உணர்த்தும் வகையிலும் சில துணைவினைகள் அமைந்துள்ளன.

இனித் தற்காலத் தமிழில் துணைவினைகள் தரும் பொருள்களைச் சான்றுகளுடன் காண்போம்.

விடு இத்துணைவினை உறுதிப்பொருளைத் தருகிறது.

சான்று : எழுதிவிடு இதற்குப் பொருள் எழுது என்பதாகும்.

ஆனால் எழுது என்பதில் இல்லாத உறுதிப்பொருள் எழுதிவிடு என்பதில் உள்ளது.

விடு என்ற துணைவினையே அப்பொருளைத் தருகிறது.

அதேபோல எழுதினேன், எழுதுகிறேன், எழுதுவேன் என்ற வினைச்சொற்களில் இல்லாத உறுதிப்பொருள்,

அவ்வினைச்சொற்களோடு விடு என்ற துணைவினையைச் சேர்த்து முறையே எழுதிவிட்டேன், எழுதிவிடுகிறேன், எழுதிவிடுவேன் என்று கூறும்போது இருப்பதைக் காணலாம்.

விடு என்னும் துணைவினை கட்டாயம் அல்லது கண்டிப்பு என்ற பொருளைத் தருவதாகவும் வழங்குகிறது.

சான்று : வந்துவிடு போய்விடு சொல்லிவிடு




துணைவினையைச் சேர்த்து எழுதுக.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
5.1 எச்சம் - விளக்கம்

(1)எச்சம் என்பது, தன் அளவில் பொருள் முற்றுப் பெறாததாய் இருக்கும்.
(2)பெயர்ச்சொல்லையோ, வினைச்சொல்லையோ கொண்டு முடிவதாய் அமையும்.
(3)காலம் காட்டும் செயலை உணர்த்தும்.
(4)திணை, பால், எண், இடம் உணர்த்தாது.
(5)வினைப்பகுதியைக் கொண்டிருக்கும், எச்சத்திற்கு உரிய விகுதியைப் பெற்றிருக்கும்.

(எ.கா)(1)பெயர்ச்சொல் கொண்டு முடிவன :
வந்த பையன்
உண்ட குதிரை
(2)வினைச்சொல் கொண்டு முடிவன:
உண்டு வந்தான்
ஓடி வந்தது
எச்சமும் முற்றும்

பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் ‘உண்ட’ என்னும் எச்சச் சொல்லை, ‘உண்+ட்+அ’ எனப் பிரிப்பர். இதில் உள்ள ‘அ’ என்னும் விகுதியைக் கொண்டு, திணை, பால், எண், இடங்களை அறிய இயலாது. அடுத்து வரும் பெயர்ச் சொல்லைக் கொண்டே பொருள் முழுமை பெறும்.

வினைச் சொல்லைக் கொண்டு முடியும் ‘உண்டு’ என்னும் எச்சச் சொல்லை, ‘உண்+ட்+உ’ எனப் பிரிப்பர். இதில் உள்ள ‘உ’ என்னும் விகுதியைக் கொண்டு, திணை, பால், எண், இடங்களை அறிய இயலாது. அடுத்து வரும் வினைச் சொல்லைக் கொண்டே பொருள் முழுமை பெறும்.

வினைமுற்றுச் சொல்லாகிய ‘உண்டான்’ என்பதை, ‘உண்+ட்+ஆன்’ எனப் பிரிப்பர். இதிலுள்ள ‘ஆன்’ என்னும் விகுதியைக் கொண்டு, உயர்திணை, படர்க்கை, ஆண்பால், ஒருமை என அனைத்தையும் அறிகின்றோம்.

எனவே, பொருள் எஞ்சி நிற்பது எச்சம் எனவும், பொருள் முற்றுப்பெற்று நிற்பது முற்று எனவும் அழைக்கப்பட்டன.

5.1.2 எச்ச வகைகள்


எச்சம் இரு வகைகளில் முடியும் என்று கண்டோம். அவற்றுடன், பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், பெயரெச்சம் எனப்படும். வினைச் சொல்லைக் கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம் எனப்படும்.

(எ.கா)பெயரெச்சம்- உண்ட பையன்
வினையெச்சம்- உண்டு வந்தான்
 
Top Bottom