நீ தந்த கனவு - 31

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 31


தன்னைத் துரத்தும் எதிலிருந்தோ தப்பித்து ஓடும் நிலையில் இருந்தான் எல்லாளன். மனம், உடல், மூளை அனைத்தும் களைத்திருந்தன. கொஞ்சமேனும் உறங்கி எழுந்தால்தான் தெளிவாகச் சிந்திக்க முடியும் எனும் நிலை.

வீட்டுக்கு வந்து, குளித்துவிட்டுக் கட்டிலில் விழுந்தான். மனதினுள் பெரும் புயல் அடித்துக்கொண்டிருக்கையில் உறங்குவது எப்படி?

நேற்று அவன் நடத்தியது கிட்டத்தட்ட ஒரு சுற்றிவளைப்பு. எதிராளிக்கு விழித்துக்கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கக் கூடாது என்கிற பிடிவாதத்தோடு செய்து முடித்திருந்தான்.

சாகித்தியன் சொன்னதை வைத்து மாதவனையும், அவன் சொன்னதை வைத்து அஞ்சலியையும் தேடி ஓடியவனின் விசாரணையில், தன் உயிரே மாட்டிக்கொள்ளும் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

அதைவிட, விசாரணையின்போது அவன் சொன்னவைகள்? இத்தனை வருடங்களாக இறுக்கமாகப் பற்றியிருந்த இவன் கோபத்திற்கு அர்த்தமே இல்லை என்றுவிட்டானே!

காண்டீபன், அவன், மிதிலா மூவரும் ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள். மிதிலா கைக் குழந்தையாக இருக்கும் போதே, சந்தேகத்தின் பெயரில் அவளின் தந்தையைப் பிடித்துக்கொண்டு போன இலங்கை இராணுவம், கடைசி வரையில் அவரை விடவேயில்லை.

அவள் அன்னை வேலைக்குப் போக, பள்ளிக்கூடம் முடிந்து வருகிறவள் அயலட்டையில் இருக்கும் இவர்களின் வீடுகளில்தான் இருப்பாள். பெரும்பாலும் எல்லாளனின் வீடுதான் அவளின் புகலிடம்.

காண்டீபனும் அன்னையையும் சகோதரனையும் இரண்டாயிரத்து ஒன்பதில் நடந்த கடைசி யுத்தத்தில் பறி கொடுத்திருந்தான்; அப்பா காவல்துறையில் வேலை. அதில், அவனும் எல்லாளனின் வீட்டில்தான் இருப்பான்.

உணவு, உறக்கம், படிப்பு என்று எல்லாமே அங்கேதான். பெரும்பான்மை நாள்களில் மூன்று வீட்டுக்கும் சேர்த்தே எல்லாளனின் அன்னை சமைத்துவிடுவார். இரு வீட்டினரும் பொருட்கள் வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களின் இளமைக்காலம் இப்படித்தான் இருந்தது.

ஆண்கள் இருவரையும் விட மிதிலா சின்னவள். அழகும் துடுக்குத்தனமும் நிரம்பியவள். பயம் சிறிதும் இல்லை. அவள் கொஞ்சமாவது பயப்படுவது எல்லாளனுக்கு மாத்திரமே.

அதுவும், அவன் படிக்க வா என்று அழைத்து விட்டால் போதும், அழ ஆரம்பித்துவிடுவாள். தன் அதட்டலுக்கும் உருட்டலுக்கும் பயந்து நடுங்குகிறாள் என்பதே, அந்த இளம் பிராயத்தில் எல்லாளனுக்கு அவளைப் பிரத்தியேகமாகப் பிடித்துப்போகக் காரணமாயிற்று. அவள் பெரியபிள்ளையானதும் அவனது கவனமும் கவனிப்பும் அதிகரித்துப்போனது.

எதையும் இலகுவாக எடுத்து, சிரிப்பும் கலகலப்புமாகக் கொண்டுபோகிற காண்டீபனின் கேலி கிண்டலுக்கே சிலிர்த்துக்கொண்டு சண்டைக்குப் போகிறவள், எல்லாளனின் கட்டுப்பாட்டு வளையத்திலிருந்து திமிற என்றைக்கும் விரும்பியதில்லை. அதனாலேயே அவளுக்கும் தன்னைப் பிடிக்கும் என்பது, அவனின் ஊகம்.

“என்ன மச்சான், காத்துக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூடுதலா அடிக்கிற மாதிரி இருக்கு.” என்று காண்டீபனே கேலி செய்திருக்கிறான்.

முகம் சிவந்தாலும், “சும்மா இரடா! அவள் சின்ன பிள்ளை.” என்று இவனும் பொய்யாக அதட்டியிருக்கிறான்.

இப்படி இருந்தபோதுதான் அந்த நாள் வந்து, அவர்கள் வாழ்வில் அனைத்தையும் பிரட்டிப் போட்டுவிட்டுப் போனது. கண் முன் அவன் உலகமே தலைகீழாயிற்று. தோள் கொடுப்பான் என்று நம்பிய தோழனைக் காணவில்லை. கூடவே, அவன் அப்பாவும் மறைந்து போனார்.

அவர் போலீஸ் என்பதில் அவர் மூலம் அம்மா அப்பாவைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என்று மலைபோல நம்பிய எல்லாளன், அந்த நாள்களில் மொத்தமாக ஒடிந்தே போனான்.

உற்ற சொந்த பந்தங்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எல்லோருமே நடந்த கொடூரக் கொலைகளுக்குப் பயந்து, தமக்கும் ஏதும் நடந்து விடுமோ என்று அஞ்சி, அவன் உதவி கேட்டுப் போனபோது கூட விலகி ஓடிவிட்டதில், அந்த நேரம், இவர்களையும் அப்படித்தான் அவனால் யோசிக்க முடிந்தது.

திக்கற்று நின்ற நேரத்தில் உதவாத யாரும் இனி என்றைக்கும் வேண்டாம் என்கிற கோபம், அவனுக்குள் பெரு மலையாக வளர்ந்து நின்றது. அந்த ஊரை வெறுத்தான்; அங்கிருந்த மனிதர்களை அறவே வெறுத்தான்.

அதனால்தான் யாருக்குமே சொல்லாமல் கொள்ளாமல் சியாமளாவோடு புறப்பட்டிருந்தான். திரும்பவும் ஊருக்குச் செல்லவோ, பழையவற்றை மீட்டிப் பார்க்கவோ விரும்பாததற்கும் காரணம் அதுதான்.

நிச்சயமாகக் காண்டீபன் காவல்துறையில்தான் பணி புரிந்துகொண்டிருப்பான் என்று இத்தனை நாள்களாக நம்பியிருந்தான். அந்தளவில் அவனுக்கு இந்த வேலை எவ்வளவு பெரிய கனவு என்று தெரியும். வாய் ஓயாமல் காவல் துறையைப் பற்றி, அதில் சேர்ந்து அவன் செய்யப்போகும் சட்ட நடவடிக்கைகள் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பான்.

சட்டம், ஒழுங்கு, குற்றங்கள் போன்றவற்றின் மீதுதான் அவனுடைய தேடல்கள் இருக்கும். அப்படி, அவன் திணித்தவைதான் இவன் நாடி நரம்பு எங்கும் இவனறியாமலே சென்று சேர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் வேலை என்று யோசித்ததுமே காவல் துறைக்குள் நுழைந்திருந்தான்.

அந்தளவில் காவல்துறைப் பணியை நேசித்தவனின் காலை உடைத்து, கையை உடைத்து அனுப்பியிருக்கிறார்களே!

பாரம் கூடிய பொருளைத் தூக்கினால் கை உணர்வை இழந்துவிடும் என்றானே. இவனையே தோளில் தூக்கிச் சுமக்கும் அளவுக்கு வலுக் கொண்டிருந்தவனின் இன்றைய நிலை இதுதானா? ‘காண்டீபா…’ நெஞ்சு தாங்கமாட்டாமல் துடித்தது.

அன்றைய எல்லாளன் அல்லன் நான், என்னிடமிருந்து எந்த மென்மையான பக்கத்தையும் எதிர்பார்க்காதே என்று காட்டுவதற்காகத்தான் அறைந்தான். அதன் பிறகு அவன் பார்த்த பார்வை? அவன் விழிகளில் தெரிந்த சிவப்பு? பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டான் எல்லாளன்.

அவனை அப்படி எதிர்கொள்ள முடியாமல்தானே விசாரணையை முழுமையாக முடிக்காமல் ஓடி வந்தான்.

இப்போதும் அந்தக் கலங்கிய விழிகள் இரண்டும் அவனைத் துரத்தின. உதடு கூட வெடித்து இரத்தம் வந்ததே. ஒற்றைப் பாயில் உறங்கி, உருண்டு புரண்டு அடிபட்டு, தோள்கள் உரச நடந்து, ஒருவரின் உடையை மற்றவர் போட்டு வளர்ந்தவர்கள் இன்றைக்கு எதிரெதிரே நிற்கிறார்கள்.

தன் கையாலேயே அவனைச் சிறைக்குள் அடைக்கும் தைரியம் அற்றுப் போனதால்தான், கதிரவனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு ஓடி வந்தான். இனி? நண்பனாக நிற்பானா? காவலனாகக் கடமையைச் செய்வானா? பெரும் போராட்டம் ஒன்று அவனுக்குள் நிகழ ஆரம்பித்தது.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அப்போது சியாமளா அவனுக்கு அழைத்தாள்.

“அண்ணா, ஆதினிக்குச் சத்தியப் பிரமாணம் முடிஞ்சுதாம். உடனேயே வெளிக்கிடினமாம் எண்டு மாமா சொன்னவர். இவரிட்டயும் சொன்னனான். இவர் உங்களிட்டயும் ஒருக்காச் சொல்லிவிடச் சொன்னவர். ஏதாவது அரேஞ்ச்மென்ட்ஸ் செய்யோணுமா?” என்று, இளந்திரையனின் பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு வினவினாள்.

அவனுக்கு எதுவுமே நினைவில் இல்லாதது போன்ற மரத்த நிலை. விழிகளை இறுக்கி மூடி யோசித்துவிட்டு, “பிளான்ல எந்த மாற்றமும் இல்லை எண்டால் ஒண்டும் தேவை இல்ல. எல்லாம் சரியா நடக்குதா எண்டு மட்டும் அகரன ஒருக்கா செக் பண்ணச் சொல்லு, போதும்.” என்றான் கனத்த குரலில்.

ஆதினியின் வருகைக்காகப் பெரும் ஆவலுடன் காத்திருந்தவன் அவன். இன்றைக்கு அதை உணரும் நிலையிலேயே இல்லை.

“என்ன அண்ணா, ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க? உடம்பு ஏதும் சரி இல்லையா?” அவன் குரலின் பேதம் உணர்ந்து அக்கறையோடு விசாரித்தாள் சியாமளா.

“ஒண்டும் இல்லயம்மா. வேல கொஞ்சம் கூட, அவ்வளவுதான்.” அவளுக்கு மிகவும் பிடித்த காண்டீபன் அண்ணாவின் இன்றைய நிலையைச் சொல்ல மனம் வராமல், “ரெண்டு சாப்பாட்டு பார்சல் கட்டி வை. கொஞ்ச நேரத்தில வாறன்.” என்றுவிட்டு எழுந்து புறப்பட்டான்.

அவன் மீண்டும் காவல் நிலையம் சென்ற போது, நெருப்பெட்டி அளவிலான சிறை அறைக்குள், தரையில் கால்களை நீட்டி அமர்ந்திருந்து, சுவரில் தலை சாய்த்து, விழிகளை மூடி இருந்தான் காண்டீபன். தலை கலைந்து, முகம் சோர்ந்திருந்தது. காலையில் நேர்த்தியாக அணிந்திருந்த ஆடைகள், இப்போது அவன் மனதைப் போலவே கசங்கிக் கிடந்தன.

எந்த உணர்வு உந்தியதோ, மெல்ல விழிகளைத் திறந்து பார்த்தான். வெளியே அவன், உள்ளே இவன். சிறைக் கம்பிகள் இருவரையும் பிரித்திருந்தது. சேர்ந்தாலும் பிரிந்தேதான் இருக்க வேண்டும் என்பது, அவர்கள் இருவருக்கும் விதித்தது போலும்.

மனத்தின் துடிப்பையும் தவிப்பையும் மற்றவருக்குக் காட்டிவிடவே கூடாது என்கிற கவனத்தோடு, இருவரின் பார்வையும் மற்றவரில் நிலைத்து நின்றது.

எல்லாளன் திரும்பிப் பார்த்தான். காவலுக்கு நின்ற கொன்ஸ்டபிள் வந்து, பூட்டியிருந்த கதவைத் திறந்துவிட்டார். உள்ளே வந்து, கையில் இருந்த பையைக் காண்டீபனின் முன்னே வைத்துவிட்டு, தானும் தரையிலேயே அமர்ந்துகொண்டான். காண்டீபனின் பார்வை இவனையே தொடர்ந்தது.

சில நொடிகள் அமைதியிலேயே கழிந்தன. காண்டீபனின் தாடையைப் பற்றி, அவன் உதட்டு வெடிப்பை ஆராய்ந்தான் எல்லாளன். பைக்குள் இருந்த குட்டி டியூப் ஒன்றை எடுத்து, அதிலிருந்த களிம்பை அவன் உதட்டில் தடவிவிட்டான். அவனே உடைத்து, அவனே சரிபார்த்து எடுத்து வந்த கண்ணாடியை நீட்டினான். வாங்கி அணிந்துகொண்டான் காண்டீபன்.

“சாப்பிடு!” என்றான் உணவிருந்த பையைக் காட்டி.

“வீட்டை போனியா?”

எல்லாளன் பதில் சொல்லவில்லை. பார்சல் ஒன்றை எடுத்துப் பிரித்து, அவன் புறமாக நகர்த்தி வைத்தான்.

அந்தப் பையினுள் இன்னொரு பார்சல் இருப்பதைக் கவனித்தான் காண்டீபன். அதை எடுத்துப் பிரித்து, எல்லாளன் முன்னே வைத்தான்.

இருவராலும் உண்ண முடியவில்லை. எத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒன்றாகச் சாப்பிடப்போகிறார்கள்? அதுவும் எங்கு வைத்து? இருவரின் நெஞ்சத்திலும் அளவுக்கதிகமான அழுத்தம். அதை மற்றவருக்குக் காட்டப் பிடிக்காததால், இருவரின் பார்வையும் பார்சலிலேயே பிடிவாதமாக நிலைத்திருந்தது.

இதெல்லாம் நடக்கும் என்று கணித்து வைத்திருந்ததாலோ என்னவோ, எல்லாளனை விடவும் வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டான் காண்டீபன். அருகிருந்தவனின் கையைப் பற்றி அழுத்தி, “சாப்பிடு மச்சான், இனி எத்தின வருசத்துக்குப் பிறகு இப்பிடி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. முதல், கிடைக்குமா எண்டே தெரியாது.” என்றான்.

எல்லாளனுக்குச் சுர் என்று கோபம் உச்சிக்கு ஏறியது. திரும்பி அவனைத் தீப்பார்வை பார்த்தான். அவன் எங்கு இருக்கிறான், எப்பிடி இருக்கிறான் என்று இவனுக்குத் தெரியாது. ஆனால், இவன் எங்கு, என்னவாக இருக்கிறான் என்றெல்லாம் அவன் தெரிந்துதானே வைத்திருந்திருக்கிறான்.

தன் பிரச்சனைகளை எல்லாம் ஏன் இவனிடம் கொண்டு வரவில்லை? கொண்டு வந்திருக்க இந்தத் துன்பங்களைத் தவிர்த்திருக்கிலாமே!

அத்தனை சிக்கல்களையும் உருவாக்கி, அதற்குள் தன்னைத் தானே திணித்துக்கொண்டு நிற்கிறவனை நன்றாக வெளுக்கும் வெறி வந்தது. என்ன, இந்த நிலையில் இருக்கும் அவனிடம் அதைக் காட்ட முடியவில்லை. எப்படி இவனைக் காப்பாற்றப் போகிறேன், எப்படி வெளியில் கொண்டுவருவேன் என்று, அவன் மனது படாத பாடு பட்டது.

இவனுக்கு இருக்கும் இந்தத் தவிப்புகள் எதுவும் அவனுக்கு இல்லை போலும். ஒரு வாய் சோற்றை அள்ளி இவனுக்கு நீட்டினான். வந்ததே ஒரு கோபம். படார் என்று அவன் கையைப் பிடித்துத் தட்டிவிட்டான். உணவு தரையில் சிந்தியது.

“ஏஎஸ்பிக்குப் பழக்கம் சரியில்ல!” மீண்டும் ஒரு வாய் சோற்றை அள்ளி, அவன் தாடையைப் பற்றித் தன் புறம் திருப்பி, மீண்டும் நீட்டினான். அவனை முறைத்தபடி வாங்கிக்கொண்டான் எல்லாளன்.

இருவரும் சத்தமில்லாமல் சாப்பிட ஆரம்பித்தனர். தனக்குத் தருவானா என்று திரும்பி திரும்பிப் பார்த்தான் காண்டீபன். அவன் ஒரு பிடிவாதத்துடன் உண்டுகொண்டு இருக்கவும், அவன் வாய்க்குள் கொண்டுபோன கையைப் பிடித்து இழுத்து, தன் வாய்க்குள் அடைந்துகொண்டான்.

அதற்கு மேல் எல்லாளனால் முடியவில்லை. “உன்ன நானே கொல்லப்போறன் பார். செய்றதை எல்லாம் செய்து போட்டு என்ன நட்புக் கொண்டாடுறியா?” என்று சீறினான்.

அதற்குப் பதில் சொல்லாம, “ஏன்டா, இந்தக் கோபம் மட்டும் உனக்கு எண்டைக்குமே குறையாதா?” என்று மலர்ந்த சிரிப்புடன் வினவினான் காண்டீபன்.

எப்போதுமே அவன் கேட்கும் கேள்வி இது. அந்த நாள் களின் நினைவில் இருவருக்குமே மனது சற்று இலகுவாகிற்று. அப்படியே உணவை முடித்தனர்.
 
Top Bottom