நீ தந்த கனவு - 35

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 35

வெளிச்சத்தை விழுங்கி இருள் பரவத் தொடங்கிய பொழுது அது. எல்லாளனின் பைக், காண்டீபனின் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தது. மனம் மட்டும் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நண்பனில் நிலைகொண்டிருந்தது. சம்மந்தன் மாமாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறான்? மிதிலா, அவளும் இருக்கிறாளே!

ஒரு ஆழ்ந்த மூச்சுடன் கண்ணாடி வழியே ஆதினியைப் பார்த்தான். அவள் வரட்டும் என்றுதான் காண்டீபனின் வீட்டுக்குச் செல்லாமல் காத்திருந்தான். அவள் கூடவே இருந்தால் சமாளிக்க முடியும் போல், அவர்களை எதிர்கொள்ள முடியும் போல் ஒரு நம்பிக்கை.

“ஸ்டேஷனுக்கு வரத்தான் இருந்தனான். வேலைல நேரம் போயிற்றுது.” என்றான் அவளிடம்.

வந்து இறங்கியபோது அவனை எதிர்பார்த்து ஏமாந்தாள்தான். கோபமும் இருந்தது. ஆனால், அவன் முகத்தில் தெரிந்த இறுக்கமும் யோசனையும் அதைப் பிடித்துக்கொண்டு தொங்க விடவில்லை. அதில், “பரவாயில்ல விடுங்க.” என்றாள்.

இந்தளவில் பக்குவமடைந்துவிட்டாளா என்று பார்த்தவன் வேறு பேசவில்லை. பேசும் மனநிலையில் இல்லை அவன்.

காண்டீபனின் வீடும் வந்து சேர்ந்தது. “என்ன நடந்தாலும் கொஞ்சம் நிதானமா இரு!” என்று சொல்லிவிட்டு அவளோடு உள்ளே நடந்தான்.

அதன் பொருள் புரியாமல் அவனைக் கேள்வியாக ஏறிட்டாள் அவள். இதற்குள் இவர்களைக் கண்டுவிட்டு நாய் பெருங்குரலில் குலைத்துக்கொண்டு வர, அணைந்திருந்த வீட்டின் வெளி விளக்குகள் வேகமாக உயிர் பெற்றன.

“ஆரு?” பயந்த மெல்லிய குரல் ஒன்று கேட்டது.

அது மிதிலா! அந்தக் குரல் செவிகளைத் தீண்டியதும் எல்லாளனை மிகப் பெரிய இறுக்கம் ஒன்று சூழ்ந்தது. ஆதினியின் கரத்தைத் தேடிப் பற்றினான்.

அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கவிந்திருந்த இருள் அவன் உணர்வுகளைப் படிக்க விடாமல் தடுத்தபோதும், அவன் பற்றலில் இருந்த இறுக்கம் மீண்டும் என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று.

“நீதான் எண்டு சொல்லு.” என்றான் மெல்லிய குரலில்.

அதையே அவன் சொன்னால் என்ன? எழுந்த கேள்வியைத் தனக்குள்ளேயே வைத்துக்கொண்டு, “மிதிலாக்கா, நான் ஆதினி.” என்று குரல் கொடுத்தாள்.

“ஆதினியா?” என்றபடி கதவைத் திறந்த மிதிலா, ஆதினியோடு நின்றிருந்த எல்லாளனைக் கொஞ்சமும் எதிர்பாராமல் அதிர்ந்து நின்றாள். பார்வை அவனிலேயே நிலைகுத்தி நின்றது.

ஆதினிக்குக் குழப்பம். ஆரம்பத்திலிருந்து எல்லாளன் இயல்பாக இல்லை. அவன்தான் அப்படி என்றால் இங்கே மிதிலாவும். என்னாயிற்று இவர்களுக்கு?

அதைவிட, தன் குரல் கேட்ட பின்னும் வெளியே வராமல் இருக்கிறானா அவளின் காண்டீபன் அண்ணா?

“அண்ணா எங்கயக்கா?” என்றபடி அவள் வீட்டுக்குள் நுழைய, இங்கே எல்லாளன் என்னதான் எதிர்பார்த்து வந்திருந்த போதிலும் ஆறு மாத வயிற்றோடு கண் முன்னே நின்றவளைக் கண்டு, சற்றுத் தடுமாறித்தான் போனான்.

எத்தனை வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறான்? அதுவும் நண்பனின் மனைவியாக. ஆமாம், நண்பனின் மனைவியாக! மனம் தெளிந்து விட அவனும் உள்ளே வந்தான்.

அதிர்ச்சியிலிருந்து இன்னுமே முழுமையாக மீளாத மிதிலா இன்னும் வாசலருகிலேயே நின்றிருந்தாள்.

“தம்பி… எல்லாளா?” அவன் குரலைக் கேட்டதும் நம்பவியலா வியப்பும் ஆனந்தமுமாகத் தழுதழுத்த குரலில் அழைத்தார் சம்மந்தன்.

“எப்பிடி ஐயா இருக்கிறாய்? ஏன், ஏனப்பு இவ்வளவு நாளும் எங்களைத் தேடி வரேல்ல? என்ர பிள்ளையைப் போலீஸ் பிடிச்சுக்கொண்டு போயிட்டாங்களாம் எண்டு சொல்லுறாங்கள். என்ன ஏது எண்டு ஒண்டும் தெரியேல்ல அப்பு! காலும் ஏலாம, நடக்கவும் வழி இல்லாம முடங்கிப்போய்க் கிடக்கிறன். இந்த வீட்டின்ர முதுகெலும்பே அவன்தான். இந்த ஒரு நாளே அவன் இல்லாம உடஞ்சு போய்ட்டோம். என்ன எண்டு ஒருக்கா விசாரி தம்பி. அவன் சோலி சுரட்டுக்குப் போகமாட்டான்.” என்றவருக்கு மேலே பேச முடியாமல் குரல் உடைந்து போயிற்று. வயோதிகத்தின் தள்ளாமையில் தேகம் குலுங்கிற்று.

“மாமா... அது…” நான்தான் கைது செய்தேன் என்று சொல்ல முடியாமல் நின்றான்.

ஆதினிக்கோ மிகுந்த அதிர்ச்சி. அதுவும் ஒரு கணம்தான். எல்லாளனின் வழக்கமற்ற இயல்பு எல்லாவற்றையும் சொல்லிவிட, சுர் என்று கிளம்பிய கோபத்தோடு எல்லாளனின் முன்னே வந்து நின்றாள்.

“காண்டீபன் அண்ணா எங்க?”

“ஆதினி...”

“உங்களுக்குத் தெரியாம நடக்க சான்ஸே இல்ல. நீங்களும் இண்டைக்கு முழுக்க நோர்மலா இல்ல. சொல்லுங்க! எங்க அண்ணா?”

அதற்குமேல் தள்ளிப்போட முடியாமல், “இப்ப அவன் போலீஸ் கஸ்டடில இருக்கிறான். நான்தான் கைது செய்தனான்!” என்று சொல்லியே விட்டான்.

அங்கிருந்த மூவருக்கும் பெரும் அதிர்ச்சி. மிதிலா நெஞ்சைப் பற்றிக்கொள்ள, சம்மந்தனோ மகனாய் வளர்த்தவனே மகனைக் கைது செய்தானா என்று விக்கித்துப்போயிருந்தார்.

ஆதினியும் நிலைகுலைந்துபோனாள். “ஏன், ஏன் கைது செய்தனீங்க? அந்தளவுக்கு அண்ணா என்ன செய்தவர்? சொல்லுங்க!” என்று சீறினாள்.

என்ன என்று சொல்வான்? அங்கிருக்கும் மூவருமே அவன் பற்றிய உண்மையைத் தாங்கிக்கொள்வார்கள் போல் இல்லை. அதுவும் குழந்தையைச் சுமக்கும் மிதிலாவை எண்ணி, மிகவுமே யோசித்தான்.

அவன் அமைதியில் ஆதினியின் பொறுமை பறந்து போனது. ஆத்திரத்தோடு அவன் சட்டையைப் பற்றி, “என்ன செய்து வச்சிருக்கிறீங்க எண்டு விளங்குதா உங்களுக்கு? இஞ்ச இருக்கிற எல்லாருக்கும் அண்ணா தேவை! அம்மா இல்லையே எண்டு நான் நினைச்ச நேரம், எனக்கு நினைவுக்கு வந்தவர் அவர். அப்ப, அவர் ஆர் எனக்கு எண்டு விளங்குதா உங்களுக்கு? அவரைப் போய்... ஏன் கைது செய்தனீங்க?” என்று ஆவேசமும் ஆத்திரமுமாக ஆரம்பித்தவள், தாங்க முடியாமல் அவன் மார்பிலேயே உடைந்து அழுதாள்.

அவள் சொன்னது கூர் ஈட்டியாக நெஞ்சைத் தாக்க, அவள் தலையைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டான் எல்லாளன். முன்பின் தெரியாதவனை நம்பிப் பழகியிருக்கிறாள் என்று அவன் கோபப்பட்டால், அவள் அவனை அன்னையின் இடத்தில் வைத்துப் பார்த்திருக்கிறாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“எனக்குக் காண்டீபன் அண்ணா வேணும். இப்பயே வெளில விடுங்க!” அவன் முகம் பார்த்து உரிமையாக உத்தரவிட்டாள்.

“முதல் நீ அழுறத நிப்பாட்டு!” வந்த அன்றே அவளை அழ வைத்துவிட்ட கோபத்தில் அதட்டினான்.

நெஞ்சில் பாரமேற மற்ற இருவரையும் பார்த்தான். அவர்கள் விழிகளிலும் கண்ணீர்தான். அதுவும் மிதிலா, என் காத்திருப்பைத்தான் பொய்யாக்கினாய் என்று பார்த்தால், என் கணவனையும் சிறையில் அடைத்துவிட்டாயா என்று, அவனை அப்பட்டமாகக் குற்றம் சாட்டினாள்.

அவன் பார்க்கவும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு, “மாமா, அவர் என்ன பிழை செய்தவர் எண்டு கைது செய்தவராம் எண்டு கேளுங்க!” என்றாள் சம்மந்தனிடம்.

“அத நேரா என்னட்டக் கேள்!” சட்டென்று மூண்ட கோபத்துடன் அதட்டினான் எல்லாளன்.

என்னவோ அவன் ஆசைப்பட்டுக் கொண்டுபோய் உள்ளுக்குத் தள்ளியது போல் ஆளாளுக்குக் கேள்வி கேட்டால் அவனும் என்ன செய்வான்? காண்டீபனைப் பற்றி அறிந்ததிலிருந்து, இந்த நிமிடம் வரைக்கும் அவனும்தானே துடித்துக்கொண்டிருக்கிறான்.

அப்படிக் கோபப்படுவான் என்று எதிர்பாராத மிதிலா, திகைப்போடு அவனைப் பார்த்தாள். அதுவும் அவனைத் தாக்கியது. அதுவரை, அவன் கைகளுக்குள் இருந்த ஆதினி, விலகி நின்று, “நான் கேக்கிறன்தானே, சொல்லுங்க?” என்றாள்.

இனியும் நடந்தவற்றைச் சொல்லாமல் இருக்க முடியாது என்று அனைத்தையும் சொன்னான்.

கேட்டிருந்த மூவருக்குமே பெரும் அதிர்ச்சி. இயலாமையோடு அப்படியே விழிகளை மூடிக்கொண்டார் சம்மந்தன். இன்றைக்கு, அவர் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு காலத்தில் காவல்துறையில் பணி புரிந்தவர். எல்லாளன் மீது எந்தத் தவறும் இல்லை என்று விளங்கிற்று. ஆனால், உள்ளே இருப்பவன் மகனாயிற்றே! இனி என்ன செய்யப் போகிறார்?

மிதிலாவின் விழிகளிலிருந்து கரகர என்று கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. உடல் பாரத்தைத் தாங்க முடியாதவள் போன்று, அப்படியே தரையில் சரிந்தாள்.

“அவரை… அவரை வெளில கொண்டுவரேலாதா?” வழியும் கண்ணீரோடு எல்லாளனை நோக்கிக் கேட்டாள்.

“ஏன் கொண்டு வரேலாது?” வேகமாகத் திருப்பிக் கேட்டாள் ஆதினி.

என் காண்டீபன் அண்ணாவா இப்படி எல்லாம் செய்தார் என்று அவள் உள்ளம் காத்திராமல் இல்லை. அது எத்தனை பெரிய குற்றம் என்று தெரியாமலும் இல்லை. ஆனால், ஆரம்பத்திலிருந்தே அவன் குறித்து என்னவோ சரியில்லை என்று அவளுக்குப் பட்டுக்கொண்டேயிருந்ததில் வேகமாகத் தன்னை மீட்டுக்கொண்டிருந்தாள்.

மிதிலாவின் முன்னே சென்று அமர்ந்து, “இதெல்லாம் ஒரு கேஸ் இல்ல மிதிலாக்கா. இவர் சொல்லுறத வச்சுப் பாத்தா, அது எப்பவோ நடந்த விசயம். இவரும் எந்தப் பொருளோடயும் அண்ணாவக் கைது செய்யேல்ல. பாதிக்கப்பட்ட நபர் வந்து கேஸ் குடுக்கவும் இல்ல. அதால கேஸ் நிக்காது. இந்தக் கேஸ நான் உடைக்கிறன். காண்டீபன் அண்ணாவ நான் வெளில கொண்டுவாறன். நீங்க அழாதீங்க!” தைரியம் சொன்னவளை இடையிட்டு, “பாதிக்கப் பட்ட நபர் கேஸ் போட்டிருக்கிறான் ஆதினி. வெளில தெரியாம.” என்று சொன்னான் எல்லாளன்.

“ஓ! ஆனா, அண்ணாதான் போதை மருந்து குடுத்தவர் எண்டுறதுக்குச் சாட்சி ஏதும் அவேற்ற இருக்கா?” கற்ற அறிவும், பயிற்சியின்போது பெற்றுக்கொண்ட அனுபவங்களும் அவளைத் திடமாகவே கேள்வி கேட்க வைத்தது.

“இருந்தாலும் அது பொய்ச் சாட்சியாத்தான் இருக்கும். ஆனா அஞ்சலி இருக்கிறா.”

“அவா சொல்லுவா எண்டு நினைக்கிறீங்களா?”

“சொல்ல வைக்கோணும் எண்டு நினைச்சாச் சொல்ல வைக்கலாம்.” அன்று தன்னுடைய விசாரணையில் அவள் உண்மையைச் சொன்னதை மனதில் வைத்துச் சொன்னான் அவன்.

“ஆனா, அவாவும் போதைக்கு அடிமையா இருந்த ஆள்தானே? ஒண்டில்(ஒன்றில்) அவா நடந்ததச் சொல்லாம இருந்து, அண்ணாவையும் காப்பாத்தி தன்னையும் காப்பாத்தோணும். இல்லையோ அவாக்குத்தான் ஆபத்து. அதுக்கு ஏற்ற மாதிரி கேஸ திருப்ப எனக்குத் தெரியும். அதால அவாவைப் பற்றி நாங்க பெருசா யோசிக்கத் தேவை இல்ல. நீங்க என்னை நாளைக்கு அவாட்டக் கூட்டிக்கொண்டு போங்க.” தன் தெளிவான பேச்சாலேயே தான் ஒரு குற்றவியல் வழக்கறிஞர் என்பதைக் காட்டினாள் ஆதினி.

“அங்கிள்! இஞ்ச சிலருக்குத் தாங்க பெரிய, ‘தங்கப்பதக்கம் சிவாஜி’ எண்டு நினைப்பு. நேர்மை, நீதி, நியாயம் எண்டுதான் வாழுவீனமாம். நீங்க அதையெல்லாம் பெருசா எடுக்காதீங்க. தைரியமா இருங்க. அண்ணாவை வெளில கொண்டு வர வேண்டியது என்ர பொறுப்பு!” என்று தைரியமாக அவரையும் தேற்றினாள் ஆதினி.

இப்படி ஒரு வார்த்தையை அவள் சொல்லிவிடமாட்டாளா என்பதுதான் அவ்வளவு நேரமாக அவனுக்குள் இருந்த தவிப்பும். அதையே அவள் சொல்லவும் அவளை அள்ளியணைக்கத் துடித்தான் எல்லாளன். இருக்கும் இடமுணர்ந்து தன்னை அடக்கிக்கொண்டான்.
 
Top Bottom