• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 45 - முடிவு

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 45


கோர்ட் அறையை விட்டு வெளியே வந்ததும் தந்தைக்கு அழைத்தாள் ஆதினி.

“சொல்லுங்க நீதிபதி இளந்திரையன், ஆதினி இளந்திரையனின்ர பெர்ஃபோமன்ஸ் எப்பிடி இருந்தது?” துள்ளல் நிரம்பி வழியும் குரலில் வினவினாள்.

“நானே பயந்திட்டன் எண்டா பாருங்கோவனம்மா!” சந்தோசமாகச் சிரித்துக்கொண்டு சொன்னார் அவர்.

“ஆரு, நீங்க பயந்தனீங்க? எனக்குத்தான் உங்களப் பாக்க நடுங்கினது. முகம் எல்லாம் டெரர்தான். மேடைல பாக்க பொல்லாத ஆள் மாதிரி இருந்தனீங்க அப்பா.”

மகளின் பேச்சில் சத்தமாக நகைத்தார் அவர். “அது உத்தியோகம் என்னம்மா. அந்தப் பதவிக்கான பக்குவத்தோடயும் பொறுப்போடயும் நடக்கோணும். எங்களை நம்பி மக்கள் தங்கட பிரச்சனைகளைக் கொண்டு வருகினம். அதுக்கேற்ற மாதிரி நாங்க கவனிச்சு, சின்ன பிழை கூட நடந்திடாம தீர்ப்புச் சொல்லோணும் இது இனி உங்களுக்கும் பொருந்துமாச்சி!” என்றவர், “உணர்ச்சிவசப்படாம, பொறுமையா, தெளிவா, கதைக்க வேண்டிய பொயிண்ட்ஸ மட்டும் கதைச்சு அருமையா நடந்தது வாதம்.” என்று பாராட்டினார்.

உள்ளே உள்ளம் துள்ளினாலும், “பொய் சொல்லாதீங்க அப்பா! நானே தம் கட்டி ஆரம்பிக்கிறன், நடுவுக்க புகுந்து, ‘இந்த வழக்குக்குத் தேவையானதைக் கேளுங்க ஆதினி!’ எண்டு வில்லன் மாதிரிச் சொல்லிப்போட்டு, இப்ப நல்ல பிள்ளைக்குக் கதைக்கிறீங்க என்ன? வீட்ட வாங்க, உங்களோட பெரிய சண்டையே இருக்கு!” என்றவளுக்குப் பதில் சொல்லக் கூட முடியாமல் நகைத்தார் அவர்.

அவரிடம் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு இவரா நீதிமன்ற டயஸில் சிங்கமென அமர்ந்திருந்தவர் என்று இருந்தது.

அவள் அங்கே நிற்பதைக் கண்டு விட்டு ஓடி வந்தான் கதிரவன். “நினைச்சுப் பாக்கவே ஏலாம இருந்தது மேம், உங்கட ஆர்கியுமென்ட். சில இடங்களில கை தட்டப் பாத்தன். அந்தளவுக்கு இருந்தது. சேர கையாலேயே பிடிக்க முடியேல்ல. என்ன நடந்தாலும் முகத்தில காட்ட மாட்டார். ஆனா இண்டைக்கு அவரின்ர முகம் அவ்வளவு வெளிச்சமா இருந்தது.” என்றதும் அவள் முகத்தில் விரிந்த புன்னகை.

“நன்றி கதிரவன். அது நானா வாதாட இல்ல. எனக்குள்ள இருந்த காண்டீபன் அண்ணாதான் வாதாட வச்சவர். அவருக்கு நடந்த அநியாயமும், அதால எனக்கு வந்த கோவமும்தான் இதுக்கெல்லாம் காரணம்.” என்றவள் விழிகளின் ஓரம், மெல்லிய நீர்க் கசிவு.

அவளையே வியப்புடன் பார்த்து நின்றான் கதிரவன். அவன் முதன் முதலாகச் சந்தித்தபோது அகந்தையும் ஆணவமும் கொண்டு நின்றவள் அல்லள் இவள்! பாசம் ஒரு பெண்ணை எப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது?

அவனுக்கு, ‘நீங்க கொஞ்சம் ஃபிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு நல்ல ஒரு நண்பி கிடைப்பா!’ என்று அன்று காண்டீபன் சொன்னதுதான் உள்ளே ஓடிற்று.

உடனேயே, “நான் உங்களோட ஃபிரெண்டா இருக்கலாமா மேம்?” என்றான் வேறு யோசிக்காமல்.

வியப்போடு புருவங்களை உயர்த்தினாள் ஆதினி.

“இல்ல, காண்டீபன் சேர்தான் சொன்னவர். அதான்…” இப்போது அவனிடம் மெல்லிய தயக்கம் வந்திருந்தது.

“ஓ!” என்று நடந்ததைக் கேட்டு அறிந்துகொண்டவளுக்குக் கண்ணீர்ச் சுரப்பிகள் மீண்டும் திறந்துகொள்ளப் பார்த்தன.

மனத்தின் அடியாழத்தில் அமிழ்ந்திருந்த அவன் நினைவுப் படிமங்களை இன்று திரும்பவும் கலைத்துவிட்டதாலோ என்னவோ, கண்ணீர் சட்டுச் சட்டென்று வந்துகொண்டிருந்தது.

அதை உள்ளிழுத்துக்கொண்டு, “அதுக்கு முதல் நீங்க இந்த மேமை விடோணும்” என்றாள்.

“அது கஷ்டம் மேம். எங்கட சேரின்ர வருங்கால வைஃப் நீங்க. லோயர் வேற. அது அப்பிடியே இருக்கட்டும். அதோடேயே நாங்க ஃபிரெண்ட்ஸா இருப்பம்.”

அவன் பேச்சில் அவள் மீதான மரியாதையும் எல்லாளன் மீதான மதிப்பும் தெரிய, அதற்கு மேல் வற்புறுத்தப் போகவில்லை அவள்.

“டன்!” என்று தன் கரத்தை அவன் புறமாக நீட்டினாள். அவனும் பற்றிக் குலுக்கினான். முறைப்படி அங்கே ஒரு நட்பதிகாரம் கைச்சாத்திடப்பட்டது!

“நீங்க உங்கட சேரோட போகேல்லையா?” அவனோடு இணைந்து நடந்தபடி வினவினாள்.

“இல்ல, சேர்தான் உங்க எல்லாரையும் கூடவே நிண்டு கொண்டுபோய் விடச் சொன்னவர்.” என்று சொன்னவன், சொன்னது போல அகரனோடு சேர்ந்து, அவர்கள் எல்லோரையும் இரு வீடுகளிலும் சேர்ப்பித்துவிட்டுத்தான் போனான்.

இந்த வழக்குக்கான தீர்ப்பு இன்றோ நாளையோ கிடைக்காது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், தம் பக்கம்தான் தீர்ப்பு வரும் என்கிற பெரும் நம்பிக்கை வந்திருந்தது. அதைத் தந்தது ஆதினியின் வாதத் திறமை. ஒற்றை நாளிலேயே அவள் யார், அவளின் திறமை என்ன என்று காட்டியிருந்தாள்.

சும்மாவே நண்பனின் உயிரை எடுத்தவர்களை எல்லாளன் விடமாட்டான். இதில், மேலதிக விசாரணைக்கு நீதிமன்றமே அனுமதி தந்த பிறகு விடுவானா? நன்றாகவே பூசை செய்தான்.

கூடவே, வைரவனின் கூட்டாளிகள் இருவரையும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான(Approver) வேலைகளைப் பார்க்க ஆரம்பித்திருந்தான். முடிந்தால் சத்தியநாதனையும் முறையாக மாட்ட வைக்கலாமா எனும் கோணத்தில் நகர்ந்தது, அவன் விசாரணை.

அதே நேரத்தில் துக்கத்திலேயே அமிழ்ந்து கிடக்க விடாமல் நாளாந்த வாழ்வின் சிக்கல்களும், வருமானமில்லா நிலையும் மிதிலாவை மிரட்டின.

அவர்களுக்கான செலவுகளை ஆதினியும் எல்லாளனும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்தான். அதை ஏற்றுக்கொள்ள அவளுக்குத்தான் விருப்பமில்லை.

யாரிடமும் எதற்கும் கையேந்த விடாமல், அவர்களைக் கட்டிக் காத்த கணவனுக்கு அவள் செய்யும் கைம்மாறு இதுதானா என்று மனம் அரித்தது.

தற்சமயம் வெளியே சென்று வேலை பார்க்கும் நிலை அவளுக்கில்லை. வீட்டில் இருந்தே பிழைப்புக்கு என்ன வழி என்று தேட ஆரம்பித்திருந்தாள். தற்போதைக்கு வீட்டுத் தேவைக்கேற்ப மரவெள்ளி, கத்தரி, வெண்டைக்காய் என்று மரக்கறிகள் பயிரிட்டாள். கோழிகள் வாங்கி வளர்த்தாள்.


மகன் நேசரிக்கு செல்ல ஆரம்பித்ததும் வேலைக்குப் போக வேண்டும் எனும் அளவுக்கு யோசித்துக்கொண்டாள்.

சில இழப்புகள் வலியைத் தரும், சில இழப்புகள் வலிமையைத் தரும். கணவனின் இழப்பு வலியோடு சேர்த்து வலிமையையும் தருவதாய் உணர்ந்தாள்.

இல்லாமல், அவன் இருந்த நாள்களில் அவன் எவ்வளவோ சொல்லியும் வீட்டை விட்டுத் தாண்ட விரும்பாமல் அவன் கைகளுக்குள் பாதுகாப்பாக வாழ்ந்தவள், இன்று துணிந்து ஏதாவது செய்ய வேண்டும் எனும் அளவுக்கு யோசிப்பாளா?

நாள்கள் தாம் விரையும் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவே இல்லை. காண்டீபனின் வழக்கும் ஒவ்வொரு தவணையாக நகர்ந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்க ஆரம்பித்திருந்தாள் ஆதினி.

இதற்குள் வேறு சில வழக்குகளும் அவளுக்கு வரத்தொடங்கியிருந்தன. தற்போதைக்கு அவற்றையும் எடுத்துக்கொண்டாலும் அவளுக்கு வழக்காடுவதில் இருக்கும் ஆர்வத்தை விடவும், காண்டீபனைப் போலவே கற்பிக்கும் ஆசையே அதிகரித்துக்கொண்டிருந்தது.

விரைவில் காண்டீபனுக்கு ஒரு வருடத் திதி வர இருந்தது. அதற்கான வேலைகள் நடக்க ஆரம்பித்திருந்தன. அப்படிக் கடந்த ஒரு நாளின் விடியலில் மீண்டும் ஒருமுறை மொத்த யாழ்ப்பாணமும் திகைத்து நின்றது.

கண்கள் பிடுங்கப்பட்டு, கை கால்கள் உடைக்கப்பட்டு, உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் மாமிசத் துண்டுகளாக வெட்டிக் கூறுபோட்டு, யார் என்றே இனம் காண முடியாத அளவுக்குக் கோரமாக, வீதியில் இறந்து கிடந்தான் சத்தியநாதன்.

யார் கொன்றார் தெரியாது. எதனால் கொன்றார் தெரியாது. ஆனால், அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது சாதாரண மரணமன்று! கொடூர மரணம்!

சம்பவம் நடந்த இடத்துக்கு உடனேயே விரைந்தான் எல்லாளன். புலன் விசாரணை ஆரம்பமாயிற்று. என்ன முகாந்திரம், யார் இதற்குக் காரணம், எப்படி இப்படி வீதியில் தனியாக மாட்டினான் என்று தேட ஆரம்பித்தார்கள்.

வாகனங்கள் வேக வேகமாக வந்து திரும்பிச் சென்றதற்குச் சான்றாக டயர்களின் அடையாளங்களும், சப்பாத்துக் கால்களின் தடங்களும் அவன் இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிக் கிடந்தன. அவற்றைப் பின்பற்றி, குற்றவாளியைப் பிடிக்கும் வேலை மிக வேகமாக ஆரம்பமாகியது.

தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சிக்கென்று எஞ்சியிருந்த ஒரேயொரு வாரிசு. இன்று அவனும் இல்லை. மீண்டுமொருமுறை யாழ்ப்பாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. விசேட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். வீதியெங்கும் காவல்துறை வாகனங்களே அங்குமிங்குமாய் சீறிக்கொண்டிருந்தன. மக்கள் பீதியில் வீட்டுக்குள்ளேயே அடைந்துகொண்டனர்.

தொலைக்காட்சியில் அவனைப் பார்த்த தமயந்தி மயங்கிச் சரிந்தாள். அத்தனை மோசமாகச் சிதைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தான் அவன்.

அகரனுக்கு எல்லாளன் மீதுதான் சந்தேகம். எப்படிக் கேட்டும் இல்லை என்று மறுத்தான் எல்லாளன்.

“நீ என்ன சொன்னாலும் எனக்கு உன்னில நம்பிக்கை இல்ல.” உறுதியாகச் சொன்னான் அகரன்.

“நம்பாத போ! என்னவோ அவன் எனக்கு மட்டும்தான் கெடுதல் செய்த மாதிரிக் கேட்டுக்கொண்டே இருக்கிறாய். எவனுக்கு என்ன செய்தானோ? எவன் சந்தர்ப்பம் பாத்துப் பழி தீத்தானோ, ஆருக்குத் தெரியும்?”

“காணும் நடிக்காத! அவனில இவ்வளவு துணிச்சலா கை வைக்கிற தைரியம் உனக்கு மட்டும்தான் இருக்கு.” என்றுதான் அப்போதும் நின்றான் அகரன்.

“நன்றி மச்சான், உன்ர பாராட்டுக்கு!” என்றுவிட்டு நடந்தவனை
ஆதினியின் சந்தேகப் பார்வை தொடரவும், “நீயும் ஏதாவது கேட்டுக்கொண்டு வந்தியோ தெரியும் பிறகு!” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனான்.

இனி என்னாகுமோ என்கிற திகிலுடனேயே அடுத்த மூன்று நாள்கள் கடந்து போயின. பெரும் கலவரங்கள் ஏதுமற்று நிலவரம் மெல்ல மெல்லக் கட்டுக்குள் வர ஆரம்பித்தது.

சத்தியநாதனைப் போலவோ, இல்லை அவன் தம்பிகளைப் போலவோ அவர்களின் தந்தை சிவநாதசுப்ரமணியன் அவசரப்பட்டு எதையும் செய்து, அரசியலில் தனக்கிருக்கும் பெயரைக் கெடுத்துக்கொள்ளத் துணியமாட்டார் என்று, எல்லாளன் கணித்தே இருந்தான்.

நடந்ததும் அதேதான். மகன்களின் இறப்பை வைத்து அரசியலில் தனக்கு இன்னும் ஆதாயம் தேட முயன்றார் மனிதர்.

காக்கிச் சட்டையில் காவல் நிலையத்திற்குச் செல்லத் தயாராகி வந்த எல்லாளனின் பார்வை, சட்டத்தினுள் அடங்கி, சுவரில் மாட்டப்பட்டிருந்தவனிடம் சென்றது.

இவனருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே யாழ்ப்பாணத்திற்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்தாலும் இவனைப் பாராமலேயே இருந்திருக்கிறான். இவனுக்காகவே ஆதினியோடு உறவு பூண்டு, அவளை நெறிப்படுத்தியும் இருக்கிறான். இவனுக்காகவே அவன். ஆனால், அவனுக்காக இவனால் எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. அதனால் மொத்தமாகவே அவனைத் தூக்கிக் காலனுக்குக் கொடுத்துவிட்டான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் இல்லை என்றாகி ஒரு வருடமாகப்போகிறது.

அவனுடைய காரியங்கள் அத்தனையையும் முன்னின்று பார்த்தவன் இவன். ஆனாலும் கூட, திடீரென்று கண் முன்னே வந்து நின்றுவிட மாட்டானா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறான்.

வலியெடுத்த மார்பை நீவிவிட்டான். தொப்பியை எடுத்து அணிந்து கொண்டு, அவன் முன்னே சென்று நின்றான். நெஞ்சு அடைக்க ஒரு கை தூக்கி அவன் முகம் வருடியவனுக்கு அன்று தன் மடியில் படுத்துக்கொண்டு ஓடி ஓடிக் களைச்சிட்டன் மச்சான் என்று அவன் சொன்ன காட்சி கண்முன்னே வந்து நின்றது.

“வலிக்க வலிக்க உன்ர உயிரை எடுத்தவன சும்மா விடுவனா மச்சான்? நல்லவனா நேர்மையானவனா இருந்து நான் கிழிச்சது எல்லாம் உன்னைப் பறிகுடுத்தது மட்டும்தான். அதுதான் அவன் சொன்ன கணக்கை அவனுக்கே நேராக்கிவிட்டிருக்கிறன்.”

ஒரு நெடிய மூச்சுடன் கதிரவனுக்கு அழைத்தான்.

“ஹலோ சேர்.”

“எல்லாம் ஓகேதானே கதிரவன்? ஒரு பிரச்சினையும் இல்லையே?”

“இல்ல சேர்! எல்லாமே பெர்ஃபெக்ட்!”

“நான் வரோணுமா?”

“இல்ல சேர். இங்க எல்லாமே ஸ்மூத்தாத்தான் போய்க்கொண்டு இருக்கு.”

“எதுக்கும் கவனம். குற்றவாளி அங்க வர சான்ஸ் இருக்கு.”

“இனி ஏன் சேர் அவர் இஞ்ச வரப்போறார்?” அதைச் சொல்லும்போதே அவன் குரலில் மெல்லிய சிரிப்பு இழையோடியது.

“கதிரவன்! கடமைல கண்ணா இருக்கப் பழகுங்க!” அதட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்தவனின் உதட்டோரத்திலும் சின்ன சிரிப்பு.

சுவரில் தொங்கிய காண்டீபனிடம் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் புறப்பட்டவன், சத்தியநாதன் கொலை வழக்கு விசாரணையில் தீவிரமாக இறங்கி இருந்தான். குற்றவாளியைப் பிடிக்க வேண்டுமே!

காண்டீபனின் ஒரு வருடத் திதியும் நல்லபடியாக நடந்து முடிந்தது. அவன் புகைப்படத்தின் முன்னே அமர்ந்திருந்த ஆதினியின் மடியில், தவழ்ந்து வந்து ஏறி அமர்ந்துகொண்டான் காண்டீபனின் மகன் அதிரன்.

“அத்…த!” மழலையில் மிழற்றியவனைப் பார்க்கிற பொழுதுகளில் எல்லாம், தலையைக் கலைத்துவிடும் காண்டீபனின் நினைவுகள்தான். கண்ணோரம் கரிக்க, கூடப் பிறக்காத தமையனின் வார்ப்பை, மார்போடு சேர்த்தணைத்துக்கொண்டாள்.

இது என்ன விதமான பந்தம்? நண்பனுக்காக இவளைத் தேடி வந்தவன் அவன். அவனுக்காக அவன் குழந்தையை அத்தையாகத் தாங்கும் இவள். இவ்வுலகின் ஈரமிகு உறவுச் சங்கிலி இதுதானே! அதற்கு இரத்த பந்தம் தேவையாக இருந்ததே இல்லை.


நாள்கள் மீண்டும் நகர்ந்தன. சம்மந்தன் மூண்டு சில்லு வாகனத்தில் வேலைக்குச் செல்லப் பிரியப்பட்டார். எல்லாளனுக்கு அதில் விருப்பமில்லை.

“இனி ஏன் மாமா? பேரனோட இருந்து விளையாடுங்கோவன்.” என்றான்.

தன் மடியில் இருந்த பேரனின் தலையை வருடிக்கொடுத்தபடி, “இனி இவர்தானேப்பு எனக்கு எல்லாம். இவரோட விளையாடாம எங்க போகப்போறன்? ஆனா, வீட்டில சும்மாவே இருந்து, பழசுகளை நினச்சுத் துடிக்கிறதுக்குப் பதிலா, சின்னதா ஏதும் வேல செய்தா நேரமும் போயிடும், அவருக்கு ஏதும் வாங்கிக் குடுக்க நாலு காசும் கைல இருக்குமே.” என்றார் அவர்.

எந்த வயதானால் என்ன? சுய உழைப்பும் சொந்த வருமானமும் தரும் தைரியத்துக்கு எதுவும் ஈடில்லையே! அதற்குப் பிறகு மறுக்கவில்லை எல்லாளன்.

அவர் வாழ்வதற்கும் நாள்களை ஓட்டுவதற்கும் ஏதோ ஒன்று தேவைப்படுவதை விளங்கிக்கொண்டான். அதில், அவரை எங்கும் வேலைக்கு அமர்த்தாமல், தள்ளு வண்டில் போன்று ஒன்றை வாங்கி, லொட்டோவும் தினசரிப் பத்திரிகைகளும் விற்பதற்கு ஏற்பாடு செய்தான்.

அதையும் நிரந்தரமான இடம் என்றில்லாமல், எங்கெல்லாம் அவனுக்குக் கண்காணிப்புத் தேவை என்று நினைத்தானோ அங்கெல்லாம் அவரை அமர்த்துவது போல் பார்த்துக்கொண்டான்.

ஏற்கனவே காவல்துறையில் பணிபுரிந்த மனிதருக்கு உழைப்போடு சேர்த்துத் திரை மறை வேலைகளைக் கண்காணிப்பதும் பிடித்தமான வேலையாகிற்று. உற்சாகமாகவே பார்க்க ஆரம்பித்தார்.

அதற்குமேல் எதற்கும் தாமதிக்கவில்லை அகரன். தந்தையோடு கதைத்து, எல்லாளன் ஆதினி திருமணத்தை முடித்துவிட்டுத்தான் ஓய்ந்தான்.

கூரைப் பட்டுடுத்தி, அழகே குடிகொண்டவளாக, குங்குமமும் கழுத்தில் தாலியுமாக, மலர்ந்து பூரித்த முகத்துடன் நண்பனின் அருகில் நின்ற தங்கையைப் பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. விழிகள் கரிக்கும் போலொரு உணர்வு. அவனுக்கு இது எத்தனை நாள் கனவு? அவளருகில் வந்து உச்சி முகர்ந்தான்.

“என்ன அண்ணா?”

“ஒண்டுமில்ல. சந்தோசமா இருக்கு!” என்றவன், “மச்சான், என்ர தங்கச்சிய சந்தோசமா வச்சிரு! இல்லையோ, உன்ன என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” என்று விளையாட்டுப் போன்று மிரட்டினான்.

அவளுக்கிணையாக வேட்டி சட்டையில் மணமகனாக நின்றவன், ஆதினியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “அதே மாதிரி அவளையும் என்னைச் சந்தோசமா வச்சிருக்கச் சொல்லு!” என்றான்.

அண்ணாவிடம் என்ன பேச்சு இது? அவன் கையில் நுள்ளி விட்டாள் ஆதினி.

“அவுச்!” என்றவன், “பாத்தியா, கலியாணமாகி கொஞ்ச நேரம் கூட ஆகேல்ல, கொடுமை செய்றாள்.” என்றான் அவள் கிள்ளிய கையைக் காட்டி.

“உன்ர வாய்க்கு உன்னைக் கொஞ்சம் அடக்கித்தான்டா வச்சிருக்கோணும்.” என்றவன், அன்று எல்லாளன் செய்தது போன்று, இன்று மனைவி, மகள், கூடவே மிதிலா, அதிரன் என்று எல்லோரையும் அழைத்து செல்ஃபி எடுத்தான்.

இவர்களையே கவனித்திருந்த கதிரவனைப் பார்த்த எல்லாளனுக்கு அவனும் தன் குடும்பத்தில் ஒருவனாகவே தோன்றிவிட, அவனையும் மேடைக்கு வரச் சொன்னான்.

எல்லோரும் ஒன்றாக நின்று மீண்டும் ஒரு செல்ஃபி.

அந்த நொடியில் கணவனின் இழப்பை அதி பயங்கரமாக உணர்ந்தாள் மிதிலா. அவனும் இருந்திருக்க எத்தனை ஆனந்தமாக இருந்திருக்கும். உயிர் நண்பன். அவன் திருமணத்தை எப்படி எல்லாம் கொண்டாடி இருப்பான்? அழுகையில் நடுங்கிய உதட்டைப் பற்றித் தன்னை அடக்கிக்கொண்டாள்.

எடுத்த செல்ஃபிக்களை பார்த்த எல்லாளனின் நிலையும் அதேதான். விழிகள் நண்பனை அந்த மண்டபம் முழுக்கத் தேடின. இங்கே எங்கோதான் அவன் இருப்பான் என்று நிச்சயமாக நம்பினான்.

ஆதினிக்கும் அகரனின் திருமணத்திற்குத் தான் அழைத்ததும், அவன் வராமல் இருந்ததும், தான் கோபப்பட்டதும் என்று எல்லாம் நினைவில் வந்து கண்ணில் நீரைப் பெருக வைத்தன. இன்று அவளுக்கே திருமணம். அவள் அழைக்கவே முடியா இடத்தில் அவன். ‘அண்ணா!’ அவள் மனம் அழுதது. அவளை உணர்த்தாற்போல் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்த எல்லாளன், மிதிலாவைக் கண்ணால் காட்டினான்.

அவர்களை எல்லாம் அப்படி ஒன்றாகப் பார்த்தபோது, மகன் இல்லாமல் போனாலும் மருமகளும் பேரனும் தனியாக இல்லை என்று உணர்ந்த சம்மந்தன் மனது பெரும் ஆறுதல் கொண்டது.

இளந்திரையனும் தன் பெண்ணரசியின் மணக்கோலத்தையும் அவளின் கொண்டாட்டத்தையும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார். சொன்னதுபோல் செய்துவிட்ட எல்லாளனை அவர் பார்வை தழுவியது. அந்த நேரம் அவனும் பார்க்க, இருவர் முகத்திலும் மற்றவரின் எண்ணத்தைக் கண்டுகொண்ட சிரிப்பு.

எங்காவது ஒரு மாதத்திற்குப் போய்விட்டு வா என்று அகரன் சொன்னதை எல்லாளன் காது கொடுத்துக் கேட்கவே இல்லை. என்னதான் காண்டீபனின் இழப்பை ஏற்று வாழப் பழகியிருந்தாலும் ஆழ்மனத்தை அழுத்தும் அந்தச் சோகம் அவர்கள் இருவரையும் விட்டு நீங்குவதாக இல்லை. அதனோடே வாழப் பழகிக்கொண்டிருந்தனர்.

அன்றைய இரவுக்கான அத்தனை ஆயத்தங்களும் எல்லாளனின் வீட்டில் நடந்துகொண்டிருந்த பொழுதில் கதிரவன் எல்லாளனுக்கு அழைத்தான்.

காரணமற்றுத் தன்னைத் தொந்தரவு செய்யமாட்டான் என்று தெரிந்ததால், எல்லாளனும் உடனேயே அழைப்பை ஏற்றான்.

“சேர், சொறி சேர், இங்க ஒரு வாகனம் சந்தேகத்துக்கு இடமா ஓவர் ஸ்பீட்ல போகுது. அதுக்க இருந்து பொம்பிளைக் குரல் கேட்டதாம் எண்டு ஆக்கள் சொல்லீனம். நான் துரத்திக்கொண்டு போறன் சேர்.” என்றவன் குரலில், இன்றைய நாளில் அவனைத் தொந்தரவு செய்கிறோமே என்கிற தடுமாற்றம்.

“ஓ!” என்றவன், எந்தப் பக்கமாக அந்த வாகனம் போகிறது என்று கேட்டுக்கொண்டு, “நீங்க பின்னாலேயே போங்க! விடாதீங்க. நான் மற்றப் பக்கத்தால வாறன்.” என்றபடியே ஓடிப்போய் உடையை மாற்றிக்கொண்டு வந்தான்.

“டேய்! இண்டைக்குத் தான்ரா உனக்குக் கலியாணம் நடந்தது!” என்று முறைத்தான் அகரன்.

“உனக்கே தெரிஞ்சிருக்கு எண்டேக்க எனக்குத் தெரியாதா?” வேக வேகமாகத் தன் பேர்ஸ், ஃபோன் என்று எடுத்து ஜீன்ஸ் பொக்கெட்டுக்குள் அடைந்துகொண்டு சொன்னான் எல்லாளன்.

இவன் இருக்கிறானே என்று பல்லைக் கடித்த அகரன், “நீயாவது சொல்லனம்மா?” என்றான் ஆதினியிடம்.

“விடுங்க அண்ணா! பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரம் ஏறித்தானே ஆகோணும்!”

இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத எல்லாளன், பக்கென்று சிரித்தான்.

“ஏலுமான வரைக்கும் கெதியா வரப்பாக்கிறன்.” என்றுவிட்டுப் போன எல்லாளன், வீடு திரும்ப இரவு பன்னிரண்டு தாண்டியிருந்தது.

வெளியே நின்ற பைக், அகரனும் அங்கேதான் நிற்கிறான் என்று சொல்லிற்று. மெதுவாகக் கதவைத் திறந்தான். வீடு பெரும் அமைதியில் இருந்தது. எதிர்பார்ப்புடன் அறைக்குள் வந்தவனை அவன் சிலுக்கு ஏமாற்றவில்லை. அவன் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

அவளைப் பார்த்ததுமே அவன் உடலில் புது உற்சாகம்.

குளித்துவிட்டு வந்து தானும் அவளருகில் சரிந்தான். ஆழ்ந்து உறங்குபவளைத் தொந்தரவு செய்யாதே என்றது அறிவு. ஆசையோ அவளை அள்ளியணைக்கத் தூண்டிற்று. கொஞ்ச நேரம் விழிகளை மூடி உறங்க முயன்றான். முடிய வேண்டுமே. பக்கத்தில் அவள் இருக்கிறாள் என்கிற நினைப்பே அவன் உணர்வுகளைத் தூண்டிவிட்டன.

இப்போது உறங்காவிட்டால் என்ன, நாளைக்கு உறங்கிக்கொள்ளட்டும் என்று எண்ணி, அவளை நெருங்கி அவளைத் தன் புறம் திருப்பினான்.

“அடியேய் சிலுக்கு!” என்றான் அவள் காதுக்குள்.

அவன் தேகத்தின் குளிர்மையும், காதுக்குள் கேட்ட குரலும் அவள் தேகத்தைக் கூசிச் சிலிர்க்க வைத்தன. மெல்லிய சிணுங்கலுடன் அவன் புறமாகவே புரண்டு படுத்தாள்.

சின்ன சிரிப்புடன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான். கண்கள், மூக்கு, கன்னங்கள் என்று அவன் உதடுகள் அடுத்தடுத்துப் பயணிக்க உறக்கம் கலைவதற்கு அடையாளமாக அவள் புருவங்களைச் சுருக்கினாள்.

முறுவல் விரிய மீண்டும் மீண்டும் அவள் முகமெங்கும் முத்த ஊர்வலம் நடத்தினான். அதோடு விழித்துக்கொண்டாள் ஆதினி. மிக நெருக்கத்தில் தெரிந்த அவன் முகம் கண்டு விழிகளை விரித்தாள்.

கண்களில் சிரிப்புடன் புருவங்களை மாத்திரம் உயர்த்தி என்ன என்றான் அவன். முழுமையாகக் காய்ந்திராத கேசம், உறங்காத விழிகள், அப்போதுதான் குளித்ததில் தெரிந்த புத்துணர்ச்சி, வெற்றுத் தேகம் என்று இருந்தவனை நேரே பார்க்க முடியாமல், அவள் முகத்தைத் திருப்பப்போக. அதற்கு விடாமல் அவள் கழுத்தில் முகம் புதைத்தான் எல்லாளன்.

“நித்திரை வருதா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில் கிசுகிசுப்பாக. “எனக்கு வரேல்ல. வேற என்னென்னவோ ஆசையெல்லாம் வருது.” விரல்கள் அவள் மேனியில் விளையாடச் சொன்னான்.

அவளிடமிருந்து பதில் இல்லாது போகத் தலையைத் தூக்கி அவளைப் பார்த்தான்.


அவள் முகத்தில் படர்ந்திருந்த செம்மையும், அவன் பார்வையைத் தவிர்த்த பாங்கும் அவனுக்குப் பதிலைச் சொல்லின.


“என்ர சிலுக்குக்கு வெக்கமாடி?” என்றவன் அவளை அள்ளிக்கொண்டான்.


அவள் மென் தேகத்துக்குள் அவன் கிளப்பிவிட்ட புயல் அவனுக்குச் சாதகமாகவே வீச ஆரம்பித்ததில் அவனுக்குள் கரைந்து கலந்துகொண்டிருந்தாள் அவனுடைய ஆதினி!


முற்றும்!
 

Indhumathy

New member
சத்யநாதனுக்கு சரியான தண்டனை 👍

காண்டீபன் மறக்க முடியாத கேரக்டர் ❤ நினைக்கும் போதே மனசை கனக்க வைக்குது அவன் முடிவு 💔 தண்டனை முடிஞ்சு திரும்பி வந்துடுவான்னு தான் நினைச்சேன் 😐😐

ஆதினி காண்டீபன் பாண்டிங் ரொம்ப அழகு ❣ உணர்வுபூர்வமானது 💝


எல்லாளன் ஆதினி சூப்பர் ஜோடி 💞💞💞

எல்லா கேரக்டர்ஸ் ம் அருமை.... 😍
மொத்தத்துல செம ஸ்டோரி ❤
 

Goms

Active member
காண்டீபனின் கைது செய்யப்பட்ட பின், உண்மைகளை தெரிந்து கொண்ட பிறகு உடனேயே சத்யநாதனின் மரணத்தை உறுதி செய்திருக்க வேண்டும்.

கதை தானே என்று நினைத்தாலும் காண்டீபனின் இழப்பை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.
 
Top Bottom