• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நீ தந்த கனவு - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 8

அஜய் அவன் வீட்டுக்குச் சென்றிருக்கவில்லை. அவன் போய் வரும் இடங்கள், நண்பர்கள், கடைத்தெரு என்று எல்லா இடமும் வலைவிரித்துத் தேடினான் கதிரவன். ஆனாலும் அவன் கண்ணில் அகப்படாமல் தலைமறைவாகி இருந்தான் அஜய்.

ஒரு இளம் பெண்ணின் உயிர் போயிருக்கிறது. அதற்கான சிறு துப்புக் கூடக் கிடைக்காமல் இருந்த நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவன் கிடைத்தும் தவற விட்டுவிட்டார்கள். காரணம் ஆதினி.

மிகுந்த எரிச்சலில் இருந்தான் எல்லாளன். சாகித்தியனை மீண்டும் அழைத்து விசாரித்த போதும் அஜையைப் பற்றிப் புதிதாக எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

அப்போது கதிரவன் அழைத்தான்.

“சேர், அஜய் ஒரு கடைல பைக்கை விட்டுட்டுப் போயிருக்கிறான். போய் எடுக்கட்டாம் எண்டு பிரைவேட் நம்பர்ல இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறான். இப்ப நான் அந்தக் கடைலதான் நிக்கிறன். அவன்ர பைக்கும் நிக்குது. பெட்ரோல் இல்லை எண்டு பொய் சொல்லியிருக்கிறான். அங்க இருந்து அவனைக் கூட்டிக்கொண்டு போனது ஒரு பெட்டையாம். சிவப்பு நிற ஸ்கூட்டியாம். எனக்கு என்னவோ ஆதினியோ எண்டு யோசினையா இருக்கு.” என்று அவன் திரட்டிய தகவல் முழுவதையும் சொன்னான்.

“நீங்க அங்கேயே நில்லுங்க. இப்ப நான் உங்களுக்கு அவளின்ர ஃபோட்டோ ஒண்டு அனுப்புறன். அவளா எண்டு காட்டிக் கேளுங்க.” என்றவன் சியாமளாவோடு எப்போதோ எங்கேயோ அவள் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை தன் கேலரியில் தேடி எடுத்து அனுப்பிவைத்தான்.

இவனை லைனில் வைத்துக்கொண்டே அந்தக் கடைக்காரரிடம் ஃபோட்டோவை காட்டிக் கேட்டான் கதிரவன்.

அவரும், “ஓம் சேர், இந்தப் பிள்ளைதான். எனக்கு நல்லாத் தெரியும். நேற்று நீலத்தில பிளவுசும் கறுப்பில பாவாடையும் போட்டிருந்தவா.” என்றார் அவர்.

சாமந்தியின் இறுத்திச் சடங்கின்போது அவள் அணிந்திருந்தது அதுதான். கதிரவனுக்கு அவள்தான் என்று உறுதியாயிற்று.

‘இவளை!’ பல்லைக் கடித்தான் எல்லாளன். பார்க்கிறவனை எல்லாம் நம்பாதே என்று எத்தனை தடவைகள் சொல்லியிருப்பான்! கேட்டாளா?

“நீங்க ரெயில்வே, பஸ் ஸ்டான்ட் எல்லாம் விசாரிங்க. மிஞ்சிமிஞ்சிப் போனாலும் கொழும்புக்கு ஓடி இருப்பான். நான் அவளை விசாரிக்கிறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

*****

இப்போதெல்லாம் ஆதினியின் மனம் தனிமையை விரும்பிற்று. அந்தத் தனிமையில் எல்லாளனைப் பற்றி அசைபோடுவதில் ஆனந்தமும் கொண்டது. காதல் என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்றாலும், அவள் மனத்தைச் சலனப்படுத்தியவனே எதிர்காலத் துணையாகவும் வரப்போகிறான் என்றானதும், இயல்பாகவே அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தான் அவன்.

அப்படித்தான் இன்றும் சிந்தையை அவனிடம் சிதற விட்டுவிட்டு, அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நின்றிருந்தவளை, “அஜய் எங்க?” என்ற எல்லாளனின் கடினக் குரல் கலைத்தது.

வேகமாகத் திரும்பிப் பார்த்தாள். அவன் விழிகளில் தெறித்த கோபத்தைக் கண்டு அவள் மனது துணுக்குற்றது.

“அஜய் எங்க எண்டு கேட்டனான்?”

அவனுக்கும் அவளுக்கும் திருமணம் என்று முடிவானதிலிருந்து அவனிடமிருந்து பிரத்தியேகமான ஒரு பார்வையை, பேச்சை எதிர்பார்த்திருந்தவளால் எப்போதும்போல் துடுக்காகப் பதில் சொல்ல இயலாமல் போயிற்று.

“கவனமா இரு, புத்தியா நட எண்டு எத்தின தரம் சொல்லியிருப்பன். கேட்டியா நீ? ஒரு பொம்பிளைப் பிள்ளை சாகிறதுக்குக் காரணமா இருந்திட்டு அவன் தப்பி ஓடியிருக்கிறான். அதுக்கு நீ உதவி செய்திருக்கிறாய். இல்ல, நீயும் சேந்துதான் அந்தப் பிள்ளையைக் கொன்டியா(கொன்றாயா)?” என்றதும் அவள் தேகம் ஒரு முறை தூக்கிப்போட்டது.

“என்ன விசர்க் கத கதைக்கிறீங்க?” என்று தன்னை மீறிச் சீறினாள்.

“விசர்க் கத கதைக்கிறனோ? அறைஞ்சு விட்டுடுவன். ஒழுங்கு மரியாதையாச் சொல்லு! எங்க அவன்?”

அறைவானாமா? அவ்வளவு தைரியமா? விழிகளில் நெருப்புப் பறக்க, “எனக்குத் தெரியாது!” என்று வெடுக்கென்று சொல்லி முகத்தைத் திருப்ப முதலே, அவள் கையைப் பற்றி இழுத்துத் தன் முன்னே நிறுத்தி இருந்தான் அவன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“தெரியாதோ? ஆருக்குப் பொய் சொல்லுறாய்? நேற்று நீதான் அவனை எங்கயோ கூட்டிக்கொண்டு போயிருக்கிறாய். அந்தக் கடைக்காரன் சொல்லிட்டான். இதில உனக்கு அவன் எங்க எண்டே தெரியாது. என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது உனக்கு? இல்ல, அப்பாவும் அண்ணாவும் இருக்கினம், என்ன ஆட்டமும் ஆடலாம் எண்டு நினைச்சியா? ஒழுங்கு மரியாதையா உள்ளதச் சொல்லிப்போடு! இல்ல, என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு, உன்ன ஸ்டேஷனுக்கு கொண்டுபோகவும் யோசிக்க மாட்டன்!” என்று சீறியவனின் கடுமையில் முதன் முறையாகப் பயத்தில் நடுங்கியது அவள் தேகம்.

இதுவரையில் யாரும் அவளிடம் இவ்வளவு கடுமையோடு நடந்துகொண்டதில்லை. எப்போதும் கண்டிப்பைக் காட்டும் அவன் கூட!

அவள் நிலையை உணரும் நிலையில் அவன் இல்லை. “சொல்லடி! எங்க அவன்?” அவ்வளவு கேட்டும் பதில் வராத ஆத்திரத்தில் அவளைப் பிடித்து உலுக்கினான்.

அவனின் அந்தக் கடுமையைத் தாங்க முடியாமல், “விடுங்க என்னை!” என்று அவனை உதறித் தன்னை விடுவித்துக்கொண்டு, “அவன்தான் பைக் ரிப்பேர் எண்டு கூப்பிட்டவன். ஹெல்ப்பாத்தான் கூட்டிக்கொண்டு போய் ரெயில்வேல விட்டனான். மற்றும்படி, நான் அவனை ஒளிச்சு வைக்கேல்ல. அவன் எங்க போனவன் எண்டும் எனக்குத் தெரியாது.” என்று கோபத்தோடு சொன்னாலும் விழிகள் கலங்கிக் குரல் நடுங்கிற்று.

வழமையான ஆதினியாக இருந்திருந்தால் தைரியமாகவே அவனை எதிர்கொண்டிருப்பாளாக இருக்கும். இந்த ஆதினி அவனிடம் மனத்தைப் பறிகொடுத்துவிட்டு இளகிப்போய் நிற்கிறாளே!

“பெரிய ஹெல்ப்!” என்று வெடித்தான் அவன். “அண்டைக்கே உனக்குச் சொன்னனான் எல்லா, இது ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர தற்கொலை கேஸ், கவனமா இரு எண்டு. பிறகும் அவனைக் கூட்டிக்கொண்டு போய்ப் பயணம் அனுப்பி வச்சிருக்கிறாய். உன்னை எல்லாம்… அவன் மட்டும் கிடைக்கேல்லையோ, அதுக்குப் பிறகு உனக்கு இருக்கு!” விரல் நீட்டி எச்சரித்துவிட்டுப் போனான் அவன்.

அசையக்கூட மறந்தவளாக நின்றிருந்தாள் ஆதினி. அதுவரை, அவளை ஆக்கிரமித்திருந்த அத்தனை இனிமையான உணர்வுகளும் வடிந்துபோயின. மனத்தில் படர்ந்த கசப்பை மென்று விழுங்க முயன்றாள்.

*****

அன்று எட்டுச் செலவு. ஆதினிக்கு அங்குப் போகும் எண்ணமே இல்லை. மனம் எல்லாளனின் பேச்சிலும் செய்கையிலும் இரணமாகிக் கிடந்தது. வீட்டிலிருந்து அதையே யோசிப்பதும் பிடிக்கவில்லை. நடந்தவற்றிலிருந்து வெளியே வர விரும்பினாள். தோழிகளும் விடாமல் வற்புறுத்த, அங்குப் போனாலாவது அது நடக்குமா என்கிற நப்பாசையுடன் புறப்பட்டாள்.

இறப்பு வீட்டில் ஓடி ஓடி எல்லாம் செய்தவள் இன்றைக்கு ஒரு கரையாக ஒதுங்கி நின்றிருந்ததில் என்னவோ சரியில்லை என்று கண்டுகொண்டான் காண்டீபன். இறந்தவளுக்கான கிரியைகள் முடிந்து, படையலும் முடிந்து, வந்தவர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது. அதன் பிறகு அவளருகில் நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

“என்ன மேடம், இண்டைக்கு மூட் ஏதும் சரி இல்லையோ?” மென் சிரிப்புடன் விசாரித்தான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்க, “சேர், ஆள் இப்ப பேப் பெரிய இடம். அதுதான் அமைதி ஆகிட்டா.” என்றாள் ஆதினியின் அருகில் அமர்ந்திருந்தவள்.

எதையும் உளறாதே என்று சொல்லும் அளவிற்குக் கூட வலுவற்றவளாக, தொண்டை அடைக்க அமர்ந்திருந்தாள் ஆதினி.

அவள்மீது, பார்வை படிந்து மீள, “அப்பிடி என்ன, ‘பேப் பெரிய’ இடம்?” என்று விசாரித்தான் அவன்.

“அதுவா சேர், இவ்வளவு நாளும் ஆதினி எண்டா உங்களுக்கு என்ன தெரியும்? நீதிபதி இளந்திரையன் சேரின்ர மகள், ஏஎஸ்பி அகரன் சேரின்ர தங்கச்சி எண்டு மட்டும்தானே? ஆனா இனி, ஏஎஸ்பி எல்லாளன் சேரின்ர வருங்காலமும் ஆதினிதான்!” என்றாள் அவள்.

“ஓ!” என்றவனின் பார்வை ஆதினியின் மீதே. அவள் விழிகளில் மெல்லிய நீர்ப்படலமோ என்கிற சந்தேகம் அவனுக்கு.

“உண்மையாவா?” என்று அவளிடமே கேட்டான்.

அதற்கும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. அவனைப் பார்ப்பதை வேறு தவிர்த்தாள். என்னவோ சரியில்லை என்று மனம் இன்னுமே அழுத்திச் சொல்ல, “அதுக்கெல்லாம் வயசு இருக்கு. முதல் படிப்பை முடிக்கோணும். கட்டாயம் ஒரு வேலையக் கைல எடுக்கோணும். அதுக்குப் பிறகு கலியாணத்தைப் பற்றி யோசிக்கலாம். என்ன ஆதினி, நான் சொல்லுறது சரிதானே?” என்றான் மென் குரலில்.

அந்தக் கனிவு அவளை உடைக்கப் பார்த்தது. உதட்டை அழுத்திக் கடித்தபடி அவனைப் பாராமல் தலையை மேலும் கீழுமாக அசைத்தாள்.

“ஒரு நாளைக்கு எங்கட வீட்டுக்கு வாறீங்களா? இப்பவே ஃபிரெண்ட் ஆகிட்டா, நாளைக்கு ஒரு பிரச்சினை வந்தாலும் நான் ஏஎஸ்பிட்ட வரலாம். ஆதினின்ர நண்பன் எண்டு சொல்லலாம்.”

அவளை இலகுவாக்கிப் பேச வைக்க முயல்கிறான் என்று புரிந்தது. காயப்பட்டுக் கிடந்தவளுக்கு அந்தச் சிறு செய்கை தலைகோதும் இதத்தைத் தந்தது போலும். தடுக்கவே முடியாமல் கண்களில் கோத்துவிட்ட கண்ணீருடன், “வா போ எண்டே சொல்லுங்கோ, சேர்.” என்றாள்.

அவள் முகத்தையே ஒரு கணம் கூர்ந்தான் காண்டீபன். கண்ணீருக்கான காரணத்தைக் கேட்கவில்லை. மாறாக, அவள் தலையைப் பிடித்து மெதுவாக ஆட்டி விட்டு, “அப்ப, ஒரு நாளைக்கு வீட்டுக்கு வா. என்ர மனுசிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன். சந்தோசப்படுவாள்.” என்றான்.

சரி என்று தலையை அசைத்தாள் ஆதினி.

 

Goms

Active member
நிதாமா எவ்வளவு அழகா கதையை நகர்த்தறீங்க? பாத்திரங்களை ஒன்றுக்கொன்று தெரியாதவாறு கோர்க்க வைத்து......
அருமை 🥰 🥰 🥰
 
Top Bottom