You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ வாழவே.. என் கண்மணி!

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
நிர்மலனும் விடவில்லை. ஆதரவாக அவளுக்கு விளக்கினான். “நான் போனபிறகு நீ தனிச்சுப் போவாய் கண்மணி. வாழ்க்கை வாழத்தான். நம்மை மீறி என்ன நடந்தாலும், அதையெல்லாம் தாண்டிக்கொண்டு வாழவேண்டாமா? என்னைப்பார், நீ ஏமாத்திப்போட்டாய் எண்டதும் இன்னொருத்தியை கட்டி வாழ இல்லையா? உன்ன நினைச்சுக்கொண்டு நான் என்ன சந்நியாசமா இருந்தனான்?” சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் தெரிந்த விரக்தியில் அவளுக்கு ஒரு வழி செய்யாமல் இவன் இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வரப்போவதில்லை என்று தெரிந்துபோயிற்று!

“உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுறது? நீங்க எந்தப் பிழையும் செய்யேல்ல நானும் எந்தப் பிழையும் செய்யேல்ல எண்டு. காலம் வகுத்த கொடூரமான கணக்கில மாட்டி சின்னா பின்னமாகிப் போயிற்று எங்கட வாழ்க்கை. இண்டைக்கு அதுல இருந்து வெட்ட வெட்ட முளைக்கும் வாழையை போல தழைக்கத் துவங்கி இருக்கிறோம். இந்தளவுமே போதும் எண்டுதான் நினைக்கிறன்.”

அவனுக்குப் போதாதே!

“ஆரம்பத்தில உஷாவையும் என்னால அவ்வளவு இலகுவா ஏற்க முடியேல்லத்தான் கண்மணி. உன்ர இடத்தில இன்னொருத்தியா எண்டு மனம் அந்தப்பாடு பட்டது. கல்யாணம் செய்திருக்கக் கூடாதோ எண்டு பலமுறை நினைச்சிருக்கிறன். ஆனா போகப் போக வாழ்க்கை எப்படி மாறிச்சு எண்டே தெரியாம சந்தோசமா நிறைவா மாறிப்போய்ட்டுது. அப்படித்தான் உனக்கும் இருக்கும். அப்படி மாறினபிறகுதான், அந்த வாழ்க்கைதான் எல்லாத்தையும் விட சந்தோசமான நிறைவான வாழ்க்கை எண்டு விளங்கும். அதை நீயும் அனுபவிக்கவேணும் கண்மணி. உனக்கும் பிள்ளைகள் பிறக்கவேணும். அம்மாவா நீயும் மாறவேனும். நானும் அந்தக் குழந்தைகளை தூக்கிக் கொஞ்சவேணும்.” கண்கள் கலங்கச் சொன்னான்.

மௌனமாய் கேட்டிருந்தவளின் கண்களிலும் கண்ணீர். கற்பனையிலும் கனவிலும் அப்படி ஒரு வாழ்க்கையை அவளும் வாழ்ந்து பார்த்தாள் தானே!

அதோடு, காந்தனைப் பற்றியும் அவளுக்குத் தெரியும் தானே. ஒரு பேச்சுத் துணைக்கே ஏங்கிப் போயிருப்பவன்.

இப்போதைக்கு எனக்கு அவன் துணை அவனுக்கு நான் துணை. மிகுதியை காலம் முடிவு செய்யட்டும். காந்தன் சொன்னதுபோலவே ஒருவழியாகத் தெளிந்தாள் கண்மணி.

அவள் முடிவைச் சொன்னதுதான் தாமதம். அடுத்து வந்த நல்ல முகூர்த்த நேரத்தில் கடிகார முள்ளைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தான் நிர்மலன்.

அழகான பட்டில் மணப்பெண்ணாகத் தயாராகி நின்றவளைக் கண்டபோது அவன் கண்கள் கலங்கிப் போயிற்று!

“எனக்காக சம்மதிக்க இல்லத்தானே?” கலக்கத்தைக் கண்களில் காட்டாதிருக்க முனைந்தபடி கேட்டான்.

“உங்களுக்கு என்ன விசரா? எதையாவது ஒண்டை பிடிச்சு கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறீங்க!” என்று முறைத்தாள் அவள்.

பதிலேதும் சொல்லாமல் தன் கேள்விக்கான பதிலுக்காக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.

“நிர்மலன்! நான் இண்டைக்கு அவரை விரும்பிக் கட்ட இல்லைதான். எண்டாலும் விருப்பத்தோடதான் கட்டுறன். முழு மனதோடதான் இந்த வாழ்க்கையை ஏற்கப் போறன். நீங்க கவலைப்பட வேண்டாம்.” என்று புன்னகைத்தாள் அவள்.

அவனது கலக்கமும் அகன்றது!

நல்ல முகூர்த்தத்தில் அவளது சங்குக் கழுத்தில் தாலி கட்டினான் காந்தன்!

நெற்றியில் மங்களம் பொங்கும் திலகமும், கழுத்தில் அம்மை அப்பனைக் கோர்த்த பொன் தாலியும் மின்ன, கண்ணோரம் அரும்பிய கண்ணீரோடு முகமெல்லாம் பூவாய் மலர்ந்திருக்க அவனை நோக்கிப் புன்னகைத்தவளைப் பார்த்தவனின் நெஞ்சு நிறைந்து போயிற்று! அவன் விழிகள் அவளிடம் சொன்னது,


காலங்கள் கடந்தாலும்
கனவுகள் சிதைந்தாலும்
பாதைகள் மாறினாலும்
உன்மீது நான் கொண்ட
உயிர் நேசம் சொல்கிறது
உனக்கென நானிருப்பேன்
நீ வாழடி.. என் கண்மணி!


முற்றும்.




Buy on Amazon.in

for more details please click below link


Beauty



beuty.JPG
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.
Top Bottom