You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பசி - ரோசி கஜன்

ரோசி கஜன்

Administrator
Staff member

கொழும்பு வெள்ளவத்தை காலிவீதியில், குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் 1 ஆம் ஷாப்பல் லேனுக்கு எதிர்புற நடைபாதையில் மெல்ல, மிக மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தார் கணேசன்.

இவர் வெளியில் வரத் தயாராகவும், "விழா ஆரம்பிக்கிற நேரத்தில எங்க போறீங்க அப்பா? அதுவும் தனியா?" வாசலில் வைத்தே தடுத்துக் கேட்டிருந்தான் இளையமகன் பரசு.

சிலமாதங்களுக்கு முன்னர் தான் பைப்பாஸ் சர்ஜரி நடந்த உடம்பு . அதனால் குடும்பத்தாரிடம் இப்படியான கரிசனைமிக்க அன்புத் தொல்லைகள் அதிகம்.

" இல்லயப்பு, நிறைய நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கிறன். நீங்கதான் இப்பவெல்லாம் ஹோட்டலுக்கும் வர விடுறதில்ல. இப்பிடி வரும் போதுசரி நான் நடந்து திரிஞ்ச இடங்களை ஒருக்காப் பார்த்திட்டு வாறனே. " கணேசன் பிடிவாதமாகச் சொல்ல, "கனக்கத் தூரம் எல்லாம் போக வேணாம் பா; ஒரு பத்து நிமிசத்தில திரும்பி வர வேணும்."அன்பு கலந்த கண்டிப்போடு சொல்லிச் சென்றிருந்தான் மகன்.

" நான் என்ன குழைதையாடா?"

பாசத்தோடு அவன் முதுகில் தட்டிவிட்டு வெளியில் வந்து இரண்டு நிமிட நடையில் காலிவீதியில் ஏறியிருந்தார் கணேசன். அந்த மூலையில் இருந்தது அவர்களின் ஹோட்டல்.

அவரின் பல வருடக் கனவு நனவாகும் விழா நடக்கவிருப்பது ஹோட்டலின் பின்புறத்தில் உள்ள புத்தம் புது இரு மாடிக் கட்டிடத்தில்.

ஹோட்டலின் முன்னால் கொஞ்ச நேரம் நின்றார் கணேசன்.

இன்று, இந்தப் பகுதியில் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குச் சுவையான பதார்த்தங்களும் சுத்தமான பரிமாறல்களும் என்று எல்லோரையும் சுண்டியிழுக்கும் இதே ஹோட்டல், அன்று, மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்துப் பேரைச் சற்றே சிரமத்துடன் உள்ளடங்கிவிடும் அளவுக்குத் தான் இருந்தது. அந்தச் சிறிய இடமே இவரின் சொர்க்கமாக இருந்தது.

கடந்து வந்த இத்தனை வருடங்களின் கடுமையான உழைப்பின் மினுக்கம் அவரில் பட்டுத் தெறித்தது.

அவர் வாழ்வு மாறிய இடமல்லவா இது? அடங்காப் பாசத்தோடு ஹோட்டலைப் பார்வையால் வருடிவிட்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார் அவர்.

பார்வையோ பாதையின் இரு மருங்கையும் ஆர அமரத் தொட்டுத் தொட்டு நகர்ந்தது. எத்தனை எத்தனை தடவைகள் பார்த்தாலும் புதிது புதிதாக உணர்வுகளைக் கிளப்பி விடும் வல்லமை இந்த இடங்களின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் உண்டென்பது அவர் மட்டுமே முழுமையாக அறிந்த இரகசியம்.

சிறு பிராயத்து நினைவுகள் சில, அவை மகிழ்வானவையாகவோ உள்ளத்தைப் போட்டு உறுத்துபவையாகவோ இருப்பினும் கல்வெட்டென மனதில் பதிந்துவிடும் தெரியுமா?

ஒரு காலத்தில் ...ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் பத்து வயதுச் சிறுவனாக இந்தப் பகுதிக்கு வந்திருந்தான் அவன். தந்தை யாரென்று தெரியாது. தெரிந்துகொள்ளும் ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. அரவணைத்தாலும் சீறினாலும் சினந்தாலும் தாய் என்ற உறவொன்றுதான்.

கண்களை மூடிக்கொண்ட கணேசனின் முகத்தில் ஆரம்பத்தில் பலநாட்கள் இந்த நினைப்பு வருகையில் அருவருப்புத்தான் தோன்றும். பிறகு பிறகு ஏனோ அருவருக்கவும் முடியவில்லை.

அன்று வயிற்றின் பசி மட்டுமே பிரதானமாக உணர்ந்திருந்த பருவத்தில் அருவருத்த, அடங்காக் கோபத்தையும் எரிச்சலையும் உருவாக்கிய விசயத்தைப் பின்னரோ, விழுங்கிவிட்டுக் கடக்க முடிந்திருந்தது.

அன்று இந்தப் பகுதியெங்கும் ஒரு இறப்பர் செருப்புக் கூடப் போடாது கொளுத்தும் வெயிலில் காய்ந்து வறண்டு கருகிப் போன பாதங்களோடு, தாயோடு, பல வேளைகளில் தாயின் கிழிந்துபோன சேலைத் தலைப்பைப் பிடித்தபடி கையேந்தித் திரிந்தான், அந்தச் சிறுவன்.

நாள் முழுவதும் இரந்தும் இரவில் காந்தும் வயிற்றைத் தணிப்பதென்பது குதிரைக்கொம்பாகவே இருந்தது.

ஆமாம்! அவனைப் பொறுத்தமட்டில் வயிறு மட்டுமே 'என்னைக் கொஞ்சம்... துளியேனும் கவனியேன்' என்று இறைஞ்சி நின்றது. எவ்வளவுதான் மரத்துப் போனாலும் பசி, தாகம் இரண்டையும் துல்லியமாக இனம் கண்டு கொண்டது அவன் உள்ளம் .

 

ரோசி கஜன்

Administrator
Staff member
அப்படியொரு நாளில்...

கடகடவென்று உருண்டோடிய நினைவுகளுக்குத் தடா போட முயன்றார் கணேசன்.

இப்போ, அதுவும் இன்று எத்தனை சந்தோசமான நாளில் 'இந்த நினைவுகள் தேவையா?' அவர் உள்ளத்தில் இந்தக் கேள்வி சற்றே பலத்த முறைப்போடு எழுந்தது.

மறுநொடியே, பதிலை எதிர்பாராதே நினைவுகள் புரண்டெழுந்தன.

அது ஒரு சுள்ளெனக் குத்தும் குளிர்கால இரவு; நேரம் நடுச் சாமத்தை நெருங்கிக் கொண்டிருந்தாலும் இந்தப் பாதை அன்றுமே உறங்கிவிடவில்லை.

அதோ...அவர் கரம் உயர்ந்து எதிர்புறத்தில் சற்றே தள்ளியிருந்த ஒரு கட்டிட முன்புறத்தைச் சுட்டி நின்றது. அங்கே வரிசையாக அமைந்திருக்கும் கடைகளின் முன்னால் இருக்கும் நடைபாதையில் தான் அவனும் தாயும் சுருண்டு கிடந்த பலரோடு சேர்ந்து குறண்டிக் கிடந்தார்கள்.

கோரப்பசியின் உபாதை அவன் விழிகலருகில் உறக்கத்தை நெருங்கவே விடவில்லை. குளிர் வேறு வாட்டி எடுத்தது. போர்த்திருந்த பழைய சாரம் குளிரிடம் தோற்றுப்போய்ச் சில்லிட்டுக் கிடந்தது.செய்வதறியாது, எப்போதும் போலவே மெலிந்த இருக்கரங்களாலும் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு தாயினருகில் நெருங்கி ஒன்றிக்கொள்ள முயன்றான்,சிறுவன்.

அவன் தாயின் வயிறும் காந்தித்தானே கிடந்திருக்கும். பெற்ற மகனின் அருகாமை அவளுக்கு வேம்பாகக் கசந்து எரிச்சல் தந்திருக்கும் போல! அதுமட்டுமா? சற்றே தள்ளிக் குறண்டிக் கிடந்த ஆடவனின் பார்வை வேறு அவளைச் சுண்டியிழுத்தபடி இருந்தது. ஒரு கால் இயலாதவன். எங்கிருந்து எப்போது வந்தான் என்றெல்லாம் தெரியாது. சில நாட்களாகக் கண்ணில் படுகிறான். இந்தச் சில நாட்களும் அவன் பார்வை அவளை விடாது துரத்துவதைப் பார்த்தும் பாராததுமாகக் கடந்தாலும், இன்று ஏனோ தன்னைத் தன்னுணர்வுகளை அவளால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. கைக்கெட்டும் தூரத்தில் அவன் இருந்தபடி வீசிய பார்வையில் தளர்ந்து அல்லாடிக் கிடந்தவளுக்கு மகனின் அருகாமையோ தீயெனச் சுட்டது.

"ச்சே! சனியன்! தள்ளிப் படுத்துத் துலையன். விடிஞ்சாப் பொழுதுபட்டா எந்தநேரமும் ஒட்டிக்கொண்டு திரியுது சனியன்! "

சிறுவனைப் பிடித்துப் பலம் கொண்ட மட்டும் தள்ளினாள், அவள் . அந்தக் கணம் அவளுக்கு அவன் மிகப் பெரும் சுமையாகத்தான் தெரிந்தான்.

அவளையே பார்த்திருந்த ஆடவனின் விழிகளில் ஆசை வெற்றிக்குறியோடு பளிச்சிட்டது.

தாய் தள்ளிவிட்ட வேகத்தில் விரித்திருந்த கிழிந்த சாக்கிலிருந்து அப்பால் சொர சொர சீமெந்தில் புரண்ட சிறுவன், சிணுங்கியபடி எழுந்தமர்ந்தான். இருட்டில் பளபளத்துக் கிடந்த தாயின் விழிகளைக் கோபத்தோடும் அழுகையோடும் தான் பார்த்தான்.

"இப்பக் கொஞ்ச நாளா இந்த அம்மாக்குப் பைத்தியம்!" எரிச்சலோடு முணுமுணுத்தவனால் அதற்குப் பிறகும் உறங்க முடியவில்லை. சற்றே தள்ளியிருந்த ஹோட்டல் மூடுவது தெரிய மூச்சுப் பிடித்துக் கொண்டு எழுந்து ஓடினான் .

'நிச்சயம் பசிக்கு ஏதாவது தருவார் அந்த ஐயா.' மனதில் பெரும் ஆவல். உண்ண ஏதேனும் கிடைக்கும் என்ற துளி நம்பிக்கையில் பசியில் மயக்கமே வந்துவிடும் போலிருந்தது சிறுவனுக்கு. அதோடு, எந்நேரமும் குப்பைத் தொட்டியை நாவில் எச்சூர, காதலாகப் பார்த்தபடி திரியும் நாய்களைத் துரத்திவிட்டு முந்திக் கொண்டால் இன்னும் கொஞ்சம் ஏதாவது கிடைக்கலாம்.

'அம்மாவுக்கும் எனக்கும் அது போதுமே!'

சென்றவன் நினைவு பொய்யாகவில்லை. குப்பைத் தொட்டியை எல்லாம் பார்க்கவே தேவையில்லாது ஒரு பொலித்தீன் பையில் சில பார்சல்களைப் போட்டுக் கனிவோடு நீட்டினார், அந்த ஹோட்டலின் இளம் முதலாளி.

அந்த இடத்திலேயே அமர்ந்து பிரித்து ... பரபரத்தது சிறுவனின் உள்ளம்.

நாவூற, ஓரமாக அமர எத்தனித்தவன் சட்டென்று தாங்கள் படுத்திருந்திருந்த இடத்தைப் பார்த்துவிட்டுச் சிட்டாக ரோட்டைக் கடந்து ஓடினான்.

"அம்மா! வான சாப்பிட்டுட்டுப் படு! நிறைய இருக்கு நாளைக்கும் காணும்." என்றபடி சென்றவன்...

சிறு தொய்வின்றி நகர்ந்த காட்சிகளின் நினைவலையை அறுத்தெறிய முயன்றார் கணேசன். நீளமாகப் பெருமூச்செறிந்தார்.

இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அவரின் இதயம் வலு வேகமாகத் துடித்தது. அந்த இடத்தில் பத்து வயதுச் சிறுவனாகவே உணர்ந்து நின்றார் அவர் .

தேவைக்கு அதிகமாகவே சொத்து, மனதோடு ஒன்றி வாழ்ந்த, வாழுகின்ற மனைவி, மணிமணியாக மூன்று பிள்ளைகள் என அவருக்கு எல்லாம் இருந்தும் இந்த நினைவு தரும் தொல்லையை மட்டும் முழுமையாக அழிக்க முடியவிலையே!

இருந்தும் இளவயதுகளில் போல் ஏனோ கோபமெல்லாம் வரவில்லை.

அன்று, அந்தச் சிறுவனின் தாய்க்கு இருபதுகளில் வயதிருந்திருக்கலாம். திண்ணென்ற நிமிர்ந்த தேகம். ஒரு கறைபடிந்த ஓவியத்தை நினைவில் நிறுத்தும் தோற்றம்.

'அம்மா இப்போது இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் .' அந்தப்பெண்ணின் உருவத்துடன் கைகோர்க்கும் இந்த எண்ணமே அன்றைய கோபத்தை அப்படியே அடித்துத் துரத்திவிடுகின்றது எனலாம்.

மெல்ல மெல்ல நகர்ந்து வந்தவரின் நடை நின்றது. ஓரிடத்தில் பார்வை நிலைத்தது . இப்போது அந்த இடத்தில் ஒரு சிறு மாடிகட்டிடம்; மேலும் கீழுமாக ஆறு கடைகள். ஆனால், அன்று வெறும் பற்றை!

உணவோடு வந்த சிறுவன் தாய் கிடந்த இடத்தில் இல்லையென்றதும் எதுவோ ஒரு உணர்வில் தான் சரசரத்த பற்றைக்குள் உள்ளிட்டிருந்தான். அங்கு அவன் கண்ட காட்சி!

சற்று முன்னர் 'சனியனே தள்ளிப் படு!' என்ற தாய்...

அவனால் துளி கூடப் பொறுக்க முடியவில்லை. அதுவும் அந்த மனிதன் சிலநாட்களாவே பார்வையால் தாயை மிகுந்த எரிச்சல் படுத்தி வந்தவனாச்சே! தன் மீது படியும் அவன் வெறுப்புப் பார்வையைக் கண்டு சினந்தும் இருக்கிறான் . தனக்கே தனக்கென்றுள்ள ஒரே சொந்தமான தாயோடு கதைக்க முயல்வதும் பல்லை இளிப்பதுவும் பார்த்துத் தாய் கோபப்படுவது போலவே இவனும் கோபம் கொள்வான். ஒருதடவை ஒரு கல்லை எறிந்து நெற்றியை உடைத்தும் இருக்கிறான். இப்போ பார்த்தால்...

இந்த வீதி விளக்குக்கு இத்தனை பிரகாசம் இல்லாமல் இருந்திருக்கலாமோ!

சிறுவனின் உடலெல்லாம் கிடுகிடுவென்று ஆடியது. கையிலிருந்த உணவுப் பார்சலை அவர்கள் மேல் விசிறி அடித்துவிட்டு ஓடியவன் தான். ஓடினான் ஓடினான் திரும்பிப் பார்க்காது சென்றவன் எங்கெங்கோ அலைந்து திரிந்தான்.

இலேசாகத் தொண்டை அடைத்தது கணேசனுக்கு! திரும்பி நடக்கத் தொடங்கி விட்டார் .

இருந்தும் மனம் மட்டும் கடந்தகாலத்தில் தங்கி நின்று அழிச்சாட்டியம் பண்ணியது .

ஒரு கிழமைக்கு மேலாக எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து வாடி வதங்கிய பின்னர் தாயின் அருகாமையைத் தேடியது சிறுவனின் உள்ளம் . ஒரு மாதிரித் தேடிப்பிடித்துப் பழைய இடத்துக்கு வந்து பார்த்தால்...

கணேசனின் கண்களில் மெல்லிய கசிவு.

அவன் அதற்குப் பின்னர் தன் ஒரே சொந்தமும் இழந்தவனாகிவிப்போனான். அவன் மட்டும் ஓடிப் போகாதிருந்திருந்தால்? கடனே என்று இன்னும் சிலகாலமேனும் அந்தப் பெண்ணுக்குச் சுமையாக இருந்திருக்கலாம். அடுத்தடுத்து அவளுக்குப் பிறக்கப் போகும் பிள்ளைகளைப் பராமரித்துக் கொண்டு சிறு வாத்துக் கூட்டமாகத் தட்டேந்தித் திரிந்திருக்கலாம்.

சற்றே விரைவாக நடந்தார் கணேசன்.

தேடிவந்த அன்னையைக் காணாது மீண்டும் அதே ஹோட்டல் வாயிலில் சில நாட்களாகக் கண்ணீரோடு சுருண்டிருந்தவனை அந்த ஹோட்டல் முதலாளி பார்த்துவிட்டுத் தன் ஹோட்டலில் எடுபிடி வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். அப்படித் தொடங்கிய சிறுவனின் போராட்ட வாழ்வு காலப்போக்கில் அதே ஹோட்டலுக்கு அவனை முதலாளி ஆக்கி வைத்து அழகு பார்த்தது. பெற்ற அன்னையே மலம் துடைத்த கடதாசியாய் தூக்கி எறிந்துவிட்ட சினம் கனன்று கனன்று அவனை வெறியாக முன்னேற வைத்துத் தொழில் அதிபனாக்கியது.

தனக்கே தனக்கான அற்புத உறவுகளைத் தேடி ஒரு பாசமான கூட்டினுள் ஒதுங்கிக் கொள்ளும் பாக்கியத்தைப் பற்றிக்கொள்ளவே அன்று அவன் அந்தளவு சன்னதம் கொண்டு ஓடினான் போலும்.

மீண்டும் கணேசனின் கண்கள் கலங்கின. இன்று இத்தனைபேர் மதிக்கும் ஒருவராக இத்தனை சொந்தங்களோடு வாழ்வார் என்று அன்று அந்த அந்தரித்து இரந்து திரிந்தபோது கணம் கூட யோசித்துப் பார்க்கவில்லைத்தான். அவரைப் பெற்றவளும் தான் இப்படிச் சிந்தித்தும் இராள்.

"அப்பா என்ன இவ்வளவு நேரம் எங்க போயிட்டீங்க? எல்லாரும் வந்திட்டீனம், வாங்க!" ஓடி வந்து கையைப் பற்றி அழைத்துச் சென்றான், அவரின் மகன்.

அந்த மாடிக்கட்டிடம் இன்றிலிருந்து வீடற்றவர்கள் இரவில் தங்குவதற்காக இவர்களால் திறந்து வைக்கப்படுகிறது . காலையுணவும் தங்குமிடமுமாக இப்போதைக்கு நூற்றியைம்பது பேர்கள் வரைத் தாங்கிக் கொள்ளலாம். ஆண்களுக்கு வேறாக பெண்களுக்கு வேறாக எளிமையாக அடிப்படை வசதிகளோடு இருந்த இடத்தின் திறப்பு விழாவில் பல வீடற்ற வீதியோரத்தில் வாழ்பவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

"பார்த்துப் பார்த்து. இப்படி இதில இருங்க." அவரின் மகன் தள்ளாடிய ஒரு வயோதிப மாதினை அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரையில் இருத்திவிட்டுத் தந்தையோடு நடந்தான்.

மெல்லிய நிழலாகத் தெரியும் பார்வையில் சிலநாட்களாக இந்தப் பகுதியை எல்லாமே ஆசையோடு வருடி வரும் அந்தக் கிழவியின் பார்வை, தொய்ந்து மூடிக்கொள்ள, வாகாக இருக்கையில் சாய்ந்து கொண்டாள் அவள். கோரப் பசியில் உயிர் போகும் போலவும் இருந்தது. அன்று போலவே!

'வரிசையாக ஏழு பெற்றேன். இன்று ஒரு பேணித் தண்ணி தர யாருமில்லை' வற்றிச் சுருங்கிக் கிடந்த இமைகளைத் தட்டுத் தடுமாறிக் கடந்தது கண்ணீர்!

"அம்மா இது எனக்கு, இது உங்களுக்கு! சாப்பிடுங்க !" காதோரம் ரீங்காரமிடும் சிறுவனின் குரலின்

விடாத தொல்லை வேறு!

ஒருபருக்கைச் சோற்றையும் பக்குவமாக அமிர்தமென உண்ணும் சிறுவன், அன்று, கையில் இருந்த அத்தனை சாப்பாட்டையும் விசிறி அடித்துவிட்டுச் சென்றானே!

"அவ்வளவு கொழுப்பு அவனுக்குப் பார்த்தாயா?" சிறுவனின் இடையூறில் பாதிப்புறவில்லை அந்த மனிதன்.

"சின்னப் பெடியனே அவன்? எமகாதகன்!" அவன் சொன்னதை அப்போது மறுக்கத் தோன்றவில்லை அவளுக்கு.

"ஓடிப்போனவனை எங்கே என்று தேடுவாய்?" என்றவனின் இழுவைக்கு இழுபட்டு இரண்டு பெற்றதுதான் மிச்சம்.

'உயிரோடு சரி இருப்பானோ இல்லையோ!' அன்று தொலைந்தவனை, உணர்வடங்கி ஊசலாடி நிற்கையில் அடிக்கடி நினைத்துக் கொள்கிறாள் அவள்.

" தங்குமிடம் மட்டுமின்றி எங்களால் முடிந்தளவு உங்கள் பசியையும் போக்க நினைத்துள்ளளோம். அப்பாவின் மிகப்பெரிய கனவு இது."

விழாவை ஆரம்பித்துவைத்த கணேசனின் மகன் சொல்லிக்கொண்டிருக்க, குழுமியிருந்தவர் அனைவருக்கும் இரவுணவுப் பார்சல் விநியோகமும் ஆரம்பமாகியிருந்தது.

அந்த வயோதிபமாதின் கையில் ஒரு பார்சலை வைத்துவிட்டு, "சாப்பிடுங்க ஆச்சி!" என்று சொல்லிவிட்டு அடுத்தவரிடம் நகர்ந்தார் கணேசன்.
 
Top Bottom