You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

"பயணம்." - தமிழ் நிவேதா

ரோசி கஜன்

Administrator
Staff member
நான் அன்போடு கேட்டுக்கொண்டதற்கிணங்க, நமக்காக இத்தொடரை, தான் இதுவரை பயணம் செய்து வந்த பாதையில் சந்தித்த சுவாரசியங்களை, அனுபவங்களை, இன்று தொலைந்து காண ஏங்கி நிற்கும் பல வழக்குகளை என்று, நம்மோடு பகிர்ந்து கொள்ளவிருக்கிறார் நமது விருப்பத்துக்குரிய எழுத்தாளர் தமிழ் நிவேதா:love: அவர்கள்.

வாசித்துவிட்டு அமைதியாகப் போகாது உங்கள் வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டால், எழுத்தாளருக்கு மிகுந்த மகிழ்வை அளிப்பதோடு இத்தொடரை தொடர்ந்தும் எழுத்த ஊக்கமளிப்பதாக இருக்கும்.

அமைதியாகப் போனால் நாய் பூனை எல்லாம் கடிக்கும் சொல்லிட்டேன். :p:p
( இப்படியெல்லாம் உங்களோடு கடிபட்டு நிறைய நாட்களாச்சு இல்லையா? அதான் லைட்டா . வாசிச்சிட்டு சொல்லுங்கோ!)


ரோசி கஜன்

***********************************

பயணம் என்ற பெயரில் எழுத எண்ணியவுடன் அதைச் சொந்த ஊரிலிருந்து தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றியது.

கதை என்ற பெயரில் உண்மைகளில் கற்பனை கலக்காமல் உள்ளபடியே பேசலாம் என்ற எண்ணம். இப்போதெல்லாம் கனவுகள் தரும் கற்பனைகள் பிடித்த அளவிற்கு மனத்தைத் தொடும் சம்பவங்கள் ஈர்ப்பதில்லை என்ற தயக்கம் எனக்கு உண்டு. எனினும் ரோசியின் ஊக்குவிப்பால் செந்தூரத்தில் புதிய முயற்சி இது. உங்கள் வழக்கமான ஒத்துழைப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

"தமிழ்நாட்டின் கடைக் கோடியில், காவிரி அருகே கிராமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு ஊர் என்னுடையது. அமைதியான ஊர். அரசியல் பேசும், ஈடுபடும் ஆட்கள் அதிகம். இருந்தபோதும் வன்முறையோ, கலவரமோ ஒருபோதும் வெடித்ததில்லை. பின் விளைவை யோசித்தே செயல்படும் ஜனங்கள். ஆனால், சமீப காலமாக ஊா் கலவரப்பட்டுக் கிடக்கிறது. தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் யாரையும் நிம்மதியாகத் தூங்க விடுவதில்லை. உண்ணும் உணவுகள் அனைத்திலும் கேன்சர் வரும் என்று பயமுறுத்துகிறது. ஆர்கானிக் உணவு இதற்கு மாற்றாக வைக்கப்படுகிறது. ஆர்கானிக் என்ற பெயரில் வருவதெல்லாம் ஆர்கானிக் இல்லை என்றும் அதில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் மறுபுறம் பட்டியலிடப்படுகின்றன. எதை திண்பது என பையித்தியம் பிடித்து அலைகிறார்கள் எல்லோரும்.

வாரச்சந்தையில் கறி வாங்கி, சூடான ராகிக் களி அல்லது புழுங்கல் அரிசிச் சோறுடன் வயிறு புடைக்க சாப்பிட்டு,மீந்த கறியை உப்புகண்டம் போட்டுத் தினமும் பழைய சாதத்திற்குத் தொட்டுக் கொண்டதையும்,மாடு மேய்க்கப் போகையில் வரப்பு ஓரம் முளைத்துக் கிடக்கும் கீரைத்தண்டை பறித்து வந்து எருமை நெய் ஊற்றிச் சாப்பிட்டதையும் எல்லோரும் மறந்து போய்விட்டார்கள்.

எங்க வீட்டுக் கத்திரிக்காயைக் கொடுத்து, எதிர் வீட்டு அவரைக்காயை வாங்கி, பக்கத்து வீட்டுப் பச்சை மிளகாயுடன் ஆரோக்கியம் பரிமாறிக் கொண்டது வழக்கொழிந்து போயிற்று!

பெரும்பாலும் ஒற்றை பிள்ளைகள்தான் இப்போது. பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோர் திகில் படிந்த முகத்துடனே நடமாடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் இன்னும் ஒருபடி மேல். எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்து விட்டு உபயோகப்படுத்தினால் பதறுகிறார்கள்.

ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் பேச அனுமதிக்காத பள்ளிக்கூடமே சிறப்பானது எனத் தேடிப் போய்ச் சேர்க்கிறார்கள்.

எங்கள் வீட்டு மாடியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தும் ஒரு ஆசிரியர், தான் சாப்பிடப் போகும் நேரத்தில் மாணவர்கள் பேசக்கூடும் என்பதால் தன் உணவைத் தியாகம் செய்து அவர்கள் ஒழுக்கத்தை மேம்படுத்தி விட்டதாகத் திருப்தி அடைகிறார்.

ஒரு ஆணையும், பெண்ணையும் வேற்றுகிரகவாசி போல கையாளும் மனோபாவம் என் ஊருக்கு எப்படி வந்தது?

உறவுகளைக் கையாளத் தெரியாத இன்றைய நாற்பது, ஐம்பது வயதுகளில் இருப்போர் உருவாக்கி விட்ட சிக்கல் இது. எங்கள் சிறு வயதில் பள்ளிக்கு போவதே ஊர்வலம் போவது போலிருக்கும். முதலில் தயாரானவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் குரல் கொடுத்துக் கொண்டே போவார்கள். ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொண்டதும் கைகளைப் பிணைத்தபடி நடப்போம். செக்குமேட்டுத் தெருவில் கூழாங்கல் பொறுக்குவோம். பள்ளி முடிந்து திரும்புகையில் வீடுகளுக்கு வெளியே தலைகாட்டும் கொடிகளை் தேடி மடி நிறைய பூ சேகரிப்போம். வீட்டில் இருப்பதை உண்டு விட்டு விளையாடப் போவோம். இருட்டும் வரை விளையாட்டுதான். கலர் கலர் விளையாட்டில் தேவையான கலரை தேடி தெருவில் நடப்பவர்களின் பின்னே பதுங்குவோம். கலரை தொட வேண்டி அவர்களின் உடைகளை இறுக்கிப் பிடித்து நகர விடாமல் செய்வோம். விளையாட்டில் அடிக்கடிச் சண்டை நடக்கும். அப்போது வாசலில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் அம்மாக்கள் அவசர நீதிபதிகளாக மாறித் தீர்ப்புச் சொல்வார்கள். அப்பாக்கள் வீடு திரும்புகையில் தெரு அமைதியாகும். அம்மாக்கள் எழுந்து உள்ளே செல்ல, பிள்ளைகள் பதவிசாய்ப் பாடம் படிப்பார்கள்.

மின்சார விளக்குகள் ஒருசில வீடுகளில் மட்டுமே இருக்கும் என்பதால் ஒன்றாகக் கூடிப் படிப்பதுதான் வழக்கம். படிப்பு முடிந்து பிள்ளைகள் எழுந்து போனதும் வயதானவர்கள் பாயும், சொம்பில் நீருமாக திண்ணையில் ஒதுங்குவார்கள். வெற்றிலையை மென்றபடி சுருட்டைப் புகைத்தபடி ஊர் விசயம் பேசுவார்கள். சுத்திகரிக்கப்படாத புகையிலையைப் புகைத்த பாட்டிமார்களுக்கு ஏன் கேன்சர் வரவில்லை என்பதும், பொது வெளியில் புகைக்கும் பெண்களை அப்போதைய சமூகம் எப்படி இயல்பாக ஏற்றுக் கொண்டது என்பதும் இன்றளவும் எனக்குப் புரியாத ஆச்சரியங்கள்!

கதை கேட்கும் ஆர்வத்தில் தெருப் பிள்ளைகள் திண்ணையில் கூடுவோம். தாத்தாக்களின் கதைகள் அத்தனை சுவாரஸ்யமாய் இருக்காது என்பதால் பாட்டிகளுக்குத்தான் மவுசு அதிகம். நல்லதங்காள் கதை, பட்டி விக்கிமாதித்தியன், பேசும் கிளி, ஊமை ராஜா, மதனகாமராஜன் என, விதவிதமாய்க் கதை சொல்லுவார்கள்.

பெரும்பாலும் வாழ்கை அனுபவங்களையும் கலந்தே சொல்வார்கள். காதல், சிரிப்பு, கற்பனை உலகங்கள் பற்றி எல்லாம் கதை சொல்லும் பாட்டிகள் விரசமான விவகாரங்களை நாங்கள் உணரும் முன்பே கடத்திவிடும் சாமர்த்தியசாலிகள்.(பின்னாளில் ஒரே மாதிரியான இக் கதைகள் அலுத்துப் போய் பெயர்களை மாற்றி நவீன பாணியில் அதே கதைகளை திருப்பிச் சொல்லி என் கதைக்குப் பிள்ளையார் சுழி போட்டதும் அங்கேதான்.) கதை கேட்டபடியே உறங்கி விட்டவர்களுக்குப் போர்த்தி விட்ட பெரியவர்கள், உறங்குபவர்களில் ஆண் எத்தனை, பெண்கள் எத்தனை பேர் என கணக்கெடுத்ததில்லை. பள்ளியின் நற் பெயருக்காக பிள்ளைகளின் மூளையில் முள் எறிய வேண்டிய நிர்பந்தம் அப்போது எங்கள் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இருந்திருக்கவில்லை. வயது வரும்வரை ஒன்றாகவே வளர்ந்த பிள்ளைகள் வாலிபப் பருவத்தில் அடுத்த வீட்டுப் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைத் தங்கள் குடும்பங்களிலிருந்தே கற்றார்கள். வளர்ந்த குழந்தைகள் முன்பு அதீத நெருக்கம் காட்டாத கணவன் மனைவிகள். உணவிலேயே பாசத்தைக் காட்டி விடும் அன்னை. வார்த்தைகளில் ஆதரவளிக்கும் சகோதிரிகள்,ஒரு வீட்டிற்குச் செல்லும் போது அங்கு ஆண்கள் இல்லை எனில் வாயிலில் அமர்ந்து நீர் அருந்தி விட்டுச் செல்லும் சக ஆண்கள் என அவன் கற்றுக் கொண்டவை ஏராளம்.இப்போது அதிகரித்திருக்கும் பெண்கள் மீதான வன்முறைக்குக் குறைந்திருக்கும் பெண் பிறப்பு விகிதம்,உள்ளங்கைக்குள் உலகத்தை அடக்கி விட்ட காட்ஜெட்கள்,எங்கும் எதற்கும் காத்திருக்கத் தேவையில்லாததால் ஏற்பட்ட பொறுமையின்மை என, பல காரணங்கள் இருந்த போதும், குடும்பச் சூழல் மாறிப் போனதும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

மாறி வரும் சூழலில் பழமை பேசுவதும்,இறந்த காலத்தைப் புரனமைப்பதும் யதார்த்தம் இல்லை என்பது உண்மைதான். ஆனால், எப்போதும் "பாலினம் கடந்து உயிரினம் நேசிக்கப் படுவதே சிறப்பு."இப்போதும் என் ஊரில் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதில்லை.மக்கள் அன்புள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள்.ஆனால் திண்ணை வைத்த வீடும்,வெங்கல உலக்கையில் வெற்றிலை இடிக்கும் சத்தமும்,கதை சொல்லும் தாத்தா பாட்டிகளையும்தான் காணோம்! கைகளைக் கோர்த்து விளையாடியபடியே பள்ளி செல்லும் சிறுவர்களையும்தான்!பயணம் தொடரும்...
 

Jasha

New member
ரொம்ப அருமையா வாழ்வியலின் இழப்புகளை பட்டியலிட்டி காட்டி விட்டீர்கள்...
எங்க வீட்டு கத்தாரிக்காய் கொடுத்து எதிர் வீட்டு அவரக்காய் வாங்கி பக்கத்து வீட்டு பச்சமிளகாய்ல ஆரோக்கியம் பரிமாற்றம்...
பாலினம் கடந்து உயிரினம் நேசிக்கப்படுவதே சிறப்பு...
திண்ணை வீடுகள் பள்ளி செல்லும் தோழிகள் அழைப்புனு எவ்ளோ நிகழ்வுகள் நினைவுகளில் தூசி தட்ட வச்சிட்டிங்க ... கதைகள் சொல்லும் பாட்டிகள் ஆசிரமங்கள் ..பிள்ளைகள் பொழுதுகள் வீணான உதவாத உறுப்படாத மொபைல் டிவியோட...
 

indra

New member
தொண்ணூறுகளின் காலத்தை பின்னோக்கி பார்த்துவிட்டு இப்போதைய இருபத்தோராம் நூற்றாண்டின் பயணத்தைக் பார்த்தால் சற்று பயமாகத் தான் இருக்கிறது.

விளையாட்டுகளில் பறவையாய் திரிந்த குழந்தைகளின் உலகத்தை கார்ட்டூன்கள் கட்டி வைத்திருப்பது கொடுமை என்றால் நாடகத் தொடர்களால் தொலைக்காட்சிக்குள் உலகத்தைத் தொலைக்கும் அம்மாக்களின் நிலையோ பரிதாபம்.

குடும்பங்கள் அலைபேசிகளிலும் சமூகம் சமூகவலைத் தளங்களிலும் தன்னை புதைப்பது இக்கால ஓட்டத்தின் இருளுக்குள் நடக்கும் பயணம் தான்...

இப்படி எத்தனையோ இழப்புகள் மனதுக்குள் தோன்றி வலி தருகிறது தங்களின் பயணம் என்ற தொடரை வாசித்து யோசித்த பின்.

உங்களின் பயணம் அருமையான தொடக்கம்.. நன்றி நிவேதா மற்றும் ரோசி இருவருக்கும்.
 

Vathsala

Member
அருமையான பதிவு. என்னுடைய காலம் 50 கள். சென்னையில் வளர்ந்துவந்த காலங்கள் நினைவுக்கு வருகிறது. எனக்கு கிராமங்கள் பரிச்சயமில்லை. ஆனால் வெகுதூரம் நடந்துபோய்(சிந்தாதரிப்பேட்டையிலிருந்து எழும்பூர் ) ப்ரசிடென்சி மகளிர் பள்ளியில் படித்தது நினைவுக்கு வருகிறது.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom