• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பிரித்து எழுதலாமா?

நிதனிபிரபு

Administrator
Staff member
பிரித்து எழுதலாமா ?
OO

சொற்களை எழுதிச் செல்கையில் ஒவ்வொரு சொல்லாகப் பிரித்து எழுதுகிறோம். சொற்களுக்கிடையே இடைவெளி விடுவது ஒரு வகை. சொற்களின் புணர்ச்சியைப் பிரித்து இடைவெளிவிட்டு எழுதுவது இன்னொரு வகை.

பாரதியாரின் கையெழுத்தில் ‘மனதில் உறுதி வேண்டும்’ என்ற பாடலைப் பார்த்திருப்பீர்கள். அந்தப் பாட்டு வரியை ‘மனதி லுறுதி வேண்டும்’ என்று பாரதியார் எழுதியிருக்கிறார். மனதிலுறுதி என்னும் சொற்புணர்ச்சியைப் பிரிக்காமல் ‘மனதி லுறுதி’ என்றே எழுதியிருக்கிறார்.

அச்சுப் பொறிகளின் வளர்ச்சியால் தமிழ் உரைநடை எழுத்தினைப் பிரித்து எழுதும் போக்கு வளர்ந்தது. சொற்களைப் பிரித்து எழுதும்போது பாரதியாரைப்போலவே எழுதினர் – ‘மனதி லுறுதி’ என்று. பிற்பாடு அதனையும் சொல் சொல்லாகப் பிரித்து எழுத வேண்டிய நிலை வளர்ந்தது. ‘மனதில் உறுதி’ என்று பிரித்தே எழுதத் தொடங்கினோம்.

பிரித்து எழுதுவது நிலைத்துவிட்டது என்பதற்காக எல்லாச் சொற்களையும் பிரித்து எழுதக்கூடாது. சிலவற்றைச் சேர்த்துத்தான் எழுதவேண்டும். இல்லையேல் பொருள் மாறிவிடும்.

‘அதற்குத்தான் எது என்று தெரியும்’ – இத்தொடரில் தான் என்ற சொல்லைப் பிரித்து எழுதினால் என்ன ஆகும் ?

‘அதற்குத் தான் எது என்று தெரியும்’ – இப்போது பொருள் மாறிவிட்டது.

‘சான்றோரிடம் கேட்டனர்’ – இத்தொடர் உணர்த்தும் பொருள் ஒன்று.

‘சான்றோர் இடம் கேட்டனர்’ என்று பிரித்து எழுதினால் என்னாகும் ? வேறு பொருள் வந்துவிடும்.

ஒரு வேளை என்பது எண்ணுப் பொருள் உணர்த்தும் தொடர். ஒரு வேளை உணவு. இரு வேளை உணவு – என்று சொல்லலாம். ஒருவேளை என்னும்போது எண்ணுப்பொருள் நீங்கி ஐயப்பொருள் வருவதைக் காணலாம். ஒருவேளை அவன் வந்தாலும் வருவான்.

இவ்வாறு சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதில் பொருள் பொருத்தம் பார்க்கவேண்டும்.

- கவிஞர் மகுடேசுவரன்
(தினமலர் பட்டம் இதழில் வெளிவந்தது.)
 
Top Bottom