You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பெருமைக்குரிய தமிழர் 'தம்பிஐயா தன்மாவரதர்'

ரோசி கஜன்

Administrator
Staff member
இம்மாதச் செந்தூரவானில் நாம் பார்க்கப்போகும் பெருமைக்குரிய தமிழர் தம்பிஐயா தன்மாவரதர் ஆவார். இவர், யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்து, 1997ல் ஜெர்மனிக்கு வந்திருக்கிறார். தன்னுடைய 19வது வயதில் வந்து சேர்ந்தபோதிலும், ஜெர்மனியில் எட்டாம் வகுப்பில் கற்கத் துவங்கியவர், ‘கிம்னாசியம்’ என்கிற முதல்தர பாடசாலையில் தன் பள்ளிப்படிப்பை, அதாவது, உயர்தரத்தை முடித்திருக்கிறார். பத்தொன்பது வயதில் இங்கு வந்து ‘கிம்னாசியம்’ போவது என்பதே அவ்வளவு இலகுவான விடயமல்ல. அவரோ, தொடர்ந்து பல்கலையில் கற்றுப் பொறியிலாளராகப் பட்டமும் பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கடந்த பத்து வருடங்களாக உலகப்புகழ் பெற்ற நிறுவனமொன்றில் பொறியியலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ஒரு பொறியியலாளரான இவர் எப்படி மருத்துவத்தின் பக்கம் திரும்பினார்?

2010 தொடங்கி 2015 வரை கிட்டத்தட்ட 5 வருடங்களாக முழங்கால் நோவு, எலும்பு தேய்தல், நடக்கவே முடியாத அளவில் வலி என்று நோயினால் மிகவுமே கடினமாகப் பாதிக்கப்பட்டு, மிகச்சிறந்த மருத்துவர்களால் இரண்டு தடவைகள் அறுவைச்சிகிச்சைச் செய்தும் எந்தப் பலனுமின்றி போயிற்று! அதன்பிறகு, கைத்தடிகளின் உதவியோடுதான் நடந்திருக்கிறார்; கொஞ்சம் நடந்தாலே காலில் பெரும் வலி, கால் வீக்கம் என்று மிகவுமே சிரமப்பட்டிருக்கிறார்.

அந்தளவில் பாதிக்கப்பட்டு இருந்தவர், தன்னோடு பணிபுரியும் நண்பர் ஒருவர் சொன்ன சவுத்கொரியன் மருத்துவரிடம் போகவே விருப்பமில்லாமல் போயிருக்கிறார். காரணம், யாரிடம் போனாலும் பிரயோசனம் இல்லாததோடு, இருக்கும் பாரிய வலி நிவாரண மாத்திரைகளை மட்டுமே தருவதும், அது பயனில்லாமல் போவதும் என்று முற்றிலுமாக நம்பிக்கையை இழந்து இருந்தவர் நண்பரின் உந்துதலில் சென்றிருக்கிறார். அந்த வைத்தியர் இவரிடம் என்ன ஏது என்று எதுவுமே விசாரிக்காமல், கைத்தடிகளின் உதவியோடு சென்றவரின் கால்களை மட்டுமே பரிசோதித்து இருக்கிறார். முக்கியமாக விரல்களை. பின் ஒன்றரை மணித்தியாளமாக மசாஜ் செய்தபோது மிகவுமே நோவினை அனுபவித்திருக்கிறார். ‘அந்த ஒன்றரை மணித்தியாலங்கள் கழிந்தபிறகு பணம் செலுத்துவதற்காக முன்னுக்கு இருந்த அலுவலகப் பகுதிக்கு நடந்தபோது கால் நோகவே இல்லை.’ என்று, இப்போதும் அந்தநேரத்து ஆச்சரியத்தை முகத்தில் தேக்கியபடி சொல்கிறார் தம்பிஐயா தன்மாவரதர்.

ஐந்தரை வருடங்களாக அவரைத் தாக்கிய அந்த நோ சற்றுமேயில்லை. பன்னிரண்டு முறைகள் அப்படி அவரிடம் ‘மசாஜ்’ பெற்றுக்கொண்டவருக்குக் கடந்த மூன்று வருடங்களாக எந்த நோவுமே இல்லை. ‘மணித்தியாலக்கணக்கில் பல கிலோமீட்டர்கள் நடக்கிறேன்.’ என்கிறார், சந்தோசத்தோடு.

அந்த வைத்தியரிடம் சென்ற நாட்களில், இத்தனை வருடங்களாக என்னைப் போட்டுத் தாக்கிய வலி இப்போது இல்லையே என்று நம்ப முடியாத ஆச்சரியத்தோடு விசாரித்தபோது, அவர் தன்னுடைய புத்தகங்களை இவருக்குக் கொடுத்திருக்கிறார். அப்போதுதான், தானும் ஒரு பொறியியலாளர் என்றும், இந்த மசாஜ் முறையிலான வைத்தியத்தின் மீது ஆர்வம்கொண்டு கற்றதாகவும், அதற்கு, உடலின் கட்டமைப்புக்கள் பற்றி அறிந்துகொள்ள, தான் கற்ற பொறியியல் பெரும் உதவி புரிந்ததையும், இந்த வைத்தியம், ‘மெக்கானிக் ஸ்ட்டாட்டிக் எலக்ட்ரிக்கிலிருந்து வந்த ஒரு தியரி’; கரு என்றும் விளக்கி இருக்கிறார். ஆக, இவர் கற்ற பொறியியலும் இவருக்கு உதவி செய்ய, இனி என் வாழ்வு முடக்கம் தான் என்று தோற்றுப் போயிருந்தவருக்குக் கிட்டிய மாற்றம் உந்தித் தள்ள, அந்த வைத்தியரிடம் கற்று, பயிற்சிகளையும் கடுமையாக மேற்கொண்டு பலன்பெற்றிருக்கிறார் தம்பிஐயா தன்மாவரதர்.

இது வெறும் கற்பனையோ, அல்லது நம்பகத் தன்மை அல்லாத விடயமோ அல்ல. பல ஜெர்மனியர்கள் பலன் பெற்று அதனை தொலைக்காட்சிகளில் தெரிவித்தும் இருக்கிறார்கள். அதோடு, லண்டனில் வசித்துவந்த தமிழர் ஒருவர் இனி நடக்கவே முடியாது என்று எல்லா வைத்தியர்களாலும் கைவிடப்பட்டு 15 வருடங்களாக சக்கர நாற்காலியில் நடமாடியவர், இவரைப்பற்றிக் கேள்விப்பட்டு ஜேர்மன் வந்து மூன்று மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று லண்டன் திரும்புகையில் நடந்து சென்றிருக்கிறார். அவரின் மகன், ஒரு பேட்டியில் நேரடியாக இதைப்பற்றிப் பேசும்போது, “அப்பாவை ஜெர்மனுக்கு அனுப்பும்போது, பிளைட்டில் ஏறக்கூட முடியாமல் பெரும் சிரமப்பட்டு ஏற்றி அனுப்பினோம். அதுவே திரும்பி வரும்போது என் அப்பா நடந்துவந்த காட்சியை என்னால் நம்பவே முடியவில்லை.” என்கிறார், மலைப்போடு. இப்படிப் பலர், தம்பிஐயா தன்மாவரதர் மூலம் தாங்கள் பெற்ற பலனை நேரடியாகவே தெரிவித்தனர்.

இந்தச் சாதனைகளுக்கு சொந்தக்காரராகிய நம் தமிழர் தம்பிஐயா தன்மாவரதர் அவர்கள் இன்னுமின்னும் பல சாதனைகளை நிகழ்த்தி, அவர்மூலம் பலர் பயன்பெறவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
 
Top Bottom