You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

மனச் சுமைகள் - முகிலன் -இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
ஒரு முனிவரும் அவ‌ரது சீடனும் பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தார்கள். பொழுது சாயும் நேரம், அவர்களது வழியில் ஒரு ஆறு குறுக்கிட்டது. ஆற்றில் வழமையை விட அதிகமாகத் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது. அவர்கள் ஆற்றைக் கடக்கத் தயாரான வேளையில், ஆற்றங்கரையில் ஒரு அழகிய இளம்பெண் கலங்கிய விழிகளுடன் தவித்துக் கொண்டு இருப்பதைக் கண்டார்கள்.


அவர்கள் அந்தப் பெண்ணின் அருகில் சென்று அவளது கவலை பற்றி விசாரித்தார்கள்.

அவள், தான் இந்த ஆற்றைக் கடந்து தான் தனது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும், தன்னைக் காணாமல் தனது குடும்பத்தினர் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்றும், தனக்கு நீச்சலும் தெரியாது என்றும், ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் வீட்டிற்குப் போகவழியின்றித் தவித்துக் கொண்டு இருப்பதாகவும் சொன்னாள். அப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அழத்தொடங்கி விட்டாள்.


அவளுக்கு உதவி செய்ய நினைத்த முனிவர் அவளைத் தன்னுடைய முதுகில் சுமந்து, ஆற்றைக் கடந்து மறுகரையில் இறக்கி விட்டார். அந்தப் பெண் அவர்களை வணங்கி நன்றி சொல்லி விடை பெற்றாள்.

அவர்களின் பாதயாத்திரை தொடர்ந்தது. ஆனா‌ல் சீடனுக்கு மனக்குழப்பம்.. ஒரு முற்றும் துறந்த முனிவர், ஒரு இளம் பெண்ணை அதுவும் அழகிய இளம் பெண்ணைத் தொட்டுத் தூக்கியதை அவனால் எற்றுக் கொள்ள முடியவில்லை. முனிவர் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையும் மரியாதையும் குறைந்தது. அவனால் வழமை போல் முனிவருடன் கதைக்க முடியவில்லை. அவனது மனது முனிவர் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கிய சம்பவம் பற்றியே மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டு இருந்தது.

சில நாட்களின் பின் அவர்கள் பாதயாத்திரையை நிறைவு செய்து தமது ஆசிரமத்திற்குத் திரும்பினார்கள். ஆனாலும் அந்தச் சம்பவத்தை சீடனால் மறக்க முடியவில்லை; முனிவருடன் சாதாரணமாகக் கதைக்கவும் முடியவில்லை.


சீடன் முன்பு போல இல்லை என்பதையும், அவன் தன்னுடன் சரியாகக் கதைப்பது இல்லை என்பதையும் முனிவர் அவதானித்தார். ஒரு நாள் அவனை அழைத்து "சீடா! உன் மனத்தில் எதாவது குறை இருக்கிறதா? நீ முன்பு போல உற்சாகமாக இ‌ல்லை. உனக்கு என்ன மனக்குறை இருந்தாலும் என்னிடம் தயங்காது சொல்" என்று கேட்டார்.


சீடன் தயங்கிய படி, "குருவே! முற்றும் துறந்த முனிவரான நீங்கள் எப்படி அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம்? அது தவறு தானே? " என்று கேட்டான். முனிவர் திகைத்துப் போனார். "நீ என்ன சொல்கிறாய்? எப்போது, எந்தப் பெண்ணை நான் தொட்டேன்?" என்று அவர் கேட்டார்.


"குருவே! அன்றொரு நாள் நாங்கள் ஆற்றைக் கடக்கும் போது ஒரு பெண்ணைத் தூக்கி மறு கரையில் விட்டதைச் சொல்கிறேன் " என்றான் சீடன். முனிவர் சீடனின் முகத்தைப் பார்த்து நிதானமாகப் பதில் சொன்னார். "அந்தப் பெண்ணை அன்றே நான் மறுகரையில் இறக்கி விட்டு விட்டேனே... நீ இப்பவும் அவளைத் தூக்கிக்கொண்டு திரிகிறாயா?"


இப்படித்தான் நாங்கள் தேவையில்லாத சுமைகளைச் சுமந்து திரிகின்றோம்; எங்களுக்குத் தேவையில்லாத, எங்களுக்குச் சம்பந்தமில்லாத சுமைகளை...


பக்கத்து வீட்டுக்காரர், பின்வீட்டுக் காரர், முன்வீட்டுக்காரர், அயலவர், கூட வேலை செய்பவர், வழியில் முன்னால் செல்பவர், பின்னால் வருபவர், இடையில் நிற்பவர் என்று தங்களைச் சூழ வாழ்வோரின் சுமைகளைச் சுமக்க முடியாமல் சுமக்கிறோம்.

அவன் எப்படி அந்தப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பான்? பார்த்து எழுதி இருப்பானோ?

அவனுக்கும் அவளுக்கும் என்ன கதை? காதலிக்கிறார்களோ?

அவன் எப்படி இந்தப் பெரிய வீடு கட்டினான்? லஞ்சம் வாங்கி இருப்பானோ?

அவனின் பிள்ளைக்கு எப்படிப் பரிசு கிடைத்தது? நடுவர்களின் பக்கச் சார்பா?

அவன் எப்படி இப்படி இருக்கிறான்?

இவன் எப்படி அப்படி இருக்கிறான்?

இதை அவன் ஏன் செய்தான்?



அதை இவன் ஏன் செய்யவில்லை?

இப்படி, சந்தேகமாக, பொறாமையாக, கோபமாக, எரிச்சலாக, பலவிதமான சுமைகளைச் சுமந்து எங்களது தூக்கத்தையும், மனநிம்மதியினையும் தொலைத்து தவிக்கின்றோம்.


இங்கு நாங்கள் கவனிக்கத் தவறும் ஒரு விடயம் என்னவென்றால், பெரும்பாலும், நாங்கள் மற்றவரது சுமையைச் சுமந்து தாண்டி தாண்டி நட‌க்க, அவர்களோ அப்படி ஒரு சுமை இருப்பதே தெரியாமல் கைவீசியபடி, காற்று வாங்கிக்கொண்டு, உல்லாசமாய் எங்களுக்கு முன்னே நடந்து கொண்டு இருப்பார்கள்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
உண்மைதான்.....கதை சூப்பர்....☺
Super Akka.
Super akka. நினைத்து பார்த்தால் நானும் என் மகளின் தேர்வு மதிப்பெண்களை பார்த்து வருந்தியிருக்கிறேன். ஹா ஹா ஹா
நன்றி நன்றி
 
Top Bottom