You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member


உன் அன்புக்கு நன்றி! - நிதனிபிரபு

நிறைய நாள்களுக்குப் பிறகு இணையத்தில் எழுத வந்திருக்கிறன் மக்களே. கொரோனா காலத்தில நிம்மதியா வீட்டில இருந்திட்டுத் திடீரெண்டு பள்ளிக்கூடம் போற பீல் வருது ஹாஹா.

ஆனா இப்ப தொடங்க மாட்டேன். பெரும்பாலும் பெப்ரவரி நடுவில்தான் ஆரம்பிப்பேன். அதுக்கு எதுக்கு இப்ப அறிவிப்பு எண்டு கேக்காதீங்க. அறிவிப்புப் போட்டா போட்டுட்டனே எண்டு வேகமா வந்திடுவேன் என்று ஒரு மூட நம்பிக்கை.

இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல?

நான் ஏதாவது சொல்லி வைக்க, அதுக்கு மாறாக் கதை என்னைக் கூட்டிக்கொண்டு போக... ஏன் அந்த வம்பு? அதால சொல்லப் பெருசா ஒண்டும் இல்லை என்று சொல்லிடுறேன். கதையின் போக்கில் பார்க்கலாம். ஒரு வட்டம் கதையைப் பற்றி மனத்தில் இருக்கு. அதன்படி, கதை அடுத்தடுத்து மூன்று கட்டங்களாக நகர்ந்து முடிவை எட்டும் என்று நம்புறேன்.(மூன்று பாகம் இல்லை. ஒரு பாகத்துக்கே நாக்குத் தள்ளும்.)

உன் அன்புக்கு நன்றி என்று கதையில் ஒரேயொரு இடத்தில் வரும் என்று நினைக்கிறேன். மேலதிகமா எனக்கும் தெரிய இல்ல. ஆனால், யாரால், யாருக்கு, ஏன், எதனால் சொல்லப்படுகிறது என்று கதையில் பார்க்கலாம். சரியா? கூடவே, கதை முழுக்க இந்த வரி பரவி நிற்க வேணும் - இதுதான் கரு.

தலைப்பு நல்லாருக்கா? நிதா ஒழுங்கா கதையை முடிக்கவேணும் என்று உங்க உங்க குல தெய்வங்களை வேண்டிக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

நட்புடன் நிதனிபிரபு



உன் அன்புக்கு நன்றி! - கருத்திட
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 1


காலம் போட்டு வைத்திருக்கும் கணக்கு என்னவென்றே தெரியாது நீயும் நானும் காத்திருக்கிறோம் கனவுகளைச் சுமந்தபடி! காதல், இலவச இணைப்பாகக் காயத்தையும் சேர்த்துத்தான் தருமாம். அறிந்துகொள்!

வவுனியாவின் நகர்ப்புறத்தை ஒட்டிய வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி அது. அங்கிருந்த இரண்டு மாடிகள் கொண்ட ஒரு வீட்டின் முன்னே, அடர் சிவப்பு நிற பஜிரோ ஒன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய அனந்தன், பின்னால் இருந்த ஒருவரைத் தரதர என்று இழுத்துக்கொண்டு வந்து, அந்த வீட்டு விறாந்தையில் வீசினான்.

கைப்பேசியில் யாரிடமோ அடக்கப்பட்ட சினத்துடன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்த சுந்தரலிங்கம், அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.

“ரெண்டு போட்டு ஆளைத் தூக்கியாச்சு மாமா! இனி என்ன செய்றது எண்டு நீங்கதான் சொல்லோணும்!”

அவ்வளவு நேரமாக அந்த மனிதனுக்காகக் காத்திருந்த சுந்தரலிங்கம், அவசரமாக அவனுக்கு எதையோ கண்ணசைவால் உணர்த்திவிட முயன்றார். கோபத்தில் இருந்த அனந்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்ன மாமா, இவ்வளவு நாளும் ஓடி ஒளிஞ்சவன இழுத்துக்கொண்டு வந்திருக்கிறன். நீங்க அசையாம நிக்கிறீங்க.” என்றபோதுதான் மாடியிலிருந்து யாரோ இறங்கி வரும் அரவம் கேட்டது.

இதை எதிர்பாராதவனின் முகத்தில் ஒருவித இறுக்கம் படர்ந்தது. அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி அங்கே பார்த்தான். நிரல்யாவின் விழிகளுக்கு எரிக்கும் வல்லமை இருந்திருக்க அவனை அந்த இடத்திலேயே பொசுக்கி இருப்பாள். படிகளில் இறங்கிக்கொண்டு இருந்தவளின் பார்வை அப்படி இருந்தது.

அவன் அசையவில்லை. பார்வையையும் அவளிடமிருந்து அகற்றவில்லை. உன் கோபம் என்னை எதுவும் செய்யாது என்பது போன்று அப்படியே நின்றிருந்தான்.

படிகளை இறங்கி, விறாந்தைக்கு வந்து, அங்கே நின்றிருந்த தந்தையையும் திரும்பிப் பாராதவளின் விழிகள், அடிவாங்கி அலங்கோலமாகத் தலை குனிந்து நின்றவரில் தேங்கிற்று.

அவளின் வயதில் அவருக்குப் பிள்ளைகள் கூட இருக்கலாம். அந்த வயதிலிருக்கும் மனிதரை அடித்து, உதைத்து, இழுத்து வந்திருக்கிறான். காட்டுமிராண்டி! அவள் முகத்தில் அப்பட்டமான வெறுப்பும் கசப்பும். ஆனால், அவளால் என்ன செய்ய இயலும்? மனத்தில் திட்ட மட்டுமே முடியும்.

எதுவும் சொல்லாமல் அவர்களைக் கடந்து வாசலுக்குப் போனவளால் அந்த மனிதரை இலகுவாகப் புறம் தள்ள முடியவில்லை. தன்னைக் கண்டதும் முகம் கன்ற, அவர் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்த விதம் நெஞ்சை என்னவோ செய்யத் திரும்பி வந்தாள்.

அதுவரையில் அவளையே தொடர்ந்த அனந்தனின் விழிகள், அப்போதும் அசையாமல் அவள் முகத்திலேயே படிந்து நின்றது.

அந்த மனிதரின் முன்னே வந்து நின்று, “வட்டிக்கு எவ்வளவு வாங்கினனீங்க?” என்று விசாரித்தாள்.

அவர் முகம் இன்னுமே கன்றிப் போயிற்று. “ஒரு லட்சம்.” என்றார் அவளைப் பாராமல்.

“வாங்கி எவ்வளவு நாள்?”

“ஒரு வருசமாச்சம்மா.”

“ஏன் திருப்பிக் குடுக்கேல்ல?”

“அது… அது மகளுக்கு உடம்புக்கு ஏலாம வந்து… திருப்பித்தர எண்டு சேத்து வச்ச காச எடுத்துச் சிலவழிச்சிட்டன்.”

“ஓ!” என்றவள் ஒருகணம் யோசித்துவிட்டு, தன் கையில் இருந்த கைச்செயினை கழற்றப் போகவும், “அவன் ஆறுதலாவே தரட்டும். அதையெல்லாம் கழட்ட வேண்டாம்.” என்று வேகமாகத் தடுத்தார் சுந்தரலிங்கம்.

அதை அவள் காதிலேயே விழுத்தவில்லை. கைச்செயினைக் கழற்றி அவர் கையில் பொத்தி, “இத வித்துப்போட்டு அந்தக் காசக் கொண்டு வந்து குடுங்க.” என்றாள்.

நடப்பதை நம்ப முடியாமல் அருகில் நின்றவனையும் அமர்ந்திருந்தவரையும் மாறி மாறிப் பார்த்தார் அவர்.

அனந்தன் அழுத்தமாக அவளையே விடாமல் பார்த்தான் என்றால், சுந்தரலிங்கம் மகள் தன்மீது கோபம் கொண்டுவிடாத அளவில் இதைக் கையாள்வது எப்படி என்று யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

“போங்க, போய்ச் சொன்னதைச் செய்ங்க!” வார்த்தைகளுக்கு மெல்லிய அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் நிரல்யா.

பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்க்கப் பயந்து, அமர்ந்திருந்தவரை என்ன செய்ய என்பதுபோல் பார்த்தார் அவர். போ என்பது போன்று மெலிதாகத் தலையை அசைத்தார் சுந்தரலிங்கம். ஒரே ஓட்டமாக ஓடிப்போனார் அவர்.

தன் ஸ்கூட்டியில் அங்கிருந்து வெளியேறிய நிரல்யாவுக்கு மனது ஒரு நிலையிலேயே இல்லை. வெளிக்காட்ட முடியாத கோபம், கசப்பு, வெறுப்பு, இயலாமை, பயம் என்று இன்னதென்று இல்லாமல் என்னென்னவோ உணர்வுகள் அவளைச் சூழ்ந்து, மனத்தைத் தளரச் செய்தன. இது ஒன்றும் அவளுக்குப் புதிதில்லை. இன்றைக்கு அவரைக் காப்பாற்றிவிட்டாள். அவ்வளவுதான். இப்படி இவர்களிடம் மாட்டிக்கொண்டு அவமானப்பட்டு, கேவலப்பட்டு, கூனிக்குறுகி நிற்பவர்கள் பலர். அவர்களுக்கெல்லாம் அவளால் என்ன செய்துவிட முடியும்? எதுவுமில்லை.

குறைந்த பட்சமாக நாளையிலிருந்து இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்ப்பதிலிருந்து விடுதலை என்பதில் அவளுக்குப் பெரும் ஆசுவாசம்.


*****

அந்த வீட்டின் மொட்டை மாடியைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த இடுப்பளவிலான சுவரில் கைகள் இரண்டையும் ஊன்றியபடி நின்றிருந்தான் அனந்தன். அடர்ந்த புருவங்கள் சுளித்திருக்க, தீர்க்கம் மிகுந்த விழிகள் எங்கோ நிலைகுத்தியிருந்தன.

அவன் பிறந்து வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணம், ஏழாலையில். அம்மா அப்பாவுக்கு ஒரே மகன். அதனாலேயே அவர்களுக்குச் செல்லப் பிள்ளை. அவனுடைய பதினெட்டாவது வயதில் இந்த உலகத்தையே சுழற்றியடித்த கொரோனா, அவன் வீட்டுக்குள்ளும் புகுந்து, ஈவிரக்கம் இல்லாமல் பெற்றோர் இருவரையும் ஒரு சில நாள்கள் வித்தியாசத்தில் காவு வாங்கியிருந்தது.

பள்ளிக்கூடப் படிப்பு முடிந்துவிட்டது, இனிப் பல்கலைக்குப் போக வேண்டும் என்று எதிர்காலக் கனவுகளில் திளைத்திருந்தவனை ஒரேயடியாகச் சுழற்றிப் போட்டிருந்தது காலம்.

கடைசியாக அவர்களின் முகங்களைப் பார்ப்பதற்குக் கூட அவன் அனுமதிக்கப்படவில்லை. அதனாலேயே உண்மைதானா, அம்மாவும் அப்பாவும் இனி வரவே மாட்டார்களா என்று நம்ப முடியாமல் திகைத்து நின்றிருந்தான். உயிரற்ற உடல்களாகப் பார்த்திருக்க அது மூளைக்குச் சென்று சேர்ந்திருக்குமோ என்னவோ!

இப்படி இருக்கையில் சுற்றியிருந்தவர்கள் இப்படி அனாதையாகிப் போனானே, இனி யார் அவனை வைத்துப் பார்ப்பார்கள், படிப்புக்கு என்ன செய்வான், சாப்பாட்டுக்கு என்ன செய்வான் என்று அவனைக் கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்கவும் அது அவனுக்கு அடுத்த திகைப்பு. அம்மா அப்பா இறந்ததை எண்ணி அழக்கூட முடியாத அளவில் மருண்டு நின்றான்.

அதுவரையில் அவன் உலகம் அவன் வீடு மட்டுமே! இனி என்ன செய்வேன், என்னை யார் வைத்துப் பார்ப்பார்கள் என்று தெரியாது நின்றவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டியவர் சுந்தரலிங்கம். பெரிதாகப் பழக்கம் இருந்தது இல்லையே தவிர, அம்மா வழியில் தூரத்து உறவுமுறையில் அவர் தனக்கு மாமா என்னும் அளவில் அறிந்து வைத்திருந்தான்.

எங்காவது கோயில் திருவிழாக்கள், விசேசங்களில் கண்டால் தேடி வந்து கதைத்து, நலன் விசாரித்துக்கொண்டு போகும் அளவிலான உறவு.

நீ என்னுடன் வா என்று அவர் அழைத்தபோது மறுக்கும் திடம் அவனுக்கு இருக்கவில்லை. பயந்துகொண்டு வந்தவனை அமிர்தவல்லியும் அரவணைத்துக்கொண்டதில் மெல்ல மெல்லத் திடம் பெற்றான்.

கூடவே, வவுனியா பல்கலையில் மேலே படிக்கவும் சேர்த்துவிட்டார். கூட்டிக்கொண்டு வந்து உணவும் உடையும் தந்து, வீட்டில் வைத்துப் பார்ப்பதே பெரிதாக இருக்கையில் மேலே படிக்க ஆசைப்படுகிறேன் என்று எப்படிக் கேட்பது என்று தெரியாமல் தவித்திருந்தவனுக்கு அழுகையே வந்துவிடும் போலாயிற்று.

இப்படி திடீர் இழப்பு, அது தந்த அதிர்ச்சி, அனாதையாகி நின்றுவிட்ட நிலை, மாமா என்றாலுமே அவரோடு ஒட்டிக்கொள்ள முடியாமல் அவர்களுக்குப் பாரமாக இருக்கிறோமோ, சினந்து விடுவார்களோ, வெளியில் அனுப்பி விடுவார்களோ என்கிற பயத்தில் இருப்பதே தெரியாமல் ஒடுங்கி இருந்தவனைச் சிரித்த முகமாக அணுகியவள், அன்று பதின்மூன்று வயதை எட்டித் தொடுவதற்கு நின்றிருந்த நிரல்யாதான்.

அவளின் சேட்டைகளைப் பார்க்க வேண்டுமானால் வீட்டில் சுந்தரலிங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். அதுவே அவர் இருந்தால் அவள் இருக்கும் இடம் கூடத் தெரியாது. பயமன்று. அவரைப் பிடிக்காது. ஒரு வெறுப்பு, விலகல்.

அவரின் தொழில் என்ன என்று கேட்டால் நகை அடகுக் கடை வைத்திருக்கிறார் என்பார்கள். ஆனால், அதன் பின்னே வட்டிக்குக் கொடுப்பதுதான் பிரதானமாக நடந்துகொண்டிருந்தது. வட்டி தராமல் ஏய்க்கும் மனிதர்களை அவர் கையாளும் முறை, அவரிடம் வேலை பார்க்கும் நான்கைந்து அடியாள்கள், அரசல் புரசலாக அவள் காதுக்கு அவரைப் பற்றி வந்து சேரும் மோசமான செய்திகள், கூடப் படிப்பவர்கள் விடும் வார்த்தைகள் எல்லாமே அவரிடமிருந்து அவளை முற்றிலுமாக விலக்கி வைத்திருந்தது.

கூடவே சுந்தரலிங்கத்துக்கும் அவள் ஒற்றை மகள். தன் தொழில் தனக்கு நிறைய எதிரிகளை உருவாக்கி வைத்திருப்பதை அவருமே அறிவார். அதனால் பள்ளிக்கூடம் தாண்டி அவள் வெளியே செல்வதற்குப் பெருமளவில் தடை விதித்துவிடுவார். டியூஷன் கூட ஸ்பெஷல் கிளாஸ் என்று வீட்டுக்கு வந்து கற்பித்துவிட்டுத்தான் போவார்கள். இப்போது இணைய வகுப்பு முறை வந்து இன்னும் அவர் பிரச்சசினையை இலகுவாகத் தீர்த்திருந்தது.

அப்படி ஒற்றை மகளாக வீட்டுக்குள் இருக்கும் அவளுக்கும் யாரும் இல்லாமல் நின்ற அவனுக்கும் நன்றாகவே ஒத்துப்போக ஆரம்பித்திருந்தது. மொட்டை மாடியில்
அவனோடு விளையாடுவது, அவனிடம் கேட்டுக் கற்பது, அவனோடு அரட்டை அடிப்பது என்று அடுத்த இரண்டு வருடங்கள் இருவருக்குள்ளும் அன்பு செழித்தோங்கி வளர்ந்திருந்தது.

அவளுக்கு எல்லாவற்றுக்கும் அவன் வேண்டும். கொறிப்பதற்கு ஏதாவது வாங்கித் தருவதிலிருந்து, தோழிகளுடன் போட்ட சண்டையைப் பகிர்வதில் தொடங்கி, சுந்தரலிங்கத்தின் மீதான கோபத்தைக் கொட்டுவதற்கு என்று அது போய்க்கொண்டே இருக்கும்.

சின்ன புன்னகையுடன் அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொள்வானே தவிர, சுந்தரலிங்கத்தைப் பற்றிப் பிழையாக ஒரு வார்த்தை உதிர்க்க மாட்டான். இன்றைக்கு அவன் நன்றாக இருப்பதற்கும் கற்பதற்கும் அவர்தான் காரணம். செலவுக்குப் பணம் கூட அவன் கேட்குமளவிலோ, எப்படிக் கேட்பது என்று தயங்கும் அளவிலோ வைக்கமாட்டார். ஒவ்வொரு மாதமும் தொடங்கும்போது மகளுக்கு எப்படிக் கைச் செலவுக்கென்று ஒரு தொகை கொடுப்பாரோ அப்படியே அவனுக்கும் தந்துவிடுவார். நல்ல உடைகள், அவனுக்கென்று ஒரு பைக், நல்ல கைப்பேசி, சுதந்திரமான ஒரு வாழ்க்கை என்று அவளுக்கும் அவனுக்கும் அவர் வேறுபாடு காட்டியதே இல்லை.

அப்படியானவர் அவனுக்கு மிகவும் முக்கியமானவர். அவர் மீதான நன்றியும் அன்பும் அவனுக்குள் சுரந்துகொண்டேயிருக்கும். அதேநேரம் அவளுக்கும் ஒன்றும் சொல்லமாட்டான். அவர் பார்க்கும் தொழிலும், அதனால் அவர் செய்யும் சில காரியங்களும் அவளுக்குப் பிடிக்காது என்று தெரியும்.

இப்படி இருக்கையில்தான் ஒருமுறை சுந்தரலிங்கத்தின் கார் பழுதாகி கராஜுக்கு போயிருந்தது. அவசரமாக எங்கோ செல்ல வேண்டும் என்று அவனைக் கொண்டுபோய் விடச் சொல்லியிருந்தார். அவனும் தன் பைக்கில் கூட்டிக்கொண்டு போனபோது, அவரால் பாதிக்கப்பட்ட ஒருவன் இன்னொருவனோடு அவரை அடிக்க வரவும், தடுத்துப் பிடித்து அவர்களுக்கு நன்றாகப் போட்டு அனுப்பியிருந்தான் அனந்தன்.

அவரே மிரளும் அளவில் இருந்தது இருபது வயதுகள் நிரம்பிய அனந்தனின் ஆக்ரோசம்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதன்பிறகான நாள்களில் எப்படி அந்த மாற்றம் உண்டானது, யார் காரணம் என்றெல்லாம் தெரியாமல் அவன் வாழ்க்கை மெல்ல மெல்ல மாறிப் போயிற்று. பல்கலை இல்லாத நேரங்களில் காரிலாக இருந்தாலும் அவரை அவனே கூட்டிக்கொண்டு போக ஆரம்பித்தான். எங்காவது வார்த்தைகள் தடிக்க ஆரம்பிக்கையில் அவருக்கு முன்னால் ஓரடி தானாகவே வந்து நின்றான். அவருக்கும் நம்பிக்கையான ஒருவன் இறங்கி வேலை செய்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் எப்போதுமே இருந்ததில் அவனைப் பற்றிக்கொண்டார். அவனின் நேர்மையும் நாணயமும் அவர் மனத்தில் தனக்கு அடுத்த இடத்தில் அவனைத் தூக்கி வைக்க வைத்திருந்தது.

அவன் எப்போதுமே வயதை மீறிய தோற்றம் உடையவன். 20 வயதிலேயே அப்படி இருந்தவனைக் கண்டு எல்லோரும் இரண்டடி பின்னால் நகர, அவர்களின் பயமே அவனுக்கான தைரியத்தைக் கொடுத்தது. கூடவே, அந்த வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சிக்கு என்று பொருட்கள் வாங்கிப்போட்டு, தன் உடம்பைக் கவனித்து வளர்க்க ஆரம்பித்தான்.

ஆரம்ப நாள்களில் இதையெல்லாம் அறியாத நிரல்யா அவனோடு சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன் என்று விளையாடுவாள்.

“ஏய் போடி! செய்றவனையும் செய்ய விடாம வந்திட்டா எலும்புக்கூட்டு உடம்ப வளக்க!” என்று அவன் விரட்டியடித்தாலும் கேட்பதில்லை.

ஒருமுறை அவள் தரும் தொல்லைகளைத் தாங்க முடியாமல், பிளாஸ்டிக்கில் வாங்கி வைத்திருந்த உபகரணங்களைக் கொண்டு வந்து கொடுத்து, “இனி நீ இதில செய். இதுதான் உன்ர உடம்பு தனக்கும்.” என்று அவளிடம் சொன்னபோது, துரத்தி துரத்தி அவள் அடித்ததெல்லாம் இன்னும் பசுமையாக அவன் நெஞ்சில் இருந்தது.

மிக மிக அழகான நாள்கள். அவனையே சுற்றி சுற்றி அவள் வந்த நாள்கள். நெடிய மூச்சொன்று அவனிடமிருந்து வெளியேறிற்று.

சுந்தரலிங்கமும் அமிர்தவல்லியும் உறங்கியபிறகு இதே மொட்டைமாடிச் சுவரில் சாய்ந்திருந்து, அவள் உறங்கி வழியும் வரையில் கதை பேசியிருக்கிறார்கள். நடு இரவில் அழைத்துச் சென்று, அவளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்திருக்கிறான். யாரோ ஒருவன் அவள்பால் ஈர்க்கப்பட்டு மெசேஜ் அனுப்பியதை அவனுக்குக் காட்டிச் சிரித்திருக்கிறாள். இப்படியானவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்று அவன்தான் அவளுக்குச் சொல்லிக் கொடுத்ததும்.

சுந்தரலிங்கத்தின் கட்டுப்பாட்டினால் வீட்டில் கிட்டத்தட்ட சிறை வாழ்க்கை வாழும் அவள் மனநிலை உணர்ந்து, சற்று அவளுக்கேற்றாற்போல் இயைந்து போனாலும் அவளின் பாதுகாப்பில் சுந்தரலிங்கத்தை விடவும் இவன் அதிக கவனமாக இருப்பான்.

அவன் பல்கலையை முடித்து வெளியே வந்த கொஞ்ச நாள்களிலேயே அடர்ந்த மீசையும், கொத்தாக அள்ளிப் பிடிக்கலாம் என்று சொல்லும் முகம் முழுக்க நிறைந்த தாடியும், தினவெடுத்து நின்ற தேகமும் என்று 22 வயது இளைஞனான அவனை யாரும் 22 வயது என்று சொல்லவே முடியாத அளவில் தன் தோற்றத்தை மாற்றியிருந்தான்.

கூடவே இருந்து வளர்ந்த நிரல்யாக்கு அவனிடம் தெரிந்த அந்த மாற்றம் கண்ணில் படவேயில்லை. அவளளவில் அவள் சேட்டைகளைக் கண்ணில் சிரிப்புடன் கையைக் கட்டிக்கொண்டு ரசிக்கும், அவளுக்கு விட்டுக்கொடுத்துப் போகும், அவளின் செல்ல மச்சான்தான் அனந்தன்.

ஆனால், ஒருநாள் பள்ளிக்கூடத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிக்காகப் பயிற்சி எடுத்துவிட்டு வருகையில், வீட்டுக்குத் தெரியாமல் தோழிகளோடு கூல்பாருக்கு போய்விட்டு வந்தவள் கண்டது, முகத்தில் தெறித்த ரவுத்துரத்துடன் யாரோ இருவரைப் பிரட்டி பிரட்டி அடிக்கும் அனந்தனைத்தான்.

கண்ட கணம் விதிர்விதிர்த்துப்போனாள். இப்படி மிருகத்தனமாக இன்னொருவரைப் போட்டு அடிப்பது அவளின் மச்சானா? அவள் அடித்தால் கூட அடியை வாங்கிக்கொண்டு சிரிக்கும் அவனா இது? கண்ணால் காண்பதை நம்புவதற்கே அவளுக்குச் சில நொடிகள் பிடித்திருந்தன.

அதீத கோபத்தில் சிவந்து ஜொலித்த விழிகளும், நெரித்த பருவங்களுமாகப் பல்லைக் கடித்தபடி ஒருவனுக்கு அவன் ஓங்கி மிதித்த மீதியைக் கண்டவள் மூச்செடுக்கக் கூட மறந்து போனாள்.

ஒரு கூட்டமே அவர்களைச் சுற்றி நின்றாலும் அவனை நெருங்க அங்கிருந்த யாருக்குமே தைரியம் இல்லை. அவனும் சுற்றி நிற்பவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளவும் இல்லை. எழுந்து நிற்கக்கூட முடியாமல் ரோட்டில் சுருண்டு கிடந்தவர்களை இழுத்து, அவனுடைய பஜிரோவினுள் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்தான்.

அதன் பிறகுதான் அங்கே சலசலப்பு உண்டாயிற்று.

“ஆர் இது? இப்பிடி மிருகம் மாதிரி அடிச்சுத் தூக்கிக்கொண்டு போறது?"

“தெரியாத உங்களுக்கு? அமிர்தம் அடகுக்கடை ஓனரின்ர அடியாள். வட்டிக்கு வாங்கிப்போட்டுக் குடுக்கேல்ல போல. அதான் இழுத்துக்கொண்டு போறான். இனி என்ன, இருக்கிற எல்லாத்தையும் பிடுங்கிப்போட்டு விடுவாங்கள்.” என்றதும் எச்சில் கூட்டி விழுங்கினாள் நிரல்யா. கண்கள் சிவந்து கலங்கிப் போயின. தோழிகளை நிமிர்ந்து பார்க்கவே வெட்கினாள்.

அன்று அவள் மொட்டை மாடிக்குப் போகவே இல்லை. அவன் அறை இரண்டாம் மாடியில் அவளுக்குப் பக்கத்து அறைதான் என்றாலும் அவன் எப்போதும் இருப்பது மொட்டை மாடியில்தான். அவள் போய்ப் பேசிக்கொண்டு இருப்பதும் அங்கேதான். இருவரும் மற்றவரின் அறைக்குப் போவதில்லை.

இன்று அறையிலேயே முடங்கிக் கொண்டவளுக்கு இன்னும் கைகால்கள் நடுக்கம் நிற்கவே இல்லை. மச்சானா, என் மச்சானா என்பதிலேயே நின்றாள். இத்தனை நாள்களாக அவள் கவனிக்காத அவன் தோற்றம் பயம் தந்தது. என்னவோ ஆவேசம் கொண்டு நிற்கும் ஐயனாரை நினைவூட்டிக்கொண்டே இருந்தான்.

அப்பாதான் அப்படி என்றால் அவனுமா? மளுக்கென்று கண்ணீர் வழிந்தோடியது.

மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த அனந்தன், மாடிப்படிகளைப் பார்த்து பார்த்து ஏமாந்து போனான்.

இவளுக்கு என்ன நடந்தது?

இறங்கி வந்து அமிர்தவல்லியிடம் விசாரித்தான்.

“இண்டைக்கு என்னவோ ஆளுக்கு முகமே சரியில்ல நந்தா. வந்ததில இருந்து அறைக்கையே இருக்கிறாள்.” என்றதும் மீண்டும் மாடியேறி வந்தான். அவள் அறை வாசலில் நின்று, ஆட்காட்டி விரலை மட்டும் மடித்துக் கதவில் டொக் டொக் என்று தட்டினான்.

“நிரல்!”

அவளிடமிருந்து சத்தமே இல்லை.

“நிரல்!” என்று மீண்டும் தட்டியவன் கைப்பேசியிலிருந்து அவளுடையதற்கு அழைப்பு விடுக்க முயல்கையில் வந்து கதவைத் திறந்தாள் நிரல்யா.

கைப்பேசியை மீண்டும் பொக்கெட்டினுள் போட்டபடி நிமிர்ந்து அவள் முகம் பார்த்தவனின் புருவங்கள் சுருங்கின. அழுது சிவந்திருந்த முகமும், அதில் தெரிந்த அப்பட்டமான பயமும், அவன் பார்வையைத் தவிர்ப்பதும் என்னவோ சரியில்லை என்று சொல்லிற்று.

“என்ன, ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.

“ஒண்டும் இல்ல.” அவனைப் பாராது சொன்னாள்.

“பிறகு என்னத்துக்கு அழுத்திருக்கிறாய்?”

மூக்கும் முகமும் சிவக்க, அவளுக்குத் தொண்டை ஏறி இறங்கிற்று.

அவன் திகைத்தான். இப்படி அழமாட்டாளே! உள்ளே யோசனை ஓட, “ஏன் மேல வரேல்ல?” என்றான் அடுத்த கேள்வியாக.

“அது… எனக்குப் படிக்கோணும்.”

‘இவள் எந்தக் காலத்தில அறைக்க இருந்து படிச்சவள்’ என்று பார்த்தான் அவன்.

அவள் பதில் சொல்லாமல் நிற்க, “படிக்க வேண்டிய புக்க எடுத்துக்கொண்டு மேல வா!” என்றுவிட்டுப் போனான்.

என்னவோ இருக்கிறது. அது மட்டும் நன்றாகத் தெரிந்தது. நேரடியாகக் கேட்டால் சொல்லமாட்டாள். விட்டுத்தான் பிடிக்க வேண்டும் என்று எண்ணித்தான் புத்தகத்தோடு மேலே வரச் சொன்னான். இவன் வந்ததிலிருந்து அவளுக்குக் கற்பிக்கும் வேலையைப் பார்ப்பதும் அவன்தான்.

அவளுக்குக் கைகால்கள் எல்லாம் உதறின. அப்படியே மேலேறினாள்.

கையில் புத்தம் இல்லாமல் வந்தவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன பிரச்சினை நிரல்? என்ன எண்டாலும் சொல்லு, நான் இருக்கிறன்.” என்றான் அவளுக்குத் தைரியம் கொடுக்கும் வகையில்.

‘பிரச்சினையே நீதானடா’ உள்ளம் அலற, “இல்ல ஒண்டும் இல்ல.” என்றாள் பழையபடி.

அவளிடம் பார்வை ஒருமுறை சென்று வர அங்கிருந்த த்ரெட் மில்லில் ஏறி, அதன் வேகத்தைக் கூட்டிட்டு அதோடு சேர்ந்து அவனும் ஓட ஆரம்பித்தான்.

“பள்ளிக்கூடத்தில ஏதும் பிரச்சினையா?” என்று கேள்வியை மாற்றிப் போட்டான்.

“இல்ல.”

“விளையாட்டுப் போட்டிக்குப் பயிற்சி தொடங்கியாச்சு என்ன? அங்க ஏதும் மனம் சரியில்லையா?”

“இல்ல.”

“பிரண்ட்ஸோட சண்டையா?”

“இல்ல.”

“மாமா ஏதும் சொன்னவரா?”

“இல்ல.”

“போற வாற பாதைல பெடியள் ஆரும் சேட்டை விட்டவங்களா?”

“இல்ல.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “ஏய் என்னடி? என்ன எண்டு சொன்னாத்தானே தெரியும்? எல்லாத்துக்கும் இல்ல இல்ல எண்டா என்ன அர்த்தம்? பிறகு என்னத்துக்குக் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிக்கிறாய்?” என்று பொறுமையிழந்து அவன் சீறிவிடவும், “ஐயோ அம்மா!” என்று நெஞ்சில் கையை வைத்தபடி இரண்டடி பின்னால் வைத்தவளைக் கண்டு அவன்தான் திகைத்து நின்றுவிட்டான்.

அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்த த்ரெட்மில்லின் வேகத்தில் விழப்பார்த்து, குதித்து இறங்கியவனுக்கு மூச்சிறைத்தது.

அதைவிடவும் அவனைப் பார்க்கும் அவள் விழிகளில் தெரிந்த அச்சத்தில் உறைந்துபோனான்.

அவனைப் பார்த்துப் பயப்படுகிறாளா நிரல்யா?

ஏன்?

நொடி நேரம் சுருங்கிய புருவங்கள் நேராகிவிட, இப்போது அவனால் அவளைப் பார்க்க முடியாமல் போயிற்று. அங்கிருந்த டவலை எடுத்து முகம் துடைப்பது போன்று அவளுக்கு முதுகு காட்டியபடி நின்று, “இண்டைக்கு டவுனுக்கு வந்தனியா?” என்றான் சாதாரணம் போன்ற குரலில்.

“இல்ல இல்ல…” பதறியடித்துக்கொண்டு அவள் சொன்னதே உண்மையைச் சொல்லிவிட திரும்பி அவளைப் பார்த்தான்.

உடல் பதற, கண்ணோரங்கள் கசிய, அவனைப் பார்க்காது முக திருப்பி நின்றவளை இமைக்காது பார்த்தான். அவன் பார்ப்பது தெரிந்ததாலோ என்னவோ அவளுக்கு இன்னும் கைகால்கள் நடுங்கின.

அவன் நெஞ்சில் என்னவோ சுருக்கென்று பாய்ந்தது. முகத்தைத் திருப்பி நெற்றியைத் தேய்த்துவிட்டவனுக்கு எதிர்பாராமல் உருவாகிவிட்ட இந்தச் சங்கடமான சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை.

இதனால் தகப்பனிடம் இருந்தே ஒதுங்கி இருப்பவள். அவனை விட்டும்… மேலே யோசிக்கக் கூடப் பிடிக்காமல், அந்தப் பேச்சைத் தொடரவும் விரும்பாமல், “எங்க புத்தகம்? அது இல்லாம மேல வந்து என்னத்தப் படிக்கப் போறாய்? புத்தகத்தை வச்சுப் படிச்சாளேஉனக்கு ஒண்டும் ஏறாது.” என்று கேலி போன்று பேச்சை மாற்றினான்.

“இல்ல, நான் அறைக்கையே படிக்கிறன்.” என்றவள் அப்படியே இறங்கி ஓடியிருந்தாள்.

மீண்டும் சென்று அவள் அறையைத் தட்ட முடியாமல் நின்றான் அனந்தன். மொட்டை மாடியின் சுவரைப் பற்றிக்கொண்டு எங்கோ வெறித்தவனை அச்சம் நிறைந்த அவள் பார்வை என்னவோ செய்தது.

அமிர்தவல்லியைத் தாண்டித் தங்கு தடையின்றி அவள் கதைப்பது, பேசுவது, சிரிப்பது என்றால் அது அவனோடுதான். அவன் ஒரு ஆண் என்றுகூட ஒதுங்கி நின்றதில்லை. என்னதான் அமிர்தவல்லியும் சுந்தரலிங்கமும் அவனைத் தம் வீட்டுப் பிள்ளையாகப் பார்த்துக்கொண்டாலும் அப்படி அவனையும் உணர வைத்தவள் அவள்தான். இன்னொருவர் வீட்டில் வந்து இருக்கிறோம் என்கிற நிலையை மாற்றி, மாமா வீட்டில் இருக்கிறோம் என்று நினைக்க வைத்தவள்.

அவளே இன்றைக்கு அவனைப் பயத்தோடு, யாரோ ஒருவனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாள். விலகிவிடுவாளோ என்று பயந்தான். எப்படியாவது அவளைத் தனக்குள் பொத்தி வைக்கும் வேகம் எழுந்தது.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 2

அன்பும் காதலும் நேசமும் மனிதனின் ஆதி அணுத்துகளிலிருந்து தொடங்கியவை. கூடாது என்றால் எப்படி?

இரண்டு நாள்கள் கடந்திருந்தன. ஒரே வீட்டில் இருந்தும்கூட அவன் முன்னால் வராமல் விளையாட்டுக் காட்டிக்கொண்டே இருந்தாள் நிரல்யா. அவள் கண்ணில் படும்படி விட்டுவிட்டோமே என்று தன்னையே நொந்த நிலை மாறி, என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறாள் என்கிற கோபம் அவனுக்குள் கனற ஆரம்பித்திருந்தது.

அன்று, இவன் படியேறி வருகையில் அவள் படியிறங்கிக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் சட்டென்று அவள் முகத்தில் ஒரு பதற்றம். அதுவே அவனுக்குச் சினத்தை விசிறி விடப் போதுமாயிற்று. இதில், அவனைப் பாராமல் ஒதுங்கி வழி விடவும் அவள் முன்னால் வந்து நின்று முறைத்தான். அவள் நிமிரவில்லை; அவனை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. எதுவரைக்கும் போகிறாள் என்று பார்க்க அவனும் அப்படியே நின்றான். ஒரு கட்டத்தில் அவள் திரும்பி மாடியேற முயலவும் அவன் பொறுமை முற்றிலுமாகப் பறந்திருந்தது.

அவள், “விடுங்க விடுங்க!” என்று சொன்னதையும் கேளாமல், கையைப் பற்றி ஒரே இழுவையாக இழுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஏறினான்.

“என்ன பிரச்சினை உனக்கு? என்னவோ ரவுடியைப் பாத்து ஓடி ஒளியிற மாதிரி ஒளியிறாய்?” அவள் முன்னால் நின்று பல்லைக் கடித்தபடி வார்த்தைகளைத் துப்பினான்.

‘ஓ! நீங்க ரவுடி இல்லையா?’ மனம் குமுறினாலும் அவள் வாயைத் திறக்கவில்லை.

“நிரல்! அவன் காசு வாங்கிப்போட்டு ஆறு மாதமா ஓடி ஒளிஞ்சுகொண்டு திரிஞ்சவன். நாளஞ்சு தரம் வீடு தேடிப்போய் வட்டியைக் கட்டச் சொல்லிச் சொல்லியாச்சு. அப்பிடி இருந்தும் எங்களச் சுத்திக்கொண்டு கொழும்புக்குத் தப்பியோடப் பாத்தவன். அதான் பிடிச்சு நாலு மிதி மிதிச்சனான். அடுத்த நாளே காசக் கொண்டு வந்து தந்திட்டான். அத அவன் முதலே செய்திருக்க நான் ஏன் அடிக்கப் போறன்? நடந்தது ஒண்டும் தெரியாம நீ மூஞ்சியத் திருப்பிக்கொண்டு திரிவியா?” என்று அவள் முகத்தின் முன்னே வந்து சீறவும் திரும்பவும் பயந்து நடுங்கினாள் அவள்.

“ஏய், முதல் இப்பிடிப் பாக்காதயடி! ஏறிக்கொண்டு வருது எனக்கு. நான் என்ன மிருகமா உனக்கு? உன்ர அதே மச்சான்தான். ஒழுங்கா நில்லு! சும்மா பயப்பிடாம.” என்றான் எரிச்சலும் சினமுமாக.

“நீங்க அப்பிடி அவரை அடிச்சது பிழை இல்லையா?” அந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்களாகியிருந்ததில் அவளும் ஒரு நிலைக்கு வந்திருந்தாள். கூடவே அவன் தவறை அவனுக்கு உணர்த்திவிடும் வேகமும் வந்திருந்தது.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “வேற என்ன செய்திருக்க வேணும் எண்டு நீயே சொல்லு?” என்றான் நிதானமாக.

“கடனைக் கட்டச் சொல்லி வாயால சொல்லலாம்.”

‘வாயால குணமாச் சொல்லோணுமாமா இவளுக்கு?’ அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. இருந்த கோபமும் காற்றாய் மறைந்துவிட, “குடுத்த தவணையைத் தாண்டி ஒண்டுக்கு மூண்டு தரம் சொல்லியாச்சு.” என்று பதில் சொன்னான்.

“அப்ப இன்னும் கொஞ்சம் டைம் குடுத்திருக்கலாம்.”

“நாங்க என்ன காசைக் குடுத்திட்டு அடுத்த நாளேவா போய் நிக்கிறம் திருப்பித்தா எண்டு. அவன் சொன்ன காலமும் முடிஞ்சு போதுமான அளவுக்கு டைமும் குடுத்தாச்சு. அப்பவும் வட்டியும் கட்டாம முதலும் தராம விட்டதாலதான் கேட்டது.”

“அப்ப அவரிட்டக் காசு இல்லை எண்டு அர்த்தம்.”

“அது அவன்ர பிரச்சினை. ஒருத்தரிட்ட வாங்கினா திருப்பிக் குடுக்கத் தெரிய வேணும்!” என்றான் அவன் பட்டென்று.

அவள் பதிலற்றுத் தடுமாறினாள். அது அவனுக்கு வேடிக்கையாயிற்று. “சொல்லு, வேற என்ன செய்திருக்கலாம்?” என்று வேண்டுமென்றே கேட்டான்.

அவன், தான் அடித்தது சரிதான் என்று நிறுவ முயல்வது போலிருக்க அவளுக்குக் கோபம் வந்தது. “இப்ப என்ன சொல்ல வாறீங்க? நீங்க செய்தது சரி எண்டா?” என்று அவன் முகத்தை நேராகப் பார்த்து வினவினாள்.

அந்தக் குழந்தைக் கோபம் அவனை ஈர்க்க, சில கணங்களுக்கு அவள் முகத்தில் பார்வையை நிலைக்க விட்டவன், “பிழைதான். விடு!” என்று தளைந்து வந்தான்.

அவள் முகம் பளீர் என்று மலர்ந்து போயிற்று.

“பாத்தீங்களா, உங்களுக்கே தெரிஞ்சிருக்கு, நீங்க அடிச்சது பிழை எண்டு.” என்றாள் உற்சாகம் பொங்கும் குரலில்.

கையைக் கட்டிக்கொண்டு மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தவன் சிறு சிரிப்புடன் அவளைப் பார்த்தானே தவிர பதில் சொன்னான் இல்லை.

அவளிடம் வாதாடி, தான் செய்தது சரிதான் என்று சொல்வதைவிட அவளைச் சமாதானம் செய்து, பழையபடி அவனோடு கதைக்க வைப்பதே அவனுக்கு முதன்மையாகப் பட்டது.

“இனி இப்பிடி அடிக்காதீங்க ப்ளீஸ். பாவம் எல்லா.” முகம் சரித்துக் கெஞ்சியவளிடம் மறுக்க முடியாமல், “சரியடி, இனி அடிக்கேல்ல. எல்லாரிட்டையும் கொஞ்சிக் கெஞ்சிக் காச வாங்கிறன், சரியா?” என்றான் சிரிப்பும் எரிச்சலுமாக.

அவள் முகம் சுருங்கிற்று.

“அதான் இனி அடிக்கேல்ல எண்டு சொல்லுறன்தானே. பிறகென்ன?”

“உண்மையாவா?” மீண்டும் முகம் பளீரென்று மின்ன வினவினாள்.

“இல்ல பொய்யா. போடி!” என்றான் அவன் கோபம் போன்று.

“ஓகே ஓகே! உங்கள நான் நம்புறன். இனி நீங்க ஆரையும் அடிக்கக் கூடாது. அடிச்சா நான் உங்களோட கதைக்கவே மாட்டன்.” விரல் நீட்டி எச்சரித்தாள்.

அந்த மெல்லிய நீண்ட விரலையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தவன், “பெரிய மிரட்டல்தான்.” என்றான் சிரிப்புடன்.

அதன்பிறகு வெளியிடங்களில் அடிப்பதைக் குறைத்திருந்தான். அவள் பார்த்து, உண்மையிலேயே கதைக்காமல் விட்டுவிடுவாளோ என்கிற பயம் அவனைக் கவனமாக நடக்க வைத்திருந்தது. சுந்தரலிங்கத்திடம் அவள் நிரந்தரமாகக் கடைபிடிக்கும் இடைவெளியைத்தான் தினந்தோறும் பார்க்கிறானே!

அதன்பிறகு இந்த அடிதடி எல்லாமே அவர்களின் அடகுக் கடைக்குப் பின்னால் இருக்கும் குளக்கரையில்தான் நடக்கும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் அவ்வளவு கவனமாக இருந்தும் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் ஒருநாள் மாட்டிக்கொண்டான். இரவுப்பொழுது என்பதும் அவனுடைய தோட்டத்தில் வைத்தே வசமாக மாட்டிக்கொண்டதும் சேர்ந்துகொள்ள, யோசிக்காமல் ஒருவனை வெளுத்து வாங்கியிருந்தான். அந்த மனிதனின் மகள் இவளுக்குத் தெரிந்தவளாக இருப்பாள் என்று கனவா கண்டான்? அவன் அந்த மனிதனைப் போட்டு வெளுத்து வாங்கும் வீடியோ நிரல்யாவுக்கு வந்து சேர்ந்திருந்தது.

நிரல்யாவினால் அதைப் பார்க்கக் கூட முடியவில்லை. அவனும் சொன்ன சொல்லை மீறியது அதைவிடப் பெரிதாக வலித்தது. இனியும் அவனிடம் கேட்டுக்கொண்டு போகவோ, சண்டை பிடிக்கவோ விருப்பமில்லை. அப்படிக் கேட்டால் மட்டும் என்ன சொல்லுவான்? அன்றுபோல் அவளிடமே என்ன செய்யலாம் என்று கேட்பான், இனி இப்படி நடக்கமாட்டேன் என்று குழந்தைப் பிள்ளையை ஏமாற்றுவதுபோல் ஏமாற்றுவான். அவ்வளவுதானே?

அந்த வீடியோவை அவனுக்கு அனுப்பிவிட்டு முற்றிலுமாக அவனிடமிருந்து ஒதுங்கிக் கொண்டாள்.

அதைப் பார்த்த அனந்தன் தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான். அதை எடுத்து அனுப்பிய நபரைப் பிடித்து வெளுக்கும் ஆவேசம் வந்தது. முதல் முறை போன்றே அவள் கோபத்தை ஆறப்போட்டுவிட்டு ஒரு சில நாள்கள் கழிய அவளோடு பேச முயன்றான். அவள் பிடி கொடுக்கவே இல்லை.

தன்னை விளங்க வைக்கப் பார்த்து, அவளுக்குப் பிடித்தவைகளைச் சமாதானத் தூது அனுப்பி, கெஞ்சிப் பார்த்து, மன்னிப்புக் கேட்டு என்று எது செய்தும் அசையவில்லை. உண்மையில் மிக மிக மென்மையான அவளுக்குள் அப்படி ஒரு பிடிவாதம் உண்டு என்று அவனுக்கு அவள் தெளிவாகக் காட்டிய நாள்கள் அவை.

இவர்கள் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நிற்பதைக் கண்டு விசாரித்த சுந்தரலிங்கம், அவளை வலுக்கட்டாயமாக இருத்திவைத்து நடத்திய பேச்சு வார்த்தையும் படு தோல்வியில் முடிந்திருந்தது.

ஒருநாள் அவன் பிடிவாதமாகப் பேச முயன்றதில் கோபம் கொண்டு, “அம்மா, எனக்கு அவரோட கதைக்க விருப்பம் இல்ல. சும்மா சும்மா வந்து என்னோட கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ!” என்று அமிர்தவல்லியிடம் கண்ணீரும் கோபமுமாக அவள் சொல்லிவிட, மகளுக்காகப் பேசுவதா அவனுக்காகப் பேசுவதா என்று தெரியாமல் அவர் தவிப்புடன் நிற்பதைக் கண்டதும் அவனுக்கும் கோபம் வந்திருந்தது.

அதன்பிறகு சமாதானத்துக்குப் போகவில்லை.

“என்னம்மா இது? நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கிறதே அவனும் அப்பாவோட நிக்கிற தைரியத்திலதான். அதுக்கு இப்பிடிக் கோவிக்கிறதா? பாவம் எல்லாம்மா?” என்ற அமிர்தவல்லியிடம் கூட,

“உங்கட மனுசன் செய்ற மோசமான தொழிலுக்கு ஒரு வாரிசை வளத்துவிட்டதும் இல்லாம, அதுக்கு நீங்களும் உடந்தை என்னம்மா?” என்றுவிட்டு எழுந்துபோனாள் அவள்.

அவளின் ஒதுக்கம் கொடுத்த ஆத்திரத்தில் மொட்டை மாடியில், தண்ணீர் டாங்கின் அருகில் ஸ்டோர் ரூமாக இருக்கட்டும் என்று கட்டிய அறையைத் தன் இருப்பிடமாக மாற்றிக்கொண்டான். அங்கேயே கழிவறையுடன் கூடிய பாத்ரூமும் கட்டி, வெளியில் இருந்தே மேலே போகக்கூடிய வகையில் சுற்றி சுற்றி ஏறும் கம்பிப் படியையும் சுந்தரலிங்கம் போட்டுக் கொடுத்துவிட, அந்த வீட்டில் இருந்தாலும் தனியாக ஒதுங்கிக்கொண்டிருந்தான் அனந்தன்.

உணவுக்கு மட்டும் வீட்டுக்குள் வருவான்.

இதெல்லாம் அவளின் பதினாறாவது வயதில் நடந்தவை. இன்று பத்தொன்பது வயதுக் குமரி. இதோ, அவள் பள்ளிப் படிப்பை முடித்து, நாளைக்குப் பல்கலைக்குப் புறப்படப் போகிறாள்.

இன்று வரையில் அவள் பிடிவாதமாக விலகியே நின்றுவிட்டது அவனுக்குள் ஒரு கோபத்தை நிரந்தரமாக்கியிருந்தது. ‘நான் இப்பிடித்தான்டி, கதைக்காட்டிப் போடி!’ என்பதுதான் அவளோடு அவன் மௌனமாகப் போடும் சண்டை.

அப்படி, அவளை விட்டு விலகியிருந்தாலும் அவள் என்ன செய்கிறாள், எங்குப் போகிறாள், அவளின் நண்பர்கள் யார் என்று அவள் பற்றிய அத்தனையும் அவன் கையில் இருக்கும். இனி அதற்கும் வழியில்லை. நாளை அவளைக் கொண்டுபோய் பேராதனையில் விட வேண்டும்.

ஒரு நெடிய மூச்சுடன் பொக்கெட்டில் இருந்த அவளின் கைச் செயினை எடுத்துப் பார்த்தான்.

சற்று முன்னர் அவள் கொடுத்ததை அந்த மனிதரைத் துரத்திக்கொண்டுபோய் இவன் பறித்துக்கொண்டிருந்தான்.

நடுவில் பெரிய தங்கக் குண்டு ஒன்று இருக்க, அதன் இரு பக்கத்திலும் அளவு சின்னதாகிக்கொண்டு போகும் தங்க குண்டுகள் கோர்க்கப் பட்ட செயின் அது.

எப்போதும் அவள் கையில் தவழ்ந்துகொண்டே இருக்கும்.
பள்ளிக்கூட நேரத்தில் கழற்றிவிட்டு மாலைகளில், வார இறுதிகளில் எல்லாம் மறக்காமல் போட்டுக் கொள்வதிலேயே அவளுக்கு அது மிகவும் பிடித்த கைச்செயின் என்று அவனுக்குத் தெரியும். எதையாவது யோசிக்கிறபோது, தன்னை மறந்து கதைக்கிற பொழுதுகளில் எல்லாம் ஒரு கையில் அணிந்திருக்கும் அதை, மற்றக் கையினால் வருடி விட்டுக்கொண்டே இருப்பாள். அது, அவளே உணராமல் நடக்கும் ஒன்று என்று, எதிரில் நின்று அவளையே பார்த்திருக்கும் அவனுக்குத் தெரியும்.

அவள் நாளை புறப்படுவதால் தோழிகளுடன் வெளியே புறப்பட்டது தெரிந்தால்தான் தைரியமாக அந்த மனிதரை வீட்டுக்கே இழுத்துக்கொண்டு வந்தான். அது பார்த்தால் அவள் நிற்கிறாள். ஒரு நெடிய மூச்சுடன் அந்தச் செயினை பொக்கெட்டில் போட்டுவிட்டு அவன் நிமிர, அவள் ஸ்கூட்டி கேட்டைத் தாண்டி வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தது.

அவளையே பார்த்திருந்தான். இந்த மூன்று வருடங்களில் கொஞ்சம் பெரிய பெண்ணாகியிருந்தாள்.

தான் மேலே நிற்பதும் அவளையே பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பதும் அவளுக்குத் தெரியாமல் இருக்காது. ஆனாலும் பிடிவாதம். ‘சரிதான் போடி என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் அவள் கதைக்காமல் விட்டதிலிருந்து ஏதோ ஒரு வெறுமை படர்ந்துவிட்ட இந்த மனத்தை அவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஏதோ பொருள்கள் அடங்கிய பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று மறைந்தாள் அவள். ஒரு நெடிய மூச்சுடன் அவனும் தன் அறைக்குள் அடைந்துகொண்டான்.



கருத்திட


ஆரம்பம் என்றதும் கொஞ்சம் ஈஸியா வருது. அதால அடுத்த அத்தியாயமும் வேகமா போட்டுட்டன். அதுக்காகத் தினமும் அத்தியாயம் வரும் எண்டு மட்டும் நம்பிடாதீங்க. பிறகு எனக்கே சிரிப்பு வந்திடும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 3

ஆகச்சிறந்த கவிதை ஒன்றை உனக்காக எழுத ஆரம்பித்திருக்கிறது என் மனது! அது தெரியாமல் சிரித்துக்கொண்டிருக்கிறாய் நீ! பார்க்கலாம், என்று என் கவிதைகள் உன் உள்ளம் தொடுகிறது என்று!

நிரல்யா உயர்தரத்தில் மிக மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தாள். அதனாலேயே வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் பல்கலைகள் இருந்த போதிலும் பேராதனை, விவசாய பீடத்துக்குத் துணிந்து விண்ணப்பித்திருந்தாள்.

அங்கெல்லாம் வேண்டாம் என்று சுந்தரலிங்கம் சொன்னதைக் காதிலேயே விழுத்தவில்லை. பேராதனையில் கிடைத்தால் அங்குதான் போவேன் என்று உறுதியாக அமிர்தவல்லியிடம் சொல்லியிருந்தாள்.

அவளுக்கு மேலே என்ன படிக்கப் போகிறோம் என்பதை விட, இங்கிருந்து வெளியேறுவதுதான் முதன்மையாய் இருந்தது. அந்தளவில் சொந்த ஊரும் சொந்த வீடும் பெரும் புழுக்கத்தைத் தந்திருந்தது.

சிறு வயதில் அவள் பார்த்த ஏதோ ஒரு படத்தில் ரவுடியாக இருக்கும் நாயகன் சுடப்பட்டு இறந்துவிடுவான். தோழிகள் வேறு உன் அப்பாவும் இப்படித்தான் என்றுவிட, இந்தத் தொழில் வேண்டாம் என்று தந்தையோடு சண்டை போட்டு, அழுது அடம் பிடித்ததில் ஒரு நாள் பொறுமையிழந்தவர் கை நீட்டியிருந்தார். அதோடு பயந்து ஒதுங்கியவள் அவரிடமிருந்து விலகியே நின்றுவிட்டாள்.

இதில், அதே பாதையில் அனந்தனும் போனது அவளை மிகவுமே பாதித்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் அவள் ஆசைப்பட்டது போன்று பேராதனையில் இடமும் கிடைத்திருந்தது. இதோ, பெட்டிகளையும் கட்ட ஆரம்பித்துவிட்டாள்.

“நந்தா! சாப்பிட வாய்யா!” அங்கே மாடியை நோக்கிக் குரல் கொடுத்தார் அமிர்தவல்லி.

“வாறன் மாமி!” அன்றைய நாளின் வெக்கை அடங்கக் குளித்துவிட்டு வந்து வெறும் மேலுடன் இருந்தவன், மேலே ஒரு டீ ஷேர்ட்டை தூக்கிப் போட்டுக்கொண்டு கடகடவென்று அந்தக் கம்பிப் படிகளில் இறங்கினான். வீட்டின் பின் வாசல் வழியே உள்ளே நுழைந்து, அப்படியே கையையும் கழுவிக்கொண்டு வந்து மேசையின் முன்னே அமர்ந்தான்.

அவனுக்குப் பரிமாறியவரிடம், “நிரல் சாப்பிட்டாளா மாமி?” என்று விசாரித்தான்.

“இல்லையப்பு. என்னவோ மொத்தமா வீட்டை விட்டே போகப்போறவள் மாதிரிப் பெட்டி பெட்டியா கட்டிக்கொண்டு இருக்கிறாள். இப்ப யோசிக்க இங்கயே ஏதாவது எடுத்துப் படிச்சிருக்கலாம் இந்தப் பிள்ளை எண்டு இருக்கு.” என்று தன் மனக்குறையை அவனிடம் கொட்டினார்.

அவர்தான் மறுத்த கணவரிடம் பேசி, சம்மதம் வாங்கிக் கொடுத்திருந்தார். ஆனால், நாளையோடு போய்விடுவாள் என்று நாள்கள் நெருங்கி வந்ததும் மனம் அலைபாய்ந்தது.

கணவரும் அவனும் பணத்தின் பின்னால் ஓடுகிறவர்கள். இல்லாவிட்டாலும் அவர்களோடு அவர் என்ன பேச, எப்படிப் பொழுதைப் போக்க? இதுவரையில் அவள் ஒருத்திதான் துணை என்று இருந்தவள். இனி தனியாக இருக்க வேண்டும் என்கிற மருட்சி அவருக்கு.

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு இருக்கும் அதே தவிப்புத்தான் அவனுக்கும். வார இறுதிகளில் வருவாள்தானே என்று தேற்றினாலும் முடியாமல் என்னவோ ஒரு இரைச்சல்.

“நீயும் வா பிள்ளை. வந்து சாப்பிட்டுப் போ!” என்று அமிர்தவல்லி குரல் கொடுக்க, விரிந்து கிடந்த கூந்தலை எல்லாம் கொண்டையாக மாற்ற முயன்றுகொண்டே வந்தாள் அவள்.

அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவளும் அவனைச் சட்டை செய்யவில்லை. அவன் எதிரில் அமர்ந்து பிட்டு, தக்காளிப்பழம் போட்டுச் செய்த உருளைக்கிழங்குக் குழம்பு, கத்தரிக்காய்ப் பொரியல் என்று தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.


*****

பேராதனைப் பல்கலைக்கழகம் கண்டி நகருக்கு அண்மையில், பேராதனை என்னும் இடத்தில் அமைந்திருந்தது.
மெலிதாகப் பனி படர்ந்தே இருக்கும் நிலம். கூடவே ஹந்தானை மலையை அண்டி இருப்பதில் குளிரும் மழையும் கொஞ்சிக் குலவிக்கொண்டே இருக்கும். அதனாலேயே அதன் பசுமைக்குப் பஞ்சமில்லாது போயிற்று.

பேராதனை மிகுந்த அழகு என்று கேள்விப்பட்டு இருக்கிறாள்தான். என்றாலும் இந்தளவில் எதிர்பார்க்கவில்லை. அலை வடிவத்தில் மேடும் பள்ளமுமாக இருந்த நிலப்பரப்பு, அதிலே படர்ந்து கிடந்த பச்சைப் பசேல் என்ற புல்வெளி, சூரியனே வெளியே போ என்று கோசமிடுவது போன்று ஓங்கி வளர்ந்து, கிளை பரப்பி நிற்கும் பெரிய பெரிய மரங்களின் கூட்டணி என்று பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை நிரல்யாவுக்கு.

ஆசையை அடக்க முடியாமல் வெளியே எட்டிப் பார்த்தபடி, கையையும் நீட்டிச் சில்லிட்ட காற்றை அவள் விழிகளை மூடி அனுபவித்த அழகை, வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த அனந்தன் ஒருகணம் தன்னை மறந்து ரசித்திருந்தான். ஆனாலும் அது ஆபத்து என்றுணர்ந்து, “கைய உள்ளுக்கு எடு நிரல்!” என்று பக்கக் கண்ணாடி வழியே பார்த்து ஒரு அதட்டல் போட்டான்.

முகம் சுருங்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கையை உள்ளே இழுத்துக்கொண்டவள், எண்ணெய்ச் சட்டியில் போட்டு அவனை வறுக்கிறாள் என்று, அவளின் சிவந்து கடுகடுத்த முகமே சொல்லிற்று.

உதட்டோரம் சிரிப்பில் துடித்தாலும் அவன் பார்வை அவளில்தான். அங்கிருந்து புறப்படும்போதே வேனின் பின் சீட்டைப் பிடித்துக்கொண்டு வீடியோ எடுப்பதும் செல்பி எடுப்பதும் என்று வேறு ஒரு உலகத்தில் மிதந்துகொண்டிருந்தாள். அமிர்தவல்லி வருகிற வழி முழுவதிலும் சொன்ன புத்திமதியில் ஒரு வார்த்தை அவள் செவிக்குள் நுழைந்திருக்குமா என்பது கேள்விதான்.

இவ்வளவு காலமும் கதைக்காவிட்டாலும் பக்கத்திலேயே இருந்தாள். இனி? வார இறுதிகளில் மட்டுமே. அதுவும் ஒவ்வொரு முறையும் சாத்தியப்படும் என்கிற நம்பிக்கை அவனுக்கில்லை.

ஒரு வழியாக அவள் தங்கப்போகும் பெண்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அத்தனை நேரமாகப் பயணித்த களை துளியுமின்றி குடுகுடு என்று இறங்கியவளின் விழிகள், வண்டுகளாக வட்டமடித்து அந்த இடத்தை ஆசையோடு உள்வாங்க முயன்றன.

‘அடியேய் அறிவு! நாலு வருசத்துக்கு இனி இஞ்சதான்(இங்கதான்) குப்பை கொட்டப் போறாய். அதால பராக்குப் பாக்கிறத விட்டுட்டு சாமானுகள இறக்கு!’ என்று மண்டையில் தட்ட எழுந்த கையை அடக்கிக்கொண்டு, பொருள்களை இறக்க ஆரம்பித்தான் அனந்தன்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
கிடைத்த இடைவெளியில் “நிரல்!” என்று அழைத்தான்.

அவள் திரும்பிப் பார்க்க, “சின்ன கிப்ட்.” என்று ஒரு மெல்லிய நீண்ட பெட்டியை நீட்டினான். தாயும் தகப்பனும் பக்கத்தில் நின்றதில் மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டாள்.

ஒரு வழியாக எல்லாவற்றையும் இறக்கி வைத்திருந்தார்கள். இனிப் புறப்பட வேண்டும். அமிர்தவல்லிக்கு மனம் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. ஆயிரம் கவனம் சொன்னார்.

“ஐயோ அம்மா! இன்னும் எத்தின தரம் சொல்லுவீங்க? என்னவோ கைக்குழந்தையை விட்டுட்டுப் போறமாதிரி. எனக்குப் பத்தொன்பது வயது. நான் இருப்பன். எனக்கு என்னைப் பாக்கத் தெரியும்.” என்றாள் அவரை அணைத்துச் சிரித்தபடி.

“தமிழ்ப் பிள்ளைகள் ஒருத்தரையும் காணேல்ல. முழுக்கச் சிங்களமா இருக்கு. சமாளிப்பியா?” அப்போதும் சமாதானமாகாமல் சுற்றவர நடமாடும் பிள்ளைகள் மீது விழிகளை ஓட்டியபடி வினவினார்.

“அப்பிடி இருக்காமப் போகாதம்மா. இப்பதானே வந்திருக்கிறன். ரெண்டு நாளில தேடிப் பிடிச்சிடுவன். இங்க தமிழ்ச் சங்கம் எல்லாம் இருக்காம். தமிழ்ப் பிள்ளைகள் இல்லாமையா அதெல்லாம் இயங்குது?” சின்னச் சிரிப்புடன் சொன்னவளுக்கு அவருக்கு இருக்கும் கலக்கம் எதுவும் இல்லவே இல்லை.

“கவனமா இருக்கோணும் என்னம்மா. கவனிக்க ஆக்கள் இல்லையே எண்டு யோசிக்காம நடக்கிறேல்ல. என்ன எண்டாலும் அப்பாக்கோ நந்தாக்கோ உடனே சொல்லவேணும்.” என்று அவள் தலையைத் தடவினார் சுந்தரலிங்கம்.

எங்கோ பார்த்துக்கொண்டு, “ம்.” என்றாள் அவள்.

அவள் தன்னிடமிருந்து முற்றிலுமாக விலகி நிற்கிறாள் என்று அவருக்குத் தெரியாமல் இல்லை. அவள் மீது மிகுந்த பாசம். அவர் உயிரே அவள்தான். அதுக்கென்று தன் தொழிலை அவரால் விடவும் முடியாது. அது தொழில். வீட்டுக்கு வெளியே. அங்கே அவர் சற்றுப் பிழையானவர்தான், பொல்லாதவர்தான், கரடுமுரடானவர்தான். ஆனாலும் அவருக்கான சமூக அந்தஸ்தையும் மரியாதையையும் வாங்கித் தருவது அதுதான். அதை மகளுக்காகக் கூட இழக்க அவர் தயாரில்லை. அவரையும் தொழிலையும் விளங்கிக்கொண்டு மகள் தன்னோடு பாசமாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்த்தார்.

ஆரம்பத்தில் இவ்வளவு தூரத்துக்கு, அதுவும் சிங்களவர் அதிகமாகக் கற்கும் இடத்துக்கு அவளை விட அவர் தயாரில்லை. ஆனால், பள்ளிக்கூட காலம்வரைக்கும் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்ததும், அவள் விருப்பத்துக்கு இசைந்து நடந்தால் கோபம் விடுத்துத் தன்னோடு கதைத்துவிட மாட்டாளா என்கிற ஆசையும், மனைவியின் ஓதுதலுமே அவரைச் சம்மதிக்க வைத்திருந்தது.

ஒரு வழியாகப் புறப்பட்டார்கள். அமிர்தவல்லிக்குக் கண்ணீர் கொட்டியது. “அம்மா!” என்று அவரைக் கட்டிக்கொண்டவளுக்கும் கடைசி நேரத்தில் மனத்தைப் பிசையாமல் இல்லை. “சனி ஞாயிறு வருவன்தானே. பிறகு என்ன?” என்று அவரைத் தேற்றி அனுப்பி வைத்தவள், கடைசி நேரத்தில் கூட அனந்தனின் பக்கம் திரும்புவதாய் இல்லை.

அதை அறிந்தே புறப்படுவதற்கு ஏற்ப வாகனத்தைத் திருப்பி நிறுத்தியவன் அதன்பிறகு இறங்கவில்லை. வேனிலேயே அமர்ந்துகொண்டான். அவன் மனம் அவள் பிரிவை எப்படி உணர்கிறது என்று அவனாலேயே பிரித்தறிய முடியவில்லை. ஏதோ ஒன்று மனத்தைக் குடைந்தது.

அவன் அப்படி வாகனத்திலேயே அமர்ந்துகொண்டது அமிர்தவல்லியையும் தாக்க, “இப்பயாவது நந்தனோட கதையனம்மா. பாவம் எல்லா? ஆரும் இல்லாம எங்களோட இருக்கிற பிள்ளை. உன்னோட அவன் பாசமும். சாதாரணமா படிச்ச உன்ன நல்ல கெட்டிக்காரியாக்கினது அவன்தான். அதாலதான் உனக்கு இஞ்ச இடம் கிடைச்சதும்.” என்று தன்மையாக எடுத்துச் சொன்னார்.

உண்மைதான். ஆனால் இவ்வளவு காலமும் கதைக்காமல் இருந்துவிட்டு இப்போது எப்படி?

தயங்கி தயங்கி அவன் முன்னே வந்து நின்றாள். அப்படி வருவாள் என்று எதிர்பாராதவன் கண்களில் கேள்வியோடு அவளைப் பார்த்தான்.

“அது, தேங்க்ஸ் கொண்டுவந்து விட்டதுக்கு.” என்றாள் அவனோடு என்ன பேசுவது என்று தெரியாமல்.

இமைக்காது அவளையே சில கணங்களுக்குப் பார்த்தவன் பார்வையை அகற்றி எங்கெங்கோ அலையவிட்டான். இது யாரின் வேலை என்று தெரியாதா, இல்லை அவளாக அவனோடு கதைக்க வரவில்லை என்றுதான் தெரியாதா?

விரலில் இருந்த மோதிரத்தைச் சுழற்றியபடி அவனைப் பார்ப்பதும், வேறு எங்கோ பார்வையை அகற்றுவதுமாக நின்றிருந்தாள் அவள்.

அவள் அவனிடம் இப்படியா இருப்பாள்? பொருளற்ற கோபம் ஒன்று அவனுக்குள் கிளர்ந்துகொண்டு வந்தது. வாழ்வின் புது அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில், அதை அவளிடம் காட்டப் பிடிக்காமல் தலையை மட்டும் சிறிதாக ஆட்டினான்.

ஒரு வழியாகக் கணவனும் மனைவியும் வேனில் ஏறிக்கொண்டார்கள். ஜன்னலால் எட்டிப் பார்த்து, “வீட்டுக்குப் போனதும் போன் எடுங்க என்னம்மா.” என்று சொன்னவள், இவர்களின் வாகனம் எதிரில் வந்த வளைவில் திரும்பி மறையும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பது அனந்தனுக்குத் தெரிந்தது.

பேராதனைக்குள் இருந்து வெளியே வந்து, வவுனியா நோக்கிப் பிரதான வீதியில் வாகனத்தை ஏற்றும் வரையில் அமிர்தவல்லியின் புலம்பலைத் தவிர்த்து ஆண்கள் இருவரும் பெரிதாகப் பேசவில்லை.

இடையில் அனந்தனின் கைப்பேசியின் பற்றரி இறங்கிக்கொண்டு இருந்தது. சார்ஜரை எடுக்க டாஸ் போர்டை திறந்தவன், அதற்குள் நிரல்யாவுக்குக் கொடுத்த பரிசுப்பெட்டி இருக்கக் கண்டு ஒரு கணம் அசைவற்றுப் போனான். அதன் பிறகு அந்தப் பயணம் முழுவதிலும் அவன் பெரிதாகக் கதைக்கவே இலை.




கருத்திட

நாளைக்கு அடுத்த அத்தியாயம் வருமா என்று தெரியாது. அதனால் எதிர்பார்க்கதீங்க. கருத்திடும் அனைவர்க்கும் மிக்க நன்றி!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 4


இலங்கைப் பல்கலைக்கழகம் என்கிற பெயரில் இலங்கையின் முதலாவது பல்கலைக்கழகமாகக் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, பின்னர் பேராதனைக்கு இடம் பெயர்ந்து, பேராதனை நகரம் முழுவதிலும் அதன் பீடங்களும் நிறுவகங்களுமாகப் பரவிக் நிற்கிறது பேராதனைப் பல்கலைக்கழகம்.

சுற்றுலா பயணிகளைத் தனக்குள் சுருட்டிக்கொள்ளும் பேராதனை நகரத்தின் அழகு சொல்லி மாளாது. மெலிதான மலைப்பிரதேசத் தன்மையும், கலையாமல் கவிந்தே கிடைக்கும் கருமேகக் கூட்டங்களும், மரக்கூட்டங்களை மேவி நிற்கும் பனிப் புகாரும், பெரு மரங்களோடு பின்னிப் பிணைந்து காதல் மொழி பேசிக் கழித்திடும் பசும் பச்சைக் கொடிகளும், பல்கலையினூடாகச் சலசலக்கும் நதியோடையும், திரும்பும் திசையெங்கும் பூத்துக்கிடந்து போதையேற்றும் பலவர்ண மலர்களும் என்று பேராதனையின் அழகைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தப் பிரதேசத்தின் குளிர்மை நிரல்யாவின் உள்ளத்தினுள்ளும் புகுந்து, இத்தனை காலமாக அழுத்தி வைத்திருந்த எதிர்மறை உணர்வுகளை எல்லாம் அவளுக்குள்ளிருந்து வெளியேற்றி, புதுப்பிறப்பு எடுக்க வைத்திருந்தது.

இங்கே வந்து மூன்று மாதங்கள் ஓடியே போயிருந்தன. நாங்களும் ரவுடிதான் என்பதுபோல் நடந்த சின்ன சின்ன ராக்கிங், வெல்கம் பார்ட்டி என்று எல்லாம் முடிந்து, பல்கலைக்கழக வளாகம், தங்கும் விடுதி, அவற்றின் சுற்று வட்டாரங்கள் என்று பழகி, கற்கைகள் மெல்ல மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்திருந்தன.

முதல் இரண்டு வார இறுதிகளில் மட்டுமே அடுத்தடுத்து வவுனியா சென்று வந்தவள் அதன் பிறகு இங்கே நண்பர்களும் ஊரும் பிடிபட்டதும் மாதத்துக்கு ஒரு முறையாக வவுனியாப் பயணத்தைச் சுருக்கிக்கொண்டு ஊர் சுத்த ஆரம்பித்திருந்தாள். ஒவ்வொரு வாரமும் சென்று வருவது மிகுந்த அலுப்பைத் தருவதும் ஒரு காரணமாயிற்று.

கூடவே கட்டுப்பாடுகள் இல்லாத, பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் முடக்கி வைக்காத வாழ்வு தேனாய் இனித்தது. ஒரு சுதந்திர உணர்வு. இந்த உலகத்தைச் சொந்தக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டது போன்று, அவள் வளர்ந்துவிட்டது போன்று அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் வாழ்க்கை ரசிக்கும்படியாக மாறிற்று.

விடுதியின் ஒவ்வொரு அறையும் சின்ன சின்னக் கூடுகளாக அடைக்கப் பட்டிருந்தாலும் கூடியிருந்து கும்மாளமடிப்பது, ஒற்றைக் கட்டிலில் ஒன்பது பேர் சேர்ந்திருந்து சிரித்துப் பிரள்வது, தெரியாத மொழியைப் படு பிழையாகப் பேசி அதற்கொரு சிரிப்பு, சுவையே இல்லாத உணவு கூடப் புது அனுபவம் தந்தது.

இதோ இன்னும் சற்றுநேரத்தில் அவள் வகுப்பில் இருக்க வேண்டும். ஆயத்தமாகு என்று அறிவு அறிவுறுத்தினாலும் அவர்களின் விடுதியின் பால்கனி போன்ற அமைப்பில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

ஈரலிப்பான காற்று தேகத்தை நனைத்துப் போயிற்று. “ஸ்ஸ்ஸ்…” கட்டிக்கொண்டு நின்ற கைகளாலேயே இரண்டு பக்கமும் சூடு பறக்கத் தேய்த்து விட்டவளுக்கு அந்த பால்கனி, அதனைச் சுற்றி நிற்கும் அரைச்சுவர் இரண்டும் அவள் வீட்டின் மொட்டை மாடியை நினைவூட்டிற்று. கூடவே, அங்கே குடியிருக்கிறவனையும்.

அன்று, அவளின் பொருள்களைக் கொண்டுபோய் விடுதியின் முன் விறாந்தையில் அவன் வைத்துவிட்டு வருவதற்கிடையிலான இடைவெளியில் மின்னல் விரைவில் அவன் தந்த பரிசைத் திருப்பி வைத்திருந்தாள். உண்மையில் ஒருவிதக் குருட்டுத் தைரியம்தான். வைத்தபிறகு அப்படி நடந்திருக்க வேண்டாமோ என்று நினைத்தாள்தான். கண்டு பிடித்துக் கடினமான வார்த்தைகளை வீசி விடுவானோ என்று பயந்தாலும் வீம்பு விடவில்லை.

அம்மா அப்பாவை இழந்துவிட்டு வந்திருக்கிறான் என்று அறிந்தபோது அந்தச் சின்ன வயதில் ஆழமான அன்பு ஒன்று அவன்பால் அவளுக்குள் சுரந்திருந்தது. பிறத்தி ஆணாக, ஏன் ஆணாகக் கூட அவனைப் பிரித்துப் பார்த்ததில்லை. அப்படி ஒரு பிடிப்பு, பாசம், பற்று, அன்பு என்று அதற்கு எப்படி வேண்டுமானாலும் பெயர் வைக்கலாம்.

அவள் வாழ்க்கையை இரண்டாகப் பிரிப்பதானால் அதனை அனந்தனின் வருகைக்கு முன், அனந்தனின் வருகைக்குப் பின் என்று பிரிக்கலாம். அவ்வளவு மாற்றத்தை அவள் வாழ்வில் உண்டாக்கியவன்.

அப்படியானவனை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும் என்று அவனுக்கே தெரியும். அப்பாவின் வட்டித் தொழிலை எந்தளவில் வெறுக்கிறாள் என்றும் தெரியும். அதுவரை கூலிக்கு ஆட்களை வைத்து மிரட்டிக்கொண்டிருந்த அப்பா அவனையும் ஒரு அடியாளாக்கி வைத்திருக்கிறார். அதைச் செய்யாதே என்று சொன்னால் மாட்டானாமே!

அந்தக் கோபத்தில்தான் கதைக்காமல் விட்டாள். அப்போதாவது மாறுவான் என்று அவள் எண்ணியிருக்க, அவனோ தந்தையின் வட்டித் தொழிலை இன்னும் பெரிதாக்கியது மட்டுமல்லாமல் அவரை ஒரு தாதாவாக்கி தன்னையும் பயிற்சி பெற்ற ஒரு ரவுடியாக மாற்றிக்கொண்டு நிற்கிறான்.

அதற்கு அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்க வேண்டும்? மறைமுகமாக அவன் சொல்ல வருவது என்ன? அவளை விடவும் அவன் பார்க்கும் அந்த ரவுடித் தொழில் அவனுக்கு முக்கியம் என்பதுதானே?

இதில் பரிசைக் கொண்டுவந்து தருவானாம், அவள் வாங்க வேண்டுமாம். திமிர் என்ன அவனுக்கு மட்டுமே சொந்தமானதா என்ன? அதுதான் திருப்பி வைத்தாள்.

‘நான் மாறமாட்டேன் போடி’ என்று சத்தமே இல்லாமல் எப்படி அவன் அவளுக்கு உணர்த்துகிறானோ அதே போலத்தான் அவளும். நீ திருந்தாமல் உன்னோடு எந்தவித சமாதானத்துக்கும் நான் தயாரில்லை என்று அன்று காட்டினாள்.

ஆனால், அதற்கும் அந்த மண்டைக்கனம் பிடித்தவன் அவளைச் சும்மா விடவில்லையே!

அனந்தன் வந்து அழைத்துவருவான் என்று அமிர்தவல்லி அவ்வளவு சொல்லியும் கேளாமல், ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ என்பதுபோல, அவள் வாழ்வில் முதன் முறையாக அவளே இரயிலில் தனியாகப் பயணித்து, வவுனியாவில் சென்று இறங்கியபோது, அவனது அந்த அடர் சிவப்பு பஜிரோ அவளுக்காகக் காத்திருந்தது. அதில் சாய்ந்து நின்றபடி அவனும் இவளையே பார்த்திருந்தான்.

மென் முறுவலோடு கையைக் கட்டிக்கொண்டு, மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்து நின்றபடி அவள் சொல்கிறவற்றை ரசித்துக் கேட்ட அனந்தன் இவனன்று! இவன் வேறு யாரோ! இறுகிய தோற்றமும் கடின முகமும் பார்க்கிறவர்கள் நெஞ்சினுள் ஒருவித அச்சத்தை வரவைக்கிற இவனை அவளுக்குப் பிடிக்கவே இல்லை!

அவனை நெருங்க நெருங்க அவளை ஒருவிதப் பயமும் நடுக்கமும் சேர்ந்து வந்து ஆட்டியது. திரும்பி ஓடவா முடியும்? என்னவோ பெரிய துணிச்சல்காரியைப் போன்று அவனைப் பாராமல் அவனை நெருங்கினாள்.

அவள் கொண்டுவந்த பையை வாங்கிப் பின்னால் போட்டுவிட்டு அவன் பஜிரோவில் ஏறிக்கொள்ள பக்கத்து இருக்கையை அவளும் நிறைத்துக்கொண்டாள்.

அவனோடு கதைக்காமல் விட்ட பிறகு இங்கிருந்த காலத்தில் இந்த பஜிரோவில் ஏறுவதையும் நிறுத்தியிருந்தாள். இன்று இப்படி அவனோடு பயணிப்பது ஒருவித அந்நியத் தன்மையைத்தான் கொடுத்தது. என்னவோ உரிமையற்ற ஒருவரின் இடத்தில் அமர்ந்திருப்பது போன்றதொரு உணர்வு. இனி அவர்கள் இருவராலும் பழையமாதிரி பழகவே முடியாது போலும். உள்ளே வலித்தது. ஒரு நெடிய மூச்சுடன் அவள் நிமிர, வீதியோரமாக பஜிரோவை ஒதுக்கி நிறுத்தினான் அவன்.

ஏதோ அலுவல் போலும் என்று அவள் நினைத்து முடிக்க முதலே, பின்னால் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து பஜிரோவின் டாஷ் போடின் மேலே வைத்தான். அவளுக்கு ஒரு முறை திக் என்று இருந்தது. அன்று அவன் தந்து அவள் திருப்பி வைத்த அதே பரிசுப் பெட்டி. திருப்பி வைக்க முடியாத நிலையில் நிறுத்தித் தருகிறான். உள்ளம் கொதிக்க ஆரம்பிக்க முகத்தை வெளியே திருப்பிக் கொண்டவளுக்கு மெலிதாக வியர்க்காமல் இல்லை.

ஆனால், அவன் எதுவும் பேசவில்லை. ஏன் அப்படிச் செய்தாய் என்று கேட்டுக்கொண்டு வரவும் இல்லை. மாறாக, சீட்டை இன்னும் நன்றாக இழுத்துப் போட்டுகொண்டு, இலகுவாகக் கால்களை நீட்டிச் சாய்ந்துக்கொண்டு, கைகள் இரண்டையும் சீட்டின் தலையின் மீது கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டான்.

நிரல்யாவுக்குக் கோபம் வந்தது. நீ தரும் எதுவும் எனக்கு வேண்டாம் என்று தூக்கி எறியும் ஆவேசம் வந்தது. அதைச் செய்யும் துணிவற்று அவளும் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.

வந்து இறங்கிவிட்டேன் என்று சொன்ன மகள் இன்னும் வந்து சேரவில்லையே என்றெண்ணி அமிர்தவல்லிகூட அழைத்துவிட்டார். சுந்தரலிங்கம் கூட எங்கே நிற்கிறீர்கள் என்று அவனை அழைத்து விசாரித்திருந்தார். வந்துகொண்டிருக்கிறோம் என்றவன் அப்போதும் அசையவில்லை.

அதை அவள் எடுக்காமல் அவன் நகரப் போவதில்லை. வெளியே காட்டமுடியா சினமும் சீற்றமும் அவளுக்குள் பொங்கிற்று. அது ஆத்திரமாக மாற, விறுவிறு என்று அந்தப் பரிசைப் பிரித்தாள். அது ஒரு கைச்செயின். அன்றைக்கு அவள் கழற்றிக் கொடுத்ததற்குப் பதிலாக வாங்கியிருக்கிறான் என்று விளங்கிற்று. அது ஒற்றை செயினில் குண்டுகள் கோர்க்கப்பட்டது என்றால் இது மூன்று வரிசையில் ஓவல் வடிவிலான தங்கள் குண்டுகள் சேர்க்கப் பட்டிருந்தன. அந்த மூன்று வரிசையும் ஒற்றை செயினில் முடிந்திருந்தது. நல்ல மனநிலையில் இருந்திருக்க நிச்சயம் விழிகளை விரித்து ரசித்திருப்பாள். இப்போதோ அதன் அழகை உணராமல் பிரித்த வேகத்திலேயே கையில் அணிந்தும் கொண்டாள். அதன் பிறகுதான் பஜிரோவைக் கிளப்பினான் அனந்தன்.

எத்தனை திமிர் இவனுக்கு? அகங்காரம் பிடித்தவன். அவளுக்குள் அடக்க முடியாத ஆத்திரம் கிளம்பிற்று. அது கண்ணீரை உற்பத்தி செய்ய முயல, அவன் முன்னே அழுது விடவே கூடாது என்கிற பிடிவாதத்தோடு இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

வீட்டின் முன்னே கொண்டுவந்து பஜிரோவை நிறுத்தினான் அனந்தன். ஒருகணம் அசையாமல் அமர்ந்திருந்தவள் அவனைத் திரும்பியும் பாராமல், “இந்த நிமிசம் நீங்க நினைச்சதைச் சாதிச்சு இருக்கலாம். ஆனா, நீங்க செய்ற ஒவ்வொண்டும் உங்கள வெறுக்கத்தான் வைக்குது. இங்க இருந்து போகோணும் எண்டு நான் நினைச்சதுக்கு நீங்கதான் காரணம். இனி இங்க வரவே கூடாது எண்டு நினைக்கவும் வச்சிடாதீங்க.” என்றுவிட்டு இறங்கிப் போனாள்.

அப்படியே அமர்ந்துவிட்டான் அனந்தன். அவள் வீசிய வார்த்தைகளின் அதிர்விலிருந்து வெளிவர அவனுக்கு நிறைய நேரம் பிடித்திருந்தது. அடுத்தவாரம் அவள் போனபோதும் ஏற்றிச் செல்ல வந்திருந்தான்தான். அவ்வளவுதான். அவளை ஏற்றுவதையும் இறக்குவதையும் மட்டுமே தன் வேலையாகப் பார்த்துக்கொண்டான். இவள் நிற்கும் நாள்களில் கண்களில் படவே மாட்டான். வாசலில் நிற்கும் பஜிரோவை வைத்துத்தான் அவன் வீட்டில் நிற்கிறானா இல்லையா என்று கண்டுபிடிப்பாள் நிரல்யா.

அவன் பற்றிய எண்ணங்களில் திளைத்திருந்தவளின் கை, எப்போதும்போல மற்றக் கையில் கிடந்த செயினை வருடிற்று. ஒரு நெடிய மூச்சுடன் பல்கலைக்குத் தயாராகச் சென்றாள்.

*****

திரும்புகிற பக்கமெல்லாம் அடர்ந்த மரங்களின் கூட்டணி. அவற்றினோடு ஒரு நடை. அவளின் முன்னும் பின்னும் தொடர் வண்டியாய்ச் சலசலத்தபடி போகும் இளவட்டங்களின் உற்சாகக் குரல்கள். பிடித்திருந்த குடையையும் மீறி முகம் நனைத்துப்போன மெல்லிய சாரல் என்று ஏதோ ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்தபடி, பல்கலையை நோக்கி நடந்துகொண்டிருந்தாள் நிரல்யா.

திடீர் என்று மழை சடசடவென்று கொட்ட ஆரபிக்க, யாரோ ஒருவன் ஓடிவந்து அவள் தோளை உரசியபடி அவளின் குடைக்குள் புகுந்திருந்தான். “அம்மா!” சத்தமில்லாமல் அலறியவள் பக்கத்தில் வந்துகொண்டிருந்த தோழி சரண்யாவின் கையை இறுக்கிப் பற்றியிருந்தாள்.

கொஞ்ச நாள்களுக்கு முதல் வரை ராக்கிங் என்கிற பெயரில் வேறு பேயோட்டி இருந்தார்களே. அவளுக்கு வெகு நெருக்கத்தில் குடைக்குள் நின்றவனைக் கண்டு உயிரே போயிற்று.

அவளின் அலறலில் திரும்பிப் பார்த்தவன், அவள் நெற்றியில் இருந்த பொட்டினைக் கண்டுவிட்டு, “தெமலதா?” என்றான் அவளையே குறுகுறு என்று பார்த்தபடி.

அவன் தமிழா என்று கேட்டதே இனம் தெரியாக் கலக்கத்தை உண்டாக்க, “ஒவ்…ஒவ் அய்யே.(ஓம்… ஓம் அண்ணா.)” என்று உளறிக்கொட்டினாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“அய்யே?” என்றான் புருவங்களைச் சுளித்துக்கொண்டு.

‘அண்ணா எண்டுதானேடா சொன்னனான். அதுக்கு ஏன்டா இப்பிடிப் பாக்கிறாய்’ பயத்துடன் திரும்பிச் சரண்யாவைப் பார்த்தாள்.

“மகே நம சிசிர பண்டார. அய்யா கியான்னெபா!” என்றான் இறுக்கமான குரலில்.

அவன் சொன்னது விளங்காதபோதும் சொன்ன விதம் பயத்தைக் கொடுக்க மீண்டும் திரும்பிச் சரண்யாவைப் பார்த்தாள் நிரல்யா.

“அண்ணா எண்டு சொல்ல வேண்டாமாமடி. சிசிர பண்டார எண்டு பெயரைச் சொல்லட்டாம்.” என்று மொழி பெயர்த்தாள் சரண்யா.

“ஓகே சீனியர்!” என்று வேகமாக முடித்துக்கொண்டாள் அவள்.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “யண்ட!(நட)” என்றான் மற்றக் கையால் பாதையைக் காட்டி.

பலியாடு போன்று கூட நடந்தவளுக்கு அவனும் தன் குடைக்குள் வருவது ஒருவகை நடுக்கத்தை உண்டாக்கிற்று. இந்த மழை நின்று தொலையாதா என்று பொருமினாள்.

“நம மொகத?(பெயர் என்ன?)”

அவன் தோள்கள் தன்னோடு உரசிவிடாமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்தபடி, “நிரல்யா.” என்றாள்.

“நிரல்யா? லஸ்ஸன நம! (அழகான பெயர்)” என்று ரசித்துச் சொன்னவன், அங்கே அவன் நண்பன் ஒருவனைக் கண்டதும், “மகிந்த, பொட்டக் இண்டக்கோ!(மகிந்த, கொஞ்சம் பொறு!)” என்று சத்தமாகக் குரல் கொடுத்துவிட்டு, இந்தக் குடைக்குள் இருந்து அந்தக் குடைக்குள் தாவியிருந்தான்.

‘அடேய் குரங்குப் பயலே!’ என்று பல்லைக் கடித்தாள் நிரல்யா.

அன்றிலிருந்து அடிக்கடி அவள் குடைக்குள் டிக்கட் இல்லாமலே பயணித்தான் சிசிர பண்டார. அவளுக்கு முறைப்பதா, போடா என்று தள்ளிவிடுவதா என்று தெரியவில்லை. சீனியர், சிங்களவன் என்று எல்லாமே அச்சுறுத்தின.

அந்த நடைப்பயணத்தில் அவளாக வாயைத் திறக்கமாட்டாள். ஆனால், அவன் ஏதாவது அவளைப் பற்றிக் கேட்டுக்கொண்டே வருவான். எங்கே பிறந்தாள், என்ன படித்தாள், என்ன பிடிக்கும், அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்று அவளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை வாங்கிச் சரி பார்க்காத குறையாக அவள் பற்றிய அனைத்தையும் அறிந்துகொண்டான்.

அப்போது மட்டுமல்ல பல்கலையிலும் இருவரும் எங்காவது பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமைகையில் அவன் விழிகள் ஒருவிதப் பளிச்சிடலுடன் அவளை நோக்குவதையும் உணர ஆரம்பித்திருந்தாள் நிரல்யா.

“என்னடி, சீனியர் உன்னையே சுத்துறார்?” சரண்யா கண்களில் கேலி மின்ன வினவியபோது முறைத்தாள் நிரல்யா.

“அடியேய், நானே அடிவயிறு கலங்கி நிக்கிறன். சும்மா எதையாவது கதைக்காத!” என்றாள் உண்மையான பயத்தோடு.

*****

அன்று அவளுக்குச் சில புத்தகங்களிலிருந்து நோட்ஸ் எடுக்கவேண்டி இருந்தது. அவை லைப்ரரியில் இருப்பது அறிந்து, லைப்ரரிக்கு நடந்தாள்.

அந்த நீண்ட கொரிடோர், இங்கே நூலகம் அமைந்திருக்கிறது என்று சொல்வது போன்று அமைதியாக இருக்க, அந்த அமைதியே அந்தச் சூழலுக்கு ஒருவகை இதத்தைப் பரப்ப அதை ரசித்தபடி நடந்தவள், அங்கே ஆண்களும் பெண்களுமாக நின்றிருந்த ஒரு கும்பலைக் கண்டதும் ஒருகணம் நடையை நிறுத்தியிருந்தாள். சத்தம் வராதபோதும் கையிலிருந்த புத்தகத்திலிருந்து ஏதோ விவாதிக்கிறார்கள் என்று தூரப் பார்வையிலேயே தெரிந்தது. கூடவே, அவனையும் கண்டுகொண்டாள்.

அவன் அவளுக்கு முதுகு காட்டித்தான் நின்றிருந்தான். ஆனால், அணிந்திருந்த செக் செக் சேர்ட்டும், மெல்லிய நெடுநெடு என்ற தோற்றமும், கொலரைத் தொட்டு நின்ற சுருட்டை முடிகளும் அது அவன்தான் என்று சொல்லிவிட அவளுக்குள் காரணமற்ற ஒரு படபடப்பு. தன் பதற்றத்தை அந்தக் கும்பலிடம் காட்டாமல், சாதாரணமாக அவர்களைக் கடந்து, அடுத்து வரும் வாசலுக்குள் நுழைவது பெரும் காரியமாய்ப் பட்டது.

இப்படியே திரும்பி ஓடிவிடலாமா என்று நினைத்தாள். அதற்குள் அவளைக் கண்டுவிட்ட ஒருவன் அவசரமாகக் குனிந்து அவனிடம் என்னவோ குசுகுசுத்தான். அடுத்த கணமே விழிகள் இரண்டு ஆர்வத்தில் மின்ன, வேகமாகத் திரும்பி அவளைப் பார்த்த சிசிர,
“குட் மோர்னிங் நிரா!” என்று விரிந்த முறுவல் ஒன்றுடன் வணக்கம் சொன்னான்.

“ம்ம்!” பதட்டத்தில் என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் ம் கொட்டிவிட்டு, அங்கு நின்ற யாரையுமே பாராமல் அவள் அவர்களை வேகமாகக் கடக்க, அடுத்த நொடியே கொல் என்று எழுந்த பெரும் சிரிப்புச் சத்தத்தில் அவள் முகம் இரத்தமாகச் சிவந்து போயிற்று.

முகம் நிறைந்த சிரிப்புடன் அவன் பார்வை வேறு இவளையே தொடர்வதையும் பக்கப் பார்வையில் கண்டவளால் முகத்தை நிமிர்த்தவே முடியாமல் போயிற்று.

‘இவா பெரிய டீன். அதான் பதில் வணக்கம் சொல்லாம ம்ம் எண்டுட்டு வாறா. லூசு லூசு லூசு!’ என்று தன்னையே திட்டிக்கொண்டாள். விறுவிறு என்று லைப்ரரியின் இறுதிப் பகுதிக்கு வந்து நின்றவளுக்கு என்ன தேடி வந்தோம் என்பதே மறந்து போயிற்று.

மனத்தின் படபடப்பு ஓரளவுக்கு அடங்கும் வரையில் அப்படியே நின்றாள். அதன் பிறகுதான் புத்தகங்களின் பெயர்களை எழுதி எடுத்துக்கொண்டு வந்த துண்டினை எடுத்துப் பார்த்தாள். அவற்றை எங்கே போய்த் தேடுவது என்று அவள் விழிகளைச் சுழற்ற, “என்ன தேடுறாய்?” என்று பின்னிருந்து மெலிதாக ஒலித்தது அவன் குரல்.

வேகமாகத் திரும்பியவள், “ஆயுபோவன் சீனியர்!(வணக்கம் சீனியர்!)” என்றாள் இப்போது அவசரமாக.

கண்களில் சிரிப்புடன் ஒருகணம் அவளைப் பார்த்தவன், “என்ன தேடுறாய் எண்டு கேட்டேனே?” என்றான் இயல்பாய் ஆங்கிலத்தில்.

அது கொஞ்சம் அவளை இயல்பாக்க, தன் கையில் இருந்த துண்டினை அவனிடம் நீட்டினாள்.

அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து மூன்றாவது ராக்கில் இருந்த அந்தப் புத்தகங்களை எடுத்துக்கொடுத்துவிட்டு, “நாளைக்கு என்னட்ட இருக்கிற நோட்ஸ் எல்லாம் கொண்டுவந்து தாறன். கவனமாப் படிச்சுப்போட்டுத் திருப்பித் தரவேணும்.” என்றான் அவன்.

‘நீங்க எழுதி வச்சிருக்கிற சிங்களத்தில நான் முறுக்குத்தான் சுடோணும் சீனியர். படிக்கேலாது.’ இதை அவன் மொழியில் சொல்லும் வகை தெரியாமல் விழித்தாள் அவள்.

அவனுக்கு அது பிடிபடவில்லை போலும். “என்ன?” என்றான் கையையும் அசைத்து.

“எனக்குச் சிங்களம் தெரியாது.” ஆங்கிலத்தைத் துணைக்கழைத்திருந்தாள்.

“அட! ஓம் என்ன…” இடுப்பில் ஒற்றைக் கையை வைத்தபடி நின்று, பிடரியில் சுருண்டுகிடந்த குழல்களை ஒதுக்கிவிட்டபடி அவன் சொன்ன அழகு அவளை ஈர்த்தது. அவனையே பார்த்தபடி நின்றாள்.

“வேற வழி இல்ல. நீயாத்தான் படிக்கோணும்.” தோள்களைச் சிறிதாகக் குழுக்கிச் சிரித்தபடி சொன்னான்.

சரி என்பதுபோல் தலையை அசைத்துவிட்டுப் புறப்பட்டவளுக்கு அவன் மீது நல்லெண்ணம் முதன் முறையாக உதித்திருந்தது.

ஆனால், அடுத்து வந்த நாள்களில் அவள் எப்போதெல்லாம் குடையை விரிக்கிறாளோ அப்போதெல்லாம் அவனும் வந்துவிடுவதைக் கவனிக்க ஆரம்பித்திருந்தாள் நிரல்யா. அதில் அவளை ஒரு பயம் பிடித்துக்கொண்டது. அதைவிட, அவன் செய்கைகள் அவளே கவனிக்கும்படி இருக்கிறது என்கையில் அவளைச் சுற்றி இருப்பவர்கள்?

இதை வளர விடக் கூடாதே! என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு அன்றும் மழை வரவும் சரண்யாவின் குடைக்குள் புகுந்துகொண்டாள்.

இன்று என்ன செய்கிறான் என்று பார்ப்போமே! அவள் விழிகள் பளபளப்புடன் சுற்றிலும் அவனைத் தேடிற்று.

நான்கடிதான் நடந்திருப்பாள். உதட்டோரம் சிரிப்பில் துடிக்க, கையில் இருந்த கொப்பியைத்(நோட் புக்) தலைக்கு மேலே பிடித்துக்கொண்டு அவள் முன்னால் வந்து நின்றான் அவன்.

அவளுக்கும் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் அவள் தடுமாற, அவள் முதுகில் கொழுவியிருந்த பாக்கின் ஒரு பக்கத்தில் செருகியிருந்த குடையை எடுத்து விரித்தவன், அவள் கையைப் பற்றி அதற்குள் இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்திருந்தான்.

‘அடேய்ய்ய்!’ என்று அலறியவளுக்கு தன் மீதுதான் அத்தனை கோபமும். மண்டையை மறைத்தவள் மண்டை மீதிருந்த கொண்டையை மறைக்காமல் விட்டுவிட்டாளே!





கருத்திட

இலங்கைவாழ் அல்லது சிங்களம் தெரிந்த மக்களே!

கூகிள் ஆண்டவரின் உதவியோடுதான் சிங்களம் எழுதி இருக்கிறன். சின்ன வயதில படிச்சேன்தான். நேற்று என்ன சாப்பிட்டன் எண்டே மறந்திடும். இதில 20 வருசத்துக்கு முதல் படிச்சது மட்டும் நினைவிலையா இருக்கப் போகுது? அதனால், நான் ஏதாவது பொருள் மாறி வருவதுபோல் சிங்களச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தால் ப்ளீஸ் எனக்குச் சொல்லுங்க. அம்மா, இன்னும் சிலர் என்று சிங்களம் நன்கு தெரிஞ்ச ஆட்களின் உதவி இருக்குத்தான். ஆனா, தேவை படுற எல்லா நேரம் அவே பிரீயா இருக்கவும் மாட்டினம், எல்லாத்துக்கும் இன்னொருவரைத் தொந்தரவு செய்வதும் அழகாய் இராதுதானே.

கதை முடிந்தபிறகு நிச்சயம் அதை முறையாகச் சரி பார்ப்பேன் தான். நீங்களும் ஹெல்ப் பண்ணினால் எனக்கு இன்னும் கொஞ்சம் ஈசியாக இருக்கும்.

அவ்வளவுதான். கதை பற்றிக் கருத்திடும் அனைவருக்கும் நன்றி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 5


பாறை என்று தெரிந்தும் மோதாமலா இருக்கின்றன அலைகள்? அப்படித்தான் நானும்! காயப்பட்டுவிட்ட மனத்தோடு காத்திருக்கிறேன் உனக்காக!

அடுத்தநாளும் அவளின் குடைக்குள் புகுந்துகொண்டு சில கொப்பிகளை நீட்டினான் சிசிர. அவள் கேள்வியாக ஏறிட்டாள்.

“ஒரு தமிழ் பெடியன்ர நோட்ஸ். வச்சுப் படி!”

இந்தளவுக்கு அவளுக்காக யோசித்து மெனக்கெடுவான் என்று எதிர்பாராதவள், “தேங்க்ஸ்!” என்று முகம் நிறைந்த புன்னகையோடு வாங்கிக்கொண்டாள்.

பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த சரண்யா, “எங்களுக்கெல்லாம் கிடைக்காதே! கேட்டா ஒண்டும் இல்லையாம். ம்!” என்று முணுமுணுத்து நெடுமூச்செறியவும் அவனறியாமல் கையாலையே அவளை இடித்தாள் நிரல்யா.

அவள் சொன்னது விளங்காமல் அவன் கேள்வியாக ஏறிட, ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்திச் சமாளித்தாள். அவளைக் குறுகுறு என்று பார்த்தவன், “மை தீட்டினா உன்ர கண் ரெண்டும் இன்னும் வடிவா இருக்கும்!” என்றான் ஆங்கிலத்தில்.

அவள் திகைத்து நின்றுவிட, ஒற்றைக் கண் சிமிட்டலுடன் மகிந்தவின் குடைக்குள் பாய்ந்திருந்தான் சிசிர.

‘இவனுக்கு எவ்வளவு தைரியம்?’ அவன் முதுகை நன்றாக முறைத்தாள் நிரல்யா.

“நான் சொன்னா மட்டும் பேசுவாய். இப்ப விளங்குதா சீனியர் எங்க வாறார் எண்டு.” என்றாள் சரண்யா.

“பேசாம வாடி!” அவன் மீதான கோபத்தை அவள் மீது காட்டிவிட்டு விறுவிறு என்று வகுப்பை நோக்கி நடந்தவளுக்கு நெஞ்சில் மெல்லிய படபடப்பு.

இத்தனை நாள்களில் அவனை எண்ணிப் பயப்படத் தேவையில்லை, தவறானவன் இல்லை, முக்கியமாகப் பழக இனிமையானவன் என்று அறிந்து அவன் மீதான பயம் நீங்கியிருந்தாலும் சரண்யா சொல்வது போன்று வேறு ஒரு பயம் அவளைப் பிடித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தது உண்மைதான்.

அவளால் முடிந்தவரையில் அவனைத் தவிர்க்கத்தான் முயல்கிறாள். முடிய வேண்டுமே! ஒரே பல்கலையில் அவளின் சீனியராக, நன்றாகக் கற்கக்கூடிய மாணவனாக, அதைவிடவும் விளையாட்டு, டான்ஸ் என்று அத்தனையிலும் பங்கு கொள்கிற ஒருவனாக இருக்கிற அவனை அவள் மட்டுமே முயற்சித்து தவிர்க்க முடிவதில்லை. தன்னால் இயன்றதாக எந்தவித நம்பிக்கையையும் அவனுக்குக் கொடுத்திவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறாள்.

அவன் தந்த நோட்ஸ் உண்மையில் அவளுக்கு மிகுந்த உதவியாய் இருந்தது. அவளும் சரண்யாவுமாகச் சேர்ந்து இன்னும் ஆவலாகக் கற்க ஆரம்பித்திருந்தார்கள். குழுக்களாகப் பிரிந்து பீல்ட் வேர்க் செய்வது, பயிர்ச் செய்கைகள், அவற்றின் மீதான ஆராய்ச்சிகள், அதன் முடிவுகள் என்று படிப்பின் மீது தனியான ஆர்வம் தொற்றிக்கொள்ள, செமஸ்ட்டர் லீவுடனேயே வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு ஹொஸ்ட்டலில் இருந்தே படிக்க ஆரம்பித்தாள்.

*****

முழங்கைகள் இரண்டையும் மொட்டை மாடி சுவரில் ஊன்றி, பார்வையை அந்த வானத்தின் வெளியில் எங்கோ நிலைக்க விட்டபடி நின்றிருந்தான் அனந்தன். தன் மனத்தின் உணர்வுகளை, எண்ணங்களை, அவனுக்குள் மட்டுமே பூட்டிக் கிடக்கும் ரகசியங்களை எல்லாம் மற்றவர் அறியாமல் அவன் பகிர்ந்துகொள்வது அவனைச் சுற்றியிருக்கும் அந்தப் பரந்த வெளியில்தான்.

நிரல்யா அனந்தனோடு ஒட்டுதலாக இருந்த காலத்தில்கூட அவளின் கோபங்களையும் குமுறல்களையும் அவள்தான் அவனிடம் தங்குதடையின்றிக் கொட்டுவாளே தவிர்த்து இவன் எதையும் அவளிடம் பகிர்ந்ததில்லை. அப்படிப் பகிரத் தெரிந்ததில்லை.

பெரிதாக நண்பர்கள் என்று யாருமில்லை. அடகு கடை, வட்டி வசூலிப்பது, பணம் தராதவர்களை முறையாகக் கவனிப்பது, அது முடிந்தால் இந்த மொட்டை மாடி. இவ்வளவுதான் அவன் உலகம். இதில் யாரிடம் எதையென்று சொல்லுவான்?

கடைசியாக அவள் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளிலேயே சிக்குண்டு நின்றுகொண்டிருந்தான். வாழ்வின் புது அத்தியாயத்தில் காலடி எடுத்து வைக்கப் போகிறவளுக்குத் தன் அன்பைச் சொல்லும் விதமாகத்தான் அந்தச் செயினைக் கொடுத்தான். அவள் திருப்பி வைத்தது மிகுந்த சினத்தை உண்டாக்கிற்று. அந்தளவுக்கு வளர்ந்துவிட்டாயா நீ, முடிந்தால் என் கண்களைப் பார்த்து மறுத்துப்பார் என்கிற கோபத்தோடுதான் அப்படி நடந்திருந்தான். அவளானால் அவனால்தான் பேராதனைக்கே போனதாகச் சொல்லிவிட்டாளே!

சுற்றியிருந்த அத்தனை உறவுகளும் அவனைச் சுமையாக நினைத்த நேரத்தில் அழைத்து வந்தவர் சுந்தரலிங்கம். அன்று ஏன் அதைச் செய்தார் என்று இன்றுவரை அவனுக்குத் தெரியாது. கேட்டதுமில்லை. அவரின் தேவைக்காக என்று சொல்வதற்கு அவராக அவனைத் தொழிலுக்குள் இழுத்துக்கொண்டதும் இல்லை. அவனை எதிர்பார்த்ததும் இல்லை.

அப்படி அவர் எதிர்பார்த்திருந்தாலோ, மறைமுகமாக அவனை இழுத்துக்கொள்ள முயன்று இருந்தாலோ கூட அவனால் மறுத்திருக்க முடியாது. அப்படி இருக்க, அவருக்கு வெளியே ஆபத்துகள் உண்டு என்று தெரிந்து நுழைந்துகொண்டவனால் எப்படி வெளியே வர முடியும்? அவனை எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக வைத்திருக்கும் மாமாக்கு பதிலுக்கு என்ன செய்யப் போகிறான் என்கிற கேள்விக்கான விடையாகத்தான் அவருக்குத் தோள் கொடுக்கத் தொடங்கினான்.

அது வேண்டாம் என்கிறாள் அவர் மகள்.

அது ஒரு சுழல் போன்றது. அவனாகத்தான் அதற்குள் சென்று தன்னை ஒப்புக்கொடுத்தான். இனி அவனே நினைத்தால் கூட வெளியே வர முடியாது. அப்படி, அவன் வெளியே வந்தால் அதுவே கூடச் சுந்தரலிங்கத்துக்கும் அவனுக்கும் ஆபத்தாய் மாறலாம்.

சுந்தரலிங்கம் நினைப்பதைப் போலவே அவர்களையும் அவர்களின் தொழிலையும் விளங்கிக்கொண்டு, அவள் இறங்கி வர வேண்டும் என்றுதான் அவனும் விரும்புகிறான். அவளோ
இந்தப் பக்கம் எட்டியே பார்க்கவில்லை. நிச்சயம் படிப்பு இருக்கும்தான். இனி அவளை செமஸ்ட்டர் விடுமுறையில்தான் பார்க்கலாம். பார்த்து மட்டும்? விழிகள் எங்கோ நிலை குத்தியிருக்க இதயத்தில் ஒரு விதமாய் உயிரைக் குடையும் வலி. என்னவோ மனம் இப்போதெல்லாம் அடிக்கடி அன்னையைத் தேடியது. அவராவது இருந்திருக்கலாம். மீண்டும் மனத்தளவில் அனாதையாய் நிற்கிறான்.

என்னவோ அவனை உருக்குலைக்க முயலும் இந்த எதிர்மறை எண்ணங்கள் பிடிக்காமல் ஓடுபொறியில் (த்ரெட் மில்)ஏறி, அதற்குப் போட்டியாய் ஓட ஆரம்பித்தான்.


*****

பேராதனை இயற்கையாகவே அழகில் உச்சத்தைத் தொட்டு நிற்கும் ஊர். அதற்கு இன்னும் மெருகூட்டுபவை அங்கே அமைத்திருக்கும் பாலங்கள்.

கலைப்பீடத்தை வரவேற்கும் முகமாக, யானைத் தலையையும், சிங்கத்தின் உடலமைப்பையும் கொண்டு அமைந்த உருவங்கள் கம்பீரமாக, வெண்மை நிறத்தில் வீற்றிருக்கும் பாலம் கஜசிங்க பாலம்.

அதைப்போலவே பேராதனைப் புகையிரத நிலையத்தையும், சரசவி உயன புகையிரத நிலையத்தையும் இணைத்திடும் வகையில், மகாவலி கங்கையின் அதி உயர் மேற்பரப்பில் புகையிரதங்கள் பயணிக்கக்கூடிய தண்டவாளங்களால் அமையப்பெற்ற சாகசப்பாலமும் முக்கியமானது.

யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்து, கேம்பிறிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பை முடித்து, 1971 ஆம் ஆண்டு காலத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பேராசிரியராகவும், பின்னர் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றிய பேராசிரியர் துரைராசா அவர்களால் கட்டப்பட்டதுதான் அக்பர் பாலம்.

உண்மையில் ‘துரைராசா பாலம்’ என்று அறியப்படவேண்டியது இன்று அக்பர் பாலமாகப் புகழ் பெற்று நிற்கிறது.

அவரால் கட்டப்பட்ட அக்பர் பாலம், மகாவலி ஆற்றில், ஒற்றைத் தூணில் நிற்கும் அசாதாரண வடிவமைப்பைக் கொண்டு, நாட்டின் பழங்காலக் கட்டிடக்கலை மரபுகளை எடுத்துரைத்திடும் சிறப்பைப் பெற்று நிற்கிறது. இப்பாலத்தில் மனிதர்கள் நடந்திடவும், இரு சக்கரவாகனங்கள் பயணித்திடவுமே முடியும்.

இதன் பிண்ணனியில் மூடுபனியால் சூழ்ந்த ஹந்தானை மலைத்தொடர், சூரியனின் உதயத்திலும் மறைவிலும் தன் எழில் நிறைந்த காட்சியைக் காண்பவரின் கண்களுக்கு விருந்தளித்துக்கொண்டு இருந்தது.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom