You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ரமலான் புனித ரமலான்! – ஹமீதா( iஇதழ் 2)

ரோசி கஜன்

Administrator
Staff member

1543005960117.png

அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமாக வருகிறது ரமலான் மாதம். உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட வந்த ஒப்பற்ற திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனித மாதம் தான் இந்த ரமலான் மாதம். ஆன்மாவை உள்ளிலும் வெளியிலும் பரிபூரணமாக சுத்திகரிக்கிற ஒழுக்கத்தின் அடிப்படையிலான ஒரு வேள்விதான் நோன்பு.

நோன்பு என்பது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். இது இல்லாமல் இஸ்லாம் எனும் கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்பதை ஏற்காதவர் முஸ்லிமாக முடியாது.

“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ரமலானில் நோன்பு நோற்றல், ஜகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(புஹாரி:8)


நபிகளார் நவின்றார்கள்: ‘உங்களில் பலர் நோன்பு பிடிக்கின்றனர். ஆனால் பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவும் அவர்களுக்கு கிடைப்பதில்லை’. (நூல்: பைஹகீ)

‘ஸவ்ம்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘நோன்பு’ என்று பொருள். அதற்கு மூலப்பொருள் ‘தடுத்துக் கொள்ளுதல்’ என்பதாகும். அதாவது– உணவு, குடிநீர், உடல் இச்சை மட்டுமின்றி வீண் பேச்சு, வீண் பார்வை, வீண் கேட்பு என வீணான அனைத்தையும் தடுத்துக்கொள்வதற்குத்தான் உண்மையில் நோன்பு என்று பெயர்.

இதனால் தான் நபிகளார் கூறினார்கள்: ‘நோன்பு ஒரு கேடயம்’ என்று. நாம் அந்தக்கேடயத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. நமது இதயத்தில் இறையச்சம் வந்துவிட்டால் எந்த ஒன்றும் நமக்கு இலகுவான ஒன்றாகி விடும்.

பசித்தவருக்கு உணவளிப்பது – அவர் அனாதையான உறவினரானாலும், ஏழையானாலும் சரி; அது பெரியதோர் நற்பணியாகும்” என்று திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது.


தொழுகையை நிலை நிறுத்துங்களென்று சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஏழைகளுக்கு வழங்குங்கள் என்பதையும் சேர்த்தே வலியுறுத்துகிறது திருக்குர்ஆன். திருக்குர்ஆனை தந்த மாதம் இது. வசதி உள்ளோர் ஒவ்வொருவரும் ஏழைகளுக்கு வழங்கவேண்டிய ஜக்காத்தை கடமையாக்கியதும் இம்மாதம்தான். பசியை அறியும் பாடத்தைக் கற்றுத் தருவதும் இந்த மாதம்தான்.


அல்லாஹ் கூறுகிறான்: ‘எவர் எனது நல்லுபதேச (குர்ஆனிய வசன)த்தை முற்றிலும் புறக்கணிக்கிறாரோ நிச்சயமாக அவருக்கு நெருக்கடியான வாழ்க்கைதான் இருக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளில் அவனைக் குருடனாகவும் நாம் எழுப்புவோம்’. (திருக்குர்ஆன் 20:124)

‘தக்வா’ எனும் பயபக்தியையும், இறையச்சத்தையும் புனித நோன்பு நமக்கு பரிபூரணமாய் பெற்றுத்தருகிறது. ஒரு மனிதனுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் இறையச்சமும் ஒன்றாகும். இதுதான் அனைத்து நற்செயல்களுக்கும் அடிப்படையாகும். இது இல்லாமல் நமது எந்த நற்செயல்களும் ஏற்கப்படுவதில்லை. அத்தகைய இறையச்சத்தை நோன்பு நமக்கு தருகிறது என்பதால் அதைக் கடைப்பிடித்து நன்மைகள் பெற முன்வரவேண்டும்.

நோன்பு சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது. ஆசை இருந்தும், தேவை இருந்தும் உணவு மற்றும் பானம் இருந்தும் அவற்றை உண்ணாமல், பருகாமல் மனதைக் கட்டுப்படுத்தி பக்குவப்படுத்துகின்றது! இவ்வாறே கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையைப் போதிக்கின்றது. நோன்பு நாவையும், தேவையற்ற போக்குகளிலிருந்தும் தவிர்ந்திருக்கச் செய்து அதையும் கட்டுப்படுத்துகின்றது. இவ்வாறு உள்ளத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி பக்குவமாக வாழ நோன்பு பயிற்சியளிக்கின்றது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!” என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட நறுமணம்மிக்கதாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!’ (என்று அல்லாஹ் கூறினான்)” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். (புஹாரி: 1894)

அடுத்து இப்புனிதமிகு ரமலானில் இவற்றிற்கெல்லாம் ஆணிவேராக இருப்பது ‘லைலத்துல் கத்ர்’ எனும் புனித இரவாகும். நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களின்அறிவிப்புப்படி, ரமலான் முழுவதும் (ஏதோவொரு இரவில்) இப்புனித இரவு இருக்கிறது என்று நபிகளார் நவின்றார்கள். (நூல்: அபூதாவூது)

இந்த நபிமொழி நமக்கு சொல்லும் செய்தி, ‘புனித ரமலானில் இறுதிப்பத்துநாட்கள் மட்டும்தான் மிகமிக முக்கியமானது என்றெண்ணி முதல் இருபது நாட்களை வீணாக்கிவிடாதீர்கள்’.

புனித நோன்பின் மாண்புகளை பேணி நடந்தால் நிச்சயம் நாம் நமது வாழ்வில் மேம்பாடு அடைவோம் என்பது மட்டும் உறுதி.

புனித நோன்பைக் கடைப்பிடித்து, மனித மாண்பை போற்றுவோம்.
 
Top Bottom