You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வடிவேலுவின் ... நகைச்சுவை தந்த வாழ்வியல் மாற்றங்கள் – சிவரஞ்சனி (இதழ் 3)

ரோசி கஜன்

Administrator
Staff member
1543519654063.png

பொதுவாகச் சினிமாவில் ஹீரோ பேசும் பன்ச் டயலாக்தான் மக்களிடையே உலவி வரும். அதுவும் சில காலம் மட்டுமே.

ஆனால், ஒரு நகைச்சுவை நடிகரின் பெரும்பாலான வசனங்கள் மக்களின் நடைமுறை வாழ்க்கையோடு ஒன்றிக் கலந்துவிட்டது என்றால், அது இவரது வசனங்கள்தான்.

'ஆணியே புடுங்க வேணாம்', 'ஆஹான்', 'உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தாத் தக்காளிச் சட்னியா?', ‘ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடறது போல’, ‘இந்த உலகம் இன்னுமா நம்மள நம்பிகிட்டு இருக்கு’, ‘நல்லவன்னு சொல்லிட்டாங்க’ இவ்வாறு, நம் மக்களின் நடைமுறை வாழ்க்கையில் ஒன்றி விட்ட வசனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதிலும், குறிப்பாகத் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் 'வேணாம் வலிக்குது அழுதிருவேன்’ என்பதில் ஒரு அழகான உளவியல் வசதி உள்ளதாக எனக்குத் தோன்றும்.

நமக்கு முடியாதவற்றை இயலாது என்று ஒப்புக்கொள்ள நம் தன்மானமோ அல்லது ஈகோவோ இடம் கொடாது. ஆனால், நமக்கு இயலாத சூழலில், இந்த வசனத்தை உபயோகித்து நம் தன்மானம் காயப்படாமல் நகைச்சுவையுடன், இயலாது என்று கூறி வருகிறோம், நம்மில் பலரும்.

'நேத்து பத்து அடி அடிச்சாங்களா, இன்னைக்கு எட்டு அடி அடிச்சாங்கன்னா இரண்டு அடி நம்மளுக்கு லாபம்! அம்புட்டும் அவங்களுக்கு நட்டம்.' எனும் இந்த வசனம் நிச்சயம் உயர் பதவியிலுள்ளோரால் தொடர்ந்து அவமானப்படும் சூழலில் உள்ளோரை ஒரு நகைச்சுவையுடன் எளிதில் கடந்து போக உதவும் .

இவ்வாறாக, அவரது பல வசனங்களும் உடல் மொழியும் நம்மை அறியாமலே, நாம் வாழ்வில் கடக்கும் சிக்கலோ, துயரமோ அதை நகைச்சுவை உணர்வுடன் எளிதில் கடந்துபோக பழக்கப்படுத்தியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

"இடுக்கன் வருகால் நகுக" என்ற வள்ளுவரின் வாய்மொழி கேட்கும்போது, 'எப்படித் துன்பம் வரும்போது சிரிக்க முடியும்?' என்று தோன்றும். ஆனால், இன்று நடைமுறையில் பலரும் அதனைச் செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு வடிவேலு ஒரு முக்கிய காரணம் என்றே எனக்குத் தோன்றும்.

அவர் செய்த பெரும்பான்மையான நகைச்சுவை, தன்னைத் தாழ்த்திக்கொண்டு செய்த நகைச்சுவையாகத்தான் இருக்கும். அது மிக நுணுக்கமான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே கூற வேண்டும்.

நிறைய மக்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை, அடுத்தவர் என்ன எண்ணுவார்களோ என்பது பற்றிய கவலை, தன் சிறு குறையையும் அடுத்தவர் அறியாமல் பொத்திப் பாதுகாக்கும் தன்மை, இப்படி, நம்மை நாமே சுருக்கிக் கொள்ளும் குணங்கள் நிறைய உண்டு.

ஆனால், இவரது நகைச்சுவையும் வசனங்களும், ‘எல்லா மனிதர்களுக்குள்ளும் எல்லாமும் உண்டு; அவர்களும் நம்மைப் போன்றோரே’ என்ற உணர்வை, நாம் அறியாமலே நம்முள் விதைத்தது எனலாம்.

ஒரு நகைச்சுவையாளனின் பணி, மக்களைச் சிரிக்க வைப்பது. அதனைப் பார்க்கும்போதோ கேட்கும்போதோ மட்டும் அல்லாமல், நடைமுறை வாழ்வையே எப்போதும் ஒரு புன்னகையுடன் எதிர்கொள்ள நம்மைப் பழக்கிய வடிவேலு ‘ஆகச்சிறந்த நகைச்சுவையாளன்’ என்பதில் எனக்கு ஐயமில்லை.
 
Last edited:
Top Bottom