You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வற்றாப்பளை- கண்ணகி அம்மன் ஆலயம் - நிதனிபிரபு

ரோசி கஜன்

Administrator
Staff member
உப்புநீரில் விளக்கெரியும் அதிசயம்!

( வற்றாப்பளை - கண்ணகி அம்மன் ஆலயம்- நிதனிபிரபு)


இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில், முல்லையும் மருதமும் நெய்தலும் ஒருங்கே சூழப்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில், வற்றாப்பளைப் பதியில் வீற்றிருந்து அருளாட்சி புரிகிறாள் தாய்த் தெய்வமான கண்ணகி அம்மன்.


1542660306555.png1542660314004.png


முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களை அயற்கிராமங்களாகக் கொண்டுள்ளதோடு, நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

‘வற்றாப்பளை கண்ணகி’ என்றதும் நினைவில் வருவது “கடல் தண்ணீரில் விளக்கெரியும்” அதிசயத்துக்குச் சொந்தக்காரியான அண்டமெல்லாம் ஆள்கின்ற ஆதிபராசக்தியின் சொரூபமாய் வீற்றிருக்கும் அன்னையவளே!


நந்திக்கடலோரத்தில் வீற்றிருக்கும் அன்னையவள் வாசலில் கடல் தண்ணீரில் விளக்கெரியும் அதிசயம், காண்போர் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைக்கும். தண்ணீரில் விளக்கெரிவது எப்படி? என்கிற கேள்விக்குப் பதில், ‘அன்னையின் அருள்மழையே!’ என்பதைத் தவிர வேறில்லை.


1542660350961.png


மதுரையை எரித்த கண்ணகி, தெற்கு நோக்கிச் சென்றாளாம். அவள் வரும் வழியில், இருந்து இளைப்பாறிச் சென்ற இடங்களில் பத்தாவது இடமே நந்திக்கடற்கரை ஓரம். இதனால் பத்தாப்பளை(பத்தாவது பளை) என்று அழைக்கப்பட்ட இந்த இடம், பிற்காலத்தில் மருவி பற்றாப்பளை(பளை என்றால் தங்குமிடம் என்றும் ஒரு பொருள் உண்டு) என்றும், இறுதியில் வற்றாப்பளை என்றும் பெயர் பெற்றதாக ஐதீகம் உண்டு.


நந்திக்கடல் ஓரத்தில் உள்ள பரந்த நிலப்பரப்பில், சில ஆட்டிடையர் குலச்சிறுவர்கள் ஒரு முதுமை நிரம்பிய அம்மையைக் கண்டனராம். அந்த முதுமைமிக்க அம்மையார் தனக்குத் தங்குவதற்கு ஒரு குடிசை வேண்டும் என இடையர் குலச் சிறுவர்களிடம் கேட்டதற்கிணங்க, அவர்கள், ஒரு சிறு குடில் அமைத்துக் கொடுத்ததுடன் பொங்கலும் செய்து கொடுத்தார்களாம். மாலை மயங்கும் பொழுதில், அச்சிறுவர்கள், “குடிசைக்குள் விளக்கு எரிப்பதற்கு எண்ணெய் இல்லையே!” என மனம் வருந்த, “கடல் நீரில் திரி வைத்து விளக்கு எரியுங்கள்!” என்று அம்மூதாட்டி கூறினாராம். அவ்வாறே செய்த சிறுவர்கள் கடல்நீரில் விளக்கெரியும் அதிசயம் கண்டு மெய்சிலிர்த்து நின்றனராம்.

அது மாத்திரம் அல்லாமல், அம்மூதாட்டி, அந்தச் சிறுவர்களைப் பார்த்துத் தனக்குப் பேன் பார்த்துவிடும்படி கூறினாராம். அவர் தலை முடியை வகுத்த சிறுவர்கள் தலையெல்லாம் கண்களாக இருக்கக்கண்டு பயந்து அலற, ‘நான் ஒரு வைகாசித்திங்கள் வருவேன்’ என்று கூறி, அம்மூதாட்டி மறைந்தாராம். சிறுவர்கள் ஊருக்குள் ஓடிச்சென்று ஊர் மக்களிடம் விடயத்தைச்சொல்ல, ஊரே திரண்டுவந்து அம்மூதாட்டி இருந்த இடத்தை வணங்கி, ‘கண்ணகி அம்மன்’ கோவிலைக் கட்டினார்கள் என்பது செவி வழியாக மொழி வழியாகக் கூறப்படும் கதையாகும்.



வைகாசிப்பொங்கல்:


“அன்னை அவள் முற்றம் ஏறி, அவள் பிள்ளைகள் ஒன்று கூடி பொங்கலிட்டு, அன்னைக்கும் அமுது செய்து தாமும் அருள் பெற்று வீடு திரும்பும் புனித நன்னாள் இது.”


கண்ணகி அம்மன், அவ்விடத்தில் தரித்த தினமான வைகாசியில், பெளர்ணமித் தினத்தன்று அம்மனுக்குப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். ஆதிகாலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் இக்கோவில் பூசை வழிபாடுகளில் பிரதான பங்கு வகிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசிப்பொங்கல் விழாவுக்கு ஒருவாரத்துக்கு முன்பதாகவே, பொங்கல் நாளில், கண்ணகி அம்மனுக்கு விளக்கேற்றுவதற்கான கடல் நீரை எடுத்து வருவதற்கானச் சடங்குகள் ஆரம்பித்துவிடும்.

வற்றாப்பளைப் கண்ணகியை வழிவழியாக வைத்து வழிபட்டுத் தொண்டு செய்பவர்களே, முழு நாளும் உபவாசம் இருந்து விளக்கு ஏற்றுவதற்கான கடல் நீரை எடுக்கும் புனித கருமத்தைச் செய்வர். இதனைத் ‘தீர்த்தம்’ என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். சிலப்பதிகாரத்தின், சிலம்பு கூறல் பாட்டிலே வற்றாப்பளைப் கண்ணகிக்கும் முள்ளியவளை எனும் ஊரில் உள்ள காட்டாவிநாயகர் ஆலயத்திற்குமுள்ள தொடர்பு கூறப்பட்டுள்ளது.


“வைகாசித் திங்களில் வருவேன் ஒரு கிழமை காட்டா விநாயகர் கோவிலுக்கே”

என்ற அந்தப் பாடல் வரிக்கு அமைவாக, மரபு முறைப்படி தீர்த்தமெடுக்கும் புனிதப்பணி இடம்பெறுகிறது. ஆரம்பகாலத்தில் நந்திக்கடலிலேயே விளக்கேற்றுவதற்கான கடல்நீர் எடுக்கப்பட்டது. பிற்காலத்தில், நந்திக்கடலில் தண்ணீர் குறைந்தமையால், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை எனும் ஊரிலுள்ள தீர்த்தக்கரை என்னுமிடத்திலுள்ள கடலிலேயே தீபம் ஏற்றுவதற்கான கடல்நீர் எடுக்கப்படுகிறது.

தீர்த்தமெடுப்பவர் தீர்த்தமெடுக்கச் செல்லுமுன், பல கிரியைகளை செய்யவேண்டும். முதலில், தீர்த்தம் எடுப்பவரின் வாய் வெள்ளைத் துணியால் கட்டப்படும். இவர் மௌனமாகத் தீர்த்தக்குடத்தினை தோளில் வைத்தவாறு, சிலாவத்தை கிராமத்திலுள்ள தீர்த்தக்கரைக் கடலை நோக்கிச் சம்பிரதாயபூர்வமாகப் பறை முழங்க அழைத்துச் செல்லப்படுவார். அங்கு, தீர்த்தக்கரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மன் கோவிலில் மரபு முறைப்படிப் பூசைகள் நடைபெறும். முதலில் தீர்த்தக்குடத்திற்கானப் பூசைகள் நடைபெறும். தொடர்ந்து, கடலில் தீர்த்தமெடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பமாகும்.


தீர்த்தக்குடத்தைத் தோளில் தாங்கியவரை, மெய்சிலிர்க்கும் பறை முழக்கத்துடன் மணிகள் ஒலிக்கத் தீர்த்தக்கரைக்கு அழைத்துச் செல்வர். அங்கு தீர்த்தக்குடத்திற்கும், கடலுக்கும் தீபாராதனை செய்யப்படும். இவை முடிவுற்றதும் தீர்த்தம் எடுப்பவரை இருவர் இருபக்கக் கைகளிலும் பிடித்துக்கொண்டு, இடுப்பளவு ஆழமுள்ள பகுதிக்கு அழைத்துச்செல்வர். அத்தருணத்தில், கடல் கொந்தளித்துப் பேரலைகள் எழும்பும். இவ்வாறு அலை உயர்ந்து பேரலையாக வரும்பொழுது தீர்த்தக்குடம் வைத்திருப்பவரை, அருகிலுள்ள இருவரும் ஒருசில கணங்கள் நீருள் அமிழ்த்திப்பிடிப்பர்.


1542660418411.png 1542660426301.png

அவ்வேளையில் தீர்த்தக்குடம் நிரம்பியதும், மீண்டும் அவரைக் கரையிலுள்ள கோவிலுக்கு அழைத்து வருவர். இங்கு தீர்த்தக்குடத்துக்கான பூஜை வழிபாடுகள் நடைபெறும். பின்னர், தீர்த்தக்குடத்தைத் தோளில் ஏந்தியவாறு தீர்த்த யாத்திரை மீண்டும் ஆரம்பமாகும். இவ்யாத்திரை வரும் வழியெங்கும், பந்தல்கள் அமைத்து, நிறைகுடம் வைத்து, தேங்காய் உடைத்து அடியவர்களால் வரவேற்பு அளிக்கப்படும். வரும் வழியில் சிலாவத்தைக் கண்ணகி, ஊற்றங்கரை விநாயகர் ஆலயம் ஆகியவற்றையும் தரிசித்து, யாத்திரை இறுதியில் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தை வந்தடையும்.


இவ்வாறு கொண்டுவரப்படும் தீர்த்தம் புதிய மண்பானையில் ஊற்றப்பட்டு, அதன் வாய்ப்பகுதி வெள்ளைத்துணியால் கட்டப்பட்டு, மத்தியில் துவாரம் இடப்படும். அத்துவாரத்தினூடாகத் திரியிட்டு முதற்கடவுளான விநாயகனுக்குத் தீபம் ஏற்றப்படும். இவ்வாறு, ஒருவார காலத்திற்கு ‘முள்ளியவளை காட்டா விநாயகர்’ ஆலயத்தில் இடம்பெறும் கிரியைகள், வழிபாடுகளைத் தொடர்ந்து, எஞ்சிய தீர்த்தம், வைகாசி விசாகப்பொங்கல் தினத்தன்று வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கும் விளக்கேற்றப் பயன்படுத்தப்படும். இப்பொங்கல் காலத்தில், வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலில், ‘வளந்து நேருதல்’ எனும் நிகழ்வு நடைபெறும்.



பூசாரியார் ‘வளந்து’ எனப்படும் பிரதான பொங்கல் பானையை ஏந்திக் கலை ஆடுவார். பறைகள், சங்குகள், மணிகள் ஒலிக்க இக்கலை ஆட்டத்தின் இறுதி நிலையில், அப்பூசாரியார், அருள் உச்சம் பெற்றவராகி வளந்தினை தூக்கி எறிந்து ஏந்தி ஆடுவார். கையில் ஏந்தியாடும் அரிசியையும் அள்ளி விண் நோக்கி எறிவார். இவ்வாறு எறியப்படும் அரிசிகள் நிலத்தில் விழுவதில்லை. அடியார்களின் தலைகளிலும் விழுவதில்லை. அத்தனையும் ‘வளந்து’ பானைக்குள்ளே சேர்ந்துவிடும். அத்தோடு, வளந்து பானையில் சூத்திரதாரணம் செய்யப்பட்டு, பானையின் கழுத்தில் வெற்றிலை கட்டப்பட்டிருக்கும். இவை பொங்கலுக்காக எரிக்கப்பட்டிருக்கும் நெருப்பில் கூட எரிந்து சாம்பலாகாது, கட்டியபடியே காணப்படும். இது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

வைகாசி விசாகப் பொங்கல் உற்சவ காலத்தில், கண்ணகி வரலாற்றை சித்தரிக்கும் பல கூத்துகளும் கலை நிகழ்வுகளும் இடம்பெறுவதுடன், இலட்சக்கணக்கான அடியவர்கள் காவடி, கரகம், பாற்குடம், தீச்சட்டி ஏந்துதல் உள்ளிட்ட, பல நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதும் சிறப்பம்சமாகும்.


மேலும், வன்னி மன்னர்களால் பரிபாலிக்கப்பட்ட இவ்வாலயத்தை, போர்த்துக்கேயர் காலத்தில் போர்த்துக்கேய தளபதியாகிய நெவில் என்பவன் அழிக்க முற்பட்டபோது, ஆலயத்தில் நின்ற பன்னிச்சை மரம் தனது காய்களை வீசி ஆலயத்தை அழிக்கவிடாது போர்த்துக்கேயரை விரட்டி அடித்தது என்றும் ஒரு வரலாறு உண்டு. இவ்வற்புத வரலாற்றை ஆலயத்தில் இன்றும் படிக்கப்படும் ‘பண்ணிசை ஆடிய பாடற்சிந்து’ மூலமும் ஆலயத்திலுள்ள சிற்பங்கள் மூலமும் அறிய முடிகிறது.



1542660306555.png1542660314004.png1542660350961.png1542660418411.png1542660426301.png1542660484440.png
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
வழிபாட்டு நம்பிக்கை:

பத்தினித் தெய்வமான கண்ணகியின் காற்சிலம்பிற்கு, சின்னம்மை, பெரியம்மை, சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தியுண்டு என்பது மக்களின் பொதுவான நம்பிக்கையாகும். அதற்காக, கண்ணகி அம்மன் வழிபாட்டு முறையில், மரபு வழியாக, கோவில்களில் காவடி, பால் காவடி, பறவைக்காவடி, தீ மிதித்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்தி முறைகள் மக்களால் நம்பிக்கையுடன் காலங்காலமாக கைக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மன் தனது பத்தாம் பளையான வற்றாப்பளையில் இருந்துகொண்டு, தன்னைப் பக்தியுடன் வழிபடும் அடியவர்களுக்குச் சிற்றாடை இடை உடுத்திச் சின்னஞ்சிறு பெண்போல காட்சி தருகிறாள்.

இப்படியாக , ஏராளமான அற்புதங்களுக்குச் சொந்தக்காரியான வற்றாப்பளைக் கண்ணகி அம்மனை, பல இலட்சக்கணக்கான தமிழ், சிங்கள மக்கள் மிகுந்த பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.



(வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்)



வைகாசி நிலவு


பாண்டிய மன்னனின்
பிழையான தீர்ப்பினால்
மதுரையை எரித்துவிட்டு - தல
தரிசனங்களின்
தொடர்ச்சியாய்
பத்தாவது இடத்தில்
பக்குவமாய் இருந்ததால்
பத்தாப்பளையென்று
பெயரெடுத்தது நந்திக்கடலோரம் - எங்கள்
கற்புக்கரசி கண்ணகிக்கு
கோயிலுங் கண்டது.


நந்திக்கடலோரத்தில்
தண்ணியெடுத்துப்
பொங்கிநின்ற தனையனிடம்... தலைகடிக்கிறது
ஓர்தடவை
பார்மகனே என்றாளாம்
பார்த்தவன்
பதறியடித்து விழி
பிதுங்கி நின்றானாம்
தலையெல்லாம் ஆயிரங் கண்கள்
அதனால்தானே நாம்
கண்கள் கொண்ட மண்பானையில்
கற்புரம் ஏற்றுகிறோம் - எம்
சீமாட்டி திருவருளால்
திருக்கோவிலும் அமைத்துள்ளோம்.


ஆரம்பத்தில்
மடாலயமிது - இன்று
குருக்கள் முறைகொண்டு
கோபுர வாசலுடன்
வானுயர்ந்து நிற்கிறது
வாழ வழி தருகிறது.

ஆண்டு தோறும்
தொடர்ந்து வரும்
பங்குனித் திங்கள்களில்...
எண்ணில்லா மணிகளுடன்
மஞ்சத்தின் மீதேறி
பவனியுலா வருகிறாள்
பார் காத்து நிற்கிறாள்.


வருடா வருடம் கண்ணகிக்கு
வைகாசி விசாகத்தில்
வளர்ந்து நேர்ந்த திருக்குளிர்த்தி.
வைகாசி மாத
வளமான காற்றுடன்
நளினம் பாடும்
நந்திக்கடலின் ஓசையுடன்
மானிடத்து மேன் மகளுக்கு
மகத்தான திருக்குளிர்த்தி

எங்குமில்லா
உண்மையொன்று
இங்குள்ளது
வைகாசியில் வரும்
ஓர் திங்கள்
பாக்குத் தெண்டலெடுத்து
மறு திங்கள்
பெருங்கடல்த் தீர்த்தமெடுத்து,
காட்டா வினாயகரில் ஏழு
நாட்கள் காத்திருந்து
விசாகத்திங்களன்று
உலகிற்கே ஒளி கொடுக்கும்
உப்பு நீர்த்தீபம்
பக்குவமாய் எரிகிறது
பத்தாப்பளையில் எரிகிறது

முழுக்குடம் எடுத்தாலென்ன?
அரைக்குடம் எடுத்தாலென்ன?
எடுத்த குடம் எரிகிறது
திருக்குளிர்த்தி முடியும் வரை

இவளுக்கென்றொரு கூத்தும்
இருக்கிறது எம்மவரிடம்
கண்ணகி நாடகம்
கண்ணகி வழக்குரை
சிலப்பதிகாரம் - என்றெல்லாம்
சொல்லப்படும்
கோவலன் கண்ணகி கதை
ஈரடி மூவடி
வட மோடி தென் மோடி - பாங்கின்றி
‘முல்லை மோடி’ எனும்
மான்புப் பெயர்தாங்கி
தனித்துவமாய் தரணியிலே
அம்மனிவள் முற்றத்திலே
பத்துக்கம்பம் கொண்ட
வெள்ளைகட்டி
வட்டக்களரி அமைத்து
தீப்பந்த வெளிச்சத்தில்
நேர்த்தி வைத்து
பொங்கல் முடித்து
‘கோவலன் நாட்டுக் கூத்து’
ஆடப்பட்டு வருகிறது
பழைமை
பேணப்பட்டும் வருகிறது

நீதிக்காய் கோபங்கொண்டு
மதுரையை எரித்தவள்
எம்மையும் விடுகிறாளா?
திருக்குளிர்த்தி
திருப்தி அளிக்காவிடில்
சின்னம்மை
பெரியம்மையென்று
அக்கினியை எம் மீது
அள்ளி வீசுகிறாள்
அசைவம் விலக்கி
வேப்பிலை தடவி
நேர்த்தி வைத்து
வேண்டிக் கொண்டால்
வேதனை தராது
விலகியே போயிடுவாள்


முல்லைக்கொரு
நங்கையாயிருந்த
நந்திக்கடலோர ஆச்சிக்கு
பொங்கிப் படையலிட
பெருங்கடல் அலையாய்
பக்தர்கள் வருவாரே
முக்தி நெறி பெறுவாரே


உலகினில்
இதுவுமோர்
அற்புதம்.
பத்தாப்பளை
பக்தியின்
உறைவிடம்.


- வே. முல்லைத்தீபன்



 
Top Bottom