You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

வலியவளின் நேசம் – துஜிமௌலி (இலண்டன்) இதழ் 1

ரோசி கஜன்

Administrator
Staff member
1541948667520.png



“அம்மா செல்லம்க்கு பசிக்குது...” நான்கு வயது மகன் உரத்து அழைக்க, விரைந்து வந்தாள் பூவிழி.

“தோ... சாப்பாடு ரெடி! என் செல்லம்க்கு பசிச்சதா? அச்சச்சோ!” எனக் கூறியவாறே, மகனை தூக்கி மடியில் அமர்த்தி உணவு ஊட்ட ஆரம்பித்தவளுக்கு மனதில் அவனின் நினைவுகள்...

இதே மாதிரித் தானே அவனும்?
“பாப்பா, குட்டிக்கு பசிக்குது...நீ சாப்பாடு வாங்கித் தரவே இல்ல”
முகத்தைச் சுருக்கி அவன் சிறுபிள்ளை போல் சொல்லி அவள் முகம் பார்ப்பதும், “ எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கிறியே உனக்கு கடைல வாங்கி சாப்பிட என்னவாம்?” என, அவள் அவனைச் செல்லமாய் திட்டுவதும், அதற்கு, அவன் இவளிடம் கோபித்துக் கொண்டு அவளை இரண்டு நாள் ‘பாப்பா’ என்று அழைக்காமல் திரிவதும், நினைக்கையில் இன்றும் அவளது முகத்தில் பாசத்தின் சிரிப்பு.
“அம்மா தண்ணீ!” மகனின் குரலில் திரும்பியவள் அவனுக்கு தண்ணீரை கொடுத்து, சாப்பாட்டையும் ஊட்டி முடித்தவள், அவனை விளையாட சொல்லிவிட்டு, கணவனுக்கு காபி கலந்து கொண்டு மாடிப்படியேறினாள்.

“எழும்புங்க! இதென்ன இவ்ளோ நேரம் தூக்கம் வேண்டி கிடக்கு? இண்டைக்கு கோயிலுக்கு போகணும் எண்டு தெரியும் தானே?”

காபி கப்பை கட்டிலின் அருகில் உள்ள டீப்பாவில் வைத்தவாறே புரண்டு படுத்திருக்கும் கணவனின் முதுகில் ரெண்டு போட்டாள்.

“பேபி! வொய் பேபி? எதுக்கு இப்போ அடிக்கிற? இப்போ மாமாக்கு வலிக்குது! சோ.....” எனக்கூறியவாறே, வெடுக்கெனத் திரும்பி அவளை இழுத்து தன்மேலே போட்டுக்கொண்டவன், அவள் சுதாகரிக்கும் முன்னே அவளை இறுக்கி அணைத்திருந்தான்.

“ப்ச், இதென்ன விளையாட்டு? விடுங்க ப்ளீஸ்...” எனச் சொல்லிக்கொண்டே அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயன்றவளின் முகம் பார்த்தான், அவள் கணவன்.

“ என்னடா? ஏன் இப்ப ஒரு மாதிரி இருக்கிற? இந்த அஞ்சு வருசமா நானும் எத்தின தரம் சொல்லிட்டன், அவரை ஒருக்கா போய் பார் எண்டு. நீ கேக்கிறதில்ல. அவ்ளோ பிடிவாதம் உனக்கு!”

கணவனின் கூற்றில் மீண்டும் அந்த அவன் நினைவில்... அவள்

“ பாப்பா, நான் வேண்டாம் சொல்ல சொல்ல ஏன் இப்பிடி செய்து வச்சிருக்க? உனக்கு ஏதும் ஆயிருந்தா எனக்கு யார் இருக்கா பாப்பா? அப்பிடி என்ன பிடிவாதம் உனக்கு?”

அவனிடம் சொல்லாமல் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து அவள் ஆற்றில் நீந்தியது அறிந்து அவன் அவளை திட்டியபோது...



“பாப்பா” கணவனின் குரலில் மீண்டவள், அவன் தன்னை பாப்பா என்று அழைத்தில் சிரித்தாள்.
“என்ன எதுக்கு நீங்க பாப்பா சொல்லுறிங்க? ம்ம்ம்...” எனக்கேட்டு அவன் மார்பிலே சில அடிகளை இலவசமாக வழங்கியவளிடம்,
“ இது நல்லா இல்ல பொண்டாட்டி, அவர் மட்டும் தான் உன்ன பாப்பா சொல்லணுமா என்ன?” என, குறும்புடன் கேட்டான் கணவன்.
“எஸ்! அவனுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு?” எனக் கூறியபடியே, அவனைக் குளியல் அறைக்குள் தள்ளினாள்.
அவளின் கூற்றில் சிரித்தவன் கதவின் வழியே மீண்டும் எட்டி பார்த்து, “இப்பிடியே நினைச்சிட்டு இரு, அவர் எப்பவோ உன்னை மறந்து போயிருப்பார்.” எனக் கூறியவன் மனைவியின் முகத்தையே ஆராய்ந்தான்.

“ மறக்கட்டுமே எனக்கென்ன?” எனக்கூறி, கணவனை பார்த்துக் கண்சிமிட்டினாள் பூவிழி.

“ அப்போ நீ அவரப் பாக்க வர மாட்ட... அப்பிடித்தானே?” கணவனின் கேள்வியில் புன்னகைத்தபடி அறையை விட்டு வெளியேற, அவளையே பார்த்திருந்தவன் சிரித்தபடியே குளிப்பதற்குத் தயாரானான்.

“ எப்பவோ உன்னை மறந்து போயிருப்பார்!” கணவனின் குரல் மீண்டும் மீண்டும் காதினுள் ஒலிக்க, சமையலறைக்குள் நுழைந்து காலை சாப்பாடு செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாக சுடு எண்ணெய் கையில் தெறித்து விட்டது, பூவிழிக்கு.

“ஸ்ஸ்ஸ்” என, கையை உதறியபடியே குளிர் நீரில் பிடித்தவள் கண்ணில், எண்ணெய் பட்ட இடம் சிவப்பாக மாறி இருக்க அதையே பார்த்துக்கொண்டு இருந்தவள் நினைவடுக்கில், மீண்டும் அந்த அவனுடனான நினைவு...

“என்ன பாப்பா இது? பாத்து சமைக்க மாட்டியா? அப்பிடி என்ன அவசரம் உனக்கு? பாரு எப்பிடி சிவந்திருக்கு , பொறுப்பே இல்ல பாப்பா உனக்கு!”

திட்டியபடியே கைக்கு ஒய்ல்மென்ட் அவன் தடவி விட்டது ஞாபகம் வந்தது.

“பாப்பாவ மறந்திருப்பியா குட்டி?” வாய் விட்டே தனக்கு தானே கேட்டுக்கொண்டாள்.
“ அதெல்லாம் எப்பயோ மறந்திருப்பார்” எனக்கூறியபடி அவளின் கையில் சிவந்திருந்த இடத்துக்கு கிரீம் போட்டபடியே அவளைப் பார்த்து கண் அடித்து சிரித்தான், கணவன் சிவா.

கணவனின் குறும்பில் சிரித்தவள்,

“ நீங்க முதல் சாப்பிடுங்க, நான் போய் ரெடி ஆகிட்டு வாறன்“ கூறியவள், கணவனுக்கு காலை சாப்பாடை எடுத்து வைத்து விட்டு மகனையும் தூக்கிக் கொண்டு படியேறினாள்.

அரை மணி நேரத்தில் புடவை கட்டி கீழே வந்தாள். கணவன் தயாராக இருக்கவே குடும்பத்துடன் சாய் பாபா கோயில் நோக்கி புறப்பட்டனர்.

மீண்டும் அந்த அவனின் நினைவுகளின் வருடல்...

“ ஏன் குட்டி நீ சாய்பாபா கோயிலுக்குத்தான் போவியா?”

“ஏனோ தெரியல பாப்பா, ஆசிரமத்தில வளரும் போது எப்பவும் அங்க தான் கூட்டி போவாங்க , ஒருவேளை அதனாலோ என்னமோ சாய்பாபானா எனக்கு ஒரு விருப்பம்” கூறியவன் அவள் முகம் பார்த்து ,

“ஏன் பாப்பா என்ன விட்டு நீ போயிருவியா என்ன?” கரகரத்த குரலில் கேட்டவனை திரும்பி பார்த்தவள் முகத்தில் புன்னகையின் சாயல்.

“ யார்ட வாழ்க்கைல என்ன நடக்கும் எண்டு யாருக்குத் தெரியும் குட்டி? பாரு, நாடு விட்டு நாடு வந்து, அம்மா அப்பாவை இழந்து யாரோ நாலஞ்சு மனித மிருகங்களின்ர இச்சைக்கு ஆளாக இருந்த என்னக் காப்பாத்தி உன் சிலவிலையே படிக்க வைக்கிறாய்.

இது வரைக்கும் நான் நினைச்ச மாதிரி என் லைஃப் போகேல குட்டி, இப்ப மட்டும் நான் என்ன சொல்லுறது சொல்லு?” கூறியவள், அவனைத் திரும்பி பார்த்தாள்.

“சரிதான் பாப்பா.. யாருமே இல்லாம அனாதையா இருந்த எனக்கு உறவுனு வந்தவள் நீ தான் பாப்பா! உன்ன பாப்பானு கூப்பிடும் போது ஏதோ ஒரு உணர்வு வருது. சத்தியமா அது காதல் இல்ல பாப்பா.
ஆனா உன்ன பெரியாளாக்கணும், உனக்கு பிடிச்சதெல்லாம் செய்யணும்னு தோணுது! நட்பா பாப்பா இது? , ஒரு ஆணும் பெண்ணும் இப்பிடி நட்பா இருக்கலாமா என்ன?” என, அன்று ஆச்சரியமாக அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறாது சிரித்தபடி எழும்பி சென்றவள், இன்று ‘நட்புத்தான் குட்டி!’ மனசுக்குள்ளேயே சொல்லி கொண்டாள்.
கோயில் வாசலில் காரை நிறுத்தி விட்டு கணவன், மகனுடன் உள்ளே சென்று அவனின் பெயருக்கு அர்ச்சனை செய்து விட்டு, பிரகாரத்தை சுற்றி வந்து மண்டபத்தில் அமர்ந்து கொண்டனர்.

“ஏன் பேபி எப்பிடி அவரை விட்டு வந்த? இவ்ளோ பாசம் வச்சிருக்கிற, எதுக்கு உனக்கு இந்த வீண் பிடிவாதம் சொல்லு? ஒருதடவை போய் பாத்திட்டு வருவமா பேபி?”

ஆயிரத்தெட்டாவது தடவையாக கணவன் கேட்க, மீண்டும் அவள் சிரித்தாள்.

“சிரிக்காத! டுடே இப்பிடி சிரிச்சு மழுப்ப நான் விட மாட்டன். நீ எதாச்சும் சொல்லி தான் ஆகணும்”

கணவனின் கூற்றில் அவனை திரும்பி ஆச்சர்யமாக பாத்தவள் சற்றுத்தள்ளி விளையாடிக்கொண்டிருந்த மகனைப் பார்த்தபடியே சற்று நேரம் அமர்ந்திருந்தவளின் நினைவலைகளில் மீண்டும் அவன்...

“என்ன பாப்பா சொல்லுற?! என்ன விட்டு போகப் போறியா? சும்மா விளையாட்டுக்கு கூட இப்பிடிச் சொல்லாத பாப்பா... என்னால தாங்க முடியாது. நீ இல்லாம நான் எப்பிடி பாப்பா இருக்கிறது?, ப்ளீஸ் பாப்பா! இப்பிடியெல்லாம் பேசாத. இப்ப உனக்கு என்ன தான் ஆச்சு?” தவிப்புடன் கேட்டவன் ,அவள் முகம் பார்க்க, முகத்தில் எந்த விதமான உணர்வுகளும் இல்லாமல் அவனைப் பார்த்து கொண்டு இருந்தாள் இவள்.

பின், “இல்ல குட்டி, நான் போகத்தான் போறன். எந்த ஒரு காரணத்துக்காக சில இச்சைப் பிறவிகளிட்ட இருந்து என்னை காப்பத்தினியோ, அந்தப் பிறவிகளோட ஒப்பிட்டு உன்னக் கதைக்கும் போது என்னால அதைத் தாங்க முடியாது குட்டி.

உன்னையும் என்னையும் கல்யாணம் செய்யச்சொல்லி கட்டாயப்படுதிற இந்த சமூகத்துக்கு என்னால உரக்கச் சொல்ல முடியல, ‘எங்க ரெண்டு பேருடைய உறவும் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல முட்டாள்களே. ஒரு தூய அம்மா பிள்ளை உறவு எங்களுக்க இருக்கு! ஒரு ஆழமான பாசம் இருக்கு! அது காதல் இல்ல!’ எண்டு என்னால சொல்ல முடியல.”

“ சமூகத்துக்காகவா நாங்க வாழுறோம் பாப்பா? இன்னைக்கு நம்மளப்பற்றி பேசுற சமூகம் நாளைக்கு அடுத்தவனப் பற்றிப் பேசும். நாங்க பயந்து ஓடக்கூடாது பாப்பா.”
“சமூகத்தோட சேர்ந்தது தான் நம்ம வாழ்க்கை குட்டி.அடுத்தவன் எங்களைப்பற்றி பேச நாங்க இடம் கொடுக்கக் கூடாது, பேசுறவங்களுக்கு திருப்பி பதிலடி குடுக்க எப்ப என்னால முடியுதோ அப்போ நான் திரும்ப வாறன் குட்டி. இப்போ என்னை விடு.”
அன்று, பிரிந்து வந்த அக்கணம் தான் கூறியதை நினைத்துப் பெருமூச்சை விட்டவள், கணவனைத் திரும்பி பார்க்க, அவளின் கையை ஆதரவாக பிடித்து கொண்டான் சிவா.

“ இன்னும் உனக்கு அந்த மனோதிடம் வரேலையா பேபி?” ஆழ்ந்த குரலில் கேட்ட கணவனின் குரலில் தெரிந்த தவிப்பைக் கண்டு கொண்டாள் பூவிழி.

எங்கே இவன் தங்கள் உறவைத் தப்பாக எடுத்துக் கொள்வானோ என்று தான் எண்ணுவதை கணவன் சரியாக யூகித்து விட்டான் என அவன் குரலே அவளுக்கு தெரியப்படுத்தியது. அவனின் காதலிலும், நம்பிக்கையிலும் நெகிழ்ந்தாள் பூவிழி.

“எப்போ என்னைக் கூட்டி போறிங்க?” கேட்டவள் அழகாய் மலர்ந்து சிரிக்க, கண்ணில் வழியும் எல்லையற்ற காதலுடன், “செர்ப்ரைஸ்” சொல்லி சிரித்தான் பூ மங்கையின் மணாளன்!


 

ரோசி கஜன்

Administrator
Staff member
இரண்டு வாரம் கழித்து ,

“பேபி! பேபி! சீக்கிரம் ரெடி ஆகு, ஒரு இடத்துக்கு போறோம்! குவிக் குவிக்!”

அவசரப்படுத்திய கணவனுக்கு இசைந்தவாறே துரித கதியில் ரெடி ஆன பூவிழி, “ எங்க போறோம்? ஸ்க்கூல் போய் தம்பிய கூப்பிடனும்” எனக் கூற,

“அப்பிடியே கூட்டிட்டு போவோம். நீ குவிக்கா வா!” கிட்டதட்ட அவளை காருக்குள் தள்ளியவன் மகனையும் ஸ்கூலில் இருந்து அழைத்து கொண்டு ஒரு மிகப்பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

அந்நேரம் அவ்வீட்டின் உள்ளே ,

“அப்பா! ஏன்பா நாங்க நம்ம சொந்த ஊர விட்டு இங்க வந்தோம்?” மகள் நிகாரிகாவின் கேள்விக்கு,

“அப்பா இங்க நியூ ஆபீஸ் ஓபன் பண்ணப்போறன் தானே செல்லம்? அதுதான் இங்க வந்தது. ஏன் செல்லத்துக்கு இங்க பிடிக்கேல்லையா என்ன?” தன் மகளின் உயரத்திற்கு ஏற்றவாறு மண்டியிட்டு அமர்ந்து பதில் கூறினான் அரவிந்தன்.

தந்தையின் கேள்விக்கு வேகமாக தலையாட்டிய அச்சிட்டு “ரொம்ப பிடிச்சிருக்குப்பா!” எனகூறி தனது இரு கையையும் விரித்துக் காட்டியது.

குழந்தையின் அழகில் லயித்தவன் அவள் கன்னத்தில் முத்தமிட, தந்தையைக் கட்டிக்கொண்டு தானும் செல்லம் கொஞ்சியவள், மீண்டும் தந்தையிடம் ஏதோ கேட்கப் போக,

“ ஏய் வாண்டு...அப்பா ஆபிஸ் போய் வந்து உன் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லுவார், நீ இப்ப போய் விளையாடு!” எனக் கூறிக்கொண்டு வந்த மனைவி காவ்யாவைப் பார்த்து சிரித்தான், அரவிந்தன். பின் மகளிடம் மகளிடம் திரும்பி, “ நீங்க கேளுங்க செல்லம், என்ன கேக்கணும்?”

“அப்பா நேற்று பக்கத்துவீட்டு அங்கிள் அவங்க பொண்ண பாப்பான்னு கூப்பிட்டார். நீங்க ஏன்பா என்னை அப்பிடிக் கூப்பிடுறதில்ல?”

மகளின் கேள்வியில் மனைவியைத் திரும்பி பார்த்தவனின் பார்வையில் உண்டான வருத்தத்தைக் கண்டு கொண்டாள், காவ்யா,

“செல்லம்! அப்பாக்கு இப்ப வேலையிருக்கு, வந்து சொல்லுவார் சரியா?” எனக்கூற ,

“ இல்ல...இப்பவே சொல்லுங். இல்ல என்ன பாப்பான்னு கூப்பிடுங்க.” என அடம்பிடித்தது குழந்தை. சற்றே பலமாகவே சிணுங்கவே ஆரம்பித்திருந்தாள்.

அப்போதும், “என்னத் தவிர யாரையாச்சும் பாப்பா எண்டு கூப்பிட்டா, பாப்பாக்கு கெட்ட கோவம் வரும்” எனக் கூறுபவள் கண்முன்னே வந்து வெருட்ட, முகத்தில் புன்னகை அரும்பியது அரவிந்தனுக்கு.

இருந்தும், இன்னும் தனது அழுகையை நிப்பாட்டாது உச்சஸ்தாயியில் அழ ஆரம்பித்த மகளை சமாதானம் செயவற்காக, “பா.....” என ஆரம்பித்தவன்,

“நான் சொன்னது என்ன மறந்து போய்ட்டுதா? என்னைத்தவிர யாரையும் பாப்பா எண்டு கூப்பிட்டா பாப்பாக்கு கெட்ட கோவம் வரும் எண்டு சொல்லி இருக்கிறனா இல்லையா?” அதிகாரமாய் ஒலித்த குரலில் திடுக்கிட்டு, மனம் பரபரக்க வாசலைத்திரும்பிப் பார்த்தான்.

அங்கு, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடியே இவனை பார்த்து ஒற்றை இமையை தூக்கிய படி நின்றவளை கண்டதும், தான் பார்ப்பது கனவோ என்று தான் நினைத்தான்.

தலையை உலுக்கி மகளைக் குனிந்து பார்க்க அழுகையை நிறுத்தி இருந்த குழந்தை வாசலைப் பார்த்திருக்க, தடதடக்கும் இதயத்தோடு மனைவியைப்பார்க்க, அவளும் வாசலைத்தான் பார்த்துக் கொண்டு நின்றாள்.

கணவனின் பார்வையை உணர்ந்த காவ்யா, அவனின் காதல் மனைவி, இது கனவில்லை எனும் விதமாக அவனைப்பார்த்துத் தலையசைதாள்.

“ என்னடா, போனவ திரும்ப வந்திட்டாளே... என்ன எல்லாம் செலவு வைக்கப் போறாளோ எண்டு பயப்பிடுறியா குட்டி?” குறும்புக் குரலில் கேட்ட பூவிழியின் குரலில் திரும்பியவனின் கண்களில் தான் ஆனந்த கண்ணீர்.

“பின்ன? என் பாப்பா சாப்பிட்டே என் சொத்தை அழிச்சிடுவாளே! அப்போ நான் பயப்பிடத்தானே வேணும்” குரல் கரகரக்கக் கூறியவன் அவளையே பார்க்க, கண்களில் திரண்ட நீருடன் அவனை ஏறிட்டவள், பின்னால் திரும்பி பார்க்க, கணவனும் மகனும் அவளுடன் இணைந்து கொண்டனர்.

“இனி எங்கட பிள்ளையள் எங்கள மாதிரி இருக்கலாம் தானே குட்டி? எங்களால இந்த சமூகத்துக்குப் பதில் சொல்ல முடியும் தானே?”
பூவிழி ஏக்கத்துடன் கேட்க,

“நிச்சயமா பாப்பா” அரவிந்தனும்,

“யெஸ் பேபி” பூவிழியன் கணவனும்,

“கண்டிப்பா” காவ்யாவும் என, மூன்று குரல்கள் சேர்ந்து ஒலிக்கவும் அனைவரும் சிரித்துக் கொண்டனர்.

அந்நேரம், “ சொல்தது கேது பாப்பா! இப்பிதி செய்யாத!” எனும் குரலில் திரும்பியவர்கள், அங்கு, அவர்களின் மகனும் மகளும் சேர்ந்து விளையாடுவதைப் பார்த்ததும் மனம் முழுதும் சந்தோசத்துடனும் பரவசத்துடனும் அவர்களையே பார்த்திருந்தனர்.

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நடக்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண் பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து

பூமியை கட்டி நீ நிறுத்து!
 
Top Bottom