You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

‘ரமலான்’ – ஓர் நினைவுக்கோர்வை! – ஹமீதா (இதழ் 2)

ரோசி கஜன்

Administrator
Staff member
1543006727485.png

ரமலான் என்பது, இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதம் என்பதெல்லாம், ஓரளவு விவரமறிந்த பிறகு தெரிந்து கொண்ட மார்க்க விஷயங்கள். மழலை மொழி பேசிய காலத்தில், கலிமா ஷஹாதத் கற்றுக் கொண்ட காலத்திலேயே, நோன்பு வைக்கும் நிய்யத்தை எனது தாயார் கற்றுக் கொடுத்த ஞாபகம்.

நோன்பு நாட்களில் பெரியோர் நோன்பிருக்க, “நீங்க ஏன் சாப்பிடலை?” என்று கேட்டதும், “நான் நோன்பு வெச்சிருக்கேன்... நோன்பு வெச்சா சாப்பிடக்கூடாது...” என்று அன்னை சொல்ல, சாப்பிடப் பொதுவாக அடம் பிடிக்கும் நான், “நானும் நோன்பு வைப்பேன்...” என்று அடம் பிடித்து நோன்பு வைத்ததும் பசுமையான நினைவுகள். முதல்முறை நோன்பு வைத்தபோது, மதியம் முதலே ‘தண்ணீர்’ கேட்டு அழுததும் நோன்பைப் பாதியிலேயே விட்டதும் தனிக் கதை.

அதன் பிறகு ஒவ்வொரு ரமலானும் ஒவ்வொரு வகையான அனுபவங்களை விட்டுச் சென்றிருக்கின்றன.

பள்ளி விடுமுறைக்காக கோவை செல்ல, ‘சஹர்’ செய்துவிட்டு, கோவை எக்ஸ்ப்ரெஸ்-ஐ பிடித்து, எட்டு மணிநேரப் பயணத்தையும், ரயிலில் பேன்ட்ரியில் விற்ற... வடை பஜ்ஜி போண்டா வாசனையை, முகம்வாட சகித்த ரமலான், நாவைக் கட்டுப்படுத்தக் கற்றுக் கொடுத்தது; பள்ளியில் உணவு நேரத்தில் கலவையான உணவு வாசனையை புன்னகையுடனே கடந்து செல்லவும் பழக்கப்படுத்தியது.

கல்லூரிக் காலத்தில், விலங்கியல் மற்றும் வேதியல் செயல்முறைத் தேர்வின் போது, மிகுந்த சிரமத்துக்கு உள்ளான போதும், நோன்பைக் கைவிடத் துணிந்ததில்லை. என் இறைவனின் அருள் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தந்தது என்ற எண்ணம் இப்போதுமுண்டு.

மணமாகும் வரை, அன்னை அனைத்தையும் பார்த்துக் கொள்வார். ‘சஹர்’ நேரத்தில் திட்டிக்கொண்டே உருட்டி எழுப்புவார். நேராக வந்து சாப்பிட்டோமா, ‘நிய்யத்து’ வைத்தோமா... என்று போய்விடலாம். மிகப்பெரிய குடுமபத்தின் மூத்த மருமகளாகக் காலடி எடுத்து வைத்தபோது, கொஞ்சமல்ல... நிறையவே மிரண்டு போனேன் என்பது தான் உண்மை.

நானும் எனது இளைய நாத்தனாரும், சாம்பார் என்ற பெயரில் ஒரு கலவையைச் செய்து வைத்து, பிறகு மாமியார் அதை ரிப்பேர் செய்து எங்களைக் காப்பாற்றி விட்டது இனிமையான நினைவுகள் என்றால், அருகிலேயே குடியிருந்த பெரிய நாத்தனார், எனக்காக சஹருக்கு சுடு சாதம் எடுத்து வந்து பரிமாறியது நெகிழ்ச்சியான நினைவு. வீட்டின் மொத்த உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து நோன்பு திறப்பதும் இரவு நேர தராவீஹ் தொழுகை செய்வதும் அதுவரை நான் அனுபவித்தறியாத ஒன்று!

பிறகு சென்னை வந்த பிறகு, நானே அனைத்தும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில், கண்கலங்கி அழுத நிகழ்வுகளும் உண்டு. எதைச் சமைக்கும் போதும், இறைவனின் திருப்பெயரால், ‘பிஸ்மில்லாஹ்’ சொல்லி சமைப்பதாலேயே, உணவுக்கு தனியானதொரு மனமும் சுவையும் பரக்கத்தும்(அபிவிருத்தி) வருவதாக உணர்ந்திருக்கிறேன்.

பிறகு பிள்ளைகள்... எனது தாயார் எனக்குக் கற்றுக் கொடுத்தது போலவே, மழலை மொழி பேசும்போது தொடங்கி அனைத்தும் கற்றுக் கொடுத்து, ஏழெட்டு வயது முதலே முப்பது நோன்பும் பிடிக்கப் பழக்கி என்று எத்தனை எத்தனை இனிமையான சுவாரஸ்யங்களை ரமலான் என்னுள்ளே விதைத்திருக்கிறது!

எனது மகன் பிறந்ததும் ஒரு ரமலான் மாதத்தின் பத்தொன்பதாம் பிறையில் தான்! முதல் நாள் வரை நோன்பு பிடித்து, கணவரை தராவீஹ் தொழுகைக்கு அனுப்பி, இறையின் துணையுடனும் இபாதத்தின் நெருக்கத்துடனும் பயங்களைக் கடந்து, பிள்ளைச் செல்வத்தைக் கையில் ஏந்திய நினைவுகள் என்றென்றும் எனது நெஞ்சத்தினின்றும் அகலாதவை!

பிள்ளைகள் மிக இளையவர்களாக இருந்த போது, கணவர் வியாபார நிமித்தமாக தென் கொரியாவுக்குப் பயணப்பட, அவர் கிளம்பியதும் இங்கே நான் கடுமையான காய்ச்சலில் விழுந்ததும், உதவிக்கு எவருமில்லாத நிலையிலும், எனது இறைவனின் துணை கொண்டு நோன்பைக் கைவிடாது நிறைவேற்றியதும் மறக்க முடியாத நிகழ்வு.

இப்போது எனது மகளை உருட்டி எழுப்பி, “நாளைக்கு போற இடத்திலும் இப்படித்தான் தூங்குவியா?” என்று கேட்பதும், அதற்கு அவள், “அதெல்லாம் அங்கே கரெக்டா இருப்பேன். இங்கே வந்தா அப்பவும் இப்படித்தான்!” என்ற பதிலில் இனிமையான புன்னகையுடன் நான்!

ஒவ்வொரு ரமலானிலும் வீடு தேடி வரும் எளியோரின் இதயங்களில் அன்பின் வாயிலாகத் தடம் பதித்து, அவர்தம் சிறப்பான துஆக்களைப் பெற்று, உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியுடன் பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பைத் தருவதும் இப்புனித ரமலான் மாதமே!

இருமுறை ஹஜ்ஜின் பாக்கியம் கிட்டியிருப்பினும், ஒருமுறையேனும் ரமலானில் உம்ரா செய்யும் பாக்கியம் கிட்டவும், இப்புனித ரமலானில் இறையை இறைஞ்சிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் எனது துஆவைக் கபூல் செய்து கொள்வானாக! ஆமீன்!

சோதனைகளிலும் சாதனைகளிலும் மகிழ்விலும் வெறுமையிலும், எப்போதும் துணை நின்று காக்கும் ஏக இறைவனுக்கே புகழனைத்தும்! செய்யும் அமல்களின் நன்மைகளைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொடுக்கும் இப்புனித மாதத்தில், அனைத்து இஸ்லாமிய சமுதாயமும், உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், நல்வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போமாக! ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்!

(பி.கு: வாசகர்களின் புரிதலுக்காக உம்ரா என்ற வார்த்தைக்கான சிறு விளக்கம்:


வருடத்திற்கு ஒரு முறை, துல்ஹஜ் மாதம் பிறை 8 முதல் பிறை 13 வரை, இஸ்லாமியர்கள் தங்களுடைய ஐந்தாவது கடமையான புனித ஹஜ்ஜின் கடமையை, நபிகளார்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றுவது அனைவரும் அறிந்ததே. அந்த ஆறு நாட்கள் மட்டுமே ஹஜ் நிறைவேற்றக் கூடிய காலமாகும். புனித ஹஜ்ஜை நிறைவேற்றவென்று புனித மெக்கா செல்லும் எவரும், முதலில் உம்ரா நிறைவேற்றக் கடமைப்பட்டவர்களே. புனித மெக்காவின் எல்லை கடந்து சென்று மீண்டும் திரும்பும்போதும் ‘உம்ரா’ நிறைவேற்றுவது கடமையே! ஒருவர் புனித மெக்காவில் தங்கியிருக்கும் காலத்தில் எத்தனை உம்ரா வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். துல்ஹஜ் 8-13(ஆறு நாட்கள்) தவிர, வருடத்தின் எந்த மாதத்தில் புனித மெக்கா சென்றாலும் உம்ரா மட்டுமே நிறைவேற்ற முடியும். உம்ரா நிறைவேற்றவென்று தனியே வழிகாட்டுதல்கள் உள்ளன. ஹஜ்ஜுடன் ஒப்பிடுகையில் உம்ரா மிக எளிமையாக இரண்டு மணி நேரத்தில் நிறைவேற்றக்கூடிய அமல் ஆகும். ரமலான் மாதத்தில் நிறைவேற்றப்படும் உம்ராவுக்கு, ஹஜ்ஜின் நன்மைகள் எழுதப்படும் என்பது நபிமொழி. நன்றி!)


 
Top Bottom