• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

2.0 - உஷாந்தி கௌதமன் -இதழ் 7

ரோசி கஜன்

Administrator
Staff member
கடந்த பாகத்தில் ஆபத்தானதாகக் கருதி டிஸ்மான்டில் செய்யப்பட்ட சிட்டி மீண்டும் வந்து கபடி ஆடும் 2.0 எப்படி இருந்தது?

உண்மையில் முதல் 3D, அதிக பொருட்செலவு. ஒலிநயம் என்று எத்தனையோ முதல்களைத் தன்னுள் அடக்கி நேர்த்தியான ஒரு படத்தைக்கொடுத்த ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏனெனில், கோச்சடையான்களைக் கடந்து வந்திருக்கிறோமே நாம்! 3D தொழில்நுட்பத்தில் ஒரு நேரடித்தமிழ் படத்தைப் பார்த்தது பரவசமும் பெருமையும் தான்.

கதை எப்படி இருந்தது?

மிகக்கஷ்டமான கேள்வி.

செல்போன்கள் மாயமாக மறைவதில் ஆரம்பித்து முதல் பாதி வரை கொஞ்சம் விறுவிறுப்பாகச் சென்றது உண்மை. மனிதர்களை எதிர்க்கும் சூப்பர் நாச்சுரல் சக்தியாக பக்ஷிராஜன் தன்னுடைய பிரமாண்ட பறவை உருவத்தில் வந்து செல்லும் காட்சிகள் பிரமாண்டமாய் இருந்தன, பறவைகளை நேசிக்கும் ஒரு மனிதர், உயிர்களை நேசிப்பவர் என்றாலே மிக மென்மையான ஒரு மனிதர், செல்போன் அலைவீச்சுக்களால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சைச் சரியாக மதிப்பீடு செய்து கண்காணிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை யார் செவியிலும் விழாமல் இறுதியில் அவரது வீட்டின் அருகிலேயே ஒரு டவரும் வர கண்முன்னே அவர் நேசித்த பறவைகள் இறப்பதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார், டவரிலேயே! பிறகு, அவரது AURA இறந்த பறவைகளுடன் சேர்ந்து மாபெரும் கெட்ட சக்தியாக உருவாகி எல்லோரையும் கொல்கிறது!

அடிப்படையில் மிக மிக நல்லவரின் aura, வன்மம் கோபம் என்பன நீண்ட நாளாக அவரது ஆழ்மனதில் படிந்திருக்கிறது என்று கொண்டாலும் கூட சாதாரண சப்ஸ்க்ரைபர்களைப் பிடித்துக் கொல்வது எல்லாம் நம்பமுடியாமல் இருக்கிறது. அதாவது வில்லன் கதாப்பாத்திரம் வில்லனா நல்லவனா யாருக்கு நாம் சப்போர்ட் செய்யவேண்டும் என்று நமக்கே புரியவில்லை. aura என்பது நான் அறிந்த வரையில் விஞ்ஞான ரீதியாக இல்லவே இல்லாத ஒன்று. முற்றிலும் மனோதத்துவ ரீதியானதும் எண்ணங்களினால் உருவானதும் ஆகும். அது செல்போன்களைப் பிடித்து வைத்து, இறுதியில் மொத்த ரேடியேஷனையும் ஒன்றாக குவித்து இல்லாத செயல்களை எல்லாம் மின்காந்த அலைகளைப்போலவே செய்யகூடியதா என்று என்னால் நம்பமுடியவில்லை.

இரண்டாவது, செல்போன் ரேடியேஷனால் பறவைகளுக்கு பாதிப்பு உண்டா இல்லையா என்றே இன்னும் நிறுவப்படாத ஒன்று.

ஆகவே, இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத இரண்டை வைத்துக் கதை சொல்லும் போது அந்தத் திரைக்கதை மேலோட்டமானதா இருக்க முடியாதே.

அந்தப் பட்சியை அழிக்க பயன்படுத்தக்கூடிய கதிர்களைப் பற்றிப் படத்தில் ஒரு விஞ்ஞானி சொல்வாரே. அடப்போங்கடா என்று தோன்றி விட்டது. நாம் ETI எனப்படும் Extraterrestrial Intelligence ஐ ரேடியோ அலைகளாக விண்வெளிக்கு அனுப்பி செய்தியைச் சேகரித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அந்த அலைகளைப் பாசிட்டிவ் நெகட்டிவ் எனப்பிரிப்பதும் அதை வைத்து பட்சியின் கெட்ட aura வை அழிப்பதெல்லாம்! ஸ்டீபன் ஹோல்க்கிங் வன்மையாக எதிர்த்த ஒரு விடயம் அது! நாம் இந்தக் கதிர்கள் மூலம் சக்திக்காகத் தேடும் பிற உயிரிகளை பூமிக்குக் கவர்ந்திழுத்து பூமியின் அழிவுக்கு வழிவகுப்போம் என்று அவர் தெளிவாகச் சாடியிருப்பார்.

படத்தில் சுஜாதா இல்லாத வெறுமை நிச்சயமாய் தாக்குகிறது. ஜெயமோகன் தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். ஆனால், ரோபோ பஞ்ச் டயலாக் பேசுவதும், பாட்டுப்பாடுவதும், மேடையில் என் கடவுளே என்று பாராட்டு விழாவில் பேசுவதும் ஷப்பா முடியல ரகங்கள்.

சரி போகட்டும். பான்டசி சயன்ஸ் பிக்ஷன் வகைத்திரைப்படங்களில் கருதுகோள்களை வைத்துத்தான் படம் எடுப்பார்கள். ஆனால், அதை அப்படியே நம்பக்கூடிய விதமாக திரைக்கதையில் ஓட்டை இல்லாமல் படமாக்கினாலேயே வாசகனால் அதற்குள் லயித்து நிற்க முடியும். இங்கே தான் 2.0 சறுக்கியது என நான் நினைக்கிறேன். சரியாக அமைக்கப்படாத திரைக்கதை, ஒரே வகைக் காட்சிகள். க்ளைமாக்சில் பறவைகளையே பணயக்கைதியாகப் பிடித்து வைத்து வில்லனை ஜெயிப்பது மனதை நெருடுகிறது. எனக்கென்னமோ ஷங்கர் முதலில் இந்தப் பறவையை கற்பனை செய்து, இந்த பறவைக்கும் சிட்டிக்கும் தான் மோதல் என்று முடிவு செய்து விட்டு திரைக்கதை தேடியிருப்பார் போல தோன்றுகிறது.

ஆனால், இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை அழகாக வடிவமைத்ததற்கும், தேவையில்லாமல் அதிகமாகப் பேராசையுடன் நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றும் இயற்கைச் சமநிலையைக் குழப்பி இன்னொரு உயிரிக்கு ஆபத்து விளைவிப்பது என்ற கருத்தைச் சொன்னதற்காகவும் எதிர்காலத்தில் தமிழிலும் ஹாலிவூட் தரத்துடன் திரைப்படங்கள் வரும் என்பதற்குக் கட்டியம் கூறிய வகையிலும் 2. 0 வை பார்க்கலாம். குழந்தைகள், குடும்பத்துடன் நிச்சயம் ஒரு தடவை பார்த்து விடுங்கள்.


1547578883374.png

 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom