You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

7. வாழ்க்கை வாழ்வதற்கே!

ரோசி கஜன்

Administrator
Staff member
1542053341373.png

“உன்ர வீட்டிலதானே முருங்க சடைச்சுக்கிடக்கே! முட்ட வாங்கிச் சாப்பிடுறதும் முருங்க இலையைச் சுண்டிச் சாப்பிடுறதும் ஒன்டுதான். பகல்சாப்பாட்டுக்கு ஒரு பிடி சோறும் முருங்க இலைச் சுண்டலும் போதாதா என்ன? அதைச் செய்ய மாட்டீங்களே! கடனுக்கு மேலே கடன் பட்டு என்றாலும் பரவாயில்ல, வாய்க்கு ருசியாத் தான் சாப்பிடவேணும் என்றால்... ஹ்ம்ம்... அதுக்குச் சும்மா இருக்கக்கூடாது...முதுகொடிய...” மூச்சு விடாது படபடத்தாள் செல்வி.

“போதும் நிப்பாட்டு...!” செல்வியின் மாடிவீட்டின் முன்வாயிலோடு இருந்த படியில் அமர்ந்திருந்த மலர், விசுக்கென்று எழுந்தாள்.

“இல்லாக் கொடுமையில உன்னட்ட வந்து கேட்டன் பார், என்ர புத்திய செருப்பால அடிக்க வேணும்.”

தன் தலையில் இரண்டு அடி அடித்துக்கொண்டவளுக்கு துக்கத்திலும் கோபத்திலும் தேகம் நடுங்கியது; பசியிலும் தான். காலையில் தேநீர் என்று குடித்த வெறும் சாயத்தண்ணி இன்னும் நாக்கில் கசந்து குமட்டியது.

‘எனக்கே இப்படி என்றால் பள்ளிக்கூடம் போற பிள்ளைகளுக்கு...’ ஐந்து பிள்ளைகளும், பசியில் சோர்ந்த அவர்களின் முகங்களும் அவளின் மனக்கண்ணில்!

சூடாகக் கரைகடந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டே கோபமாகப் பார்த்த தங்கையை உற்று நோக்கினாள், செல்வி.

அவள் மனதுள் பரிதாபம் ஊற்றெடுத்தது தான். அதற்காக?

‘இன்றைக்கு நான் சொல்ல இல்ல என்றால் யார் சொல்வது? கடன் என்று கையேந்தி கையேந்தி நன்றாகவே பழகீட்டினம். முதல் தடவைக்குத் தானே தயக்கம், வெட்கம் எல்லாம். ‘பிறகு தாறேன், பத்து நாளில தாறன் என்றால் எதை வைத்துத் தருவீனமாம்? கடன் கொடுத்தவேன்ட வசவுகளை நானும் தானும் கேட்கிறன். சொத்தியா முடமா? ஏன் இந்தப் பிழைப்பு? இன்றைக்கு விடுறதில்ல.’ மின்னலாக மனம் முணுமுணுக்க, தங்கையை நெருங்கினாள், அவள்.

“இங்க பார் மலர், கோபப்படாமல் நான் சொல்லுறதக் கேள்!”

“நீ ஒண்டும் சொல்ல வேணாம். கூடப் பிறந்தவள் நல்லா இருக்கிறாள் என்றுதான் உன்ர வீட்டுப் படியேறினன். நீயோ வாய்க்கு வந்தபடி எத்தன சொல்லுறாய்? இதேபோலத்தான் பெரியக்காவும் சொன்னாள். ‘காசு இல்லாதவள் ஐஞ்சு பிள்ளை பெற வேணுமா?’ என்று கேட்டுட்டாள். அவளுக்கு ஒரு பிள்ளைக்கு பிறகு பிள்ளையில்லை என்று என்னில எரிச்சல். அது மட்டுமா சொன்னாள்? ‘சரி, வசதி இல்லையோ கான்வென்ட் படிப்பு எதுக்கு? படிச்சது காணும், பெரிய மகள்களை எங்காவது வேலைக்கு அனுப்பு’ என்று சொல்லீட்டாள். அதைச் சொல்ல அவள் யார்? அதுக்குப் பிறகு, அவள் வீட்டு வாசல் படியை நான் மிதிக்க இல்ல. இனிமேல்பட்டு உன் வீட்டுக்கும் வர மாட்டன்.” தொண்டை நரம்புகள் புடைக்க, கிட்டத்தட்ட கத்தினாள் மலர்.

காலையில் எழுந்து அத்தூரமிருந்து எவ்வளவு நம்பிக்கையாக நடந்து வந்திருப்பாள். சகோதரி என்ற நம்பிக்கையில் தானே? என்னவோ மூன்றாம் மனிசி போலல்லவா கதைக்கிறாள்.

‘ஒரு காலத்தில நான் நல்லா இருக்கேக்க இவளவையளுக்கு எவ்வளவைச் செய்திருப்பன். மறந்திட்டாள்கள்.’ எரிச்சலோடு குமுறியது அவளுள்ளம்.

“ஐயோ மலர்! இதெல்லாம் நீ இப்படி கஸ்டத்தில கிடக்கிறாய் என்ற கவலையில சொல்லுறதுதான். வார்த்தைக்கு வார்த்தை குற்றம் கண்டு பிடிக்கிறதிலேயே குறியா நிக்கிறாய். சொல்லுற நல்லதுகளை காதில வாங்கிறதே இல்ல. உன்னைபோலவேதான் உன் புருஷனும். அதுதான் இந்தக் கஷ்டம். ஊருலகத்தில கஸ்டப்படுறவன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நல்லா வர, நீங்க மட்டும் இருந்ததை விட கீழ்நிலைக்கு போறீங்க...” தானும் குரலை உயர்த்தினாள் செல்வி.

“இங்க பார், உங்களுக்கு என்னிலும் என்ட குடும்பத்திலும் பெரிய அக்கறை தான். நான் ரெண்டு வயதில காது குத்தீட்டன். கதை விடாத. காசு இல்லையோ இல்ல என்று சொல்லு. அதைவிட்டுட்டு நான் என்ன சாப்பிடவேணும், எப்படி வாழவேணும் என்று புத்தி சொல்ல வராத.” களைப்பில் வதங்கிய அவள் முகத்தில் அத்தனை கோபமும் எரிச்சலும்.

‘அப்படி என்ன கேட்டன்? ஐயாயிரம் இருந்தால் தா, அடுத்த மாதம் தாறேன் என்றுதானே கேட்டன். ஒரு கணம் தாமதிக்காமல் இல்லை என்று சொல்லிப்போட்டாள். புருஷன் வெளிநாட்டிலிருந்து உழைத்து அனுப்ப அனுப்ப, மாடி வீடு கட்டி காசுக்கு மேல இருக்கிறவளுக்கு பிச்சைக்காசு ஐயாயிரம்! மனம் இல்ல. அதை மறைக்க என்னைக் குறை சொல்ல வந்திட்டாள். தானும் பிள்ளைகளும் இறைச்சியும் சோறும், நானும் பிள்ளைகளும் முருங்கை இலையும் சோறும்.’

கடுகதியாய் மனம் அலற, வெறுப்போடு சகோதரியைப் பார்த்தாள் மலர்.

“காசு பணம் இருந்து என்ன பயன்? நல்ல மனம் வேணும்...ச்சே!

பணம் இன்றைக்கு இருக்கும் நாளைக்கு போகும். என் நிலை உனக்கும் வரலாம், நினைவில் வைத்திரு!”

வெறுப்போடு மொழிந்துவிட்டு இரண்டடி எடுத்து வைத்தவள், “மரத்தை நட்டவன் தண்ணி ஊற்ற மாட்டனா என்ன? எங்களைப் படைச்சவன் படியளப்பான்...”

தனக்குத் தானே சொன்னபடி, நடையில் வேகம் கூட்டி முன் வாயிலைத் திறந்தாள்; மனதிலோ, வேறு யாரிடம் கடன் கேட்கலாம் என்ற சிந்தனை.

“அது சரி, நீயும் உன் புருஷன், பிள்ளைகளும் மரங்கள் தானே? வச்சவன் தண்ணி ஊற்ற!” செல்வி வெடுக்கென்று சொல்ல, விசுக்கென்று நின்று முறைத்தாள் மலர்.

“இங்க பார், என்னைப் பற்றிக்கதை...உன்னோடு பிறந்த குற்றத்துக்காகவும் உன்னட்ட கையேந்த வந்ததுக்காகவும் பொறுத்துக்கொள்வன்; என் புருஷன், பிள்ளைகள் பற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் நல்லா இருக்காது சொல்லீட்டன்.”

சகோதரியை நோக்கி ஆட்காட்டி விரல் நீண்டிருந்தது. விழிகளின் வீச்சில் அக்கினி.

வயிறு காந்த வந்தவளோடு வீண் பரிகாசம்!

“ஏய் மலர்! முதல் நான் சொல்ல வாறதைக் கொஞ்சம் காது குடுத்துக் கேள் பாப்பம்! இப்பிடியே வெடுக் வெடுக்கென்று கோபப்பட்டுப்பட்டு நீ பெற்ற பிள்ளைகளின்ட வாழ்க்கையை வீணாக்க நீயே வழி செய்யாத.

மரத்தை நட்டால் பார்த்து பார்த்து தண்ணி ஊற்றவேண்டியது நட்டவனின் கடமை. ஏனென்றால் அது மரம். ஆனால், நீ? மரமாடி? மனிஷிதானே? படைச்சவன் படியளிப்பான் என்றிட்டு பேசாமல் இருந்தால் சரியா? உன்னைப் படைச்சவன் மூளையுள்ள மனிசியாப் படைச்சிருக்கிறானே. உன் வீட்டு நிலையை யோசிச்சு ஒரு முடிவெடு! இல்லையோ...உன்னோட சேர்ந்த மற்றவர்கள் சொல்லுற நல்லதைக் கேள்.

ராஜாவுக்கு எப்ப வேலை போச்சு? வான் ஓட்டினவர் இனிமேல் கடனோ உடனோ பட்டு சொந்தமா வான் வாங்கித்தான் ஓட்டுவன் என்றால்... கையில ஐஞ்சு சதமில்லாமல் இதென்ன கூத்து? நீயே கொஞ்சம் யோசியேன் மலர்.





 

ரோசி கஜன்

Administrator
Staff member
சரி, அவர்தான் தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று திரிஞ்சால், நீ என்ன செய்யிறாய்? வீட்டைச்சுற்றியுள்ள கடைகளில் எல்லாம் கடன், அறிந்தவர் தெரிந்தவர் எல்லாரிட்டையும் கடன், அதுவும் தவணை சொல்லியல்லோ கேட்கிறாய். எத்தனைக்கென்று இப்படியே இருப்பாய் சொல்லு பாப்பம்?

உன்ர ஐஞ்சு பிள்ளைகளையும் கொஞ்சம் யோசிச்சுப்பார். அவையளுக்கு நீங்க காட்டுற வழி இதுதானா?”

கண்கள் கலங்க படபடவென்று கொட்டினார் செல்வி.

“என்ன நீ? விட்டால் நீட்டுக்குச் சொல்லிக்கொண்டே போறாய்? இப்ப என்ன சொல்ல வாறாய்? நாங்க இப்படியே இருந்திருவம், வாங்கின கடனை தரமாட்டோம் என்றா? இங்க பார், எல்லாம் எழுதி வச்சிருக்கிறன் தாயே , சாகமுதல் தந்திட்டுதான் சாவன்.”

“வாயில போட்டன் என்றா! நான் என்ன சொல்லுறன், நீ என்ன கதை கதைக்கிறாய்?” சகோதரியைக் கடிந்து கொண்டாள், செல்வி.

“ராஜாக்கு வேலை கிடைக்கவில்லையே என்று நொந்து கடன்பட்டுக்கொண்டு திரியாமல் ஏதாவது செய்து கொஞ்சம் உழைக்கிற வழியைப் பாரன் என்று சொல்லுறன்.”

தமக்கை இப்படிச் சொன்னதும் மளுக்கென்று கண்ணீர் வழிய வெறித்தாள் மலர்.

‘உழைக்கிறதா? நானா? பத்தாம் வகுப்போடு படிப்பை நிப்பாட்டிப்போட்டு...காதலிச்சுக் கலியாணம் செய்து வரிசையாப் பிள்ளைகளைப் பெத்தது மட்டும்தான். இதில என்ன வேலை செய்து எதையென்று உழைக்கிறது?” தன்மீதே வெறுப்பும் கோபமும் அவளுக்கு!

சட்டென்று அடங்கிவிட்ட தங்கையை நெருங்கி, கரம்பற்றி வீட்டினுள் இழுத்துச் சென்றாள், செல்வி.

“எது சொன்னாலும் குதர்க்கமா எடுக்கிறதை முதல் நிப்பாட்டு! இப்படி இரு! காலையில ஏதாவது சாப்பிட்டாயா?”

பதில் சொல்லாது அமர்ந்தாள் மலர்.

‘சாப்பாடா? நேற்று பகல் சாப்பிட்ட பழைய சோறு. பிள்ளைகளே பச்சத் தண்ணியைக் குடிச்சிட்டு பள்ளிக்கூடம் போகேக்க எனக்கு என்ன கொள்ளை?’ அவளின் பார்வையைத் தாங்கிய செல்வி சமையலறைக்குள் நுழைந்து இடியப்பமும் சம்பலும் கொண்டுவந்து கொடுத்தாள்.

“எனக்கு ஒண்டும் வேணாம்!”

“இங்க பார் மலர், நாலு வயதுபோல அடம் பிடிக்காதே! இப்படியே அடம் பிடிச்சு பிடிச்சு நீ கண்டது என்ன?” கண்டித்தபடி, அவள் கையில் தட்டைத் திணித்துவிட்டுச் சென்று தேநீர் போட்டாள்.

அதோடு, சமையலுக்குத் தேவையான பொருட்களை ஒரு பெரிய பையில் சேகரித்து எடுத்து வைத்துவிட்டு, தேநீரோடு வந்தால், இடியப்பத் தட்டை அப்பால் தள்ளி வைத்துவிட்டு உண்ணாது அமர்ந்திருந்தாள் மலர்.

கடைசி மகன் பத்து வயதுதான். காலையில் பசியோடு சென்றதுதான் நினைவுக்கு வந்தது.

‘அவன் அங்க வயிறு காந்தக் காந்த இருக்க எனக்கு என்ன இடியப்பம் வேண்டிக்கிடக்கு?’ மனம் ஆறாய் கண்ணீர் விட்டது.

‘எதுவென்றாலும் செய்யவேணும். அந்த மனுசனுக்கு ஒரு விடிவு வரும் என்று பொறுத்திருந்தது போதும். வரேக்க வரட்டும் . நாமளும் முயற்சி செய்து பார்க்கலாமே!’

அக்கணம் அவள் மனதுள் ஒரு வைராக்கிய விதை விழுந்தது.

“அப்ப சாப்பிட மாட்டாய் என்ன?”

“எனக்கு...பச்சத்தண்ணி கொஞ்சம் தா; நான் போகப் போறன்.” உறுதியாகச் சொல்லிக்கொண்டு எழுந்தாள் அவள்.

“இந்தத் தேத்தண்ணியைச் சரி குடிடி!” கண்கள் கலங்க, கெஞ்சினாள் மலர்.

“இவ்வளவு நாளும் உனக்கு எவ்வளவைச் செய்தன். நான் என்ன வேலைக்கா போறன்? அந்த மனிசன் குடும்பத்தையும் பிரிஞ்சு அங்க கிடந்து கஷ்டப்பட்டு அனுப்பிறதில தர இல்லையா? உன்ர கஷ்டத்தைப் போக்க நீயும் கொஞ்சம் முயற்சி செய்யன் என்று சொன்னால் பெரிதாக எடுக்கிறாய் மலர். முதல் இந்தப் பிடிவாதத்தை விடு!” என்றபடி, தண்ணீரை எடுத்துக் கொடுக்க, மடமடவென்று குடித்துவிட்டு வெளியேறப்போனவள் கரத்தில், அவள் கேட்ட ஐயாயிரத்தை திணித்தாள் செல்வி.

“வேணாம்; நீயே வச்சிரு. உன்ர புருஷன் கஷ்டப்பட்டு அனுப்புறது எனக்கு வேணாம்.”

“வேணாம் மலர்...எனக்குக் கெட்ட கோபம் வரும், சொல்லிப் போட்டன்.” மீண்டும் அவள் கரத்தில் பணத்தை திணித்துவிட்டு, “இந்தா... இதில சமையல் சாமான்கள் இருக்கு... இதையும் கொண்டு போ!” பையையும் கொடுத்தாள் தமக்கை.

அதற்குப் பிறகும் மறுக்கவில்லை மலர். வாங்கிக்கொண்டு வெளியேறியவள், ஒரு கணம் நின்று தமக்கையைப் பார்த்தாள்.

“பாரத்தோட நடக்காத மலர். சந்தியில நின்றால் பஸ் வரும். சில்லறை இருக்கா?” என்றாள் அவள்.

அதற்குப் பதில் சொல்லாதவள், “சத்தியாமாய் இனிக் கடன் என்று வந்து நிக்க மாட்டன்.” கண்ணீரோடு விடுவிடுவென்று நடந்தாள்; மனதில் ஒருவகை வைராக்கியம்.

இத்தனை தாமதமேன்? பரவாயில்லை, என்றைக்குமே வராதிருப்பதற்கு இன்றாவது வந்திச்சே !

‘என்ன செய்யப் போறன்?’ சிந்தனையோடு நடந்தவளுக்கு கையில் கனமிருந்தாலும் அது உறைக்கவில்லை. விறுவிறுவென்று நடந்தாள்.

அடுத்த முக்கால் மணி நேர நடையில் வீட்டை அண்மித்தவள், எதிர்ப்பட்ட கடையினுள் நுழைந்து கையிலிருந்து காசில் மூவாயிரத்தைக் கொடுத்துவிட்டு, “இவ்வளவும் தானா?” என்ற கடைக்காரனிடம், “மிச்சத்தையும் கொஞ்சம் கொஞ்சமாத் தாரன் தம்பி.” முறைத்தவனிடம் கெஞ்சலோடு சொன்னாள்.

“முழுக்கடனும் அடைத்த பிறகுதான் கொப்பியில சாமான் தருவன்; அதை நினைவில் வச்சிருங்க!” கறாராகச் சொன்னான் அவன். அவனுக்கும் ஒரு குடும்பம் உண்டே!

தலையாட்டிவிட்டு அமைதியாக வெளியேறியவள், அந்தக் கடையோடு இருந்த உணவகத்தைப் பார்த்துவிட்டுச் சட்டென்று நின்றாள்.

மறுநொடி, அக்கணத்தில் மனதில் மின்னிய எண்ணம், அவளை அந்த உணவகத்தினுள் இட்டுச் சென்றது.

தெரிந்த மனிதர் தான். வரவேற்பு முறுவலோடு ஏறிட்டவரை நோக்கியவள், ஒரு கணம் தயங்கினாள்.

‘சரி வருமா? முதல் இவர் ஓமென்று சொல்வாரா? பச்! கேட்டால் தானே தெரியும். கேட்டுப் பாப்பம்.’

“அண்ணே...எனக்கு...நான் நல்லா தொதல் செய்வன். செய்து தந்தால் உங்கட கடையில விக்க முடியுமா?” அங்கிருந்த கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்த இனிப்புப் பதார்த்தங்களை பார்வையிட்டபடி கேட்டாள்.

எதுவோ வாங்க வந்திருக்கிறாள் என்று நினைத்தால், இதைச் சட்டென்று எதிர்பார்க்கவில்லை, அந்தப் பெரியவர்.

ராஜா , இவளின் புருஷனை நன்றாகவே தெரியும். வாய்ச் சொல்வீரன். பொறுப்பில்லாதவன் என்று மொத்தமாகச் சொல்லவும் முடியாது, பொறுப்பானவன் வகையும் இல்லை. இரண்டும் கெட்டான். இவர்களின் குடும்பநிலை தெரிந்தவர், சற்றே யோசித்தார்.

“ம்ம் ..அதுக்கென்ன...நல்லா செய்வீங்களா?”

“ஓமண்ணே! நல்ல ருசியாச் செய்வன்.”

“அப்ப...” இழுத்தவர், “செய்து கொண்டு வாங்களன். முதல் ஒரு பத்து நாளைக்கு விக்கிறதுக்குத் தான் காசு. மிச்சம் நீங்களே எடுக்க வேணும். நல்லாப் போனால் நானே மொத்தமாக் காசு தந்து வாங்குவன். என்ன சம்மதமா?”

யோசியாது தலையாட்டியவள், விடைபெற்று, மீண்டும் அருகில் உள்ள பலசரக்குக் கடைக்குள் நுழைந்தாள்.

“தம்பி பத்துத் தேங்காய்... நல்ல எண்ணைத் தேங்காயாக தாரும். பச்சரிசி...” என்று, தொதல் செய்யத் தேவையான பொருட்களை சொல்ல, அவனோ முகம் கோணினான்.

“இதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் உறைக்காது. இப்பத்தானே கொப்பியில் கடன் தரமாட்டன் என்று சொன்னன்.” முணுமுணுபோடு வந்தவன், “அக்கா...என்ன நீங்க? முழுக்காசும் தந்தால்தான் சாமான்கள் தருவன் என்றேனே...” சிடுசிடுத்தவனை, இடையிட்டு நிறுத்தியது மலரின் நம்பிக்கையான கம்பீரக்குரல்.

“இல்ல ...இதுக்கு நான் இப்பவே காசு தாறன். எவ்வளவு கெதியா முடியுமோ கொப்பிக் காசு முழுதும் தந்திருவன் தம்பி!” நிமிர்வாகவே சொன்னவளுள் இதுநாளுமில்லாதவகையில் ஒருவகை உத்வேகம்!

வறுமையாம் ஏழ்மையாம்
அப்படியென்றால் என்ன?
தீராத நோயா அதிலேயே அழுந்தி அழிந்திட?
வறுமையின் நிறத்தைப் பூசி
வலியோடு அதன் ருசியை சுவைத்தாலும்
மனதின் கம்பீரம் உத்வேகமும் அழிந்திடுமா என்ன?
ஏழ்மையின் இரும்புப் பிடியை அறுத்தெறிந்திடு பெண்ணே!
மலரே... உன் மாபெரும் சக்தியின் முன்னே இது வெறும் தூசு!
என்றென்றும் உன் மனதின் தாரக மந்திரமாய்,
உச்சரித்திடு ‘வாழ்க்கை வாழ்வதற்கே!’
முயன்று ஒரு கை பார்த்திடு நீயா நானாவென்று!
 
Top Bottom