You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

96 -உஷாந்தி கௌதமன் -இதழ் 5

ரோசி கஜன்

Administrator
Staff member
1543621554706.png




மறதிக்கிணற்றில் நினைவுப்பாசிகளை மிதக்க விடுதல் எல்லா கலைவடிவங்களாலும் இயலக்கூடியதொன்றல்ல. 96 திரைப்படத்தில் அதனை நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். பள்ளிக்கூடம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதத்தில் விசேசமானது. எப்போது நினைத்துப் பார்த்தாலும் இனிமையான தென்றலாய் வந்து சுழற்றிப் போகும் குணமுடையது.

அந்தப் பாடசாலைப்பருவத்தில் அரும்புவது காதலோ, இனக்கவர்ச்சியோ மனம் எதுவாக நம்புகிறதோ அதுவாக அது ஆகிவிடும். ஆனால், அந்தப் பருவத்தில் அந்தக் காதல் வாழ்க்கை முழுமைக்குமானது என்ற நிச்சயத்தில் தான் முளைவிடவே செய்யும். அது நிறைவேறாமலே போனாலும் அந்த முதல் காதல் கொடுக்கும் நினைவுகளின் சுகத்துக்கு ஈடு இணை இருப்பதேயில்லை.

இந்தப்படத்திலும் அப்பேர்ப்பட்ட ஒரு ஞாபக வீதியின் பயணம் தான் கதையாக வருகிறது.

பலர் ஆட்டோக்ராப் என்கிறார்கள், பிரேமம் என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பேன். கடந்து சென்ற ஆண்டுகளில் கல்லூரி, வேலை, குடும்பம் என்று எங்கெங்கேயோ நாம் நகர்ந்திருந்தாலும், இப்படம் பார்த்த பிறகோ, அவை எல்லாவற்றையும் தாண்டி, பள்ளியை விட்டு வெளியேறிய இறுதித் தினத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிய வைத்த விதத்திலேயே, இந்தப்படம் வேறு என ஆணித்தரமாகப் புரிந்து விடுகிறது.

ஒரு திரைப்படமாகப் பார்க்கையில் இந்தப்படத்தில் குறைகளும் உண்டு தான். உதாரணமாக படத்தின் நீளம், சில காட்சிகள் திரும்ப திரும்ப வருதல், சில சமயங்களில் கதாநாயகன் நாயகியை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதால் ஏற்படும் சலிப்பு என்பனவற்றை ஒரு சாதாரண ரசிகனாக என்னால் சொல்ல முடியும்.

ஆனால் அதெயெல்லாம் தாண்டி மாஜிக் மொமென்ட்ஸ் படத்தில் நிறையவே உண்டு.

பாடசாலைக்காட்சிகளில் VJS மற்றும் திரிஷாவாக வரும் இளம் நடிகர்கள், தேவதர்ஷினியின் மகள் எல்லாரும் நடிப்பில் வெகு இயல்பாக பொருந்திப்போயிருந்தனர்.

அந்த வயதில் காதல் என்று கேட்டதும் பதறிப்போவது, அந்த காலத்தில் உபயோகித்த பேனா முதற்கொண்டு, பாடாசாலைக்கும் தேக்கம் விதை உடைத்துச் சாப்பிடும் பழக்கத்துக்கும் உள்ள தொடர்பு எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

டீட்டெயிலிங்கில் தான் இந்தப்படம் நம்மை எல்லாம் தொட்டுப்பார்த்து எங்கோ ஓர் ஓரத்தில் கனெக்ட் பண்ணிவிட்டு விடுகிறது என்று நினைக்கிறன்.

ஒரு காட்சியில் ஸ்கூல் தண்ணீர் பைப்பில் விஜய் சேதுபதி தண்ணீர் குடிப்பார். குனிந்துக் குடித்து விட்டு இறுதியாக நிமிர முன் பைப்பை சின்னதாய் குளிப்பாட்டி விட்டு வருவதெல்லாம்...நாஸ்டால்ஜியா அழுத்தமாய் அலையடிக்கும் இடம்..

கெட்டுகேதருக்கு வாட்சாப்பில் ப்ளான் போடும் போதெல்லாம் தியேட்டர் அதிர்கிறது.

கவிதையான காட்சிகள், ஒளிப்பதிவாளரிடம் இருந்து, அவ்வப்போது ஷாட்கள் ஹெலிகாப்டர் வியூவுக்கு மாறும் போது ஆஹா... த்ரிஷா, விஜய் சேதுபதி அப்பார்ட்மெண்டில் அத்தனை அப்பார்ட்மென்ட்களும் இருளாக இருக்கும் போது இவர்கள் வீட்டுப்பால்கனி மட்டும் சின்னதொரு வெளிச்சப்புள்ளியாக ஒளியேற்றி இருக்கும் இடம்... யமுனை ஆற்றிலே பாடல் வரும் இடம் என, படம் முழுக்க மூன்றாம் விழிக்கவிதைகள் அதிகம். இசை கூட இன்னொரு கவிதையாய் கூடவே வருகிறது. அதிலும் அந்தத் தீம் மியூசிக் செம்ம...கூடவே இளையராஜாவின் பழைய பாடல்களும்



காதல், வாழ்க்கையில் பல கட்டங்களில் வரும், பலர் அதிலிருந்து வெளியேறி அடுத்தக் கட்டங்களுக்குப் போய் விட்டாலும் சிலரால் அந்தப் புள்ளியைத் தாண்டி நகர முடிவதே இல்லை.

அப்படித்தான் இங்கே விஜய் சேதுபதியும் த்ரிஷாவும். தன் வாழ்க்கையில் திருப்பத்தினை ஏற்படுத்திய முக்கியமான கட்டம் ஒன்று இப்படி நடந்திருந்தால் என்ற எண்ணத்தின் ஆழ்மன வெளிப்பாட்டை நடந்ததாய் சித்தரித்து, அந்த எண்ணங்களை விழிநீரோடு பத்திரப்படுத்திக்கொள்ளும் த்ரிஷா, அவரை ப்ளைட் ஏற்றி விட்டு கண்களை துடைத்துக்கொண்டே வெளிவரும் VJS. எல்லாமே அழகு.

எப்போதோ எங்கேயோ படித்த சிறுகதை ஒன்று ஞாபகம் வந்தது.

பல வருடங்களின் பின் இருவேறு வாழ்க்கைகளில் போய் விட்ட பரஸ்பரம் காதல் சொல்லிக்கொள்ளாத பழைய காதலனும் காதலியும் சந்தித்துக்கொள்வார்கள். அன்றைய நாள் முழுதும் நினைவுகளை இரைமீட்டி இறுதியில் காதலையும் சொல்லிகொள்வார்கள்.

அன்றைய நாளின் முடிவில் திரும்பும் போது அந்த பெண் சொல்வார் “வாழ்க்கை ஓட்டத்தில் இளைப்பாறும் நிழல்மரம் எப்போதாவது தான் வரும். அந்த நிழலின் கீழ் எப்போதுமே இருந்து விட முடியாது. எங்கோ தூரமாய் என் வாழ்க்கை இருக்கிறது. நான் போகத்தான் வேண்டும். ஆனால் இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது”!

வாழ்க்கை அப்படித்தான் இல்லையா? ஒவ்வொரு மனிதரும் நமக்குத் தனித்துவமானவர்கள், அவர்களை அவர்களால் மட்டுமே ஈடு செய்ய முடியும். அவரை மிஸ் செய்கிறோம் என்பது நம் வாழ்க்கையில் கூடவே இருப்பவரை நாம் அந்தளவுக்கு நேசிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடாது.

உறவுச்சிக்கல்களின் நூலிழைகளை பிரித்துப்பார்ப்பதை விட அவை பின்னப்பட்ட வர்ண விரிப்பின் அழகை ரசித்தலே எனக்கு முக்கியமானதாய்ப்படுகிறது.
 
Top Bottom