You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

cat café-– யாழ் சத்யா இதழ் 3

ரோசி கஜன்

Administrator
Staff member
போவோமா ஊர்கோலம் பகுதியில் நான் இன்று உங்களை அழைத்துச் செல்லப் போவது cat café இற்கு. அது என்னடா cat café? புதுசா இருக்கே என்று பார்க்கிறீர்களா? எனக்கும் இந்த விடயம் புதிதாக இருந்தமையால், அறியும் ஆர்வத்துடன் ஒரு முறை சென்ற நான், இப்போது, வாரம் தவறாது சென்று கொண்டிருக்கிறேன்.

Cat Café என்பது ஒரு coffee shop இல் சில, பல பூனைகள் இருக்கும். அவைகள் விளையாடத் தக்கவாறு அதற்குரிய வகையில் ஏணிகள், தொங்கி விளையாட கயிறுகள், சிறு பந்துகள், எலி பொம்மை போன்றவைகள் வைத்திருப்பார்கள். பூனைகள் தூங்குவதற்கு ஏற்ற வகையில் இருக்கைகளும் படுக்கைகளும் கூட இருக்கும். அத்தோடு, அவை உணவு உண்பதற்கு ஒரு இடத்தில் சில பாத்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.


அங்கு செல்லும் நாமும் பூனைகளோடு விளையாடலாம்; தடவிப் பார்க்கலாம்; புகைப்படம் எடுக்கலாம்.

1543522776150.png


பொதுவாக இது வீட்டுப்பிராணியான பூனைப் பிரியர்களுக்கென்று உருவாக்கப்பட்ட ஒன்று. முதன் முதலில் தாய்வானில் தான் 1998 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. “Cat flower garden” என்ற இந்த cat café தாய்வான் சென்ற சுற்றுலாப் பிரயாணிகளால் அதிகளவாக விரும்பப்பட்டது. தோற்றம் பெற்றது தாய்வானிலாக இருந்தாலும் பிரசித்தி பெற்றது என்னவோ ஜப்பானில் தான். 2004 ஆம் ஆண்டில் Osaka, ஜப்பானில் “Neko no jikan” முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர், பல்வேறு நகரங்களிலும் திறக்கப்பட்டு வளர்ச்சியைடைந்தது. ஜப்பானில் இன்று எழுபத்தைந்துக்கும் அதிகளவான cat cafés காணப்படுகின்றன.


1543522888381.png


இந்தியாவிலும் மும்பையில் இருக்கிறது. மீதி மாநிலங்கள் பற்றி கூகிளாண்டவர் சரியான தகவல்களைத் தரவில்லை. இலங்கையில் இருப்பதாகவும் நான் இதுவரை அறியவில்லை. சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவலாகத் தோற்றம் பெற்று வருகிறது. இங்கிலாந்தில், சில விலங்குகள் பராமரிப்பு அமைப்புகளால் எதிர்ப்புக்குரல் எழுப்பப்பட்டாலும் இன்று எல்லா இடங்களிலும் வெற்றிகரமாக இயங்குகிறது என்று தான் சொல்ல வேண்டும்.


நகரங்களில் சின்ன சின்ன அப்பார்ட்மெண்ட்களில் வசிப்பவர்களுக்கு வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்குப் பொதுவாக அனுமதி கிடையாது. அத்தோடு, இட வசதிகளும் குறைவு தானே. இப்படிப்பட்டவர்களுக்குச் சிறிது நேரம் தாங்கள் விரும்பும் பூனைகளோடு கொஞ்சி மகிழ இந்த cat cafés நல்லதொரு பொழுது போக்குப் பிரதேசமாக விளங்குகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

1543522917123.png

நான் வசிப்பது Grenoble, France. எனது வீட்டுக்கருகே கடை வீதியில் ஒரு நாள் நடந்து சென்று கொண்டிருந்த போது, எனது மகன், “அம்மா…! ஷா… (பிரெஞ்சு மொழியில் பூனை) மியாவ்…. மியாவ்…” என்றான்.


‘என்னடா இது நடு ரோட்டில் வைத்துப் பூனை என்கிறான்? நாய், பூனை என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதனால், புதிதாக ஏதோ ஒரு பூனை பொம்மையைக் கண்டு விட்டான் போல’ என்று எண்ணிக் கொண்டே, சுற்றி வர நோட்டமிட்ட எனக்கு ஒரு இனிய அதிர்ச்சி.


அங்கே கண்ணாடிக் கதவுகளால் மூடப்பட்ட ஒரு ரெஸ்டோரண்ட் வழியாக இரண்டு, மூன்று பூனைகள் சோம்பலாய்ப் படுத்திருப்பது தெரிந்தது. இந்த ரெஸ்டோரண்ட் வைத்திருப்பவர்கள் பூனை வளர்க்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டு நகர முயல, என் மகனோ பூனைகளை அருகில் பார்க்க வேண்டும் என்றான்.


1543522945580.png


மாலை நேரம். வெளியே திரிந்து கொஞ்சம் அலுத்துக் களைத்துப் போயிருந்தேன். சரி. மகனுக்கும் பூனையைக் காட்டிக் கொண்டு நானும் ஒரு ஜூஸ் குடித்து விட்டுச் செல்வோம் என்று நினைத்து உள்ளே சென்ற எனக்கு மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.


வழக்கமான ரெஸ்டோரண்ட்ஸ் போல உயர்ந்த கதிரை, மேசைகள் வரிசையாக அடுக்கி இருக்கவில்லை. அளவான இடைவெளி விட்டு அங்குமிங்குமாகச் சிறு டீப்போ போட்டு, அவற்றைச் சுற்றி ஸோஃபாக்கள் போடப்பட்டிருந்தன. ஒருவர் அமரக் கூடியது, இருவர் மூவர் அமரக் கூடியது என்று கலவையாகப் போட்டிருந்தார்கள். இன்னொரு கஃபேயில் ஸோபாவும் போட்டு ரெஸ்டோரண்ட் பாணியிலான மேசை, கதிரைகளும் போடப்பட்டிருந்தன.

1543522970868.png



அங்கே இரண்டு பூனைகள் ஓடி விளையாடிக் கொண்டிருக்க, வேறு சில ஆங்காங்கே படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. எனக்கோ முதலில் குழப்பம். “என்னடா இது ஒரே பூனை மயமாக இருக்கே. இது ரெஸ்டோரண்ட் இல்லையோ!” என்று. நான் யோசனையோடு இருக்கவே மெனுவைக் கொண்டு வந்து தந்தார்கள். ஒரு சாக்லேட் மாஸ்மலோஸ்ஸை ஆர்டர் செய்து விட்டு அந்த இடத்தை அவதானிக்க ஆரம்பித்தேன்.

1543522996238.png


எனது மகனோ குதூகலத்தோடு பூனைகளோடு விளையாடிக் கொண்டிருந்தான். அவற்றைத் தடவுவதும் அவற்றுக்குப் பின்னால் ஓடுவதுமாக இருந்தான். எதிர்த்த வீட்டில் இருக்கும் “லுக்கி” எனும் பூனையை யன்னலால் பார்த்து கதைத்தது மட்டும் தான் அவன் பூனையை நேரில் கண்டது. மற்றபடி கண்மணி பாப்பாப்பாடல்களின் உபயத்தினால் அவனுக்கு பூனை என்றால் ‘மியாவ் மியாவ்’ என்று கத்தும் என்பது தெரியும்.


1543523021660.png

அவ்வாறு இருந்தவனுக்கு நேரிலே பூனையைக் கொஞ்சி மகிழ்ந்து, விளையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்வானாம்? சந்தோசமாக விளையாடினான். வயதானவர்கள், இளவயதினர் ஜோடியாக, சிறுவர்களுடன் பெற்றோர்கள் என்று பல தரப்பட்டவர்களும் வந்திருந்தனர்.


பூனைகள் வைத்திருப்பதற்காக குடிபானங்களோ, உணவு வகைகளோ அதிகம் விலையில்லை. வழக்கமான மற்ற ரெஸ்டோரண்ட்ஸ்ஸில் என்ன விலையோ இங்கேயும் அதே தான்.


1543523048502.png


நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் போது நாய், பூனை எல்லாம் வளர்த்தேன். அவற்றோடு பேசுவது, விளையாடுவது தான் என் பொழுதுபோக்கு. பூனைக்குட்டி எப்போதும் என் மடியில் தான். ‘பூனை விசர்’ என்பது எனது வீட்டினர் எனக்கு வைத்த பட்டப் பெயர்களில் ஒன்று. அங்கிருக்கும் போது பூனைமுடி பட்டுப் பெரிதாக அலேர்ஜி எல்லாம் வருவதில்லை. ஆனால், ஏனோ தெரியவில்லை. இங்கே cat café போய் வந்தால் மூக்கரித்து, கண்கள் கடிக்கும். என் மகனுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அதனால் அவனுக்குப் பிடிக்குமே என்று எனது துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு வாரம் தவறாது கூட்டிச் செல்கிறேன்.

1543523077128.png


நான் வாழும் இடத்தில் charabica, Neko Café - Bar à chats என்று இரண்டு கஃபேக்கள் இருக்கின்றன.


இப்படி அலேர்ஜி, ஆஸ்துமாத் தொல்லை உள்ளவர்கள் cat café பக்கம் எட்டியும் பார்க்கக் கூடாது. பூனை முடி உணவுப் பொருட்களில் பறந்து சென்று விழுமே என்று சுத்தம் பார்ப்பவர்களுக்கும் இது பொருத்தமற்ற இடம். எனது நண்பி போல பூனையைத் தூரக் கண்டாலே பயந்து மயங்கி விழும் பூனை போஃபியா உள்ளவர்கள் இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கக் கூடாது.


மொத்தத்தில் பூனைப் பிரியர்களுக்கு ஒரு வரப் பிரசாதமே இந்த cat café.


அடுத்து உங்களை வேறொரு இடத்திற்கு கூட்டிச் செல்லும் வரை அன்புடன் விடைபெற்றுக் கொள்கிறேன்.
 
Top Bottom