You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

IBC தமிழின் குறுந்திரை 2018! - ஒரு பெருந்திரை நோக்கிய பயணம் - இதழ் 10

ரோசி கஜன்

Administrator
Staff member
1558513307992.png


IBC தமிழ் தொலைகாட்சி நடத்திய மூன்றாவது பருவநிலை ஈழக் குறுந்திரை விழாவானது சித்திரை மாதம் 17ஆம் திகதி இலண்டன் மாநகரில் மிகச் சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. இவ்விழாவுக்குக் கனடாவில் வசித்துவரும், ஈழத்தமிழ் சினிமா உலகின் சிறந்த திரைமொழியாளனாக அடையாளம் காட்டிநிற்கும் இயக்குனர் திரு. லெனின் எம் சிவம் அவர்களோடு தமிழ் நாட்டிலிருந்து இயக்குனர் திரு அமீர் அவர்களும், இயக்குனர் திரு வெற்றிமாறன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.



கடந்த முப்பது ஆண்டுகள் இலட்சியத்திலிருந்து இலக்குவரை அனைத்தையுமே மண்ணோடு மண்ணாகச் சிதைத்துப் போட்டிருந்தபோதிலும், பீனிக்ஸ் பறவைகளாக மாறி, மீண்டும் முதலிலிருந்து அனைத்துப் பக்கத்திலிருந்தும் தம் கட்டுமானத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் ஈழத்துத் திறமைசூழ் நம் தமிழ் உறவுகள்!



அதற்கு நல்லதொரு சாவியாக IBC தமிழ் நடத்திய இக்குறுந்திரை விழா அமைந்திருக்கிறது! உலகின் எத்திசையிலிருந்தும் ஈழத்துப் படைப்பாளிகள் மட்டுமே கலந்துகொள்ள இயலும் என்கிற அடிப்படையின் கீழே 87 குறுந்திரைகளை ஒன்று சேர்த்து, அதிலிருந்து ஆறு குறுந்திரைகளைத் தேர்வு செய்து, அதிலிருந்து முதலிடத்தைப் பிடிக்கும் குறுந்திரை இயக்குனருக்கு பெருந்திரையினை இயக்கும் சந்தர்ப்பத்தை வழங்கக் காத்திருந்தது IBC தமிழ் தொலைகாட்சி.



குறுந்திரை இயக்குனர் எவரினதும் இலட்சியமும் கனவும் பெருந்திரையினை இயக்க வேண்டும் என்பதே! அவ்வகையில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஆறு குறுந்திரைகளில் மூன்றாம் இடத்தை தி போடர்( எல்லை), மற்றும் இரண்டாவது இடத்தை திரு மதிசுதா அவர்களின் வெடி மணியமும் இடியன் துவக்கும் என்கின்ற குறுந்திரைகள் பெற்றிருக்கிறன!

1558513333540.png

இந்த வருட ஈழத்துக் குறும்பட விழாவின் முதலிடத்தை சருகுவேலி குறுந்திரை இயக்குனர் செல்வரத்தினம் பிரதீபன் அவர்கள் தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அதன்மூலம், IBC தமிழின் தயாரிப்பில் மூன்றாவது பருவகால ஈழத்துப் பெருந்திரையை இயக்கப்போகும் இயக்குனராகவும் தேர்வாகியிருக்கிறார்!



வெற்றி பெற்ற நம் ஈழத்து வெற்றியாளர்கள் எல்லோருக்கும் இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!



அதோடு, இவ்விழாவில் பங்குபற்றிய 87 குறுந்திரைப்பட இயக்குனர்களுக்கும், அதற்காக உழைத்த அத்தனைபேருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் செந்தூரம் மிகுந்த மகிழ்வோடு தெரிவிக்கிறது!



முயற்சிகள் வெற்றிகளை நோக்கி மட்டுமே நகரும்!



இது வழமையான ஒரு திரைவிழா போலல்லாமல் பலவகைகளில் முக்கிய கவனம் பெற்றிருக்கிறது.

இறுதிச் சுற்றுக்குத் தெரிவான ஆறு குறுந்திரைகளும் வெவ்வேறான விடயங்களை, ஈழத்துத் தமிழர்களின் இன்றைய சிக்கல்களையும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும், மண்ணின் சிறப்பையும், பண்பாட்டையும் சொல்வதுபோல அமைந்திருந்தது மிகச் சிறப்பு!



அதோடு, முகம் பார்த்து விமர்சிப்பது போலல்லாமல் காரசாரமாகக் குறை நிறைகளை நடுவர்கள் தெரிவித்திருந்த விதமும் எல்லோரினதும் கவனத்துக்குரியதாக அமைந்திருந்தது!



அது மாத்திரமல்லாமல், முன்னாள் போராளிகளின் இன்றைய கையறு நிலையை வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படுத்தி இருந்தார் IBC தமிழ் தொலைக்காட்சியின் தலைவர் திரு கந்தையா பாஸ்கரன் அவர்கள்.



புலம்பெயர்ந்து வாழ்கிற தமிழர்கள் சிலரின் அரசியலை, யாரும் பேசத்தயங்கும் விசயத்தை மிகுந்த தைரியத்துடன் 'வேடம்' குறுந்திரை மூலம் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருந்த பிரான்ஸ் வாழ் தமிழரான அமல் அவர்கள் வெகுவாகப் பாராட்டுப் பெற்றிருந்தார்.



விடுதலைக்காகப் போராடிய முன்னாள் வீரர்கள் இன்று தம் அன்றாட வாழ்வுக்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவலம் குறித்தும் பேசப்பட்டது.



இப்படி, ஒரு குறுந்திரை சினிமா விழாவாக மட்டுமல்லாமல், பன்முகத் தன்மையோடு பல விடயங்கள் வெட்ட வெளிச்சத்தில் கலந்துரையாடப்பட்டு மிகச் சிறப்பாக நிறைவு பெற்றிருக்கிறது IBC தமிழின் குறுந்திரை விழா 2018!



1558513358083.png
 
Top Bottom