
கோடை காலம் வந்தாலே கூடுதல் உடல் - சருமப் பாதுகாப்பு அவசியம். கொளுத்தும் வெயிலின் வெப்பத்தில் நம் தோல் மற்றும் உடல் சோர்வுற்று வெகுவிரைவிலேயே அயர்ச்சி ஏற்படுத்தும். நாம் அனைவரும் முறையான பராமரிப்புகளை மேற்கொண்டால் கோடை காலத்தில் ஏற்படுகின்ற உடல் உபாதைகள், சரும கோளாறுகள் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

என்ன சாப்பிடலாம்?
மற்ற காலங்களை விட இக்கோடைக்காலத்தில் நம் உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த அடிக்கின்ற வெயிலில் சூடான பானங்களை நினைத்துக்கூடப் பார்க்க கூடாது. எப்பொழுதுமே சீசன் சமயங்களில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளே உடலுக்கு நல்ல பலன்களைத் தரும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைத் தரும். அதுதான் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும்.
இதற்கு சிறந்த தீர்வு பழங்கள்தான். அதில்தான் ஊட்டச்சத்துகள் நிரம்பி இருக்கிறது. உடல் எடையை அதிகரிக்கச் செய்யாது. ருசிக்காக நீங்கள் பலவிதமான பழங்களை முயற்சி செய்யலாம். சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். இதிலுள்ள வைட்டமின் சி சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
இந்த காலத்தில் உடலில் வெப்பம் அதிகரித்து கண் நோய், அம்மை போன்ற வைரஸ் நோய் பாதிப்புகள் வர வாய்ப்புகள் உண்டு. இவை வராமல் பாதுகாக்க பழங்கள், நீர்சத்துள்ள காய்கறிகள், கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.