You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 42


வவுனியா கந்தசுவாமி கோவிலில் வைத்து நிரல்யாவின் கழுத்தில் மங்கலநாணைப் பூட்டி மனைவியாக்கிக்கொண்டான் அனந்தன். அவனுடைய எத்தனையோ வருடத்துத் தவம்! மிகவும் ஆசுவாசமாகவும் நிறைவாகவும் உணர்ந்தவன் அவள் முகம் பார்த்து நிறைவாய்ப் புன்னகைத்தான்.

என்னதான் மனத்தைத் தயார் படுத்தி வைத்திருந்தபோதிலும் நிரல்யாவினால் அந்த நொடிகளை அத்தனை இலகுவாய்க் கடக்க முடியவில்லை. அலையடிக்கும் கடலாய் அவள் கட்டுப்பாட்டையும் மீறி ஏதேதோ எண்ணங்கள் சுழன்றடித்து அவளையும் சுழற்றியடிக்க முயன்றன. அதையெல்லாம் தனக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு தானும் அவன் முகம் பார்த்து முறுவலிக்க முயன்றாள்.

மகள் கழுத்தில் தாளியேறிய அந்தக் கனத்தைக் கண்ணாரக் கண்டுவிட்ட அமிர்தவல்லி அம்மாவினால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. பட்டுப்போயிற்றோ என்று பயந்துபோயிருந்த மகளின் வாழ்க்கை, வசந்தகாலத்து மரங்களாக மீண்டும் துளிர்க்க ஆரம்பித்துவிட்டதில் ஆரம்பித்துவிட்டதில் முற்றிலும் நெகிழ்ந்துபோயிருந்தார். சுந்தரலிங்கத்தின் நிலையும் அதேதான். இமைக்கவும் மறந்து அவர்களையே பார்த்திருந்தார்.

கணவன் மனைவியாக வந்து அனந்தனும் நிரல்யாவும் அவர்கள் பாதம் பணிந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டபோது சுந்தரலிங்கத்தினால் பேசவே முடியவில்லை. அனந்தனை எழுப்பி நிறுத்தி இறுக்கி அணைத்துக்கொண்டார். “சந்தோசமப்பு!” என்ற அந்த ஒற்றை வார்த்தையின் பின்னிருந்த அவர் மனத்தின் நிறைவை முழுமையாய் உணர்ந்தவன், “எனக்கும்தான் மாமா!” என்றான் விரிந்த சிரிப்புடன்.

அவன் தோள்கள் இரண்டையும் பற்றி, “திரும்பவும் சொல்லுறன் நந்தா, என்ர வாழ்க்கைல நான் செய்த ஒரேயொரு நல்ல காரியம் உன்னக் கையோட கூட்டிக்கொண்டு வந்ததுதான்.” என்றார் நெகிழ்ந்த குரலில்.

அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருப்பது புரிய, “என்ன மாமா இது? நான் இன்னும் சீதனம் கேக்கவே இல்ல. அதுக்கிடையில அவசரப்பட்டுப் பாராட்டாதீங்க.” என்றான் அவரை இலகுவாக்கும் பொருட்டு.

அவர் அசையவே இல்லை. “என்ன பெரிய சீதனம்? முழுச் சொத்தும் உனக்குத்தான். என்ர ஒரேயொரு சொத்து நீ மட்டும்தான். நீ இருந்தாப் போதும். இதைப் போலப் பத்து மடங்கு சேர்த்திடுவன்.” என்றவரின் பேச்சில் வாய்விட்டே சிரித்தான். உள்ளத்தில் அவர்பால் அன்பு இன்னும் பெருக, “நீங்களும் அப்பிடித்தான் மாமா எனக்கு!” என்றான் நெகிழ்ந்த குரலில்.

அமிர்தவல்லியும், “அவர் சொன்னது உண்மைதான் நந்தா. நீ இல்லாட்டி நாங்க என்னவாகி இருப்பம் எண்டு யோசிக்கவே ஏலாம இருக்கு. கடவுள் தந்த வரம் எங்களுக்கு நீ!” என்றார் விழிகளில் நீர் அரும்ப.

“அப்பிடியே நீங்க இல்லாட்டி நான் என்னாகி இருப்பன் எண்டும் யோசிங்க மாமி.” என்றான் அவன் மென்மையாகிப்போன குரலில்.

மறுப்பாய்த் தலையசைத்தார் அவர். “உன்ர மனதுக்கும் குணத்துக்கும் நீ எங்க இருந்திருந்தாலும் நல்லா இருந்திருப்பாய். ஆனா எங்களுக்கு…” என்றவரை மேலே பேசவிடாமல், “மாமி, அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. என்ர அம்மா அப்பாக்கு நான் செய்ய மாட்டனா? எனக்கு நீங்க ரெண்டு பேரும் அப்பிடித்தான். அதால சும்மா மனதைப் போட்டுக் குழப்பாதீங்கோ.” என்று அவரைத் தடுத்து நிறுத்தினான் அவன்.

இதையெல்லாம் பார்த்திருந்த நிரல்யா, குற்ற உணர்ச்சியில் குன்றிப்போனாள். அவளைக் குறித்து எந்தளவுக்குப் பயந்திருந்தால் இந்தளவுக்கு உடைந்து போயிருப்பார்கள்? மகளாகத் தான் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறியதுமல்லாமல் அவள் அவர்களுக்குக் கொடுத்த கஸ்டங்கள் கொஞ்ச நஞ்சமா? இன்றைக்குத்தான் நிம்மதியாக மூச்சு விடுவார்கள் போலும். அதற்கு மேலும் முடியாமல், “சொறி அம்மா. உண்மையாவே சொறி!” என்றாள் தழுதழுத்து.

பெற்றவர்களின் உள்ளம் உருகிப் போயிற்று. நல்லது நடந்திருக்கும் இந்த நாளில் அவள் இனி நன்றாய் வாழ வேண்டும் என்று அவர்கள் உள்ளம் பிரார்த்திக்கும் இந்த நேரம் மகள் மீது அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

அதில், “அப்பிடியெல்லாம் இல்லையாச்சி. உன்னில எங்களுக்கு எந்தக் கோபதாபமும் இல்ல. இனிப் பழசை எல்லாம் நினைக்காத. அதெல்லாம் நடந்து முடிஞ்சுது. இனி நீ எப்பவும் சந்தோசமா இருக்கோணும். சரியா?” என்றார் அமிர்தவல்லி அவள் கன்னம் வருடி.

சரி என்று தலையசைத்தாள் கேட்டுக்கொண்டாள் மகள்.

ஆண்கள் இருவரும் வந்திருந்தவர்கள் பக்கம் நகரவும், “அம்மாச்சி இங்கப் பார், இனியும் கண்டதையும் யோசிச்சு மனதைக் குழப்பக் கூடாது. இனி நீ நந்தன்ர மனுசி. அதை மனதில நல்லாப் பதிய வை! முக்கியமா நந்தனச் சந்தோசமா வச்சிரு. அவனுக்கு எண்டும் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும். விளங்குதாம்மா நான் சொல்லுறது? வளத்த பாசத்துக்காக எல்லாத்தையும் தாங்குகிறான் எண்டுறதுக்காகச் சுமையக் கூட்டிக்கொண்டே போகக் கூடாது. யோசிச்சுப் பார், அவன்ர வாழ்க்கைல அவன் என்ன சந்தோசத்தை அனுபவிச்சான் எண்டு? ஒண்டுமே இல்ல. அவனுக்கு முப்பத்திநாலு வயசாகப் போகுது. இதை எல்லாம் நினைவில வச்சு நடக்கோணும், சரியா?” பூடகமாய் அவர் சொன்னது அவளுக்கு விளங்காமல் இல்லை. மெல்லிய சங்கடம் தாக்க அவர் விழிகளைச் சந்திக்க முடியாமல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டாள் நிரல்யா.

சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய நல்லபடியாக உணவையும் முடித்துக்கொண்டு, நிறைவாகத் திருமணத்தை நடத்தி முடித்த பாராட்டையும் வாழ்த்துகளையும் வந்திருந்தவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, சுகமான அயர்ச்சியுடன் நால்வரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

அன்று இரவும் அவள் அறையின் கதவைத் தட்டினான் அனந்தன். அவள் திரும்பிப் பார்க்க எப்போதும் அவளை அழைக்கிறவன் இப்போது திறந்த கதவினூடு உள்ளே வந்தான். அதுவும் கதவை உட்புறமாகத் தாளிட்டுவிட்டு வரவும் அவளுக்குத் தேகம் தூக்கிப் போட்டது. நெஞ்சில் பெரும் அதிர்வு. இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள். அன்று காலையில் அவன் அணிவித்துவிட்ட தாலி அவனுக்கான எல்லைகளைத் தகர்த்து எறிந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்கிறானா? உள்ளே ஒரு பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்ள, கோயிலில் வைத்து அன்னை சொன்ன வார்த்தைகள் வேறு காதினுள் எதிரொலிக்க, அவன் வருகைக்கு எப்படி வினையாற்றுவது என்று தெரியாது தடுமாறினாள் நிரல்யா.

வந்து கட்டிலில் இலகுவாய் அமர்ந்து, “என்ன செய்றாய்?” என்றான் அவள் கையிலிருந்த திருமணச் சேலையைக் கவனித்தபடி.

“அது… சாறி…” என்று தடுமாறினாள் அவள்.

“இப்பவே மடிச்சு வைக்காத. அந்தக் கதிரைல விரிச்சுப் போடு. நாளைக்கு மடிச்சு வைக்கலாம்.”

ஒரு பொம்மையைப் போல் அவன் சொன்னதைச் செய்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. பயமும் படபடப்புமாய் அவன் முகம் பார்த்து நின்றாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“இனி இந்த அறைக்க வாறதுக்கு எனக்கு உரிமை இருக்கு எண்டு நினைச்சன் நிரல்.” அவள் பார்வையை எதிர்கொண்டபடி நிதானமாய்ச் சொன்னான் அவன்.

“நான்… நான் ஒண்டும் எச்சொல்ல இல்லையே.” காற்றாகிவிட்ட குரலில் பேச முயன்றாள். உதடுகள் வறண்டு ஒத்துழைக்க மறுத்தன.

“அப்ப வந்து படு!” என்றான் அவன்.

அது எப்படி? பெரும் தவிப்புடன் அவனைப் பார்த்தவள் விழிகள் கலங்காவா என்றன. திருமணம் என்ற ஒன்றின் பின் இதெல்லாம் நடக்கும் என்று தெரியாமல் இல்லை. ஆனால் அவை ஒவொன்றாக நிகழ்கிறபோது அவள் கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்துகொண்டிருந்தாள்.

அவனுக்கும் மெல்லிய கோபம் வரவா என்றது. “இல்ல நான் வெளில போகவா?” என்றதும் பயந்து, “இல்ல இல்ல. நான் படுக்கிறன்.” என்றவள் கட்டிலைச் சுற்றிக்கொண்டு வந்து அடுத்த பக்கம் ஏறிப் படுத்துக்கொண்டாள்.

அவள் ஒருத்திக்கு என்று போடப்பட்ட கட்டில். அவனைப் போன்ற திடகாத்திரமான ஒருவனோடு பகிர்ந்துகொள்வது என்றால் நெருக்கத்தில்தான் இருவரும் படுக்க வேண்டும். உள்ளம் டமார் டமார் என்று அடித்துக்கொள்ள அடுத்து என்ன நடக்குமோ என்கிற பெரும் திகிலுடன் நடுங்கிக்கொண்டிருந்தாள். அவனும் சரிந்து ஒரு கையைத் தூக்கித் தலைக்கு மேலே வைத்துக்கொண்டான்.

அவள் மனநிலை அவனுக்குத் தெரியாமல் இல்லை. தாம்பத்தியத்தை அன்றே ஆரம்பித்துவிடும் எண்ணமும் அவனுக்கில்லை. அதற்கென்று கணவனாய் அவள் உள்ளத்தில் தன் தடத்தைப் பதிக்க நினைப்பதிலிருந்து பின்வாங்குவதாகவும் இல்லை. அதில் அவள் புறம் திரும்பிப் பார்த்தான்.

விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு நடுங்கிக்கொண்டு கிடந்தாள். மெல்லிய முறுவல் ஒன்று உதட்டோரம் பரவிய அதே நேரம் சின்னதாய் வலி ஒன்றும் அவளுக்காய் அவன் உள்ளத்தில் பரவிற்று. கையை நீட்டி அவளின் ஒற்றைப் புருவத்தை நீவி விட்டான். அவள் படக்கென்று விழிகளைத் திறந்து பயத்துடன் அவனைப் பார்க்க, “என்னத்துக்கு இந்தப் பாடு படுறாய்?” என்றான்.

“இல்ல. அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல.”

“ஓ!”

“உண்மையாத்தான்.”

“சரி அப்ப இன்னும் கிட்டவா!” என்றதும் மிடறு விழுங்கினாள். ஆனால், அன்னை சொன்ன வார்த்தைகள் மீண்டும் நினைவில் வந்தன. சற்று அவன் புறமாக நகர்ந்து விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு கிடந்தாள்.

அவன் விழிகள் சிவந்து போயின. “என்ன, கடமையைச் செய்ய நினைக்கிறீங்களோ?” என்றான் பல்லைக் கடித்தபடி.

படக்கென்று விழிகளைத் திறந்தவள் பரிதாபமாய் அவனைப் பார்த்து விழித்தாள்.

“என்னைப் பாக்க உனக்கு அவ்வளவு கேவலமாவா இருக்கு?” என்றான் கோபத்தோடு.

“இல்ல… அது…”

“போடி!” என்றுவிட்டு அவன் எழுந்துகொள்ள, வேகமாய் அவன் புறம் நகர்ந்து வந்து, எட்டி அவன் கையைப் பற்றித் தடுத்தாள். அனந்தன் திரும்பிப் பார்த்தான். அவள் பார்வை அவனுக்கு எதிர்ப்புறத்தில் இருந்தது. கண்ணீரும் கோடாய் ஓட, “என்னை எப்பிடியாவது இதில இருந்து வெளில கொண்டு வாங்க மச்சான்.” என்றாள் தழுதழுத்த குரலில்.

கையை அவளிடமிருந்து இழுத்துக்கொள்ளாமல் அவளையே பார்த்து நின்றான் அவன். சில நொடிகள் அப்படியே கழிந்த பிறகும் அவனிடம் அசைவில்லை என்றதும் கண்ணீர் விழிகளுடன் திரும்பி அவனைப் பார்த்தாள். இருவர் விழிகளும் சந்தித்துக் கொண்டன. அப்போது அவன் கையைப் பற்றித் தன்னிடம் இழுத்தாள்.

அவனும் இசைந்து வந்து அவளின் இரு புறமும் கைகளை ஊன்றி அவளையே பார்க்க, “ப்ளீஸ் மச்சான். என்னவாவது செய்து என்னை இதையெல்லாம் மறக்க வைங்க. நரகமா இருக்கு. நானும் உங்களோட சந்தோசமா வாழோணும், உங்களச் சந்தோசமா வச்சிருக்கோணும் எண்டுதான் நினைக்கிறன். ஆனா… நெஞ்சுக்க நிறையப் போராட்டம் நடக்குது. என்னால சமாளிக்க ஏலாம இருக்கு. உங்கள நெருங்கினாலோ நீங்க நெருங்கினாலோ என்னவோ கூசுது…” என்றதும், “போதும் நிப்பாட்டடி!” என்றவன் சற்று நேரத்துக்கு அவள் நெற்றியோடு தன் நெற்றியை முட்டியபடி விழிகளை மூடிக்கொண்டான்.

அவனுக்குள்ளும் ஒரு போராட்டம். உள்ளத்தில் ஒரு துடிப்பு. அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ, “சரி தள்ளிப்படு!” என்றவன் கட்டிலின் கரையாய் அமர்ந்து கைகளை விரித்தான்.

நொடி தயக்கம் தோன்றினாலும் அதை உதறி அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டாள் நிரல்யா.

அவளைத் தன் மார்பில் சேர்த்துத் தலையை வருடிக் கொடுத்தான். “எதையும் யோசிக்காமப் படு!” என்றான் கரகரத்த குரலில். “சொறி!” அவள் குரல் கமறியது. அவன் ஒன்றும் சொல்லவில்லை. கட்டில் தலைமாட்டில் தலையைச் சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான். பெருமூச்சு ஒன்று பெரிதாய் வெளியேறிற்று.

*****




அவர்களின் திருமணத்துக்கு நெருங்கிய உறவு, நண்பர்கள் தவிர்த்து வேறு யாரையும் அவர்கள் அழைக்கவில்லை. நிரல்யாவும் தன்னோடு படித்தவர்கள் பழகியவர்கள் என்று யாருக்கும் சொல்லவில்லை.

“ஆருக்காவது சொல்லோணும் எண்டு நினைச்சாச் சொல்லு நிரல்.” என்று அனந்தன் சொல்லியும் வேண்டாம் என்றுவிட்டாள். இங்கே நிவேதா அங்கே சரண்யா இவர்கள்தான் அவளின் நெருங்கிய தோழிகள். இருவருக்குமே அவளின் இறந்தகாலம் தெரியும். சும்மாவே மனம் கலங்கிக்கொண்டு இருக்கையில் அவர்களையும் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை இல்லாததால் சொல்லாமலேயே விட்டுவிட்டாள். திருமணம் முடிந்த பிறகு திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி வைத்து, அழைக்காததற்கு மன்னிப்பும் கேட்டிருந்தாள்.

நிவேதா செல்லமாகக் கோபித்துக்கொண்டுவிட்டு வீட்டுக்கு ஒரு நாளைக்கு விருந்துக்கு வருமாறு சொல்லியிருந்தாள்.

சரண்யாவுக்கு உண்மையில் மிகுந்த கவலை. தற்போது இரண்டு குழந்தைகளோடு இருக்கும் அவள், சொல்லியிருக்க நிச்சயம் குடும்பமாகப் போயிருப்பாள். அதேநேரம் தோழியின் மனநிலையும் விளங்கிற்று. அதில் கோபப்படாமல், மனம் நிறைந்த வாழ்த்தைத் தெரிவித்துவிட்டு ஒரு நாளைக்கு எல்லோருமாக அவளைப் பார்க்க வருவதாகச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

அவள் மூலம் அறிந்த மகிந்த தயக்கத்துடன் சிசிரவிடம் விசயத்தைப் பகிர்ந்துகொண்டான். சிசிரவால் சற்று நேரத்துக்குப் பேசவே முடியாமல் போயிற்று.

முற்றிலுமாய் ஒடிந்த மரக்கிளை ஒன்று சிறு இழையில் இன்னும் தொங்கிக்கொண்டு கிடப்பதுபோல் எப்போதோ முடிந்துபோன ஒன்று இன்னும் வலி தராமல் இல்லை. இந்த ஊமைக்காயம் அவனுக்குக் காலத்துக்கும் இருக்கத்தான் போகிறது போலும். ஆனால் அவனின் ‘லஸ்ஸன கெல்ல’ இன்னொரு வாழ்வினுள் நுழைந்துகொண்டதில் அவன் உள்ளத்தில் ஆனந்தக் கண்ணீர்.

“சிசிர?”

“ம்?”

“என்ன மச்சான்?”

“இல்ல ஒண்டும் இல்ல. சந்தோசமா இருக்கு. அவள் நல்லாருக்கோணுமடா! போட்டோ இருக்கா?”

இப்போது மகிந்த தயங்கினான்.

“மச்சான் ப்ளீஸ்! அவளை அவளின்ர கலியாணக் கோலத்தில எவ்வளவு வடிவா இருக்கிறாள் எண்டு எனக்குப் பாக்கோணும். உன்னட்ட இருக்கு எண்டு தெரியும். அனுப்பு ப்ளீஸ்.”

அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் அனுப்பிவிட்டான் மகிந்த.

ஆசையாய் எடுத்துப் பார்த்தவனின் விழிகளில் கோடாய்க் கண்ணீரும் உதட்டில் முறுவலும் ஒருங்கே தோன்றிற்று. அத்தனை அழகாய்க் கண்ணைப் பறித்தாள் அவனின் தேவதைப்பெண். சோடிப்பொருத்தம் வேறு அம்சமாய் இருந்தது. அவளை மட்டும் சற்றே பெரிதாக்கிப் பார்த்தான். தலையலங்காரம், முக அலங்காரம், பொருத்தமான நகைகள் என்று பார்க்க பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. அந்த விழியோரத்தில் தெரியும் மெல்லிய வலியை அவன் கண்கள் கண்டுகொண்டதில் உள்ளம் கலங்கிப் போனது. ‘மகே லஸ்ஸன கெல்ல. இன்னும் அதில இருந்து வெளில வரேல்லையா நீ? என்னை மறந்திடு ப்ளீஸ். உன்ர மச்சானோட நீ சந்தோசமா இருக்கோணும் நிரா!’ உள்ளத்தின் ஆழத்திலிருந்து வேண்டிக்கொண்டான்.

தொடரும்...

மக்களே, நாளைக்கு நாளை மறுநாள் எபி போட முடியுமா தெரியாது. மகளுக்கு நல்ல காய்ச்சல். அவவுக்கு சுகமாகிற வரைக்கும் எனக்குக் கதை எழுதச் சிரமம். முடிந்தால் எழுதிப் போட்டுடுவன். இல்லாவிட்டால் இனித் திங்கள்தான் வருவேன். சொறி.

 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 43


அடுத்த ஒரு வாரம் அது பாட்டுக்குக் கடந்திருந்தது. ஓரளவுக்குத் தன் அறைக்குள் அனந்தனின் இருப்பைப் பழகிக்கொண்டாள் நிரல்யா. அவள் குளியலறையில் அவன் குளித்தான். அவனின் ஆடைகள் சில அவளின் அலமாரிக்குள் இடம் பிடித்துக்கொண்டன. வேலை முடிந்து வருகிறவன் நேராக இவள் அறைக்கே வந்து குளித்து, உடை மாற்றினான். அழுக்கு உடைகள் போடும் கூடைக்குள் அவளுடைய உடைகளோடு அவனுடையவைகளும் விழுந்தன. இது எல்லாவற்றையும் விட முக்கியமாய் இரவுகளில் அவன் அணைப்பில் உறங்கப் பழகியிருந்தாள்.

அன்று இரவும் உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்த பிறகு, கட்டிலில் தலையணையை முதுகுக்குக் கொடுத்துவிட்டுச் சாய்ந்து அமர்ந்துகொண்டவன், “அழுகைக்கு டைமாச்சு, வா!” என்றான் வேண்டுமென்றே.

அவளுக்குக் கோபம் வந்தது. சும்மா இருந்தவள் அறைக்குள் புகுந்து, நெருக்கத்தைக் காட்டி அவளை அழ வைத்ததே அவன்தான். இதில் நக்கல் வேறு செய்வானா? அவனை நன்றாக முறைத்தாள்.

“என்ன முறைப்பு? இதுதானே ஒவ்வொரு நாளும் நடக்குது. என்னவோ நான் இல்லாததச் சொன்ன மாதிரி உனக்குக் கோவம் எல்லாம் வருது!” என்றான் விடாமல்.

“நீங்க ஒண்டும் செய்ய வேண்டாம், போங்க!” என்று அவள் மறுபக்கம் திரும்பிப் படுத்துக்கொள்ளவும், “அப்ப நான் வேண்டாம்?” என்றான் சின்ன சிரிப்புடன்.

“இல்ல வேண்டாம்!”

“என்ர கைக்க படுக்க வேண்டாம்?”

“வேண்டாம்!”

“ஆனா இதெல்லாம் எனக்கு வேணுமடி, வா!” என்றவன் அவளை ஒரே இழுவையாக இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டான்.

“விடுங்க நீங்க! நக்கலடிச்சுப்போட்டு…” என்று முகம் சுருக்கி அவனிடமிருந்து விடுபட முயல, “இப்ப நீ இப்பிடியே ஒழுங்கு மரியாதையாப் படுகிறாய். இல்லை எண்டு வை…” என்றவன் பார்த்த பார்வையில் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு, நெஞ்சினில் முகத்தை முழுவதுமாகப் புதைத்துக்கொண்டாள்.

அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள அவனையே கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டாள்.

அவள் இதயம் தாறுமாறாகத் துடிப்பதை உணர்ந்தவனுக்குச் சிரிப்பு வந்தது, “அப்பிடி நான் என்ன செய்திடுவன் எண்டு நினைச்சாய் நிரல்?” என்றான் சிரிக்கும் குரலில்.

அவளுக்குப் பதற்றம் கூடிப் போயிற்று. “நான் ஒண்டுமே நினைக்கேல்ல!” என்றாள் வேகமாக.

“பிறகு என்னத்துக்கு உனக்கு இவ்வளவு பயம்?”

“நான் பயப்பிடுறன் எண்டு உங்களிட்டச் சொன்னனானா??

“ஓ! நீ பயப்பிடேல்லை?”

“எனக்கு நித்திரை வருது.”

“உன்ர இதயம் துடிக்கிற துடிப்பைப் பாக்க அப்பிடித்தான் தெரியுது.” என்றான் சிரிக்கும் குரலில்.

“மச்சான்!” என்று விலக முயன்றவளை விடாமல், “சரிசரி, நான் ஒண்டும் சொல்லேல்ல படு!” என்றவன் தானே அவள் தலையைத் தன் மார்பில் சாய்த்துக்கொண்டான்.

“நீங்க வரவர நிறைய கதைக்கிறீங்க.”

“ம்ஹூம்?” அவனுக்கும் அது புரிந்துதான் இருந்தது.

“அதைவிட வரவர சேட்டை கூடிக்கொண்டு போகுது.”

மெலிதாய் நகைத்தவன், “அது பிடிச்சிருக்கே. என்ன செய்யச் சொல்லுறாய்?” என்றுவிட்டு அவள் கன்னத்தில் தன்னை மீறி அழுத்தி முத்தமிட்டான். அதிர்ந்து விழி விரித்து அவள் நோக்க, அவன் பார்வையும் அவளில்தான். எப்போதும் அவன் கண்களில் கோபத்தை மட்டுமே கண்டு பழகியவள் இன்று வேறு எதையோ கண்டாள். அது அவள் உள்ளத்துக்குள் புகுந்து என்னவோ செய்ய முயல, பயந்துபோனவள் மிக வேகமாய் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள். இதயம் இன்னும் அதிகமாய்த் துடித்தது.

அவனும் நொடியில் தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை உணராமல் இல்லை. சின்ன சிரிப்புடன் கட்டில் விளிம்பில் தலை சாய்த்து விழிகளை மூடிக்கொண்டான். உள்ளத்தில் ஒரு நிறைவு. இந்தக் கணத்தில் இதைத் தாண்டிய எதுவும் பெரிதாய் அவனுக்கு வேண்டுமாய் இல்லை.

அவளுக்கும் அவன் அணைப்பும் அருகண்மையும் வேறு யோசிக்க விடுவதில்லை. மனத்தைச் சஞ்சலங்கள் அண்டுவதில்லை. பழைய எந்த எண்ணங்களும் அவளைப் பந்தாடுவதில்லை. அவள் உணரும் அவன் இதயத்தின் துடிப்பும், கதகதப்பும் அவளை அமைதிப்படுத்தியதில் நிம்மதியாக உறங்க ஆரம்பித்திருந்தாள்.

*****

மகளுக்கு நடந்து முடிந்த திருமணத்தைப் பற்றிப் பேசிச் சிலாகித்து, மகிழ்ந்து, கழுத்தில் தாலியும் நெற்றியில் திலகமுமாய் அவள் நடமாடும் அழகைக் கண்டு பூரித்து முடிக்கவே சுந்தரலிங்கம் அமிர்தவல்லி தம்பதிக்கு அந்த வாரம் தேவையாய் இருந்தது. அப்படி மகளையே ஆசையாய் வட்டமிட்ட அமிர்தவல்லியின் விழிகள், இன்னுமே அவர்களுக்குள் அனைத்தும் சரியாகவில்லை என்பதையும் கண்டுகொண்டது.

அவள் இன்னும் அவனிடம் மெல்லிய விலகல் காட்டுவதும், அவன் அதை ஏற்று நடப்பதையும் பார்க்கவே தெரிந்தது. அன்றிலிருந்து அவளே அறியாமல் அவனிடம் அவளைத் தள்ளும் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

முடிந்தவரையில் உணவு வேளையில் நால்வரும் இருப்பதுபோல் இவ்வளவு காலமும் பார்த்துக்கொண்டவர் இப்போதெல்லாம் கணவரோடு தன் உணவை முதலே முடித்துக்கொண்டு, “நந்தா வந்தா சாப்பாட்டைப் போட்டுக் குடு பிள்ளை. இப்ப இப்ப என்னால முந்தி மாதிரி ஓடியாடி வேலை செய்ய ஏலாம இருக்கு.” என்றபடி கணவரோடு அறைக்குள் ஒதுங்க ஆரம்பித்தார்.

அவன் உடைகள் கொடியில் காய்வதைக் கண்டுவிட்டு, “அந்தச் சின்ன வயசிலேயே நந்தன் என்னட்டைத் தரமாட்டானம்மா. குளிக்கேக்க தானே தோச்சுப் போட்டுடுவான். கொண்டுவாப்பு மிஷினுக்க போடுறன் எண்டு சொன்னாலும் தானே கொண்டு வந்து போட்டு, தானே காயப்போட்டு, காஞ்சதும் மேல எடுத்துக்கொண்டு போயிடுவானே தவிர என்னைச் செய்ய விட்டதே இல்ல. இனி அதையெல்லாம் நீ பாக்கோணும் பிள்ளை. முந்தி மாதிரியே இப்பவும் இருக்கிறது எண்டா என்னத்துக்கு ஒரு கலியாணம்? அவன் உனக்கு உதவியா இருக்கிற மாதிரி நீயும் அவனுக்கு உதவியா இருக்கோணும்.” என்றபோது அவளுக்கும் அது சரி என்றே பட்டது.

விரல்களில் மெல்லிய குறுகுறுப்பு உண்டானாலும் முதல் நாள் அவன் கழட்டிப்போட்டவற்றை மெஷினுக்குள் தன்னுடையவைகளோடு போட்டு எடுத்துக் காயப்போட்டாள். ஏற்கனவே கொடியில் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு போய் அவன் அறையில் வைத்து மடித்தாள்.

கீழே அவள் அறையில் அவளைக் காணாமல் மேலே வந்த அனந்தன், அவள் தன் கட்டிலில் இயல்பாய் அமர்ந்திருந்து தன் உடைகளை மடிப்பதைக் கண்டுவிட்டு, “உன்னை ஆர் இதையெல்லாம் செய்யச் சொன்னது?” என்றபடி அறைக்குள் உள்ளிட்டான்.

“அது அம்மா…” என்று அவர் சொன்னவற்றைச் சொன்னாள் அவள்.

“ஓ!” மாமியின் மனநிலை அவனுக்கு விளங்கிப் போயிற்று.

“அப்பிடியே அயர்ன் பண்ணியும் வச்சுவிடு!” என்றான் சின்ன சிரிப்புடன்.

அவள் சரி என்று தலையை ஆட்டவும், “அந்தளவுக்கு நல்லவளாடி நீ?” என்று அவள் தலையில் குட்டிவிட்டு, “பிடிக்காட்டிச் செய்யாத நிரல். எனக்கு இதெல்லாம் ஒரு வேலையே இல்ல!” என்று அணிந்திருந்த சேர்ட்டை கழற்றிப் போட்டுவிட்டு, அவளின் அருகிலேயே அமர்ந்து, கட்டிலில் குறுக்காய் மல்லாந்து விழுந்து, கைகளையும் திசைக்கொன்றாய் விசிறினான்.

அதுவே அவன் மிகுந்த களைப்பில் இருப்பதைச் சொல்ல, “குடிக்க ஏதும் தரவா?” என்றாள் இயல்பாய்.

“ம்!”

“அம்மா பேஷன் ஃப்ரூட் வாங்கி வச்சவா. அதுல ஜூஸ் போட்டுக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு அவள் எழுந்துகொள்ள, “கீழ போய்த் திரும்பவும் மேல வருவியா? வேலைய முடி ரெண்டுபேரும் கீழ போவம்.” என்றான் அவள் கரம் பற்றித் தடுத்தபடி.

“இத நான் பிறகு செய்றன். நீங்க வாங்க, நல்லாக் களைச்சுத் தெரியிறீங்க.” என்று அவள் கையைப் பற்றியிருந்த அவன் கையையே பற்றி, அவனை இழுத்து எழுப்ப முயன்றாள்.

அதற்கு மாறாய் அவளை இழுத்துத் தன் மீது போட்டு, “காயம் எப்பிடி இருக்கு? செக் பண்ணுவமா?” என்று அவன் கேட்டதுதான் தாமதம், “கேடுகெட்ட மச்சான். வரவர மோசமா வாறீங்க!” என்றபடி அவனிடமிருந்து தப்பித்து அடுத்த கணம் கீழே நின்றாள்.

அனந்தனால் சிரிப்பை அடக்கவே முடியவிலை. அதைப் பற்றிக் கதைத்தால் போதும். அவள் படுகிற பாடு அவனுக்கு அப்படிச் சிரிப்பு மூட்டும். இப்போதும் தன்னிடமிருந்து தப்பித்து ஓடியவளை எண்ணிச் சிரித்தபடி புரண்டு படுத்தான்.

*****
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
இப்போதெல்லாம் ஒன்றாகவே வேலைக்குச் சென்று திரும்ப ஆரம்பித்திருந்தார்கள் இருவரும். கடையில் வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மாதச் சம்பளத்தை அதிகமாகக் கொடுத்து மகிழ்ந்தார் சுந்தரலிங்கம். அன்று நிவேதா அவர்களை விருந்துக்கு அழைத்திருந்தாள்.

காலையிலேயே இருவரும் அனந்தனின் பஜிரோவில் புறப்பட்டனர். கிளிநொச்சிச் சந்தையில் பழங்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் புறப்பட்டபோது, சிசிர அனுப்பிய பார்சலும், அதைப் பார்க்கத் தான் வந்ததும் நினைவில் வந்து அவள் மனத்தைக் கலைக்க முயன்றன. வேகமாக எதிர்ப்புறத்தில் முகத்தைத் திருப்பித் தன் உணர்வுகளை அனந்தனிடமிருந்து மறைக்க முயன்றாள்.

அன்று அவன் திட்டமிட்டது போன்று அவனே வந்து நின்றிருந்தால் அவள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்று ஒருகணம் தோன்றியதும் தவித்துப் போனாள்.

இது கூடாது, இப்படியெல்லாம் யோசித்து அருகிலிருக்கிறவனை அசிங்கப் படுத்தாதே என்று அறிவு அறிவுறுத்தினாலும் சிந்தனைகள் அவள் கட்டுப்பாட்டை மீறி ஓடியிருந்தன.

அப்போது அவள் மடியில் கிடந்த கரத்தை அழுத்திப் பற்றியது அனந்தனின் கரம். நீர் திரையிட்டுவிட்ட விழிகளோடு தன்னிச்சையாய்த் திரும்பி அவனைப் பார்த்தவளின் முகத்தில் பெரும் சங்கடம். அவன் பார்வை அப்போதும் ஒருவிதத் தீவிரத்துடன் வீதியில் இருந்தாலும் அதே கை உயர்ந்து அவளைச் சுற்றி அரவணைத்துத் தன் தோளில் சேர்த்துக்கொண்டது.

உள்ளம் உடைய, அவன் தோளில் முகம் புதைத்து, “சொறி மச்சான். நானா நினைக்கேல்ல. தானா நினைவு வந்திட்டுது.” என்றாள் கரகரத்த குரலில்.

பஜிரோவை ஓரம் கட்டி நிறுத்தியவனும் சில நொடிகளுக்கு அசையவேயில்லை. அவன் முகத்தில் பெரும் இறுக்கம்.

கோபித்துக்கொண்டானோ, கணவனாய் நான் இருக்கையில் இன்னொருவனை நினைக்கிறாள் என்று அவளைத் தவறாக நினைக்கிறானோ என்கிற தவிப்புடன், “மச்சான்…” என்று அவள் நிமிர அவன் பார்வை அவளிடம் திரும்பிற்று.

சில கணங்களுக்கு அவள் விழிகளையே கூர்ந்தவன் அவளை அணைத்திருந்த கையாலேயே பின் தலையைப் பற்றித் தன்னிடம் கொண்டு வந்து, அவள் இதழ்களோடு தன் உதடுகளைச் சேர்த்தான்.

நம்ப முடியாமல் திகைத்து விழி விரித்தாள் நிரல்யா. அவள் பார்வையை உள்வாங்கியபடியே அவள் இதழ்களில் மூழ்கினான் அவன். நொடிகள் பல கடந்து அவன் விடுவித்தபோது அசையும் நிலையில் அவள் இல்லை. அவனையே பார்த்து விழித்தாள். சிவந்து நடுங்கிய கீழுதட்டை ஆட்காட்டி விரலினால் அழுத்தி வருடிவிட்டவன் அவள் விழிகளைப் பார்த்து, “இனி உனக்கு வேற நினைவு வராது!” என்றான் கரகரத்த குரலில். அவள் தேகம் முழுவதும் கிடுகிடு என்று நடுங்கிற்று. வேகமாக விலகித் தன் இருக்கையில் புதைத்தாள். அதைச் சாதாரண முத்தம் என்கிற கணக்கில் சேர்க்க முடியாமல் அவள் உள்ளத்திலும் உடலிலும் மிகப்பெரிய மாற்றத்தை நிகழ்த்தியிருந்தான் அனந்தன்.

அவன் இயல்பாய் மீண்டும் பஜிரோவைக் கிளப்ப அவளுக்கு நிவேதாவின் வீடு சென்று சேர்கிற வரைக்கும் அதன் தாக்கம் அப்படியே இருந்தது. என்னவோ இன்னும் அவன் உதடுகள் தன் இதழ்களில் பதிந்தே கிடப்பது போலொரு மாயையில் நெஞ்சு இன்னுமே அடித்துக்கொண்டிருந்தது. எதையும் சிந்திக்க முடியா நிலையில் அப்படியே அமர்ந்திருந்தாள்.

நிவேதாவின் வீட்டின் முன்னால் அவன் பஜிரோவை நிறுத்தியபின்னும் அவள் தன்னிலை மீள்வதாய் இல்லை. இறங்கி, அவள் பக்கம் வந்து அவளையும் இறக்கி, “வா!” என்று அவளின் நண்பி வீட்டுக்கு அவன்தான் அழைத்துப் போனான்.

“வாங்கோ அண்ணா, வாடி!” என்று வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றாள் நிவேதா. அவள் மணமுடித்து ஒரு பெண் குழந்தை இருந்தாள். அவளின் அன்னை குடல் புற்று நோயினால் அவதிப்படுகிறார் என்று முதலே தெரியுமாதலால் முதலில் அவரைச் சென்று பார்த்தவர்கள் திகைத்துப்போனார்கள்.

முதலே அன்னைக்கு இப்படி என்று சொல்லி நிவேதா கவலைப்பட்டிருக்கிறாள்தான். அப்படியான பொழுதுகளில் எல்லாம் நம்பிக்கையளிக்கும் விதமாகவும் ஆறுதலாகவும் பேசிவிட்டு வைப்பாள் நிரல்யா. அதைத் தாண்டி அவரைப் பற்றி ஆழமாக யோசிக்கும் அளவுக்கு அவள் நிலை இருந்ததில்லை. இன்றோ எழும்புக்கூடாகி, மலம் சலம் எல்லாமே செயற்கையாக வெளியேறும் நிலையில், குடல் புற்றுநோய் முற்றி, கட்டிலோடு கட்டிலாகக் கிடந்தவரைக் கண்டு விக்கித்துப்போனாள்.

அவர் தன் இறுதி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று யாரும் சொல்லாமலேயே விளங்கிப் போயிற்று. என்ன சொல்வது என்று தெரியாது தவிப்புடன் திரும்பித் தோழியைப் பார்த்தாள். கலங்கும் விழிகளை அடக்கிப் புன்னகைக்க முயன்றபடி, “அம்மா, ஆர் வந்திருக்கினம் எண்டு தெரியுதா? நிரல்யாவும் அவளின்ர மச்சானும்.” என்று அவருக்கு அவர்களைக் காட்ட முயன்றாள்.

தெரிகிறது என்பதுபோல் தலையை அசைத்தவர், வாடிய முறுவல் ஒன்றைத் தர முயன்றபடி நிரல்யாவின் கரம்பற்றித் தன்னருகில் அமர்த்தி, “பிள்ளை குட்டி எண்டு சந்தோசமா வாழோணுமாச்சி.” என்று அவள் தலையைத் தடவிட்டார்.

உடைப்பெடுக்கப் பார்த்த விழிகளைக் கட்டுப்படுத்தியபடி, “உங்களுக்கும் சுகமாகும் அன்ட்ரி. கவலைப்படாதீங்க.” என்று பொய் வார்த்தைகளை உதிர்த்தாள்.

அவருக்குத்தான் தன் நிலை தெரியுமே. ஒன்றும் சொல்லாமல் அனந்தன் புறம் திரும்பி, “பிள்ளையை நல்லா வச்சுக்கொள்ளுங்கோப்பு.” என்றார்.

“கட்டாயம் அன்ட்ரி.” என்று அவர் கரம் பற்றிச் சொன்னான் அவன்.

சற்று நேரம் அவரோடு இருந்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை.

“என்னடி இது?” என்றாள் நிரல்யா நெஞ்சடைக்க.

“என்ன செய்யச் சொல்லுறாய்? மிச்சமா இருக்கிற நாளுக்கு அவா வீட்டிலேயே இருக்கட்டும் எண்டு சொல்லிட்டினம். என்னால முடிஞ்ச வரைக்கும் நல்லாப் பாக்கிறன். மிச்சம் கடவுள் விட்ட வழி. சில நேரம் அவா படுற பாட்டைப் பாக்கேக்க, கெதியா அந்த உயிர் போயிற்றா பரவாயில்லையோ எண்டு எனக்கே இருக்குமடி. அந்தளவுக்குக் கிடந்து உத்தரிக்கிறா.” என்றவளுக்கு என்ன ஆறுதல் வார்த்தைகளைச் சொல்வது என்று தெரியாது அணைத்துக்கொண்டாள் நிரல்யா.

அனந்தன் அங்கே நிவேதாவின் கணவன், தகப்பனோடு இருப்பதைக் கண்டுவிட்டு, “அத விடு. அண்ணாவோட போய் இரு நிரல். ஏதாவது குடிக்கக் கொண்டுவாறன்.” என்று அவள் குசினிப் பக்கம் நகர, “அவர் அங்க கதைச்சுக்கொண்டுதானே இருக்கிறார்.” என்றபடி தானும் அவளோடு நடந்தவள், “உண்மையா சொறி நிவி. அன்ட்ரிக்கு இப்பிடி எண்டு நீ சொல்லி இருக்கிறாய்தான். நான்தான் அதப் பெருசா யோசிக்கவே இல்ல. தெரிஞ்சிருந்தா சாப்பாட்டுக்கு வந்திருக்க மாட்டன்.” என்றாள் மன்னிப்புக் கோரும் குரலில்.

“லூசா நீ? உன்னச் சாப்பாட்டுக்குக் கூப்பிடச் சொல்லிச் சொன்னதே அம்மாதான். தப்பித் தவறி தனக்கு ஒண்டு நடந்திட்டா உன்னைக் கூப்பிடவே ஏலாம போயிடுமாம் எண்டு வேற சொன்னவா.” என்றதும் நிரல்யாவுக்கு வாயடைத்துப் போனது.

“பிரைவேட்டா ஏதும் காட்டிப் பாப்பமாடி? இவரைக் கேட்டுப் பாக்கவா?” மனம் கேளாமல் விசாரித்தாள் நிரல்யா.

“கொழும்புக்கு கூடக் கூட்டிக்கொண்டு போனதுதான் நிரல். இனி ஒண்டும் செய்யேலா எண்டுதான் அங்கேயும் சொன்னவே.” என்று புன்னகைக்க முயன்றவள் முடியாமல் அழுதிருந்தாள். “வெளில காட்டிக்கொள்ளக் கூடாது எண்டு நினைச்சாலும் பயமா இருக்கடி. அம்மாக்கு ஒண்டு எண்டா எப்பிடித் தாங்கப் போறனோ தெரியா. அதிசயம் ஏதும் நடந்து சுகமாகிட மாட்டாவா எண்டு இருக்கு.” என்றதும் அவள் விழிகளும் கலங்கிப் போயின.

“சத்தியமா எனக்கு என்ன சொல்ல எண்டே தெரியேல்ல நிவி. கவலைப்படாத. தைரியமா இரு.” என்று அவள் முகம் துடைத்துவிட்டவள் அவளுக்கு அருந்தத் தண்ணீர் கொடுக்கவும், “சொறியடி, உன்னச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டுட்டு நான் என்ன செய்றன் எண்டு பார்…” என்று வேகமாகத் தன்னைத் தேற்றிக்கொண்டு, அவர்களுக்கு அருந்தச் சோடாவும், பலகாரங்களையும் தட்டுகளில் வேக வேகமாக எடுத்து வைத்தாள்.

அவள் பலகாரத் தட்டை எடுத்துக்கொள்ள, நிரல்யா சோடாக்கள் நிறைந்திருந்த கண்ணாடிக் குவளைகள் இருந்த தட்டை எடுத்துக்கொண்டாள்.

அங்கே நிவேதாவின் மகள் அனந்தனின் மடியில் அழகாய் இடம் பிடித்து, அவன் மார்பில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவனும் மிக இலாவகமாக அவளை வைத்திருந்த அந்தக் காட்சி ஏதோ ஒரு வகையில் நிரல்யாவின் உள்ளத்தை அசைத்துவிட்டதில் தன்னை மறந்து அவனையே பார்த்தாள். அந்தப் பார்வை அவனைச் சென்று சேர்ந்தது போலும். நிவேதாவின் தகப்பனிடம் எதுவோ சொல்லிக்கொண்டிருந்தவன் திரும்பி இவளைப் பார்க்க, இருவர் பார்வையும் நொடி நேரம் கவ்வி விலகிற்று.

நொடியில் நிவேதாவின் அன்னையின் நிலை மறந்து பஜிரோவில் வைத்து அவன் முத்தமிட்டது கண்ணுக்குள் வந்து போனதில் படபடத்துப்போனாள். அதன் பிறகு அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவள் கையில் இருந்த கண்ணாடிக் குவளைகளில் ஒன்றை அவள் முகம் பார்த்தபடி அவன் வாங்கியபோதும் நிமிரவில்லை.


தொடரும்...

மகளைப் பற்றி அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி. இப்ப பரவாயில்ல. நன்றாக இருக்கிறா. கருத்திடும் அனைவருக்கும் நன்றி.

 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 44


அன்று காலையில் எழுந்து சலிப்புடன் வேலைக்குத் தயாராகிக்கொண்டிருந்தான் சிசிர. இப்போதெல்லாம் அவன் நிலை இதுதான். என்னவோ எதிலும் பற்றுமில்லை, ஆர்வமுமில்லை. படித்த படிப்புக்குச் சம்மந்தமே இல்லாமல் பார்க்கும் வேலை, எதற்காகவோ ஓட ஆரம்பித்து கடைசியில் எங்கு வந்து நிற்கிறோம் என்கிற கேள்வி, அடுத்து என்ன என்று இன்னுமே யோசிக்க முடியா நிலை என்று அவன் அவனாக இல்லை.

ருக்க்ஷி காலைச் சாப்பாட்டுக்கு அழைக்கவும் வந்து உணவை முடித்துக்கொண்டு, அதற்கிடையில் விழித்துவிட்ட மகளையும் கொஞ்சிவிட்டு, மனைவிக்குக் கவனம் சொல்லிக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டவனின் மனத்தில் அமைதி என்பது மருந்துக்கும் இல்லை.

அன்று, ருக்க்ஷி அவனைப் பிடிவாதமாக நிறுத்திவைத்து, அவன் மனத்தைத் திறக்க வைத்தபிறகு, அவனோடேயே இவர்களின் வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருந்தாள்.

அப்படி மருமகள் மகனோடு சமாதானமாகி வெளிக்கிடவும், ஆவலாய் அவர்கள் முகம் பார்த்த மத்துமவிடம், “இப்பிடி நீங்க நடந்திருக்கவே கூடாது மாமா.” என்றிருந்தாள் கலங்கியிருந்த மனத்தோடு.

“வேற வழியே இல்லாம இதுதான் வாழ்க்கை, இதைத்தான் வாழ்ந்தாக வேணும் எண்டுற கட்டாயத்தில் எங்க மூண்டு பேரையும் கொண்டு வந்து நிப்பாட்டி இருக்கிறீங்க. என்னால அவரை விட்டுக்கொடுக்க முடியேல்ல. அவரால மனுசி பிள்ளைகளை விட்டுட்டுப் போக முடியேல்ல. அந்த அக்கா… இவருக்காக எல்லாம் செய்து, இத்தினை வருசம் இவருக்காகக் காத்திருந்து கடைசில ஏமாந்து நிக்கிறா. எங்க மூண்டு பேருக்கும் காலத்துக்கும் இந்த வலியும் வேதனையும் இருக்கப் போகுதே மாமா. இவருக்கு நினைவு வந்தா என்னாகும், இல்ல எனக்கு எல்லாம் தெரிய வந்தா என்னாகும் எண்டு நீங்க எப்பிடி யோசிக்காம விட்டீங்க? அண்டைக்கு இவர் உங்களிட்டக் கேள்வியாக் கேக்கேக்கை கூட எனக்கு ஒண்டும் விளங்கேல்ல. ஆனா இண்டைக்கு… ஏற்கனவே ஒருத்திய இந்தளவுக்குக் காதலிச்சவர் எனக்கு வேண்டாம் எண்டு நான் சொன்னாலோ, இல்ல எனக்கு உன்னோட வாழ விருப்பமில்லை, டிவோர்ஸ் தா எண்டு இவர் சொன்னாலோ எங்க எல்லாரின்ர வாழ்க்கையும் என்னாகிறது? என்ர ரெண்டு பிள்ளைகளின்ர நிலை என்ன?” என்றதும், “ருக்க்ஷி…” என்றான் சிசிர தவிப்புடன்.

மத்துமவுக்கும் நொடியில் முகம் செத்துச் சுண்ணாம்பாகிற்று.

“இதெல்லாம் மனங்கள் சம்மந்தப்பட்டது மாமா. நீங்க போடுற கணக்குப்படியே வாழ்ந்திட்டுப் போகேலாது. இப்ப எனக்கு அவர் ஆசைப்பட்ட வாழ்க்கைக்குத் தடையா நானும் பிள்ளைகளும் நிக்கிறமே எண்டு நெஞ்சுக்க குத்துது. அந்த அக்கான்ர முகம் பாத்து, ‘உங்கட சந்தோசமான வாழ்க்கைக்கு குறுக்கால நிக்கிறது நானும் பிள்ளைகளும்தான். ஆனா, இது எனக்கே தெரியாம நடந்துபோச்சு’ எண்டு எப்பிடிச் சொல்லுவன்?” என்றபோது அவள் குரல் உடைந்தே போயிற்று.

அதற்குமேல் அவள் கதைப்பதைக் கேட்க முடியாமல், “நீ வா, நாங்க போவம்!” என்று எழுந்துவிட்டான் சிசிர.

“அம்மா, மாமா உங்களோடயே கொஞ்ச நாளைக்கு இருக்கட்டும்.” என்று வேலை முடிந்து வந்த காமினியிடம் சொல்லிவிட்டு அவள் புறப்பட்டுவிடவும் அப்படியே அமர்ந்துவிட்டார் மத்தும. நொடியில் தான் தன் குடும்பத்துக்குச் சுமையாகிவிட்டது போன்றொரு தோற்றம் உண்டாகி அவரை அழுத்தியது.

அன்றிலிருந்து இவர்கள் மூவரும் இங்கேயும் அவர்கள் இருவரும் அங்கேயும் என்றுதான் இருக்கிறார்கள். பெறுமாதம் வந்துவிட்டது, என்னோடு வந்திரு என்று காமினி எவ்வளவோ சொல்லியும் அசைய மறுத்துவிட்டாள் ருக்க்ஷி. அவன் சொல்லிக்கூடக் கேட்கவில்லை. “சுத்திவர வீடுகள் இருக்கு. எல்லாரும் நல்ல பழக்கமும். கைல போன் இருக்கு. அப்பிடி அவசரம் ஏதும் எண்டால் உதவி கிடைக்காமப் போகாது. எனக்கு உங்களோடதான் இருக்கோணும்.” என்று அவள் சொல்லிவிடவும் அவனாலும் மறுக்க முடியவில்லை. கடைசியில் காமினிதான் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார்.

கூடவே, பக்கத்து வீட்டினரில் யாராவது ஒருவர் அவளோடு இருப்பதும் அல்லது இவள் போய் அவர்கள் வீட்டில் இருப்பதும் என்று நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

வார்த்தைகளால் குத்திக் குதறி அவளும் அவன் நிம்மதியைப் பறிக்காமல், அப்படி மகளோடு வந்திருந்து அவனுக்குத் தரும் ஆறுதல் என்பது மிகப் பெரியது. என்ன, அதை ஏற்று, முழு மனத்தோடு அவளோடு ஒன்றி வாழ முடியாமல் அவன்தான் கிடந்து அல்லாடுகிறான்.

ஒரு உறுத்தல், ஒரு வலி, ஒரு பரிதவிப்பு என்று ஏதோ ஒரு உணர்வு அவன் நெஞ்சைக் கவ்விப் பிடித்தவண்ணமே இருந்தது. எண்ணங்கள் எங்கேயோ சுழன்றுகொண்டிருந்தன. சிந்தனைகள் இறந்தகாலக் கிடங்கினுள் சிக்குப்பட்டு நின்றன. சதா அவன் நெஞ்சை அரிக்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஏன், ஏன் இப்படியானது?

அந்தக் கேள்விக்கு நியாயமான ஒரு பதில் கிடைத்தால் கூட மனம் ஆறிவிடும் போலும். ஓடிப் போகாமல், இரு வீட்டுக்கும் அவமானத்தைச் சேர்க்காமல், நியாயமான முறையில் போராடி, நேர் வழியில் அவளைக் கைப்பிடிக்க ஆசைப்பட்டதற்குக் கிடைத்த பலன் இதுவா?

நண்பர்களிடம் கூட முன்னர் போன்று தங்கு தடையற்ற பிணைப்போடு உரையாடவோ பழகவோ முடியவில்லை. அவர்கள் கூட அவனுக்காக, அவர்களின் காதலுக்காக எத்தனை உறுதுணையாக இருந்தார்கள்? எல்லாம் போயிற்றே!

அவர்களும் அவனின் இறந்தகாலத்தை நினைவூட்டிவிடக் கூடாது என்கிற கவனத்தோடு பேசுகையில் விலகல் தானாய் வந்து நின்றது. அதுவும், மகிந்தவும் சரண்யாவும் காதலித்து மணந்து, இரண்டு குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்வதைக் கண்டபோது அப்படி ஒரு வலி அவன் நெஞ்சைத் தாக்கிற்று.

இவர்களுக்காக அவர்கள் சந்தித்துக்கொண்டபோது உண்டான காதல் அவர்களது. யாருக்குமே தெரியாத அவர்கள் காதலே கைகூடிவிட்டது. அந்த வருடத்து மொத்த விவசாய பீடத்து மாணவர்கள் முன்னே, நெஞ்சு முழுக்கத் தளும்பி நின்ற நேசத்தைப் பகிர்ந்தவன் தோற்றுப் போனான்.

நிரல்யாவுக்குத் திருமணமானதிலிருந்து அவளைப் பார்க்க வேண்டும், அவள் திருமணத்திற்கு வாழ்த்த வேண்டும் என்று மிகுந்த ஆசையாய் இருந்தது. எப்படி இருக்கிறாள், அவள் மண வாழ்க்கை எப்படி இருக்கிறது, மச்சானுடன் சந்தோசமாக வாழ்கிறாளா என்று நித்தமும் அவனைச் சுற்றும்
அவள்பற்றிய நினைவுகளிலிருந்து வெளியே வரமுடியாமல் தனக்குள் தானே போராடிக்கொண்டிருந்தான்.

இரவுகளில் உறக்கம் தொலைத்தான். பகல்களில் நடிக்க ஆரம்பித்தான். மகளும் மனைவியும் பக்கத்தில் இருக்கையில் சற்றே அடங்கியிருக்கும் மனது, அவர்கள் இல்லாத பொழுதுகளிலும் உறங்கிய பொழுதிலும் ஊமையாய் அழுது, கண்ணீரை வடித்துக்கொண்டே இருந்தது.

என்னதான் அனைத்தையும் மறக்க வேண்டும், ஒதுக்க வேண்டும், கடந்து வர வேண்டும் என்று திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டாலும் இந்த மனத்தின் அந்தரிப்பிலிருந்து அவனால் தப்பிக்கவே முடியவில்லை.

நாளாக நாளாக அதுவே ஒரு பயமாயிற்று. உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை. மனைவியோடு உள்ளத்திலிருந்து கதைக்கவோ சிரிக்கவோ முடியவில்லை. அவளை மறக்க முடியாமல் இவளுக்கும் துரோகம் செய்கிறோமோ என்று அதுவேறு உறுத்தியது. இப்படி யோசித்து யோசித்து எனக்கு ஏதும் ஆகிவிடுமோ, அவளை விட்டது போன்று என் குடும்பத்தையும் நடுத்தெருவில் விட்டுவிடுவேனோ என்று அது வேறு ஒரு பயமும் பிடித்துக்கொண்டது.

இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் சரண்யாவும் மகிந்தவும் போகிறார்கள் என்று அறிந்ததும் ஒரு ஏக்கம். ஒருகாலம் அவளின் முதன்மை உறவாக இருந்தவன் இன்று அவளுக்கு யாரோவாகி விலகி நிற்கிறான். அவர்களைப் போல் கூட அவளைச் சென்று பார்க்கும் இடத்தில் அவன் இல்லை. அதில், “எப்பிடி இருக்கிறாள் எண்டு பாத்துக்கொண்டு வாடா.” என்று குரல் உடைய மகிந்தவிடம் சொல்லிவிட்டிருந்தான்.



*****

அன்று, சரண்யா குடும்பத்தோடு வருவதாகச் சொல்லியிருந்தாள். அவர்களை எப்படி எதிர்கொள்வது, தன்னால் அவர்கள் முன்னே இயல்பாக இருக்க முடியுமா என்கிற கேள்விகளோடு வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்துகொண்டிருந்த நிரல்யா, ஆட்டோவில் வந்திறங்கிய சரண்யாவைக் கண்டுவிட்டு, “சரண்!” என்று ஓடிப்போய் இறுக்கி கட்டிக்கொண்டாள்.

சரண்யாவும் தன்னால் முடிந்த வரையில் தோழியை ஒருமுறை இறுக்கி அணைத்து விடுவித்தாள். இருவர் விழிகளிலும் மெல்லிய நீர்ப்படலம். இருவர் உள்ளத்திலும் பழைய நினைவுகளின் பேரலை. ஒருவர் உள்ளத்தில் என்ன ஓடுகிறது என்று மற்றவருக்குத் தெரிந்திருந்த போதிலும் காட்டிக்கொள்ளாமல் நலன் விசாரித்துக்கொண்டனர்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“வாங்க சீனியர்!” என்று கண்ணீர் விழிகளோடு சிரித்த முகமாய் மகிந்தவையும் வரவேற்று அழைத்துப்போனாள். ஒரு வயதில் பெண் குழந்தையும் மூன்றரை வயதில் ஆண் குழந்தையும் என்று பூரணமான ஒரு குடும்பம் அவர்களது.

சுந்தரலிங்கமும் அமிர்தவல்லியும் கூட இன்முகமாக வரவேற்று உபசரித்தார்கள். முக்கியமாகச் சின்னவர்கள் இருவரும் பெரியவர்களைக் கவர்ந்தனர்.

மற்ற மூவருக்கும் நலன் விசாரிப்பு, பயணம்பற்றிய விசாரணை தாண்டி என்ன கதைப்பது என்று தெரியாத தடுமாற்றம்.

அதுவும் நிரல்யா அவர்களின் வரவால் மகிழ்ந்து, சிரித்த முகமாய் உரையாடினாலும் அந்தச் சிரிப்பின் பின்னே ஒரு அழுகையின் நடுக்கம் மறைந்து கிடப்பதைக் கண்டுகொண்ட சரண்யாவுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.

அவள் தன்னைக் கவனிப்பதை உணர்ந்து, வேகமாகச் சமாளித்து, “மச்சான் முக்கிய வேலை எண்டு வெளில போயிட்டார். நீங்க வந்ததும் சொல்லச் சொன்னவர்.” என்று இருவருக்கும் பொதுவாகச் சொன்னவள் கைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்து, “மச்சான், சரண் வந்திட்டாள். வாறீங்களா?” என்று வினவி, அவன் வருவதாகச் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அழைப்பைத் துண்டித்தாள்.

“பத்து நிமிசத்தில வந்திடுவாராம். இருங்கோ ஜூஸ் கொண்டு வாறன்.” என்றவள் ஓடிப்போய், அமிர்தவல்லி ஏற்கனவே தயாரித்து வைத்திருந்ததை இரண்டு கண்ணாடிக் குவளைகளில் வார்த்து, கொண்டுவந்து கொடுத்தாள்.

சின்னவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்றது கேட்டுக் கொடுத்தாள். அதுவும் அவர்களின் மகன் நிசாந்தன், அவள் அவனுக்கு மிகவும் பிடித்த சொக்லேட் பாரை நீட்டியதும் அவளோடு நன்றாக ஒட்டிக்கொண்டான். அதன் பிறகு ஒரு இடத்தில் நிற்கவில்லை. அவனோடு வீடு முழுக்க ஓடி ஓய்ந்துபோனாள் நிரல்யா.

“என்னடி உன்ர மகன் இந்தக் கொஞ்ச நேரத்துக்கே இந்தப் பாடு படுத்திறான். எப்பிடிச் சமாளிக்கிறாய்?” என்றுகொண்டு அவன் பின்னே ஓடினாள் நிரல்.

“எல்லாம் இவர் குடுக்கிற செல்லம்தான். வேலை வேலை எண்டு வீட்டில நிக்கிறேல்ல. நிக்கிற நேரம் முழுக்கப் பிள்ளைகளைக் கெடுத்துப்போட்டுப் போறது. பிறகு கிடந்து நான்தான் மல்லுக் கட்டுறது.” என்று அவள் சொன்னதைக் கேட்பதற்கு அங்கே அவள் இல்லை. வாசலைத் தாண்டி முற்றத்துக்கு ஓடிய நிசாந்தனைப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தாள்.

“அந்தத் தம்பி எப்பிடி இருக்கிறாரம்மா?” அவ்வளவு நேரமாக மனத்தை அரித்த கேள்வியை மகள் அங்கே இல்லை என்றதும் கேட்டார் அமிர்தவல்லி.

சரண்யா மகிந்தவைத் திரும்பிப் பார்க்க, “இப்ப பரவாயில்ல அம்மா. நல்லாருக்கிறான். இன்னும் கொஞ்சக் காலம் போக எல்லாம் ஓகே ஆகிடும்.” என்றான் மகிந்த உடைந்த தமிழில்.

“என்னவோ அப்பு. இதெல்லாம் நடக்கோணும் எண்டு இருந்திருக்குப் போல. எல்லாரும் சந்தோசமா இருந்தாச் சரி.” என்றவர் சிசிரவின் மனைவியைப் பற்றியும் கேட்டு அறிந்துகொண்டார்.

சுந்தரலிங்கம் மகிந்தவின் வேலை, அதிலிருக்கும் கடினங்கள், சவால்கள் என்று பொதுவாய்ப் பேச்சை நகர்த்த அனந்தனின் பஜிரோ வீட்டுக்குள் நுழைந்தது.

“வாகனம் வருதெல்லோ. எங்க ஓடுறீங்க?” என்று ஓடிப்போய் நிசாந்தனைத் தூக்கிக்கொண்டு அனந்தனிடம் நடந்தாள் நிரல்யா. அவனும் பஜிரோவை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்.

“ஆர் இந்தப் பெரிய மனுசன்?”

“சரண்ர மகன் மச்சான். பெயர் நிசாந்தன். ஒரு இடத்தில இருக்கிறார் இல்ல. வீடு முழுக்க ஓடி முடிச்சு, இப்ப காணி முழுக்க ஓட ஆரம்பிச்சு இருக்கிறார்.”

“அந்தளவுக்குச் சேட்டைக்காரனா நீங்க?” என்று கேட்டு அவனை வாங்கித் தூக்கிப் போட்டுப் பிடித்தான். தகப்பனைப் போலவே தன்னோடு அப்படி விளையாடும் அவனை நிசாந்தனுக்கு மிகவுமே பிடித்துப் போனதில் அவன் கிளுக்கிச் சிரிக்க, “வா!” என்றபடி நிரல்யாவுடன் வீட்டுக்குள் உள்ளிட்டான் அனந்தன்.

அப்படி அவர்கள் மூவரையும் ஒன்றாகப் பார்த்த பெரியவர்கள் இருவரும் ஆனந்தமாய் அதிர்ந்துபோயினர். இருவர் பார்வையும் ஒருகணம் சந்தித்து மீண்டது. அமிர்தவல்லியின் உள்ளம் அப்போதே ஆண்டவனிடம் தன் சந்ததிக்காய் வேண்டுதல் வைத்தது.

மகிந்தவுக்கு அனந்தனைக் கண்டதும் ஒரு ஒவ்வாத உணர்வுதான் உடனேயே உண்டாயிற்று. இங்கு வருவதற்கு அவன் தயங்கியதே இவனைச் சந்திக்க வேண்டி வருமே என்றுதான். அன்று தானும் இல்லாத நேரத்தில் சிசிரவை இவன் போட்டு அடித்ததும், காலியிலிருந்து ஆட்களை வவுனியாவுக்கே இறக்குவோம் என்று தான் துடித்ததும், அத்தனை அடியை வாங்கி, எழும்பவே முடியாமல் படுக்கையில் கிடந்தவன் நிரல்யாவுக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னதும், ஏன் பல்கலையில் விசாரணை என்று வந்தபோது கூட, அது தன் தனிப்பட்ட பிரச்சனை, தன்னில் தான் பிழை என்று சிசிர பல நெருக்கடிகளுக்கு மத்தியில் சமாளித்தவை எல்லாம் நினைவில் வந்து போயின.

அன்று இவன் அப்படி நடக்காமல் இருந்திருக்க இன்று அவர்கள் இருவரும் பிரிந்திருக்க மாட்டார்களே என்று எழுந்துவிட்ட உணர்வைத் தடுத்து நிறுத்தவே முடியாமல் போயிற்று.

“சொறி, அவசர வேலை ஒண்டு. அதுதான் போயிற்றன்.” என்றபடி அனந்தன் கையை நீட்டியபோது, எழுந்து அவன் கரம் பற்றிக் குலுக்கிய மகிந்தவும், “அதுல என்ன இருக்கு.” என்று மனத்தில் இருந்த கசப்பை விழுங்கியபடி சம்பிரதாயமாகச் சொன்னான்.

“மகளுக்கு எத்தின வயது?” என்று சரண்யாவிடமும் இரண்டு வார்த்தைகள் பேசினான் அனந்தன்.

நல்ல படியாக அவனோடு உரையாடினாலும் இன்னுமே திடகாத்திரமாய் மாறி, உடையாத உடற்கட்டோடு, தாடி மீசை என்று வளர்த்து, கண்களில் தீட்சண்யத்துடன் நின்றிருந்தவனைக் கண்டு காரணமே இல்லாமல் சரண்யாவுக்குள் குளிர் பிறந்தது. இதுவரை காலமும் பெரும் வில்லனாகவே உருவகித்து வைத்திருந்த ஒருவன், இன்று உயிர்த்தோழியின் கணவனாய் நின்றபோது இயல்பாய் எதிர்கொள்ள மிகவுமே சிரமப்பட்டாள். அதைவிட சிசிர மாதிரி இனிமையான ஒருவனை நேசித்தவள் இவனை மாதிரி ஒருவனோடு எப்படி என்று தன்னிச்சையாய்த் தோன்றிவிட நிரல்யாவைத் திரும்பிப் பார்த்தாள்.

அவளுக்கு அப்படி எதுவும் இல்லை போலும். ஓடிப்போய் அவனுக்கும் அருந்தக் கொண்டுவந்து கொடுத்தாள். நிசாந்தனை மடியில் வைத்துக்கொண்டு அவள் தந்ததை வாங்கிப் பருகினான் அனந்தன்.

அவனால் முழுமையாகப் பருக முடியவில்லை. “போன இடத்திலையும் சாப்பிட வேண்டியதாப் போச்சு நிரல். எனக்குக் காணும்.” என்று அவளிடம் பாதிக் கோப்பையை நீட்டினான். சரண்யாவின் மகள் டீப்போவை சுற்றி தத்தி தத்தி நடக்க ஆரம்பித்திருந்ததில் அந்த கிளாஸை அப்படியே வைத்தால் அவள் தட்டி விடுவாளோ என்று பயந்து, அவன் தந்ததை ஒரே மடக்கில் தன் வாயில் ஊற்றிவிட்டு, அங்கே இருந்த எல்லாம் கிளாசுகளையும் பொறுக்கிச் சென்று, குசினியில் வைத்துவிட்டு வந்து மீண்டும் அவனருகில் அமர்ந்தாள் நிரல்யா.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அதைப் பார்த்திருந்த சரண்யா எப்படி உணர்வது என்று தெரியாது அமர்ந்திருந்தாள். அவர்கள் கணவன் மனைவி, அவர்களுக்குள் இதெல்லாம் இயல்புதான் என்று அறிவு எடுத்துச் சொன்னாலும் நிரல்யாவின் மனதும், அவள் முழுமையாக மனம் ஒப்பி அந்தத் திருமணம் நடக்கவில்லை என்பதையும் அறிந்திருந்தவளால் அதை இயல்பாய் எடுக்க முடியவில்லை. இன்னுமே சொல்லப்போனால் சிசிரவின் காதலியாகவே பார்த்துப் பழகியவளை உடனேயே அனந்தனின் மனைவியாய் ஏற்க முடியாமல் தடுமாறினாள்.

தனக்கே இப்படி என்றால் நிரல்யாவின் நிலை? ஆனால், அவளுக்குள் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துவிட்டன என்று அந்த ஒரு காட்சியே அவளுக்குச் சொல்லிற்று.

மகிந்தவுக்கு அனந்தனிடம் இருக்கும் கசப்புணர்வு ஆனந்தனுக்கு மகிந்தவிடம் இல்லை போலும். சிசிரவின் உயிர் நண்பன் என்பதையே மறந்தவன் போன்று நன்றாகவே உரையாடினான்.

“பஜிரோக்க சின்னாக்களுக்கு விளையாட்டுச் சாமானுகள் இருக்கு. எடுத்துக்கொண்டு வா!” என்று திறப்பை எடுத்து நிரல்யாவிடம் நீட்டினான் அனந்தன்.

“ஏன் அண்ணா அதெல்லாம்?” சங்கடத்துடன் மறுத்தாள் சரண்யா. “அங்க நான் வாங்கிப் போட்டதுகளையே கட்டி கட்டி வச்சிருக்கிறாள் இவள்.” என்று மகிந்தவும் சொல்ல, “அதில என்ன இருக்கு. பிள்ளைகளுக்குத்தானே?” என்றிருந்தான் அனந்தன்.

நிசாந்தனுக்கு ஒரு ரிமோர்ட் காரும், சின்னவளுக்கு அவளைப் போலவே தத்தி தத்தி நடக்கும் ஒரு பொம்மையையும் வாங்கியிருந்தான் அனந்தன். அதைக் கண்ட இருவரின் ஆனந்தத்துக்கும் அளவே இல்லாமல் போயிற்று.

இதற்குள் உதவிக்கு இருந்த பெண்ணின் துணையோடு சமையலை முடித்திருந்தார் அமிர்தவல்லி. அவர் நிசாந்தனைக் கவனித்துக்கொள்ள, உதவிக்கும் நிற்கும் பெண் சின்னவளுக்கு விளையாட்டுக் காட்ட, சுந்தரலிங்கத்தோடு இவர்கள் மூவருக்கும் உணவு பரிமாறினாள் நிரல்யா.

“நீயும் வா. பிறகு வேணும் எண்டுறதை நாங்க நாங்களே போட்டுச் சாப்பிடலாம்.” என்றான் அனந்தன்.

“ஓம் பிள்ளை. நீயும் இருந்து சாப்பிடு. மிச்சத்துக்கு நான் பாப்பன்தானே. குட்டித் தம்பியனும் சாப்பிட்டு முடியுது.” என்று அமிர்தவல்லியும் சொன்னார்.

அவளும் அனந்தனின் அருகில் அமர்ந்து தனக்குத் தேவையானதைப் போட்டுக்கொண்டு சாப்பிட்டாள். சரண்யாவுக்குப் பிடிக்கும் என்று சூடை மீன் பொரியல் செய்யச் சொல்லி இருந்தாள் நிரல்யா. அதுவே அவளுக்கு அதற்கு நடுவில் இருக்கும் முள்ளை எடுத்துவிட்டுச் சாப்பிடப் பிடிக்காது. சின்ன வயதில் தொண்டையில் குத்திய முள்ளினால் எந்த மீனாக இருந்தாலும் அமிர்தவல்லி முள்ளு எடுத்துக் கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவாள்.

இன்று நிசாந்தனைக் கவனித்துக்கொண்டிருந்த அமிர்தவல்லி அதைச் செய்ய மறந்திருந்தார்.

அதற்கு மாறாகத் தன் தட்டில் இருந்த மீன்களின் முள்ளை அகற்றிவிட்டு அவளுக்குப் போட்டுக்கொண்டிருந்தான் அனந்தன். அதுவும் சமீபத்தில் காவல்துறையின் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையின்போது நடந்த தவறைப் பற்றி மகிந்தவோடு மிகத் தீவிரமாகக் கதைத்தபடி, மீனுக்கு முள்ளெடுத்து கொடுத்தவனின் கவனத்தில் அவன் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்பது இல்லவே இல்லை என்று அப்பட்டமாகத் தெரிந்தது. வெகு இயல்பாய் அதைச் செய்துகொண்டிருந்தான்.

“மச்சான் விடுங்க, எனக்குக் காணும்.” என்று நிரல்யா தடுத்தபோதும் ஒன்றும் சொல்லாமல் திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தவனின் விழிகளில் கண்டிப்பு இருந்தது. அதன் பிறகு நிரல்யா மறுக்கவில்லை. அவன் முள்ளு எடுத்துத் தந்த மீன் பொரியல்களைச் சாப்பிட ஆரம்பித்தாள். அவனும் அடுத்த கணமே தன் பேச்சுக்குத் திரும்பியிருந்தான்.

இதையெல்லாம் கவனியாயதுபோல் கவனித்த சரண்யாவுக்கு அனந்தன் பற்றிய எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டிருந்தது.

அவர்களுக்கு என்று ஒரு அறையையும் கொடுத்தாள் நிரல்யா. அவ்வளவு தூரம் பயணித்து வந்து, உண்ட களைக்கு நால்வருமே சற்று நேரம் சரிந்து எழும்பினார்கள். மாலைத் தேநீருடன் தோட்டத்தில் நின்று கதைத்துக்கொண்டிருந்தபோது, நிரல்யாவும் நிசாந்தனும் ஓடிப் பிடித்து விளையாடும் தம் விளையாட்டை மீண்டும் ஆரம்பித்திருந்தார்கள்.

“அவரோட விளையாடுறன் எண்டு நீ விழுந்து எழும்பாத நிரல்!” என்ற அனந்தன் நிசாந்தனைத் தூக்கி வைத்துக்கொண்டான்.

முகத்தைப் பொய்யாகச் சுருக்கினாள் நிரல்யா. அவளுக்கு நிறைய நாள்களுக்குப் பிறகு சின்ன பிள்ளையாகவே மாறி அவனோடு விளையாடுவது மிக மிகப் பிடித்திருந்தது. அதில், “தம்பிய இறக்கி விடுங்க மச்சான்.” என்றாள் கெஞ்சலாக.

“என்னத்துக்கு? அவரை விட சின்ன பிள்ளைத்தனமா கால்ல செருப்புக்கூட இல்லாம நீ ஓடவா?” என்று அதட்டினான் அவன்.

நிசாந்தனுக்கும் இவன் தாடியைப் பிடித்துக்கொண்டது போலும். அனந்தனிடமிருந்து இறங்க முயலவில்லை. அதற்கு மாறாய் அவன் கையிலேயே இருந்துகொண்டு, ஆலமர விழுதில் ஆடுவதுபோல் அதில் ஆடலாமா என்கிற ஆராய்ச்சியில் இறங்கி இருந்தான்.

மகிந்தவோடு கதைத்துக்கொண்டிருந்தவன் பேச்சை இடையில் நிறுத்திவிட்டுச் சிறு சிரிப்புடன் திரும்பி அவனைப் பார்த்தான். “தாடியப் பிடிச்சிருக்கா உங்களுக்கு?” என்று கேட்டு, அவன் அணிந்திருந்த டி ஷர்ட்டை உயர்த்திவிட்டு வயிற்றில் வாயை வைத்து ஊதினான். அதில் உருண்டு பிரண்டு சிரிக்காத குறையாகப் பெரிதாகச் சிரித்தான் நிசாந்தன்.

பார்த்திருந்த எல்லோர் முகத்திலும் கூட பெரும் சிரிப்பு.

தானும் வாய்விட்டு நகைத்தபடி அவன் நெற்றியில் தன் நெற்றியைச் செல்லமாக முட்டியவனைக் கண்ணெடுக்காமல் பார்த்தனர் மகிந்தவும் சரண்யாவும்.

அநாவசிய அலட்டல்கள் இல்லாமல், அதே நேரம் நான் கொஞ்சம் பொல்லாதவன்தான் என்கிற உடல் மொழியோடு, பேச்சிலும் எதற்கும் வளைந்து கொடுக்காமல், அன்று முழுக்க அவர்களுடனேயே நேரம் செலவழித்தவன் அவர்களுக்குப் புதிதாய்த்தான் தெரிந்தான்.

அவர்கள் புறப்படுவதற்கு நேரமானது. குளியலறையைப் பயன்படுத்த நிரல்யாவின் அறைக்கு மகளோடு வந்தாள் சரண்யா.

தனித்துவிடப்பட்ட தோழியருக்குள் திடீர் என்று மெல்லிய சங்கடம். பயணத்தைப் பற்றியே பொதுவாகக் கதைத்தபடி சரண்யா தயாராகி முடித்தாள்.

“சீனியரைப் பற்றி நீ கேக்கவே இல்லை நிரா?” அதற்குமேல் அடக்கி வைக்க முடியாமல் கேட்டிருந்தாள் சரண்யா.

சட்டென்று கலங்கிவிட்ட விழிகளோடு தோழியைப் பார்த்தாள் நிரல்யா. “எப்பிடி கேக்க, இல்ல என்ன கேக்க சரண்?” என்றாள் அடைத்த குரலில். “கேட்டு மட்டும் என்ன நடக்கப் போகுது? அவர் நல்லாருக்கோணும். நல்லாருப்பார் எண்டு நம்பிக்கையோட இருக்கிறன்.”

“நீ?”

சட்டென்று அவளுக்கு அந்த ஒற்றைச் சொல் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பின் நிமிர்ந்து, “இப்பிடி அவரைப் பற்றி யோசிச்சாலோ, நினைவு வந்தாலோ இன்னுமே வலிக்குதுதான் சரண். ஆனா அதைத் தாண்டி நிம்மதியா இருக்கிறன். நான் பயந்த அளவுக்கு வாழ்க்கை மோசமா இல்லை. மச்சான் என்னை அப்பிடி வச்சிருக்கிறார். உண்மையா வாழ்க்கை சிசிர இல்லாமலும் இப்பிடி மாறும் எண்டு நான் நினைக்கவே இல்ல. அதுதான்… எப்பிடியும் மச்சான் என்னை இதில இருந்து முழுசா வெளில கொண்டு வந்திடுவார் எண்டு தெரியும். அதே மாதிரி சிசிரவும் அவரின்ர குடும்பத்தோட நல்லா இருந்திடோணும்.” என்றாள் கண்ணீரை அடக்கியபடி.

அவளே அறியாமல் அவளுக்குள் மாற்றம் நிகழ ஆரம்பித்துவிட்டதை சரண்யாவே கண்கூடாகக் கண்டுவிட்டாளே. அதில் அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்று விளங்கிற்று.

“கேக்கவே சந்தோசமா இருக்கடி. இவ்வளவு காலமும் உன்ர மச்சானைப் பற்றி நினைச்சாலே பொல்லாத ஆள் எண்டுதான் நினைப்பன். ஆனா, அப்பிடி இல்ல எண்டு இப்பதான் தெரியுது. உண்மையா அவர் நல்ல மனுசன். அதைவிட என்ன செய்தாலும் அவரின்ர கவனம் முழுக்க உன்னிலதான் இருக்கு. நேர்ல பாக்காட்டி அவர் இப்பிடி எண்டு ஆர் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டன். அதால மெல்ல மெல்ல எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு அண்ணாவோட சந்தோசமா வாழப்பார். சீனியருக்கும் இன்னும் ஒண்டு ரெண்டு கிழமைல ரெண்டாவது பிள்ளையும் பிறந்திடுமாம் எண்டு மகிந்த சொன்னவர்.” என்றுவிட்டு மகளோடு வாசல் வரை நடந்தவள் நின்று திரும்பி, “எதுக்கும் கவனமடி. அண்ணான்ர தாடி உன்னைத்தான் அளவுக்கதிகமாக் காயப்படுத்த போகுது!” என்றதும், ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டவள், “அடியேய், என்ன கதை கதைக்கிறாய்!” என்று பொய்யாக அதட்டினாலும் அவள் முகம் சூடாகிப் போயிற்று.

அதை மனம் நிறையப் பார்த்துவிட்டுப் புறப்பட்டாள் சரண்யா.

ஆட்டோவில் போகிறோம் என்றவர்களை விடாமல் புகையிரத நிலையத்தில் இறக்கிவிட அனந்தன் புறப்பட்டான். நிரல்யாவும் அவர்களோடு தொற்றிக்கொண்டாள். பின்னிருக்கையில் மகளோடு கணவனும் மனைவியும் ஏறிக்கொள்ள, நிரல்யாவின் மடியில் இடம் பிடித்திருந்தான் நிசாந்தன். அவளுக்கு அவனை அனுப்பவே விருப்பமில்லை. அவ்வளவு துறுதுறுப்பு. அத்தனை அட்டகாசம்.

“சரண், தம்பிக்குட்டிய என்னட்ட விட்டுட்டுப் போடி. எனக்கு அனுப்பவே மனமில்லாமக் கிடக்கு.” என்றாள் பின்னால் திரும்பி.

“இது நல்ல கதையா இருக்கே. அவனை உன்னட்டத் தந்திட்டு நான் என்னடி செய்றது? ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு ஆசைப்படுறதை விட்டுட்டு சொந்தமா ஒரு பிள்ளை பெறுர வழியப் பார்.” என்றவள் பதிலில் வேகமாகத் திரும்பி அனந்தனைத்தான் பார்த்தாள் நிரல்யா. அவன் பார்வையும் இவளில்தான். அதுவும் அந்தக் கண்களில் என்ன இருந்தது? ஏதோ ஒன்று அவளைக் கொக்கி போட்டு இழுத்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பதறியடித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டவளால் அதன் பிறகு அவன் புறம் திரும்பவே முடியவில்லை.

அடர்ந்த தாடிக்கும் மீசைக்குமிடையில் மறைந்து கிடந்த உதட்டோரத்தில் உதித்த குட்டி ரகசியச் சிரிப்புடன் மீண்டும் வீதிக்குக் கவனத்தைத் திருப்பினான் அனந்தன்.

தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 45


சரண்யா குடும்பத்தைப் பயணம் அனுப்பிவிட்டுத் திரும்பி வருகையில் அவன் பக்கமே திரும்பாமல் அமர்ந்திருந்தாள் நிரல்யா. அறையில் வைத்துச் சரண்யா சொன்னதும் குழந்தையைப் பற்றிப் பேசியதும் அவளை அவன் முகம் பார்க்கவிடாமல் செய்திருந்தன. முக்கியமாக அவன் பார்த்த பார்வை! அதைவிடவும் தன்னிச்சையாய் அனந்தன் புறம் திரும்புகிற பொழுதுகளில் எல்லாம், புதிதாக அவன் தாடியும் மீசையும் மட்டுமே கண்ணில் பட்டுத் தொலைத்து அவளை அலற வைத்தன.

அப்படித் தன் புறம் திரும்பாமலே இருக்கிறவளின் செய்கையைக் கண்டு அனந்தனுக்குச் சிரிப்புப் பீறிட்டது.

அடக்கிக்கொண்டு, “நிரல்.” என்றான்.

“ம்?”

“என்னவாம் உன்ர பிரென்ட்?”

‘இவரும்தானே எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தவர். பேந்து(பிறகு) என்ன கேள்வி?’ அவளுக்குக் காது மடல்கள் சூடாகும் உணர்வு. முகத்தை இன்னும் நன்றாக எதிர்ப்புறத்தில் திருப்பிக்கொண்டாள்.

“உன்ர பிரென்ட் ஒண்டுமே சொல்லேல்லையா?” அந்த ‘ஒண்டும்’முக்கு அவன் கொடுத்த அழுத்தமும், அவன் குரலில் தெரிந்த நகைப்பும் அவன் கழுத்தைப் பிடித்துக் கடித்து வைக்கலாமா என்று நினைக்கும் அளவுக்கு அவளைச் சீண்டின.

“அப்பிடிச் சொல்ல என்ன இருக்கு?” அவளும் அவனுக்கு மேலால் நடிக்க முயன்றாள்.

“பிள்ளையைப் பற்றி என்னவோ சொன்னாவே?” என்று விடாமல் அவள் வாயைப் பிடுங்கினான்.

அதற்குமேல் முடியாமல், “மச்சான்!” என்று அதட்டியபடி திரும்பியவள் அவன் சத்தமாகச் சிரிப்பதைக் கண்டு தானும் சிரித்தாள்.

“உண்மையாவே நிசாந்தன் கியூட் எல்லா மச்சான்? எனக்குப் போக விட மனமே இல்ல. அவரும் எல்லாரோடையும் நல்லா ஒட்டிட்டார், சரணை மாதிரி.”

தானும் புகையிரதப் பெட்டிக்குள் ஏறி அமர்ந்துகொண்டு அவனைக் கொஞ்சிக்கொண்டு இருந்தவளை அவனும்தானே பார்த்துக்கொண்டிருந்தான். சில கணங்களுக்கு அமைதியிலேயே கழிய, “நாங்களும் பெறுவமா?” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

திகைப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தவள் அவனும் அவள் புறம் திரும்புவதைக் கண்டு மீண்டும் வேகமாய்ப் பார்வையை அகற்றிக்கொண்டாள். நெஞ்சில் புகையிரதத்தின் தடதடப்பு.

அதன் பிறகு வீடு வருகிற வரைக்கும் அவர்களுக்குள் பெரும் மௌனம். வீடு வந்து, சுந்தரலிங்கம் அமிர்தவல்லியிடம் மகிந்த குடும்பம் நல்லபடியாகப் புறப்பட்டுவிட்டதைச் சொல்லிவிட்டு மேலே அறைக்கு வந்தபோது, அறையின் கதவைச் சாற்றிவிட்டு அவளைத் தன்னிடம் கொண்டுவந்த அனந்தன், “கேட்ட கேள்விக்குப் பதில் வரேல்லயே!” என்றான் அவள் முகம் பார்த்து.

என்ன பதில் சொல்ல? அவள் விலகப் போக அதற்கு விடாமல் முகம்பற்றி, மெல்ல அவள் இதழ்களைச் சிறை செய்தான்.

அவசரமே இல்லாத ஆழ்ந்த முத்தம். அனுபவித்து வழங்கினான். அவள் சிந்தனைகளை எல்லாம் நிறுத்தி வைத்து, அவனுக்கு ஏற்றாற்போல் இசைய வைத்தது. அவனாக விடுவிக்கும் வரையில் அவளாகச் சிறு துரும்பையும் அசைக்கவில்லை. அசைக்கும் நிலையில் அவள் இல்லை. நொடிகளை நிமிடமாக மாற்றியமைத்துவிட்டு விலகியவன், பார்வையைத் தழைத்துத் தன் முகச் சிவப்பை அவனிடமிருந்து மறைக்க முயன்றவளை விடாமல், தாடையைப் பற்றி நிமிர்த்தினான்.

செக்கச் சிவந்திருந்த முகமும், அவனை ஏறெடுத்துப் பார்க்க மறுத்து மூடிக்கொண்ட விழிகளும், உதட்டைப் பற்றித் தன் உணர்வுகளை அடக்க முயன்றவளின் நடுக்கவும் அவன் முத்தம் அவளுக்குள் நிகழ்த்திய மாற்றங்களைச் சொல்லிற்று.

அவன் உதட்டினில் மெல்லிய சிரிப்பு. “நிரல், என்னைப் பார்.” என்றான் அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி.

அவள் விழிகள் திறந்துகொண்டன. கலக்கம் ஏதும் தெரிகிறதா என்று அவன் அவள் விழிகளுக்குள் ஆராய, அந்தப் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் மீண்டும் அவள் விழிகளை மூடிக்கொண்டாள்.

விரிந்த முறுவலோடு மீண்டும் அவள் இதழ்களோடு சேர்த்து அவளையும் தன்னுடன் சேர்த்தணைத்துக்கொண்டான் அனந்தன். இது சந்தோச முத்தம். அவள் தன்னிடம் வந்துகொண்டிருக்கிறாள் என்பதைக் கண்டுகொண்ட முத்தம். ஆசை தீரக் கொடுத்தபிறகு விடுவித்து, “இனி நீ நான் கேட்டத்தைப் பற்றி யோசிக்கோணும்.” என்று சொல்லிவிட்டுப் போனான் அவன்.

அப்படியே கட்டிலில் விழுந்தவள் வேறு எதையும் சிந்திக்க இயலாமல் அவன் தந்த முத்தத்திலேயே மூழ்கிக் கிடந்தாள். அவன் ஆளுமையும் ஆளுகையும் அவளை சுழற்றியடித்தன.

முதன் முதலாக அன்றைக்கு பஜிரோவில் வைத்து ஆரம்பித்து வைத்ததை இப்போதெல்லாம் இப்படித்தான் அடிக்கடி தொடர்கிறான். அதுவும் இரவுகளில் அவன் வசமாகிவிடுகிற அவள் இதழ்களின் நிலை, அவனை நிமிர்ந்து பார்க்க விடுவதேயில்லை.

வேலை, வீடு என்று பெரும்பான்மைப் பொழுதுகளில் தன்னுடனேயே அவளை வைத்துக்கொண்டு, அவளை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்து, அவளே அறியாமல் அவளுக்குள் மிக வேகமாக மாற்றங்களை நிகழ்த்த ஆரம்பித்திருந்தான் அனந்தன்.


*****

ருக்க்ஷிக்கு வயிற்று வலி வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருந்தார்கள். வேலையில் நின்றிருந்த சிசிர செய்தி அறிந்து அவசரமாய் ஓடி வந்தான். அவனைப் பாராமல், அவனோடு வார்த்தை கதைக்காமல் பிரசவ அறையினுள் செல்ல மறுத்து அடம் பிடித்துக்கொண்டு நின்றிருந்த ருக்க்ஷியைக் கண்டவன் ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டான். அவன் தேகமெல்லாம் நடுங்கியது.

“ருக்க்ஷி!” அவள் பெயரைத் தவிர்த்து வேறு எதுவும் அவன் வாயில் வருவதாய் இல்லை. அவ்வளவு பதற்றத்தில் இருந்தான்.

“பயப்பிடாதீங்க சிசிர. கொஞ்ச நேரத்தில நான் திரும்பி வந்திடுவன். மகள் கவனம்.” என்று அவன் கரம் பற்றி அழுத்திக் கொடுத்தாள் ருக்க்ஷி.

அவன் தடுமாறிப் போனான். உயிர் போகும் வலியைச் சுமந்தபடி தனக்குத் தைரியம் தருகிறவளின் பேரன்பு அவன் உள்ளத்தை அசைத்தது. “பிள்ளையை நான் பாப்பன். நீ… நீ கவனம்.” என்றான் தவிப்புடன்.



கண்ணீரும் சிரிப்புமாகச் சரி என்று தலையை அசைத்தவள் அவன் முகம் பற்றி நெற்றியில் உதடு பதித்தாள். அவன் மனத்தின் நிலையில்லா நிலை எல்லாம் ஒரு கணம் அடங்கிய உணர்வு. தொண்டைக்குழி ஏறி இறங்க, விழிகளை மூடி அவள் தந்த முத்தத்தை வாங்கிவிட்டு நிமிர்ந்தவனின் விழிகள் பனித்திருந்தன. அவளையே பார்த்தான். என்னவோ அவளிடம் நிறையச் சொல்ல வேண்டும் போலொரு உணர்வு பொங்கிக்கொண்டு வந்தது. எதையும் சொல்ல முடியாமல் அவள் கரத்தை அழுத்திக் கொடுத்து, “கெதியா வந்திடு ப்ளீஸ்!” என்றான் முணுமுணுப்பாய்.

அதன் பிறகான நிமிடங்கள் எல்லாம் ஒரு தாயின் போராட்டமாகவே கடந்து முடிய, அவள் ஆசைப்பட்டது போலவே ஆண் மகவை ஈன்றெடுத்திருந்தாள் ருக்க்ஷி. தனக்குத் துணையாக மகளைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்தவனின் தேகத்தின் நடுக்கம் அதன் பிறகுதான் நின்றது. உடல் தளர, அருகிலிருந்த நாற்காலியில் அப்பாடா என்று அமர்ந்தான்.

இரண்டாவது பேரக்குழந்தையும் சுகமாகப் பிறந்துவிட்டதில் பதற்றமெல்லாம் அடங்க மத்தும பண்டாரவுக்கும் காமினி பண்டாரவுக்கும் முகமெல்லாம் பூரித்துப் போயிற்று.

சுகப் பிரசவம் என்பதில் சற்று நேரத்தில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டாள் ருக்க்ஷி. பெரியவர்கள் பேரனின் லயித்துவிட, சச்சினியும் தனக்குப் புத்திகாகக் கிடைத்திருக்கும் பொம்மையோடு விளையாடலாமா என்கிற முயற்சியில் தீவிரமாகிவிட மனைவியின் அருகில் வந்து அமர்ந்துகொண்டான் சிசிர.

வாடிப்போன முகம், கலைந்திருந்த தலை, உலர்ந்துகிடந்த உதடுகள், அழுது வீங்கியிருந்த கண் மடல்கள் என்று தன் மகனைப் பெற்றெடுப்பதற்குள் அவள் பட்டுவிட்ட பாடு என்ன என்பதை அவள் சோர்ந்த தோற்றம் சொல்ல அவளையே பார்த்தான்.

“என்ன?” என்றாள் ருக்க்ஷி.

“நீ ஓகேயா?” என்றான் அவள் கரமொன்றை எடுத்துத் தன் கரங்களுக்குள் பொத்தியபடி.

“எனக்கு ஒண்டும் இல்ல. சும்மா கவலைப்படாதீங்க.” என்று அவன் கரத்தை தானும் அழுத்திக்கொடுத்துச் சொன்னாள் ருக்க்ஷி.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அதன் பிறகு இருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் இருவரையும் கவனியாததுபோல் கவனித்த பெரியவர்கள் பேரப்பிள்ளைகளுடன் ஒதுங்கிக்கொண்டனர்.

இப்போது ருக்க்ஷியின் பார்வை அசையாமல் அவனிடமே இருந்தது. இரண்டு மூன்று தடவைகள் அவள் பார்வையைச் சந்தித்தவனால் நேரம் செல்ல செல்ல அவளை எதிர்கொள்ளவே இயலவில்லை. தடுமாறினான். அவன் முகத்தில் பல உணர்வுகளின் போராட்டம். ஒரு கட்டத்தில் அவனைப் போட்டு அழுத்தும் அந்த அமைதியைப் பொறுக்க முடியாமல், “ப்ளீஸ் ருக்க்ஷி, என்னை இப்பிடிப் பாக்காத.” என்றான் தவிப்புடன்.

“ஒரே வீட்டில இருந்தாலும் நான் உன்னோட பழைய மாதிரி இல்லை எண்டு எனக்கே தெரியும். மனதுக்க நிறையக் கேள்விகள், நிறையப் போராட்டம், அர்த்தமே இல்லாத கோபம், நிறையக் குழப்பம் எண்டு இன்னுமே நான் நானா இல்ல ருக்க்ஷி. இன்னும் கொஞ்ச நாள் எனக்குத் தா. கட்டாயம் தெளிஞ்சு வருவன். ஆனா இதுக்காக என்னைப் பிழையா மட்டும் நினைச்சிடாத. அந்தளவுக்கெல்லாம் நான் கெட்டவன் இல்லம்மா.” என்றவனால் மேலே பேச முடியவில்லை. தொண்டைக்குள் முள்ளொன்று வந்து குத்தியது.

அவள் விழிகளும் கலங்கிப் போயின. என்னதான் அவளிடம் அவன் அனைத்தையும் சொல்லி இருந்தாலும், அவனோடு அவள் புறப்பட்டு வந்தது அவனுக்குப் பெரும் ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்திருந்த போதிலும், எப்போதும்போல் ஒரே அறையில் ஒரே கட்டிலில் அவன் கையில் அவள் உறங்கினாலும் அவன் பழையமாதிரி இல்லை என்று அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? அல்லது, கணவன் இரவுகளில் உறக்கத்தை தொலைத்துவிட்டுத் தனக்குள் போராடுவதுதான் தெரியாதா?

அவள் பதில் சொல்லாது அவனையே பார்த்திருக்க, “என்ன வெறுத்திட மாட்டியே?” என்றான் கரகரத்த குரலில்.

“என்னால அது ஏலும் எண்டு நினைக்கிறீங்களா?” என்று திருப்பிக் கேட்டாள் அவள். “உங்களோட அஞ்சு வருசம் வாழ்ந்து இருக்கிறன். நீங்க எவ்வளவு அன்பான மனுசன் எண்டு எனக்குத் தெரியும். அப்பிடியான நீங்க ஒரு உண்மையான அன்புக்கு நியாயம் செய்யேல்ல எண்டு உள்ளுக்க தவியாத் தவிக்கிறீங்க எண்டு எனக்குத் தெரியும் சிசிர. அதுதான் நீங்க தேறி வருமட்டுக்கும் நான் உங்களுக்கு ஆறுதலா இருக்கோணும் எண்டுதான் எதுவுமே கேக்க இல்ல. இனியும் அப்பிடித்தான் இருப்பன்.” என்று அவள் சொன்னபோது அவன் முற்றிலும் உடைந்தே போனான்.

“தேங்க்ஸ் மா!” என்றவன் அவள் கரத்தைப் பற்றித் தன் கண்களில் வைத்துக்கொண்டான்.

“மகனைப் பாத்தனீங்களா?” மெல்லப் பேச்சை மாற்றினாள் ருக்க்ஷி.

அவன் உதட்டினில் மெல்லிய முறுவல் அரும்ப, அவள் முகம் பார்த்து ஆம் என்பதுபோல் தலையை அசைத்தான்.

“ஆர மாதிரி இருக்கிறார்?”

“எனக்குத் தெரியேல்ல. ஆனா உன்ன மாதிரி வேணும் எனக்கு.”

அவள் உதட்டில் கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே தோன்றிற்று. கண்ணசைவால் அவனை அருகே அழைத்தாள். அவன் குனிய நெற்றியில் இதழ்களை ஒற்றிவிட்டு, “உங்களுக்கு என்னை மாதிரி நான் மட்டும்தான் இருக்கோணும். என்ர இடத்தை உங்கட மகனுக்கா இருந்தாலும் குடுக்க நினைச்சீங்களோ வேற ஒரு ருக்க்ஷிய பாப்பீங்க!” என்றாள் பொய் முறைப்புடன்.

அவன் வாய்விட்டு நகைத்தான். “பொறாமையா?”என்றான் அவள் நெற்றி முட்டி.

“லைட்டா!”

மீண்டும் சத்தமாக நகைத்தவனின் மனம் நிறைந்து போயிற்று.

*****

நிவேதாவின் அன்னை காலமாகியிருந்தார். செய்தி அறிந்த உடனேயே நிரல்யாவைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தான் அனந்தன்.

இருவருமாக அவரின் சடலத்தைப் பார்த்தபிறகு நிரல்யா நிவேதாவைக் கவனிக்கச் சென்றுவிட, வெளியே முற்றத்துக்கு வந்து, அங்கே இருந்த ஆண்களோடு அனந்தனும் கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்துகொண்டான்.

“தம்பி ஆரு? முகம் புதுசா இருக்கே.” என்று அவனருகில் வந்து அமர்ந்தார் ஒருவர்.

அவன் தன்னைப் பற்றிச் சொன்னான். மெல்ல மெல்ல அவனைக் குடைந்துகொண்டு போனவர், கடைசியில் அவன் அமிர்தம் அடகு நகைக்கடையின் ஓனரின் மருமகன் என்றதும் அவர் பார்வையே மாறிப் போயிற்று. மெதுவாக நகர்ந்து இன்னொருவரின் அருகில் அமர்ந்துகொண்டார்.

பெரும்பாலும் அவருக்கு நெருக்கமான யாரோ அவனிடம் நன்றாக வாங்கிக் கட்டியிருக்க வேண்டும். இல்லாமல் அவர் கண்களில் அப்படி ஒரு பயம் தெரிந்திருக்காது. சும்மா வேண்டுமென்றே பார்வையால் அவரையே தொடர்ந்தான். அவருக்கோ நடுங்க ஆரம்பித்தது. இருந்த இருக்கையில் நெளிந்தவர் சற்று நேரத்தில் இருந்த அடையாளமே இல்லாமல் போயிற்று.

அதற்குமேலும் அங்கிருந்தால் இறப்பு வீடு என்றில்லாமல் சிரித்துவிடுவோம் என்று தெரிந்துவிட எழுந்து நிரல்யாவைத் தேடிப் போனான். அங்கே நிவேதாவோடு அமர்ந்திருந்தவளை தனியாக அழைத்துச் சென்று, தன் வங்கி அட்டையை எடுத்துக் கொடுத்து, “அவேன்ர வீட்டு நிலமையைப் பாத்து தேவையானதை எடுத்துக் குடு. எதுக்கும் யோசிக்காத. பின் நம்பரை மெசேஜ் பண்ணிவிடுறன்.” என்றான்.

இதை அவள் யோசிக்கவேயில்லை. மத்திய தரக் குடும்பம்தான் என்றாலும் அவரின் வைத்தியச் செலவுக்கே நிறைய ஆகியிருக்கும் என்று இப்போது யோசிக்கையில் விளங்கிற்று.

“தேங்க்ஸ் மச்சான்.” என்றாள் முகம் மலர.

“ஓ!”

“மச்சான், ஒரு சந்தோசத்தில் ஒண்டயும் சொல்ல விடமாட்டீங்களா? போங்க பேசாம!” என்றுவிட்டு உள்ளே ஓடியிருந்தாள்.

உதட்டில் அரும்பிய சின்ன முறுவலை வெளியே வரவிடாமல் அடக்கிக்கொண்டு புறப்பட்டான் அனந்தன்.

அதன் பிறகு அவளுக்கு நேரமே இல்லை. அனந்தன் சொன்னது போன்று நிவேதாவின் கணவனைப் பிடித்து, அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்தாள். இல்லை, வேண்டாம் என்று அவன் எவ்வளவு மறுத்தும் அவள் கேட்கவில்லை. அன்றே பூதவுடல் சுடலைக்கு எடுத்துச் சொல்லப்படுவதால் அதற்கான சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு, ஒப்பாரி ஓலத்துடன் கடைசியாக விடைபெற்றுக்கொண்டார் நிவேதாவின் அன்னை.

அழுதழுது ஓய்ந்து கிடந்தாள் நிவேதா. மாலையே புறப்படுவதாக எண்ணியிருந்த நிரல்யாவுக்கு அவள் இருக்கும் நிலையில் விட்டுச் செல்ல மனமில்லை. தனியாக வந்து அனந்தனுக்கு அழைத்தாள்.

“மச்சான், நிவி இன்னும் அழுதுகொண்டே இருக்கிறாள். அவளின்ர மகளும் வேற ஆரோடயும் சேருறா இல்ல. நான் இண்டைக்கு இங்கயே நிண்டுட்டு வரட்டா?” என்றாள் தயங்கி.

இதை அவனும் எதிர்பார்க்கவில்லை. இரவு வந்துவிடுவாள் என்று எண்ணியிருந்த போதிலும் அவனால் எந்த வேலையையும் பார்க்க முடியவில்லை. இதில் இரவுக்கும் அவள் இல்லை என்றால்?

“மச்சான்?”

“பரவாயில்லை நிரல். நிண்டுட்டே வா.” என்றான் மனத்தைக் காட்டிக்கொள்ளாமல். அவளும், அவன் வங்கிக் கணக்கிலிருந்து எவ்வளவு பணம் எடுத்தாள், அதில் என்ன செலவுகள் எல்லாம் செய்தாள் என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

இரவானது. அயல் வீட்டிலிருந்து அங்குத் தங்கியிருந்த எல்லோருக்கும் உணவு வந்தது. யாரும் சாப்பிடும் மனநிலையில் இல்லாதபோதும் பெயருக்கு உண்டுவிட்டு அங்கங்கே சரிந்தனர்.

நிவேதா கூட அழுதழுது மகளருகிலேயே கண்ணயர்ந்திருந்தாள். நிரல்யாவினால் உறங்கவே முடியவில்லை. அத்தனை நாள்களும் கணவனின் அணைப்புக்கும் அண்மைக்கும் பழகியிருந்தவளுக்கு இன்றைக்கு அவை இல்லாமல் உறக்கம் வருவேனா என்றது.

வெளியே இன்னும் ஒரு சிலரின் நடமாட்டமும், குசுகுசு என்று கதைக்கும் சத்தமும் கேட்டது. இரவு பன்னிரண்டை நெருங்கிய பொழுதில் இரண்டு முறை மட்டும் ரிங்காகி கைப்பேசி நின்றுவிடவும் எடுத்துப் பார்த்தாள். அனந்தன்தான் அழைத்திருந்தான். இந்த நேரத்தில் ஏன்? மனத்தில் சட்டென்று ஒரு பயம் தொற்றிக்கொள்ள, வேகமாக எழுந்து வெளியே வந்து அவனுக்குத் திருப்பி அழைக்க முனைய அங்கே வந்துகொண்டிருந்தான் அனந்தன்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்ன மச்சான்?” அங்கு யாருக்கும் ஏதுமோ என்று நொடியில் பயந்துபோனவள் அவனிடம் ஓடிப்போய் வினவினாள்.

“ஒண்டும் இல்ல. உன்னப் பாக்கத்தான் வந்தனான். பதறாத.” என்றவன் அங்கே வந்த நிவேதாவின் கணவனிடம், “நிரலைக் கூட்டிக்கொண்டு போறன். விடியத் திரும்ப வருவா.” என்று சொல்லிவிட்டுக் கையோடு அவளை அழைத்துப்போனான்.

வெளியே அவன் பஜிரோ இல்லை. பார்த்தால் அந்த ஒழுங்கையின் முனையில் ஒதுக்கி நிறுத்தியிருந்தான். அவன் பஜிரோவின் பின் கதவைத் திறந்துவிடவும், ஒன்றும் விளங்காமல், “ஏன் மச்சான்?” என்று கேட்டபடி உள்ளே ஏறி அமர்ந்தாள். அவனும் பின்னாலேயே ஏறிக் கதவைச் சாற்றினான்.

“என்ன மச்சான்? என்னத்துக்கு இப்பிடி எல்லாம் செய்றீங்க?”

“இதுக்குத்தான்.” என்றவன் அவளை இழுத்துத் தன் மீது போட்டுக்கொண்டான். நம்ப முடியாமல் அவள் விழிகளை விரிக்க, “அங்க எனக்கு நீ இல்லாம நித்திரை வரவே இல்ல நிரல்.” என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து.

அவள் நிலையும் அதேதான். அதில் அவனோடு ஒன்றியபடி, “நான் குளிக்கேல்ல. வேர்த்துப்போய் இருக்கிறன்.” என்று மெல்லிய கூச்சத்துடன் முணுமுணுத்தாள்.

“தெரியுது.”

அவன் பதிலில் வெட்கமும் கோபமும் சேர, “உங்கள… தள்ளுங்க முதல் நீங்க!” என்று விலக முயல, அவன் சிரித்தான். “பின்ன என்ன சொல்லச் சொல்லுறாய்? அங்க இருந்து மினக்கெட்டு வந்திருக்கிறவனிட்ட குளிக்கேல்ல, சோப்புப் போடேல்ல எண்டு சொல்லுவியா நீ?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

“அதுக்கு இப்பிடித்தான் சொல்லுவீங்களா?”

“உண்மையத்தானேடியப்பா சொல்லோணும்.”

“உண்மையோ? கிட்ட வந்தீங்களோ கொல்லுவன் உங்களை!” என்று அவனைப் பிடித்துத் தள்ளினாள். அவன் திரும்ப திரும்ப அவளைத் தன்னிடம் கொண்டுவர முயல விடவில்லை.

“அடியேய், பஜிரோ ஆடுற ஆட்டத்தைப் பாத்து சனம் வேற மாதிரி நினைக்கப் போகுது.” அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் சொல்ல, “அப்பிடி என்ன நினை…” என்று பேச்சு வேகத்தில் கேட்டுக்கொண்டு வந்தவள் விளங்கியதும் முகம் சிவக்க அவனைப் போட்டு அடிக்க ஆரம்பித்தாள்.

“வெக்கம் கெட்ட மச்சான், என்ன எல்லாம் கதைக்கிறீங்க? உங்களைப் போய்ப் பெரிய மனுசன் எண்டு ஒரு காலத்தில நினைச்சிருக்கிறனே!” என்றவளைத் தன்னிடம் கொண்டுவந்தபடி சிரித்தான் அவன்.

அவளால் அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்தாள்.

“இப்ப என்னத்துக்கு முகத்தை மறைக்கிறாய்?”

“...”

“நிரல்?”

அதன் பிறகும் அவள் நிமிர்வதாய் இல்லை என்றதும் தானே அவள் தாடையைப் பற்றி நிமிர்த்தி இதழ்களில் அழுத்தி முத்தமிட்டான். ஒரு தடவை இல்லை பல தடவைகள். ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு கழுத்து வளைவில் முகம் புதைத்தாள் நிரல்யா.

உதட்டோரம் மலர்ந்துவிட்ட சிரிப்புடன் அவளைத் தன்னிடமிருந்து பிரிக்காது, கொண்டு வந்திருந்த தலையணைகளை எடுத்து அவன் முதுகுக்கும் தலைக்குமாகச் சீட்டின் மூலைப் பக்கத்தில் போட்டுவிட்டு, அவளோடு சரிந்து சுகமாய் விழிகளை மூடிக்கொண்டான். கொண்டுவந்திருந்த போர்வையை வேறு எடுத்து இருவருக்குமாகப் போர்த்திக்கொண்டான்.

அதிலிருந்தே அவன் அங்கிருந்தே இதற்குத் தயாராய் வந்திருக்கிறான் என்று தெரிந்துவிட அவள் நிமிரவேயில்லை.

அவ்வளவு நேரமாக வராமல் இருந்த உறக்கம் இருவரையும் கொஞ்ச நேரத்தில் பிடித்துக்கொண்டது.

ஒடுக்கமான இடத்தில், விலக வழியே இல்லாதபோதும் சிறிது நேரமென்றாலும் அவன் கைகளுக்குள் உறங்கியது நன்றாக இருக்க நேரத்துக்கே விழிப்பும் வந்திருந்தது. நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். இன்னுமே இருள் பிரியாப் பொழுது. பெரிதாக அவன் முகம் தெளிவாய்த் தெரியாதபோதும் இப்போதும் அவன் தாடியும் மீசையும் கண்ணில் பட்டு அவளைக் கிச்சு கிச்சு மூட்டியது.

காயப்படுத்துகிறதா என்ன? யோசித்துப் பார்த்தவளுக்கு அதையெல்லாம் பிரித்தறியும் நிலையில் அவன் அவளை நிதானத்தில் இருக்க விடுவதில்லை என்று தோன்றிவிடவும் சிரிப்புடன் பார்வையை திருப்பியவள் அங்கே அவன் முன் சீட்டின் மேலே கால்களைத் தூக்கி போட்டிருப்பதைக் கண்டு இன்னும் சிரித்தாள்.

“என்ன சிரிப்பு?” உறக்கம் முற்றிலும் விலகாக் கரகரத்த குரலில் அவளை உணர்ந்தவனாய் விழிகளைத் திறக்காமலேயே வினவினான் அவன்.

“காலத் தூக்கி எங்க போட்டு வச்சு இருக்கிறீங்க?”

“வேற எங்க போடச் சொல்லுறாய்?”

“விட்டா நீங்க கூரைலையும் போடுவீங்க மச்சான்.” என்றபடி அவள் விலக முயல, அவன் விடவில்லை. இன்னுமே சில் என்று இருக்கும் பொழுதும், கொஞ்சமாய் இறக்கி விடப்பட்டிருந்த ஜன்னல்களால் உள்ளே வந்த சில்லிடும் காற்றும், அதற்கு இதமாக அவர்கள் போர்த்திக்கொண்டிருந்த போர்வையும், அவளின் அண்மையும் இன்னும் கொஞ்ச நேரம் அந்தச் சுகத்தை அனுபவி என்று சொல்ல, அப்படியே கிடந்தான். அவளுக்கும் அவன் கதகதப்பு இன்னும் வேண்டுமாய்த்தான் இருந்தது. விழித்தே இருந்தாலும் அவன் மார்பில் சரிந்து கிடந்தாள்.

மெல்ல மெல்ல இருள் பிரிய ஆரம்பித்தது.

“மச்சான் விடியப் போகுது.”

“குளிச்சிட்டு வருவமா?”

“குளிக்கிறதா? எங்க போய்க் குளிக்கிறது?” ஆச்சரியமாய் நிமிர்ந்து அமர்ந்தபடி வினவினாள்.

அவன் அழைத்துச் சென்றது எந்த இடம் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், பதினைந்து நிமிடத் தூரத்தில், அந்த அதிகாலை நேரத்திலும் நீரோடை போன்று சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது இரணைமடுக் குளத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட வாய்க்கால் தண்ணீர்.

“உடுப்பு?”

“எல்லாம் கொண்டு வந்தனான்.”

ஒற்றைக் காலை மட்டும் முதலில் உள்ளே விட்டுப் பார்த்தாள். ஐஸ் கட்டியாகக் குளிர்ந்து தண்ணீர். “அம்மாடி, நான் குளிக்கேல்ல. முகம் மட்டும் கழுவப் போறன்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே அவளையும் இழுத்துக்கொண்டு அதற்குள் பாய்ந்திருந்தான் அவன்.

“அம்மா!” என்று அலறி, அவன் தோள்களையே பற்றித் தன்னை சமாளித்து நின்று அவனை முறைத்தாள் நிரல்யா.

“இரவே நாறினது. இதுக்க முகம் மட்டும் கழுவப் போறாவாம்.” என்றான் அவன்.

“உங்களை…” என்று அவள் பல்லைக் கடித்தாள்.

சிரித்தபடி, “ரெண்டு தரம் தணிக்க இருந்து எழும்பு நிரல். பிறகு குளிராது.” என்றவன் அவளோடு சேர்ந்து தானும் மூழ்கி எழுந்தான்.

அதன் பிறகு மெல்ல மெல்ல அந்தக் குளிரை அவள் உடல் பழகிக்கொண்டது. அதன் பிறகு தானே விரும்பிக் குளித்தாள் நிரல்யா. யாருமில்லா அதிகாலைப் பொழுதில், தெளிந்த நீராக ஓடிக்கொண்டிருந்த ஓடையில், வாளை மீனாக நீந்தி விளையாடியபடி குளிக்கும் அந்த அனுபவம் அற்புதமாய் இருந்தது அவளுக்கு.

“நிறைய நேரம் நிக்க வேண்டாம் நிரல். குளிர் தண்ணி, பழக்கமும் இல்ல. வருத்தம் வரப்பாக்கும்.” என்று அவன் மேலேறிய பிறகும் அவள் வரவில்லை. பஜிரோவின் மறைவில் உடைகளை மாற்றிக்கொண்டு வந்தவன், “உனக்கும் பஜிரோவுக்க உடுப்பு எல்லாம் இருக்கு. வந்து மாத்து!” என்றான்.

அங்கே உள்ளாடைகள் முதற்கொண்டு அனைத்தும் சரியாய் இருக்கக் கண்டு உதட்டைக் கடித்தாள் நிரல்யா. அதே நேரம், ‘அதெல்லாம் இல்லாம குளிச்சிட்டு நீ என்னடி செய்வாய்?’ என்று அறிவு கேட்ட கேள்வி அவளை அடக்க, உடைகளை மாற்றிக்கொண்டு வந்தாள்.

நிவேதா வீட்டுக்குத் திரும்பும் வழியில் திறந்திருந்த ஒரு குட்டி ஹோட்டலுக்குச் சென்று, சுட சுடத் தேநீரும் பருகியபோது அன்றைய நாள் நிரல்யாவின் மனத்தில் மறக்கவே முடியாத மிக மிக அழகான நாளாக மாறிப்போயிற்று.

மீண்டும் பஜிரோவைக் கொண்டுவந்து அவன் நிவேதா வீட்டின் முன் நிறுத்தினான். அவளுக்கு அவனை விட்டு இறங்கிப் போகவே மனமில்லை.

“இப்பிடியே வரட்டா?”

“எனக்கும் கூட்டிக்கொண்டு போகத்தான் விருப்பமா இருக்கு. ஆனா நில்லு. இண்டைக்கு மட்டும்தானே. அவாக்கு நீ நிண்டா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்தானே.” என்றான் அவன்.

“ஆனா உங்களுக்கு அலைச்சல் எல்லா?”

“என்ன பெரிய அலைச்சல். அதெல்லாம் ஒண்டுமில்ல, விடு. இல்லாட்டியும் அவசரத்துக்கு உதவாம தெரிஞ்ச மனுசர் எண்டு பிறகு என்னத்துக்கு இருக்க நிரல்?”

அவள் முகம் மலர்ந்து போயிற்று. நன்றி சொல்ல வந்தவள் இந்தமுறை கவனமாக அதைத் தவிர்த்துவிடவும் அவன் உதட்டில் முறுவல்.

“இறங்கிப் போடி!” என்றான் சிரிப்புடன். அவள் அவர்கள் வீட்டுக்குள் நுழையும் வரையில் நின்று பார்த்துவிட்டு அவன் புறப்பட்டான்.


தொடரும்....

கருத்திடும் அனைவருக்கும் நன்றி. சொறி, நிறையப்பேர் மகளைப்பற்றி விசாரிச்சு இருந்தீங்க. போனமுறை பதில் சொல்லாம விட்டுட்டேன். இப்ப அவாக்கு நல்ல சுகம். ஆள் செமினாருக்கு பெர்லின் போயிற்றா. வெள்ளி திரும்பி வந்திடுவா. அன்போடு விசாரித்த அத்தனை பேருக்கும் மிக்க நன்றி.

கதையின் போக்கே உங்களுக்கு சொல்லும் என்று நினைக்கிறேன். விரைவில் கதை முடிவை எட்டிவிடும். இந்த அத்தியாயம் எப்படி இருக்கு என்று சொல்லுங்க. நன்றி!
 
Status
Not open for further replies.
Top Bottom