You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

'உன் விருப்பம் என்ன?' உளம் சார்ந்த பகிர்வுகள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
1. இது பற்றிய உங்கள் பொதுப்படையான கருத்து என்ன?

உன் விருப்பம் என்ன என்பது எல்லோரிடமும் விடப்படவேண்டிய கேள்வி. முடிவெடுப்பதில் அவர் தடுமாறுகிறாரோ தவறான முடிவை எடுக்கிறாரோ எதுவாயினும், அதிலிருந்து அவர் கற்கப்போகிற பாடம் தான் முக்கியம் என்பேன். தன் விருப்பத்தைச் சொல்வதில் சிறப்பான மாற்றம் உருவாகுமாயின், அவருடைய விருப்பு வெறுப்புகள் மீது முடிவுகளின் மீது நம்பிக்கை உண்டாகும். இல்லையோ தவறுகளில் இருந்து பாடம் கற்பர். ஆக, உன் விருப்பம் என்ன என்கிற கேள்வியை கேட்கமாட்டார்களா என்று எண்ணுவதைக் காட்டிலும், நம் விருப்பத்தை ஒருமுறை தெரிவித்துவிடல் சிறப்பு என்பேன்.

வாழ்க்கை என்பது வாழ்தல். வாழ்தல் என்பது வாழ்க்கையைக் கற்றல். ஆக திட முடிகள் எடுக்க முடியாவிட்டாலும் அவரின் தடுமாற்றம் அவருக்குப் பாடம் கற்பிக்கும். ஆக, உஷாந்தி சொன்னதுபோல கேள்விகள் அதன் பெறுமதியை இழக்காது. அக்கேள்விக்கு உரிய பதிலைத் தெரிவிக்காமல் தடுமாறுகிறவருக்கு அத்தடுமாற்றம் என்ன விளைவைக் கொடுக்கும் என்கிற படிப்பினை நிச்சயம் உண்டாகும். ஆக, கேள்வி எல்லோரிடமும் முன்வைக்கப்பட வேண்டும்.

2. நீங்கள் இக்கேள்வியை எதிர்கொண்டுள்ளீர்களா? யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்ப்பங்களில்.


சின்ன வயதில் இப்படிக் கேள்வியாக முன்வைக்கப்பட்ட நினைவு இல்லை. ஆனால், விருப்பங்கள் நிறைவேறாமல் போன நிகழ்வுகள் மிகக் குறைவு. சாப்பாடு, உடுப்பு, விளையாட்டு இன்னும் என்னென்னவோ இதற்கெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டதில்லை. என் விருப்பத்துக்கு ஏற்ப இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ நிறைவேறாமல் போனவை அத்தனையும் மறக்காமல் நினைவில் இருக்கு. அப்படி நிறைவேறாத விருப்பங்கள் அன்றைக்கு பெரிய குறையாக இருந்தாலும் இன்றைக்கு அம்மாவாக நானும் அதையேதான் செய்திருப்பேன் என்று விளங்குகிறது.

உயர் தரத்தில் தெரிவு செய்த பாடங்களில் இருந்து போடுகிற உடை வரைக்கும், ஏன் தலைமுடியை விருப்பம்போல் வெட்டிக்கொள்வது வரை எல்லாமே என் விருப்பம் தான்.

ஆனால், உயர்தரம் படிக்கப் போகிறபோது புதுச் சைக்கிள் ஆசையாகக் கேட்டு அம்மா வாங்கித் தரவே இல்லை. அதனாலேயே பின்னாளில் அடம்பிடித்து டிரைவிங் லைசென்ஸ் பழகினேன். அதேமாதிரி செல்போன் அப்போதுதான் அறிமுகமானது. எவ்வளவு அழுது கெஞ்சியும் அடிதான் விழுந்ததே தவிர கிடைக்கவே இல்லை. அதனாலேயே அம்மாவை அலையோ அலை என்று அலையவைத்து இலங்கை டெலிகொம்மில் வீட்டுக்கு டெலிபோன் கனெக்ஷன் கொண்டுவந்தேன். அப்போதெல்லாம் அதற்கு விண்ணப்பித்துவிட்டு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையினர் சேர்ந்தபிறகுதான் போஸ்ட் கொண்டுவந்து பூட்டி கனக்ஷன் தருவார்கள்.

இப்படி என் விருப்பம் மறுக்கப்பட்டால் அதற்கு ஈடாக இன்னுமொன்றை தலைகீழாக நின்றேனும் நிறைவேற்றுவேன்.

இப்படி மறுக்கப்பட்ட என் விருப்பங்களை இன்றைக்கு யோசித்துப்பார்க்கையில் மறுக்கப்பட்டதுதான் சிறந்த முடிவு என்று என்னையே நினைக்க வைத்திருக்கிறது. இன்றுவரை என் விருப்பங்களை மறுக்கும் சகலவல்லமை படைத்த ஒற்றை ஜீவன் இவ்வுலகில் என்ர அம்மா மட்டும் தான்.

என்னளவில் என் விருப்பம் எனக்கு முக்கியம். காரணம் எனக்கு நான் முக்கியம். என்னை நானே நேசிக்காத பட்சத்தில், என் விருப்பு வெறுப்புக்கான மரியாதையை நானே கொடுக்காத பட்சத்தில் என்னை வேறு யார் மதிப்பார்கள்? என் விருப்பு வெறுப்புக்கள் தானே நான் என்கிற அடையாளப்படுத்தல். நான் விரும்பி அணிகிற உடை என்னைக் கணிக்க வைக்கும். நான் விரும்பி உதிர்க்கிற வார்த்தைகள் என்னை எடைபோட வைக்கும். நான் எதை நேசிக்கிறேன் நான் எதை வெறுக்கிறேன் என்பதெல்லாம் என்னை யார் என்று சொல்லும் விடயங்கள். அதனால் எனக்கு என் விருப்பங்கள் முக்கியம்.

திருமணத்தின் பின்பு நான் எனக்கு என்று வருகிற எந்த விடயத்திலும் என் விருப்பம் மட்டுமே முக்கியமாக இருந்திருக்கிறது. இங்கும் கேள்விகள் எழுப்பப்பட்ட நினைவு இல்லை. ஆனால், குடும்பம் பிள்ளைகள் எனும்போது நாங்கள் நான்குபேருமே சேர்ந்து கதைப்போம். எங்கள் வீட்டு விஷயங்கள் பெரும்பான்மை பிள்ளைகளுக்கும் தெரியும். நால்வரின் கருத்தும் கேட்கப்பட்டு இறுதி முடிவு எடுப்பதும் நால்வரும் தான்.

திருமணத்திற்குப் பின்பும் என் விருப்பங்களை நானே விலக்கி வைத்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதில் ஒன்று மேலே கற்பது. நான் கற்பதா இல்லை குழந்தைகளின் எதிர்காலமா என்று வந்தபோது மெல்லிய கவலையோடு குழந்தைகளின் எதிர்காலத்தை தெரிவு செய்திருக்கிறேன். அன்று மெல்லிய வருத்தம் இருந்தது உண்மை. இன்று அதற்காக, நல்ல முடிவு எடுத்திருக்கிறேன் என்கிற நிறைவு எனக்கு உண்டு.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
3. உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றிச் சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?

என்னால் என் மனதில் படுவதைச் சொல்லாமல் இருக்கவே முடியாது! ஆனால், எல்லாமே நிறைவேறுமா என்றால் இல்லைதான். அப்படி இல்லாத பட்சத்தில் எனக்கு அதற்கு முறையான விளக்கம் வேண்டும். அந்த விளக்கத்தை 'ஆமாம்! அது சரிதான்' என்று என் மனம் ஏற்கவேண்டும். அது தவிர்த்து, என் விருப்பத்தை நான் முக்கியமற்றதாக தூக்கிப்போட்டுவிட்டு போகிறேன் என்றால் அந்த விடயத்தின் மீது எனக்கு பெரிய ஆவல் இல்லை என்று பொருள்.

இதையும் தாண்டி என் விருப்பங்களை நான் சொல்லாமல் விடுகிற ஒருவர் என்றால் என் அம்மாதான். அதற்கு காரணமும் அதை நான் சொல்வதால் அவர் காயப்பட்டுவிடுவாரோ என்கிற ஒற்றை யோசனை மட்டுமே! அவரிடம் நான்தான் சமரசம் ஆவேன். ஏனோ, சின்னதாய் அவரின் மனதை சினுங்க வைக்கக்கூட என்னால் முடிவதில்லை. அப்பா, அவர் இருந்தவரை ஒரே ஒரு விடயத்தை தவிர எதற்கும் என்னை கட்டாயப்படுத்திய நினைவு இல்லை. அதனாலோ என்னவோ அவரின் விருப்பங்களை நானே கவனித்து நிறைவேற்ற ஆசைப்பட்டிருக்கிறேன்.


4. இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்.

5. உங்களை நாடிவந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?

இந்த இரண்டு கேள்விக்குமே பொதுவான பதில் தரலாம் என்று நினைக்கிறேன்.

அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். அவர் விரும்பியதை செய்தும் கொடுத்திருக்கிறேன். சகோதரிகளின் குழந்தைகளுக்கும் அதே. சகோதரிகளிடம் கேட்கவே மாட்டேன். சண்டைக்கு வேண்டுமென்றால் நன்றாகப் போவேன்.

அப்பா; அவரிடம் பலமுறை கேட்டிருக்கிறேன். எதையுமே வாய் திறந்து சொல்லவே மாட்டார். நானாகக் கவனித்து அவருக்குப் பிடித்தவற்றைச் செய்து கொடுத்திருக்கிறேன். 'நான் தான் ஒண்டும் வேண்டாம் எண்டு சொன்னனான் எல்லா பிள்ளை' என்று சொன்னாலும், மெல்லிய சந்தோசச் சிரிப்பில் சுருங்கும் அவரின் கண்ணோரத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகை.

என் கணவர், அவர் கேட்டால் தலைகீழாக நின்றேனும் செய்வேன். அப்படி அவர் கேட்பது மிக மிகக் குறைவு.

அடுத்து என் குழந்தைகள்: அவர்கள் என்ன கேட்டாலும் செய்துகொடுக்க விருப்பம். நியாயம் இல்லை, அல்லது அது அதிகம், இந்த வயதில் தேவை இல்லை என்றால் நிச்சயம் மறுத்துவிடுவேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அத்தியாவசியம் அல்லாத ஆனால் அவர்கள் விரும்புகிற ஒன்றாக இருந்தால், அதைச் செய்யலாம் பாதகமில்லை என்று உணர்ந்தால் நிச்சயம் அதற்கு ஒரு விலை வைப்பேன். கூடுதலாக நான் சொல்வது இன்ன பாடத்தில் நீங்கள் இன்ன மார்க்ஸ் எடுத்தால் அதை செய்து தருவேன் என்பது.

இவர்களை எல்லாம் தாண்டி நான் நேசிக்கும் மனிதர்கள். உண்மையிலேயே அந்தளவு மனதுக்கு நெருக்கமானவர்களாக யாரையுமே கொண்டுவரமாட்டேன். அப்படிக் கொண்டுவந்தால், அப்போதும் அவர்களிடம் கேட்டு ஒன்றைச் செய்ய நான் விரும்புவது குறைவு. அவர்களுக்கு என்ன விருப்பம் என்று அவர்களே அறியாமல் அறிந்து செய்வதில் ஒரு அலாதிப் பிரியம் உண்டு!



 

Subamurugan

Well-known member
* உன் விருப்பம் என்ன?...

* இக் கேள்வி மேலோட்டமாக பார்க்கும் போது சாதாரணமாக தோன்றும். ஆனால் அப்படியல்ல... ஒருவகையில் நம் உரிமையை நமக்கு வழங்கும் சந்தர்ப்பம் தான் இக்கேள்வி.

* என்னை நோக்கி வந்த இக்கேள்வி வெகு சொற்பம். என் ஒரு கை விரல்கள் கூட தேவைப்படவில்லை. நாம் எதிர்பார்க்கும் இடத்திலிருந்து ஒருபோதும் கேட்கப்படாத கேள்வி.. ஆனால் எதிர்பாராமல் நம் மழலையே நமக்கு அந்த வாய்ப்பை வாரி வழங்கும்..
* ஆனாலும் நம் எண்ணமும் சொல்லும் அரங்கேறுவதில்லை. நம் கடமையை நினைவுபடுத்துபவர்களுக்கு நம் உரிமை நினைவில் இருப்பதில்லை.

* எனக்கு குடும்பமும் சொந்தமும் முக்கியம். நான் சார்ந்தவர்களிடமும் என்னைச் சார்ந்தவர்களிடமும் இந்த வாய்ப்புகளை என்னால் முடிந்தவரை ஏற்ப்படுத்துகிறேன்.

* சிரிக்கும் முகங்களை பார்த்து சிரிப்பவள் நான்.. அதனால் முடிந்தவரை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வைக்கும் எண்ணம் கொண்டு செயல்படுகிறேன். அதில் குழந்தைகளுக்கு முதலிடம்..அதுதானே நம்மை உயிர்ப்புடன் வைக்கும் மந்திரம்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுத்தாளர் சுதாரவி அவர்களின் பகிர்வு ...

நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சுதா!


1. விருப்பம் பற்றி பொதுப்படையான கருத்து?

விருப்பத்தை அறிந்து கொண்டு செயல்படுவது என்பது பலரின் கனவாக உள்ள ஒன்று. நம்மில் பலருக்கு அது வாய்ப்பதில்லை. சிலருக்கு விருப்பத்தை பற்றிய தெளிவான சிந்தனை இல்லை என்றே சொல்லலாம். ஒருவரின் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவது அந்தந்த சூழ்நிலை, கால மாற்றத்துக்கு ஏற்ப நடைபெறும். சில விருப்பங்கள் வரைமுறைக்கு மீறிய ஒன்றாகும் போது அதை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படலாம்.


2. நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடமிருந்து எத்தகைய சந்தர்பங்களில் எதிர் கொண்டுள்ளீர்கள்?

திருமணத்திற்கு முன்பு எனது விருப்பங்களை என் பெற்றோர்கள் கேட்டறிந்து கொண்டு அந்தந்த சூழலுக்கு ஏற்ப நிறைவேற்றி கொடுத்தும் /கொடுக்காமலும் இருந்திருக்கிறார்கள். வாழ்வின் மிகப் பெரிய முடிவுகளில் எல்லாம் எனது விருப்பங்கள் அறிந்து கொள்ளப்பட்டு அதற்கேற்ப நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பின்பு எனது விருப்பங்களுக்கு செவி கொடுத்து ஒவ்வொன்றையும் அக்கறையுடன் செயல்படுத்திக் கொடுப்பதில் என் கணவருக்கு நிறைய பங்குள்ளது. சில சந்தர்பங்களில் அதன் சாதக பாதங்களை அலசி ஆராய்ந்து அதை செய்யலாமா வேண்டாமா என்பதை என் முடிவிற்கே விட்ட கணங்களும் உண்டு.

3.உங்கள் விருப்பங்களை வெளிப்படையாக சமரசங்களின்றி சொல்ல முடிந்ததா?

நிச்சயமாக இல்லை என்றே சொல்லலாம். குடும்பத்தில் எனது விருப்பங்களை தெரிவிப்பதில் எந்த சமரசங்களும் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் பொதுவெளியில் எனது விருப்பங்களை எந்த சந்தர்பத்திலும் நான் தெரிவுபடுத்துவதில்லை. அதற்கான காரணம் எனது விருப்பங்கள் பலரின்/ சிலரின் வருத்தத்திற்கு காரணமாகலாம் என்கிற எண்ணத்தில் நான் வெளிப்படுத்துவது இல்லை.

4.இதுவரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எந்த சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்?

எனது பிள்ளைகளிடம் அவர்கள் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவர்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு அவற்றிற்கான சாதகபாதகங்களை எடுத்து கூறி நிறைவேற்றி கொடுத்தும் / கொடுக்காமலும் இருந்திருக்கிறேன். என் குடும்பத்து ஆட்கள் அனைவரிடமும் இக்கேள்வியை கேட்காமல் எதையும் செய்ததில்லை. அவர்கள் விருப்பம் அறிந்தே செய்திருக்கிறேன். பொதுவெளியில் எனது நெருங்கிய தோழமைகளிடம் கேட்டு அவர்கள் விருப்பம் அறிந்து அதற்கேற்ப சில/ பல செயல்களை செய்தும் கொடுத்திருக்கிறேன்.

5. உங்களை நாடி வந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?


என்னளவில் நிச்சயமாக பெற்றன என்றே சொல்லுவேன். எனிடம் தங்களது விருப்பங்களை கூறி அங்கீகாரம் தேடி வந்தவர்களுக்கு என்னால் இயன்ற அளவில் அவர்களின் விருப்பங்கள் நிறைவேற முயற்சி எடுத்திருக்கிறேன்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
ஆழமான வாசிப்பும், தான் உணர்ந்ததை நச்சென்று விமர்சிப்பவருமான அலமு பழனியப்பன் அவர்களின் பகிர்வு ...

உங்கள் மனதில் தோன்றியதை நேரம் ஒதுக்கிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அலமு!


இந்தக்கேள்வியை எளிதாக கேட்க முடியும் தான் என்றாலும் யாரும் அவ்வளவு எளிதில் கேட்போம் என்று தோன்றவில்லை.


நான் கடந்து வந்த பாதையில் , ஒரு வயது வரை அதாவது திருமண வயதான இருபத்தி ஒன்று வரை இதை என்னிடம் யாரும் கேட்ட ஞாபகமே இல்லை எனக்கு. எல்லாமே பெற்றவர்களாலேயே முடிவு செய்யப்பட்டது தான்.

"ஏன்" என்று இந்தக்கேள்வியினால் யோசித்தேன்...

ஒரு வேளை அவர்களது பொருளாதார சூழ்நிலைகளாக இருக்குமோ? அல்லது "நாம் பெற்றவர்கள் நம் விருப்பமே என் மகளின் விருப்பம் என்று நினைத்தார்களோ? "


ஆனால், நான் என்னிடம் கேட்கவில்லையே என்று வருத்தப்பட்ட ஞாபகமும் இல்லை. உண்மையில் கேட்டிருந்தால் முடிவு எடுக்க தடுமாறியிருப்பேன் தான். என்ன தான் என் பெற்றோர் தங்கள் நான்கு பெண் பிள்ளைகளையும் தரமான பள்ளிக்கல்வியைத்தந்து சுதந்திரமாகவும் வளர்த்தபோதும் இந்தக்கேள்வியை கேட்டிருந்தால் சொல்லத் தெரிந்திருக்காது, அன்றைய இளம் பருவத்திலும் சரி இப்போதைய மத்திம நாற்பதுகளிலும் என்றே தோன்றுகிறது.

உங்கள் விருப்பை வெளிப்படையாக சமரசங்களின்றி சொல்ல முடிந்ததா? அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?

என் விருப்பை சில இடங்களில் அதாவது இப்பொழுது என் குடுப்பத்தாரிடம் மற்றும் மிக அரிதாக வெளியிடங்களிலும் சொல்ல முடிகிறது தான் . ஆனால், எல்லாமே நிறைவேறுவதில்லை. சொல்லும் நானும் சரி கேட்பவர்களும் சரி... ஒரு வார்த்தையாகத்தான் கேட்கிறார்கள், பதில் சொல்கிறோமே தவிர ஒருவர் சொல்லுவதையே நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணத்தி்ல் கேட்க முடியாது என்றே தோன்றுகிறது.



இது வரைக்கும் நீங்கள் இக்கேள்வியை யார் யாரிடம் எச்சந்தர்ப்பங்களில் கேட்டுள்ளீர்கள்?

இது வரை நான் யாரிடம் கேட்டேன் என்று யோசித்தால் நான் ஒரு சாதாரண குடும்பத்தலைவி .... மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவளாதலால் இக்கேள்வியைக் கேட்கும் சந்தர்ப்பம் மிக மிகக் குறைவு தான். என் வீட்டைப்பொறுத்தவரை அதாவது இந்த இடத்தில் என் வீடு என்பது என்னவரையும் என் பனிரெண்டு வயது மகளையும் மட்டுமே சேர்ந்தது. எல்லா விஷயத்திலும் என் கணவரிடம் இக்கேள்வியை கேட்டே தான் செய்வேன். சில நேரங்களில் அவர் " என் விருப்பம் இது தான்... ஆனால் உன் விருப்பம் போலவே என்றாலும் செய்வோம். " என்பார். இது எங்கள் இருவருக்கிடையில் அடிக்கடி நிகழ்வது தான். நான் அவர் விருப்பிற்கு மாறுவதும் அவர் என் விருப்பத்திற்க்கு வருவதும். என் மகளிடம இதை அடிக்கடி கேட்வே செய்கிறேன். சின்ன சின்ன விஷயங்களில் அவள் விருப்பப்படி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கிறோம். இப்போதைய அவள் வயதிற்கு இது சரி வரும் என்றாலும் எல்லா விஷயத்திலும் அவள் விருப்பத்தை நான் கணக்கில் கொள்வேனா என்பது சந்தேகமே.



என்னை நாடி வந்த அவர்களின் விருப்புகள் உரிய அங்கீகாரம் பெற்றனவா?

என்னை நாடி யாரும் அவர் விருப்பத்தை கொண்டு வந்ததில்லை இதுவரை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் அவ்வளவு உயரத்தில் நான் இருக்கவில்லை. என் வட்டம் சிறிதே .....
 

ரோசி கஜன்

Administrator
Staff member
மேலேயுள்ள பகிர்வுகள் பற்றிய உங்கள் ஒவ்வொருவரினதும் கருத்துக்களை அறிய மிக்க ஆவலோடு உள்ளோம்.

அவற்றை கீழேயுள்ள கருத்துத் திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்!

 

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுத்தாளர் யாழ் சத்யா ....
மண்டை காயவைத்தாலும் எளிமையான வகையில் உங்கள் மனதில் தோன்றியதை சொல்லியு்ளீர்கள்.


நன்றி யாழ் சத்யா!



விருப்பம்

இப்போது சில நாட்களாக என்னை சுற்றிச் சுழல விட்டு மண்டை காய வைத்துக் கொண்டிருக்கும் மிகச் சாதாரணமான சொல். சுகிர்தாக்காவின் கேள்வி இதுவரை எனக்குச் சரியாகப் புரிந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். அதனால் தான் கேள்விகளைத் தவிர்த்துப் பொதுவாகப் பகிரலாம் என்று முடிவெடுத்தேன். அதிலேயே கேள்விகளுக்கான விடைகளும் அடங்கலாம் என்று எண்ணுகிறேன்.

முதலில் "விருப்பம்" என்பது என்ன? ஒரு பொருளோ செயலோ எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதுதானே.. அதை விரும்பும் பட்சத்தில் அதை அடைய முயல்கிறோம். அது நல்லதா, கெட்டதா, சரியோ, பிழையோ எல்லாமே விருப்பத்தின் முன்பு இரண்டாம் பட்சம் ஆகி விடுகிறது.

சிறு வயதில் என்னை எல்லோரும் அடம் பிடிப்பதாகச் சொல்வார்கள். விரும்பியவை சிலது தானாய் கிடைக்கும். அப்படிக் கிடைக்காதவற்றை பிடிவாதமாகப் பெற்றுக் கொள்ளப் பழகியிருந்தேன்.

வளர வளர மூளைக்கு நல்லது கெட்டது புரிய ஆரம்பிக்கவும் பெரியவர்கள் நமது நன்மைக்குத்தானே சொல்கிறார்கள் என்று முக்கியமான விடயங்களில் இந்தப் பிடிவாதம் பின்நின்று விருப்பத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வைத்தாயிற்று.

ஆனால் வயது கூடக் கூட அனுபவங்கள் தரும் வாழ்க்கைப் பாடத்தில் நான் புரிந்து கொண்ட ஒன்று எம் விருப்பங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை நிறைவேற்றவில்லையோ எங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பது தான்.

அதாவது எங்கள் மனம் உவந்து தியாகம் புரிந்தால், அங்கே எமக்கு மகிழ்ச்சி கிடைக்கும். சிறு உதாரணமாக, எனக்கு கிறீம் பிஸ்கெட்டுகள் என்றால் சரியான விருப்பம் இப்பவும். ஆனால் இப்போது கிறீம் பிஸ்கெட்டுகள் வாங்கினால் உண்ண மனம் வராது. மகனுக்குப் பிடிக்குமே என்று ஒன்றைக் கூடச் சாப்பிட மாட்டேன் வீட்டில்.

காரணம் அது நானாய் மனமுவந்து என் பிள்ளையின் விருப்பத்துக்காய் என் விருப்பத்தைத் தியாகம் செய்வது. அது எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே அளிக்கிறது. அங்கே என் விருப்பம் அடிப்பட்டுப் போகிறது. அந்த விருப்பம் நிறைவேறாமல் போவதில் சுகம் மட்டுமே.

சில நேரங்களில் என் வாழ்க்கையில் நான் விரும்பி எடுக்கும் முடிவுகள் தவறாக அமைந்தாலும் கூட அதை முயன்று பார்த்த திருப்தி எனக்குக் கிடைக்கிறது. அனுபவம் போல சிறந்த ஆசான் ஏது?

மகன் இன்னமும் சிறு வயதுதான் என்பதால் அவருக்கு எது நன்று என நானே பார்த்துச் செய்கிறேன். ஆனாலும் ஒரு புதிய ஆடை அணிகையிலோ அல்லது புதிய விளையாட்டை விளையாடும் போது, "பிடிச்சிருக்கா?" என்று இயல்பாகவே கேட்டு விடுகிறேன். அவரும் தானாகவே தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார். உதாரணமாக, "அம்மா! இண்டைக்கு கேக் செய்வம்.."

என்னிடம் என் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்றால் உடனே ஞாபகம் வருவது என்னுடைய ப்ரெஞ்ச் நண்பி ஒருவர் தான். பிரெஞ்ச்காரர் வழக்கப்படி பரிசை தருபவர் முன்பே பிரித்துப் பார்ப்பது வழக்கம். நான் உடனே பிரித்ததும் பத்துத் தடவையாவது கேட்டு விடுவாள். "பிடிச்சிருக்கா?" என்று. அதுபோல அவள் பரிசும் கவனமாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்ததாக மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

உதாரணமாக ஒரு தடவை எனக்கு A4 கலர்சீட் பெரிய பெட்டி ஒன்று தந்தாள். எனக்குக் கைவேலைகளில் ஆர்வம் அதிகம் என்று. இன்னொரு தரம் சிறு பிள்ளைகள் சமையல் செய்யக் கூடிய போல ரெசிப்பி புத்தகம். மகனோடு சேர்ந்து அதிலுள்ளது போல சமைப்பேன். இப்படிக் கரிசனையாகக் கிடைக்கும் பரிசுகளில் பார்த்த உடனேயே விருப்பம் வந்து விடுகின்றன. விலை உயர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இருப்பதில்லை எனக்கு.

இதேபோல ஒருவரோடு நெருக்கமாகப் பழகும் போது எனக்கும் அவர்களது விருப்பங்கள் புரிகிறது. அதற்கு மதிப்பளித்தே பெரும்பாலும் நடந்திருக்கிறேன். உதாரணமாக தாய்லாந்து நண்பியோடு வெளியே உணவுண்ணச் சென்றால் அவளுக்கு எங்களது உணவுகளில் நாட்டம் அதிகம். அதனால் இந்தியன், ஸ்ரீலங்கன் ரெஸ்டோரண்ட்டுக்கே அழைத்துச் செல்வேன். என் விருப்பம் புரிந்து அவள் தங்கள் நாட்டு உணவுகள் சமைத்துத் தந்ததும் உண்டு.

ஒட்டு மொத்தத்தில் என்னைப் பொறுத்தவரை, புரிந்துணர்வு உள்ள இடங்களில் பெரும்பாலும் வாய் விட்டு சொல்லாமலேயே விருப்பங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

யாரும் கேட்காவிட்டாலும் வாழ்க்கை சம்பந்தமான முடிவுகளில் வாய்விட்டு சொல்லியே தீர வேண்டும். அதன் பின்விளைவுகளையும் நாம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். நாம் எம் விருப்பத்தை நிறைவேற்ற முதல் தீர ஒன்றுக்கு நூறாய் சிந்தித்து முடிவெடுப்பது பின்னாளில் கவலைப்படாதிருக்க வழி வகுக்கும்.

ஆனால் நாம் விரும்பியதெல்லாம் கிடைத்து விட்டால் எம் வாழ்க்கையில் சுவாரஸ்யம் தான் ஏது?

எனக்கு ஏனோ இப்போது இந்தப் பாடல் தான் ஞாபகம் வருகிறது.

"நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை,
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை,
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே,
தொடர்ந்த கதை முடிந்ததில்லை
மனிதன் வீட்டினிலே,

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை...

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது,
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்,
யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது,
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
இன்பம் ஏதுமில்லை,
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை....

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை.....

எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது
எங்கே எவ்விதம் முடியும்,
இதுதான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது,
பாதை எல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்,
மாருவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்......

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
தெய்வம் ஏதுமில்லை,
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை...."
 

ரோசி கஜன்

Administrator
Staff member
திவ்யா சிவக்குமார், தன் மனதில் தோன்றியதை நச்சென்று சொல்லியிருக்கிறார்.

ஆர்வத்தோடு உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி திவ்யா!



1.எந்த ஒரு உறவோ, நட்போ ஓர் இடத்தில் கை கோர்க்கும் போது பரஸ்பர புரிதலுக்கு இக்கேள்வி அவசியமே.

(தன்னை பற்றி/தான் மட்டுமே எடுக்க வேண்டிய முடிவுகளுக்கு இக்கேள்வி அவசியமற்றது)

2. ஆம். எதிர்கொண்டு உள்ளேன்.

தாய் வீட்டில் இருக்கும் போது,முக்கிய முடிவுகள் எடுக்கும் போது,ஏதேனும் பொருட்கள் வாங்கும் போதும் அம்மா அப்பா இருவரும் எங்கள் விருப்பு வெறுப்புகளை அறிந்தே செய்வர்.


3.சொல்ல முடிந்தது .பல நேரங்களில் வெற்றி பெற்றுள்ளன.


4.பள்ளி கல்லூரியில் பயிலும் போது குழுக்களாக இணைந்து செயல்படும் போது சக மாணவிகளிடம்,

குடும்ப சூழலில் எடுக்கும் முடிவுகள் கணவரிடம்.


5. என்னால் இயன்ற அளவு மற்றவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி இருக்கிறேன்.
 

Sukinathan

Active member
உங்கள் விருப்பம் என்ன?
——————————-
எனது பார்வையில்......

(பரீட்சை காலக் கேள்விகள் போல படித்ததில் இருந்து மட்டும் அடுத்த தடவை கருத்தாடல் வைக்கும் படி செந்தூரம் குழுவினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். )

1) இது பற்றி என் பொதுப்படை கருத்து......
(உன் விருப்பம் என்ன)

இக் கேள்விக்கு என் விருப்பம் பற்றி பகிரப் போனால் ..இறந்த என் அம்மாவும், அப்பாவும் திரும்ப வரவேணும் என்பதுதான்.

இது சிறு பிள்ளைத்தனமான பதில் தான், நப்பாசை தான் , அந்த “உளவியல்” இங்குதானே முளை கொள்கிறது. நிவர்த்தியும்..நிராகரிப்பும் இங்கு தானே தடுமாறுகிறது...

ஒரு தனிமனித விருப்பு வெறுப்புக்களை சுயாதினத்திலிருந்து பிரித்தறிந்து எழும் வினா இது. எனது ஆசை , விருப்பம் கேட்கப்படுகிறதென்றால் , கேட்பவரால் நான் மதிக்கப்படுகிறேன் என்று தானே அர்த்தம்.

இது நாகரீகமான உளவியல் ஒத்தடம் தான். எனது விருப்பம் என் தெரிவாக மட்டும் மதிக்கப் படும் வரை.

2). இக் கேள்வியை எதிர் கொண்டுள்ளீர்களா?
யார் மூலம்? எந்த சந்தர்ப்பத்தில்?

• ஓம் இக் கேள்வியை எதிர்கொண்டுள்ளேன்.
• நான் சந்தித்த நல் மனிதர்களிடமிருந்து.
• படிக்கும் போது...பாடத் தெரிவின் போது.
சாப்பிடும் போது..shopping செய்யும்
போது...திருமணத்தின் போது..(இது என்ர
Husby கேட்டது..ஹாஹாஹா) ...ஆனால்
நாம் வாழும் நாடுகளில் இந்தக்
கேள்வியுமன் தானே தினம்
பயணிக்கிறோம்.
3). உங்கள் விருப்பை சமரசங்களில் சொல்
முடிந்ததா?
ஓம் ,

•அவ்விருப்புகள் வெற்றி பெற்றனவா?
திருமணத்தின் முன் பல விருப்பங்கள்
நிறைவேறவில்லைத் தான்..ஆனால்
இப்போதெல்லாம் என் விருப்பங்கள் வெற்றி
மட்டுமல்ல நிறைவும் பெற்றிருக்கு.
(ஆனால் சாப்பாட்டில் மட்டும் என்
விருப்பம் உதறப்படுகிறது.,,காணும் எழும்பு
சொல்லினம்)
4). இக்கேள்வியை நீங்கள் யாரிடம்
கேட்டுள்ளீர்கள்? எச்சந்தர்ப்பத்தில்?

• என் கணவன், மகன், நண்பர்கள்,
பிறநபர்கள்.

• முக்கியமாக நளபாகத்தின் போது...பரிசுப்
பொருட்கள் அவர்களுக்காக தேர்வு செய்யும்
போது.அவர்களுடனானநேரப்பகிர்தல்.,,எனப்
பல விடயங்களில்...

5). உங்களை நாடி வந்த அவர்களின்
விருப்புக்கள் உரிய அங்கீகாரம்
பெற்றனவா?

இந்தக் கேள்விக்குப் பதில் எழுதி என்னை
முழுமைப் படுத்த முடியவில்லை...அவர்களது
பல விருப்புகள் என்னால் நிறைவேற்றப்பட்டது ..

ஆனால் சில ..என் தடைகளால் அங்கீகரிக்கப் படாமல்.,,படாது.,

அது..
ராட்சஷ ராட்டின ஏற்றம்..
அனாவசிய இலத்திரணியல் பொருட் கொள்வனவு.
ஆழ் கடல் நீச்சல்.
Not allowed to keep girlfriend ..,
வேக காரோட்டம்..,இப்படி சில..
——————————————-
 

ரோசி கஜன்

Administrator
Staff member
எழுத்தாளர் வேதாகௌரியின் பகிர்வு:

தன் கருத்தை நச்சென்று சொல்லியிருக்கிறார் கவி.


பகிர்வி்ற்கு நன்றிம்மா!


உங்கள் விருப்பம் என்ன? என்று வயதில் மூத்த குடும்ப உறுப்பினரிடம் கேட்டு அதன்படி நிறைவேற்றினால் அவர்களின் சந்தோஷம் அளப்பரியது. அவற்றை நிறைவேற்றாவிட்டாலும் என்னிடம் கருத்துக் கேட்டார்கள் என்று அவர்களின் மனமும் மிக மகிழ்ச்சி கொள்ளும்.

திடமான முடிவு எடுக்க முடியாதவர்களிடம் நாம் உங்கள் விருப்பம் என்ன? என்று கேள்வி கேட்டால் அவை தரமிழந்து விடுமா? என்றால் தரம் இழக்காது என்பேன், அவர்களின் முடிவை கேட்டு சில மாறுதல்களுடன் கூட அவற்றை நிறைவேற்றலாம் என்பதே எனது கருத்து. ஏனேனில் நீங்கள் எல்லோரும் எப்பொழுதும் சரியான முடிவை மட்டுமே எடுப்பார்கள் என்பது நிதர்சனம் அல்ல தானே, யானைக்கும் அடி சறுக்கும்.

என்னிடமும் சில இடங்களில் இக்கேள்வியை கேட்டுள்ளனர், எனது குடும்பத்தில் நெருங்கிய நட்புகளில் எனது விருப்பம் கேட்டு நடைபெறும் நிகழ்வுகள் ஏராளம், அவை விழாக்கள் கேளிக்கைகள் அல்லது சில முக்கிய முடிவுகள் , இவ்விஷயத்தில் நான் வரம் வாங்கி வந்தவள் என்று மிகவும் பெருமைப்பட்டுக் கொள்கிறேன், சில விருப்பங்கள் சமரசத்துடன் சொல்லி நிறைவேறியதும் உண்டு.

நான் பெரும்பாலும் என்று சொல்ல மாட்டேன், ஆனால் சில விஷயங்கள் பிறரிடமும் அவர்களின் விருப்பு வெறுப்புகளை கேட்டு அவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறேன்.
 
Top Bottom