You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உயிரைச் சிதைத்த உறவு! - கயூரி புவிராசா(இலங்கை )

ரோசி கஜன்

Administrator
Staff member

1542660955446.png

பூவிதழை ஒத்த அந்தப் பஞ்சு விரல்களைப் பற்றி இழுத்தது ஒரு முரட்டுக்கரம். நான்கு சுவர்கள் மட்டுமே அங்கு. ஒரு பக்கச்சுவரில் இருந்த கதவைத் தாழிட்ட பின், அவ்வுருவின் பார்வை அவளை நோக்கிப் பாய்ந்தது. அந்தப் பார்வையிலேயே ஐம்புலன்களும் அடங்கியது, அவளுக்கு. அப்பட்டமாய்ப் பயத்தைப் பிரதிபலித்தன, அவள் விழிகள். அவள் உடம்பெங்கும் சிவப்பு வர்ணம் தீட்டி ஓவியம் வரைந்தது, அவன் இடுப்பிலிருந்த பெல்ட்!



“அம்மா...!” அலறி விழித்தாள் கீதாஞ்சலி.

‘காலங்காத்தால என்ன கனவிது?

அந்தத் திமிர்பிடிச்சவன் நிஜத்தில தான் உயிரை வாங்குறான் எண்டா, இப்பக் கனவிலையும் என்ர நிம்மதியைக் கெடுக்கிறானே! பாவி! ஏனடா... உன்ன விரும்பினது பிழையா?

நீ சொன்னதுக்கெல்லாம் மறு பேச்சில்லாம தலையாட்டுவனே... என்னை விட்டுட்டுப் போக உன்னாலை எப்பிடி முடிஞ்சது? நீ தான் எல்லாமெண்டு நினைச்சனே கடவுளே!’

அவள் அலறைலைக் கேட்டு ஓடி வந்தாள் மலர்.

“என்னாச்சுடி அக்கா? ஏனிப்ப அழுறாய்? சொல்லன்டி...” என்றபடி அவள் முறைத்த முறைப்பில், “இல்லையடி.. அவர்... அவர்... கனவு...” மென்று துப்பினாள், கீதாஞ்சலி.

“நீ என்னடி நினைச்சுக் கொண்டிருக்காய்? அவன் தான் உன்னை வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டானே! பிறகும் ஏனடி நீயும் கஸ்ரப்பட்டு அம்மா, அப்பாவையும் ஆக்கினை செய்யிறாய்?” கடிந்தாள், தங்கை.

அதையும் மீறி, அந்தக் குழந்தை முகத்தைத் திட்ட முடியவில்லை அவளால். “அக்கா” என்றபடி, அணைத்துக்கொண்டாள்.

அவன் மீது கண் மண் தெரியாத கோபம் வந்தது மலருக்கு. அவன் வேறுயாரும் இல்லை, ஜீவன். ஒரு காலத்தில், “என் அத்தான் சொன்னாச் சரி தான்.” என, அந்தளவு மரியாதை அவனுக்கு.

‘இப்ப என்னத்தைச் சொல்லுறது? அவனால தானே அக்காக்கு இந்த நிலைமை? ஏன் மாறினவன்?’

அவளுக்குமட்டுமல்ல, யாருக்குமே விடை தெரியவில்லை.


எல்லாருக்கும் கீதா அவள். அவனுக்கு மட்டும் குட்டிம்மா.

“கீதாம்மா எழும்பிட்டியா? பள்ளிக்குக் கிளம்பலையா? ரீயைக் குடிச்சுட்டுப் போய்க் குளி!”

“சின்னவள் வெளிக்கிட்டிட்டாளே…?”

“மலர்... டிபன் பொக்ஸ் எங்க வச்சனி?”

அடுக்களைக்குள்ளிருந்து பறந்து வந்தது, அம்மாவின் குரல்.

“அம்மா... அக்காவை விடுங்கோ. அவள் ரீச்சர். நான் அப்பிடியே? கொஞ்சம் லேட் ஆனாலும் அந்த மேடம் அந்தக் குலை குலைக்கும். பத்தாததுக்கு ‘ஒரு பிரிஃபெக்ற் (மாணவத்தலைவி) நீ. மற்றவைக்கு முன்னுதாரணமா இருக்கோணும்.’ என்று கழுத்தறுக்கும்.” புலம்பியபடி சொக்சைத் தேடினாள் மலர்.

“இதோ வாறன் அம்மா...” கடகடவெனப் பல்தேய்த்துவிட்டு அழுதசுவடே தெரியாமல் விறாந்தைக்கு வந்தாள் கீதாஞ்சலி.

“அப்பா தோட்டத்துக்குப் போய்ட்டாரோ அம்மா…?”

“ஓமம்மா. வெள்ளனவே போய்ட்டார். இண்டைக்குச் சந்தைக்கு மரக்கறி கொண்டு போகவேணும் எண்டவர்.” என்ற மரகதம், “நீ வெளிக்கிடு!” என்றுவிட்டு, அடுத்த வேலையைக் கவனிக்கப் போனார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி தான் இவர்களின் பூர்வீகம்.

விவசாயம் தான் தொழில். அப்பா சர்வநாதன் தோட்டம், வயல் என முழுநேர உழைப்பாளி. மரகதமும் தன் பங்குக்குச் சும்மா இருக்கவில்லை. பத்துக் கோழிகளும் இரண்டு பசுக்களும் வீட்டிலேயே வளர்க்கிறார். அதனால், பால், தயிர், முட்டை என்று குறைவில்லாமல் இருக்கும். நிறைவான வருமானம் தான். சந்தோசத்துக்குச் சாட்சியாக இரண்டு கண்களாய்ப் பிள்ளைகள். மூத்தவள், இப்போது தான் கல்லூரி முடித்திருக்கிறாள், ஆசிரியர். இளையவள், உயர்தர முதல் வருட கணிதப்பிரிவு மாணவி(பதினோராம் வகுப்பு)

தேநீர் கோப்பையைக் கையில் பிடித்தபடி முற்றத்திற்கு வந்தாள் கீதாஞ்சலி.

வாசலில் அன்றலர்ந்த மலர்கள் தலை சாயத்து வரவேற்றன. புலர்ந்தும் புலராத அந்தக் காலை கூட அவள் மனக்காயங்களுக்கு மருந்தாகவில்லை. சுற்றிலும் பரவிய மல்லி வாசமும் தான்.

தூரத்தில் ஒலித்த பிள்ளையார் கோயில் மணியோசையில் கலைந்தவள், கிணற்றடி நோக்கி நடந்தாள். தன் எஜமானியின் வேதனை புரிந்தது போல ரைகரும் மௌனமாய் வாசலில் படுத்திருந்தது.

அதன்பின் பரபரவென்று தயாராகி, “அம்மா வாறன்...” என்றபடி, பாக்கைத் தோளில் போட்டுவிட்டுச் சைக்கிளை எடுத்தாள், கீதாஞ்சலி.

“பள்ளிக்கூடம் பக்கம் தானே? எனக்குச் சைக்கிளே காணும் அப்பா.” என, ஸ்கூட்டி எடுக்கவிருந்த தந்தையையும் தடுத்துவிட்டாள்.

அவளது அந்தப் புரிந்துணர்வும், குடும்பத்தின் மீதான பாசமும், அமைதியான சுபாவமும், குழந்தைத்தனம் மாறா முகமும் தான் அவனைக் காலடியில் விழுத்தியது.

ஜீவன்…

அவன் தான் அவளுயிரில் கலந்தவன். ஒரே ஊர் தான். இவளை விட மூன்று வயது பெரியவன். ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவன். தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளர்.

தமிழர்கள் அங்கு விரிவுரையாளராவதென்றால் மிதமிஞ்சிய அறிவாற்றல் இருக்க வேண்டும். அவனோ, சரஸ்வதியின் முழுக்கடாட்சம் பெற்றவன். கல்வி மட்டுமல்ல, கவித்துவத்தையும் அள்ளிக்கொடுத்திருந்தாள், அந்தக் கலைமகள்.

விழிகளாலேயே கவி படிப்பவன். அவள் உயர்தரம் கற்றபொழுதில் தான் பழக்கம். பக்கத்து வீடென்றாலும் அவனோடு பழகியது குறைவு. அவன் பார்வையிலேயே, திமிர்பிடிச்சவன் என்று விலகிப்போவாள்.

“அன்ரி” என்று, அவன் தாய் கலாவோடு தான் நல்லமாதிரி. அவருக்குப் பொம்பிளைப்பிள்ளையில்லை. கீதாவும் மலரும் தான் உயிர். அவன் தந்தை ரங்கநாதனும் கலாவுக்குச் சளைத்தவர் இல்லை. “அஞ்சலிம்மா” என்று கொள்ளைப்பிரியம்.

ஆனாலும், கீதாஞ்சலிக்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம் இன்னதென்று தெரியாத உணர்வொன்று ஆக்கிரமிப்பதுண்டு.

அன்று, கீதாஞ்சலிக்கு உயர்தரப் பெறுபேறுகள் வந்திருந்தது. பல்கலைக்கழகத்திற்குப் போதுமாயிருந்தது, கூடுதல் மகிழ்வு அவளுக்கு.

“அன்ரி அன்ரி!” என்று, கத்தினபடி ஓடி வந்தாள் அவள்.

“என்னடாம்மா? வா வா! எனக்குத் தெரியும், என்ர செல்லம் கம்பஸ் போகுமெண்டு!” என, உச்சிமோந்தார் கலா.

“ஓம் அன்ரி, மட்டக்களப்புத் தானே. ஆனாலும், கொஞ்சம் பயமா இருக்கு. யோசிப்பம். இந்து நாகரிகத்துக்குத் தான் கிடைச்சிருக்கு அன்ரி. பார்ப்போம்.” என்றபடி திரும்பியவள், சுவற்றில் சாய்ந்து, கைகளைக் கட்டிக்கொண்டு நின்ற ஜீவனைக் கண்டு திகைத்தாள்.

“இவனெப்ப கம்பஸ்சால வந்தவன்? ஐயோ! ஏன் இப்பிடிப் பாக்கிறான்?”

அந்நேரம் பார்த்து “கலா… கலா…” என்று ரங்கநாதன் கூப்பிடவும், “நில்லம்மா, மாமா தோட்டத்துக்க நிக்கிறார்; தேத்தண்ணி குடுத்திட்டு வாறன்.” என்றபடி விரைந்தார் அவர்.

“அய்யோ…! பிள்ளையாரப்பா…! இவனிட்டயா நான் மாட்டோணும்? முருகா!” என்றபடி விழித்தவளை, “ என்ன மேடம், என்னோட கதைக்க மாட்டியள் போல?” கேட்டவன் குரலிலிருந்த கடினம், மருந்துக்கும் முகத்தில் இல்லை.

“இல்லை அண்ணா…” என்று இழுத்தவளைக் கண்டு அதிர்வது ஜீவனின் முறையானது.

“என்னடி அண்ணாவா?”

“ஏன்டி, என்ர அப்பா உனக்கு மாமா, அம்மா அன்ரி, நான் அண்ணாவாடி உனக்கு?”

“இல்லை அண்… ஜீவன்...” அவள் திணறியதும் நகைப்போடு பார்த்தவன், “சரி, என்ன செய்யப் போறாய்?” என்று ஆரம்பித்தான்.

ஏற்கனவே அவனைக் கண்டுத் தடுமாறி நின்றவளாச்சே! என்ன கேட்கிறான் என்று உண்மையிலேயே புரியவில்லை.

முழியை உருட்டிக் கொண்டு நிற்பதைத் தவிர வேறென்ன செய்யலாம்?

அவனோ அதைக் கவனியாது, சொல்ல வந்ததைச் சொல்லிவிடும் வேகத்தில் தொடர்ந்தான்.

“நான் சொல்றதக் கேப்பாய் தானேடா?” அவன் வார்த்தைகளில் இருந்த நெருக்கம் அவளுக்குள் என்னவோ செய்வித்தது. தொடர்ந்து சொல்வதைக் கேட்க முனைந்தாள்.

“உனக்குக் கம்பஸ் வேணாம்மா. மட்டக்களப்பு எல்லாம் சரிவராது. அதுவும் நீ பயந்த சுபாவம் வேற. ராக்கிங் பண்ணியே கொண்ணுடுவாங்கள்.” என்றவன், “கொலிஜ் போ! மூன்று வருசம் தானே? வெளிய வரும்போதே ரீச்சர்...” என்றான்.

அவன் படபடவென்று சொல்லிக்கொண்டே போகவும், சத்தியமாய்த் திடுக்கிட்டு விட்டாள் அவள்.

‘இப்போதுதானே பல்கலைக்கழகம் கிடைத்திருக்கு என்று மகிழ்ந்தேன்! என்ன இவர்? இத்தனை உரிமையாய்ப் போகாதே என்கிறார்!’ அவளுள்ளம் இப்படித்தான் முதலில் எண்ணியது.

‘இவர்மட்டும் பேராதனை போவாராம். நான் போகக் கூடாதாம்.’ சிணுங்கவும் செய்தது. ஆனாலும், மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டுத் தன் சம்மதத்திற்காக நம்பிக்கையோடு காத்து நின்றவனின் ஊடுருவும் பார்வை, சட்டென்று ‘சரி’ எனத் தலையசைக்க வைத்துவிட்டது.

மலர்ந்துவிட்டான் அவன். விழிகள் பளிச்சிட, “ம்ம்… ஏன்டி அந்தக் கண்ணை உருட்டுறாய்? வாயத் திறந்து பேசன். புட்டுக்கட்டியா வாயில வச்சிருக்காய்?” சீண்டினான்.

“உனக்கு என்னப்பாத்து என்ன பயம்டி?” என்றவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை, அவனவள்.

“இல்ல… நான் போகோணும். அம்மா தேடுவா…” முணுமுணுத்தாள். அவனது சென்ட் மணம்வேறு அவள் நாசி தொட்டு ஏதேதோ செய்தது.

“சரி, போ! ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லீட்டுப் போ!” என்றான் அவன், அழுத்தமாக.

“என்ன?” என்று நிமிர்ந்தவளின் விழி பார்த்து, “என்னைக் கல்யாணம் செய்யிறியா குட்டிம்மா?” வெகு சாதாரணமாகக் கேட்டுவிட்டான்.

“என்ன?” என்று அதிர்ந்தவளின் விழிகள் தன்னாலே நீரைச் சொரிந்தது. அது ஆனந்தத்திலா அதிர்ச்சியிலா என்று அவளுக்கேத் தெரியவில்லை. அதைப் புரிந்தவன் போல, நெருங்கி, மிக மெதுவாக நெஞ்சோடு சாய்த்துக்கொண்டான் அவன்.

“உன்னப் பாத்ததில இருந்து நான் உன்ன விரும்புறன். உனக்கும் என்னில விருப்பம் என்று நல்லாவே தெரியும். உன் படிப்பைக் குழப்பக் கூடாதெண்டு தான் பேசாமயிருந்தன். இனியும் பேசாமலிருந்தா, அந்தக் கிருபா தாலியக் கட்டிக் கூட்டிக்கொண்டு போய்டுவான் போலக் கிடக்கு…” என்றான், ஆழ்ந்த குரலில்.
 
  • Like
Reactions: Abi

ரோசி கஜன்

Administrator
Staff member

“இதென்ன புதுக்கதை?” என்று விழித்தவளை, “நீ யோசிக்காதடா! அவனுக்கு எவ்வளவு திமிரிருந்தா என்னுடயவளை விரும்புறன் என்று சொல்லியிருப்பான்? வந்த கோவத்துக்குக் கையைக் காலை உடைச்சிருப்பன், போனாப் போகுதெண்டு விட்டனான். இன்னும் ரெண்டு வருசம் தானே? நீயும் படிச்சிடுவாய், நானும் பாஸவுட் பண்ணிடுவன். பிறகென்ன? அப்பிடியே ‘எம்ஏ’ யையும் செய்தா விரிவுரையாளராகிடலாம். படிச்சதுக்கு அர்த்தம் கிடைச்சிடும்...” பேசிக்கொண்டே போனவனை, விழியெடுக்காமல் பார்த்தாள் கீதாஞ்சலி.

அன்று காதலைச் சொன்னவன், அதீத அன்பினாலே, நிமிடத்திற்கொரு முறை மரணத்தைத் தொடும் வலியுணர்த்திச் செல்லப் போகிறான் என, பாவம் அவள் அறிந்திருக்கவில்லை.

வயதிற்குரிய ஆசைகளிருந்தாலும் அவள் குடும்பநிலை அறிந்தவள். காதல் எல்லாம் சரிவராத ஒன்று என மனதில் உறுதி கொண்டவள். அதை நிமிடத்தில் தகர்த்தவன் ஜீவன். அவள் ஜீவனாயும் போனான். இறுதியில் அவள் ஜீவனையும் பறித்துப்போனான்.

“கீதா மிஸ், பிரின்சிப்பல் வரட்டாம்.” சக ஆசிரியரும் நண்பனுமான கிருபாதான் சொன்னான்.

நினைவடுக்கிலிருந்து மெல்ல வெளிவந்தவள், “சரி சேர்!” என்றபடி விரைந்தாள், அலுவலகம் நோக்கி.

புன்னகைக் கோலத்தை வரைந்தபடி வரவேற்றார் அதிபர், அருட்சகோதரி மார்கிரட். அவர் முகத்தைப் பார்த்தாலே, உள்ள சோகம் காற்றிலே கரைந்துவிடும்.

“சொல்லுங்க சிஸ்டர்!” என்றாள், அமர்ந்தபடி.

“வலயத்தில, கல்விச்சுற்றுலாவிற்கு அனுமதி குடுத்திட்டார்கள்மா. ஐந்து நாட்கள். எல்லாம் ரெடி தானே? கண்டி, நுவரெலியா, அப்பிடியே சிவனொளிபாதமலை...”

“ஓம் சிஸ்டர். சனி கிளம்பினால் புதனிரவு திரும்பலாம். கிருபா சேர் தானே ஒழுங்கமைப்பு? நான் பிள்ளையளிட்ட சொல்லுறன்.” என்றபடி கிளம்பினாள், இவள்.

இதயத்தில் மெல்லிய அதிர்வு! ‘அங்க அவனைக் கண்டால் என்ன செய்யிறது?



சுற்றுலாச் செல்லும் நாளில்…

கணநேரப் பிரிவே தாங்கமாட்டாமல் தன் காதலியை அணைக்க ஓடி வந்தான் பரிதி.

மாணவர்களின் ஆட்டம், சத்தங்களுடன் கண்டியை நோக்கி விரைந்து கொண்டிருந்தது, பஸ்.

பேருந்தில் ஒலித்த பாடல்கள் ஏனோ அவளுக்கு அவ்வளவு உவப்பைத் தரவில்லை.

அவன் நெஞ்சில் சாய்ந்தபடி கேட்டவையல்லவா?

“இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி...”

அவளவனின் குரலில் செவிகளில் ரீங்காரமாய்...

நினைவே கூடாதென்ற அந்த நாளும் விழிமுன் நிழலாடியது.

வழமைக்கு விரோதமாய்ப் பல அழைப்புகள். கவனிக்கத் தவறியது அவள் குற்றமா? விதியின் சதியா?

இன்றுவரை விடைதெரியாது?

“என்னாச்சு இவருக்கு? இத்தினை கோல் எடுத்திருக்கிறார்? கோயிலுக்குப் போகேக்க சைலன்டில போட்டது...போட்டபடி கிடக்கே! ஐயோ!”

இறுதியில் அழைப்பேற்கப்பட்டதும், “எங்கயடி இவ்வளவு நேரமாப் போயிருந்தாய்? எவனோட போனனீ?” அமிலமாகத் தாக்கின வார்த்தைகள்.

‘என் ஜீவனா இது? குட்டிமா! தங்கம்! கோபமாய்க் கூடப் பேச மாட்டாரே!’

அவளது நம்பிக்கை பொடிப்பொடியாய்த் தகர்ந்தது.

அவளைக் காயப்படுத்துகிறோம் எனத் தெரிந்தும் வார்த்தைகளால் சமாதி கட்டினான் அவளுயிரானவன்.

நா கூசும் அளவிற்கு காதலிக்கப்படுபவனால் கேட்கக்கூடாத வார்த்தைகள் எல்லாம் கேட்டாள் அவள். மாறாக, ஒரு துளி கண்ணீர் வரவில்லை அவளுக்கு. அன்றே மனமும் மரத்துப்போனது.

அதுவும், நண்பனும் சக ஆசிரியனுமான கிருபாவோடு இணைத்து... சீ!

இப்பொழுது நினைத்தாலும் மேனி நடுங்கியது. சந்தேகச்சாத்தான் புகுந்தால் மூளை வேலை நிறுத்தம் செய்துவிடுமே! மெல்ல விரவும் விஷமாயிற்றே அது!

“என்ன கனவு மிஸ்? எழும்புங்க, வந்து சேர்ந்திட்டம்!” என்ற கிருபாவின் கேலியில் நிகழ்காலம் திரும்பியவள், “ஒண்ணுமில்லை கிருபா...இறங்குங்க!” என்றபடி நகர்ந்தாள்.

பஸ்ஸை விட்டு இறங்கியவளால் விழிகளைத் திருப்பவியலவில்லை. வஞ்சகமில்லாமல் வனப்பை வாரி வழங்கியிருந்தாள் மலைமகள். எங்கு திரும்பினும் செல்லமாய்த் தழுவிக்கொள்ளும் முகிலினமும், முகவரி தேடி ஓடும் அருவிகளும், மலர்ந்தும் மலராப் புஸ்பங்களும், தேயிலைத்தோட்டங்களும், சில்லிட்ட காலைக்குளிரும் அவளை வேற்றுலகிற்குக் கூட்டிச்சென்றன.

உள்ளங்கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் பொருத்தியவள் இயற்கையின் கொடையை எண்ணிச் சிலிர்த்துப்போனாள்.

காலையுணவை முடித்துவிட்டு, இளஞ்சூடாய்த் தொண்டைக்குழி தீண்டிய தேநீர் அமிர்தமாயிருந்தது, குளிருக்கு!

மாணவர்கள் ஆர்வமாய் நகரத்தொடங்கினார்கள். மதியம் ‘ஹக்கல பூங்கா’விற்குச் செல்லவிருப்பதால், இப்போதே தேயிலை, இறப்பர்த்தோட்டங்களுக்குச் செல்வதாய் முடிவு செய்து நகர்ந்தனர்.

பிற்பகல் மூன்றுமணியளவில், அனைவரும் ஹக்கல மலர்க்குவியலுக்குச் சென்றனர்.

ஏதோ அதை, காதலர்கள் குத்தகைக்கு எடுத்தமாதிரியே கூட்டம்.

‘ஹம்...’

மாணவர்கள் ஆர்வத்தோடு நகர, தலைவலி எனக் கூறிவிட்டு அங்கிருந்த கல்லிருக்கையில் சாய்ந்து, கண்ணை மூடினாள் கீதாஞ்சலி.

எத்தனைநேரம் இருந்தாளோ...

“குட்டிம்மா…!” என்ற குரல் நடப்பிற்குக் கொண்டுவந்தது. அவனேதான். நினைத்தது பொய்க்கவில்லை.

கையை மார்புக்குக் குறுக்காய்க் கட்டியபடி, இன்னும் கம்பீரமாய், அதே, உயிர்வரை தீண்டும் பார்வையுடன் நின்றிருந்தான், அவளை உயிரோடு கொள்ளியிட்டவன்.

இன்னதென்றில்லாத இறுக்கத்தை பூசியது அவள்முகம். அவனை எதிர்பார்த்தாளே ஒழிய, இங்கே எதிர்பார்க்கவில்லை.

அவளையே பார்த்தபடிவந்து அருகில் அமர்ந்தான் ஜீவன். மறுகணம், சற்றுத்தள்ளி அமர்ந்தாள் அவள். அந்த ஒதுக்கம் சம்மட்டியால் அடித்தது போலிருந்தது அவனுக்கு.

‘என்னால் தானே?’ என, அவன் மனச்சாட்சி இடித்துரைக்கவும் தவறவில்லை.

இந்த இரண்டு வருடங்களில் அவளில் பல மாற்றங்கள். முகத்திலிருந்த குழந்தைத்தனம் விடைபெற்றிருந்தது. விழிகளில் வெறுமை. அவனுக்கு அவள் விழிகளென்றால் அவ்வளவு பிடித்தம். வாய் பேசாதவற்றைக் கண்களே பேசிவிடும். அவனை வீழ்த்தியதும் அதுவே. மூக்கைப் பார்த்ததும் ஒரு சிலிர்ப்பு அவனுக்குள். அவனுக்கு மூக்குத்தி பிடிக்காதென்ற காரணுத்துக்காய், தாய் எவ்வளவோ சொல்லியும் குத்தவில்லை அவள். நீண்ட கூந்தல், சிறிய மரூண் பொட்டு, கழுத்தில் ஒரு செயின், கையில் வாச், மெல்லிய ரோஸ் சேலை... இவ்வளவே, அவனவளின் அலங்காரம்.

பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு. இருவருடங்களின் பின் பார்க்கிறானே?

அவளிடமோ எந்த உணர்வுமில்லை. விட்டேற்றியாக வானத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“குட்டிம்மா!” கரகரப்போடு ஆரம்பித்தான்.

“மன்னிப்புக் கேட்கும் தகுதியில்லாதவன் நான். ஆனால், மன்னிக்கும் தகுதி உனக்கு இருப்பதால் கேட்கிறேன், என்னை மன்னித்துவிடு! அந்த நாளை நினைத்து வருந்தாத நாளில்லையடி நான்! உன்னை உயிரோட கொன்றுட்டன்டி...” என்றவனை, சலனமில்லாது ‘யார் நீ?’ எனப் பார்த்தாள், அவன் குட்டிம்மா!

“என்னை நல்லாத் திட்டுடி! பேசடி!” என்றபடி, அவள் கரத்தைப் பற்றினான் ஜீவன்.

“பிளீஸ் சேர்... ஆரும் பாத்தால் என்ன நினைப்பினம்? கையை விடுங்க!” அறிமுகமில்லாதவரோடு இருப்பது போன்ற உணர்வுவோடு சொல்லிவிட்டாள்.

“இப்ப வந்து மன்னிப்புக் கேட்டுட்டால் நடந்தது மறந்திடுமா? உங்களைப் பாத்தால் அன்றைக்கு கதைத்தவை தானே ஞாபகம் வருது? பிறகெப்பிடிச் சகஜமாக் கதைக்கிறது? வேணாம் ஜீவன், இப்பிடியே இருந்திருங்க. திரும்பவும் பழையமாதிரி வேணாம். சந்தேகம் வந்தது வந்ததுதான். அது போகாது.” அத்தனை திடம் அவள் குரலில்.

அதிர்வோடு பார்த்தான் அவன்.

“நீங்க யாரையாவது கல்யாணம் செய்து சந்தோஷமா இருக்கோணும். என்னை விட்டு ஒரேயடியா விலகுறது தான் உங்களுக்கு நல்லது.” தொடர்ந்தவளை, பட்டென்று தன்பக்கம் திருப்பி, “நீ என்னை மறந்துடுவியாடி? சொல்லுடி?” என, உலுக்கினான் அவன்.

“நிச்சயமா இல்லை ஜீவன். ஆனாலும், உங்களோட வாழவும் நான் விரும்ப இல்ல. இது தான் உங்களைக் கடைசியாப் பாக்கிறது.” என்றவள், அவன் முகத்தை ஏந்தி, விழிகளுக்குள் ஊடுருவி நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

அவனோ சிலையாகிப் போனான். உச்சபட்ச அதிர்ச்சியிலிருந்து மீள முன்னரே அவ்விடம் விட்டு நகர்ந்தாள், அவன் குட்டிமா.


நீயெனை
மறந்தாயே, காலங்கள் கடக்கட்டும்...
மறந்தும் மீண்டுமெனைப் பற்றிய
நினைத்தல்கள் வேண்டாமுனக்கு...
நிலவு விழுங்கிய அந்தக்காரப் பொழுதாய்
கடந்துவிடு!


நானறிவேன்,
காலநகர்வு, உனதில் முகிழ்ந்த
எனதான படிமங்களை கபளீகரம்
செய்துவிடும்.
கடந்துவிட்ட யௌவனம் போல்,
கலைந்து போன சௌந்தர்யம் போல்,
முன்னொரு பொழுதில்
நின் தேவதையாய்,
உயிரை வாங்கும் ராட்சசியாய்,
உன்னுள் பாதியாய் உனக்குள்
வாழ்ந்தவள் தான்...



இனி, மழை ஓய்ந்த பின்னிரவில்
சாளரக் கண்ணாடிகளில் ஈரமாயுன்
பெயர் கிறுக்கப்படா!
பனிபொழியும் ராத்திரிகளின் கணப்பைப் போல்
மூச்சின் வெப்பங்கள் இதம் தரா!
கடலோர ஈரத்தில் நமதான பாதங்கள்
புதையாது.



மறுபடியும் பகிர்கிறேன்,
எனதான நினைத்தல்களை அகலபாதாளத்தில்
புதைத்துக் கடந்து போ!
எனை மறந்ததாயே இருந்துவிடு!




துளிர்த்த நீரை அவள் துடைக்க மறக்கவில்லை. அதையும் பார்த்தபடி கசிந்து நின்றன அவன் விழிகள்.

அதிர்ந்த மனமோ மெல்ல மெல்ல முக்கி முனகியது.

‘நான் தேடிய பொக்கிஷத்தை நானே எட்டி உதைத்துவிட்டேன். என்னை மறக்கமாட்டாய்...ஆனால், சேர்ந்து வாழவும் முடியாதாடி? அதையும் தான் பார்ப்போமே! தவறு செய்துவிட்டேன் மன்னித்துக்கொள் என்று வந்து நின்றால் மன்னிக்க மாட்டாளாமே! எத்தனை நாட்களுக்கென்று பார்ப்பமடி’

அவளின் மறுப்புத் தந்த வேதனையில் கோபம் கலந்து குழறிய உள்ளம் குட்டிம்மாவின் அருகாமைக்காக, விரிசலாகிய இதயங்கள் பின்னிப்பிணையும் அக்கணத்துக்காக எதையும் செய்வேன் என்றது. காத்துக் கிடக்கத் தயாரானது.


“உன்னுயிரைச் சிதைத்த உறவென்று ஒதுக்கித் தள்ளினாலும், உன்னையே சுற்றி சுற்றி வரத் துடிக்குதடி எந்தன் உள்ளம்!”

தூரச்சென்று விட்டவள் செவிகளுக்கு எட்டிவிடாதா என்ற ஏக்கத்தோடு கத்தினான் ஜீவன். அவள் இலேசாகத் திரும்பிப் பார்த்தது போலிருந்தது.


“குட்டிம்மா...!” சற்று உரத்தே அழைத்தான். ஹ்ம்ம்...அவள் சென்று மறைந்துவிட்டாள். ஆனாலும், சொல்ல நினைத்ததைச் சொல்லிவிடும் பிடிவாதத்தோடு முணுமுணுத்தன, அவன் உதடுகள்.


“உன்னால என்னைத்தவிர வேற யாரையும் காதலிக்க ஏலாதடி. ஏன், என்னைத்தவிர உன் மனக்கதவின் பூட்டுக்களை யாருமே திறக்கேலாது. எனக்காய் நீ கொடுத்த இடத்தை இனி யாருக்கும் உன்னால கொடுக்கேலாது. கண்ணம்மா! ஒரு தடவை தப்புப் பண்ணிட்டன் . நீ என் ஆயுளானவள்டி. உன்னை எப்பிடி என்னவளாக்கோணும் என்று தெரியும்டி எனக்கு. வெய்ட் பண்ணு தங்கம், மாமா ஒன் தவே....



முற்றும்
 
Top Bottom