என்னை மட்டும் காதலி - நிதனிபிரபு

ரோசி கஜன்

Administrator
Staff member
என்னை மட்டும் காதலி

அன்று காதலர் தினம். ஆராதனாவுக்கு விடிந்ததில் இருந்தே கைகால்களில் ஒரே பரபரப்பு. மனம் ஒன்றை ஆவலாக எதிர்பார்த்து, இன்பக் கனவுகளில் மூழ்கிக்கொண்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவியாக இருந்தவள் கம்பஸ் போய் வந்ததும், மாலை, தோழி வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டுத் தயாரானாள்.

தலைக்குக் குளித்து, பிரத்தியேகமாகத் தயாராகி புறப்பட்டவளின் விழிகள் யாரையோ எதிர்பார்த்து வீதி முழுவதும் சுழன்று தேடியது. கதிரும் அவளை ஏமாற்றவில்லை. அடர் சிவப்பு வெல்வெட்டைப் போன்ற மிருதுவான பெரிய ஒற்றை ரோஜாவுடன் மோட்டார் வண்டியில் வந்துகொண்டிருந்தான். தூரத்திலேயே கண்டுகொண்டாள். உள்ளம் துள்ளிற்று! ஆனாலும் காணாதவள் போன்று பார்வையை நேரே பதித்து சைக்கிளை மிதித்தாலும் அப்போதே கன்னங்கள் சிவக்கவாரம்பித்திருந்தது.

இவள் இந்தப் பக்கமாகவும் அவன் அந்தப் பக்கமாகவும் வந்துகொண்டிருக்க, அவளை நெருங்கியதும், அவன் தன் வண்டியை இவள் பக்கமாகத் திருப்பினான்.

அதைக் கண்டதும், அவள் எதிர்பார்த்த விடயம் நடக்கப் போகிறது என்று இதயம் எம்பிக் குதிக்கவாரம்பிக்க, அவளுக்குள் படபடப்பு அதிகரித்துப் போயிற்று. ஆயினும், எதுவுமே அறியாதவள் போன்று அவனை ஏறிட்டாள்.

அவளின் கள்ளத்தனத்தை அவன் ரசித்தான் போலும். உதட்டோரம் அவளைக் கண்டுகொண்ட சிரிப்பு சட்டென்று முளைக்க, சரியாக அவளின் அருகில் தன் வண்டியைக் கொண்டுவந்து நிறுத்தினான். அவளின் ஒற்றைக்காலும் சைக்கிளில் இருந்து விடுபட்டுத் தானாக நிலத்தைப் பற்றியது. பயமும் எதிர்பார்ப்புமாக அவள் பார்க்க, “இண்டைக்கு என்ன நாள் எண்டு தெரியுமோ?” என்று துள்ளலாகக் கேட்டான் அவன்.

தெரியாது என்று சொல்லத்தான் நினைத்தாள். அவளுக்குத் தெரியாமல் இருக்காது என்று அவனுக்குத் தெரியுமென்பதில், “தெரியும்.” என்றாள் மெல்ல.

“அப்ப நான் ஏன் வந்திருக்கிறன் எண்டும் தெரியும் போல!” கண்ணைச் சிமிட்டியபடிக் கேட்டான் அவன்.

சில் என்று நெஞ்சைத் தொட்டது அவனது கண் சிமிட்டல்.

“எனக்கு என்ன தெரியும்?” உதட்டை ஆக்கிரமிக்க முனைந்த சிரிப்பை அடக்கப்பார்த்தபடி சொன்னாள் ஆராதனா.

“பொய்! அழகான பொய்!” என்று அவளை வெட்கத்தில் திணறவைத்துவிட்டு கையிலிருந்த ரோஜாவை நீட்டினான் அவன்.

“என் காதல் ரோஜாவுக்கு இந்த ஒற்றை ரோஜா!” கவிதையாகக் காதல் சொன்னவனை விழிகள் விரிய ஆனந்தமாய் ஏறிட்டாள் ஆராதனா.

“என்ன, வாங்க மாட்டியா?” அவளை அறிந்தவனாக உல்லாசமாய்க் கேட்டான் அவன்.

சட்டென்று இதழ்களில் பூத்துவிட்ட வெட்கச் சிரிப்புடன் வாங்கிக்கொண்டாள் ஆராதனா.

“யாஹூ! சக்ஸஸ்!” என்று கையைக் காற்றில் வீசி அவன் சத்தமிட்ட போது, “ஐயோ இது ரோட்டு! என்ன செய்றீங்க?” என்று ஆனந்தமாக அலறினாள் ஆராதனா.

அந்த ஒற்றை ரோஜாவை வாங்கியதற்கா இந்த ஆர்ப்பாட்டம்? விழிகள் மலரப் பார்த்தாள். அவளின் சம்மதம் அவனுக்கு அவ்வளவு முக்கியமாமா? அவள் சம்மதித்துவிட வேண்டும் என்று ஏங்கியிருக்கிறான் என்கிற நினைவே அவளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவனோ, வேகமாக ஒரு சாக்லேட்டினைப் பிரித்துப் பாதியை அவளுக்கு நீட்டினான். வாங்கி அவள் வாயில் போட்டுக்கொண்டபிறகு மிகுதியைத் தன் வாயில் போட்டுக்கொண்டான்.

“அடுத்தமுறை, நீ கடிச்சிட்டுத் தாற பாதியை நான் சாப்பிடவேணும்!” என்றான் குறும்புடன்.

தைரியம்தான்! சம்மதம் சொன்னதுமே என்னவெல்லாம் கதைக்கிறான்! மனம் சீராட்டிக்கொண்டது, அவனை. நீண்ட நேரமாய் அங்கேயே அவனோடு நிற்பது மெல்ல உறைக்க, “வரவா? நேரமாச்சு!” என்று மனமேயில்லாமல் சைக்கிளை நகர்த்தத் துவங்கினாள் ஆராதனா.

“இனி எப்ப எங்க எண்டு ஒண்டும் சொல்லேல்ல?” என்றான் அவன்.

அவள் விளங்காமல் பார்க்க, “கதைக்கோணும்..” என்றான் அவன்.

“நான் படிக்கோணும்; நீங்களும் படிச்சு முடியுங்கோ, ஆறுதலா கதைக்கலாம்.” அவனோடு கதைக்க அவளுக்கும் ஆசைதான், என்றாலும் மனதை அடக்கிச் சொன்னாள்.

“கதைச்சா படிக்கேலாது எண்டு யார் சொன்னது? எப்பயாவது தானே கேக்கிறன்?”

உண்மைதானே! ஆனால் எப்படிக் கதைப்பது? பதில் சொல்லத் தெரியாமல் திணறிவிட்டு, “ நேரமாகுது!” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே போனாள் ஆராதனா.

அவன் முகம் வாடிப்போயிற்று! தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு மேலே படித்துக்கொண்டும் இருந்தான் கதிர்.

அதன்பிறகு சந்திப்புக்களை அவனாக உருவாக்கினான். கோயிலுக்குச் செல்கையில், லைப்ரரிக்குப் போகையில் என்று அவள் போகுமிடங்களில் எங்காவது நின்று ஒருசில நிமிடங்கள் கதைத்தான். ஆசைகொண்ட மனதுக்கு அந்த ஒருசில நிமிடங்கள் போதாமலிருந்தது. அவளுக்கோ, நாளுக்கு நாள் அதிகரித்த அவனது வரவில் மெல்லிய சங்கடம் அதிகரிக்கத் துவங்கிற்று!

“பாக்கிற ஆக்கள் என்ன நினைப்பீனம்?” என்று அவள் சொல்ல, “அதுதான், தனியா வா எண்டு கூப்பிடுறன். வாறியே இல்ல. அந்தளவுக்கு என்னில நம்பிக்கை இல்லையா ஆராதனா?” என்றான் அவன் வறண்ட குரலில்.

கவலையோடு பார்த்தாள் அவள். அவன் பாவம் தான். நம்பிக்கை இல்லாவிட்டால் காதலுக்குச் சம்மதம் சொல்வாளா என்ன? ஏதோ ஒரு பயம். தனியாக அவனைச் சந்திப்பதை நினைத்தாலே மனம் படபடத்தது. இன்னதுதான் என்று தெரியாத அச்சம். அதேநேரம், அவனோடு தனியாக அமர்ந்திருந்து கதைக்கவும் ஆவலாயிருந்தது.

“எனக்கு மட்டும் விருப்பம் இல்லாம இல்லக் கதிர், பயமாயிருக்கு; யாராவது பாத்தா?”

“வெளில எங்கயும் சந்திச்சாத்தானே பயம்? நீ வா, நாங்க ஒரு வீட்டுக்குப் போய்க் கதைப்பம்.” என்றான் அவன்.

“விசரா உங்களுக்கு? அம்மாக்குத் தெரிஞ்சுது தோலை உரிச்சுப் போடுவா!”

“அப்ப எங்க தான் வருவாய் எண்டு சொல்லு? கோயில்ல வச்சுக் கதைக்கக் கூடாது எண்டு சொல்லுறாய்; தியேட்டருக்கு வரமாட்டாய்; ஒரு ரெஸ்டாரண்டுக்கு போவம் எண்டால், அதுக்கும் மாட்டன்; என்ன ஆராதனா இது?” என்று, கோபம் காட்டினான் அவன்.
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் பயத்தைக் கடக்க முடியவில்லை. “இப்ப கதைக்கிறோம் தானே? இப்படியே இருப்போமே.” கெஞ்சலாகச் சொன்னாள்.

“எரிச்சலைக் கிளப்பாத ஆராதனா. எங்க கதைக்கிறோம் சொல்லு? ஒவ்வொரு முறையும் சண்டைதான் பிடிக்கிறோம். இப்பவும் பாரு, என்னையா பாத்துக் கதைக்கிறாய்? யாரும் பாத்தாலும் எண்டு பயந்து பயந்து சுத்தி சுத்திப் பாத்துக்கொண்டு.. ப்ச்! வர வர எனக்கு விசர்தான் வருது!” என்றவன் விருட்டென்று கிளம்பிவிட,

“ப்ளீஸ் கதிர்! கோபிக்காதீங்க...” என்றாள், கண்ணீரோடு.

“கோவிக்காம இருக்கோணும் எண்டால் ஒரே ஒருக்கா கதைக்க வா. வீட்டுக்குக் கூப்பிடுறது வேற எதுக்கும் இல்ல. நீ இப்படிப் பயப்படாம நிம்மதியா சந்தோசமா என்ர முகம் பாத்துக் கதைக்கிறதுக்கு. நான் ஆசையா உன்னையே பாத்துக் கதைக்கிறதுக்கு. இனிக் கேட்கமாட்டன். வா, இல்லாட்டி அதுக்கு வேற ஏதும் வழியிருந்தா சொல்லு, செய்வம்.” என்றான் அவன்.

வேறு வழிகளும் இல்லைதான். “பயமில்லையா?” மெல்லக் கேட்டாள்.

“என்ன பயம்? யாருமில்லாத வீட்டுல நான் இருக்கேக்க உனக்கு என்ன பயம்?” என்றான் அவன்.

“யாருமில்லாத வீட்டுக்கு எங்க போவீங்க?”

“அது என்ர கவலை. நீ ஓம் எண்டு மட்டும் சொல்லு, நான் ரெடி பண்ணுறன்!” என்றான் அவன்.

தயக்கத்தோடு மெல்லச் சரியென்றாள் அவள்.

“ஹேய்! உண்மையாவா சொல்லுற?” நம்பவே முடியாத ஆனந்த அதிர்ச்சி அவனிடம்.

“எனக்காக, தன்ர பயத்தையும் மீறிக்கொண்டு வாற இந்த ஆராதனாவை இன்னுமின்னும் லவ் பண்ணோணும் மாதிரி இருக்கு!” ஆசையாக அவளையே பார்த்துச் சொன்னான்.

அவளுக்குள் நேசம் பொங்கிற்று! அவனுக்காக அவனுடைய சந்தோசத்துக்காகத் தன் கண்ணுக்குத் தெரியாத அச்சங்களை எல்லாம் தூக்கி எறிந்தாள்.

“வீடு ரெடி பண்ணிட்டுச் சொல்லுறன். ஆனா, நீ பயப்படுற மாதிரி நடக்காம பாக்கிறது என்ர பொறுப்பு! சரியா? ” அவள் முகத்தில் தெரிந்த சின்னக் கலக்கத்தையும் கண்டு சொன்னவனின் மீது இன்னுமே நேசம் சுரந்தது அவளுக்கு.

ஒற்றைப் பார்வையில் அனைத்தும் கவனிக்கிறானே!

போகிறவனையே பார்த்திருந்தவளின் உள்ளமும் சந்தோசத்தில் நிரம்பியிருந்தது. அவளும் அவனோடான தனிமைக்கு ஏங்கித்தானே போயிருக்கிறாள்.

அடுத்தநாளே வந்து நின்றான் கதிர். “இந்தச் சனிக்கிழமை ஓகே தானே? அம்மாட்ட கம்பசுக்கு போறன் எண்டு சொல்லிப்போட்டு விடியவே வா!” என்றான் அவன்.

“உண்மையாவே சனி பின்னேரம் கம்பசுக்குப் போக வேணும்; கட் பண்ணேலாது.”

“அது பின்னேரம் தானே? நீ விடிய ஒன்பதுக்கே வா. பின்னேரம் கம்பசில கொண்டுபோய் விட்டுவிடுறன்.” என்றான் அவன்.

சரி என்று தலையசைத்தவளின் அமைதி, தனிமையில் சந்திக்கப்போகிறோம் என்று முடிவான அந்தக் கணத்திலிருந்தே தொலைந்து போயிருந்தது.
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
ஒரு பக்கம் அவனோடான தனிமையை மனம் வெகுவாக எதிர்பார்த்தது. இன்னோர் பக்கம், ‘இது பிழை இல்லையா? அம்மாவுக்குத் தெரியவந்தால் என்ன நினைப்பா? மூத்த பொம்பிளைப் பிள்ளை எண்டு எவ்வளவு நம்பிக்கை அம்மாக்கு..’ மனம் கிடந்து குற்ற உணர்ச்சியில் துவண்டது.

‘சம்மதிச்சு இருக்கக் கூடாதோ?’ மீண்டும் மீண்டும் நினைத்தாள். வீட்டில் அம்மாவின் முகம் பார்க்க முடியவில்லை. தம்பி தங்கையை எதிர்கொள்ள இயலவில்லை. நெஞ்சில் ஒரு பாறாங்கல் கிடந்து கனமாய் அழுத்தியது.

‘இந்தமுறை மட்டும் தான்! இனி மாட்டன் எண்டு உறுதியாச் சொல்ல வேணும். அவன்தான் சொன்னானே, நீ பயப்பிடுற மாதிரி எதுவும் நடக்காமப் பாக்கிறது என்ர பொறுப்பு எண்டு. அவன் பாப்பான்!’ முழுமையான நம்பிக்கையோடு மனதைத் தேற்றினாள்.

சனிக்கிழமையும் வந்தது. அம்மாவிடம் முதல்நாளே கம்பஸ் போக வேண்டும் என்று சொல்லிவிட்டதால் ஒன்பது மணிக்கே புறப்பட்டாள். “பட்டினியாக் கிடக்காம கடைல ஏதாவது வாங்கிச் சாப்பிடு பிள்ளை.” என்று காசும் கொடுத்து அனுப்பி வைத்தார் அன்னை.

மனம் குன்ற, இனி இப்படி நடப்பதில்லை என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு புறப்பட்டாள்.

ஒருவழியாக அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவால் முகத்தை மறைத்துக்கொண்டு அவனது நண்பனின் வீட்டுக்கு, ‘இன்று முழுக்க நமக்குத்தான். அவனும் மனைவியும் அவனது மாமியார் வீட்டுக்குப் போய் விட்டார்களாம்.’ என்று அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு இருவருமாக உள்ளே நுழைந்தனர்.

அவள் தயக்கத்தோடு வீட்டுக்குள் பார்வையை மெல்லச் சுழற்ற, கதவை மூடிவிட்டு ஓடிவந்து தயங்கி நின்றவளை அப்படியே அள்ளிக்கொண்டு சுற்றினான் அவன்.

“ஹேய்.. என்ன செய்றீங்க?” பதறிப்போய் அவள் கேட்க, “எத்தனைநாள் ஆசை தெரியுமா?” என்று கேட்டவன் அவசர முத்தமொன்றையும் அவள் சுதாகரிக்கமுதல் பதித்திருந்தான்.

“இப்படி எல்லாம் செய்தா நான் போய்டுவன்!” மிரட்டலாகச் சொன்னாலும், சொல்வதற்குள் முகம் சிவந்தே போயிற்று!

உடல் முழுக்க கிறுகிறுத்தது. புதுவிதமான மனக்கிளர்ச்சியில் தடுமாறினாள் ஆராதனா. பிடித்தும் இருந்தது பயமாயும் இருந்தது.

அவனோ அவளை நம்பாமல் சிரித்தான். “ஏய் கள்ளி! என்னவோ உனக்குப் பிடிக்கவே இல்லை மாதிரிச் சொல்லுறாய்? உண்மையைச் சொல்லு... உனக்குப் பிடிக்கேல்லையா? சொல்லு சொல்லு.” அவனது ஆர்ப்பாட்டத்தைப் பார்த்துச் சிரிப்பு வந்தது அவளுக்கு.

பிடிக்கவில்லை என்று எப்படிச் சொல்லுவாள்? இன்னுமே அவளின் இதயம் படபடப்பதை அருகே நெருங்கி நின்றான் என்றால் அவனே கண்டுபிடித்துவிடுவானே. சூடாகிப்போன கன்னங்கள் போதுமே அவளைக் காட்டிக்கொடுக்க!

“இது கூடாது எல்லா..” மனதை மறைத்துக் கலக்கத்தோடு சொன்னாள்.

“இன்னும் எந்தக் காலத்திலையடி இருக்கிறாய்? அவனவன் பிள்ளையைப் பெத்துட்டே ஆறுதலாத் தாலி கட்டுறான். நீ என்னடா எண்டால்..” என்றவன் கண் சிமிட்டவும், வெட்கச் சிவப்புடன் அவன் கையிலேயே ஒன்றுபோட்டாள் அவள்.

“தைரியம் தான் உங்களுக்கு!” செக்கச் சிவந்துவிட்ட முகத்தை வேகமாகத் திருப்பிக்கொண்டாள். எவ்வளவு இலகுவாக குழந்தையைப் பற்றியெல்லாம் கதைத்துவிட்டான். அவளுக்கு அவன் முகம் பார்க்கவே முடியவில்லை. எல்லாமே புதிதாக அவளைத் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது.

ஆறுமாதமாகக் காதலித்தாலும், அவனும் அவளுக்குப் புதிதுதான், அவனுடைய அருகாமையும் புதிதுதான், அவன் பேசும் இந்தப் பேச்சுக்கள் அவளுக்கும் புதிது, அவள் வயதுக்கும் புதிது. உடல் முழுவதும் கிறுகிறுத்தது.

“ஹேய்! என்ர ஆராதனா என்னைத் தொட்டுட்டாள்..!” என்று மீண்டும் ஆர்ப்பரித்தான் அவன். ஒருகணம் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. அவள் அவனைத் தொட்டாளா? உணரவேயில்லையே! நம்பமாட்டாமல் அவள் பார்க்க, “இப்ப அடிச்சியே..” என்றான் அவன் துள்ளிக்கொண்டு.

“இன்னொருக்கா ப்ளீஸ்! ப்ளீஸ் ப்ளீஸ்..!” என்று அவன் கெஞ்ச அவள் முறைக்க மீண்டும் அவன் கெஞ்ச முடியாமல் மீண்டும் ஒரு அடி போட்டுவிட்டாள் அவள். ஆனால், இந்தமுறை போட்ட கணமே என்ன செய்தோம் என்பதை உணர்ந்து, அவளுக்கே சிரிப்பு வந்துவிட, அப்படியே அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டான் அவன்.

“இதுக்குத்தான் தனியா வா எண்டு கூப்பிட்டனான். இல்லாட்டி செல்லமா எண்டாலும் அடிச்சிருப்பியா? நல்லாருக்கு எல்லா?” என்றவன் அவளின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டான்.
 
Last edited by a moderator:

ரோசி கஜன்

Administrator
Staff member
மெதுவாக நெளிந்தாலும் அவளும் விலகவில்லை. அவன் அருகாமை மிகவுமே சுகமாக இருந்தது. இன்றைக்கு மட்டும் தானே? ஆசையாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள். அவன் ஆதுரமாக நெற்றியில் முத்தமிட்டான். நிறையக் கதைத்தார்கள். இன்னும் நிறையச் சிரித்தார்கள். ஒருவரை மற்றவர் சீண்டி விளையாடினார்கள். அவளைப் பேரழகி என்றான் அவன். பார்த்த நாளே தலைகீழாக விழுந்துவிட்டானாம். அவள்தான் அவனுக்குத் தாரமாகவும் தாயாகவும் இருக்க வேண்டுமாம் என்றான். அவள் பெருமையாக உணர்ந்தாள். திடீரென்று அவள் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான் கதிர். அவள் கைகளை அவனே எடுத்து, அவன் கேசத்துக்குள் விட்டுக் கோதிவிடச் சொன்னான். அவள் சிலிர்த்தாள்.

“இது என்ர கனவடி!” என்றான் ஏக்கமாக. அவள் கோத, “சொர்க்கமா இருக்கு ஆரு!” என்றான். அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. சொல்லவில்லை. காதலோடு நோக்கி, ஆசையாக அவன் கேசம் கோதிவிட்டாள்.

கண்கள் நான்கும் பிணைந்துகொண்டன. உலகையே மறந்தாள் ஆராதனா. சுற்றுப்புறம், சூழல் அனைத்தும் மறந்தாள். அவனும் அவன் நினைவுகளும் மட்டுமே நெஞ்சில் நிறைந்து கிடந்தது. அந்த முகம் மிக மிக அருகாமையில் வந்தபோதுகூட அவள் மயக்கம் விலகவேயில்லை. அவன் உதடுகள் வெகு அழுத்தமாக அவள் இதழில் பதிந்து, இடையில் கரம் அழுந்தியபோது இயல்பான கன்னிமைக் கூச்சத்தில் சிலிர்த்தவள் திடுக்கிட்டாள்.

என்ன செய்துகொண்டு இருக்கிறாள்?

அவன்தானே அவள் மடியில் தலை சாய்த்திருந்தான். இப்போதானால் அவள் அவன் மார்புக்கு வந்திருந்தாள். அதைவிட அவன் கரங்கள்.. இடையை வளைத்து வேறு என்னென்னவோ வேலைகளில் ஈடுபடத் துவங்கியிருக்க, உதடுகள் அவளை வசியம் செய்யத் துவங்கியிருந்தது.

திடுக்கிட்டுத் திமிறி அவனிடமிருந்து சரக்கென்று விலகித் துள்ளிக்கொண்டு ஓடிப்போய்த் தள்ளி நின்றவள் பயத்திலும் படபடப்பில் வேக வேகமாக மூச்சு வாங்கினாள்.

என்ன காரியம் செய்யப் பார்த்தாள்? அம்மா, தம்பி, தங்கைகளின் முகம் கண் முன்னே வந்து நின்று கண்ணீரை உற்பத்தி செய்துவிட, தன்னை நிலையிழக்கச் செய்தவனை முறைத்தாள்.

அவளின் மனநிலை அறியாதவனோ, “என்ன ஆரும்மா... வா!” என்றபடி மீண்டும் அவளை நோக்கி ஓரடி எடுத்துவைக்க, “அங்கேயே நில்லுங்க!” என்று, கைநீட்டித் தடுத்தாள் ஆராதனா.

சட்டென்று நின்று புருவங்களைச் சுருக்கியவனின் முகத்தில் கோபம்.

“இவ்வளவு நேரமும் நல்லாத்தானே இருந்தது?”

முகம் கன்றிப்போயிற்று அவளுக்கு.

“இதுக்குத்தான் வா வா எண்டு கூப்பிட்டீங்களா?” கோபமாய் கேட்டாள்.

“என்னவோ உனக்குப் பிடிக்காத மாதிரி கேக்கிறாய்?” அவனுக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கோபம்.

முகம் அவமானத்தில் சிவந்துபோயிற்று அவளுக்கு. அவள் கொடுத்த இடம்தானே அவனையே இந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது.

“நீ பயப்பிடுற எதுவும் நடக்காது எண்டு சொன்னீங்க. அந்த நம்பிக்கைல வந்ததுக்கு நல்ல பாடம்.” என்றாள் கசப்போடு.

“என்ன பாடம்? என்னத்தானே கட்டப்போறாய்? பிறகு என்ன? அல்லது, பழகிற வரைக்கும் பழகீட்டு வேற எவனையாவது பிடிக்கிற பிளானோ?”

என்னவெல்லாம் பேசுகிறான். அதிர்ந்துபோய் கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள். அவளுடைய கதிரா அவன்?

“இப்ப யோசிச்சுப் பார்த்தா உனக்கு அதுதான் பிளான் போல இருக்கு!”

என்ன சொல்ல வருகிறான் என்று விளங்காமல் பார்த்தாள்.

“கதைக்க வா எண்டு கேட்டால் வாறேல்ல, எங்கயும் நிண்டு கதைக்க விருப்பமில்லை, நாங்க லவ் பண்றதை யாருக்கும் சொல்லவும் விருப்பமில்லை. பொழுது போக்குக்குத்தான் என்ன உனக்குப் பின்னால அலைய வச்சிருக்கிறாய் நீ!” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினான் அவன்.

தொண்டை அடைத்தது அவளுக்கு.

“என்ன கதிர் இதெல்லாம்? அம்மாவுக்குத் தெரிஞ்சிடும் எண்டு பயந்து மறைச்சதை இப்படிச் சொல்லுறீங்களே. படிப்பு முடியாம, ஒரு தொழில் இல்லாம காதலிக்கிறன் எண்டு சொன்னா அம்மா என்ன சொல்லுவா? அப்பா இல்லாத என்ர குடும்பத்துக்குப் பொறுப்பா நான் இருக்கோணுமெல்லா?” அதைச் சொல்லும்போதே, 'இன்றைய காரியம் பொறுப்பான பிள்ளை செய்யும் காரியமா?' என்று மனச்சாட்சி சீறி, அவளை இன்னுமே குற்ற உணர்ச்சியில் துடிக்க வைத்தது.

“இவ்வளவு நாளும் அப்படித்தான் நினைச்சனான். ஆனா, இனி உன்ன நம்ப மாட்டன்.”

அவளுக்குத் தாங்க முடியவில்லை. உயிராய் நேசிக்கிறவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் குண்டூசியாக அவளைத் துளைக்கத் துவங்கியிருந்தது. எப்படியாவது அவனை நம்பவைக்க வேண்டும் என்று உள்மனம் உந்த, “நான் என்ன செய்தா நம்புவீங்க?” என்று கண்ணீரோடு கேட்டாள்.

“நிரூபிச்சுக் காட்டு! நீ எனக்குத்தான், உன்ர மனசில நான் மட்டும் தான் இருக்கிறன் எண்டு நிரூபிச்சுக் காட்டு!” என்றான் அவன்.

“ஒருத்தர்ல இருக்கிற நம்பிக்கைல பிறக்கிறதுதான் காதல் கதிர். யாரை முழுமையா நம்புறோமோ அவயத்தான் காதலிக்க முடியும். நான் உங்களைக் காதலிக்கிறன் எண்டால் உங்களை முழுமையா நம்புறன் எண்டுதான் அர்த்தம். அதை, நிரூபிக்கச் சொன்னால், என்னை நீங்கதான் நம்பேல்ல.” கண்ணீரோடு சொன்னாள் ஆராதனா.

“இவ்வளவு நாளும் நம்பிக்கொண்டுதான் இருந்தனான். இண்டைக்குத்தான் அந்த நம்பிக்கை முழுக்க அழிஞ்சு போச்சு. நீ அழிச்சிட்டாய்! ‘நீ எனக்கு மட்டும்தான்’ என்ற நம்பிக்கையை நீதான் திரும்பவும் தரவேணும்!” ஆணித்தரமாய்ச் சொன்னான் அவன்.

அவனது பேச்சில் அவளிதயம் காயப்பட்டது. அழுகை வந்தது. உள்ளம் துடித்தது. ஆனாலும், தன்னை நிரூபிக்கத் துடித்தாள். அவள் விழிகளில் ஒரு தீவிரம். அவளின் இதயத்தில் அவன் மட்டும் தான் இருக்கிறான் என்று நெஞ்சைப் பிளந்து என்றாலும் காட்டிவிட வேண்டும் போலிருந்தது. தாயை மறந்தாள். தன்னை நம்பியிருக்கும் கூடப் பிறந்தவர்களை மறந்தாள். எப்படி நிரூபிப்பாள்? அது மட்டுமே சிந்தனையில் ஓடியது.

“இப்பவே இந்த நிமிசமே உயிரை விட்டுடவா கதிர்?” தளராது அவனை நோக்கித் தைரியமாகக் கேட்டாள்.

“உயிரை விட்டுட்டு? லூசு மாதிரிக்கு கதைக்காத!”

“பின்ன?” குரல் நடுங்கியது அவளுக்கு.

“முழுக்க முழுக்க நீ எனக்குச் சொந்தமானவளா மாறவேணும். உன்னைத்தந்து நீ எனக்கு நிரூபிக்கவேணும். அப்பதான் நம்புவன்”

என்னவெல்லாம் சொல்லுகிறான்? இப்படியான வார்த்தைகளைக் கேட்டறியாத உள்ளம் துடித்துத் துவண்டது. சொன்னது அவன் தானா என்று நம்பமாட்டாமல் பார்த்தாள் ஆராதனா. இதற்குச் சாவு மேலாயிற்றே! மானம் இழந்துதான் மனம் கொண்டவனுக்கு தன்னை நிரூபிக்கும் நிலை என்பது ஒரு பெண்ணுக்கான மிகப்பெரிய அவமானம் இல்லையா? துணையாக நிற்கவேண்டியவனே துகிலுரியச் சொல்கிறானா? காதல் கொண்ட நெஞ்சில் காந்தலெடுத்தது. மூச்சில் சீற்றம்! முகத்தில் அக்கினி!

“காதல் மனசு சம்மந்தப்பட்டது கதிர்!” அழுத்தமாய் கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னாள்.

“அப்ப கல்யாணம் உடம்பு சம்மந்தப்பட்டதா? அதுதான் மனதை எனக்கும் உடம்பை உன்னைக் கட்டப்போறவனுக்கும் குடுக்கப் போறியா?” அவன் சொல்லிமுடிக்க முதலே பளார் என்று அறைந்தாள்.

“ஏய் என்னடி? என்னையே அடிக்கிறியா?” ஆத்திரத்தோடு நெருங்கியவனை அக்கினியாக மாறித் தள்ளிவிட்டாள்.

“நீ என்ன பெரிய இவனாடா? உன்ன அடிக்கக் கூடாது, கட்டிவச்சுத் தோலை உரிக்கவேணும்! உன்னைச் சொல்லிக் குற்றம் இல்ல! என்னை மட்டும் காதலிக்கிறாய் எண்டு நம்பினன் பாத்தியா? அது நான் செய்த பிழை! உன்ன நம்பி, நீ சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பித் தனியா வந்தன் பாத்தியா? என்னைச் சொல்லோணும்டா! ” தரமற்றவனிடம் மனதை இழந்தோமே என்று துடித்தாள் ஆராதனா.

“உன்னை மட்டும் காதலிக்க நான் என்ன பெட்டையா? இதெல்லாம் இந்தக் காலத்தில நோர்மல்!” அறைவாங்கிய ஆத்திரம் தீராமல் சீறினான் அவன்.

“எந்தக் காலத்திலையும் பொம்பிளைகளுக்கு இது நோர்மல் இல்ல. காதலிச்சா, உனக்கு விருந்து வைக்கோணும். இல்லாட்டி நீ நம்ப மாட்டாய்! அப்படியா? நம்பாதடா! இனி நீ என்னை நம்பாத! என்ர உடம்பைத் தந்துதான் என்னை நிரூபிக்க வேணும் எண்டால், அந்தக் காதலும் எனக்கு வேண்டாம் நீயும் வேண்டாம்! நானும் உனக்கு இல்ல என்ர காதலும் உனக்கு இல்ல! என்னை மட்டும் காதலிக்கிறவன்தான் எனக்கு வேணும்!” தீர்க்கமாய்ச் சொன்னவள் அவனைப் பார்த்துத் தீ விழி விழித்துவிட்டுப் பயப்படாமல் அங்கிருந்து வெளியேறினாள்!
 
Last edited by a moderator:

Thamizhselvi

Active member
இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற வார்த்தை கேலிக்கூத்தாகவிட்டது.ஆனாலும் மெய்யான நேசம் என்றும் தோற்காது.அருமை நிதா.
 

Chitra ganesan

Active member
கடைசி நேரத்தில் புத்தி வந்ததே..நல்லது..இன்னும் நாலு அடி போட்டு இருக்கலாம் அந்த நா*யிக்கு...நிரூபிக்கனுமாமே...என்ன அவார்டா கொடுக்க போறாங்க.காதலாம் காதல் மண்ணாங்கட்டி காதல்😡
 
Top Bottom