வெளிச்சக்கீற்று

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“ஆனா, அம்மா எங்கட அப்பாவை முதலே கலியாணம் கட்டிட்டாவே.” அவள் முகத்தில் பெரும் குழப்பம்.

“கெட்டிக்காரி. எங்கட தூரிக்குட்டிக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.” என்று பாராட்டிவிட்டு, “ஆனா, இப்ப உங்கட அப்பா இல்லை எல்லோ. அவர் திரும்பி வரவும் மாட்டார் என்ன? அவர் இருந்திருந்தா உங்கட பெரியப்பா மாதிரி, கஜன் மாமா மாதிரி உங்களோடதானே இருந்திருப்பார். இப்ப அவர் இல்லாததால, அவருக்குப் பதிலா, உங்க ரெண்டுபேருக்கும் அப்பா மாதிரி இருக்க எனக்கு ஆசையா இருக்கு. உங்களோடயே இருந்து, உங்களோடயே சாப்பிட்டு, உங்களோடயே விளையாடி, உங்க ரெண்டுபேரையும் பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டுபோக எல்லாம் விருப்பமா இருக்கு. நான் உங்களோடயே வந்து இருந்தாத்தானே அதெல்லாம் நடக்கும்.” என்றதும் தூரிகாவுக்கு உருகியே போயிற்று.

ஓடிவந்து அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “நீங்க எங்களோட வந்தா எங்களுக்கும் சந்தோசம் மாமா.” என்றாள் அவன் முகம் பார்த்து.

அகத்தியன் தன்னைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டான். ஏற்கனவே சிந்தூரி அவன் மடியில் இருக்க, பனித்த விழிகளோடு அவளையும் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவர்களிடம் பேசுகிறவரைக்கும் அவனுக்குள்ளும் ஒரு பயம் இருந்துகொண்டுதான் இருந்தது. இப்போதோ எல்லாம் நன்றாகவே நடக்கும் என்கிற நம்பிக்கை பிறந்தது. தாமினியையும் இன்னொரு கையால் அணைத்துக் கொண்டு, “ஆனா உங்கட அம்மா ஓம் எண்டு சொல்லுறா இல்லையே. என்ன செய்வம்?” என்றான் சோகமாக.

அப்படியா என்பதுபோல் மூவர் பார்வையும் ஒன்றாக இவள் புறம் தாவிற்று. மெல்லிய சிரிப்பும் படபடப்புமாக அவள் அமர்ந்திருக்க, “ஓமா அம்மா? உங்களுக்கு விருப்பம் இல்லையா?” என்று, அவனிடம் இருந்தே வினவினாள் தூரிகா.

“நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்களுக்கு விருப்பமா?” தன்னைச் சாதாரணமாகக் காட்ட முயன்றுகொண்டே திருப்பிக் கேட்டாள்.

அகத்தியன் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, “மாமா பாவம்தானே. கூட்டிக்கொண்டு போவம். சிந்து உனக்கு?” என்றாள் தங்கையிடம்.

அவள் அகத்தியனையும் அன்னையையும் மாறிமாறிப் பார்த்தாள்.

“ஓம் எண்டு சொல்ல மாட்டீங்களா? அப்ப உங்களுக்கு மாமாவப் பிடிக்காது என்ன?” என்று அவன் உதடு பிதுக்க, “கூட்டிக்கொண்டு போவம்.” என்றாள் சிந்தூரி.

“அப்பாடி, இவ்வளவு நேரத்துக்கு இப்பதான் வாயத் திறந்து கதைச்சிருக்கிறா. அவ்வளவுக்குப் பெரிய ஆள் நீங்க?” என்றவன் அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்டினான்.

அவள் அடக்கமாட்டாமல் அவன் மடிக்குள்ளேயே உருண்டு பிரண்டு சிரிக்க ஆரம்பித்தாள். சின்னவர்களும் அவனோடு சேர்ந்துகொண்டனர். மூவருக்கும் மாறி மாறிக் கிச்சு கிச்சு மூட்டி, அதை ஒரு விளையாட்டாகவே மாற்றி, அதற்குமேல் அந்தப் பேச்சை வளரவிடாமல் சூழ்நிலையையே மாற்றி இருந்தான் அகத்தியன்.

காரியம் சாதித்துவிட்டானே! யசோவின் உள்ளம், தன் இறுக்கம் தளர்த்தி வெகுவாக நெகிழ்ந்திருந்தது. விழிகளின் ஓரம் மெலிதாகக் கரித்திருக்க அவனையே பார்த்திருந்தாள்.

என்னவெல்லாமோ கதைத்தார்கள். எதற்கெல்லாமோ சிரித்தார்கள். அவன் மீதே உருண்டு பிரண்டார்கள். அவர்களுக்குள் யசோ போகவே இல்லை. ஒருவித சுகமான மயக்க மனநிலைக்குள் மூழ்கிப் போயிருந்தாள்.

இதற்கிடையில் எப்போது, எப்படி நடந்தது என்றெல்லாம் அவள் கருத்தில் பதியவே இல்லை. பாறையின் தரையில் கொண்டுவந்த விரிப்பு விரிக்கப்பட்டிருக்க, அதில் ஒரு கையைத் தலைக்குக் கொடுத்து, கால் நீட்டிப் படுத்திருந்தான் அகத்தியன். அவன் மார்பில் சிந்தூரி நல்ல உறக்கத்தில் இருந்தாள். மற்ற இரண்டு பக்கமும் தாமினியும் தூரிகாவும். பார்க்கவே மனத்துக்கு இதம் சேர்த்தது. அவன்தான் அவர்களுக்கு இனி அப்பாவின் இடத்தில் இருக்கப் போகிறான் என்று அறிந்ததில் இருந்து, தூரிகாவும் சிந்தூரியும் ஒரு படி அதிகமாக அவனோடு ஒட்டிக்கொண்டது போலொரு மாயை.

அவள் மிக மிகப் பயந்த தருணம். அதை எத்தனை இலாவகமாகக் கையாண்டுவிட்டான். ஆக, எல்லாவற்றுக்கும் வழியிருக்கிறது. கொஞ்சம் நிதானமும் புத்திசாலித்தனமும் இருந்தால் போதுமானது.

அவள் பார்வை, அவர்களிலேயே நிலைத்திருப்பதைக் கண்டு, “இன்னும் இடமிருக்கு.” என்றான் அவன் மெல்லிய குரலில்.

முதலில் விளங்காமல் புருவம் சுருக்கியவள், விளங்கியதும் அவனை முறைக்கப் பார்த்து முடியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

மனத்தில் ஒரு விதமான இனிமை. காற்றின் தாலாட்டும் சேர்ந்துகொள்ள, இந்த நொடிகளை அனுபவிக்கத் தனிமை வேண்டும் போலிருந்தது. எழுந்து வந்து தனியாக நின்றிருந்த ஒற்றைக் கல்லில் சாய்ந்துகொண்டாள். மனத்தில் எந்தச் சலனமும் இல்லை. பயம், பதற்றம், யோசனை என்று எதுவுமில்லை. இப்படி, நிர்சிந்தையாய் அவள் இருந்து எத்தனையோ வருடங்களாயிற்றே!

கைக்குள் பொத்தி வைத்திருந்த வண்ணத்துப் பூச்சியைப் பறந்துபோ என்று விட்டால் எப்படிச் சிறகடித்துப் பறக்கும்? அப்படி இருந்தது அவள் மனநிலை! சுகமாய், சொர்க்கமாய், சந்தோசமாய், அழவேண்டும்போல், சிரிக்கவேண்டும்போல், புதிதாய்ப் பிறந்ததுபோல், கடந்துவிட்ட இளமையெல்லாம் திரும்பிவிட்டதுபோல் என்று அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை.

அதற்கென்று அவள் அர்த்தமற்ற கனவில் மிதக்கவும் இல்லை; கற்பனைக் கோட்டையைக் கட்டவுமில்லை. அவன் தன்னைத் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குவான் என்றோ, தன் ஒற்றைக் கண்ணசைவுக்கே காரியம் புரிவான் என்றோ நினைக்க, வாழ்வின் யதார்த்தம் தெரியாதவளும் அல்லள்!

சண்டை சச்சரவு, கண்ணீர், அழுகை, சிலபல கோபதாபங்கள், சின்ன சின்ன ஏமாற்றங்கள், வலிகள் எல்லாமே எதிர்காலத்தில் இல்லாமல் இருக்கப் போவதில்லை. அதுதான் வாழ்க்கை. அப்படி வரப்போகிற அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி, அவனோடு நன்றாக வாழ்வேன் என்கிற நம்பிக்கை, இந்த நொடியில் அவள் மனத்தில் அழுத்தமாக விழுந்து போயிற்று.

அந்த நம்பிக்கை போதாதா, அவள் வாழ்வில் புது அத்தியாயம் எழுத?

“என்ன இங்க வந்தாச்சு?” பின்னால் கேட்ட அவன் குரலில் பிள்ளைகள் எங்கே என்றுதான் முதலில் பார்த்தாள்.

“மூண்டு பேரும் நல்ல நித்திரை.”

“பின்ன, இந்தப் பெரிய மலையை ஏறி இருக்கினமே! நாளைக்கு எப்பிடிப் பள்ளிக்கூடம் போகப்போயினமோ தெரியா.” சிறு முறுவலோடு சொன்னாள்.

பார்வை அந்த முறுவலில் படிய, “இப்ப நிம்மதியா?” என்றான் அவன்.

நிம்மதியா? எந்தளவுக்கு ஆசுவாசமாக உணர்கிறாள் என்று அவளுக்குத்தானே தெரியும். அதில், “ம்ம்.” என்றாள்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
“பாத்தீங்களா? நாங்க பயப்பிடுற அளவுக்கோ, யோசிக்கிற அளவுக்கோ எதுவும் பெரிய விசயம் இல்ல. உண்மையான அன்பை ஏற்கிறதுக்குக் குழந்தைகள் யோசிக்கிறதே இல்ல. என்ன, அதை அவேக்கு விளங்குற விதத்தில, பிடிக்கிற முறையில சொன்னாப் போதும்.”

அதைத்தான் கண் முன்னாலேயே பார்த்தாளே! “ம்ம்.” தலையையும் சேர்த்து அசைத்து ஆமோதித்தாள்.

“திரும்பவுமா?”

என்ன திரும்பவுமா? அவன் கண்களில் இருந்த சிரிப்பில் காரணம் புரிய, அவள் உதட்டிலும் முறுவல் அரும்பிற்று.

இப்போதும் பார்வை அந்த முறுவலில் படிந்து மீள, தலையைத் திருப்பிப் பிடரிக் கேசத்தைக் கோதிக்கொண்டான். பிள்ளைகளின் சம்மதமும் கிடைத்துவிட்டதில் இருந்து, மனத்தின் கட்டுகள் எல்லாம் அவிழும் உணர்வு.

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு, “கொஞ்ச நாளாச் சந்தோசமா இருக்கிறன் யசோ. முகத்தில அடிக்கடி சிரிப்பு வருது. வயசு போயிற்றுதா, இருக்கா எண்டு அடிக்கடி கண்ணாடியைப் பாத்து செக் பண்ணுறன். ‘உன்ன நம்பி ரெண்டு பிள்ளைகளோட ஒருத்தி வரப்போறாள். அவளைச் சந்தோசமா வச்சிருப்பியாடா?’ எண்டு அடிக்கடி என்னை நானே கேக்கிறன். எல்லாம் நல்லபடியாவே போயிடவேணும் எண்டு பயமாவும் இருக்கு.” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

வியப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள் யசோ. கலக்கங்களும் குழப்பங்களும் அவளுக்கு மட்டுமே சொந்தமில்லை போலும்.

“ஏன் அப்பிடியெல்லாம் நினைக்கிறீங்க?”

“யோசிச்சுப் பாத்தா காரணம் எண்டு எதுவுமே இல்லை. ஆனாலும், இந்தப் பயத்த அகற்ற முடியேல்ல. ஏற்கனவே பட்ட காயம் காரணமா இருக்கலாம்.” காடுகளின் மீது பார்வையை ஓட்டியபடி சொன்னான் அவன்.

விழியகற்றாமல் அவனையே பார்த்தாள் யசோ. தைரியமான ஆண்மகனாகப் பார்த்தபோதெல்லாம் விழாத நேசவிதை ஒன்று, அவன் கலங்கி நிற்கையில் நெஞ்சில் விழுவதை உணர்ந்தபடி, “இனி என்ன பிரச்சினை வரும் எண்டு நினைக்கிறீங்க?” என்று இதமான குரலில் வினவினாள்.

“ஒண்டும் வராதுதான்…” என்று இழுத்தவனிடம், “அப்பிடி வந்தாலும் ரெண்டுபேருமாச் சேந்து சமாளிக்கலாம். யோசிக்காதீங்க.” என்றாள் நம்பிக்கை மிகுந்த குரலில்.

முதல் முறையாக அவளாக அவர்கள் இருவரையும் ஒன்றாக இணைத்துப் பேசுகிறாள். திரும்பி அவள் முகம் பார்த்தான் அகத்தியன்.

“நம்புங்க. நாங்க சந்தோசமா இருப்போம். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.” அவன் இன்னுமே கலக்கத்தில் இருக்கிறான் என்று எண்ணி அவள் சொன்ன விதம், அவன் மனத்தைக் கவர்ந்தது.

“இருக்கோணும் யசோ. என்ன சண்டை சச்சரவு வந்தாலும் முடிவில சந்தோசமா இருந்திடோணும்” என்றான் அவனும்.

“அப்ப, சண்டை வரும் எண்டு சொல்லுறீங்களா?” அவள் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

“நிச்சயமா!” என்றான் அவன் சர்வ நிச்சயமாக. “நீங்களும் அமைதியா இருந்தாலும் ஸ்ட்ரோங். நான்…” என்று இழுத்து சின்னச் சிரிப்புடன், “இவ்வளவு நாளில உங்களுக்கே என்னைப்பற்றித் தெரிஞ்சிருக்குமே. பிறகென்ன, சண்டைக்குப் பஞ்சம் இருக்காது.” என்றான்.

முறுவல் விரிய, “விடுங்க சமாளிப்பம்.” என்றாள்.

“என்ர பெயர் அகத்தியன். இப்பிடி மொட்டையாவே கதைக்காமப் பெயரச் சொல்லலாம்.” பார்வை அவளில் இருக்கச் சொன்னான்.

“நீங்க மட்டும் என்னவாம்? வாங்க போங்க எண்டு அவ்வளவு மரியாதையாக் கதைக்கிறீங்க.” என்றாள் அவள் பதிலுக்கு.

“அது… ஆரம்பம் உங்கள எனக்குப் பெருசாப் பிடிக்காது யசோ. அதுக்கெண்டு மதிப்புக் குறைஞ்சதே இல்ல. அது காரணமா இருக்கலாம். ஆனா, எப்பவும் இப்பிடியே இருக்காது. அது டீ வரைக்கும் போகும்.” என்றவனை முறைத்தாள் அவள்.

அளவுக்கதிகமான மரியாதை வேண்டாம் என்றால் மொத்த மரியாதையையும் பிடுங்குவானா?

“என்ன, டீ போடக்கூடாதா?”

போடாதே என்று அழுத்தமாகச் சொல்ல வராமல் பார்வையை அகற்றினாள் அவள்.

பிள்ளைகளைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “எனக்கும் உங்களுக்குமான நேரத்தில அது எல்லாம் வரும்.” என்றான் அவள் காதோரமாகக் குரலைத் தணித்து.

அவளுக்குச் சட்டென்று முகம் சூடாகிச் சிவந்து போனது. “நான் பிள்ளைகளிட்ட போறன்.” என்று விரைந்தவளின் கரம் பற்றி நிறுத்தி, “நல்ல நித்திரைல இருக்கிற பிள்ளைகளை எழுப்பப் போறீங்களா?” என்று வினவினான்.

அதற்கென்று இங்கேயா நிற்க முடியும்? “ப்ளீஸ் விடுங்க.” பலகீனமாக அவனிடமிருந்து தன் கையை விடுவிக்க முயன்றபடி சொன்னாள்.

“முதல் நீங்க என்னைப் பாருங்க.”

சும்மா விட்டிருந்தால்கூடப் பார்த்திருப்பாளாயிருக்கும். பார் என்று சொல்லவும் பார்க்க முடியவேயில்லை.

“யசோ.”

“ப்ளீஸ்…”

அவள் முகத்தில் ஏறிவிட்ட சூடும், அவளிடம் தெரிந்த படபடப்பும் வியப்பையும் மனத்தில் உல்லாசத்தையும் பரப்ப, “உண்மையா இதக் கேக்க எனக்கே சிரிப்பா இருக்கு. ஆனா, கேக்கோணும் மாதிரி இருக்கு. வயசு முப்பத்தியஞ்சு யசோ. அங்கங்க நரையும் நல்லாவே தெரியத் தொடங்கிட்டுது. ஆனாலும் கேளடா கேளடா எண்டுதான் உள்மனம் சொல்லுது. உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்றான்.

இப்போது, வெட்கம் போய்ச் சிரிப்பு வந்தது அவளுக்கு. “நீங்க சொல்லுறதைப் பாத்தா எனக்குப் பதினெட்டு மாதிரியும் உங்களுக்கு முப்பத்தியஞ்சு மாதிரியும் இருக்கே.”

“ஆனா, உங்களுக்கு வயசு தெரியவே இல்ல.”

“அதேதான் உங்களுக்கும்.” ஒரு வேகத்தில் சொன்னவள், அவன் கண்களில் சிரிப்பைக் கண்டதும் கையைப் பறித்துக்கொண்டு ஓடிப்போனாள்.

அவன் முகத்தில் நன்றாகவே இளநகை துலங்கிற்று. காடுகளைப் பார்த்தபடி நின்றவனால் தனக்குள் நடக்கும் மாற்றங்களை நம்பவே முடியவில்லை. ‘அடேய்! இந்த வயசிலையாடா?’ என்று ஒரு பக்கம் வெட்கமாக இருந்தாலும் பிடித்தும் இருந்தது. தலையை இரண்டு கைகளாலும் கோதிக் கொடுத்தவனின் உதடுகளில் அடங்காத சிரிப்பு.

நீ இளமையாக இருக்கிறாய் என்கிற துணையின் வார்த்தை, இப்படித் தன்னைச் சுழற்றியடிக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை.

ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, அந்த அழகான கணங்களை மனத்துக்குள் பொத்தி வைத்துவிட்டுத் திரும்பி, அவள் எங்கே என்று பார்த்தான். பிள்ளைகளுக்குத் தொந்தரவு கொடுக்காமல், முதலைக் கல்லின் வயிற்றுப் புறத்தில் அமர்ந்திருந்தாள். தானும் அவளிடம் நடந்தான்.

“வேற எங்கயும் போக இருக்கா?” தன் படபடப்பை மறைத்தபடி வினவினாள் யசோ.

“இல்ல. நான் இங்க மட்டும்தான் பிளான் பண்ணினான். ஏன், வேற எங்கயும் போகோணுமா?”

“இல்ல இல்ல. அடிக்கிற காத்துக்கு இப்பிடி இருக்கிறதே நல்லாத்தான் இருக்கு.”

“உண்மைதான். எனக்கும் கண்ணைச் சொக்குது.” என்றவன் அவளைப் பார்ப்பதுபோல் இரண்டு கைகளையும் தலைக்குக் கொடுத்துத் தரையில் படுத்துக்கொண்டான்.

“இப்பிடிக் காணுற இடத்தில எல்லாம் படுத்தா உடுப்பு என்னத்துக்கு ஆகும்?”

“இன்னும் கொஞ்ச நாள்தானே. பிறகு நீங்க வந்து தோச்சுத் தாங்க.”

“ஏன் உங்களுக்குக் கை இல்லையோ?”

“இருக்குத்தான். எண்டாலும் என்ர மனுசி தோச்சுத் தாற மாதிரி வராதுதானே?” என்றதும் திரும்பவும் அவள் முகம் சூடாகும் உணர்வு. பார்வையைத் திருப்பிக் காடுகளில் அலையவிட்டாள்.

அவளையே மொய்த்தன அவன் விழிகள். முகத்தைத் திருப்புடா என்று சொல்ல முடியாமல் தடுமாறினாள் யசோ.

“வடிவா இருக்கிறீங்க யசோ.”

கடவுளே! மனம் அலற, “அங்கால பிள்ளைகளையும் வச்சுக்கொண்டு என்ன நீங்க?” என்றாள்.

“நாங்க கதைக்கிறதெல்லாம் அவேக்குக் கேக்கும் எண்டு நினைக்கிறீங்களா?” என்று வினவியவன், ஒரு கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்து, பிள்ளைகளைப் பார்ப்பதுபோல் திரும்பிப் படுத்தான்.

“சிந்து என்னோட நல்லாச் சேர்ந்திட்டா, பாத்தீங்களா? அப்பா எண்டு சொன்னாலே காரணமே தேவையில்லாமப் பாசம் வரும்போல யசோ. அவே என்னோட ஒட்ட ஒட்ட என்னவோ செய்யுது எனக்கு. அத எப்பிடிச் சொல்ல எண்டுகூடத் தெரியேல்ல. நீங்க பயப்பிடவே தேவையில்லை. நிச்சயமா அவே ரெண்டுபேருக்கும் நல்ல அப்பாவா நான் இருப்பன்.” பார்வை பிள்ளைகளிடம் இருக்கச் சொன்னான்.

“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு.” குழந்தைகள் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்தான். பழக பழக ஒருவிதப் பாசம் உருவாவதும் இயல்புதான். அதையும் தாண்டிய, என் குழந்தைகள் என்கிற அந்தக் கவனத்தையும் அக்கறையையும் பிரித்தறிய அவளுக்குத் தெரியும். அதை, இன்று ஒரு நாளிலேயே அவனிடம் கண்டவள் மனத்தில் இருந்தே சொன்னாள்.

திரும்பி அவள் முகம் பார்த்தான் அகத்தியன். விழியோரம் மெலிதாகக் கரித்திருந்தாலும் அவளும் அவன் பார்வையைத் தளராமல் தாங்கினாள்.
 
Status
Not open for further replies.

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom