You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

கேட்பார் இன்றிக் காதல்! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
கேட்பார் இன்றிக் காதல்! - நிதனிபிரபு


பெரும்பாலும் தலைப்புக் கதையைச் சொல்லாமல் இருக்கட்டும் என்று நினைப்பேன். ஆனால், இந்தக் கதையைப் பற்றி ஓரளவு தலைப்பே சொல்லிவிடும். சொல்லட்டும் என்பதுதான் என் எண்ணமும்.

இது பெரிய கதையாக வராது என்று நம்புகிறேன். கொஞ்சமே கொஞ்சம் அழுத்தமாக இருக்கும். நேசிக்கும் இருவர் சூழ்நிலைக் கைதிகளாக மாறுகையில் அவர்களின் நேசம் என்னாகும்? அல்லது நேசிக்கப்பட்டவர்களின் நிலை என்னாகும்? இதுதான் கதை. நேசம் ஒரு பக்கமும் பாசம் ஒரு பக்கமும் என்று தள்ளாடி நிற்கையில் இரண்டையும் சமமாகப் பற்ற முடியாமல் போனால்? உறவுகளுக்குள் எப்போதும் சரி, தவறு என்று மட்டுமே பார்த்து வாழ முடியாதுதானே? உணர்வுகள் அங்கே அகப்பட்டிருக்கும். இதுதான் கதையின் கரு.

இதற்கு மேலே கதையைப் பற்றிச் சொல்ல ஒன்றும் இல்லை. எப்படியாவது ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கதையை முடிக்க வேண்டும் என்பது ஆசை. அது பிந்தினால் அதன் பிறகு போது முடிப்பேன் என்று எனக்கே தெரியாமல் போய்விடும்.

இப்போதைக்குத் தலைப்பு மட்டும்தான் தெரிவு செய்திருக்கிறேன். முடிந்தவரையில் விரைவாகப் பெயர்களை எல்லாம் தேடி எடுத்துக்கொண்டு முதலாவது அத்தியாயத்தோடு வருகிறேன்.

கடைசியாக, எப்படியாவது என்னை ஜூலை முடிவதற்குள் இந்தக் கதையை முடிக்க வைத்துவிடுங்கள். பிறகு அடுத்த மூன்று மாதங்கள் எனக்கு எப்படிப் போகும் என்று என்னால் கணிக்க முடியாது. (அந்த மூன்று மாதங்களில் பலர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப எழுதிய கதைகளை இங்கே ரீரன் செய்கிறேன்.)

நன்றி!

நட்புடன் நிதனிபிரபு
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 1


முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான் எனும் ஊரில் அமைந்திருந்தது அந்தத் திருமண மண்டபம். அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் அர்ச்சதை தூவி வாழ்த்த, சுபநேர சுப முகூர்த்தத்தில் சுபாங்கியின் கழுத்தில் பொன்தாலி பூட்டி மனைவியாக்கிக்கொண்டான் சந்திரகாந்தன்.

அந்த நொடியிலிருந்து கணவன் மனைவியாகிப்போன இருவரின் முகங்களும் பூரித்து மகிழ்ந்திருக்க, இரு வீட்டாருக்கும் மனம் நிறைந்து போயிற்று. அதன் பிறகான சடங்குகள், பகல் உணவு என்று அத்தனையும் நிறைவாகவே நடந்து முடிந்தன.

அவர்களது பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம். நில அளவைத் திணைக்களத்தில் சந்திரகாந்தன் நல்ல பதவியில் இருக்க, சுபாங்கியும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்துக்கொண்டு இருந்தாள். பொருத்தம் அமோகமாகப் பொருந்தியதும், இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள் என்பதும் சேர இதோ திருமணம் நடந்துமாயிற்று.

மேடை ஏறிவந்து தமக்கையை ஒற்றைக் கரத்தால் அணைத்து, மனம் நிறைந்த வாழ்த்தினைச் சொன்ன அபயன், அன்றிலிருந்து தனக்கு அத்தானாகிப் போனவனையும் சந்தோச மிகுதியில் இறுக அணைத்துக்கொண்டு வாழ்த்தினான்.

அப்படியே அக்கா, அத்தானோடு புகைப்படத்துக்கு நின்றுவிட்டு அவன் மேடையை விட்டு இறங்க, அவனைக் கவனியாது, அணிந்திருந்த பாவாடை தாவணியின் பாவாடையை இரண்டு கைகளாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு, அந்த நான்கு படிகளில் இரண்டு படிகளைக் கடகடவென்று ஏறி இருந்தாள் அன்பினி. மூன்றாவது படியில் காலை வைக்கப் போனவள் அங்கே இன்னொரு கால் வைக்கப்படவும் காலைப் பின்னிழுத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். அவளையே பார்த்தபடி நிதானமாக அடுத்த படியிலும் காலைத் தூக்கி வைத்தான் அபயன். பதற்றம் முகத்தில் பரவ, வேகமாக இறங்கி, அவள் ஒதுங்கி நின்றுகொள்ள அவன் இறங்கிப் போனான். அதன் பிறகுதான் மேடை ஏறிப்போனாள் அன்பினி.

“என்னம்மா?” தங்கை அவசரமாக ஓடி வந்ததைக் கண்டுவிட்டு வினவினான் சந்திரகாந்தன்.

“ஆக்கள் தாற என்வலப்புகளை(Envelope) இந்தப் பைக்க போடட்டுமாம் அண்ணா. அம்மா சொல்லிவிடச் சொன்னவா.” என்று வேலைப்பாடுகள் நிறைந்த குட்டிப் பை ஒன்றைக் காட்டிச் சொன்னவள், “அண்ணி, இத உங்களுக்குப் பின்னால வைக்கிறன். சிப்பும் இருக்கு. பூட்டி வைக்கலாம்.” என்று சொல்லிவிட்டு, சொன்னது போலவே அவளுக்குப் பின்னால் இருந்த இருக்கையில் வைத்துவிட்டு கீழே இறங்கினாள்.

“உங்கட தங்கச்சி நல்ல வடிவு.” போகிறவளையே பார்த்திருந்த சுபாங்கி கணவனிடம் பகிர்ந்தாள்.

“என்ர தங்கச்சி எல்லா.” என்றான் அவன் சிரிப்புடன்.

“ஓ!”

“பின்ன இல்லையா?”

புதுக் கணவன். கொஞ்ச நாள்களாகக் கைப்பேசி வழியாகக் கதை கதையென்று கதைத்து நெஞ்சில் நேசத்தை வேறு வரவழைத்துவிட்டவன். எப்படி இல்லை என்று சொல்லுவாள்?

உதட்டைப் பற்றிச் சிரிப்பை அடக்கியபடி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். உள்ளம் இனிய உணர்வுகளில் உற்சாகமாகத் திளைத்தது.

அங்கே நண்பனின் அருகில் அமர்ந்திருந்த அபயனின் பார்வை, மேடையில் இருந்து இறங்கிப் போனவளையே தொடர்ந்தது.

“என்ன மச்சான், பார்வை பலமா இருக்கு?”

“அத்தான்ர தங்கச்சியடா.”

“அது தெரியுது. நீ ஏன் பாக்கிறாய்?”

“தனியா அம்பிடுறாள் இல்ல. அதான்.”

அருகில் அமர்ந்து இருந்தவன் முன்னே வந்து இவன் முகத்தை நன்றாகத் திரும்பிப் பார்க்க, அவன் முகத்தைப் பற்றித் தள்ளி விட்டபடி, “என்னைக் கண்டாலே ஓடுறாளடா. அதான்.” என்றான் சிரிப்புடன்.

அவன் தாடையைப் பற்றித் தன் புறமாகத் திருப்பி, “உனக்குள்ள என்ன நடக்குது? சொல்லு சொல்லு சொல்லு!” என்றான் நண்பன்.

“ஒண்டும் நடக்கேல்ல. நீ தள்ளு தள்ளு தள்ளு!” என்றவன் அவள் மண்டபத்தை விட்டு வெளியே செல்வதைக் கண்டுவிட்டுத் தானும் நடந்தான்.

அங்கே யாருக்கோ பலகாரப் பையைக் கொடுக்க மறந்துவிட்டாள் போலும். ஓடிப்போய்க் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தாள்.

அவனைக் கவனிக்காமல் அவள் உள்ளே செல்ல முயல, “ஒய்!” என்றான் சத்தமாக.

அன்பினியின் கால்கள் அப்படியே நின்றுவிட்டன. குரலை வைத்தே யார் என்று இனங்கண்டுகொண்ட அவள் நெஞ்சு பயத்தில் தடதடத்தது. அவளுடைய அண்ணாவுக்கும் அவனுடைய அக்காவும் திருமணம் நிச்சயமானபோதிலிருந்து இவர்கள் அவர்கள் வீட்டுக்கும் அவர்கள் இவர்கள் வீட்டுக்கும் என்று வந்து போகையில் இவனைக் கண்டிருக்கிறாள். ஆரம்பித்தில் அண்ணியாகப் போகிறவரின் தம்பி என்று பிரியத்தோடுதான் நடப்பாள்.

ஒருமுறை ஏதோ கொடுத்துவிட்டுப் போவதற்காக அவர்கள் வீட்டுக்கு அவன் வந்திருந்த பொழுது, இவள்தான் தேநீர் ஊற்றிக் கொடுத்தாள். இனிப்புக் குறைவாக இருந்துவிட்டது போலும், அவள் அன்னை அறைக்குள் சென்ற கணத்தில், “இஞ்ச ஒருக்கா வாரும்!” என்று அழைத்து, “என்ன, இப்பவே சீதனத்துக்குக் காசு சேர்க்கிறீரோ?” என்று அதட்டியிருந்தான் அவன். அதிலிருந்து அவன் பக்கமே போவதில்லை அவள்.

அப்படி இருந்தும்கூட கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவளை அரட்டி உருட்டிக்கொண்டிருந்தான் அவன்.

இதோ திரும்பவும் மாட்டிக்கொண்டாள். இப்படியே அவன் கூப்பிட்டது கேட்காதது போன்று மண்டபத்துக்குள் ஓடிவிடலாமா என்று அவள் யோசிக்கையில், “என்ன? பாத்தும் பாக்காத மாதிரிப் போறீர்? மாப்பிள்ளை வீட்டுத் திமிரக் காட்டுறீரோ?” என்றதும் அரண்டு போனாள்.

“இல்ல, உண்மையா உங்கள நான் பாக்கேல்லை. அதான்.” என்றபடி அவன் முன்னால் வேகமாக வந்து நின்றாள்.

“நான் நம்ப மாட்டன்!” என்றான் அவன் கையைக் கட்டிக்கொண்டு.

“இல்ல. உண்மையா உங்கள நான் பாக்கேல்ல.” அவன் நம்ப வேண்டும் என்கிற தவிப்புடன் சொன்னாள்.

“அப்ப பாத்தா வந்து கதைப்பீரா?”

இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் அன்பினி.

“சொல்லும். வந்து கதைப்பீரா இல்லையா?”

“கதைப்பன்.”

“எங்க இப்ப கதையும் பாப்பம்!”

இப்படிச் சொன்னால் என்ன கதைப்பது? அவள் அவனையே பார்த்து விழித்தாள்.

அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று. அதை உதட்டுக்குள் ஒளித்துக்கொண்டு, “என்ன கதைக்க மாட்டீரோ? இப்பவே போய் அத்தானிட்ட நியாயம் கேக்கிறன்.” என்று அவன் திரும்ப, “இல்ல இல்ல. நான் கதைப்பன்.” என்றாள் அவசரமாக.

“அப்ப கதையும்.”

“அது… எப்பிடி இருக்கிறீங்க?”

“நல்லாவே இல்ல.”

‘நல்லா இல்லையா?’ விழித்துவிட்டு, “ஏன்?” என்றாள்.

“நீர் என்னோட கதைக்கவே இல்ல. அதால நான் நல்லாவே இல்ல.”

அப்போதுதான் அவன் தன்னைச் சீண்டுகிறான் என்று மெல்ல விளங்க, “அம்மா தேடப்போறா.” என்றாள் மண்டப வாசலையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தபடி.

“என்னோட கதைப்பன் எண்டு சொன்னீர்.”

“அதான் கதைச்சிட்டனே.” விடுகிறான் இல்லையே என்கிற பயத்துடன் சொன்னாள்.

“எது, எப்பிடி இருக்கிறீங்க எண்டு கேட்டதா?”

அவள் பதில் சொல்லாமல் நிற்க அவனுக்கும் அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் விடவும் மனமில்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு இன்னும் சீண்டச் சொன்னது.

“சரி, நான் கேக்கிறதுக்காவது பதில் சொல்லும்.”

“ம்!” என்று தலையை ஆட்டினாள் அவள்.

“ஏ எல் எக்ஸாமுக்கு ரெடியாகியாச்சோ?”

“ஆகிக்கொண்டு இருக்கிறன்.”

“இன்னும் மூண்டு மாதம் இருக்கு என்ன?”

ஆம் என்று தலையை அசைத்தாள்.

“பாசாகிடுவீரா?”

அவளுக்குக் கோபம் வந்தது. நல்ல மார்க்ஸ் எடுப்பாயா என்று கேட்டிருந்தால் வேறு. அதென்ன பாசாகுவாயா என்பது? அவள் என்ன அந்தளவுக்கு மக்கா? அந்தக் கோபத்தை அவனிடம் காட்டுமளவுக்குத் தைரியம் இல்லாமல் பார்வையால் அவனை வெட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

“சொல்லும். பாசாகிடுவீரா?”

“நல்ல ரிசெல்ஸ் எடுப்பன்!” என்றாள் ரோசத்தோடு.

“பிறகு என்ன படிக்க விருப்பம்?

“BA முடிக்க விருப்பம்.”

“முடிச்சு?”

“தமிழ் லெக்சரர் ஆக விருப்பம்.”

“ஆகி?”

அவளுக்குக் கொஞ்சம் கடுப்பாயிற்று. “படிப்பிக்கப் போறன்.” என்றாள் வெடுக்கென்று.

“படிப்பிச்சு?” என்றான் எதற்கும் அசையாமல்.

இதற்கு என்ன பதில் சொல்வது? அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலாயிற்று. முகம் சிவந்துவிட அவனுக்குப் பதில் சொல்லாது பிடிவாதமாக உதட்டை அழுத்தி மூடிக்கொண்டு நின்றாள்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
“என்ன சத்தத்தைக் காணேல்ல? கேக்கிற ஒரு கேள்விக்கு ஒழுங்காப் பதில் சொல்லத் தெரியேல்ல. இதில நீர் லெக்சரர் ஆகப் போறீர்!” என்றான் அவன் மிரட்டலாக.

அவளுக்கு மெலிதாய் விழிகள் கலங்கியே போயிற்று. “நீங்க சும்மா சும்மா கேட்டா நான் என்ன சொல்ல? நான் போறன்.” அவன் பதிலுக்காகக் காத்திராமல் ஓடிப்போயிருந்தாள்.

போகிறவளையே பார்த்து நின்றவனின் உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பிற்று.

வவுனியா பல்கலையில் பொறியியல் முதல் வருடம் படிக்கும் 21 வயது நிரம்பியவன் அபயன். அத்தானின் தங்கையாக அறிமுகமாகியவளின் பயந்த சுபாவம் அவனுக்கு விருந்தாகிப் போயிற்று.

அதன்பிறகு வந்த நாள்களில் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமைந்தாலும் மிரட்டிப் பார்க்கும் அளவுக்கு அவள் அவனிடம் தனியாக மாட்டிக்கொள்ளவில்லை. அவள் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதில் முனைப்பாகிவிட இங்கே அவன் படிப்பில் கவனமானான்.

அவர்களின் இனிய இல்லறத்தின் பயனாக அடுத்த மூன்று மாதத்திலேயே சுபாங்கி கருவுற்றிருந்தாள். இரு வீட்டுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அன்பினியும் நல்லபடியாகவே பரீட்சைகளை எழுதி முடித்திருந்தாள்.

ஒருமுறை, அன்னை வீட்டில் கொஞ்ச நாள்களுக்கு இருந்துவிட்டு வர என்று வந்திருந்த சுபாங்கியைப் பார்க்க வந்த அன்பினி, மீண்டும் அபயனிடம் மாட்டிக்கொண்டாள்.

சுபாங்கிக்கு என்று கொண்டு வந்த பழங்களை எடுக்க ஸ்கூட்டி அருகில் சென்றவேளை, அப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வந்த அபயன் தன் பைக்கை கொண்டு வந்து அவளருகில் நிறுத்திவிட்டு ஹெல்மெட்டை கழற்றினான்.

மாட்டிக்கொண்டேமே என்று பதறிப்போனாள் அன்பினி. செயற்கைச் சிரிப்பு ஒன்றை அவனுக்கு அவசரமாகக் கொடுத்துவிட்டு, வேகமாக ஸ்கூட்டி சீட்டை தூக்கி, உள்ளே இருந்த பையை அவள் எடுக்க, “என்ன கிழவியாயிட்டீராம் எண்டு கேள்விப்பட்டன்.” என்றான் அவன்.

‘கிழவியா? அவளா?’ தன்னை ஒருமுறை குனிந்து பார்த்துவிட்டு, “என்ன சொல்லுறீங்க?” என்றாள் திகைப்புடன்.

“அத்தையாகப் போறீராம் எண்டா நீர் இன்னும் சின்ன பிள்ளையா? கிழவிதானே?”

‘அடப்பாவி! அப்ப நீயும்தானேடா கிழவன்.’ இதையெல்லாம் வாயைத் திறந்து அவனிடம் சொல்லவா முடியும்?

“என்ன?” என்று அதட்டினான் அவன் அவளுக்குள் ஓடுவதை ஊகித்தபடி.

“இல்ல ஒண்டும் இல்ல.” அவள் பையை எடுத்துக்கொண்டு நடக்க முயல, “எக்ஸாம் எல்லாம் வடிவா எழுதினீரா?” என்று தடுத்தான் அவன்.

அவள் வேகமாக ஆம் என்பதுபோல் தலையாட்டினாள்.

“கம்பஸ் எங்க போற பிளான்?”

“அது தெரியா. அண்ணாதான் சேர்த்துவிடுவார்.”

“எங்க எண்டாலும் போம். ஆனா எங்கட கம்பசுக்கு வரக் கூடாது!” என்றான் அவன் மிரட்டலாக.

ஏன் வரக்கூடாதாம் என்று கேள்வி உள்ளே ஓடினாலும் சரி என்று தலையாட்டினாள் அவள்.

“சரி, போய் ஒரு தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாரும்!” என்றபடி தானும் பைக்கிலிருந்து இறங்கினான் அவன்.

“நானா?”

“பின்ன என்ன நானா?”

அவர்கள் வீட்டில் அவள் எப்படி?

“மரியாதையா ஊத்திக்கொண்டு வாறீர். இல்லையோ இத வச்சே பெரும் பிரச்சினை எடுப்பன்!”

அவள் பயந்துபோனாள். சண்டை சச்சரவு இல்லாமல் அண்ணாவும் அண்ணியும் சந்தோசமாக இருந்தால் போதும் என்று அடிக்கடி அன்னை சொல்லிச் சந்தோசப்படுவதை அடிக்கடி கேட்டுப் பழகியிருந்த அன்பினி, தன்னால் ஏதும் பிரச்சனைகள் வந்துவிடக் கூடாது என்று எண்ணி, “இல்ல இல்ல ஊத்திக்கொண்டு வாறன்.” என்றுவிட்டுத் திரும்ப, “ஃபோன் இருக்கா உமக்கு?” என்று கேட்டான் அவன்.

ஆம் என்று தலையாட்டினாள் அவள்.

“நம்பர் சொல்லும்!” என்று அவன் தன் கைப்பேசியை ஜீன்ஸ் பொக்கெட்டில் இருந்த எடுக்க அவளுக்கு நடுங்கிப் போயிற்று.

“ஏ…ன்?” என்றாள் குரலும் நடுங்க.

“ஃபோன் நம்பர் என்னத்துக்குக் கேக்கிறது?” என்று அதட்டினான் அவன்.

என்னோடு பேச உனக்கு என்ன இருக்க இருக்கிறது என்று கேட்கத் தைரியமில்லை அவளுக்கு. சற்றே அமைதியான பயந்த சுபாவம் கொண்டவள். காந்தனை விடவும் ஆறு வருடங்கள் பிந்திப் பிறந்ததால் மொத்த வீட்டுக்கும் செல்லம் என்பதும் சேர, கைக்குள்ளேயே வைத்து வளர்த்திருந்தனர் அவள் வீட்டினர்.

நம்பரை சொல்லவும் பிடிக்காமல் சொல்லாமல் போகவும் முடியாமல் அவள் தடுமாற, “சொல்லும்!” என்றான் அவன் அதிகாரமாக.

இப்படி யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சொல்லி இருக்கிறார்கள். அவன் அண்ணியின் தம்பிதான் என்றாலும் பயந்தாள். தைரியத்தைத் திரட்டிக்கொண்டு அவள் நம்பரில் இருந்து இரண்டு இலக்கங்களை மாற்றிச் சொன்னாள்.

அவன் பதிந்துவிட்டு உடனேயே ரிங் பண்ணினான். அவள் நடுங்கியபடி நிற்க, “எங்க ஃபோன்?” என்றான்.

“அது வீட்டில வச்சிட்டு வந்தனான்.”

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “போனதும் எனக்கு எடுக்கிறீர். இல்லையோ தெரியும்!” என்றான் அவன்.

அவள் சரி என்று வேகமாகத் தலையை ஆட்டிவிட்டு நகர, “இங்கதான் நிப்பன். தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வந்து தந்திட்டுப் போறீர்.” என்று உத்தரவிட்டான் அவன்.

உள்ளுக்குள் நொந்தபடி அதற்கும் தலையை ஆட்டிவிட்டு வந்தாள் அவள்.

“என்ன பிள்ளை, இதில இருக்கிற ஸ்கூட்டில இருந்து இந்த பேக்கை எடுத்துக்கொண்டு வர இவ்வளவு நேரமா?” என்று சலித்தார் அவள் அன்னை இந்துமதி.

“இல்ல அவர்… அண்ணின்ர தம்பி எக்ஸாம் எப்பிடி எழுதி இருக்கிறன் எண்டு கேட்டவர் அம்மா.” என்று சமாளித்துவிட்டு, கையில் இருந்த பையைச் சுபாங்கியிடம் கொடுத்தவளுக்குத் தேநீரை எப்படி ஊற்றுவது என்கிற கேள்விதான் உள்ளே சுழன்றது.

பேசாமல் அன்னையிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். ஆனாலும் சொன்னதுபோல ஏதும் பிரச்சனைகள் செய்துவிடுவானோ என்று பயமாகவும் இருந்தது.

“மாமி, எனக்கு இன்னுமொருக்காத் தேத்தண்ணி வேணும்.” சற்று நேரம் அமைதியாக இருந்தவள் மெல்லத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டுவிட்டாள்.

அவள் தயங்கி தயங்கிக் கேட்ட விதத்தில் அவருக்குச் சிரிப்பாயிற்று. “அதுக்கு ஏனம்மா இவ்வளவு மெல்லக் கேக்கிறீங்க? இருங்கோ ஊத்திக்கொண்டு வாறன்!”என்று அவர் எழுந்துகொள்ள, “இல்ல இல்ல. நீங்க இருந்து அம்மாவோட கதைங்கோ. நானே எனக்குப் பிடிச்ச மாதிரி ஊத்துறன்.” என்று தடுத்தாள் அன்பினி.

அவர் முகம் மலர்ந்து போயிற்று. “அதுக்கு என்ன? இதுவும் உங்கட வீடுதான். போய் ஊத்திக் குடியுங்கோ. சிங்குக்கு நேர மேல இருக்கிற கப்போர்ட்டுக்க எல்லாம் இருக்கு. சுபாங்கி ஒருக்கா காட்டிவிடுங்கோ பிள்ளை.” என்று தன் மகளை ஏவியவர், “வீட்டு வேலை எல்லாம் செய்வாவோ?” என்று இந்துமதியிடம் விசாரிப்பது இவள் காதிலும் விழுந்தது.

சுபாங்கியும் அவளுடன் வந்து தேயிலை, மா, சீனி(சர்க்கரை) எல்லாவற்றையும் காட்டிவிட்டு, “நான் ஊத்தித் தரட்டா?” என்று கேட்டாள்.

“இல்லை அண்ணி. நீங்க போய் இருங்கோ. நானே ஊத்துவன்.” கைகால்கள் எல்லாம் நடுங்க தேநீரை ஊற்றி எடுத்துக்கொண்டு பின் பக்கத்தாலேயே அவனைத் தேடிக்கொண்டு போனாள். யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள், முதலில் என்ன விளக்கம் சொல்வது என்று நினைக்கவே அவளுக்கு உதறியது.

அங்கே அவன் எதிர்ப்படவும் அவனைப் பாராமல் நீட்டினாள்.

“நீரா ஊத்தினனீர்?” வாங்கியபடி வினவினான்.

அவள் ஆம் என்று தலையை அசைத்தாள்.

“கடவுள் சத்தியமா எண்டு சொல்லும்!”

இதற்கெல்லாமா சத்தியம் செய்வது என்று உள்ளே நொந்துகொண்டாலும், “கடவுள் சத்தியமா நான்தான் ஊத்தினான். வேணுமெண்டா உங்கட அம்மாட்டக் கேட்டுப் பாருங்கோ.” என்றாள் மெல்லிய கோபத்தோடு.

“ம்ம் கோபம் எல்லாம் வருது.” என்றபடி வாங்கிப் பருகியவன், “அதென்ன உங்கட வீட்டுச் சொத்து எண்டதும் மிச்சம் பிடிப்பீர். எங்கட வீட்டுச் சொத்து எண்டா மட்டும் தண்ணியாச் சிலவழிப்பீரோ?” என்றான் அதட்டலாக.

முதலில் ஒன்றும் விளங்காமல் விழித்துவிட்டு, “சீனி(சக்கரை) கூடிட்டுதா?” என்றாள் யோசனையோடு. அவள் சுவை பார்த்தபோது நன்றாகத்தானே இருந்தது என்று ஓடிற்று உள்ளே.

“நான் என்ன பொய்யா சொல்லுறன்? நீரே குடிச்சுப் பாரும்!” என்றதும் அரண்டு போனவள், “இல்ல நீங்களே குடிங்க!” என்றுவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடி இருந்தாள்.

வேகமாகத் திரும்பிக் கொண்டவன் அடக்கிய சிரிப்பில் குலுங்கினான். தேநீர் வெகு சுவையாக இருக்கவும் ரசித்துப் பருகினான்.

அன்று முழுக்க அவள் அழைப்பாள் என்று காத்திருந்து ஏமாந்துபோனான் அபயன். அடுத்தடுத்த நாள்களில் அவன் அழைத்தும் அவள் ஏற்காமல் இருக்க, சுபாங்கி அறியாமல் அவளின் கைப்பேசியை ஆராய்ந்தான். அப்போதுதான் அவள் இலக்கத்தை மாற்றித் தந்து, தன்னை முட்டாளாக்கியிருக்கிறாள் என்று கண்டுபிடித்திருந்தான்.



தொடரும்...

மக்களே, தயவு செய்து உன் அன்புக்கு நன்றியை மறந்திட்டு வந்து இந்தக் கதையை வாசிங்க. இது சாதாரண கதைதான். பெரிதாக எதையும் எதிர்பார்த்து ஏமாந்துடாதீங்க.

ஒருவழியா முதல் அத்தியாயம் ஆரம்பிச்சு வச்சிட்டன். எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்க. இத்தனை நாள்களும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அனைவருக்கும் மிகுந்த நன்றி!
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 2


அன்பினி பதினெட்டு வயது நிரம்பியவள். அவள் தனக்குப் புதிதாய்க் கிடைத்த சொந்தம் என்கிற குறுகுறுப்பா, முறைப்படி அவனுக்கு மச்சாள் என்பதில் அவனையறியாமல் உண்டான உரிமையா தெரியவில்லை. அதுவும் அவனைக் கண்டாலே மெல்லிய பயத்துடன் அவள் பார்ப்பதே ஏதாவது செய்யடா என்று அவனைத் தூண்டிவிடும். அதனால்தான் அவளோடு விளையாடுவான். சில நேரங்களில் சற்றே அதிகம் என்று தெரிந்தாலும் கூட கட்டுக்குள் நிற்க முடிவதில்லை.

அதுவே கைப்பேசி எண்ணை அவள் பிழையாகத் தந்து, அவனை ஏமாற்றியது கோபத்தை வரவழைத்திருந்தது. ஏதோ ஒரு வகையில் அவன் தன்மானத்தைச் சீண்டியிருந்தது. அப்படி என்ன செய்துவிடுவான் என்று இப்படிச் செய்தாளாம் என்கிற கோபம் கனன்றுகொண்டு வர ஆரம்பிக்க, வேகமாக அவளுக்கு அழைத்தான்.

யார் என்று தெரியாமல் ஏற்ற அன்பினி, “ஹலோ!” என்றாள் மெல்லிய தயக்கத்துடன்.

“ஆக, நம்பரை வேணும் எண்டே பிழையாத் தந்திருக்கிறீர்!” என்றவனின் கேள்வியில் அவளுக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

“சொல்லும் அன்பினி, அப்பிடி நான் என்ன செய்திடுவன் எண்டு மாத்தித் தந்தனீர்?”

“இல்ல… அது அண்ணா தெரியாத ஆக்களுக்குக் குடுக்கக் கூடாது எண்டு சொல்லி இருக்கிறார்.” தன்னை மீறிய பயத்தில் அவள் சொல்லிவிட, “ஓ! அப்ப தெரியாத ஆக்களின்ர லிஸ்ட்டுக்கதான் நான் வாறன் உமக்கு?” என்று கேட்டவன், “சந்தோசம்! இனி அப்பிடியே இரும்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அதன் பிறகு அவள் புறம் திரும்புவதே இல்லை. சின்ன பெண், நீ அவளைப் போட்டுப் படுத்திய பாட்டில் பயந்து செய்திருக்கிறாள் என்று அறிவு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவனால் சமாதானமாகவே முடியவில்லை.

அன்பினிக்கும் என்ன செய்வது என்று தெரியாது போயிற்று. அதுவும் அடுத்து வந்த நாள்களில் எதேற்சையாக எதிர்ப்படுகையில் எல்லாம் அவன் முகத்தைக் கடினமாக வைத்துக்கொண்டு கடந்து போவது ஒரு மாதிரியாயிற்று. தவறு செய்துவிட்டோமோ என்று மனத்துக்குள்ளேயே வைத்து உழன்றாள்.

இரண்டு மூன்று முறை கவனித்துவிட்டு அவளாகவே மன்னிப்பைக் கேட்டாள்.

“அது பயத்தில… ஆனா பிழைதான். சொறி.” இன்னும் சுபாங்கி இங்கேயே இருப்பதில் சத்தான உணவு ஏதும் செய்தால் இந்துமதி இவளிடம் கொடுத்து அனுப்புவார். அப்படி வந்தவள் கொண்டுவந்த உணவைக் குசினிக்குள் சென்று பரமேஸ்வரியிடம் கொடுத்துவிட்டுத் திரும்புகையில், இவன் தனியாக சோபாவில் அமர்ந்திருந்து டீவி பார்த்துக்கொண்டு இருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு, மெல்லிய குரலில் சொன்னாள்.

திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.

“அதுதான் சொறி சொல்லுறேனே.” அவளால் அங்கே நிறைய நேரம் நிற்கவும் முடியாது. உறங்கிக்கொண்டிருக்கும் சுபாங்கியோ, சமையலறைக்குள் நிற்கும் பரமேஸ்வரியோ விறாந்தைக்கு வந்தால் தேவையற்ற கேள்விகள் வரும். பயத்துடன் பார்வை வீட்டுக்குள் சென்று வர மறுபடியும் முணுமுணுத்தாள்.

“என்னைத்தானே உமக்கு முன்ன பின்னத் தெரியாது. பிறகு என்னத்துக்கு வந்து கதைக்கிறீர்?” என்றான் அவன் புருவங்களைச் சுளித்துக்கொண்டு.

அவளுக்கு முகம் மாறிப் போயிற்று. “சொறி!” என்றாள் மீண்டும்.

“ஏய் போடி!” என்றான் அபயன் சினத்துடன். செய்வதை எல்லாம் செய்துவிட்டு சும்மா வந்து நின்று மன்னிப்பைக் கேட்பாளா என்று எரிச்சலாயிற்று அவனுக்கு.

அவளுக்கு அதிர்ச்சி. எப்போதும் சீண்டி அவளுக்குப் பயம் காட்டுவானே தவிர்த்து இப்படி மரியாதை இல்லாமல் கதைத்ததே இல்லை. ஆனால் இன்று? முகம் கன்றி, அவமானத்தில் சிவந்துவிட அதற்குமேல் அங்கே நிற்கவில்லை. ஓடி வந்திருந்தாள்.

அதன் பிறகு அந்தப் பக்கம் போவதே இல்லை. சுபாங்கியும் இவர்கள் வீட்டுக்கு வந்துவிட, அதற்கு அவசியமும் இல்லாது போயிற்று. இருவர் வீடுகளும் இருப்பது பக்கத்து பக்கத்து ஊரில்தான். ஆனாலும் அவன் வவுனியாவில் தங்கிப் படித்துக்கொண்டு வார இறுதிகளில் மட்டுமே ஊருக்கு வந்து போவதிலும், இவள் வீட்டுடனேயே இருந்துகொண்டதிலும் இருவரும் பிறகு சந்தித்துக்கொள்ளவே இல்லை.

சுபாங்கி பெறுமாதத்தை நெருங்கிய நேரத்தில் அன்பினிக்கு உயர்தரப் பரீட்சையின் பெறுபேறு மிக நல்லதாக வந்திருந்தது. அவள் படிக்க ஆசைப்பட்ட கலைப்பிரிவு கேள்வியே இல்லாமல் கிடைக்கும் என்பதில் அவள் சந்தோசம் இரட்டிப்பாயிற்று.

இதை அறிந்த பரமேஸ்வரி அவளை வீட்டுக்கு வந்துவிட்டுப் போகச் சொல்லியிருந்தார். அந்த அபாயமானவன் இருப்பானே என்று ஒரு கணம் தயங்கினாள் அன்பினி. ஆனால், தேர்ச்சி அடைந்துவிடுவாயா என்று கேட்டவனிடம் ‘நான் மிக மிக நல்ல பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறேன், பார்!’ என்று காட்ட வேண்டாமா என்கிற ரோசம், அவளையும் அங்கே உற்சாகமாகவே போக வைத்தது.

வாசலில் அவன் பைக் இல்லை. அவன் முன்னால் தம்பட்டம் அடிக்க முடியாதே என்கிற மெல்லிய ஏமாற்றம் பரவினாலும் அவ்வளவு நேரமாக இருந்த ஒரு பயம் அகன்றிருந்தது. ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, “மாமி!” என்று துள்ளலாய்க் குரல் கொடுத்தபடியே உள்ளே நுழைந்தாள்.

“வாங்கோம்மா வாங்கோ வாங்கோ! பிள்ளை கெட்டிக்காரியாம் எண்டு இண்டைக்கு விடிஞ்சதில இருந்து உங்கட மாமி சொல்லிக்கொண்டே இருக்கிறா.” என்று அவளுக்குத் தன் வாழ்த்தைத் தெரிவித்த குழந்தைவேலு, சட்டைப் பையிலிருந்து ஒரு தொகைப் பணத்தை எடுத்து அவள் கையில் பொத்தினார்.

“அச்சோ மாமா, காசெல்லாம் எனக்கு வேண்டாம்!” பதறி அவள் வாங்க மறுத்தபோதும் அவர் விடவில்லை.

“அப்பிடிச் சொல்லக் கூடாது. நானே ஏதாவது வாங்கி, அது உங்களுக்குப் பிடிக்காம இருந்தா என்ன செய்றது எண்டுதான் ஒண்டும் வாங்கேல்ல. இந்தக் காசுல உங்களுக்கு என்ன விருப்பமோ அதை வாங்கி எடுங்கோ!” என்றார் அவர்.

அறைக்குள் இருந்து உடைகளை மடித்துக்கொண்டிருந்த பரமேஸ்வரியும், அவளின் குரல் கேட்டதும், “வாங்குங்கோம்மா. இவ்வளவு நல்ல மார்க்ஸ் எடுத்த பிள்ளைக்கு ஒண்டும் செய்யாம விடுறதோ? எனக்கு நல்ல சந்தோசம். இனியும் நல்லாப் படிக்கோணும் என்னம்மா?” என்றபடி வெளியே வந்து அவளை உச்சி முகர்ந்தவர் அவளுக்குப் பிடித்த பருத்தித்துரை வடையோடு தேநீரும் ஊற்றிக் கொடுத்தார்.

குழந்தைவேலு முல்லைத்தீவு டவுனில் சொந்தமாகப் புடவைக்கடை ஒன்று வைத்திருந்தார். அவர் அதற்குப் புறப்பட்டுவிட, “தம்பிய மாதிரி மேத்ஸ் எடுத்திருக்க எஞ்சினியரிங் கிடைச்சிருக்கு என்னம்மா?” என்றார் பரமேஸ்வரி.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவரை மாதிரியா என்று உள்ளூர அலறினாலும், “எனக்குப் படிப்பிக்கிறதுதான் விருப்பம் மாமி.” என்று சின்ன முறுவலோடு தன் விருப்பத்தைச் சொன்னாள் அன்பினி.

“அதுவும் சரிதான். உங்களுக்குப் படிப்பிச்ச மாதிரி நல்ல டீச்சர்ஸ் இருந்தாத்தான் உங்களை மாதிரிக் கெட்டிக்காரப் பிள்ளைகள் இன்னும் நிறையப்பேர் வருவினம். என்ன படிச்சாலும் பிடிச்சதைப் படிச்சு இன்னும் நல்லா வந்தாக் காணும்.” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கையில் வீட்டுக்குள் வந்தான் அபயன்.

எங்கோ தொலைவுக்குச் சென்று வந்திருக்க வேண்டும். அவன் முகத்தில் அப்பட்டமாகக் களைப்புத் தெரிந்தது. வெயிலில் பயணித்து வந்ததால் நன்றாக வியர்த்திருந்தான். அதைவிட, இந்த ஆறுமாத இடைவெளியில் தோள்கள் கொஞ்சம் விரிந்து, மீசை அழகாய் நறுக்கிவிட்டு வித்தியாசமாகத் தெரிந்தான். புஜங்கள் கூட இலேசாகப் புடைக்க ஆரம்பித்திருந்தன. சில கணங்களுக்கு மேல் அவனை நேராக எதிர்கொள்ள இயலாமல் பார்வையை அகற்றிக்கொண்டாள்.

“பாத்தியா தம்பி, பிள்ளைக்கு உன்னை விட நல்ல ரிசெல்ஸ் வந்திருக்கு. ஆள் நல்ல கெட்டிக்காரி.” அவனைக் கண்டதும் சந்தோசமாகச் சொன்னார் பரமேஸ்வரி. அவர் என்னவோ அவள் மீதான பாசத்தில் சொல்ல, இவள் உள்ளூரத் திடுக்கிட்டுப் போனாள்.

அவள் பயந்ததற்கு மாறாக, உள்ளே சென்று தண்ணீரை அள்ளிக் கடகடவென்று வாய்க்குள் சிரித்துவிட்டு வந்து அவள் எதிரில் அமர்ந்து, “என்ன ரிசெல்ஸ்?” என்றான் அவன்.

அவள் சொல்ல, “கெட்டிக்காரிதான்!” என்று பாராட்டினான்.

அவளுக்கு வியப்பாயிற்று. அவனுக்கு எல்லாம் இந்த நல்ல குணம் வராதே! ஆனாலும் அவன் வாயிலிருந்து வந்த அந்தப் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததில், “தேங்க்ஸ்!” என்றாள் அவன் முகம் பார்த்து முறுவலித்தபடி.

அவளையே ஒருகணம் பார்த்தவன் எழுந்து தன் அறைக்குள் நுழைந்துகொண்டான். அவளுக்கு அவன் தோற்ற மாற்றம் பார்த்ததும் தெரிந்தது போன்று அவன் கண்களையும் அவள் கவர்ந்திருந்தாள்.

பெரும்பான்மையான பொழுதுகளில் இரட்டைப் பின்னலும் நெற்றியில் சற்றே பெரிதான கறுப்புப் பொட்டுமாக ‘நான் இன்னுமே பள்ளிக்கூடம் செல்லும் பெண்தான்’ என்று சொல்லாமல் சொல்லும் தோற்றம் மறைந்து, சற்றே மெலிந்து, இடுப்புக்கு கீழ் வரையிலும் நின்ற கூந்தல் தோள்களில் புரண்டு கிடக்க, திருத்தியமைக்கப்பட்ட புருவங்கள், பளிச்சென்று மின்னும் முகம் என்று முழுமையான பெண்ணாய் நின்ற அவளைக் கண்டு கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு பார்த்தவளைச் சும்மா விட மனம் வராமல், அறைக்குள் இருந்து அவளுக்கு அழைத்தான்.

அவள் அமர்ந்திருந்த சாப்பாட்டு மேசையின் மீது இருந்த கைப்பேசி, அவன் பெயரைச் சொல்லி ஒலியெழுப்பவும் திகைத்துத் திரும்பி அவன் அறையைப் பார்த்தாள் அன்பினி. அங்கே அறையின் நிலையில் சாய்ந்து நின்றிருந்த அபயன், கைப்பேசியை ஒரு பக்கக் காதுக்குக் கொடுத்தபடி, மேசையில் இருந்த அவள் கைப்பேசியைக் கண்ணால் காட்டி, எடு என்று சைகை செய்தான்.

அவள் அருந்தி முடித்த தேநீர்க் கோப்பையையும் தட்டையும் எடுத்துக்கொண்டு போன பரமேஸ்வரி வந்தால் என்னாகும் என்று பயந்து, வேகமாக அழைப்பை ஏற்றுக் காதுக்கு வைத்தாள்.

“சனி ஞாயிறுல இந்தப் பக்கம் வரமாட்டீர். என்ன இண்டைக்குத் திடீர் எண்டு?” திரும்பவும் அறைக்குள் சென்று நின்றுகொண்டு வினவினான் அவன்.

“அது மாமிதான் வரச் சொன்னவா.”

“அதுக்குக் கிழமை(வார) நாளில வந்திருக்க வேண்டியதுதானே. என்ன, எனக்கு முன்னால பெருமையடிக்க நினைச்சீரோ?”

“இல்ல… அது…” என்று அவள் இழுத்தத்திலேயே அவளைக் கண்டுகொண்டான் அவன்.

“அந்தளவுக்கு தைரியம் வந்திட்டுது! அது கூடாதே! என்ன செய்யலாம்…” என்று இழுத்தான் அவன்.

என்ன செய்யப் போகிறானோ என்று அவள் நடுங்க, அங்கே பரமேஸ்வரி திரும்பி வருவதும் தெரிய அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. வேகமாக யோசித்து, “தேங்க்ஸ்!” என்றாள், தன்னை யாரோ அழைத்து வாழ்த்துகிறார்கள் என்று அவர் நினைக்க வேண்டும் என்பதற்காக.

அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனாலும் விடாமல், “என்னத்துக்கு தேங்க்ஸ்? நான் என்ன நீர் வடிவா இருக்கிறீர் எண்டு சொன்னேனா? இல்ல, நீர் ஷேப் பண்ணி இருக்கிற புருவம் ரெண்டும் நல்லா இருக்கு எண்டு சொன்னேனா? என்னத்துக்கு தேங்க்ஸ் எண்டு சொன்னனீர்?” என்றான் வேண்டும் என்றே.

அவளுக்குத் தொண்டை நெஞ்சு எல்லாம் உலர்ந்து போயிற்று. அவர்களுக்கிடையிலான எல்லைக் கோடுகளில் முதல் கோட்டை அவன் தாண்டிவிட்டதாக அறிவு அபாயமணியை அடித்தது.

“ஒரு ஆறு மாதம் நடுவில பாக்காம இருந்திருப்பமா? அதுக்கிடையில முடி வெட்டி, முகத்துக்கு மேக்கப் எண்டு என்ன இது ஆளே மாறிப்போய் நிக்கிறீர்?” என்று அதட்டினான் அவன்.

அவளுக்கு வெளிப்படையாகக் கைகால்கள் எல்லாம் நடுங்கும் போலிருக்க, ஒன்றும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தாள். என்னவோ தான்தான் தவறு செய்துவிட்டது போன்று பரமேஸ்வரியின் முகம் பார்க்க முடியவில்லை.

“மாமி, அது பிரென்ட். வீட்டை வந்து நிக்கிறாளாம். நான் அவசரமாப் போகோணும். இப்ப போயிற்று இன்னொரு நாளைக்கு வாறன் மாமி.” என்று அவசரமாகச் சொன்னவள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி வந்திருந்தாள்.

வீட்டுக்கு வந்த பிறகும் திரும்பவும் அழைப்பானோ என்கிற பயத்தில் சத்தத்தை முற்றாக நிறுத்திவிட்டாள். அவன் நோக்கம் வேறோ என்கிற சந்தேகம் முதன் முறையாகத் தோன்றிற்று.

அவனுக்கும் தான் செய்தது தெரியாமல் இல்லை. இரண்டு நாள்கள் கழித்து, “ஹாய்!” என்று அனுப்பிவிட்டான்.

அவளுக்கு உண்மையாகவே பெரும் பயம் பிடித்துக்கொண்டது. வீட்டில் சொல்லவும் பயந்தாள். அவள் நினைப்பது போன்று உண்மையிலேயே வேறு நோக்கத்தில்தான் தன்னை அணுக முயல்கிறானா என்று தெரியாமல் என்ன என்று சொல்வது? கடைசியில் இந்தக் குழப்பங்கள் எதுவுமே வேண்டாம் என்று அவனைத் தன் கைப்பேசியில் முற்றிலுமாகத் தடை செய்தாள்.

அபயனுக்கு மறந்துபோயிருந்த கோபம் மீண்டும் வந்துவிட்ட நிலை. திரும்பவும் மாட்டாமளா போகப் போகிறாள் என்று எண்ணிக்கொண்டு படிப்பில் கவனத்தைச் செலுத்தினான்.

அதன் பிறகு எக்காரணத்தைக் கொண்டும் சனி ஞாயிறுகளில் அவள் அங்குப் போவதே இல்லை. இதற்குள் சுபாங்கிக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தாள். குழந்தையின் துடக்குக்கழிவும் வந்தது. அதுவும் சரியாக ஒரு சனிக்கிழமையாக அமைந்து போயிற்று.


தொடரும்...

எங்கட பக்கம் வயதில மூத்த ஆட்களை கட்டாயம் வாங்க போங்க என்றுதான் கதைப்போம். அதேபோல, வயதில் குறைந்தவராக இருந்தாலும் அந்த மரியாதை இருக்கும். பெரும்பாலும் வா போ வராது. அதற்குப் பதிலாக இந்த நீர் என்பது கடைசியில் மரியாதைப் பதமாக வந்து நிற்கும்.(இந்த இரண்டு அத்தியாயங்களில் அபயன் அன்பினியோடு கதைப்பது போன்று) அது வயதில் குறைந்தவர்களை வயதில் பெரியவர்கள் மரியாதையோடு விளிப்பது. (என்ர அப்பா எல்லாம் என்ர பெஸ்ட் பிரெண்ட்ஸ்ச கூட மரியாதையா கதைக்கோணும் பிள்ளை எண்டு சொல்லி இருக்கிறார்:cry:. அதெல்லாம் நடக்கிற கதையா சொல்லுங்க? அப்பாக்கு முன்னால மட்டும் வாரும் தோழி இரும் தோழி என்றுவிட்டு அவர் இல்லை என்றதும் நாயே பேயே தான்.)

அது உங்களுக்கும் தெரியப்படுத்த வேணும் என்கிற ஆசைல இந்த ரெண்டு அத்தியாயத்திலும் அந்த முறையைப் பயன்படுத்தி இருக்கிறன். விளங்குதுதானே? ரசிக்கும் வகையில் இருக்குதானே. பெரும்பாலும் இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்கள்தான் இப்படி வரும் எண்டு நினைக்கிறன். பிறகு நாயகனும் நாயகியும் கண்ணுக்க மண்ணாக நெருங்கிவிடுவார்கள்;). பிறகு வராது.

முதல் அத்தியாயத்துக்கு கருத்திட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும். இனி அடுத்த அத்தியாயம் திங்கள்தான் வரும். சோ, ஹாப்பி வீக்கெண்ட் எல்லோருக்கும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 3


காந்தன் சுபாங்கி தம்பதியினர், மகளின் முப்பத்தியொன்றாம் நாளினை எந்தக் குறையும் இல்லாமல் செய்து, தளிரினி என்று பெயரும் சூட்டினர்.

அவளின் பெயரைப்போலவே மருமகளுக்கும் வைத்துவிட்டதில் அன்பினியைக் கையில் பிடிக்கவே முடியவில்லை. அழகான சுடிதார் ஒன்றில், அளவான அலங்காரத்தோடு தன் சொந்த வீடு போன்று பரமேஸ்வரிக்கு மிகுந்த உதவியாக இருந்தாள். கூடவே, கையில் தூக்கிப் பழக்காதே, பிறகு சுபாங்கியை எதுவும் செய்ய விடமாட்டாள் என்று யார் சொல்லியும் காதில் விழுத்தாமல், கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் தளிரைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

அபயனும் அவள் காலையில் அங்கு வந்ததிலிருந்து அவளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தான். சும்மாவே அடிக்கடி பார்த்துக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அவர்களுக்குள் அமைவதில்லை. இதில், அவள் வேறு கவனமெடுத்து அவனைத் தவிர்ப்பதில் அவளைக் காணும் பொழுதுகளை மிகவுமே ஆவலாய் எதிர்பார்ப்பான் அவன். நேற்றிலிருந்தே அவள் வருகைக்காகக் காத்திருந்தான். ஏதாவது பேச்சுக் கொடுக்கலாம் என்றால் அயலட்டை மனிதர்கள், சொந்த பந்தங்கள் என்று வீடு முழுக்க ஆட்கள் நிறைந்திருந்ததில் அவளைத் தனியாகப் பிடிக்க முடியவில்லை.

பகல் உணவும் நல்லபடியாக முடிய, மெல்ல மெல்ல வந்தவர்கள் களையலாயினர். காய் கறியோடு வயிறு நிறைய உண்டது அபயனின் கண்களைச் சொக்க வைத்தது. அவள் தன் இலக்கத்தைத் தடை செய்து வைத்திருப்பதும், இன்று முழுக்க அவளைச் சீண்டவில்லை என்பதும் சேர, அங்கே விறாந்தையில் இருந்த பேப்பர் கப்புகளை எல்லாம் பொறுக்கிக்கொண்டுபோய்க் குப்பை வாளிக்குள் போடுவது போன்று சென்று, “எனக்குத் தோடம்பழத் தண்ணி வேணும். கரைச்சுத் தாரும்!” என்று, சமையல் கட்டை ஒதுக்கிக்கொண்டு நின்றவள் காதினுள் சொல்லிவிட்டு வந்தான்.

இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் காதருகில் வந்து மோதிய அவன் குரலில் ஒருகணம் விதிர்விதிர்த்துப் போனாள். திகைப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள். இதற்குள் பழையபடி சோபாவில் வந்து அமர்ந்துகொண்டவன் ‘செய்!’ என்று கண்ணாலேயே அதட்டினான்.

படக்கென்று அவன் பார்வையிலிருந்து மறைந்துகொண்டவளுக்கு அவன் கேட்டதைச் செய்வதா என்கிற படபடப்பு. வீடு முழுக்க ஆட்கள் இருந்ததில் சேட்டை செய்யமாட்டான் என்று தைரியமாக இருந்தாளே. அங்கே வந்த பரமேஸ்வரி, அவள் நின்றிருந்த நிலையைக் கவனித்துவிட்டு, “என்னம்மா?” என்றார் எதுவும் விளங்காமல்.

“அது மாமி, எல்லாருக்கும் தோடம்பழத் தண்ணி கரைக்கவா?” ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு வினவினாள்.

அவர் முகம் அப்படியே மலர்ந்துபோயிற்று. “ஓமாச்சி. கரைச்சா நல்லம்தான். கொஞ்சம் உசாரும் வரும்.”

“அப்ப நான் போய்த் தோடம்பழம் பிடுங்கிக்கொண்டு வாறன்.” அவர்கள் வீட்டின் பின்னால் பெரிய தோடம்பழ மரம் நிற்பது தெரியுமாதலால் ஒரு கிண்ணத்தைத் தூக்கிக்கொண்டு அவள் நடக்க, “பொறுங்கோ பிள்ளை. கைக்கு எட்டுற உயரத்தில இருந்ததை எல்லாம் நான் பிடுங்கிட்டன். உங்களுக்கு எட்டாது.” என்று அவளைத் தடுத்து நிறுத்திவிட்டு, “தம்பி, அன்பினி தோடம்பழத் தண்ணி கரைக்கப் போறவாம். அங்க பிலா மரத்தில அப்பா கொக்கத்தடியை நிமித்தி வச்சிருக்கிறார். அதை எடுத்து நாலஞ்சு பழம் ஆஞ்சு குடுங்கோ.” என்று அவனை ஏவி, அவனுக்கான சந்தர்ப்பத்தை அவரே உருவாக்கிக் கொடுத்தார்.

அவனும் எழுந்து வர இவள் பதறிப்போனாள். “இல்ல மாமி, அவர் என்னத்துக்கு? நானே பிடுங்குவன்.” என்றாள் அவசரமாக.

“பிறகு என்னம்மா? அவாவே பிடுங்குறாவாம். என்ன விடுங்க!” என்று அவன் திரும்ப, “தம்பி, என்ன பழக்கம் இது? அவா சொன்னா அப்பிடியே விடுறதா? போய்ப் பிடுங்கிக் குடுங்கோ!” என்று அதட்டினார் பரமேஸ்வரி.

“ஒரு மனுசனை நிம்மதியா இருக்க விடுறீங்களா நீங்க?” என்று அன்னையிடம் சினந்துகொண்டே அவளைக் கடக்கையில் கண்ணைச் சிமிட்டிவிட்டு போகவும் அவளுக்கு ஒருமுறை தூக்கிப் போட்டது.

அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல், மாலை மரியாதையோடு வெட்ட அழைத்துச் செல்லும் ஆட்டைப் போன்று அவன் பின்னால் சென்றாள் அன்பினி.

வீடு கொஞ்சம் முன்னால் இருக்க வீட்டின் மூன்று பக்கமும் போதியளவிலான நிலம் கொண்ட பெரிய காணி அவர்களது. அதில் ஒரு பக்கமாகப் பெரிய கிணறு இருந்தது. அதனருகிலேயே குளியலறையும், அதற்குமேல் தண்ணீர் டாங்கினையும் கட்டி இருந்தார்கள். அங்கிருந்து மோட்டார் மூலம் வீட்டுக்குத் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. காணி முழுக்கச் சோலைதான்.

மதிலோரமாக ஓங்கி வளர்ந்து நின்றது தோடம்பழ மரம். அதனருகில் சென்றதும், “நான் என்ன உம்மைப் பிடிச்சா தின்னப் போறன், அந்தப் பயம் பயப்பிடுறீர்?” என்றான் கடுப்புடன்.

“இல்ல நான் பயப்பிடேல்லை.”

“அதான் என்னை ப்ளொக் பண்ணி வச்சிருக்கிறீர் போல.”

இப்படிக் கிடைத்த சந்தர்ப்பத்தில் அதைக் கேட்பான் என்று எதிர்பாராதவள் பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“நம்பர் தர விருப்பம் இல்ல. ஒரு ஹாய் போட்டா ப்ளொக். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீர் என்னைப் பற்றி? பொறுக்கி எண்டா?”

“ஐயோ இல்ல!” என்று பதறினாள் அவள்.

“சும்மா நடிக்காதையும். உம்மை எல்லாம் பயந்த பிள்ளை எண்டு இந்த உலகம் நம்புதே! எனக்குத்தானே தெரியும் சத்தமே இல்லாம என்ன வேலை எல்லாம் பாக்கிறீர் எண்டு!” என்றவனின் பேச்சில் அவளுக்குக் கண்ணீரே திரண்டு போயிற்று.

அவனுக்கு அதற்கும் கோபம்தான் வந்தது. “கண்ணீர் வடிச்சீரோ தோடம்பழத்துக்குப் பதிலா உம்மட தலையத்தான் இந்தக் கொக்கத்தடியால சீவுவன்!” என்று அவன் தடியை வேறு இவள் புறமாக நீட்டிவிட, “இல்ல இல்ல. நான் அழேல்ல!” என்று பின்னால் பாய்ந்தாள் அவள்.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மரத்தின் உச்சியில் கிடந்த பழங்களைக் கடகடவென்று கொக்கத் தடியினால் ஆய்ந்து போட்டான் அபயன்.

“இனிக் காணும்.” என்று அவள் சொன்னதும் கொக்கத் தடியைக் கொண்டுபோய்ப் பழையபடி வைத்துவிட்டு வந்தான். இதற்குள் கையோடு கொண்டு வந்திருந்த கிண்ணத்தினுள் பழங்களை நிரப்பியிருந்தாள் அன்பினி.

அவளோடு வீடு நோக்கித் தானும் நடந்தபடி, “எந்த கம்பஸ் எண்டு டடிசைட் பண்ணியாச்சா?” என்று பேச்சுக் கொடுத்தான்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவளுக்கு மீண்டும் திக் என்று இருந்தது. நில அளவைத் திணைக்களத்தினால் கொடுக்கப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்டுக்காக காந்தன் வவுனியாவில் தங்கி வேலை செய்வதால், வவுனியா கம்பஸில் சேர்த்துவிடலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டதைச் சொல்லப் பயந்து, “அது… அண்ணா இன்னும் ஒண்டும் சொல்லேல்ல.” என்றாள் அவனைப் பாராமல்.

“நீர் எங்க எண்டாலும் போம். ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்கட கம்பஸ் பக்கம் வந்தீரோ தெரியும்!” என்றுவிட்டு அவளை முந்திக்கொண்டு நடந்து போனான் அவன்.

இவன் உண்மையாகச் சொல்லுகிறானா இல்லை இதுவும் சீண்டலா என்று தெரியாமல் அப்படியே நின்றுவிட்டாள் அன்பினி.

அந்தக் குழப்பத்தோடே தோடம்பழத் தண்ணீரைக் கரைத்து எல்லோருக்கும் பரிமாறினாள். இன்றைக்கு என்ன குறையைச் சொல்லுவானோ என்று அவள் பயந்துகொண்டிருக்க, “பரவாயில்ல. கொஞ்சம் வாயில வைக்கிற மாதிரித்தான் இருக்கு!” என்றுகொண்டு வந்தவன், அங்கு மீதமாய் இருந்ததையும் எடுத்துத் தன் வாயினுள் கவிழ்த்துவிட்டுப் போனான்.

அவளுக்கு ஏனோ கோபத்திற்குப் பதிலாய்ச் சிரிப்புத்தான் வந்தது.

மாலையாகும் நேரத்தில் இவர்கள் இரு குடும்பத்தினர் மட்டுமே என்கிற அளவில் அந்த நிகழ்வு முடிந்து போயிருக்க, “அன்புவையும் அங்க வவுனியா கம்பஸிலேயே சேர்ப்பம் எண்டு நினைக்கிறன் அபயன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று விசாரித்தான் காந்தன்.

‘கடவுளே!’ தமையனிடமும் ஏதும் சொல்லிவிடுவானோ என்று நெஞ்சு அடித்துக்கொண்டது அன்பினிக்கு. ஆனால், “அப்பிடியே செய்யலாம் அத்தான். அங்க எல்லா வசதியும் இருக்கு. பயமும் இல்ல.” என்று சொன்னவனின் பதிலில் விழிகள் இரண்டும் தெறித்துவிடும் அளவுக்கு அதிர்ந்து பார்த்தாள்.

“எனக்கும் ரெண்டு வருசத்துக்குக் குறையாம அங்க வேல இருக்கும். அதால என்ர குவாட்டர்ஸிலேயே அவாவும் நிக்கலாம். ஏதும் பிரச்சினைகள் வந்தாலும் பாக்கக் கேக்க நீங்களும் இருக்கிறீங்கதானே எண்டு யோசிச்சன்.” பொறுப்புள்ள தமையனாகச் சொன்னான் காந்தன்.

“ஓம் அப்பு. நானும் நீங்க அங்க இருக்கிறீங்க எண்டுற தைரியத்திலதான் அங்கேயே சேர்ப்பம் எண்டு சொன்னனான். இவ்வளவு வளந்தும் சும்மா எல்லாத்துக்கும் பயந்து நடுங்குவா.” என்ற இந்துமதியைக் கண்டு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.

அவள் நடுங்குவதே இந்த அபாயகரமானவனை எண்ணித்தான் என்று அவர்கள் எல்லோரிடமும் யார் சொல்வது? இதில் ஆளுக்கு ஒரு நாடகமாக நடித்துக்கொண்டிருக்கிறான் அவன். இவர்களும் நம்புகிறார்கள். அவனைப் பார்வையால் எரிக்கவும் பயந்து, ஊமையாக நின்றாள் அன்பினி.

“அப்பிடிப் பயப்பிடுறதுக்கு ஒண்டும் இல்ல மாமி. நீங்க யோசிக்காதீங்க.” என்றவன், “அப்லை பண்ணியாச்சா அத்தான்? இல்ல இனித்தானா?” என்றான் காந்தனிடம்

“இன்னும் இல்ல. உங்களோடயும் கதைச்சுப்போட்டுச் செய்வம் எண்டு நினைச்சன். எப்பிடிச் செய்யோணும், என்ன ஏது எண்டு ஒருக்கா விசாரிச்சுச் சொல்லுறீங்களா?”

“அதெல்லாம் சின்ன விசயம் அத்தான். ஆனா உங்கட குவாட்டர்ஸ் டவுனுக்க எல்லா இருக்கு. அங்க இருந்து கம்பஸ் ஒவ்வொரு நாளும் வந்து போறது ஈஸி இல்ல. அதால ஹொஸ்ட்டல் ரூமும் சேத்தே எடுப்பம். பிறகு வசதிப்படி எங்க எண்டாலும் நிக்கலாம்.” என்று அவன் சொன்னது சரியாகவே இருக்க அவர்களும் சம்மதித்தார்கள்.

“அன்பினி, எதுக்கும் நீர் உம்மட நம்பர் தாரும். நான் அங்க இந்தக் கிழமையே விசாரிச்சுப்போட்டு என்ன செய்யோணும் எண்டு மெசேஜ் பண்ணி விடுறன்.” என்றவன் கைப்பேசியை பொக்கெட்டிலிருந்து எடுத்தபடி அவள் முகம் பார்த்தான்.

அசந்துதான் போனாள் அன்பினி. எவ்வளவு அழகாக நடிக்கிறான்! அவளால் அசையக்கூட முடியவில்லை.

அவள் நிலையை உணராத இந்துமதி, “சொல்லுங்கோவன் பிள்ளை.” என்றார் தானும்.

வேறு வழி? அன்று பிழையாகச் சொன்னதற்குப் பழி வாங்குகிறானே என்று உள்ளம் குமுற இலக்கத்தைச் சொன்னாள்.

உடனேயே அவளுக்கு அழைத்துவிட்டு, “லைன் போகேல்லையே. நம்பர் ஏதும் பிழையா?” என்றான் ஒன்றுமே தெரியாதவனாக.

எல்லோரும் இருக்கையில் அவனைப் பார்வையால் கூட எரிக்க முடியவில்லை. “இல்ல பொறுங்க, பாக்கிறன்.” என்றுவிட்டு, அன்றைய விசேசம் காரணமாகக் கவனமாக எடுத்து வைத்திருந்த கைப்பேசியை எடுத்து, முதல் வேலையாக அவனைத் தடை செய்திருந்ததை அகற்றினாள்.

“இப்ப ரிங் பண்ணுங்க.” அவளும் அவன் நாடகத்தில் பங்கேற்றுக்கொண்டாள்.

ஒருகணம் அவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் அவளிடம் சிரித்தன. அவளுக்கு வந்த ஆத்திரத்துக்குக் கற்பூரத்தைக் கொளுத்தி அவன் வாய்க்குள் போட்டுவிடலாமா என்று இருந்தது.

அபயனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. உள்ளம் வேறு உள்ளே குத்தாட்டம் போட, நல்ல பிள்ளையாக இருந்துகொண்டான்.

அன்று இரவே அவளுக்கு அழைத்தான். இன்னும் என்ன நாடகமெல்லாம் ஆடுவானோ என்கிற பயத்தில் அவளும் அழைப்பை ஏற்றாள்.

“பொய் நம்பர் தாற ஆக்கள் கூடிப் போச்சு. அதான் நம்பர் சரியா எண்டு செக் பண்ண எடுத்தனான்.” என்றான் அவன்.

அடுத்த நாளும் அழைத்தான். “எப்பவும் நீர் அலேர்ட்டா இருக்கிறீரா எண்டு பாக்க எடுத்தனான்.” என்றான்.

இப்படி நாளுக்கு ஒரு வசனம். நொந்தே போனாள் அன்பினி.

அவளைப் போட்டுப் பாடாய்ப் படுத்துகிறோம் என்று அபயனுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், அவன் மனம் அவள்பால் சாய்ந்துவிட்டதை இத்தனை நாள்களில் தெளிவாகவே உணர்ந்துகொண்டிருந்தான். அதே நேரம், இனித்தான் பல்கலையில் காலெடுத்து வைக்கப் போகிறவளிடம் காதல் என்று சென்று நிற்கவும் மனம் வரமாட்டேன் என்றது. அதனாலேயே ஏதோ ஒரு வகையில் அவளோடு தொடர்பிலிருந்து தன்னை மறைமுகமாக உணர்த்தவும் ஆசைப்பட்டான்.

*****

அடுத்தநாள் அவளுக்கு இருபதாவது பிறந்தநாள். அவன் இங்கே வவுனியாவில் இருந்தான். நேரில் சென்று வாழ்த்தத்தான் ஆசை. அதற்கு முடியாமல் போனதில் அன்று இரவு சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அவளுக்கு அழைத்தான். தன் தோழியர் யாராவது இந்த வேலை பார்ப்பார்கள் என்று தெரிந்து விழித்தே இருந்தவள் முதலாவதாக வந்த அவன் அழைப்பைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நெஞ்சு டமாரம் அடித்தது. இப்படி விழித்திருந்து, முதல் அழைப்பாக அழைக்கும் அளவுக்கு அவர்களுக்குள் அப்படி என்ன என்று யோசிக்கவே நெஞ்சு உலர்ந்து போயிற்று. எடுப்பதா வேண்டாமா? அந்தப் பிறந்தநாளை அவளுக்குப் பெரும் பதற்றத்தோடு ஆரம்பித்து வைத்தான் அவன்.

அழைப்பு நின்று மீண்டும் வந்தது. அதற்குமேல் முடியாமல் மெல்ல அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“அன்பா!”

அந்த அழைப்பிலேயே அவள் உள்ளம் அதிர்ந்தது. ஒரு கணம் தடுமாறினாலும், “ம்!” என்றாள் தன்னையறியாது.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

“தே…ங்க்ஸ்!”

வேறு என்ன கதைப்பது? அபயனுக்குள் புதிதாய் ஒரு தடுமாற்றம். “நித்திரை கொள்ளேல்லையா?” சில நொடிகளை அமைதியில் கழித்துவிட்டுக் கேட்டான்.

“இல்ல.”

“ஏன்?”

“தெரியா.”

“நான் இப்ப எடுப்பன் எண்டு நினைச்சீரா?”

அவனெல்லாம் அவளோடு இவ்வளவு தன்மையாகக் கதைப்பான் என்றே எதிர்பாராதவள் இந்த அழைப்பையா எதிர்பார்க்கப் போகிறாள்? பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.

“அன்பா?” எல்லோரும் அன்பு என்று அழைக்க, அவன் மட்டும் புதிதாய் அன்பா என்கிறான். அதுவும் இன்றுதான் முதன் முறையாகப் பெயர் சொல்கிறான். அவளை அது என்னவோ செய்தது. அதைவிட எப்போதும் விளையாட்டாய்ச் சீண்டுகிறவனின் குரல் இன்று ஏதோ ஒன்றை உணர்த்த முயன்றதில் பயந்து, “நான் வைக்கவா?” என்றாள்.

அவன் மனநிலை மெலிதாய் மாறிற்று. “ஏன், என்னோட எல்லாம் கொஞ்ச நேரம் கதைக்க மாட்டீரா?” என்றான் குரலிலும் அது தெரிய.

“நித்திரை வருது.”

“இவ்வளவு நேரம் வராத நித்திரை இப்ப வருதா? பரவாயில்ல, கொஞ்ச நேரம் என்னோட கதைச்சுக்கொண்டு இருந்திட்டுப் படும்.”

அப்படி என்ன கதைக்க? அதைவிட இந்த நேரத்தில் இப்படியான ஒரு உரையாடல் வேண்டவே வேண்டாம் என்று மனம் எடுத்துரைக்க, “இல்ல, நான் வைக்கிறன்.” என்றவள் அழைப்பைத் துண்டித்தும் இருந்தாள்.

அவனுக்கு ஒரு விதமாக முகம் கன்றிப் போயிற்று. திரும்ப திரும்ப அவள் தன்னை அவமானப்படுத்துவது போலவே உணர்ந்தான். வேகமாகப் புலனத்தை திறந்து, “ஒரு அஞ்சு நிமிசம் கதைக்க மாட்டீர் என்ன? அப்பிடி என்ன செய்துபோடுவன் எண்டு இப்பிடி ஒவ்வொரு முறையும் கேவலப்படுத்துறீர்? எங்கட கம்பசுக்குத்தானே வரப்போறீர். வாரும், அங்க வச்சுக் கதைக்க வைக்கிறன்!” என்று சீறும் குரலில் ‘வொயிஸ் மெசேஜ்’ ஒன்றை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 4


இன்னும் ஒரு வாரத்தில் பல்கலை தொடங்குகிறது எனுமளவுக்கு நாள்கள் நெருங்கியிருந்தன. ஆனால், பல்கலைக்குப் போகப்போகிறோம் என்கிற சந்தோசமே இல்லாமல், பேயடித்தவள் போன்று நடமாடிக்கொண்டிருந்தாள் அன்பினி. பல்கலை நடைமுறைகளைச் செய்வது, விடுதியறைக்கான ஏற்பாடு என்று அவர்களுக்கு வவுனியாவில் இருந்த அத்தனை வேலைகளையும் சுலபமாக்கித் தந்தவன் அவன்தான். வீண் அலைச்சல்கள் தவிர்க்கப்பட்டதும் அவனால்தான். காந்தனுக்கு அதற்குப் பிறகு அபயன் மீது இன்னுமே பிரத்தியேகமான அன்பு உருவாகியிருந்தது. அந்தளவில் உதவியிருந்தான்.

அன்பினிக்கு மட்டும் அவன்பால் நன்றியுணர்வு உண்டாகவே இல்லை. பல்கலைக்குச் செல்வதைக் குறித்து யோசிக்கிற ஒவ்வொரு முறையும் பலிபீடத்துக்கு கொண்டு செல்லும் ஆட்டின் தோற்றமே அவளுக்கு அவளைக் குறித்து வந்து போயிற்று.

ஒரு வழியாகப் பெட்டி படுக்கைகளோடு வவுனியா வந்து, அவளுக்கான விடுதியறையில் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, பரபரப்பும் படபடப்புமாக முதல் நாளினை ஆரம்பித்த அன்பினி, பயந்தது போன்று அன்று முழுக்க அவனைக் காணவே இல்லை.

அவனுடைய பீடம் வேறு, அவளுடையது வேறு. சாதாரணமாக அவர்கள் சந்தித்துக்கொள்ள மாட்டார்கள்தான் என்றாலும் அவன்தான் பயம் காட்டி இருந்தானே. ஒரு நாள் இரண்டு நாள்களாகி, இரண்டு நாள்கள் இரண்டு வாரமாகியும் அவனைக் காணவே இல்லை. சும்மா மிரட்டினானோ என்று அவன் மீதான பயம் அகன்று, இயல்பாய்ப் பல்கலையில் பொருந்தி நடமாட ஆரம்பித்த நாள் ஒன்றில் நண்பர்களோடு எதிர்ப்பட்டான் அபயன்.

ஒரு மரத்தின் கீழ் இன்னும் இரண்டு நண்பர்களோடு நின்றிருந்தான். தூரத்தில் கண்டதும் அவளுக்குத் திக் என்றுதான் இருந்தது. “நிம்மி, என்ர பக்கம் திரும்பியும் பாக்காம நேரா மட்டும் பாத்து நட!” பல்கலையில் அவளுக்குக் கிடைத்த தோழி நிர்மலாவிடம் எச்சரித்தபடி நடையின் வேகத்தைக் கூட்டினாள்.

அவளுக்காகவே அங்கு வந்து காத்திருந்தவன் அப்படித் தப்பிக்க விடுவானா? “ஓய்!” என்றான் சத்தமாக. அவள் நடை படக்கென்று நின்று போயிற்று. இனி விடமாட்டான் என்று தெரிய, மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.

“சீனியர்ஸ் இங்க நிக்கிறம். கண்ணுக்குத் தெரியேல்லையா?”

இவள் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க, “சொறி சீனியர்.” என்று உடனேயே சொன்னாள் நிர்மலா.

அபயன் அன்பினியைப் பார்த்தான். அவள் எதுவும் சொல்வதாக இல்லை என்றதும், “ரெண்டு பேரும் இங்க வாங்க!” என்றான்.

கிடுகிடு என்று அவர்கள் முன்னால் வந்து நின்றனர்.

“என்ன பார்வை? வணக்கம் எல்லாம் சொல்ல மாட்டீங்களா?” என்று அதட்டினான்.

அவர்களின் கலைப்பிரிவுக்கு வந்து ராக் செய்யும் உரிமையை இவனுக்கு யார் கொடுத்ததாம் என்று மனம் புழுங்கினாலும், “குட் மோர்னிங் சீனியர்!” என்று கோரஸ் பாடினர்.

“அப்பிடியே நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடிவாவையும் பாடி விடலாமே.” என்ற அவனின் நக்கல் குரலில் இருவர் முகம் சிவந்து போயிற்று.

“எத்தின வயசு?” என்றான் அன்பினியைப் பார்த்து.

இவனுக்குத் தெரியாதா? திரும்பப் பழி வாங்கப் போகிறான் என்று விளங்கிவிட, “இருவது” என்றாள்.

“கலியாணம் முடிஞ்சுதா?” என்றதும் அதிர்ந்து விழித்தாள். என்ன கேள்வி இது? கண்ணீர் கூட வந்துவிடும் போலாயிற்று.

நிர்மலாவுக்குத் தோழியைப் பார்க்கப் பாவமாய் இருந்தாலும் வாயைத் திறக்கப் பயந்தாள்.

“உச்சில பொட்டு இல்ல. கழுத்தில தாலி இல்ல. கால்ல மெட்டி இல்ல. அதால நடக்கேல்லத்தான் போல மச்சான்.” என்றான் அவனோடு நின்றவர்களில் ஒருவன்.

“ஆரையாவது விரும்புறீரா?”

“இல்ல.”

“ஆராவது உம்மை விரும்பினமா?”

பார்வை தழைய, அவள் தலை இல்லை என்று ஆடியது.

அவனுக்குள் சுறுசுறு என்று என்னவோ பொங்கிக்கொண்டு வந்தது. “இல்லையா?” என்றான் மீண்டும்.

மீண்டும் இல்லை என்று தலையை அசைத்தாள்.

“நாங்க என்ன நிலத்தில படுத்தா கிடக்கிறம்? நிமிந்து நேராப் பாரும்!” அவன் அதட்டலில் வேகமாக நிமிர்ந்தாள் அவள்.

“இதுவரைக்கும் உம்மை விரும்புறதா ஆரும் சொல்லவே இல்லையா?” என்றான் அவள் விழிகளையே கூர்ந்தபடி.

அவளுக்குள் மெல்லிய தடுமாற்றம். ஆனாலும் அவள் தலை மீண்டும் இல்லை என்றுதான் ஆடிற்று.

“மறைமுகமாக் கூட உணர்த்தவே இல்லையா?”

எந்த நிலையில் அவளை நிறுத்தி என்னவெல்லாம் கேட்கிறான். கலங்கப் பார்த்த விழிகளைத் தடுத்துப் பிடித்தபடி, “இல்ல.” என்று முணுமுணுத்தாள்.

“ஓ!” என்று இழுத்தான் அவன். உள்ளுக்குள் எரிமலையின் குளம்புகள் கொதிக்க ஆரம்பித்தன. “சரி சொல்லும், உம்மட மனதில ஆராவது இருக்கினமா?”

மறுப்பாய்த் தலையை அசைத்தாள் அவள்.

ஒருவித ஏமாற்றமும் கோபமும் படர, “கண்டீனுக்கு போய் ஒரு தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வாரும்!” என்று அனுப்பிவிட்டான். அவனுக்குத் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது.

மறைமுகமாக நான் உன் மனத்தில் இருக்கிறேனா என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லி இருக்கிறாள். கேசத்தைக் கோதியபடி காலுக்கு அகப்பட்ட கல்லைக் காலாலேயே விசிறி அடித்தான். அவளுக்குத் தன்னைத் தெரியவில்லையா, இல்லை நடிக்கிறாளா என்கிற கேள்வி அவனைப் போட்டு ஆட்டியது.

சற்று நேரத்தில் பேப்பர் கப்பில் தேநீர் கொண்டு வந்த அன்பினி அவனிடம் நீட்டினாள். இப்போது அதை வாங்கி அருந்தப் பிடிக்கவில்லை. “நீரே குடியும்! ஆனா நாளைல இருந்து கம்பசுக்கு வரேக்க நீரே தேத்தண்ணி ஊத்தி, எடுத்துக்கொண்டு வாறீர்.” என்றான் உத்தரவு போன்று.

“ஆனா இங்க கொண்டு வாறதுக்கிடைல ஆறிடுமே.” என்றாள் அவள் நல்ல பிள்ளையாக.

“அந்தளவுக்கு உலகம் தெரியாத அப்பாவி நீர்! ஒரு பிளாஸ்க் வாங்கி, அதுல ஊத்திக்கொண்டு வாரும். ஓகே! ஒவ்வொரு நாளும் கொண்டு வரோணும். மறந்தீரோ தெரியும் பிறகு!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

இதோடு விட்டுவிடப்போகிறானாக்கும் என்று தலையை வேக வேகமாக ஆட்டினாள் அவள். அவனும் விடும் எண்ணத்தில்தான் இருந்தான். அவள் தலையை ஆட்டிய வேகம் விடாதே என்று சொல்லிவிட, “சரி, கலைப்பிரிவு படிக்க வந்திருக்கிறீர். அதுக்கு முதல் ஆனா ஆவன்னா சொல்லும் பாப்பம்.” என்றதும் தன்னை மீறி அவனை முறைத்தாள்.

“என்ன முறைப்பு? சொல்லும்!”

“ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா…” என்று அவள் பல்லைக் கடித்தபடி சொல்லிக்கொண்டு போக, “நிப்பாட்டும் நிப்பாட்டும்! என்ன இது உப்புப் புளி இல்லாத சாப்பாடு மாதிரி சும்மா சொல்லிக்கொண்டு போறீர். ஆஆஆ….வன்னா எண்டு சொல்லோணும். எங்க சொல்லும் பாப்பம்?” என்றதும் அவளுக்கு மூச்சே நின்று போயிற்று. அந்தளவில் அவன் சொன்ன விதம், இரவு நேரத்தில் துணையைத் தேடும் இணையின் குரலாய் ஒரு மார்க்கமாய் இருக்க, அவளுக்கு அவ்வளவு நேரமாகத் தடுத்துப் பிடித்திருந்த கண்ணீர் வந்தேவிட்டிருந்தது.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அவன் விடவில்லை. “என்ன அழுகை? அழவா இங்க வந்தனீர். திரும்ப திரும்பச் சொல்லித் தரமாட்டன். இதுதான் கடைசித் தரம். எங்க சொல்லும் ஆஆஆஆ… வன்னா.” என்று அவன் இழுத்த இழுவையில் நிர்மலாவுக்கே சிரிப்பு வந்துவிடும் போலிருக்க அவன் நண்பர்கள்?

தரையில் உருண்டு பிரண்டு சிரிக்காத குறையாகச் சிரித்தனர். அதற்குமேல் அவனின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாமல், நீ என்ன வேண்டுமானாலும் செய் என்பதுபோல் விறுவிறு என்று அங்கிருந்து நடந்திருந்தாள் அன்பினி.

உள்ளம் மட்டும் குமுறித் தீர்த்தது. சொந்தம் என்று இவன் இருக்கிறான் என்று நம்பி வீட்டில் அனுப்பி வைக்க என்னவெல்லாம் செய்கிறான்? அன்றைய முதல் வகுப்பைக் கூட அவளால் கவனிக்க இயலாமல் போயிற்று. அவ்வளவு சினமும் சீற்றமும். இரண்டாம் வகுப்பும் முடிந்த வேளையில், ஒரு மாதிரியான குரலில், “ஆஆஆ…வன்னா!” என்றாள் நிர்மலா இவள் காதுக்குள் வந்து.

“சேய்க்!” என்றவள் அவனில் இருந்த ஆத்திரத்தையும் சேர்த்து இவளில் இறக்கி இருந்தாள்.

அவனைக் கொல்லும் அளவுக்குக் கோபம் இருந்தாலும் அடுத்தநாள் அவன் சொன்னது போன்று பிளாஸ்க் ஒன்றை வாங்கி, தேநீர் கொண்டுவர அவள் மறக்கவில்லை. அவனும் வந்து காத்திருந்தான்.

அவள் பிளாஸ்க்கை நீட்ட, “ஏன், அதைத் திறந்து ஊத்தித் தர மாட்டீரோ?” என்று கேட்டான் அவன்.

பல்லைக் கடித்தபடி ஊற்றிக் கொடுத்தாள். அவன் பருகி முடிக்கும் வரையில் அவள் நிற்க வேண்டும். அந்த நேரத்தில் மிரட்டி உருட்டி அவள் வாயைப் பிடுங்குவான். மறுபடியும் ஆவன்னா சொல்லச் சொல்லி அவன் சொல்லாததிலேயே அவளுக்குப் பெருத்த நிம்மதி.

இரண்டு வாரங்கள் இப்படியே கடந்து போயிற்று. இந்த ஒன்றிரண்டு நாள்களாக நிர்மலாவின் பார்வையில் ஏதோ இருப்பதாக அவன் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருந்தது. அன்றும் அதை உணர்ந்தவன் தேநீரைப் பருகியபடி, “என்ன?” என்றான் நிர்மலாவிடம்.

இப்படித் தன்னிடம் நேரடியாகக் கேட்பான் என்று எதிர்பாராத நிர்மலா, “இல்ல ஒண்டும் இல்ல.” என்றாள் வேகமாக.

“இல்லையே. ஏதோ இருக்கே!” என்றபடி அன்பினியைப் பார்க்க அவளிடத்தில் கலவரம். நிர்மலாவிடம் எதையோ எச்சரிக்க முயல்வது தெரிய அவன் சந்தேகம் உறுதியாயிற்று.

“என்னவோ இருக்கு. இப்ப நீர் சொல்லோணும். இல்லையோ போட்டிருக்கிற ஷேர்ட்ட கழட்டித் தருவன். இதுல நிண்டு தோச்சு, காயப்போட்டு, அயர்ன் பண்ணித் தந்திட்டுத்தான் போவீர்.” என்றதும், “ஐயோ இல்ல சீனியர். நீங்க முதல் நாள் சொன்னதில இருந்து இந்த பிளாஷ்க்க அவள் கழுவவே இல்லயாம். உங்களுக்குத் தொண்டைல இல்ல வயித்துக்க இன்பெக்க்ஷனாகி நீங்க சாகோணும் எண்டு சொன்னவள்.” என்றதும் அவனுக்குப் புரையேறிப் போயிற்று. தன் உச்சியில் தானே தட்டியபடி வாயில் இருந்த தேநீரைத் துப்பினான். அப்போதும் அருவருப்புப் போகமாட்டேன் என்றது. கையில் இருந்த பிளாஸ்க்கின் மூடியோடு சேர்த்துத் தேநீரை விசிறி அடித்தவனுக்கு அவளைக் கொல்லும் வெறி.

ஒரு வழியாக இருமி, தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “டேய் எல்லாரும் போங்கடா!” என்றான் பார்வையை அவள் மீதே நிலைக்க விட்டு.

“மச்சான்?”

“போங்கடா!”

அவன் நண்பர்கள் நகர்ந்துவிட, “நீரும் போம்!” என்றான் நிர்மலாவிடம்.

“சீனியர்…” தன்னால் பிரச்சனையாகிப் போனதோ என்கிற பயத்தில் அவள் இழுக்க, திரும்பி அவன் பார்த்த பார்வையே ஓட வைத்தது.

இப்போது அவர்கள் இருவர் மட்டும்தான் நின்றிருந்தனர். உள்ளே நடுங்கினாலும் அவள் அசையவில்லை.

“என்னைக் கொண்டுபோட்டு நீர் என்ன செய்வீர்?” என்றான் அவன் நிதானமாக.

நடந்த விடயத்தைக் காட்டிலும் அவன் கேள்விதான் அவளை உலுக்கியது. அதிர்வுடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“சொல்லும். நான் இல்லாம நீர் என்ன செய்யப் போறீர்?”

“என்ன கதைக்கிறீங்க?” தடுமாறி வினவியவள் அங்கிருந்து ஓடிவிடத் துடித்தாள்.

“என்ன கதைக்கிறன்? என்னைக் கொல்ல பிளான் போட்ட ஆள்தானே நீர்!”

“இல்ல, அது கோவத்துல செய்தது.”

“அதுக்கு இப்பிடித்தான் செய்வீரா?”

“நீங்க மட்டும் ஆவன்னாவ அப்பிடிச் சொல்லச் சொல்லலாமா?”

ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன். அவள் பார்வையை அகற்றிக்கொண்டாள். “ஓகே! உமக்கு என்னைக் கொல்லோணும். அவ்வளவுதானே? நாளைக்கும் தேத்தண்ணி கொண்டு வாறீர்!” என்றுவிட்டுப் போனான் அவன்.

அங்கே அவன் வகுப்பில் இவன் வருவதற்காகவே காத்திருந்தவர்கள், “என்ன மச்சான், கடைசில அவா உன்ன ராக் பண்ணிட்டா போல இருக்கு!” என்றதும் அவன் உதட்டிலும் சிரிப்பு.

இத்தனை நாள்களும் கழுவாமல் ஊற்றிக்கொண்டு வர அவளுக்கு மனம் வந்திருக்கிறதே. இதில் அவள் கைத் தேநீர் என்று இவன் ரசித்து ருசித்துப் பருகி இருக்கிறான். இப்போது நினைக்கையிலும் வயிற்றைப் பிரட்டும் உணர்வு. இருந்த அத்தனை கோபத்தையும் வைத்துத் தீர்க்க முயன்று இருக்கிறாள் என்று விளங்கிற்று. நண்பர்கள் என்ன ஓட்டியும் அது அவன் செவிகளைத் தாண்டி உள்ளே செல்லவே இல்லை.

அடுத்த நாளும் அவன் சொன்னது போன்று கொண்டு வந்தாள். இந்த முறை அவன் மட்டுமே நின்றான். ஒன்றுமே கதைக்காமல் மூடியில் தேநீரை வார்த்து அவனிடம் நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம். நீரே குடியும்!” என்று சொல்லிவிட்டு நிர்மலாவை நேற்றுப் போலவே அனுப்பி வைத்தான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் தேநீரைப் பருகினாள். இரண்டு மூன்று மிடறு பருகும் வரையில் பார்த்திருந்தவன் அவள் கையில் இருந்ததை வாங்கித் தான் பருகினான்.

அதிர்ந்து நின்றவள் விழிகள் மளுக்கென்று குளமாகிற்று.

ஆனாலும் அவளையே பார்த்தபடி நிதானமாய்ப் பருகி முடித்துவிட்டு, “என்ன, பிடிக்கேல்லையா?” என்றான் அபயன்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. இத்தனை நாள்களாகச் சொல்லியும் சொல்லாமலும் வைத்திருந்த ஒன்றை அப்பட்டமாக அவளிடம் சொல்லியிருந்தான். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, ஒன்றுமே கதைக்காமல் அங்கிருந்து ஓடிப்போனாள்.

அபயனுக்கும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால், எத்தனை நாள்களுக்குத்தான் அவள் மீதான நேசத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு இப்படிச் சும்மா சும்மா சீண்டிக்கொண்டு இருப்பது? அவள் அவனுக்கானவளாக வரும் வரையில் அவனால் இதை நிறுத்தவும் முடியாது. ஆக, எல்லாம் நல்லதற்குத்தான் என்று எண்ணிக்கொண்டு தன் வகுப்பை நோக்கி நடந்தான்.

தொடரும்...
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 5


அன்பினியின் மன அமைதி கெட்டுப்போயிற்று. இத்தனை நாள்களும் நீ உணர்த்த முயல்வது எனக்கு விளங்கவே இல்லை என்பது போன்றுதான் பாவனை காட்டிக்கொண்டிருந்தாள். அப்படி இருக்கையில் முதல் நாள் ‘நான் இல்லாமல் என்ன செய்வீர்’ என்று அவன் கேட்டதே அவளை ஒரு உலுக்கு உலுக்கி இருந்தது.

அப்போதும் தன்னைச் சமாளித்துக்கொண்டு, அவன் பகிடிவதை செய்கிறான் என்கிற அளவிலேயே அதை நிறுத்த முயன்று, அடுத்த நாளும் வெகு சாதாரணமாகத் தேநீரைக் கொண்டுவந்து நீட்டினாள். அப்படியிருக்க அவள் பருகியதை வாங்கி அவன் பருகியது அவளை ஒரு ஆட்டு ஆட்டியிருந்தது.

இனி என்ன செய்வது? அவளுக்குத் தெரியவே இல்லை. மூளை எல்லாம் குழம்பிப் போயிற்று. அன்றைக்கு என்று பார்த்து அவளை அழைத்துப்போக வந்திருந்தான் காந்தன்.

அவனோடு குவார்ட்டஸுக்கு வந்து, உடை மாற்றி, அவன் செய்து தந்த உணவை உண்டு, வீட்டினரோடு கொஞ்ச நேரம் கதைத்து என்று என்ன செய்தும் அவளிடம் ஒரு தெளிவு பிறக்கவேயில்லை. இனி அபயனை எப்படிக் கையாள்வது என்கிற யோசனையிலேயே இருந்தாள்.

ஆரம்பத்தில் அவளைக் கவனிக்காதபோதிலும் சற்று நேரத்திலேயே கண்டுகொண்டான் காந்தன். “என்ன அன்பு, ஏன் வந்ததில இருந்து ஒரு மாதிரியே இருக்கிறாய்?” என்று விசாரித்தான்.

ஒரு நொடி அதிர்ந்தாலும், “ஒரு பிரச்சினையும் இல்லை அண்ணா. களைப்பா இருக்கு. அதான்.” என்று அவசரமாகச் சமாளித்தாள். அவன் திரும்பக் கேட்டும் ஒன்றும் இல்லை சொல்ல, ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தான் தமையன். இருந்த பதற்றத்தையும் தாண்டிச் சிரிப்பு வந்துவிட, “அண்ணா!” என்று சிரித்தாள் அன்பினி.

அதன் பிறகுதான் அவன் கவலையும் அகன்றது. கூடவே, “என்ன எண்டாலும் சொல்லோணும் அன்பு. அண்ணா இருக்கிறன் உனக்கு. எதுக்கும் பயப்பிடாத.” என்று தைரியம் கொடுத்தான்.

அதுவே அவனிடம் சொல்லிவிடலாமா என்று அவளை யோசிக்க வைத்தது.

இதுவரையில் அவளே சமாளித்தது வேறு. நேரடியாக அவன் உணர்த்திய பிறகு வீட்டினரிடம் சொல்லாமல் இருப்பது சரியா என்று அவளுக்குத் தெரியவேயில்லை. இனி அவன் என்ன செய்வான் என்றும் தெரியவில்லை. அவள் சொல்ல, அது அண்ணா அண்ணி வாழ்க்கையில் பிரச்சனையாக வந்துவிடுமோ என்று என்னவெல்லாமோ ஓடின.

தமையனிடம் சொன்ன களைப்பை மெய்யாக்குகிறவளாக, “அண்ணா, கொஞ்ச நேரம் படுத்து எழும்பட்டா?” என்றபடி அவனிடம் வந்து நின்றாள். லாப்டாப்பில் வேலையாக இருந்தவன் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தான். “இன்னும் சின்ன பிள்ளை மாதிரியே இருக்கிறாய் அன்பு. போய்ப் படு. பின்னேரம் போலக் கடைக்குப் போயிட்டு, அங்கேயே சாப்பிட்டு வருவம்.” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

காந்தன் அவளுக்கென்று ஒதுக்கிக்கொடுத்திருந்த அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தவளுக்கு உடலும் மனமும் களைத்துத்தான் இருந்தன. ஆனாலும் உறக்கம் வரவேயில்லை. என்ன செய்ய, என்ன செய்ய என்று அதையே யோசித்தாள். ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் எழுந்து அமர்ந்து, கைப்பேசியை எடுத்து முதன் முறையாக அவனுக்குக் குறுந்தகவலைத் தட்ட ஆரம்பித்தாள்.

“நீங்க என்ர அண்ணின்ர தம்பி. எங்கட சொந்தம். அதாலதான், சும்மா பகிடிக்கு நீங்க வெருட்டினாலும் பெருசா நான் எடுக்கிறேல்ல. எதையாவது செய் எண்டு சொன்னாலும் செய்துபோட்டுப் போறனான். ஆனா இண்டைக்கு நீங்க நடந்த விதம் எனக்குப் பிடிக்கேல்ல. தயவு செய்து இப்பிடி எல்லாம் இனி நடக்காதீங்க. எனக்குப் படிக்கோணும். அவ்வளவுதான். இதையெல்லாம் வீட்டில சொல்லி, ரெண்டு வீட்டுக்கிடையிலையும் எந்தப் பிரச்சினைகளும் வர வேண்டாம் எண்டு நினைச்சுத்தான் இவ்வளவு நாளும் சொல்லேல்ல. ஆனா, இண்டைக்கு மாதிரி இனியும் நீங்க நடந்தா கட்டாயம் அண்ணாட்டச் சொல்லுவன். ப்ளீஸ், என்னைப் படிக்க விடுங்க!” என்று அவனுக்கு அனுப்பிவிட்டு, கைப்பேசியை முற்றிலுமாக அணைத்து வைத்தாள்.

இதைப் பார்த்துவிட்டு இன்னும் என்ன செய்வானோ என்கிற பயம் மெலிதாய் இருந்தாலும் கூட, அவ்வளவு நேரமாக நெஞ்சுக்குள் அடைத்துக்கொண்டிருந்த ஏதோ ஒன்று வெளியேறிய உணர்வு, அதன் பிறகுதான் உண்டாயிற்று. உறக்கமும் வந்து அவளைத் தழுவியது. மாலை எழுந்து காந்தனோடு வெளியே சென்று, தேவை என்றில்லாமல் பிடித்த பொருள்களை வாங்கியதும், இரவுணவை வெளியே முடித்துவிட்டு வந்ததும் கூட அவளை இன்னுமே தெளிய வைத்திருந்தன.

அதன் பிறகுதான் கைப்பேசியை உயிர்ப்பித்தாள். அவனிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. நிச்சயம் பார்த்திருப்பான். கோபமாக இருக்கிறானோ என்று தோன்றியதும் உள்ளே ஒரு நடுக்கம் பரவியது. ஆனாலும் இனி என்ன நடந்தாலும் வீட்டில் சொல்லிவிட வேண்டும் என்கிற முடிவையும் எடுத்திருந்ததில் அவள் அவன் கோபம் குறித்து அதன் பிறகு பெரிதாய் யோசிக்கவில்லை.

இரவு வீட்டினரோடு வீடியோ கோலில் அண்ணனும் தங்கையும் பேசினார்கள். தளிர் இவளை இனங்கண்டு கைகால்களைப் போட்டு அடித்ததில் அன்பினியைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலையில் வேளைக்கே அவளை அழைத்துச் சென்று பல்கலையில் இறக்கிவிட்டான் காந்தன். அவள் உள்ளே சென்றதும் முதல் வேலையாக அபயனுக்கு அழைத்தான்.

நேற்று அவள் அனுப்பியிருந்த குறுந்தகவலைக் கண்டு முதலில் கொதித்துப் போனான் அபயன். அவன் வெறும் அண்ணியின் தம்பியாம், அதனால்தான் அவன் செய்ததை எல்லாம் பொறுத்துப் போனாளாம் என்றெல்லாம் சொன்னது போதாமல் அவளைப் படிக்க விடட்டுமாம், இல்லையானால் வீட்டில் சொல்லுவாளாம். அவனை அதுதான் நன்றாகச் சீண்டி இருந்தது. மிரட்டுகிறாளா என்ன? அவளைப் படிக்க விடாத அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டானாம்? மனம் கோபத்தில் குமுறியது. அந்த நொடியே அவளுக்கு அழைத்து நன்றாக நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போலிருந்தது.

அதுவே நேரம் போகப் போக ஒருவிதமாய்த் தோற்றுவிட்ட உணர்வு வந்து அழுத்தியது. அவள் அவன் மனத்தைக் கவர்ந்தது போன்று அவன் அவளைக் கவரவில்லையா என்ன? அவன் சொல்வதை எல்லாம் அவள் செய்வதால் அவளுக்கும் தன்னைப் பிடிக்கும், என்ன பயப்படுகிறாள் என்றுதானே நினைத்தான். இனி என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை. ஒழுங்கான உறக்கம் இல்லாமலேயே அடுத்த நாளும் விடிந்தது. எப்போதும் போல் அவளைப் போய்ப் பார்ப்பதா, இல்லை கொஞ்ச நாள்களுக்கு விட்டுப் பிடிப்பதா என்று தெரியாத குழப்பத்துடன் அவன் பல்கலைக்குத் தயாராகையில்தான் காந்தன் அழைத்தான்.

அந்த நொடியில் சொல்லிவிட்டாளோ என்று ஒருகணம் பயந்துதான் போனான். எடுப்பதா வேண்டாமா என்று தடுமாறிவிட்டுக் கடைசி நேரத்தில் அழைப்பை ஏற்றான்.

“அபயன், ஒரு அஞ்சு நிமிசம் டைம் இருக்கா?” சம்பிரதாய நலன் விசாரிப்புக்குப் பிறகு வினவினான் காந்தன்.

“ஓம் அத்தான், சொல்லுங்கோ.” உள்ளே இருந்த தடதடப்பை மறைத்து வினவினான்.

“அது… அன்புக்கு கம்பஸ்ல ஏதோ பிரச்சினை போல இருக்கு. எவ்வளவு கேட்டும் என்ன எண்டு சொல்லேல்ல. ஆனா, ஆள் பழைய மாதிரி இல்ல. என்னவோ யோசிச்சுக்கொண்டே இருக்கிறா. ஒருக்கா என்ன எண்டு விசாரிச்சுப் பாக்கிறீங்களா?” என்று நயமாய் அவன் வினவவும் இவனுக்கு முகம் கருத்துப் போயிற்று.

“பெருசா பயப்பிடுற அளவுக்கு ஒண்டும் நடக்காது. எண்டாலும் நான் விசாரிச்சுப் பாக்கிறன் அத்தான்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவள் வீட்டினர் அவனை முழுமையாக நம்புகிறார்கள். அப்படி இருக்க அவன் செய்வது? இதெல்லாம் தெரிய வந்தால் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? தலையைக் கோதிவிட்டவனுக்கு அவளை விட்டு விலகுவதைப் பற்றி இப்போதும் யோசிக்கவே முடியவில்லை.

ஆனால், கொஞ்ச நாள்களுக்கு இதை ஆறப்போட விரும்பியவன் அதன் பிறகு அவளைத் தேடிக்கொண்டு போகவில்லை. நாள்கள் அதன் பாட்டுக்கு நகர்ந்தன. ஆரம்பத்தில் நிம்மதியாக உணர்ந்த அன்பினி, தன் வாழ்வில் ஏதோ ஒன்று குறைவதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தாள். இதற்குள் முதல் செமஸ்டரை வெற்றிகரமாக முடித்திருந்தாள்.

ஒரே பல்கலை, நெருங்கிய உறவுக்காரர்களாக இருந்தும் இடைப்பட்ட நாள்களில் அவள் அவனைப் பார்க்கவே இல்லை. ஆரம்பம் எப்படி அவள் அவனைக் கவனமெடுத்துத் தவிர்த்தாளோ அப்படி அவன் தற்போது அவளைக் கவனமெடுத்துத் தவிர்க்கிறானோ என்கிற சந்தேகம் அவளுக்கு வர ஆரம்பித்திருந்தது.

அடுத்த செமஸ்டரும் ஆரம்பித்து, நாள்கள் நகர்ந்து மாதங்களாகி, தளிருக்கு முதலாவது பிறந்தநாளும் வந்து சேர்ந்தது.

மிக நெருக்கமான உறவுகளை அழைத்து, வீட்டில் வைத்துத் கொண்டாடுவதற்குத்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். இன்றைக்கு அவன் வருவான் என்கிற நினைப்பே அவளுக்குள் மெல்லிய படபடப்பை உண்டாக்கியிருந்தது. அதில், தன்னைக் கொஞ்சம் கவனித்து அலங்கரித்துக்கொண்டாள்.

அவனும் வந்தான். உடற்கட்டை இன்னுமே கொஞ்சம் இறுக்கமாகி, முதலை விடவும் சற்று முதிர்ச்சியடைந்த முகத்துடன், பட்டர் கலர் பிட் ஜீன்சுக்கு டார்க் பிரவுனில் ஷேர்ட் அணிந்து, அதன் கையை முக்கால் வாசி அளவுக்கு மடித்துவிட்டிருந்தான். கருப்பு நிற பெல்ட், அதே கருப்பில் பார் மணிக்கூடு, எப்போதும் அவன் வலது கையை அலங்கரிக்கும் தடிமனான பின்னல் டிசைன் கொண்ட செயின் என்று அட்டகாசமாய் இருந்தான்.

தன்னையும் அவன் பார்ப்பானா என்று கவனித்துப் பார்த்தாள். அவள் புறமே திரும்பவில்லை அவன். அனிச்சம் மலராய் அவள் முகம் வாடிப்போயிற்று. அவனுக்குப் பிடித்த தோடம்பழத் தண்ணீர் கரைத்து, ஐஸ் கட்டிகள் போட்டு எடுத்து வந்து எல்லோருக்கும் பரிமாறினாள். அப்போதும் அவன் நிமிரவேயில்லை. அதைவிட அவள் தந்ததை அவன் பருகவும் இல்லை.

“என்னப்பு குடிக்கேல்லையா?” என்று கேட்ட இந்துமதியிடமும், “இல்லை அம்மா. எனக்குப் பலகாரமே போதும்.” என்று முடித்துக்கொண்டான்.
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom