You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

டாக்டர். பரத் திலகம்! – ஷர்மி (அமெரிக்கா) - இதழ் 3

ரோசி கஜன்

Administrator
Staff member

1543522170888.png



“முத்துச்செல்வி கிடைப்பாளா?”

ஆயிரமாவது முறை என் மூளையில் இக்கேள்வி எழுகிற மறுநொடியே, ‘கிடைத்து விடாமல் போய் விடுவாளோ?’ என, மனம் பல்லாயிரம் முறை விம்மி வெடிக்கிறதே!

ஒரு பாவமும் அறியாத அந்த முகம்! பிஞ்சு முகம்! அவளுக்கு எதுவும் ஆகி இருக்கக் கூடாது! இல்லை...என்ன ஆனாலும், நீ எந்த நிலையில் இருந்தாலும் என்னோடு கூட்டி வந்திடுவேன்! உனக்காக...உன்னை நினைத்துத் தானே என் வாழ்க்கையை இப்படிச் செதுக்கி இருக்கேன்!

எனக்குள் நான் சொல்லி கொண்டாலும்...

“முத்துச் செல்வி கிடைப்பாளா?”

மறுபடியும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்க வைக்குதே நிஜத்தை உணரத் துடிக்கும் அறிவு!

என் மனமெல்லாம் அவளிடம் வியாபித்துக் கிடக்க...

“ஸார் பேக் பாக்தா...”

அந்த முரட்டுக் குரலில் நிகழ்வுக்கு வந்தேன். விமானப் பாதுகாப்பு அதிகாரி, பையை ஸ்கேனிங் மிஷின் சோதனைக்கு அனுப்புமாறு பெங்காலியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

பையை அவர் சுட்டிய இடத்தில் வைத்து விட்டு, நானும் பாதுகாப்புச் சோதனையை முடித்து விட்டு, போர்டிங் கேட் எதுவென்று பார்க்கலாமென அங்கே மிளிர்ந்த LED விமான அட்டவணைப் பலகையைப் பார்த்தேன்.

அதில் கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட்ட ‘நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் டொமெஸ்டிக் ஏர்போர்ட்’ டிற்குக் கீழே, ‘டம் டம் கொல்கத்தா’ என்ற பொடி எழுத்துக்களைப் பார்க்கும் பொழுதே என் முகம் ஒரு முறுவலை ஏந்தி நின்றது!

முன்னர் ‘டம் டம் ஏர்போர்ட்’ என்பது இதன் பெயர்!

‘கல்கத்தாவில் உள்ள டம் டம் விமான நிலையத்துக்கு, டம் டம் டமாரம்ன்னு நினைவு வைச்சுகோங்க, மறக்கவே மறக்காதுன்னு’ விஜி டீச்சர் சொல்லிக் கொடுத்த பாடம் தான் நினைவுக்கு வந்தது! விஜி டீச்சர் அம்மாவோட ஃப்ரண்ட்.

அம்மா, தலைமை ஆசிரியராய் இருந்ததில் இது ஒரு வசதி. வருஷா வருஷம் திட்டம் போட்டு எனக்கேத்த வாத்தியார்கிட்ட தள்ளி விட்டுடுவாங்க.

“போன வருஷம் பொன்னுச்சாமி ஸார்கிட்ட ஒழுங்கா வீட்டுப்பாடம் எழுதாம டிமிக்கி கொடுத்தேல? அதான், இந்த வருஷம் விஜி க்ளாஸ்ல போட்டு இருக்கேன்! வீட்டுப்பாடம் மட்டும் எழுதாமப் போய்ப் பாரு!”

அம்மா இதைச் சொன்னப்போ நான் நம்பலை! சும்மா பூச்சாண்டி காண்பிக்கிறாங்க... நம்ம வீட்டுக்கு வர்றப்போலாம் விஜி டீச்சர் எவ்வளோ பாசமாப் பேசுவாங்கன்னு நினைத்தேன்!

அப்படித் தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுசும் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துட்டு.. வீட்டுப்பாடம் எழுதவே மறந்து போனேன்.

வீட்டுப்பாட நோட்டை, காலையில் வந்ததும் டேபிளில் அடுக்கி வைக்கணும். ஒன்னும் எழுதாம நான் எப்படி வைப்பேன்?

டீச்சர்கிட்ட, கையை கட்டி நின்னுகிட்டு மிகப் பாவமா முகத்தை வைச்சிட்டு, “நோட்டை வீட்டில் வைச்சிட்டேன் டீச்சர்” ன்னு பொய் சொன்னதும்,

அவங்க ஒரு நொடி என் முகத்தைப் பார்த்துட்டு, அடுத்து, பொம்பளை பிள்ளைங்க வரிசையில் முதல் ஆளா, கருப்பா, ஒல்லியா, குட்டையா, சிவப்பு ரிப்பன்ல கட்டின எலி வால் சைஸ் இரட்டைச் சடையோட இருந்தவளைப் பார்த்து,

“முத்துச்செல்வி, அவன் பையைப் பாரு!” கட்டளையிட்டுவிட்டார்.

இப்படி ஒரு குண்டைத் தலையில் தூக்கிப் போடுவாங்கன்னு நினைக்கவே இல்லை நான்! மிரண்டு போய்... முத்துச்செல்வியைப் பார்த்தேன்!

“சரிங்க டீச்சர்”

மண்டையை மண்டையை ஆட்டினாளே பார்க்கணும்... தலையே உருண்டு விழுந்திடும் போல இருந்தது!

முத்துச்செல்வி கூடச் சேர்ந்து, அதாவது, ஒரே செக்ஷன்ல படிக்கிற சந்தர்ப்பம் இதுவரை அமையலை. ஆனால், பார்த்திருக்கிறேன். அதுவும் மதிய வேளையில், பள்ளிக்கூடத்தின் வெளியே, தட்டு மிட்டாய் வாங்குவதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன்!

இப்பொழுது டீச்சர் சொன்னதும் அத்தனை வேகமா ஓடி வந்து என் பையை உருட்டினாள். நல்ல காலமா யாரோ டீச்சரைப் பார்க்க வர, அவங்க அதைக் கவனிக்கப் போனப்போ... நான் நைசா... “டீச்சர்கிட்ட இல்லைன்னு சொல்லிடேன் ப்ளீஸ்”, அவகிட்ட குனிஞ்சு இரகசியமாக் கெஞ்சினேன்.

நிமிர்ந்து என்னைப் பார்த்தவள், முடியாதுன்னு தலையை உலுக்கினாள்.

“உனக்குத் தட்டு மிட்டாய் கூட வாங்கித் தர்றேன்”



அடுத்த பேரத்திற்கு இறங்கினேன். அதற்குள் டீச்சர் உள்ளே வந்து விட்டார். அவள் எதற்கும் மசியாமல், என் நோட்டை எடுத்துக் கொண்டு அவரிடம் ஓட, ‘சரி போ! இன்னைக்கு ஆப்பு உறுதி’ன்னு நான் நினைத்த பொழுது,

“நீங்க அங்குட்டு போனதும் என்னை நோட் இல்லைன்னு பொய் சொல்ல சொல்றான் டீச்சர்... பொய் சொன்னாத் தட்டு மிட்டாய் வாங்கிக் கொடுப்பேன்னு வேற சொன்னான் டீச்சர்”,

ஒன்று விடாமல் போட்டுக் கொடுத்துப் பெரிய ஆப்பாக்கி விட்டாள் முத்துச்செல்வி. அப்புறம், விஜி டீச்சர் பொங்கோ பொங்குன்னு பொங்கிட்டாங்க.

“எத்தனை பொய், என்ன திருட்டுத்தனம்! டீச்சர் பையனா இருந்துகிட்டு இந்த வேலை எல்லாம் செய்வேன்னு நினைக்கவே இல்லை பரத்!”

அன்னைக்கு டீச்சரிடம் அடி வாங்கியது கூடப் பெரிசாத் தோணலை. அவங்க அம்மாவை சொன்னது தான் மனசுலே எங்கோ அடி வாங்கினது. பாசம்ன்னா இது தானா?

அது நாள் வரை, தேவையைப் பூர்த்திச் செய்யத் தான் அதிகமா அம்மாவைத் தேடி இருக்கேன்! நான் செய்தது அம்மாவோட மரியாதையைக் கெடுக்கும்ன்னு உணர்ந்து தேடியது அன்னைக்கு தான்!

என்னைப் பொறுத்தவரை அப்பா தான் ஹீரோ! அப்பாக்கு விமானப்படையில் வேலை. டெஹராடூன்ல இருந்தாங்க. வருஷத்துக்கு இரண்டு மூணு தடவை வந்துட்டுப் போவாங்க. அப்பா வந்துட்டா அவங்க பின்னாலே தான் சுத்துவேன்! அவங்க போனதும் அடுத்து அப்பா எப்போ வருவாங்கன்னு ஏங்க ஆரம்பிச்சிடுவேன்.

ஆனா, விஜி டீச்சர் அப்படிச் சொன்னதும் என்னாலே தாளவே முடியலை.

அழுகை அழுகையாக வந்தது. பெல் அடிச்சதும் அம்மாகிட்ட ஓடினேன்.

நான் செய்ததை சொல்லி, “நான் தப்புச் செய்ததிலே உங்களுக்கும் கஷ்டம்...”ன்னு நான் அழுதேன்.

நான் சொன்னதும் அம்மா முகத்தில் அமைதி! அப்புறம் என்னை வாரி அணைத்து, என் கண்ணீரைத் துடைத்து விட்டு, “பொய் சொன்னாக் கஷ்டம் உனக்குத் தான் கண்ணா! அம்மாக்கு இல்லை! ‘தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்’ நீ படிச்சது தானே?” என்றார்.

அம்மா என்ன சொன்னாலும், திருக்குறள் வந்து விடும்.

வாழ்வியலுக்கு அது ஒரு வழிகாட்டி; பின்னர், அனுபவத்தில் கண்ட உண்மை.

என்ன இருந்தாலும், ஆறுதலும், அக்கறையும், அறிவுரையும் அன்பில் தோய்த்துக் கொடுக்கும் அன்னைக்கு இணையாகுமோ எந்த ஏடும்?

அம்மாகிட்ட பேசிட்டு, எல்லாக் கவலையும் மறந்து பறந்து திரும்பும் போது, ஸ்கூலுக்கு வெளியே, தட்டு மிட்டாய் வாங்கிக் கொண்டிருந்த முத்துச்செல்வியைப் பார்த்துட்டேன். என்னை எப்படிக் கோல் மூட்டி விட்டாள்? இவளை ஏதாவது செய்யணும்ன்னு நான் நினைக்கிற நேரம் பார்த்தது மணி அடிக்க, நான் வகுப்புக்கு வேக வேகமாக ஓட... அவளும் என் பின்னாலே ஓடி வந்தாள். அப்போது “பொத்”தென்று விழுகிற சத்தம்! சட்டென்று திரும்பி பார்த்தேன்.

அவள் கீழே விழுந்து கையில் இருந்த தட்டு மிட்டாயும் மண்ணாகிப் போயிருந்தது!

அதைப் பார்த்தவுடன் என் மனசுலே அப்படி ஒரு பரவசம்! கடவுளாக் கொடுத்த வாய்ப்பு! அவள் முன்னாடிப் போய்க் கைக் கொட்டிச் சிரித்தேன்.

“வேணும் வேணும் நல்லா வேணும்!! முட்டைச்செல்வி! குட்டைச்செல்வி!”

நான் சீண்ட சீண்ட, அழுது கொண்டே எழுந்தவள், “நீ தான்டா புழுகு மூட்டைப் பரத்! புண்ணாக்கு மூட்டைப் பரத்!” ன்னு பதிலுக்குச் சண்டைக்கு வந்தாள்.

அன்றிலிருந்து எனக்கு அவள் முட்டை! அவளுக்கு நான் புண்ணாக்கு!



அவளோட பழக ஆரம்பித்த முதல் நாள் மூக்கை உறிஞ்சிகிட்டு என் கூட சண்டைக்கு வந்ததை இப்போ நினைத்தாலும் இனிக்குது. ஆனா...

அவளைக் கடைசியாப் பார்த்த அந்த நாள்! அவள் கதறல்! அத்தனை நினைவையும் அனுபவிக்க விடாம அழுத்துது!

பூப்பெய்தி ஒரு மாசம் கூட ஆகாதவளை என் கண் முன்னே... கதற கதற இழுத்துட்டுப் போனானுங்களே!

“பரத்! காப்பாத்து பரத்! என்னைக் காப்பாத்து பரத்!”

ஹைய்யோ! என் முட்டையின் குரல் இன்னும் செவிப்பறையில் மோதி மோதி எதிரொலிக்குதே!

‘உன்னைக் காப்பாத்த முடியாத... கையாலாகாதவனாப் போயிட்டேனே! இப்பவும் என் கண்ணுக்குள்ளே தான் நிக்குறா! நீ கிடைச்சிட்டா இனி உன்னை விட மாட்டேன்! விடவே மாட்டேன்! என் கண்ணுக்குளே வைச்சுக்குவேன்!’

மனம் தவித்த தவிப்பில், என் கண்ணுக்குளே வெள்ளம் வந்து விட்டதை நான் உணரும் வேளையில், ‘யாரும் பார்க்கிறதுக்கு முன்னே துடை!’ என் தன்மானம் கட்டளையிட்டது.

அது என்னைத் தைரியமான, கம்பீரமான ஆண் மகனாக உலகத்திற்குக் காட்ட நினைக்குது. அழுதால் கோழை அடையாளம் - இது எழுதப்படாத விதி! தன்மானத்தை அடகு வைத்து விட்டு நான் எங்கே போகுறது! அதற்குக் கட்டுபட்ட என் கைகள் கைக்குட்டையால் முகத்தை துடைத்த பொழுது...

“டாக்டர் பரத்”, தூரத்தில் ஒரு குரல் என்னை அழைப்பது போல... பரிச்சியமான குரல் என்று தோன்றிய அடுத்த கணமே கண்டு பிடித்து விட்டேன், அழைப்பது ஜெஸி என!

கொல்கத்தாவில் நான் கண்ட வீரத் தமிழச்சி! கல்லூரி மாணவி. சமூக நல ஆர்வலரும் கூட. ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் தான் முதலில் அறிமுகமானவள்.

என்னிடம் என்ன ஈர்ப்பைக் கண்டாளோ? என்னைக் காதலிக்கிறேன் என்று விரட்டுகிறாள். இது இளம் பருவத்தில் வரும் ஈர்ப்பு! சொன்னாலும் புரியவில்லை அவளுக்கு! கஷ்டமே தெரியாதவள் என்றால் கூட பரவாயில்லை. என்னைப் போலே தாயை இள வயதில் இழந்து நிறையக் குடும்பப் பொறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கிறாள்.

அவள் எண்ணத்திற்கு அறிவுரை சொல்ல முற்பட்டதும்,

“என்னை பொறுத்தவரைக்கும் யு ஆர் எ செலிபிரிட்டி! உங்க சேவை... நீங்க எடுக்கிற ரிஸ்க் உலகத்திலே எத்தனை டாக்டர்ஸ் எடுப்பாங்க? சத்தியமா அதுக்காகவாவது உங்களை லவ் பண்ணிட்டுப் போறேனே ப்ளீஸ்!” என்றே பதில் வந்தது.

 

ரோசி கஜன்

Administrator
Staff member
எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை என்ற பொழுதும்,

“உங்களுக்கு ஒரு லைஃப் அமையுற வரைக்கும் லவ் பண்ணிட்டுப் போறேனே. நீங்க என் லைஃப் ல வராமப் போனாக் கூட ஐ வோன்ட் ரெக்ரெட்!”

இப்படிச் சொல்லித்தான் என் வாயை அடைத்தாள். அவளாகக் கனவுகள் எதையும் வளர்த்து மனதைக் கெடுக்கக் கூடாது என்று என் முட்டையைப் பற்றிக் கூட அவளிடம் சொல்லி வைத்தேன்.

“நீங்க அந்தப் பொண்ணைக் கல்யாணம் செய்ற நிலை வந்தா, அட்சதை போடுற முதல் ஆளு நானாத் தான் இருப்பேன். உங்களோட இந்த அன்பை ரசிக்கிறேன்னு சொல்றதை விட, மதிக்கிறேன்னு சொல்லலாம்!”

எந்த ஏமாற்றமும் இல்லை அவள் முகத்தில். நரம்பு மாதிரி இருந்துகிட்டு என்ன துணிச்சல்? என்ன தெளிவு? கைக் குட்டையைப் பாக்கெட்டில் வைத்தவாறு அவள் அழைத்த திசை திரும்பினேன்.

‘நரம்பி’ பாதுகாப்பு சோதனையின் மறுபக்கம் என்னையே பார்த்தவாறு மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தாள். அவளால் உள்ளே வர முடியாது. என்னாலும் அவளருகே செல்ல முடியாது. என் பார்வை அவளை உரசியதும்,

“ஸாரி! ட்ராபிக்! அதான் லேட்டாகிடுச்சு” சத்தமாகச் சொன்னவளை அத்தனை பேரும் பார்த்தனர்.

இத்தனை பேருக்கும் காட்சிப் பொருளாய் நின்று கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்க,

நான் வரச் சொல்லி இவளுக்கு லேட் ஆனது போலச் சொல்கிறாளேன்னு ஒரு கோபம் எட்டிப் பார்த்தது.

எட்டிப் பார்த்த கோபம் என்னவோ கண் மண் தெரியாமல் எல்லாம் வரவில்லை. வேர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தவள் வெகு சிரமப்பட்டு வந்திருக்கிறாள் என்பதை என் கண்களே சொல்லி விட...கோபப்பட்டவன், பாவப்பட்டேன்.

அவள் எதையும்... யாரையும்... கவனித்தது போலத் தெரியவில்லை!

“கண்டிப்பாக் கிடைக்கும்ன்னு நினைச்சுத் தேடுங்க! கிடைக்கும்! ஆல் தி பெஸ்ட்!”

ஒரே மூச்சில் சொல்லி விட்டு கட்டை விரலை உயர்த்தினாள். பதிலுக்கு ஏன் நானும் என் கட்டை விரலை உயர்த்தினேன் என்று எனக்கே தெரியவில்லை!

பின் அவள் கையசைத்து விடைபெற... ஒரு தலையசைப்புடன் என் கையும் அசைந்தது. போய் விட்டாள்.

நானோ அப்படியே நின்று விட்டேன் - அவள் சென்ற திசையைப் பார்த்த படி. இந்த ஒரு வார்த்தையைச் சொல்வதற்காகவா இத்தனை அல்லல்பட்டு ஓடி வந்தாள்?

‘பத்திரமாப் போ’, என, குறுந்தகவலைத் தட்டிவிட்ட பின் தான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

உடனே பதிலும் அனுப்பி இருக்கிறாள் என்பதை, நான் விமானத்தில் போர்ட் ஆகி இருக்கையில் வந்து அமர்ந்த பின் தான் பார்த்தேன்.

‘நான் பத்திரமாப் போயிடுவேன். முட்டையை கண்ணுக்குள்ளே வைக்கணும்ல.. உங்க முட்டைக் கண்ணைப் பத்திரமா வைச்சுக்கோங்க! அழுது கெடுக்காதீங்க!’

அதைப் படித்ததும், இத்தனை மன உளைச்சலிலும் சிரித்து விட்டேன். அவள் சொன்ன விதம் இதமாகத் தான் இருந்தது.

அந்த இதமும், சிரிப்பும் ஒரு ஷணம் மட்டுமே! காலம் என் காயத்தைப் புதைத்தாலும்... அழித்து விடவில்லை! அது பனியில் புதைத்த பிண்டம் போல அப்படியே இருக்கிறது.

மீண்டும் மனம் அழத் துடிக்கிறது. வாழ்க்கையில் இழப்புகளைச் சந்தித்த பின் எப்படி அழாமல் இருக்க முடியும்? ஒன்றை இழந்தேன்! மீட்கவே முடியாது. மற்றொன்றைத் தொலைத்தேன். மீட்டு விடத் தவிக்கிறேன்!

அம்மாவிற்கு உயிரைக் கொல்லும் வியாதி. மருத்துவனாக, இப்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், என் முட்டையை உயிரோடு அனு தினமும் கொல்லும் தொழிலுக்கு தள்ளப்பட்டாளே! இது என்ன வியாதியோ? மருத்துவனாக ஏன் ஒரு மனிதனாகக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. யாருக்கு என்ன பாவம் செய்தாள் அவள்?

விமானம் தன் பயணத்தைத் துவக்குவதாக அறிவிப்பு வரவும் என் மனம் தன் குமுறலை நிறுத்தி வைத்தது. என் சீட் பெல்ட்டை மாட்டி விட்டு நிமிர்ந்த பொழுது அருகில் இருந்தவர் என்னையே உற்று உற்று பார்ப்பது போல தோன்ற....அவர் பக்கம் திரும்பினேன். நடுத்தர வயது மனிதர். அவரை நான் பார்த்ததும், அதற்காகவே காத்திருந்தவர் போல, “ஆர் யு டாக்டர் பரத் திலகம்?” என, வேகமாக அவர் கேட்ட விதத்தில் வெகு நேரம் கேட்க நினைத்திருப்பார் போல என்பது புரிந்தது. புன்னகையுடன் மேலும் கீழுமாய் தலையசைத்தேன்!

திலகம் என் அம்மாவின் பெயர். அம்மா காலமான பின் அப்பாவின் பெயரை தங்கள் பெயரோடு சுமக்க இன்னொரு மனைவியும் மகளும் அவருக்கு வந்து விட, என்னைச் சுமந்து பெற்ற தாய் பெயரை என் பெயரோடு பொருத்திக் கொண்டேன்!

“CNN மேன் ஆஃப் தி இயர் நீங்க தானே! இண்டியா டூடேல கூட உங்களைப் பத்தி ஆர்ட்டிக்கிள் படிச்சேன்! ஒரு தமிழன் இந்த அவார்ட் வாங்குறதுல பெருமையா இருக்கு!” என்றவர்,

“ஆனா, ஹச். ஐ. வி. பேஷண்ட்ஸ்க்கு ரிஸ்க்கி டெலிவரிலாம் பார்க்கிறீங்க! உயிர் மேல பயமே இல்லையா?” அவர் கேட்டதும்,

“சேஃப்டி பிரிகாஷன்னும் எடுத்திட்டுத் தான் செய்வோம். பயப்பட அவசியம் இல்லை.”, என்றேன்.

அடுத்து அவர், “சோனாகாஞ்சிக்குச் சேவை செய்யணும்னே வந்தீங்களா?” என்று கேட்டார்.

பத்திரிக்கையைப் படிச்சிட்டுப் பத்திரிக்கைகாரனை விட அதிகமாகக் கேள்வி கேட்கிறார்ன்னு தான் தோன்றியது. அவர் ஆர்வம் புரிந்தது. ஆனால், என் மனம் பதில் சொல்லத் தயாராக இல்லை!

“இல்லை! டிபார்ட்மெண்ட் ஆஃப் பப்ளிக் ஹெல்த் போஸ்டிங் அங்கே தான் கொடுத்தாங்க!” பதில் சொல்லிக் கொண்டே ஹெட்ஃபோனை மாட்டி இருந்தேன். அதற்கு மேல் கேள்வி கேட்க முடியாமல் அமைதியானார்.

இந்தக் கேள்வியை என் முட்டை கேட்டிருந்தாச் சொல்லியிருப்பேன் – “உன்னாலே தான், உனக்காகத் தான் நான் சோனாகாஞ்ச்கே போனேன்” என்று.

அவளைத் தேடி அங்கே போகலை. வேண்டுதல் வைக்கப் போனேன். அவளைக் காப்பாற்ற முடியாத பாவத்தைத் தொலைத்து விடப் போனேன்.

எல்லாரும் புண்ணியம் தேடிக் காசிக்குப் போவாங்க. நான் இந்தியாலே மிகப்பெரிய சிகப்பு விளக்குப் பகுதிக்குப் போனேன்.

அம்மா எப்போ கண்ணை மூடினாங்களோ, அப்பவே, கடவுள் நம்பிக்கை எல்லாம் காணாமப் போய் விட்டது. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளே கடவுள் இருக்கார்ங்கிற நம்பிக்கை மட்டும் தான் இப்போ இருக்கு. சிகப்பு விளக்கில் தங்கள் உடலை விற்கிறவர்களுக்கும் அந்தக் கடவுள் இருக்கத்தான் செய்றார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு.

ஆமாம், என் கண் முன்னே என் முட்டையை இழுத்துட்டுப் போனது போல இங்கே உள்ளவங்களும் கட்டாயபடுத்தபட்டோ, கடத்தபட்டோ, ஏமாற்றப்பட்டோ...இந்தத் தொழிலுக்குத் தள்ளப்பட்டு இருப்பாங்க!

பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசுறவங்களுக்குப் பாலியல் தொழில் செய்றவங்க இழிவாகத் தான் தெரிவாங்க. என்னைப் பொறுத்தவரை அறிவு செத்த ஆண்களின் காமப்பசிக்காகச் சிதைக்கப்படும் பெண்கள் இவர்கள்.

அவங்களுக்கு என்னாலே ஏதாவது நல்லது செய்தா, அந்த நல்லது எல்லாம் என் முட்டைக்குச் சேருமே! இந்த எண்ணத்தில் தான் இங்கே வந்தேன்.

அம்மா மரணப் படுக்கையில் கிடந்தப்போ சொல்வாங்க, “இந்த டாக்டருங்க இந்த உடம்பை வெறும் எலும்பும், சதையுமாத் தான் பார்க்கிறாங்க. அவங்க கடமையைச் செய்துட்டாப் போதும். உயிரைத் தாண்டி மனசுன்னு ஒன்னு இருக்குன்னு யாருக்குத் தெரியுது.” என்று.

அம்மா சொன்னது மனசுலே பதிந்து போனதாலோ என்னவோ... ஒரு மகப்பேறு மருத்துவனா என்கிட்ட வர்ற கர்பிணிங்களைத் தெய்வத்துக்குச் சமமாத் தான் நினைக்கத் தோணும். ஆமாம், தெய்வத்துக்குக் குளிப்பாட்டி அலங்கரிக்கும் பூசாரியின் மனநிலை தான் என்னதும்...என் தொழிலில்!

ஒரு நாள் ஹச்.ஐ.வி.ல பாதிக்கபட்டு ஐந்து மாசச் சிசுவோட வந்து நின்றாள் ஒரு நேபாளிப் பொண்ணு!

பதின்மூன்று வயசுலே நேபாளில் இருந்து கடத்தி வந்து சோனாகாஞ்ச்லே விற்று விட்டார்கள் என்றாள். அந்த வயதில் தானே என் முட்டையும் தொலைந்து போனாள்? மனம் கனத்துப் போனது, அதைக் கேட்ட நொடியில்.

STD (Sexually Transmitted Diseases) நோய்கள் பற்றியும், பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் எவ்வளவோ விழிப்புணர்வு கொடுக்கிறோம். இவளுக்கும் தெரிந்து தான் இருக்கிறது. இள வயது அல்லவா? தன்னைத் தொடர்ந்து தேடி வரும் ஒருவனைக் காதலனாக, கணவனாகப் பாவித்து அவனிடமிருந்து நோயையும்... சிசுவையும் வாங்கி வந்து நிற்கிறாள்.

யாரோ சுயலாபத்திற்காகத் தள்ளப்பட்ட தொழிலையே தன் வயிற்றைக் கழுவும் தொழிலாக மாற்றிக் கொண்டவள், எதிர்காலமே கேள்விக் குறியாகிய விரக்தியில் இருந்தாள். நிச்சயம் அவளைக் காப்பாற்ற முடியாது. ஆனால், குழந்தையைக் காப்பாற்றி விடலாம்!

“இந்தக் குழந்தை ஜனிக்க ஒரு உடல் வேணும்னு உன்னைத் தேடி வந்திருக்கு! உன்னை ஒரு தெய்வமாத் தான் பார்க்கிறேன்!” இதை சொல்லிக் கொண்டே என் கையுறையை மாட்ட, நான் சொன்னது அவளை என்ன மாதிரி உணர வைத்ததோ, “என்னை நெருங்கின எவனும் மனுஷியாக் கூட நினைச்சது கிடையாது! இந்த நோய் வந்த பிறகு, அருவருப்பா ஒதுக்கி போட்டாங்க! நான் தெய்வமா?” கண் நிறைய, கண்ணீர் தேங்கக் கேட்டாள்!


 

ரோசி கஜன்

Administrator
Staff member
நான் மேலும் சீண்ட, பழிப்புக் காட்டியவளுக்கு அழுகை மறைந்து போனதா... இல்லை, அழுக மறந்து போனாளா தெரியவில்லை; ஆனால், எனக்கு அவளைச் சமாதானப்படுத்தி விட்டோம் என்ற நிம்மதி உண்டானது.

அவள் அம்மாவைப் பற்றி நானாக எதுவும் கேட்டதே இல்லை. அவளும் அதைப் பற்றி என்னிடம் சொன்னது இல்லை.

எனக்கு வயது கூட கூட முத்துச்செல்வியின் குடும்பப்பின்னணி ஓரளவிற்கு தெரிய வந்தது. தாயார் திருவிழாக்களில் ஆடுபவர் என்றும், அதில் அவ்வளவாக வருமானம் இல்லாததால், குடிகாரத்தந்தை காசுக்காக மனைவியை மற்றவனிடம் அனுப்பி வைப்பான் என்பதும் தான்.

பள்ளிச் சிறுவர்களாக இருந்த நாங்கள், வளர்ந்து விடலைப் பருவத்தினராய் எட்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்த பொழுது தான் எந்தத் திருப்பமும் இல்லாமல் போன வாழ்க்கை எங்களை அப்படியே புரட்டிப் போட்டது!

எட்டு எட்டாது என்பார்களே... அது எங்கள் வாழ்க்கையில் சரியாகத்தான் இருந்தது.

நான் என் பதின்மூன்றாவது வயதைத் தொட, அதன் நினைவா அப்பா சைக்கிள் வாங்கிக் கொடுத்தாங்க! அந்த சைக்கிள்ல ஒரு தூசு துரும்பு விழாத படி நான் பார்ப்பேனோ இல்லையோ, முட்டை அந்த வேலையைப் பார்த்து வைப்பாள்!

“முட்டை என் சைக்கிளை நான் பார்க்க மாட்டேனே!” என, நான் அதட்டும் பொழுது, “நீ வேற நான் வேறயா? போடா புண்ணாக்கு!”

என்றுதான் அவள் பதில் வரும். ஆம், எங்கள் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்திருந்தது.

ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் அம்மாவைச் சைக்கிள்ளே கூட்டி வந்தப்போ ஏதோ சாதாரணமாச் சொன்னது மாதிரித் தான் தெரிந்தது.

“கண்ணா, அம்மாக்கு நெஞ்சுலே கட்டி மாதிரி இருக்கு! ஆஸ்பத்திரிலே விட்டுட்டுப் போ.. டாக்டர்கிட்ட காட்டிட்டு நானே வந்துடுறேன்” என்றார்.

டாக்டர்கிட்ட காண்பித்து வந்ததும், மதுரைக்குப் போய் ஒரு டெஸ்ட் எடுக்கணும்ன்னு சொன்னவங்க, அதைக் கூட, அடுத்த நாள் ஸ்கூலுக்கு AEO வர்றார்ன்னு தள்ளிப் போட்டாங்க.

அம்மா அடுத்த நாளே மதுரைக்கு போகாததும் ஒரு நல்லதுக்குத் தான் என்று இப்பப் பரிபூரணமா நம்புறேன்.

ஏன்னா, அந்த நாள் என்னாலையும், முட்டையாலும் மறக்கவே முடியாத நாளாகிப் போனது. அந்த நாள்... அந்த மாலைப் பொழுது...

அன்னைக்குக் கடைசிப் பீரியட் உடற்பயிற்சி வகுப்பு. முட்டைக்குத் தலை வலின்னு வகுப்பிலே இருந்துட்டாள். அன்னைக்கு PET வாத்தியார் க்ரவுண்ட்ல வேலை இருக்குன்னு மணி அடித்த பிறகும் என்னை விடலை.

ஒரு வழியாக அந்த வேலைகளை முடித்திட்டு நான் வகுப்புக்குப் பையை எடுக்க வந்தால், அப்பவும், முத்துச்செல்வி அவள் இடத்தை விட்டு நகராம அவள் டெஸ்க்கிலே தலை வைத்துப் படுத்து இருந்தாள்.

“என்ன முட்டை லைப்ரரிக்குப் போகலையா? உலக அதிசயமா இருக்கு!”

என் குரலுக்குச் செவி மடுக்காமல் படுத்தே கிடக்க... எப்பவும் இப்படி சோர்ந்து படுத்து இருக்க மாட்டாளே! அவள் தாயைப் பற்றி யாரும் வருந்துற மாதிரி பேசிட்டாங்களா? இல்லை, நிஜமாவே உடம்புக்கு முடியலையா? என்னவென்று புரியாமல் அவள் தோளை ஆதரவாகப் பற்றியதுமே, என்னை நோக்கி நிமிர்ந்தவள், “நான் செத்துடுவேனோன்னு பயமா இருக்கு புண்ணாக்கு!” என்று சொன்னவள் கண்களில் மரண பயம்.

“உளறாதே! அதெல்லாம் ஒன்னும் ஆகாது! எதுவும் ஆக விடமாட்டேன்.” சொல்லிக் கொண்டே அவளருகே அமரப் போக...என்னை தடுத்தாள்.

“கிட்ட வராதே... ரத்தமாக இருக்கு! எனக்கு ஏதோ நோய் இருக்கு. ப்ளட் கேன்ஸரான்னு பயமா இருக்கு! பாவாடை எல்லாமே பாழாகிடுச்சு.”

அவள் ரத்தம் என்றதுமே... மரண பயம் எனக்கும் தொற்ற... அடுத்த நொடியே என் அம்மாவை அழைத்து வரப் பறந்தேன்.

அம்மா வந்து அவளைப் பார்த்ததுமே அவங்களுக்கு எல்லாமே புரிந்து விட்டது.

“கங்கிராட்ஸ்! நீ பெரிய மனுஷியாகிட்டே!” என்றார், அவளைப் பார்த்து. அதுவரை அவள் முகத்தில் இருந்த மரண பயம் நீங்கி நிம்மதி பிறக்க...

எனக்குமே புரிந்தது. பெண்கள் பூப்பெய்துவதைக் கேள்விப்பட்டவன் தான். ஆனால், அதன் பின்னால் இப்படி ஒரு உடல் ரீதியாக இப்படி எல்லாம் நடக்கும் என்று அன்று தான் தெரிந்தது.

என்னை வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டு அம்மாவே அவளை வீட்டில் விட்டு வந்தார். அம்மாவிடம் எல்லாமே பகிர்ந்து இருக்கிறேன். இந்த விவரத்தைப் பற்றிக் கேட்கவா... வேண்டாமா... எனக்குள் ஒரு தயக்கம்.

கண்ணில் பார்த்து விட்ட ரத்தக்கறை... அவளுக்கு எவ்வளோ வலிக்கும் என்ற கவலையே மேலோங்க, அம்மா வந்ததும், “ஏன்ம்மா முட்டைக்கு இப்படி நடந்தது? பெரிய மனுஷியாக இவ்வளோ கஷ்டப்படணுமா?” கேட்டே விட்டேன்!

அம்மா சிரித்தவாறே சொன்னார்.

“ஒரு பொண்ணுக்கு பிறவியிலே இருக்கிற தாய்மைக்கான உறுப்புகள் முழுமை அடைந்து, கரு முட்டையை உருவாக்கும் உன்னதமான நிகழ்வு அது! இதுலே என்னடா கஷ்டம்? இது இயற்கை! இது இல்லைன்னா நீயோ... நானோ... ஏன் இந்த மனுஷ இனமே தழைத்து இருக்காது!”

அந்த வார்த்தைகள் எனக்குள் பெரிய பிரம்மிப்பை உண்டு செய்து புல்லரிக்க வைக்க... அடுத்து,

மங்கையராய் பிறப்பதற்கே – நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா

ஒரு பெண் மங்கையாய் பிறப்பதற்காக நடக்கும் மாதவத்தின் நிறைவு தான் பூப்பெய்தல் என்றார், அம்மா. அதன் பின்னே சில புத்தங்களை கையில் கொடுத்து,

“உனக்கும் வேற மாதிரியான சில மாற்றங்கள் வரும். இது தான் நம்ம இனபெருக்கத்துக்கான பிள்ளையார் சுழி! இந்த புக்ஸ்லே எல்லாமே இருக்குது. நம்மளைப் பத்தி.. நம்ம பயாலஜி பத்திப் படிக்க என்னைக்குமே சோம்பேறித்தனமே படக் கூடாது!” என்று, எனக்குப் புத்தக ஆர்வம் குறைவு என்பதை தெரிந்தே தான் சொன்னாங்க.

தாய்மைக்கு பின்னால் உள்ள அறிவியலை எனக்கு விதைத்து, உயிரியல் பற்றிய ஆர்வத்தை உண்டாக்கிய அந்த நாள் தான் அவர் என்னோட இயல்பாகப் பேசிய கடைசி நாளாகிப் போனது!

ஆமாம், அம்மா பள்ளிக்கூடத்தைச் சிறப்பாக நடத்தி, தன் சம்பாத்தியத்தின் மூலமாக அப்பாவின் பணச் சுமையைப் பகிர்ந்து, முதுமையில் தனிமை கொடிதுன்னு பாட்டியையும் பார்த்துன்னு அத்தனையும் பார்த்து பார்த்துச் செய்தவங்க தன் உடம்பையும் பார்க்கணும்னு மறந்தே போனாங்க.

வேர் அழுகிப் போனால், குடும்பமே நிலை குலைந்து போகும்ன்னு நினைக்க மறந்து போனாங்க.

அடுத்தநாள், மதுரைக்கு டெஸ்ட் எடுக்கப் போனவங்களை இன்னும் நிறைய டெஸ்ட் எடுக்கணும்ன்னு அப்படியே ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்க.

அம்மா அட்மிட் ஆனதும், அப்பாவும் கிளம்பி வந்தாங்க. சொந்தக்கார்கள், பழகியவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், உடன் வேலை பார்க்கிறவர்கள்ன்னு யார் யாரோ வந்து அம்மாவை விசாரித்துட்டுப் போனாங்க. என்கிட்ட,

“அம்மாக்குக் கட்டி இருந்ததாலே ஆபரேஷன் செய்து இருக்காங்க”, ன்னு சொல்லி இரண்டு வாரம் கழித்துத் தான் அம்மாகிட்டக் கூட்டிப் போய்க் காண்பித்தாங்க. அம்மா கஷ்டபட்டுப் பேசினாங்க.

“நீ இப்போ பெரிய பையன். யாருக்கும் சங்கடம் கொடுக்காம நீயா உனக்குத் தேவையானதைச் செய்து பழகணும். அப்பத் தான் அம்மாவுக்குப் பெருமை.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்” என்றார். ஓய்ந்த குரலிலும் அம்மாவின் வாயில் இருந்து குறள் வந்தது

அம்மாவைப் பார்த்து வந்த அன்று எனக்கு நிம்மதியே இல்லை. தூக்கமும் இல்லை. என்னவோ என் உள் மனது சொன்னது. ஏதோ நடக்கப் போகுது என்று!

‘அம்மா வந்த பிறகு தான் சைக்கிளை எடுப்பேன்’ சபதமே போட்டு, அடுத்த நாள் நடந்தே பள்ளிக்கூடம் கிளம்பிப் போனேன்.

பள்ளிக் கூடத்திற்கு முட்டையும் இத்தனை நாளாக வரவில்லை. தலைக்குத் தண்ணி ஊத்தின பிறகு தான் அனுப்பி வைப்பாங்கன்னு வகுப்பில் யாரோ சொன்னாங்க.

அன்று கொஞ்சம் சீக்கிரமாகப் போனதாலே வகுப்பிலே ஒரு ஐந்தாறு பேர் தான் இருந்தாங்க. ‘இன்னைக்காவது வந்திருப்பாளா?’ ஏக்கத்துடன் என் பார்வை எப்பவும் போல அவள் இடத்தைத் தழுவும் போது அவள் அங்கே இருந்தாள்.

அப்படியே முகமெல்லாம் மஞ்சளை அப்பிக்கிட்டு, நெத்தியில் நீட்ட கருப்புப் பொட்டு! தலைக்குக்குளித்ததாலே, இரட்டைச் சடை போடாம நுனி முடியை மட்டும் முடிந்திருந்தாள்.

அவள் மங்களகரமா முகத்தைப் பார்த்ததும் என்னவோ என் கவலை எல்லாம் பறந்து மனசு லேசானது போல இருந்தது. அவளோட பேச ஆசையாப் போனால், என் ஆர்வம் அவளிடம் துளி கூட இல்லை. மாறாக பதற்றம் தான் இருந்தது.


 

ரோசி கஜன்

Administrator
Staff member
என்னைப் பார்த்தும், “ஹச். எம் வந்துட்டாங்களா?” கேட்டவளுக்கு ஒரு பதை பதைப்பு, கவலை, பயம் என்ற சகலமும் குடி கொண்டு இருக்க, ‘அம்மாவைப் பத்திக் கேள்விபட்டு இருப்பாளோ?’ என்ற யோசனை வர, மறுப்பாகத் தலையசைத்தேன்!

அதைக் கேட்டதுமே அவளுக்கு அத்தனை ஏமாற்றம்!

“எங்கப்பன் இனி ஸ்கூலுக்கு விட மாட்டேன்னு சொன்னான். அம்மா தான் டி.சி. வாங்கவாது அனுப்புங்கன்னு கெஞ்சிக் கதறி அனுப்பி வைச்சாங்க.” சோர்ந்து போய்ச் சொல்லவும், திகைத்து, நான் ஏன் என்று கேட்கவும் அவள் கண்கள் கலக்கத்தோடு என்னைப் பார்த்து, “அம்மாவை.... “, தயங்கி நிறுத்தியவள், பின் மெலிதாய், “என்னையும் அதே மாதிரி...” முடிக்கும் முன் குரல் உடைய, “யாருக்கோ விலை பேசிட்டு நான் எப்போ சடங்காவேன்னு காத்துகிட்டு இருந்திருக்கான்!” தயங்கி தயங்கிச் சொல்லி விட்டு உடைந்தாள்.

கேட்ட எனக்குத் தூக்கி வாரிப் போட்டது! பெத்தவனே இப்படி ஈனக் காரியம் செய்வானா? என் நெஞ்சம் கொதித்து போனது.

“டி.ஸி. வாங்குற சாக்குலே, ஹச். எம்.மைப் பார்த்துப் பேசுறேன்னு அம்மா சொல்லிச்சு. இந்தா வர்றேன்னு சொன்னது. இன்னும் ஆளைக் காணோம்!”

என்றவள் கண்கள், அனிச்சையாக வாசலுக்குச் சென்று, அங்கே நின்றவர்களைப் பார்த்ததும் அப்படியே விதிர் விதிர்த்துப் போனது.

அவள் அப்பா வந்திருந்தான். இரண்டு மூன்று தடியன்கள் அவனுடன்.

என்னுடன் அவள் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் ஆத்திரத்துடன் உள்ளே வந்தவன், “என்னடி ஆம்பிளைப் பையனுங்களோட கொஞ்சிக் கொலாவதான் பள்ளிக் கூடத்துக்கு ஓடி வந்தியோ? நீயும் அந்த ******* திட்டமாடி போடுறீங்க திட்டம்! வாடி வீட்டுக்கு!” பேசி முடிக்கும் முன்னே, அவள் முடியைக் கொத்தாகப் பற்றி இருந்தான் அவள் அப்பன்.

மின்னலென அவன் மீது பாய்ந்து அவளை விடுவிக்க முயல.. உடன் வந்த தடியன்களில் ஒருவன் என்னை மூர்க்கமாகத் தள்ளி விட, அவன் தள்ளி விட்ட வேகத்தில் அருகே இருந்த கான்கீர்ட் தூணில் போய் நான் மோத, அது என் மண்டையையும் முட்டியையும் பதம் பார்த்தது.

மண்டையில் ‘கின்’னென்ற சத்தம்... அதோடு எழுந்து கொள்ள முயன்றேன்.
“பரத்!”


“காப்பாத்து பரத்! என்னைக் காப்பாத்து பரத்!”,

அவள் கதறும் சத்தம் கேட்டது. ‘நான் இருக்கேன் உனக்கு!’ சொல்ல நினைத்தேன்... சொன்னேனா தெரியவில்லை. ஒரு காலை நகற்றவே முடியவில்லை. மற்றொரு காலை ஊன்றி எழுந்து கொள்ள முயன்ற பொழுது கண்களும் மங்கலாகி, பின் முற்றிலும் எதுவும் தெரியாமல் மயக்க நிலைக்கு சென்று விட்டேன்.

யாரோ என்னைத் தட்டி எழுப்புவது போலிருந்தது. மெல்லக் கண் விழித்தேன்.

“டாக்டர் ஃப்ளைட் லேண்ட்டாகிடுச்சு!” பக்கத்தில் இருந்தவர் சொல்வது ஹெட்போன் மாட்டி இருந்ததால் சன்னமாகக் கேட்டது.

விமான நிலையத்தில் இருந்து என்னை அழைத்துச் செல்ல என் நண்பன் சத்யன் வந்திருந்தான்.

“என்ன மச்சி! ரொம்ப வருஷம் கழிச்சுத் தமிழ் மண்ணை மிதிச்சிருக்கே! ஒரு ரெஸ்டாரண்ட், இல்லை கோவில், குலம் இப்படிப் போவேன்னு பார்த்தா இப்படித் திருச்சிக்கு ஏதோ ஸ்கூல் போகணும்னு சொல்றே! டீச்சர் யாரையாவது கரெக்ட் பண்றியா?”

அவன் என் வாயைக் கிளற, சிரித்த படி அதை மறுத்த நான், “ஸ்கூல் ஃப்ரண்ட்டைப் பத்தி டீடெயில் கலெக்ட் செய்யப் போறேன்”, என்றேன்.

ஆம், முட்டையை அன்று இழுத்துச் சென்றபின், என் அம்மாவும் தவறி விட்டார். பாட்டி செத்து விடுவேன்னு மிரட்டி ஆறே மாதத்தில் அப்பாவிற்கு மறுமணம் செய்து வைத்தார். அதன் பின், அப்பா எங்களை அவருடனே அழைத்துச் சென்று விட்டார்.

வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் போன எனக்கு, முட்டையைப் பிரிந்ததில், அவளுக்குப் பிடித்த விஷயங்களில் என்னை ஈடுபடுத்தித் திருப்தி அடைந்தேன்.

அவளுக்குப் பிடித்தது படிப்பு! என் தாய் என் வாழ்வின் வழி காட்டி என்றால், இவள் என் பாதையாகிப் போனாள்!

முட்டை எங்கே இருக்கிறாள் என்றே தெரியாமலே ஓடின இத்தனை வருடங்களுக்குப் பின், அம்மாவின் அண்ணன் வீட்டுக் கல்யாணத்திற்கு போயிருந்த பொழுது அவர் பேச்சு வாக்கில், “உங்க அம்மா சாகக் கிடக்கிறப்போக் கூட, ஏதோ அவ ஸ்கூல்ல படிக்கிற பொண்ணைப் படிக்க வைக்க உதவி செய்யுங்கன்னு கேட்டா! அவ குணத்துக்கு உனக்கும் ஒரு குறையும் வராது!” என்று சொன்னதும், மூளையில் ஒரு மின்னல்.


கடைசியாக முட்டையைப் பார்த்த பொழுது ‘அம்மாவைப் பார்க்கணும்னு சொன்னாளே’ என்று! அவரிடம் அந்த விவரங்களை விசாரிக்க, இத்தனை வருடங்கள் கழித்துக் கேட்டதில் அவர் அதை மறந்தே போயிருந்தார்.

“என் ஃப்ரண்ட் மிஷனரிலே வேலை பார்த்தான். அவன் மூலமாத் தான் சொன்னேன். அவனும் இப்போ உயிரோட இல்லை. அந்த மிஷனரி அட்ரஸ் வேணா தர்றேன்! விசாரி” என்றார் மாமா.

என் கையில் அந்தத் திருச்சி மிஷனரியின் முகவரி மட்டுமே. அவள் அதில் சேர்ந்தாளா? இல்லையா? தெரியவில்லை.

ஆனால், திருச்சி நோக்கி போகின்றேன்! என்னவோ அவளை நெருங்கிட்ட உணர்வு என்னுள்ளே! தமிழ் மண்ணை மிதித்ததுமே தன்னம்பிக்கைத் தானாக வந்து விட்டதோ!

“க்ரீச்ச்”

திருச்சியை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்த சத்யன் ப்ரேக்கிட்டான்! வேகமாகப் பிரேக்கை மிதித்ததின் அதிர்வு எங்களுக்குள். சீட் பெல்ட் எங்களைக் கட்டிப் போட்டுக் காப்பாற்றியது.

முன்னே சென்ற வண்டிகள் திடீரென்று பிரேக்கிட்டதன் தொடர் அலையில் வினையில் அவனும் அதைச் செய்ய வேண்டியதாகிப் போனது.

பின்னர் தான் சில வண்டிகள் தள்ளி பெரிய விபத்து நடந்திருப்பது புரிந்தது.

ஒரு பேருந்தும் லாரியும் மோதி விபத்தாகிக் கிடக்க, அங்கே மக்கள் ஓலம்!

நிதானிக்கவில்லை நாங்கள்! உயிர் காக்க எங்களால் முடிந்த உதவிகளைச் செய்தோம். முன்னால் இருந்த இரண்டு கல்லூரி வாகனங்களில் இருந்த மாணவர்களும் மீட்புப் பணியில் பேருதவியாக இருந்தனர்.

ஒரு பகுதி நெளிந்து போன பேருந்தின் இருக்கைகளுக்கு இடையே சில உயிர்கள் சிக்கித் தவிக்கின்றன என்றதும் பேருந்திற்குள் ஏறினேன். அதிலிருந்தவர்களுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்சில் ஏற்றும் பொழுது... நெடிய மூச்சுகள்!

அந்தச் சத்தம் வந்த திசை நோக்கி நான் நடக்க ஆரம்பித்த பொழுது அந்தச் சத்தம் நின்று போக, நொடி தாமதிக்காமல் ஒவ்வொரு வரிசையாய் நான் தேட ஆரம்பித்தேன்.

சில இருக்கைகள் தள்ளி...இரு இருக்கைகளுக்கு நடுவே. குறுக்கு நெடிக்காகக் கிடந்தாள் நிறை மாதக் கர்ப்பிணி. கண்ணாடி வளையல்கள் எல்லாம் நொறுங்கிப் போய், உடம்பெங்கும் காயமும் ரத்தமுமாக அசைவற்றுக் கிடந்தவளைக் கண்டதும் என் உயிரே போய்விட்டது!

‘உயிர் இருக்கிறதா?’ அவளை நோக்கிக் குனிந்து, நாடித் துடிப்பைப் பற்றிப் பார்த்ததும் நம்பிக்கை வந்தது என்றால்...

“செத்துப் போயிடுவேனோன்னு பயமா இருக்குது புண்...”

நான் கையைப் பற்றியதும் நா குளறி, தன்னை மறந்த நிலையில் வந்த உளறல்!

‘என் முட்டையின் வார்த்தைகள்! பூப்பெய்தியதும் ரத்தத்தைப் பார்த்துப் பயந்து சொன்ன அதே வார்த்தைகள்!’

அதைத் தொடர்ந்து அவள் முகம் அஷ்ட கோணலாகிப் போனது.

எனக்குள் பயம், நடுக்கம், திகைப்பு.

கீழிருந்த பூமி நழுவிப் போவது போல இருந்தது.

என் இதயம், ‘என் முட்டை இப்படித் தான் என் கையில் கிடைக்கணுமா?’

விம்மி வெடித்தது.

அவளுக்கு பிரசவ வலி. ‘அந்த வலி தான் அவள் மூளையை முழு மயக்கத்திற்கு இழுத்துச் செல்லாமல், அவளைத் தட்டி எழுப்பிப் பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.’ என நான் கற்ற அறிவு சொல்ல, நான் உடைந்து போவதை மறைத்து, “உளறாதே! அதெல்லாம் ஒன்னும் ஆகாது. எதுவும் ஆக விடமாட்டேன்.” அன்று சொன்ன வார்த்தைகளை இன்றும் வீறு கொண்டு என் வாய் ஒப்பித்தது.
 

ரோசி கஜன்

Administrator
Staff member

‘ஒரு தடவை உன்னைத் தவற விட்டேன்; இந்த முறை விட மாட்டேன்; விடவே மாட்டேன்!’

எனக்குள் சொல்லிக் கொண்டாலும், என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோட... எப்படி அந்த இடுக்கிற்குள், இடி பாடுகளுக்குள் புகுந்து அவளை அப்புறப்படுத்திக் கைக்குள்ளே அள்ளினேன் என்று எனக்கே தெரியவில்லை.

பனிக்குடமும் உடைந்து போயிருந்ததை உணர்ந்தவனாய்,

பேருந்தின் காற்றோட்டம் நிறைந்த கடைசி இருக்கையில் படுக்க வைத்து, அவள் கையைப் பற்றிக் கொண்டே, “உன்னைக் காப்பாத்திடுவேன் முட்டை! எப்படியாவது கஷ்டபட்டு நான் சொல்றதை மட்டும் செய்துடு. எனக்காக ப்ளீஸ்!”

அத்தனை வலியிலும் மயக்கத்திலும் என் கரத்தை அழுந்தப்பற்றித் தலையசைத்தாள்!

என் கையை விடாமல் அவள் பற்றியிருக்க, சத்யனைத் துணைக்கு அழைத்தேன். அவளுக்கு பிரசவிப்பதிலும் சோதனை! இரட்டைக் குழந்தைகள் அவளுக்கு! இரண்டு குழந்தைகளையும் பெற்று முடிப்பதற்குள் அவள் ஜீவன் கரைந்து கொண்டிருந்தது.

எப்படியோ குழந்தைகளைப் பிரசவித்து விடவும், ஆம்புலன்ஸ்சில் ஏற்றிப் பக்கத்து மருத்துவமனையில் சேர்த்து அவள் அபாய கட்டத்தைத் தாண்டிய பின் தான் மூச்சே வந்தது எனக்கு.

“என் முட்டையைக் காப்பாற்றி விட்டேன்.”

இத்தனை வருடம் அவளைக் காப்பாற்ற முடியாமல் போனக் குற்ற உணர்வும் பஸ்பமானது!

பிரசவித்த களைப்பிலும் மருந்தின் தாக்கத்திலும் தூங்கிப் போனாள்.

மங்கையாய் ஒரு பிறவி எடுத்ததையும் அன்னையாய் ஒரு பிறவி எடுத்ததையும் பார்த்து விட்டேன். கழுத்தில் இருந்த தடிமனான தாலிச் சங்கிலியில் சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தில் தான் வாழ்கிறாள் என்று புரிந்தது.

“குழந்தைகள்?”, இப்பொழுது தான் அவர்கள் நினைவு வந்தது எனக்கு.

என் கைகள் தான் அந்தக் குழந்தைகளை எடுத்தது. கவனமெல்லாம் அந்த நேரம் அவள் மீது தானே இருந்தது.

ஆண் ஒன்று, பெண் ஒன்றுமாக அந்தக் குழந்தைகள் நன்றாக ஆரோக்கியமாக இருந்தன. அதுவே கர்ப்பத்தில் நல்ல ஊட்டம் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்த்த, இப்படி பலதும், “அவள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ” என்பதை ஊர்ஜிதப்படுத்த, என் வேண்டுதலின் பலனைப் பார்த்து விட்டேன் என்று மனது நிறைந்து போனது.

அவளை என்னோடே வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இப்பொழுது மறைந்தே போனது. எந்த வித ஏமாற்றமோ, பொறாமையோ தோன்றவே இல்லை.

இவள் மீது இத்தனை வருடம் எனக்கு உண்டானது நட்பா? காதலா?

என் அன்பின் தன்மையை நான் கேள்வி கேட்கும் பொழுது, அறை வாசலில் செவிலியுடன் யாரோ பேசுவது கேட்டது. அது முட்டையின் கணவன் என்பதை நான் அறிந்து ஆர்வமாக வெளியே போய்ப் பார்த்து அதிர்ந்தே போனேன். அங்கே ஒரு குள்ளன் நின்று கொண்டிருந்தான்.

‘இவனா? இவனைப் போயா?’ மனம் பதறிப் போனது.

மனைவிக்கு விபத்து என்றதும் அவன் தவிக்கிற தவிப்பைத் தாமதமாகத் தான் கண்டு கொண்டேன். தன் வாரிசுகள் பிறந்த சந்தோஷத்தை விட, தன் மனைவி நலமாய் இருக்கிறாளா? பெரிய அடி பட்டு விட்டதா இதை தான் விசாரித்துக் கொண்டிருந்தான். என்னைப் போலவே அவள் மீது அதீத அக்கறை வைத்துள்ளான்.

‘குறை உருவத்தில் தான்! குணத்தில் அல்ல!’ புரிந்தது எனக்கு.

என்னைக் கண்டதும் செவிலியிடம் கேட்டுக் கொண்டிருந்தவன் என்னிடம் ஓடி வந்து விசாரித்தான். அவனை சமாதனப்படுத்தப் போதும் போதும் என்றாகி விட்டது.

‘என்னை விட மோசமான பாசக்காரனா இருக்கிறானே!’ என்று எண்ணிக் கொண்டே, அவனுக்குக் குழந்தைகளைக் காட்டினேன். தன் குறை அவர்களுக்கு இல்லை என்பதைப் பலமுறை கேட்ட பின் அவன் முகத்தில் வந்த பெருமிதம்!

முட்டைக்குத் தான் மோசமான அப்பன்! அவள் பிள்ளைகளுக்கு நல்ல தகப்பன் கிடைத்து விட்டான்.

அவனைப் பற்றி விசாரித்து மலைத்து போனேன். ஆடிட்டராம்!

‘வாழ்க்கை நல்ல விதமாக அமைச்சுட்டே முட்டை!’ அனிச்சையாக என் பார்வை அவளிடம் சென்ற பொழுது, அவளுக்கும் முழிப்பு வந்து என்னைப் பார்த்தாள்.

அவள் பார்வை என்னை இழுத்து அவளருகே அமர வைத்தது.

அவளிடம் வார்த்தைகளே இல்லை.

என்னையே பார்த்தவள் கண்களில் மகிழ்ச்சி, பாசம், நேசம், நன்றி என அத்தனையும் கலவையாய்.

என் உள்ளங்கையை அழுத்தி, “நீ எனக்கு சாமி டா!”, என்றாள் உணர்ந்து.

பிரசவித்த பொழுது பாதி மயக்கத்தில் இருந்திருந்தாலும், நான் பேசியது எல்லாம் அவளுக்கு நினைவு இருக்கும் என்பதை அறிந்திருந்ததால், உணர்ச்சி வசப்பட்டு இருந்தவளை இலகுவாக்க, “என்ன முட்டை? பெரிய குடும்பஸ்திரியா இருக்கே! என்ன லவ் மேரேஜ்ஜா?” என்றேன் அவள் கணவனைப் பார்த்து.

அதுவரை என்னை ஏதோ மருத்துவன் என்றே பார்த்திருந்தவன், நாங்கள் உரிமையோடு பேசிக் கொள்வதைப் பார்த்ததும், ஏதோ, புரிந்தும் புரியாமலும் விழித்தான்.

என்னை அவனுக்கு அறிமுகப்படுத்தியதும் அவன் முகம் பெரிதாக மலர்ந்தது. ‘ரொம்ப நல்லவிதமாகச் சொல்லி வைத்திருப்பாள் போலவே’ எண்ணிக் கொண்டேன். அவள் அவனைப் பற்றியும் என்னிடம் சொன்னாள்.

“உண்மையிலே அவரு தங்கம்! பேசிப் பார்த்தா உனக்கே பிடிக்கும்.”

என்றாள்.

“உனக்குப் பிடித்தால், எனக்கும் தானே! நீ வேற நான் வேறயா?”

நான் சொன்னதும் அவளுக்கு அப்படி ஒரு பூரிப்பு! பின் அவள், “ரொம்ப வருஷம் கழிச்சு நம்ம ஊருக்கு போனேன். அப்போ தான் ஹச். எம் தவறிட்டாங்க, நீங்க எல்லாம் ஊரைக் காலி செய்துட்டுப் போயிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்! மனசே விழுந்துடுச்சு!

உன் மனசுலே அவங்க இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். தாயில்லாம நீ எந்தக் கஷ்டமும் படக்கூடாதுன்னு உனக்காக வேண்டாத நாளே இல்லை.” என்று கலங்கியவள்,

“கொஞ்ச நாள் வாழ்ந்தாலும், இப்படித் தான் வாழணும்னு கத்துக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க ஹச். எம். இன்னைக்கு நான் நல்லா இருக்கேன்னா அவங்க தான் காரணம்.” என்று நெகிழ்ந்து, தனக்கு நடந்ததைச் சொன்னாள்.

பூப்பெய்திய அவளை வீட்டிற்கு விடப் போன என் அம்மாவிற்கு அவள் அப்பாவின் எண்ணம் தெரிந்து, அவளைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுகிறேன் என்று உறுதி அளித்து விட்டு, அப்படியே காவல்துறை உயரதிகாரியாக இருந்த, தன் பழைய மாணவன்கிட்ட பேசிட்டு அவர் தொடர்பு எண்ணையும் கொடுத்து இருக்காங்க.

அவர் தான் இவளைக் காப்பாற்றி, ஒரு அனாதை இல்லப் பள்ளியில் சேர்த்து இருக்கிறார். ஆக, என் மாமா மூலம் அம்மா கேட்ட உதவி இவளைக் கிட்டாமல், காவல் துறை அதிகாரி மூலம் கிட்டி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

“ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல வேலை பார்த்துகிட்டே கஷ்டபடுறவங்களுக்கு ஃப்ரீ ட்யூஷன், கோச்சிங் க்ளாஸ் எல்லாம் எடுத்துகிட்டு இருக்கேன். ஹச். எம். தான் எனக்கு ரோல் மாடல்!” என்றாள்.

என்றோ தூவப்பட்ட விதை... மரமாகி.... அதுவும் விதைகளைச் சுமக்கும் கனியை ஏந்தி நிற்கிறதே!

பின் நிறைய பேசினோம். என் எதிர்காலத்தைப் பற்றிக் கேட்டாள்.

“உனக்குத் தான் எல்லாம் பொண்ணுங்க க்யூவில் நிப்பாங்களே!” என்றதும் ஜெஸியின் நினைவு! முட்டை கிடைத்ததை அவளிடம் சொல்ல மனம் துடித்தது.

“எனக்காக க்யூ நிக்கிறது என்னவோ உண்மை தான்! ஆனா, ஜெஸின்னு ஒரே ஒரு பொண்ணு தான் அந்த க்யூல!” என்றேன்.

“இங்க என்ன சொல்லுதாம்? ஜெஸி ஜெஸின்னு தானே?” நான் நினைத்தை அப்படியே சொல்கிறாளே வியப்புடன் பார்க்க,

“நான் வேற நீ வேறயா? அவங்களுக்குக் கால் போடு, பேசலாம்.” என்றாள், வெகு சாதாரணமாக!

எங்களுக்குள் இருக்கும் அன்பின் தன்மை விளங்கி விட்டது. சிலரால் மட்டும் தான் அன்பை நட்பு, காதல் என்று உறவு வரைமுறைக்குள்ளும் அடக்க முடியாத... எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாத சம்பூரண அன்பாக கொடுக்க முடியும்.

அந்த, சம்பூரண அன்பைப் பகிர்வதில் நான் வேறு...அவள் வேறு அல்ல.

இப்படி ஒரு அன்பு உருவாகக் காரணமான என் அன்னை, எங்கள் இருவர் வாழ்விற்கும் தூண்டுகோல்! அவர் எங்கள் மனதில் போட்ட விதை, இன்று பலருக்கும் நல்லது செய்ய வைத்திருக்கிறது.

விதைத்தவர் மறைந்தாலும், விதைத்தது பல தலைமுறைக்கும் பரிமாறப்படும்!

எனவே,
நல்லதை நினைப்போம்! நல்லதை விதைப்போம்!
 
Top Bottom