நீ வாழவே என் கண்மணி - 8(Final Ep)

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 8


அவ்வப்போது அவள் விழிகள் யோசனையோடு காந்தனைப் பின்தொடர்வதைக் கவனித்தான் நிர்மலன். சிந்திக்கட்டும், பிறகு தெளிவான முடிவை எடுக்கட்டும். காயப்பட்டு, நைந்து, நம்பிக்கையிழந்து போன மனது அவளது. அதில் மாற்றங்கள் நினைத்ததும் உருவாகாதே.

அவனைப்போலவே அவளது பார்வையைக் காந்தனும் கவனித்தான். ஒருநாள் அவனே அவளிடம் வந்தான்.

“நிர்மலன் கதைச்சவரா?”

ஆம் என்பதாகத் தலையசைத்தாள்.

“என்னோடையும் கதைச்சவர். எல்லாம் சொன்னவர். உன்னைப்போலத்தான், என்னாலையும் உடனே பதில் சொல்ல முடியேல்ல. இனி ஒரு கலியாணமா எண்டு அதிர்ச்சியாவும் இருந்தது. ஆனா, ஆறுதலா யோசிச்சுப் பாத்தா அதுவும் நல்ல முடிவுதான் எண்டு பட்டது.” என்று அவன் சொல்லவும், அவள் புருவங்கள் சுருங்க கேள்வியாகப் பார்த்தாள்.

அவன் நிதானமாக விளக்கினான்.

“டியூஷன் செண்டரால நான் ஒவ்வொருநாளும் இங்க வந்துபோகப் பேச்சு எப்பிடியும் மாற சான்ஸ் இருக்கு. அதோட, நாங்க ஒண்டும் காதலிச்சு வயசுத் தேவைக்காகக் கட்ட நினைக்க இல்ல. உன்ர வலி எனக்குத் தெரியும். என்ர வலி உனக்குத் தெரியும். இது ஒரு உதவி மாதிரி. ஒருத்தருக்கு மற்றவர் துணை மாதிரி. யோசிச்சுப் பாரு, எனக்குச் சமைக்கத் தெரியாது. நீ எனக்குச் சமச்சுத் தரலாம். நான் உனக்குத் தேவையானதை கடை கன்னிக்குப் போய் வாங்கிக்கொண்டு வரலாம். ரெண்டுபேரும் சும்மா இருக்கிற நேரம் கதைச்சுக்கொண்டு இருக்கலாம். பின்னேரத்தில தேத்தண்ணியைச் சேர்ந்து குடிக்கலாம். ஒருத்தருக்கு உடம்புக்கு முடியாம போனால் மற்றவர் பாத்துக்கொள்ளலாம். இப்பிடி நாங்க ஒருத்தருக்கு மற்றவர் உதவியா இருக்கிறதுக்கு ஊருக்கு ஒரு மரியாதையான பெயர் வேணும். அதுதான் கலியாணம். அத செய்தா என்ன எண்டு யோசிச்சன்.”

தெளிவாகப் பேசியவனின் பேச்சில் அமிழ்ந்து போயிருந்தாள் அவள்.

“என்ர கார்த்திகா போனபிறகு ஒரு துணை வேணுமெண்டு நானும் நினைச்சதில்ல. ஆனா, காலமும் எங்களைச் சுற்றி இருக்கிற ஆக்களும் எங்களுக்கு படிப்பிக்கிற பாடத்தையெல்லாம் பாக்கேக்க எனக்கு நான் மட்டும் தான் துணையோ எண்டு யோசிச்சு இருக்கிறன். அது மாறி இப்ப உனக்கு நான் துணை எனக்கு நீ துணை. அதைத் தாண்டி நடக்கிறத நடக்கேக்க பாப்பம். எனக்குக் கை போகும் எண்டோ உனக்குக் கால் போகும் எண்டோ நினச்சா பாத்தம்? நடந்தபோது மீண்டு வர இல்லையா? இதைவிட மோசமா இன்னும் என்ன நடக்க இருக்கு, சொல்லு? ஆனா, எதுக்காகவும் உன்னை வற்புறுத்த இல்லை நான். உன்ர விருப்பம் தான் முடிவு!” என்று அவள் கண்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போனான் அவன்.

அதன்பிறகு நீண்ட சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் கண்மணி. காந்தன் சொன்னவைகளே அவள் நினைவுகளில் சுற்றிச் சுழன்றது.

நிர்மலனும் விடவில்லை. ஆதரவாக அவளுக்கு விளக்கினான். “நான் போனபிறகு நீ தனிச்சுப் போவாய் கண்மணி. வாழ்க்கை வாழத்தான். எங்களை மீறி என்ன நடந்தாலும், அதையெல்லாம் தாண்டிக்கொண்டு வாழவேண்டாமா? என்னைப்பார், நீ ஏமாத்திப்போட்டாய் எண்டதும் இன்னொருத்தியை கட்டி வாழ இல்லையா? உன்ன நினைச்சுக்கொண்டு நான் என்ன சந்நியாசமா இருந்தனான்?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அந்தச் சிரிப்பில் தெரிந்த விரக்தியில் அவளுக்கு ஒரு வழி செய்யாமல் இவன் இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வரப்போவதில்லை என்று தெரிந்துபோயிற்று!

“உங்களுக்கு எத்தனை தரம் சொல்லுறது? நீங்க எந்தப் பிழையும் செய்யேல்ல நானும் எந்தப் பிழையும் செய்யேல்ல எண்டு. காலம் வகுத்த கொடூரமான கணக்கில மாட்டி சின்னா பின்னமாகிப் போய்ட்டுது எங்கட வாழ்க்கை. இண்டைக்கு அதுல இருந்து வெட்ட வெட்ட முளைக்கிற வாழையைப் போலத் தழைக்கத் துவங்கி இருக்கிறோம். இந்தளவுமே போதும் எண்டுதான் நினைக்கிறன்.” என்றாள் அவள்.

ஆனால், அவனுக்கு அது போதாதே!

“ஆரம்பத்தில உஷாவையும் என்னால அவ்வளவு இலகுவா ஏற்க முடியேல்லத்தான் கண்மணி. உன்ர இடத்தில இன்னொருத்தியா எண்டு மனம் அந்தப்பாடு பட்டது. கலியாணம் செய்திருக்கக் கூடாதோ எண்டு பலமுறை நினைச்சிருக்கிறன். ஆனா, போகப் போக வாழ்க்கை எப்பிடி மாறினது எண்டே தெரியாம சந்தோசமா நிறைவா மாறிப்போய்ட்டுது. அப்பிடித்தான் உனக்கும் இருக்கும். அப்பிடி மாறினபிறகுதான், அந்த வாழ்க்கைதான் எல்லாத்தையும் விடச் சந்தோசமான நிறைவான வாழ்க்கை எண்டு விளங்கும். அதை நீயும் அனுபவிக்கவேணும் கண்மணி. உனக்கும் பிள்ளைகள் பிறக்கவேணும். அம்மாவா நீயும் மாறவேனும். நானும் அந்தக் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சவேணும்.” கண்கள் கலங்கச் சொன்னான்.

மௌனமாய்க் கேட்டிருந்தவளின் கண்களிலும் கண்ணீர். கற்பனையிலும் கனவிலும் அப்படி ஒரு வாழ்க்கையை அவளும் வாழ்ந்து பார்த்தாள் தானே!

அதோடு, காந்தனைப் பற்றியும் அவளுக்குத் தெரியும் தானே. ஒரு பேச்சுத் துணைக்கே ஏங்கிப் போயிருப்பவன். இப்போதைக்கு எனக்கு அவன் துணை அவனுக்கு நான் துணை. மிகுதியை காலம் முடிவு செய்யட்டும். காந்தன் சொன்னதுபோலவே ஒருவழியாகத் தெளிந்தாள் கண்மணி.

அவள் முடிவைச் சொன்னதுதான் தாமதம். அடுத்து வந்த நல்ல முகூர்த்த நேரத்தில் கடிகார முள்ளைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தான் நிர்மலன்.

அழகான பட்டில் மணப்பெண்ணாகத் தயாராகி நின்றவளைக் கண்டபோது அவன் கண்கள் கலங்கிப் போயிற்று!

“எனக்காகச் சம்மதிக்க இல்லத்தானே?” கலக்கத்தைக் கண்களில் காட்டாதிருக்க முனைந்தபடி வினவினான்.

“உங்களுக்கு என்ன விசரா? எதையாவது ஒண்டை பிடிச்சுக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறீங்க!” என்று முறைத்தாள் அவள்.

பதிலேதும் சொல்லாமல் தன் கேள்விக்கான பதிலுக்காக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் அவன்.

“நிர்மலன்! நான் இண்டைக்கு அவரை விரும்பிக் கட்ட இல்லைதான். எண்டாலும் விருப்பத்தோடதான் கட்டுறன். முழு மனதோடதான் இந்த வாழ்க்கையை ஏற்கப் போறன். நீங்க கவலைப்பட வேண்டாம்.” என்று புன்னகைத்தாள் அவள்.

அவனது கலக்கமும் அகன்றது!

நல்ல முகூர்த்தத்தில் அவளது சங்குக் கழுத்தில் தாலி கட்டினான் காந்தன்!

நெற்றியில் மங்களம் பொங்கும் திலகமும், கழுத்தில் அம்மை அப்பனைக் கோர்த்த பொன் தாலியும் மின்ன, கண்ணோரம் அரும்பிய கண்ணீரோடு முகமெல்லாம் பூவாய் மலர்ந்திருக்க அவனை நோக்கிப் புன்னகைத்தவளைப் பார்த்தவனின் நெஞ்சு நிறைந்து போயிற்று! அவன் விழிகள் அவளிடம் சொன்னது,

காலங்கள் கடந்தாலும்

கனவுகள் சிதைந்தாலும்
பாதைகள் மாறினாலும்
உன்மீது நான் கொண்ட
உயிர் நேசம் சொல்கிறது
உனக்கென நானிருப்பேன்

நீ வாழடி.. என் கண்மணி!

முற்றும்.
 

Goms

Member
மிக மிக அருமையான கதை நிதாமா.
நிர்மலனுக்காவது ஒரு காரணம் இருந்தது தன் காதலைத் துறக்க. ஆனால் கண்மணி நிலை? கல் மனதையும் உருக்கும் அவள் காதல்.
 
Top Bottom