You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

4. சந்திப்பு - ரோசி கஜன்

ரோசி கஜன்

Administrator
Staff member
1542053455771.png
‘வோல்ட் மார்ட்’டின் முன்னால், பரந்திருந்த நிறுத்துமிடத்தின் பரபரப்புக்குள் நுழைந்து ஓரிடம் பார்த்து அமைதியடைந்தது அந்த கார்!

ஓட்டுனர் இருக்கையிலிருந்து அவசரம் அவசரமாக இறங்கிய தன் மைத்துனியுடன் சேர்ந்திறங்கினாள் அவள்.

முகத்திற்கு அழகு சேர்க்கும் ஏறுநெற்றி! அதில் சுருண்டு நெளிந்து உறவாடி, தோள் வரை படர்ந்திருக்கும் அழகுக் கேசம்! முழங்கால் வரை நீண்டிருந்த பிங்கலர் காட்டன் சட்டை! நான்கு பிள்ளைகளின் தாய் இவள் என்றால் யாருமே நம்பமறுக்கும் வகையில் உடலமைப்பு!

புன்னகையின்றிப் பேசத் தெரியாத அவளிதழ்கள் விழிகளுடன் கைகோர்த்தவாறே ஓய்வின்றிப் படபடக்க, ஆசையாகத் தன் தூறல் கொண்டு முத்திமிட விளைந்த வர்ணபகவானை ஸ்பரிசித்த வண்ணம் விரைந்து நடந்தாள் அவள்.

வேகநடையில் ‘மார்ட்’டினுள் பிரவேசித்து, அங்கே நிறுத்தியிருந்த வண்டிலை எடுத்தவாறே கடிகாரத்தைப் பார்த்த அவள் மைத்துனி, “இன்னும் முக்கால்மணித்தியாலம் இருக்கு, நிவிய டான்ஸ் கிளாசில இருந்து கூட்டிக்கொண்டுவரப் போக வேணும்; வாங்க வேண்டியத கெதியா வாங்கிக் கொண்டு போவம்!” சொல்லிக்கொண்டே உள்ளே நுழைய, தானும் சேர்ந்து நுழைந்தாள் அவள்.

விழிகளைச் சுழற்றிக்கொண்டே நடந்தவளின் பார்வை ஓரிடத்தில் நிலைகுத்தி, அசைய மறந்து அடம் பிடித்து நிற்க, அவள் கால்களிரண்டும் அவற்றுக்குத் துணைபோயின!

அவள் மனமோ, மின்னலென இருபத்தியைந்து வருடங்களைக் கடந்து, கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து, அவள் பிறந்து வளர்ந்த ஊரான யாழில் உற்சாகமாகக் குதித்து, ஆசையோடு அங்குமிங்குமாகச் சுற்றிப் பார்த்து மயங்கி நின்றது!

தன் கோபத்தால் சுட்டுப் பார்க்க விளையும் ஆதவனைத் தடுக்கவென்று ஓலைத் தொப்பியை வாங்கி, அதை, ஓடும் சைக்கிளின் முன்னால் அழகாகக் கட்டி வைத்து அழகு பார்த்த நாட்கள்!

நகைப்பு, மகிழ்ச்சி, இவற்றை அருகிலும் நெருங்கவிடாத நெருக்கடி மிகுந்த நாட்களில், மென்னகையும் துள்ளலுமாக நண்பிகளுடன் ஆரவாரித்துத் திரிந்த பசுமையான நாட்கள்!

“இன்ராக்ட் கிளப் மெம்பராக்கும் நாங்கள்!” என, ஆடைகள் சேர்ப்பது, இன்னிசை நிகழ்ச்சி நடத்தி காசு சேர்த்து ஊனமுற்றோருக்கு சக்கர நாற்காலிகள் வாங்கிக் கொடுப்பது என்று பொதுப்பணி செய்து திரிந்த நாட்கள்!

டியூசன் என்று சென்று, அப்படியே தோழிகள் வீட்டில் அரட்டை அடித்துவிட்டு, அந்திக் கருக்கலில் ஆடிப்பாடி வீடு சென்று, பெற்றோர் மனதைப் பிசைய வைத்த நாட்கள்!

இப்படியே பலபல பசுமை நினைவுகளை ஆவலும் அவசரமுமாக மனம் புரட்டிப் பார்க்க, அவள் விழிகளோ, தன் முன்னால் நின்று பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தவளை ஆதுரமாக வருடின!

அழகிய பச்சை வர்ணத்தில் கையில்லாத காட்டன் டாப்பும் ஓஃப் வெள்ளைநிற ஹாஃப் ஜீன்சும் அணிந்திருந்தவள், பூசிய உடல்வாகும் அதேகுண்டுக் கன்னங்களுமாக அன்று பாரத்ததை விட இன்று இன்னமும் பளிச்சென்றிருந்தாள்!

பளபளப்பாகத் தோளில் புரண்டிருந்த சுருளற்ற கேசம் அவள் வதனத்தின் அழகை அதிகரிக்க, அன்று இயல்பாகச் சிவந்திருந்த அவள் அழகிய உதடுகள் இன்று உதட்டுச் சாயத்தில் பளபளத்து, ‘நகைப்பை எம்மால் பிரிவதென்பது கடினம்!’ என்றவகையில் மலர்ந்திருக்க, மெல்லிய ஃபிரேமுக்குள் ஒளிந்திருந்த அவள் அழகு விழிகளோ அவற்றோடு சேர்ந்து நகைக்க, கலகலவென்று பேசிக்கொண்டே பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தாள் அவள்!

“ஐ...ரி...ன்...! இது அவளே தான்! எத்தனை வருடங்கள்?! அன்றைக்குப் பாத்தது போலவே இருக்கிறாளே!” எதிர்பாராது உற்ற தோழியைக் கண்ட மகிழ்வு, விரிந்த முறுவல் கொண்டு இவள் வதனத்தை அழகுபடுத்தியது.

“என்னையும் அடையாளம் கண்டு பிடிப்பாளா?!” முணுமுணுத்துக் கொண்டே அவளை நோக்கி முன்னேறியவள், “அஜி... இந்தப் பக்கம்...” அழைத்த மைத்துனியின் குரலை செவிகளில் வாங்கிக்கொள்ளாது, தோழியின் முன்னால் சென்று நின்றாள்!

சட்டென்று முன்னால் வந்து நின்றவளைப் பார்த்த ஐரினின் விழிகளில் ஆச்சரிய மின்னல் டாலடித்தது!

“அஜி!” கூவிக்கொண்டே பாய்ந்து கட்டிக்கொண்டாள் தோழியை!



‘கதை எழுதுகிறேன் என்று கலாட்டா செய்கிறாயே; எங்களை வர்ணித்து கதை எழுத்து பார்ப்போம்!’’ என, பள்ளித் தோழிகளின் அன்பான சவாலில் அகப்பட்டுக்கொண்ட என்னுள், சில நிமிடங்களுள் உருவானது!
 
Top Bottom